சரிதா ஜோ
தூர் வாரும் உற்சவம் தொடங்கியது. வெயிலின் தீக்கதிர்கள்முதுமையடைந்து மங்கத் தொடங்கியிருந்தது. மரங்களின் நிழல் நீளநீளமாக மாலை நேரம் தொடங்கி விட்டதென்று அறிவித்துக் கொண்டிருந்தது. காற்று மெதுவாக சலசலத்தது. மற்ற நாட்களைவிட அந்த நாள் வேறுபட்டது. ஒரு ஆண்டு முழுக்க மூடிக் கிடக்கும் அந்தக் கிணறு இன்று உயிர்த்தெழப் போகிறது. கிணற்றைத் தூர்வார வந்த ஆட்கள் நீண்ட மூங்கில்கள், வாளிகள், தட்டிகள், கரண்டிகள், கயிறுகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து கிணற்றின் அடிப்பகுதியைச் சுத்தம் செய்யத் தொடங்கினர். கிணற்றைச் சுற்றி மக்கள் வட்டமாகக் கூடியிருந்தனர்.”ஏய், கவனமா இறங்கு! கயிறு நழுவப் போகுது!” என்று வெற்றிலையை மென்றபடி நின்று கொண்டிருந்த வயதான பாட்டி ஒருவர் கூறினார்.”இத்தனை நாளா மூடியிருந்ததுல, உள்ளே தண்ணி பாசி புடிச்சிருந்தாலும் புடிச்சிருக்கும். நல்லாச் சுத்தம் செய்யணும்” என்றார் இன்னொருவர்.
கிணற்றைத் தூர்வாரத் தூர்வார ஈர மண்வாசம் கிணற்றைச் சுற்றிப் பரவியது. ஒரு சில குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தா ர்கள். அவர்களது கண்களில் ஆர்வம் தொற்றியிருந்தது. வாய் நிறையக் கேள்விகள். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள் இசையரசி.இசையரசி ஒரு பிரபலக் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மாணவி. அவள் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், உள்ளுக்குள் புயலடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் சேறும் சகதியுமாகக் கிடந்தது. அந்த இடத்தில் நிற்கவும் முடியாமல் அந்த இடத்தை விட்டுப் போகவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது அவள் மனம். சேறு சகதிக்குள் மாட்டிக் கொண்டு வெளிவந்த பறவை மேலே எம்பி எம்பிப் பறக்க முயற்சி செய்து தன் இறகுகளில் படிந்திருந்த சேற்றின் கனம் தாங்காமல் திரும்பத் திரும்பக் கீழே விழுவது போல அவளுடைய மனம் அந்த நேரம் துடித்துக் கொண்டிருந்தது.
அவள் பார்வை கிணற்றில் இறங்கியவர்களை நோக்கிப்போனது. வேலை செய்பவர்களின் சலசலப்போடு அவள் இதயத் துடிப்பு கலந்துவிட்டது. இசையரசி இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. இன்னும் ஒரு ரகசிய மலராகத்தான் அவளுக்குள் அது மறைவாய்ப் பூத்திருந்தது. கிணற்றைத் தூர்வாரும் காட்சி கவிதை போலத் தோன்றியது. மண்வாசம் கலந்த மண்ணோடு மூங்கில் வாளிகள் கீழேவிழுவது, வயல்களை உழும் இசை போலக் கேட்டது. கிணற்றினுள்ளே ஒலித்த தாறுமாறான ஓசை அவள் வாழ்க்கையின் ஓசை போலக் கேட்டது இசையரசிக்கு. இசையரசி அதைஉன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். கிணற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரும் தூர் போலத் தன் மனதில் புதைக்கப்பட்டிருந்த சின்னச் சின்னச் சந்தேகங்கள் மேலெழுந்து வந்த வண்ணம் இருந்தன.”என்ன செய்யலாம்? எனக்கு அந்தத் துணிச்சல் இருக்கா? அம்மா, அப்பா என்ன சொல்வார்கள்? சாதி சனம் என்னசொல்லும்?” அவளின் பயம் மற்றும் பதைபதைப்பு இருதயத் துடிப்பில் எதிரொலித்தது. இருதயம் வேக வேகமாக அடித்தது.
இருள் கவ்வத்தொடங்கியதும் தூர்வாரும் வேலை முடிந்துபோனது. ஊர் மக்கள் நாளை மறுநாள் விழா ஆரம்பம் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே வீட்டுக்குச் சென்றார்கள். இசையரசியும் அமைதியாகத் திரும்பினாள். யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஆனால் அவளது இதயம் முழுவதும் பெரும் இரைச்சல் கேட்டுக்கொண்டேயிருந்தது. மறுநாள் கல்லூரிக்குக் கிளம்பும்போது, ‘நாளை விழாதொடங்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன்’ என்று யோசித்துக் கொண்டே கல்லூரிக்குச் சென்றாள்.கல்லூரி வளாகத்தில் ஆய்வு மாணவிகளோடு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் வல்லினா ஜோசப் பேசினார்.
தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தங்கியிருந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அவர் ஒவ்வொரு மாணவியிடமும் தமிழ்நாட்டின் நாட்டார்தெய்வங்கள், நாட்டார் சடங்குகள், நாட்டார் வழக்குகள், நாட்டார் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கேட்டு ஆர்வமாகக் குறிப்பெடுத்தார். “உங்கள் ஊரில் நடந்த காதல் திருமணம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்தவர்கள் பற்றிய தகவல்களோ அல்லது அவர்களைப் பற்றிய கதைகளோ இருந்தால் அது பற்றிக் கூறுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒவ்வொரு மாணவியின் கண்களையும் உற்றுப் பார்த்தார். அவரின் பார்வையில் ஏதோ ஒரு தேடலிருந்தது.மாணவிகள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்ததை, கேள்விப்பட்டதையெல்லாம் கூறினர்.
அப்போது இசையரசியின் முறை வந்தது. அவள் சொல்லலாமா, வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு பேசத்தொடங்கினாள்.”எங்கள் ஊரில் ஆண்டுதோறும் ஒரு விசேஷத் திருவிழாநடக்கும். அது கிணற்றுத் திருவிழா. ஒரு கிணறு வருடம் முழுவதும் மூடி வைக்கப்பட்டிருக்கும். பிறகு ஒரு நாள் திறந்து அலங்கரித்து அங்கு பூஜைகள் நடத்தப்படும். மறுநாள் ஊர்மக்கள் வெள்ளை உடையணிந்து கூடி ஒற்றுமைச் சடங்கு செய்வார்கள். பிறகு ஒரு அம்மா தன் குழந்தையுடன் இருக்கும் சிலையைக் கிணற்றிலிருந்து வெளியிலெடுத்துப் பூஜை செய்து மாலை மீண்டும் அந்தச் சிலையை கிணற்றுக்குள்ளேயே போட்டு விடுவார்கள்” என்று இசையரசி சொல்லி முடித்தாள்.
அவள் சொன்ன கதையைச் சுற்றிலுமிருந்த மாணவிகளோடு வல்லினாவும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். “வித்தியாசமாக இருக்கிறதே. இதுவரை நான் ஆயிரக்கணக்கான திருவிழாக்கள் தொடர்பான கதைகளைக் கேட்டிருக்கிறேன். இதுபோல் ஒரு திருவிழாக் கதையைக்கூடக் கேட்டதில்லை. இப்படியொரு திருவிழா கொண்டாடக் காரணமென்ன?” என்று ஆர்வமாகக் கேட்டார் வல்லினா. “என்னோட பாட்டி சொன்ன கதைதான் இது. என் பாட்டிக்குப் பத்து வயதிருக்கும் போது அந்த ஊரிலிருந்த எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவருடன் திருமணம் செய்து ஊரை விட்டு ஓடிப்போய்விட்டாராம். இரண்டு வருடங்கள் கழித்து கணவனையிழந்து, ஏதோ ஒரு ஊரில் குழந்தையோடு வாழ்ந்துகொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. எங்கள் சாதிச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அந்தப் பெண்ணின் அப்பா, அம்மாவும் அங்கு சென்று அவரிடம் நயமாகப் பேசி அழைத்து வந்தார்களாம். அடுத்த நாள் சாதிச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசினார்களாம். “பொட்டக் கழுதைக்கு எத்தனை துணிச்சல்?” “யார் உனக்கு இத்தனை துணிச்சல் குடுத்தது?” “நம்ம முன்னாடி நேரா நிக்கக்கூட முடியாம கூனிக்குறுகி ‘சாமி சாமி’னு வந்து கெஞ்சறவனுக்கு முந்தானைய விரிச்சிருக்கியே. ‘த்து, அப்படி அவன்கிட்ட என்னத்தக் கண்டநீ?”.
“நம்மளப் பாத்தா துண்டெடுத்துக் கக்கத்துக்குள்ள வச்சு கும்பிடு போடற நாய்கள்ல ஒண்ணு தோள்ல துண்டப் போடஆரம்பிச்சுதுன்னா ஒன்னொண்ணாப் பழகிரும். இதை இதோடதடுத்து நிறுத்தணும்.” “இப்ப நாம எடுக்கிற முடிவு இனியிப்படி பண்ணலான்னு நினைக்கிற பொட்டச்சிகளுக்கும் ஒரு பாடமாயிருக்கோணும்.””இதுக்கொரு முடிவுவெடுக்காம விட்டோம்னா, அப்புறம் இதெங்க போய் நிக்கும்னு சொல்ல முடியாது. நம்ம தலமேல வந்து ஏறி உக்காந்துக்குவானுக.” “ஊரஉட்டு ஓடிப் போயிட்டா எங்கயாச்சும் போய் பொழச்சுக்கலாம்ங்கற நெனப்பு வந்து ஊரஉட்டு ஓடிப்போய்டுவாளுங்க. எங்க ஓடினாலும் உடமாட்டோம். கூட்டிட்டு வந்து கண்ட துண்டமா வெட்டிப் போடுவோம் அப்படிங்கற பயம் நம்ம சாதிப் பொட்டச்சிகளுக்கு இருக்கோணும்.” என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டேயிருந்தார்களாம்.
அந்தப்பெண்ணின் அம்மாவும் அப்பாவும் இதைக் கேட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தார்களாம். “நீங்க எதைச் சொன்னாலும் ஏத்துக்கிறங்க” என்று அழுதுகொண்டே கூறி, கூனிக்குறுகி அமர்ந்திருந்தார்களாம். மறுநாள் பேசி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டு சங்கத்தினர் கிளம்பிச் சென்று விட்டார்களாம். அடுத்த நாள் காலை அந்தப் பெண்ணையும் அவளது குழந்தையையும் காணோம்னு ஊர் முழுசும் தேடினாங்களாம். அப்போது நேத்து ராத்திரி ஊரெல்லையிலிருக்கிற கெணத்தடில ஒரு பெண்ணைக் குழந்தையோடு பாத்தேன்னு ஒருத்தர்சொன்னாராம். அந்தக் கிணற்றில் தான் அந்தப் பெண் விழுந்து இறந்து இருக்கோணும்னு ஊர் மக்கள் முடிவு பண்ணிட்டாங்களாம்.
அந்தப் பெண் இறந்து ஒரு வருடத்தில் அந்தக் கிணற்றில் விழுந்து ஏராளமான பெண்கள் இறந்து போனார்களாம். இது அந்தப் பெண் விட்ட சாபம்தானென்று பயந்து போன ஊரார்கிணற்றை இரும்புக் கம்பி போட்டு மூடினார்களாம். ஆனாலும் பெண்களின் தற்கொலை வேறு வடிவத்தில் தொடர்ந்து கொண்டுதானிருந்ததாம். ஊர் மக்கள் இறந்து போன அந்தப் பெண்ணின் ஆன்மாவைச் சாந்தப்படுத்த கிணற்றிற்குப்பூஜை செய்தார்களாம். அதன் பிறகும் தற்கொலைகள் நின்றபாடில்லையாம். அந்த நேரத்தில் தான் இரண்டாம் வருட பூஜை வந்ததாம். அப்போது இறந்துபோன பெண்ணின் தங்கைக்குச் சாமி வந்து, வெறித்தனமாக ஆடினாங்களாம். ‘என்னை எதற்காகிப்படி வஞ்சித்தீர்கள்?’ என்று கேட்டபடி காளியைப் போல் ருத்ரதாண்டவம் ஆடினாங்களாம். ஊர் மக்கள் அனைவரும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார்களாம். சாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
“என்ன செஞ்சா உங்க கோபந்தீரும்? உங்க கோபந்தீர்க்க எதுவும் செய்யத் தயாராக இருக்கறோம். எப்படியாவது நம்ம ஊர்ப்பொம்பளப் புள்ளைகளின் இறப்பைத் தடுத்து நிறுத்துங்கள்சாமி!” என்று அனைவரும் மண்டியிட்டுக் கேட்டார்களாம். “சாதியைக் காரணங்காட்டித்தான எனனைக் கொன்னீங்க? இனிமேல் இந்த ஊருக்குள்ள சாதியேயிருக்கக் கூடாது” என்று சாமியாடிய பெண் கூறினாங்களாம். ஊர்த் தலைவரும் சாதித்தலைவரும் உடனடியாகக் கூடிப்பேசி “இது பத்தி ரோசிக்கிறோம் சாமி!” என்று கூறினார்களாம். “ரோசிங்க ரோசிங்க. பொறுமையா ரோசிங்க. ஆனா, அதுக்கான விளைவுகளை நீங்க சந்திக்கத் தயாராகுங்கள்” என்று கூறிவிட்டு அந்தப் பெண் மயக்கமடைஞ்சாங்கலாம். அடுத்த இரண்டுமாதத்தில், ஊர்த்தலைவரின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாளாம். அடுத்தடுத்து பெண்களின் இறப்பு தொடர்ந்துகொண்டே இருந்ததாம்.
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பெண்களின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேறு வழியில்லாமல் ஊரேசாமி சொன்ன அருள்வாக்கை ஏற்றுக்கொண்டதாம். அதன் பிறகு ஊரே ஒன்று கூடி இனிமேல் சாதியற்ற ஊராக இருப்போம் என்று முடிவு செய்ததாம். அதன் பிறகு அந்தத் திருவிழாவை அனைத்துச் சாதியினரும் சேர்ந்து நடத்த ஆரம்பித்தார்களாம். யாராவது வேற்று சாதியினரைக் காதலித்தால் அந்தத் திருவிழாவன்று கூறினால் அவர்களுக்கு ஊரே முன்னின்று திருமணம் செய்து வைப்பதென்றும் முடிவானதாம். அதன் பிறகு ஊரில் பெண்களின் இறப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியதாம். அந்தத் திருவிழா இன்று வரை தொடர்கிறது” என்று கூறி முடித்தாள் இசையரசி.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மாணவிகள்மெய்மறந்து கேட்டனர். ஆனால் வல்லினா ஜோசப்பின் கண்களில் பிரகாசம் தோன்றியது.”அந்த ஊரின் பெயரென்ன?” என்று வேகவேகமாகக் கேட்டார்வல்லினா.”வேட்டுவாளையம்” என்றாள் இசையரசி. “வேட்டுவாளையம். எஸ். அந்த சாமியின் பெயரென்ன?””வள்ளியாத்தாள் சாமி!” என்றாள் இசையரசி. அந்த நொடியில் வல்லினா ஜோசப்பின் உடல் ஒரு நொடி சிறு அதிர்வை எதிர்கொண்டது.பத்து வருடங்களாகத் தேடியது இதுதான்! எதற்காக இந்த ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாரோ அதற்கான பலன் அன்று கிடைத்ததாக நினைத்தார். அவரின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.வல்லினா இசையரசியைக் கட்டியணைத்துக்கொண்டார்.
அவர் செய்கையில் இசையரசியோடு மற்றவர்களும் திகைத்துப்போனார்கள்.”அந்தத் திருவிழா எப்போது?” என்று கேட்டார் வல்லினாஜோசப்.”நாளை.” என்றாள் இசையரசி.”நீங்க தப்பா நினைக்கலனா நானும் உங்களோட அந்தத் திருவிழாவைப் பார்க்க வரலாமா?” என்று மென்மையான குரலில் கேட்டார் வல்லினா. இசையரசி பெருமை பொங்க “தாராளமாக வரலாம்” என்றாள். அப்போதே இசையரசியோடு திருவிழாவிற்குக் கிளம்பினார்வல்லினா. ஊர் முழுவதும் பண்டிகை மணம் பரவியிருந்தது. வீதிகள்சுத்தம் செய்யப்பட்டு வீடுகளனைத்தும் சுண்ணாம்பு பூசப்பட்டு வாசல்களில் கோலங்கள் விரிந்து கிடந்தன. பச்சைத் தென்னையிலைகள் ஒவ்வொரு தெருவிலும் அலங்காரமாகத் தொங்கின. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் செக்கச் சிவந்த மருதாணி, சில ஆண்களின் கைகளிலும் சிவந்திருந்தன. குழந்தைகள் பட்டுப்பாவாடை அணிந்து, சந்தோஷத்தில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஊரையே வல்லினாவிற்குச் சுற்றிக் காண்பித்தாள் இசையரசி.வல்லினா மீண்டும் மீண்டும் திருவிழா பற்றியும் வள்ளியாத்தாசாமி பற்றியும் இசையரசியிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். ஊர்மக்கள் வல்லினாவை அதிசயமாகப் பார்த்தனர். “ஆரு புள்ள இது? வெள்ளைக்காரியாட்ட இருக்குது?” என்று பார்த்தவர்கள் எல்லோரும் கேட்டனர். அனைவருக்குமே பதிலளித்துக் கொண்டே வந்தாள் இசையரசி.
கிணற்றைச் சுற்றிப்பிரம்மாண்டப் பந்தல் போடப்பட்டிருந்தது. பச்சை மயில்கள்வரைந்த வண்ணக் கொடிகள் காற்றில் பறந்தன. சந்தனமும் குங்குமமும் கலந்த வாசனை அங்கு நிறைந்திருந்தது.மல்லிகை, ரோஜா, அரளி, கனகாம்பரம் என்று விதவிதமான மலர்களால் கிணறு அலங்கரிக்கப்பட்டிருந்தது.”ஏய்! அந்தப் பக்கம் மஞ்சள் கயிற்றை இறுக்கமாகக் கட்டு!” என்று இளைஞர்கள் கூச்சலிட்டனர்.”பாருங்க, எத்தனை அழகாயிருக்குது கிணறு! ரொம்ப நாளுக்குப் பெறகு உயிர் பெற்ற மாதிரி இருக்கு!” என்று பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். கிணற்றை மக்கள்கடவுளாகவே நினைத்தனர்.”இந்தக் கெணறு தான் தெய்வமா நின்னு எங்களை வாழ வைக்குது.வருஷத்துக்கொருதடவை தாயாக வழிபடுறோம். எங்கஊர்த் தாயி வள்ளியாத்தா வாழ்ற இடம்!” என்று வயதானவர்கள்கூறினார்கள்.
இதைக் கேட்ட வல்லினாவின் உடல் சிலிர்த்தது. இசையரசியின் கண்கள் கிணறறை நோக்கினாலும் மனம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தது. கிணற்றின் முன்புறம் எழுந்த பறையின் ஓசை இசையரசியின் பலத்த யோசனையைக் கலைத்துப் போட்டது. நாதஸ்வரமும் பக்கவாட்டில் ஒலித்தது. மக்கள் ஆரவாரம் செய்தனர். கிணற்றைச் சுற்றி மக்கள் வட்டமாக நின்று கொண்டனர். பெரியவர்கள்ஆற்றிலிருந்து எடுத்து வந்த புனித நீரைத் தெளித்துப் பூஜையைஆரம்பித்தனர்.முதலில் கிணற்றுக்குப் பாலபிஷேகம் செய்யப்பட்டது. குடம் குடமாகப் பாலைக் கிணற்றில் ஊற்றினார்கள். வெள்ளைப் பால் நீரில் பட்டதும் கிணற்றுக்குள் சுழன்று கலங்கியது. அடுத்து நெய் ஊற்றப்பட்டது. அதன் மணம் காற்றில் கலந்தது. பின்னர்தேன் ஊற்றப்பட்டது. பொன்னிற நீர்த்துளிகள் கிணற்றின் அடிவரை விழ, மக்கள் கைகளை உயர்த்திப் பிரார்த்தனைசெய்தனர். “தாயே! எங்கள் குலம் காக்கணும்! எங்களுக்கு வளம் சேர்க்கவேண்டும்!” என்று குரல்கள் ஒலித்தன.
“எங்க ஊரு சனம் எல்லோரும் மகிழ்ச்சியா வாழோணும்!” என்று பெண்கள் ஆர்ப்பரித்தனர். பழங்கள், பூக்கள், சந்தனம், குங்குமும் கலந்த மணமும் ஒருமித்து இசையோடு ஒன்றாகி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கிணற்றுக்குள் கொட்டிய பாலால் தண்ணீர் பனி நீர் போல் ஆனது. கொட்டிய நெய் தண்ணீர் மீது குமிழ் போல் மிதந்து தெய்வ ஒளி போல ஆனது. கிணற்று நீரில் மிதந்த மலர்களின் வாசனை வழியாக மக்களுக்கு ஆசிகளை அள்ளித் தெளித்தன மலர்கள். அது ஒரு சாதாரணக் கிணறல்ல. அது ஊரின் தாய், அது ஊரின் உயிர், அது ஊரின் நம்பிக்கை.வள்ளியாத்தா குடும்பத்தில் வழிவழியாக வந்தவர்களில் ஒரு பெண்தான் பூஜை செய்தாள். கண்களை மட்டும் விட்டுவிட்டு முகத்தை முழுவதும் வெள்ளை நிறத் துண்டால் மூடிக் கட்டியிருந்தாள். ஆணிகள் பதிக்கப்பட்ட சிறு செருப்பின் கூர்முனைகளின் மீது ஏறி நின்று செருப்பை அணிந்து கொண்டாள். பெண்கள் குலவையிட்டனர்.
அந்தப் பெண் விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்தாள். கைகளை உயர்த்தி அணிந்திருந்த செருப்போடு கிணற்றை வலம் வந்தாள். திடீரென்று முகத்தை மூடியிருந்த துண்டை அவிழ்த்துக் கிணற்றுள் வீசிவிட்டு தரையில் குதித்துக் குதித்து அருள் வந்து ஆடினாள். பறையிசை ஆக்ரோஷமாக முழங்கியது. அதைவிடஆக்ரோஷமாக நிலம் அதிர ஆடினாள். மிகுந்த ஆவேசத்தோடு நாக்கைக் கடித்து ‘ஏய் ஏய்’ என்று மிரட்டலாக குரல் எழுப்பி கத்த ஆரம்பித்தாள். அந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் அவளைச் சுற்றி நின்றுகொண்டு ஆசிர்வாதம் வாங்கினர். சிலர் தங்களது சொந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டனர். எல்லாம் முடிந்த பிறகு “என்னையும் என்ற புள்ளையும் இப்படிக் கொன்னுட்டீங்களே! பாவிகளா!” என்று அந்தப் பெண் கதறியபோது அவர்மீது குடம் குடமாகத் தண்ணீரூற்றி சாந்தப்படுத்தினார்கள்.
அங்கு நடந்த ஒவ்வொன்றையும் வல்லினா உற்று நோக்கி கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு நொடி கூட அவருடைய கண்கள் அங்கிருந்து விலகவில்லை. அவருடைய மனம் வேறு சிந்தனைக்குப் போகவில்லை. மாலை நேரமானதும் பூஜை முடிந்தது. மக்கள் வீடு திரும்பினர். ஆனால் அத்துணை மகிழ்ச்சியின் நடுவிலும் கொஞ்சம் சோகத் துளி கலந்திருந்தது. கண்களில் மகிழ்ச்சி. இதயத்தில் கலக்கம். இசையரசியும் வல்லினாவும் வீடு நோக்கிப்போனார்கள். போகும் வழியில் இசையரசி தன் காதலைப் பற்றி வல்லினாவிடம் கூறினாள். தன் மனதிலிருக்கும் பயத்தைப்பற்றியும் கூறினாள். சொல்லச் சொல்ல இசையரசியின் உள்ளத்தில் பதற்றம் இன்னும் கூடியது.ஆனால் அவளுடைய மனம் பொம்மைகளையடுக்கி வைத்து கலைத்துக் கலைத்து விளையாடும் குழந்தையைப் போல மாற்றி மாற்றி யோசித்துக்கொண்டிருந்தது.
நாளை என்ன ஆகுமோ? என்ற கேள்வி அவளைச் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது.அன்று இரவு…”இறந்து போன வள்ளியாத்தாளின் தங்கை இப்போது எங்கேயிருக்கிறார்?” என்று வல்லினா இசையரசியின் பாட்டியிடம் கேட்டார்.”அட! அந்தச் சாமியாடுன பொண்ணா? அவ அக்காசெத்துப்போன அடுத்த ரெண்டு வருஷத்துல ஊர்ல இருக்குற வேற சாதி ஆள ஊர்த் திருவிழாவுல கண்ணாலம் பண்ணிக்கிட்டா. பொறகு ஊர உட்டு வேற ஊருக்குப் போய்ட்டா” என்றார். “ஓ அப்படியா!” என்று கேட்டுவிட்டு புன்சிரிப்போடு தலையாட்டினார் வல்லினா. அடுத்த நாள் காலை. ஊரின் வானம் வெள்ளை மயிலின் இறகைப் போலச் சுத்தமாக இருந்தது.
கிணற்றைச் சுற்றி வெள்ளை நிறத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கம்பீரமாக அந்தக் கிணறு வானின் நிலவைப் போலத் திகழ்ந்தது. அந்த நாளுக்கான காத்திருப்பு மக்களின் முகங்களில் தெரிந்தது.ஊரார் எல்லோரும் வெள்ளையுடைகளில் வந்து கிணற்றைச் சுற்றி நிற்கத் தொடங்கினர். அங்கே சாதி வேறுபாடுகள்கரைந்துபோய் எல்லோரும் ஒரே குடும்பமாகத் தோன்றினர்.
முதலில் ஊரின் மூத்த பெண்கள் கிணற்றின் முன் வந்து கைகளைக் கோர்த்து வட்டமாக நின்றனர். அவர்கள் “இனி நாங்கள் ஒன்றாக வாழ்வோம்… எங்களுக்குச் சாதி இல்லை…” என்று கும்மியடிக்கத் தொடங்கினர்.அந்தக் குரல் காற்றில் கலந்து அதிர்ந்தது. இசையரசியின் இதயம் நடுங்கியது. அத்தனை பிரம்மாண்டமாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் நடந்த அந்த விழா அவளது மனதில் சிலர்ப்பைக் கொடுத்தது. அடுத்து வயதான ஆண்கள் கிணற்றின் முன்னே வந்து அவர்களும் கும்மி அடிக்கத் தொடங்கினர். கைகள் இணைந்து, கால்கள் மிதித்து, ஒரே சுருதியில் ஆடினார்கள். அவர்கள், “நாங்கள் ஒற்றுமையாக வாழ்வோம்… நாங்கள் பிரியமாட்டோம்… இந்த ஊர் ஒரே குடும்பம்…” என்று முழக்கமிட்டனர். கூட்டத்திலிருந்தவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அந்தச் சத்தத்தில் அந்தக் கிணறு புனிதமான தேவாலயமாக மாறி நின்றது போலத் தோன்றியது இசையரசிக்கு. விழாவின் முக்கியமான தருணம் வந்தது. “இந்த வருடம் திருமண அறிவிப்புக்கான நேரமிது. உங்களுடைய கோரிக்கைகளைஇங்கு வைக்கலாம்” என்று கோயிலின் தர்மகர்த்தா கூறினார்.இசையரசியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் தன் கால்களை ஓரடி முன்னேயேடுத்து வைத்தாள். அவளையறியாமல் அவளுடைய கால்கள் பின்னிக்கொண்டு நகர மறுத்தன. அந்தக் கூட்டத்தின் மத்தியில் வெள்ளையுடையில் ஏஞ்சலைப் போல் ஜொலித்தாள் இசையரசி. ஆனால் அவளது கண்கள் மட்டும் கலக்கத்தால் நிறைந்திருந்தன.
பிரிட்டோவைப் பற்றி அவள் யோசித்தாள். அவர் ஒரு பள்ளியாசிரியர். நல்ல சம்பளம். நல்ல குடும்பம்… ஆனால் அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர். எப்படி இவர்கள்ஏற்றுக்கொள்வார்கள்?இந்தக் குழப்பம்தான் அவளுடைய மனதை இரண்டு நாட்களாக மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது போலக் கொத்திக்கொண்டிருந்தது.அந்த நேரத்தில் இசையரசியின் அருகில் நின்றுகொண்டிருந்த வல்லினா திடீரென்று ஆவேசம் வந்தவராக கிணற்றின் முன்பிருந்த ஆணிச் செருப்பின் மீதேறி நின்றார். கண்களைச் சுழற்றிச் சுழற்றிப் பார்த்தார்.”ஏ… ஏ…” என்று கத்தியபடியே நாக்கைக்கடித்துக் கொண்டு “நான் யார் தெரியுமா?” என்று கத்தினார். இசையரசி வல்லினாவின் அருகில் சென்று வல்லினாவை அமைதிப்படுத்தும் விதமாகக் கைகளை இழுத்துப் பிடித்தாள்.
ஆனால் வல்லினா அவளை “விடு” என்று உதறித் தள்ளி கிணற்றைச் சுற்றி வலம் வந்தார். ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றி வந்து முடித்தவுடன் நிலம் அதிர ஆடஆரம்பித்தார். பறை இசைக் கலைஞர்களை இன்னும் வேகமாக இன்னுமின்னும் என்று சப்தமிட்டுப் பறையை முழக்கச் சொன்னார். தெள்ளத் தெளிவாகத் தமிழில் பேசினார் வல்லினா. ” என்னையும் என்புள் ளையையும் அநியாயமாக் கொன்னுட்டீங்களே!. என் புருஷனக் கூட நீங்கதான் கொன்னீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று வல்லினா கூறி முடித்தார். கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. “அம்மா! வள்ளி யாத்தாவோட புருஷனை நம்மூர்க்காரங்கதான் கொன்னாங்களா? உனக்குத் தெரியுமா?” என்று தன் அம்மாவிடம் கேட்டாள் இசையரசி. “எனக்குத் தெரியாது புள்ள! இப்பதான் தெரியுது” என்று இசையரசியின் அம்மாவும் அதிர்ச்சியோடு கூறினார்.
அப்போது வயதான முதியவர் ஒருவர் கூன் விழுந்த முதுகோடும் சுருங்கிய தோலோடும் கையில் ஊன்றுகோலோடும் நடக்க முடியாமல் நடந்து வல்லினாவின் முன்னால் வந்து நின்றார்.”என்ன நான் சொல்றது சரிதானே?” என்று ஆக்ரோஷமாக அவரைப் பார்த்துக் கேட்டார் வல்லினா. “அம்மா தாயே நீ வள்ளியாத்தாதான் வந்து இருக்கே. அதநான் பரிபூரணமா நம்புறேன். உன்ற புருஷனைக் கொன்னது நாங்கதான். எங்க அப்பாவும் அவரோடு இந்த ஊர்க்காரங்க நாலு பேரும் சேர்ந்துதான் கொன்னாங்க. நானப்போ சின்னப்பையனாயிருந்தே. எங்கப்பா எங்கம்மாகிட்ட இதப் பத்திப்பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். மன்னிச்சிடு தாயே! மன்னிச்சிடு!. எங்க அப்பாவுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். அந்த நாலு பேர் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். அவங்களுக்கு சாதிவெறி கண்ணைமறைச்சிருச்சு. அதுக்கு பிராயச்சித்தமா தானே இப்ப ஊருக்குள்ளசாதி பாக்காம கண்ணாலம் பண்ணி வைக்கிறோம். தாயே என்னகோவமாயிருந்தாலும் மன்னிச்சிடு” என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுதுகொண்டே கேட்டார்.
ஊரே அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தது. என்னது, வள்ளியாத்தா புருஷனை நம்ம ஊர்க்காரங்கதான் கொன்னாங்களாஎன்று ஆங்காங்கே சலசலப்பு ஏற்பட்டது. “சாதியை ஏற்றுக்கொண்ட உங்களால் மதத்தையேற்றுக் கொள்ள முடியுமா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார் வல்லினா. “என்ன தாயே இப்படிக் கேட்டுட்டீங்க. கண்டிப்பாஏத்துக்குவோம். அப்புடியேதாச்சு வர்ற பட்சத்தில் அதை நாங்ககண்டிப்பா ஏத்துக்குவோம்” என்றார் பெரியவர்.
ஊர் மக்களைச் சுற்றிக் கண்களைச் சுழலவிட்டார் வல்லினா. ஊர் மக்களனைவரும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்கள். அப்போது வல்லினாவின் பார்வை ஒரு கணம் இசையரசி மீது விழுந்து பிறகு தன் கையில் குத்தப்பட்டிருந்த டாட்டூவில் பதிந்தது. அதில், வள்ளியாத்தாள் சிரித்துக் கொண்டிருந்தார். வல்லினாவின் கொள்ளுத் தாத்தா ஜோசப்பினால் வள்ளியாத்தாள் காப்பாற்றப்பட்டார். அவரோடு இங்கிலாந்து சென்ற வள்ளியாத்தாள் ஜோசப்பை மறுமணம் புரிந்து கொண்டார். தன் வாழ்வைக் கதைகதையாகத் தன் கொள்ளுப்பேத்தி வல்லினாவிடம் கூறிய வள்ளியாத்தாள், தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது தன் சொந்தங்களைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசையை இறக்கும் முன் வல்லினாவிடம் கூறினார்.
வள்ளியாத்தாளின் இறப்புக்குப் பிறகு, தன் கொள்ளுப்பாட்டியின் சொந்த பந்தங்களைச் சந்தித்து, வள்ளியாத்தாள்நன்றாக வாழ்ந்ததைக் கூற வேண்டுமென்று பத்து வருடங்களாகத் தேடியலைந்து சொந்தத்தைக் கண்டுபிடித்த பின்பு , வள்ளியாத்தாவால் சாதி களையப்படடிருப்பது அறிந்து வள்ளியாத்தாள் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார். ஆடிக்கொண்டிருந்த வல்லினாவைச் சாந்தப்படுத்த குடம் குடமாக மக்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினார்கள். வல்லினா மெல்ல அமைதியானார். நிமிர்ந்து இசையரசியைப் பார்த்தார். இசையரசி தைரியத்தை மனதில் வரவழைத்துக்கொண்டு கூட்டத்தின் முன்னால் கம்பீரமாக அடி எடுத்து வைத்தாள்.
00

சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

