அரவிந்தன் பெருமாள்

மாம்பழ வகைகளுக்குப் பிரசித்தி பெற்ற சேலத்தில் இன்று மேம்பாலங்கள் பிரசித்தி பெற்றிருக்கின்றன. நாலு ரோடு,ஐந்து ரோடு பாலங்கள் தவளையின் நான்கு இதய அறைகளைக் கொண்டது போல கழுகுப்பார்வையில் காட்சியளிக்கலாம் -நான் கழுகாக மாறுவதெல்லாம் சாத்தியமா என்ன?.

பணி மாறுதலுக்குப்பின் வாடகை வீடு தேடியலைந்த பின்னர் நல்லதொரு அடுக்ககத்தில் மூன்றாவது அடுக்கின் வடக்குப்பார்த்த வீடு கிடைத்ததை என் அதிர்ஷடம் என்றே சொல்லலாம். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த சர்வீஸ்டு அபார்ட்மெண்ட்டில் நான் ஒருவன் மட்டுமே தங்கப்போகிறேன் என்பது வாரநாட்களுக்கானது மட்டுமே. வார இறுதி நாட்கள் விடுமுறை என்பதால் குடும்பத்தைப் பார்க்க கன்னியாகுமரிக்குக் கிளம்பி விடுவேன்.

சமையலறையின் முன்னே டைனிங் ஹால் மூலையில் வாஷிங் மெஷின் வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது .அந்த மூலைக்கு அருகில் பால்கனி .பால்கனியின் உத்தரத்தில் ஒரு படுக்கை அறையின் குளிர்சாதனக் கருவியின் அவுட்லெட் இருந்தது. பால்கனியில் நுழையும்போதே புறா எச்சத்தின் கவிச்சை வீச்சம் கமழ்ந்தது. அவுட்லெட் மெஷினின் சுற்றளவெல்லாம் புறாவின் எச்சம் கறுப்பும் வெள்ளையுமாய் காய்ந்தும் ஈரமாயும் இருந்தது. எனக்கு முன்னால் இந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி பண்ணிக்கொண்டு போய் வருடங்களாகியிருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

பால்கனியில் நின்றிருந்த சற்று நேரத்தில் எங்கிருந்தோ என் தலையைத் தொட்ட படி புறா ஒன்று தன் அலகில் எதையோ பற்றிக்கொண்டு ஏசி அவுட்லெட்டின் மேற்பகுதியை அடைந்தது. ஏதாகிலும் இரையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது சிறு குச்சிதான். ஒரு நாற்காலியை எடுத்து வந்து அதில் ஏறி ஏசி யின் மேலே பார்த்தேன். இப்போதுதான் புறா, தனக்கான வீட்டைக் காகங்கள் மரங்களின் கவட்டுக்கிளையில் மரக்குச்சிகளால் உருவாக்குகிற தட்டைப் போல கட்டிக்கொண்டிருக்கிறது எனத் தெரிய வந்தது. நான் இங்கே தனியாக வசிக்கப்போவதில்லை, அவ்வப்போது ஒலிக்கும் குணுகல் சத்தத்துடன்தான் என்ற சகோதர உணர்வு மகிழ்ச்சியைத் தந்தது .

வாரங்கள் இரண்டு உருண்டோடி விட்டன. மூச்சு விட சிரமமாயும் தொடர்ந்து இருமலும் வந்து கொண்டிருந்ததால் அருகிலிருந்த மருத்துவரை அணுகினேன் .

“உங்களுக்கு வந்திருப்பது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்“ என்றார் டாக்டர் .

“அப்படீன்னா என்ன டாக்டர் ?”

“நீங்கள் வீட்டில் புறா வளர்க்கிறீர்களா?”

‘இல்லை டாக்டர், ஆனால் வீட்டுப் பால்கனியில் புறா ஒன்று கூடு கட்டியிருக்கிறது. மேலும் பல புறாக்கள் அங்கே வந்து போகும்‘

“முதலில் அதை அப்புறப்படுத்தப் பாருங்கள்,

புறாக்களின் எச்சத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸினால் ஏற்படுவது இந்நோய் .இவ்வைரஸ் காற்றில் பரவி சளி இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும். அதனால்தான் நீங்கள் மூச்சு விட சிரமப் படுகிறீர்கள்.

மூன்று நாட்கள் மாத்திரை எழுதியிருக்கிறேன். சரியாகிடும். ஆனால் மீண்டும் வராது என உறுதியளிக்க இயலாது. முக்கியமா அந்தப் புறா கூட்டை அப்புறப்படுத்திடுங்க.”

மூன்றாவது மாடியில் பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். இதில் நானெங்கே ஏ சி அவுட்லெட்டில் ஏறி அந்தக் கூட்டைக் கலைப்பது. அடுத்தவர் கூட்டைக் கலைப்பவன் உருப்படுவானா?. எனவே அலுவலக உதவியாளர் உதவியை நாடினேன். அவர் வேறொரு நபரின் உதவியை நாடி ஒருவரை அழைத்து வந்தார். வயது அறுபதிருக்கும். ஜன்னல்களுக்கு மெல்லிய இரும்பு மெஷ் வலை அமைப்பவராம் .

“புறா கூட்டை எடுத்துடலாம் சார். ஆனால் புறா மீண்டும் இங்கேதான் வரும். அதனால சன்னமா ஒரு பெரிய மெஷ்ஷை பால்கனி முழுசுக்கும் தடுப்பா போட்டுடலாம்”

நான் அவரிடம் ’கூட்டைக் கலைப்பது பாவமில்லையா?’

“ஆமா சார் பாவம்தான். அது என்னோடு போயிடும். எனக்குத்தான் யாருமில்லையே. ஓண்டிக்கட்டை”

வார இறுதியில் குடும்பத்தைப் பார்க்க நான் கன்னியாகுமரிக்குச் சென்றுவிடுவதால் அலுவலக உதவியாளர் ‘சனி ஞாயிறு லீவ்ல நீங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்க சார், நாங்க வேலைய முடிச்சு வைக்கிறோம்‘ என்றார் .

ஹிஸ்டோபிளாஸ்மாசிஸ் தொற்றுநோய் கன்னியாகுமரி வரை பரவிவிடுமோ என்ற ஐயத்துடன்தான் வார இறுதியில் இரயில் ஏறினேன் .

திங்கள் கிழமை காலை அபார்ட்மெண்ட் வீடு நோக்கிக் காரில் போகும்போதே வெள்ளை வண்ணம் பூசப்பட்ட எனது அடுக்ககத்தின் மூன்றாவது தளத்தில் செவ்வக வடிவில் கருப்பு நிறத்தில் திருஷ்டிப் பொட்டொன்று வைத்தாற்போல பால்கனி இருந்தது. மெஷ் போட்டாயிற்று என்று நினைத்துக்கொண்டேன்.

அடுக்கக வாசலில் காரிலிருந்து இறங்கியபோது கீழே சாம்பல் நிறத்தில் ஏதோ அசைவது போலத் தெரியவே அதை மிதிக்காமல் வேறிடத்தில் காலை ஊன்றி பார்த்தேன். அதே புறாதான். பறக்க இயலாமல் சிரமப்பட்டு உடலை அசைத்தபடி கிடந்தது. குனிந்து கையிலெடுத்தேன் மென்மையான வெம்மையான அதன் உடல் என் உள்ளங்கைகளில் தன் மிதமான எடையை உணர்த்தியது அதன் அலகு ஆரம்பிக்கும் சதைப்பகுதியில் மிக மெல்லிய இரும்புக் கம்பிகளின் சிறு சிறு துண்டுகள் குத்திட்டு நின்றன.

அலகைச் சுற்றி இரத்தம் வழிய அதன் கண்கள் இரத்தத்தில் நனைந்திருந்தன. புறா தன் இமை விலக்கி ஒரே ஒரு முறை எனது கண்களை நேர்நோக்கிப் பார்த்துப் பின் மூடியபோது விதிர்த்துக் கொண்டிருந்த அதன் உடல் இயக்கம் நின்று போனது. அதிர்ச்சியில் அண்ணாந்து மேலே பார்த்தேன். பால்கனியில் பதிக்கப்பட்டிருந்த வலை, காற்றில் ஆடிக்கொண்டே கீழே நின்றுகொண்டிருக்கும் எனை நோக்கி ஒரு பறவையைக் கவ்வும் பருந்து போல இறங்கிக்கொண்டிருக்க, எனக்கு இருமல் தொடர்ச்சியாக மேலழுந்து கொண்டேயிருந்தது .

தொன்னுறுகளின் பிற்பகுதியில் சிறுபத்திரிக்கைகளில் “தாமரைபாரதி”எனும் பெயரில் கவிதைகளில் பங்காற்றியவர் .இதுவரை தபுதாராவின் புன்னகை,உவர்மணல் சிறுநெருஞ்சி,காசினிக்காடு,இங்குலிகம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

கார்த்திகைச் சித்தர் எனும் பெயரில் கவிவிருத்தப்பாவில் “தெறுகலம்” எனும் சித்தர் பாடல்கள் நூல் வெளிவந்துள்ளது .

தற்போது அச்சு இணைய இதழ்களில் “அரவிந்தன் பெருமாள் “எனும் பெயரில் குறுங்கதைகள் ,சிறுகதைகள் எழுதிவருகிறார்.

தென்பெண்ணை ஆற்றுத் திருக்கோவிலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது வசிப்பது சென்னையில்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *