மணி மீனாட்சிசுந்தரம்.

‘புராணம்’ என்ற சொல்  எழுத்து வகையில் ‘பழைய கதை’ என்ற பொருளைக் குறிக்கிறது. ஆனாலும், பொதுவான கதைகளைக் குறிக்காமல் கடவுள்களைப் பற்றிப் பேசும் கதைகளுக்கே இச்சொல் வழங்கி வருகிறது. எழுதப்பட்ட புராணங்கள் கடவுளோடே இணைந்திருக்க, நடைமுறை வழக்கில் இச்சொல் மனிதர்களின், கூட்டியும் குறைத்தும் சொல்லப்படும் சொந்தக் கதைகளைக் குறிப்பதாகவே வழங்குகிறது.

“இந்தா அவன் புராணத்தைப் பாட ஆரம்பிச்சுட்டான்” என்ற தொடரில் ‘புராணம்’ என்னும் சொல் வெளிப்படுத்தும் பொருள் இதுதான்.

கூடவே, புராணம் என்ற சொல் நடந்துமுடிந்த ஒன்றைக் குறித்துக் கூறவே பயன்படுத்தப்படுகிறது.  கடந்தகால, ஆதாரமற்ற நிகழ்வுகளைக் குறித்து எழுதப்படும், சொல்லப்படும் விசயங்களுக்கான தலைப்புப் பெயரெனவும் இதனைக் கூறலாம்.

பழையதன் இயல்பை மறுக்கும் நவீனம் என்ற சொல்லை முன்னொட்டாகச் சூடியிருக்கும் இக்காலக் கவிதை, தம் பெயர், இயல்புக்கேற்றாற்போல் ‘ புராணம்’ என்ற இச்சொல்லை அதற்குரிய இயல்புப் பொருளை மறுத்து, நடைமுறைக்கண் கொண்டே பார்க்கிறது.

‘புராணம்’ என்றதுமே ‘கடந்தகால நினைவுகள்’ என்னும் அனிச்சைப் பொருளை நவீன கவிதை மாற்ற முற்படுகிறது.

அது ‘ புராணம்’ என்பதற்கு எழுத்தில் வழங்கும் பொருளை மறுத்துப் பேச்சில் வழங்கும் ‘ சுய புலம்பல்’ என்னும் பொருளை வரித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல்

காலங்காலமாகக் கடவுளுடன் அச்சொல்லுக்கு ஏற்பட்டிருக்கும் பிணைப்பை முன்னிறுத்தி, கடவுளை விமர்சிக்கவும் நையாண்டி செய்யவும் இச்சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறது. நவீன கவிதைக்குரிய இப்பொதுப் பண்பை இரு கவிதைகளை முன்வைத்து இக்கட்டுரை பேச முயல்கிறது.

கவிதை : 1

00

நதி புராணம் -1

00

/பகலில்

வேட்டிகள் காய்ந்து கொண்டிருக்கும்

இருட்டியபின்

சாராயம் கிடைக்கும்

தூமைத் துணிகளும்

பாலிதின் சிதறல்களும்

காற்றில் பதைபதைக்கும்

மண்ணைத் தோண்டினால் நிரோத்தும்

உடைந்த குப்பிகளும் சுரக்கும்

பித்ருக்களின் பிண்டங்கள்

சாக்கடையில் கரையும்

வருடத்திற்கொருமுறை

சாமி

கணுக்கால் நனைத்துவிட்டுப் போகும்

இதை வைகைநதி

என்றழைப்பது எம் நா வழக்கம்./

கவிஞர் சாம்ராஜ் எழுதிய கவிதை இது. வாழ்ந்த கதையையே பேசும் புராணம் தம் நிலையில் திரிந்து, இங்கே வீழ்ந்த கதையைப் பேசுகிறது. ஒன்றைப் பெருமைக்குரியதாகப் போற்றிக் கூறவே பயன்பட்ட புராணம், இங்கே கையறுநிலையில் வெளிப்படும் ஒரு துயரமாக, அவல நகையுணர்வு தோன்றச் சொல்லப்படும் கதையாக இங்கே வெளிப்படுகிறது.

 “சாறும் சேரும் நெய்யும் மலரும்

 நாறுபு நிகழும் யாறு வரலாறு” இங்கே  இரங்கத்தக்க நிலையில் கவிதையில் விரிகிறது.

தொன்மையான ஓர் இனத்தை உயிராக்கி, உணவளித்துச் செழிக்க வளர்த்த ஓர் ஆற்றின் தற்கால அவல நிலையை, ‘பாருங்கள் என் கதையை, கேளுங்கள் என் புராணத்தை’ என்னும் தொனியில் சொல்லும் கவிதை இது.

தம் இனம் தளிர்க்கவும் வளரவும் செழிக்கவும் துணை நின்ற ஒர் ஆற்றுக்கு அந்த  இனம் செய்யும் ‘மகத்தான?’ நன்றிக்கடனே ‘ நதி புராணமாக’ இங்கு விரிகிறது.

மதுரை நகருக்குள் வையை என்னும் ஆறு, நதி பெருகிவரும் ஒரு பாதையாக மரபுக்கவிதைகளின் நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இப்போதும் அது ‘ஆறு’ என்னும் பெயரைக் கொண்டிருப்பது, கவிதையின் கடைசி வரி குறிப்பதைப்போல் ‘ நா வழக்கம்’ மட்டுமே. புகழந்தே கூறப்பட்ட ஆற்றையும், புகழ்ந்துரைக்கும் வடிவமான புராணத்தையும் எதிர்நிலைக்குள் வைத்துப் பாடுகிறது இக்கவிதை.

கவிதை -2

00

உலகமே தனிமைப்பட்டுப்போன பெருந்தொற்றுக்காலத்தில் மனிதர்களின் வாழ்வு நிச்சயமின்மை எனும் சூன்யச் சுழலுக்குள் சிக்கித் திணறியது. உலக உயிர்களைக் காக்கும் கடவுள்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் உறையும் கோயில்களும் இழுத்து மூடப்பட்டன.

அக்காலத்தில், திக்கற்ற நிலையில் தம்மைக் கைவிட்ட இறைவனைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் மனம் கசிந்து அழுதிருக்கவும், இறைவனைத் திட்டித் தீர்க்கவும் செய்திருக்கக் கூடும்.

அதேசமயம்,இறை நம்பிக்கையற்றவர்கள் தம் நம்பிக்கை குறித்த உறுதிப்பாட்டை உரக்கச் சொல்ல இதை ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதினார்கள். இது கவிதைகளிலும்  எதிரொளித்தது. கவிஞர் லிபி ஆரண்யாவின் ‘ விருப்ப ஓய்வில் போன தெய்வங்கள் ‘எனும் கவிதை இப்படிப்பட்ட ஒன்றுதான். ஆனால், இங்கு நான் பேச விரும்பும் கவிதை ‘தெய்வம் சம்மதியாத திருக்கல்யாணக் காட்சிகள்’ எனும் தலைப்பிலான கவிதை பற்றியே ஆகும்.

பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட சிறந்த கவிதை இது.

தெய்வம் சம்மதியாத

திருக்கல்யாணக் காட்சிகள்

—————————————————-

/ பசிக்குப் பாதி

  பிணிக்கு மீதியெனத்

  தம் பிள்ளைகள்

  தட்டழிகையில்

திறவாத ஆலயத்தில்

திருப்பூட்டு அம்மைக்கு

…………………………………….

பித்துப் பிடித்தவளாய்ப்

பெரியாஸ்பத்திரி விரைகிறாள்

மாலை ஒரு கேடா என்று

சூட்டியதைத் தரையில் எறிகிறாள்

அங்கு ஏற்கனவே தூவப்பட்ட

கையாலாகாதவர்களின் மலர்கள்

துணுக்குறுகின்றன

,

பிள்ளைக்கறி கேட்கும்

பெருந்தொற்றிலிருந்து

தம்பிள்ளைகளைச் சொஸ்தப்படுத்தும்

தெய்வங்கள் உலவும்

அந்த வார்டுக்கு முன்னால்

நடுங்கும் கரங்களால் கூப்பி நிற்கிறாள்

முகக் கவசம் எங்கேயென்று

பிரம்பில் ஒன்று விழுகிறது

சொக்கநாதனுக்கு

,

அவனுக்கு விழுந்ததுதானே

அனைவருக்கும் விழுந்தது

பிற்சேர்க்கையாய் நமக்கொரு

திருவிளையாடற்புராணம்

,

குச்சியைக் கையில் வைத்து

ஆபத்தான விளையாட்டிலிருக்கும்

அந்தப் பிள்ளையின் பாதுகாப்பை

நினைத்தும் விசும்புகிறான்

தகப்பன்சாமி /

இது ஒரு நவீன திருவிளையாடலை முன்னிறுத்திப் பேசும் கவிதை.ஆனால்,மரபான திருவிளையாடல் கதைப் பண்பில் இருந்து சற்றும் விலகாத கவிதை இது.

வியப்பூட்டும் வகையில் இறை நம்பிக்கைக்கு எதிர் மனநிலையில் இருந்து எழுதப்பட்டு, இரு நம்பிக்கைகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாக அமைந்த கவிதை இது.

பெருந்தொற்றுக்காலத்தில் கோயிலுக்குள் அடியவர்களை அனுமதிக்காமல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து எழுதப்பட்ட கவிதை இது. அடியவர்களின் வாழ்க்கை அச்சத்தில் இருக்கும்போது ஆண்டவனுக்கு இந்தச் சடங்கு தேவையா? என்ற கவிஞரின் கோபத்தில் விளைந்த கவிதை  இது வென்றாலும், வழக்கமான எதிர் மனநிலைக்கு மாற்றான ஒரு வேறுபட்ட மனநிலையையே கவிதை கொண்டிருக்கிறது.

கடவுள் இல்லை என்று கருதும் கவிஞர், இருந்திருந்தால் இறைவன் இதை விரும்பியிருப்பாரா? விரும்பவில்லை என்றால் இறைவன் என்ன செய்திருக்கக்கூடும் எனப் பேசத் துவங்குகிறார். அந்த நிலையில் தன்னையறியாமல் கவிதை, இறை நம்பிக்கையின் மகத்துவத்தைப் பேசும் இறைவனின் திருவிளையாடல்களைப் பாடும் மரபுக்குள்  நுழைந்துவிடுகிறது.

அடியவர்கள் துன்பப்படும்போது இறைவன் மனித வடிவம் தாங்கி இவ்வுலகிற்கு வருவான் என்ற நம்பிக்கையைச் சான்றாக்கும் நிகழ்வே இறைவனின் திருவிளையாடல்.

இறை நம்பிக்கைக்கு எதிர் நிலையில் எழுதப்பட்ட கவிதையிலும் அதுவே நிகழ்கிறது. திருவிளையாடல் கதைகளில் இறைவன் தன்னை இறைவனாகவே வெளிப்படுத்திக்கொள்ளாது , சாதாரண மனிதர்களுள் ஒருவனாகவே வந்து தம் அடியவர்களுக்கு உதவுவான்.

இறைவன் தம் சக்தியை வெளிப்படுத்தி அமானுஷ்ய செயல்களைச் செய்பவனாக மட்டுமல்லாமல் இயல்பான மனிதனாகவே நடந்துகொண்டு அடியவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பை உணர்த்தும் திருவிளையாடல்களும் உண்டு.

இதில் இரண்டாவது பண்பைக் கவிதை கொண்டிருக்கிறது.

தம் பிள்ளைகளுக்கு ஒரு துன்பம் என்னும்போது தனக்குத் திருமணம் நடத்தி அதில் சுகம் காண தெய்வம் விரும்பாது. அவர்களின் துயர் துடைக்கவே விரைந்து வரும் என்ற ஒரு பொது மனநிலைதான் இக்கவிதையின் தோற்றுவாய் என்றாலும், இறை நம்பிக்கையை எதிர்த்து எழுந்த கவிதை, அந்த நம்பிக்கைக்குப் பொருந்தும் ஒன்றாகவும்  மாறி அமைந்து வியப்பூட்டுகிறது. ஒரு நல்ல கவிதை வெளிப்படுத்தும் வண்ணங்களுள் இதுவும் ஒன்றாகும். அதேசமயம்,

சிவனுக்கு மட்டுமே எழுந்த திருவிளையாடற் புராணத்தை இந்நவீன கவிதை அம்மைக்கும் ஆக்கியிருக்கிறது.

00

உதவிய நூல்கள்

——————————-

1. என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ், சந்தியா பதிப்பகம், சென்னை -83

2. உச்சியில் நிகழும் விபத்து – லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், சென்னை – 83

குறிப்பு : 1 பரிபாடல் வரிகள்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *