முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

பிறைநுதல்

       அவனுக்கு ஏனோ அன்று அவ்வாறு தோன்றியது.உடனடியாக அதனை செயல்படுத்திப்பார்க்க விழைந்தான்.

     அன்றைக்கு அவனுக்கு ஒரு சான்றிதலுக்கான தேர்வு நடைபெற இருந்தது.அதற்காக அவன் தற்சமயம் தங்கியிருக்கும் மஜர்குடாவிலிருந்து ஜோடிமெட்ளா வரை தனது இரு சக்கர வாகனத்தில் வந்தவன்,அங்கே தான் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து நின்றான்.தேர்வு இணையவழித் தேர்வு என்பதால் அவனது அலுவலகத்திலேயே தனியறை ஒன்றை தேர்வுசெய்திருந்தான். அந்தத் தனியறையில் அவனது மடிக்கணினி மூலமாகவே தேர்வில் கலந்துகொள்ள இயலும்.சுற்றிலும் சத்தங்கள் எதுவும் இல்லாமல் மூடிய அறையாய் இருந்தால் மட்டும் போதும்.ஆனால் அவனது அனுபவம் சார்ந்த குறிப்புகளில் மற்றொரு தகுதியாக அவசியப்பட்டால் அல்லது விருப்பப்பட்டால் மட்டுமே  சேர்த்துக்கொள்ளக கூடிய சான்றிதழ் தேர்வு என்பதால் ஏனோ சுமாராகவே படித்திருந்தான்.இந்தத் தேர்வுக்கான கட்டணமும் வெகு சொற்பமாதலால்  பிறகு படித்துக்கொள்ளலாம் என்றே தள்ளிவைத்து கடைசியாக இரண்டு நாட்கள் முன்புதான் அவன் படிக்கவே ஆரம்பித்தான்.ஆனால் நேற்றிலிருந்து ஏனோ அவனுக்குத் தோல்வி பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.அவன் கொஞ்சம்போல் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாகவே தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தபொழுது உணர்ந்தான். காரணம் அதில் அவனுக்கு சற்றும் பரிச்சயமில்லாத இரண்டு அலகுகள் இருந்தன.அவற்றுக்கு மட்டுமே ஏறத்தாழ முப்பது மதிப்பெண்கள் இருந்தன.ஆனால் அவன் தேர்ச்சிபெற வேண்டுமானால் நூற்றுக்கு எண்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.ஆதலால் சட்டென்று அவனுக்கு  குல தெய்வத்திலிருந்து கடந்த வாரம் சென்று தரிசித்து வந்த ஏழுமலையான் வரை அனைவரும் ஞாபகம் வந்தனர்.அவன் அனைவரிடமும் ஒரே வேண்டுதலையும் அதற்கான காணிக்கையாக ஒவ்வொன்றையும் சொல்லி வைத்திருந்தான்.

   பேருந்து எதுவும் வரவில்லை.தெலுங்கானாவில் பேருந்துகளில் மகளிர்க்கு இலவசம் என்று அறிவித்திருந்ததிலிருந்து பெண்கள் எவரும் பகிர் தானியங்கிகளில் ஏறுவதில்லை.ஆதலால் பெண்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.ஆனால் அவனுக்கு பேருந்தோ பகிர் தானியங்கியோ எது முதலில் வருகிறதோ அதில் ஏறிவிடலாமென்ற எண்ணம்.முதலில் ஐவருக்கான பகிர் தானியங்கி வந்தது.பின்னிருக்கையில் ஒரு அழகான பெண்மணியும் அவளின் அருகே ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பையனும் இருக்க இவன் அந்தப்பையனருகே அமர்ந்தான்.கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவர்கள்  அம்மாவும் மகனும் என்பது தெரிந்தது.அடுத்ததாக விஜயாப்பூர் காலனியில் ஆண்களிருவர் ஓட்டுனரின் இருபுறமும் தொற்றிக்கொள்ள தானியங்கி உப்பலை நோக்கி விரைய ஆரம்பித்தது. அப்பொழுதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது.உடனே அதனை சோதித்துப் பார்க்க விரும்பினான்.அதாவது பின்னிருக்கையில் அந்தப்பையனை அடுத்து அமர்ந்திருந்த அந்த அழகான பெண்மணி தனது அருகில் வந்தமர வேண்டும்.அப்படி நிகழும் பட்சத்தில் அவன் அன்றைய தேர்வில் தேர்வாகிவிடுவான் என்று முடிவு செய்தவன்,அந்தப்பெண்மணி தனது அருகில் வந்தமர வேண்டும் என்று மனதில் நிறுத்திக்கொண்டான்.

   அது அவ்வளவு எளிதானதில்லை.ஏனென்றால் தாயும் மகனும் ஒரே இடத்தில உப்பலில்தான் இறங்கப்போகிறார்கள் என்பது தெரிந்தது.முன்னிருக்கையில் இருப்பவர்களும் உப்பல் என்று கேட்டுத்தான் ஏறினார்கள்.ஆதலால் உப்பல் வரை எந்த இடமாற்றமும் நிகழப்போவதுமில்லை.இருப்பினும் இது நிகழ்ந்தால் தேர்வில் தான் தேர்ந்துவிடலாம் என்று அவன் நம்பினான். நாரப்பள்ளி தாண்டியது.அடுத்து நாரப்பள்ளி  மசூதி நிறுத்தம்.அனைத்தும் நேர்க்கோட்டிலேயே நடக்க, தான் அன்றைய தேர்வில் தேரப்போவதில்லை என்றே அவன் முடிவு செய்துவிட்டு வேறு ஏதோ சிந்தனைகளில் நீந்த ஆரம்பித்தான். திடீரென தானியங்கியின் வேகம் குறைந்து சாலையோரமாக ஒதுங்கி நின்றது. தானியங்கியின் எரிநெய் தீர்ந்துவிட்டதாகவும் விருப்பப்பட்டால் தங்களால் முடிந்த தொகையை தந்துவிட்டு வேறு தானியங்கியில் செல்லும்படி ஓட்டுநர் கேட்டுக்கொள்ள, வேறு வழியின்றி பத்து ரூபாய் மட்டும்(அவன் ஏறிய இடத்திலிருந்து உப்பலுக்கு நாற்பது ரூபாய் ஆகும்)கொடுத்துவிட்டு  அவன் இறங்கினான்.அவனைத் தொடர்ந்து அனைவரும் இறங்கி சற்று தொலைவிலிருந்த பாக்கியநகர் நந்தனவனம் நிறுத்தத்திற்கு நடந்து செல்ல, இவன் மட்டும் அங்கேயே  நின்றான். தானியங்கி ஒதுங்கி நின்ற இடத்தில் பேருந்து நிற்காது என்பதால் கூப்பிடு தொலைவே இருந்த அடுத்த நிறுத்தம் நோக்கி அனைவரும் நடந்தார்கள். தொடர்ந்தாற்போல் தனியங்கிகள் வருமென்பதால் அவன் அங்கேயே நின்றுகொண்டான். தற்பொழுது அவன் முடிவே செய்து விட்டான். கண்டிப்பாக அன்றையத் தேர்வில் அவன் வெற்றியடையப் போவதில்லை.

       கொஞ்ச நேரத்தில் பதின்மருக்கான தானியங்கி வர, பின்னிருக்கையில் ஏற்கெனவே ஒரு நடுத்தர வயது ஆணும் இளம்பெண்ணும் நடுவில் இடைவெளி விட்டு அமர்ந்திருக்க, இருவருக்கும் மத்தியில் அவன் அமர்ந்தான். தானியங்கி உப்பலை நோக்கி நகர ஆரம்பித்தது.பாக்கியநகர் நந்தனவனத்தில் அந்தப் பெண்மணியும் அவளது பையனும் ஏறியதைக்கண்டதும் அவன் ஆச்சரியமுற்றான். அவர்கள் ஏறி அவனுக்கு முன்பாக எதிர் வரிசையில் அமர்ந்தார்கள்.அவனைக்கண்டதும் அவள் ஒரு நட்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது!.சில நிமிடங்களே ஒன்றாகப்பயணித்தவர்களிடமிருந்து ஒரு நட்பான புன்னகை கிடைக்குமளவிற்கு?!!.அவனும் புன்னகைத்தான்.அடுத்த நிறுத்தம் செங்கிச்செர்லாவில் அவனுக்கு  வலப்புறமாக அமர்ந்திருந்தவர் இறங்க,அவன் வலப்புறம் ஒதுங்கி கடைசியில் அமர்ந்தான். இப்பொழுது அவனுக்கும் இடது கடைசியில் அமர்ந்திருந்த பெண்பிள்ளைக்கும் இடையில் காலியாக இருக்க, அந்தப்பெண்மணி சட்டென்று அவனருகில் மாறி உட்கார்ந்தாள்.  அவ்வளவுதான்.அவனால் நம்ப முடியவில்லை. நடக்கவே சாத்தியமில்லாத ஒன்றாக அவன் நினைத்தது அவன் கண் முன்பாக நடந்திருந்தது.அதன் பிறகு வந்த போடுப்பல் இறக்கத்தில் இன்னும் இருவர் ஏற,அவள் பையனை இடதுபுறத்தில் அமரவைத்துக்கொண்டு இவனை ஒட்டி இன்னும் நெருக்கமாக அவளது தோள் இவனது தோள்பட்டையில் உரசுமளவிற்கு  அமர்ந்து கொண்டாள்.இவனுக்கு இன்னும் உற்சாகம் தொற்றிக்கொள்ள,அன்றைய தேர்வில் தான் வெற்றிபெறுவது உறுதி என்றே முடிவுசெய்துகொண்டான்.தேர்வைப்பற்றிய பயம் போனது.உற்சாகம் மென்மேலும் பெருக ஆரம்பித்தது.

        உப்பலில் இறங்கி அவசரம் அவசரமாக மெட்ரோ இரயில் நிலையத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். வழக்கமான சோதனைகளைக்கடந்து அவன் நடைமேடைக்குச் சென்று அடுத்து வந்த இரயிலில் ஏறிக்கொண்டான். அன்றைக்கு சனிக்கிழமையாதலால் அவனுக்கு அமர இருக்கைக் கிடைத்தது. சற்று நேரம் கழித்துதான் தனது அருகில் வந்தமர்ந்திருந்த பெண்மணி அவனுடன் தானியங்கியில் பயணித்தவள் என்பது அவனுக்கு விளங்கியது. அவளைப்பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். அவள் இன்னும் கொஞ்சம் பெரிதான சிரிப்பை உதிர்த்து விட்டு

 “நீங்களும் மெட்ரோவிற்குத்தான் வந்தீர்களா ?” என்று தெலுங்கானா தெலுங்கில் கேட்டாள்.  அவனுக்கு அது மென்மேலும் ஆச்சரியத்தைக்கூட்ட “ஆமாம்” என்றவன் தனக்குத் தெரிந்த தெலுங்கில்

 “நீங்கள் இராயதுர்கமா?” என்றான்.அவள் மேலும் ஒரு அழகான சிரிப்பை உதிர்த்துவிட்டு

 “இல்லைங்க.குக்கட்பள்ளி.அமீர்பேட்- ல  இறங்கி வேற ட்ரெயின் மாறனும்” என்றாள். அதன் பிறகு அவளும் பையனும் ஏதேதோ பேசிக்கொண்டு வர அமீர்ப்பேட்டில் இறங்கும்பொழுது தனது சிரிப்பாலேயே அவள் விடைபெற்றுக்கொண்டாள்.

       அவன் இராயதுர்கம் மெட்ரோநிலையத்திலிருந்து இறங்கி மற்றுமொரு தானியங்கியிலேறி அலுவலகம் வந்து சேர்ந்தபொழுது ஒன்பதரை ஆகியிருந்தது.பத்து மணிக்கு தேர்வு தொடங்குமென்பதால் அவன் தனியறைக்கு சென்று உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு,மடிக்கணினியைத் திறந்து இணையவழி இணைப்பை சொடுக்கிக்காத்திருந்தான்.சரியாக பத்துமணிக்கு அவனது தேர்வு தொடங்க, அனைத்து கேள்விகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு பதில்களை தேர்ந்தெடுத்து சொடுக்கினான். விடைத்தாளை சமர்ப்பித்தவுடன் தேர்வின் முடிவு உடனடியாக தெரிந்துவிடுமென்பதால் அவன் அதீத உற்சாகத்துடன், எதிர்பார்ப்புடன்  விடைத்தாளை சமர்ப்பித்தான்.வினாடிகள் கரைய ஆரம்பித்தன. கணினியின் திரையில் ஒரு ஒழுங்கான வட்டம் சுற்றிக்கொண்டேயிருக்க , அந்த வட்டத்தின் உள்ளாக அன்று காலை அவனுடன் பயணித்திருந்த பெண்மணியின் அழகான மலர்ந்த முகம் சிரிப்புடன் சுழன்று கொண்டிருப்பதாகப்பட்டது அவனுக்கு. சில நிமிடத்திற்குப்பிறகு வந்த முடிவில் அவன் ஐந்து மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போயிருந்தான்.

000

பிறைநுதல்

இயற்பெயர் :சு.சந்திரசேகரன்.

பெற்றோர்   : செ.சுப்ரமணியன் &பூவாயி

குடும்பம்     : சுந்தரி(மனைவி), பிறைநுதல் (மகள்), குயின்மொழிஐயள் (மகள்)

ஊர்           : நாட்டார்மங்கலம் ,ஆலத்தூர் வட்டம்,பெரம்பலூர் மாவட்டம்

படிப்பு             :பொறியியலில் இளங்கலைப் பட்டம் (அமைப்பியல் துறை)

பணி               : தற்சமயம் தெலுங்கானாவில் ஒருதனியார் நிறுவனத்தில்

வயது              : 45

ஆக்கங்கள் : சொல்வனம்,பதாகை,வாசகசாலை மற்றும் பண்புடன் இணைய இதழ்களில் இதுவரை பதினைந்து சிறுகதைகள் மற்றும் எட்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *