அற்றுப்போதலின் மகத்துவம் : வேல்முருகன் இளங்கோவின் இரவாடிய திருமேனி.

இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள முதல் வரி ‘இரவாடிய திருமேனி ஒரு காவியமல்ல’ என்பதுதான். அது ஏன்? என்கிற வினாவோடு இதுவொரு ‘வரலாற்று புதினமாக மட்டும் நின்றுவிடாமல் இலக்கியப் பிரதியாக நிற்கக் காரணம் என்ன?’ என்கிற வினாவையும் முன்வைத்துகொண்டு தொடங்கலாம்.

அறிமுகம்:

இதுவொரு மாய யதார்த்த வரலாற்றுப் புதினம். சபையேற்றம், இடைநிறுத்தம், அடங்கல் என மூன்று பகுப்புகளைக் கொண்டது. தீக்கடம்பை என்னும் மலரைத் தேடிப் போகும் பயணம்தான் இதன் அடிப்படையாக உள்ளது.

அம்மலர் உள்ளோர் ‘இளமையுடனும் தென்கூடலின் தலைவனாகவும் நீடித்து இருப்பர்’ என்கிற செய்தி அறிந்து அதனை ஆறு திங்களில் கொண்டுவந்து சேர்த்திட வேண்டும்; இல்லையென்றால் மரண தண்டனை என அரண்மனை வைத்தியரைவிட அறிவில் சிறந்த நாவிதர் குலத்தவரான உத்திராபதி பண்டிதருக்கு மெய்க்காவல் படைத்தலைவன் மாறவர்மன் மூலம் மன்னரால் கெடு விதிக்கப்பட, சிறுமலை, பன்றிமலை, மேற்குமலை என பல இடங்களில் பல காலம் தேடியும் அகப்படாத அம்மலர் ஒரு கற்பனை எனக் கூற மறுத்தும் தம் முன்னோர் உரைத்தது ஒருபோதும் பொய்யாக இருக்காது என்று வாதிட்டும் மேற்கு மலைக்கு அதைத் தேடி பயணிக்க உத்ராபதி பண்டிதர் முடிவெடுக்க அவரின் வயோதிகம் கருதி அவரது மைத்துனர் பெரியசாமி பண்டிதரும் அவரது மருமகனான பரிதியும் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு  தேடியது கிடைத்திட பிரவேச பலிக்கென களவின்போது மாட்டிக்கொண்ட சாம்பனும்  மேற்கு மலைக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். வனத்தை அடைகின்றனர்.

இதனை மையமிட்டு இப்புதினம் அன்றைய ஆட்சிமுறை, அதிகாரம், சாதி, கள்வர்களின் வாழ்வியல், உளவியல், மூலிகைகள், வைத்திய முறைகள், காமம், மரணம், காடு ஆகியவற்றையும் இதற்குள் தத்துவம், உவமை, குடிசாபம், சங்க காலத்தில் பயன்படுத்திய சொற்கள், காடு சார்ந்த அவதானங்கள், பகடி ஆகியவற்றையும் பேசுகிறது.

மேலும், இப்புதினத்தில் வரும் காவிய அரங்கேற்றம்; காந்தர்வன் எவ்வாறு கவி இயற்றும் திறன் பெற்றான் என்பன போன்ற நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானதாக இரசிக்கும்படி உள்ளன.

இப்போது இதிலுள்ள மாயம்; யதார்த்தம்; வரலாறு பற்றிப் பார்க்கலாம்.

மாயம்:

வைகை நதி மாறவர்மனிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனச் சொல்கிறது. சாம்பனிடமும் இரு காந்தர்களிடமும் கோதையிடமும் குறுங்காடு பேசுகிறது. திருமேனி சாம்பனுடன் பேசுவதோடு கலவியும் கொள்கிறது. வனத்தின் மத்தியிலுள்ள கல்மரம் மூலம் காலப்பயணம் சாத்தியமாகிறது. மேலும், அரசின் களஞ்சியம் நிர்மூலமாகச் சொல்லப்படும் காரணங்கள் என மாயங்கள் நீள்கின்றன.

யதார்த்தம்:

வேட்டையாடுதல், கள்வர்களின் வாழ்வியல், முப்பது வயதிற்கு மேலாகியும் விரல் சப்பும் சாம்பன், பரிதியும் சாம்பனும் பயத்தில் மூத்திரம்விடும் காட்சிகள், கம்பில் நூல்கட்டி காலத்தைக் கணக்கிடல் ஆகியவை யதார்த்தங்களைப் பதிவு செய்கின்றன.

வரலாறு:

சோழ நாட்டில் தொடங்கும் காவிய அரங்கேற்றம் நாயக்கர் ஆட்சி பற்றி விவரித்து சேரர்-கடம்பர் போருடன் நாயக்க அரசில் விரவிக் கிடக்கும் முகலாயர், பாண்டியர் படையெடுப்பின் அச்சம் பற்றி விவரிக்கிறது.

முதல் வினாவும் விடையும்:

இது ஏன் காவியமல்ல என்பதற்குப் புதினத்தினுள்ளே சொல்லப்படும்   காரணங்கள்:

●  யாப்போ சொற்சுவையோ சந்தமோ இல்லை. இதுவொரு கதைப்பாடல்கூட இல்லை.                  – தென்கூடல் கவிராயர்கள்.

●  கம்பனின் இராமாவதாரம் அரங்கேறிய சபையில் ஒரு  கள்வனின் காவியம் அரேங்கேறுவதை தாங்க இயலாது தீட்சிதர்கள் இதை காவியமல்ல என்றனர் – இவ்வாறு சொல்பவர்கள் மேற்குமலை குறவர்கள்.

●  பன்றியின் உலர்ந்த விட்டைபோல் எதை எதையோ அடுக்கி வைத்துள்ளான்; இதை காவியமென்றால் கழுவில் ஏறுவேன் – அரசவைக் கவி.

●  கிருஷ்ணபுரம் காவியத்தின் மோசமான  தழுவல் – இளங்கவி.

பொதுவாக நம் மரபில்  காவியத்தில் தலைவனாக ஒரு அவதாரப் புருசன் இருப்பார். அவதரிப்பார். பல அவதாரங்களை எடுப்பார். சாதனைகள் பல  புரிவார். போர் இருக்கும். கிளைக்கதை இருக்கும். இதிலும் எல்லாம் உள்ளது. மேலும் இதில் புரட்சியென கம்பனின் காவியம் அரேங்கேறிய சபையில் முதல் சருக்கம் அரேங்கற்றப்படுகிறது. ஆனால் இரண்டாம் சருக்கம் வானதி என்னும் தாசியின் மடியில் அரங்கேற்றப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்  இதில்  கள்வனே நாயகன்;  இயற்றியவனும் கள்வன். எனவே இதை காவியமாக ஏற்பதில் அவர்களுக்குச் சிக்கல் எழுகிறது.

இது முதல் கேள்விக்கான முதல் பதில். இரண்டாவது பதிலும் இரண்டாவது கேள்வியின் பதிலும் ஒன்று என்பதால்  அதனை இறுதியில் அறிந்துகொள்ளலாம்.

இரண்டாம் வினாவும் விடையும்

‘வரலாற்று புதினமாக மட்டும் நின்றுவிடாமல் இலக்கியப் பிரதியாக நிற்க காரணம் என்ன?’ என்பதைக் காண்போம்.

பழக்க வழக்கங்கள்

துப்புச்செய்தி:

களவு மேற்கொள்வதெற்கென கேட்டு அறியப்படும் செய்தி துப்புச்செய்தி. இதில், இராஜனூர்க்கோட்டத்தில் காவலுக்கென சோடை வீரர்களுடன் நெல் குவிந்துக்கிடப்பதை சாத்தனூரின் பத்துக் கண்ணுடையான் கடியனூர் சந்தையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். ‘இங்கு வந்துள்ள சாம்பன் என்னும் பொடியனுக்கு நிழலற்றுச் செல்லும் விசேச சக்தி வழங்குவேன். பலாபழம் காய்த்துத்தொங்கும் ஆலமரத்தடிக்கு பூனைக்கறி சமைத்து எடுத்துவந்து சப்தமாக அழை; ஏனெனில் நான் மண்ணுக்கடியில் நெல்லைப்போல மணிமணியாய்ச் சிதறி உறங்கிக் கொண்டிருப்பேன்’ என்கிறான்.(பக்102)

துப்புக்கூலி: கேட்டறியப்பட்ட துப்புச் செய்திக்கென வழங்கப்படும் வெகுமானம் துப்புக்கூலி ஆகும். இதில் களவிற்கு முன்னரே ஆயிரங்கால் மண்டபத்தின் மதிற் காவலன் தாமிர முனியனுக்கு தன்னிடம் இருந்த பேயுடும்பையும் தங்க காசையும் விற்று களவிற்கென பேசப்பட்ட கால் பங்கை களவிற்கு முன்னதாகவே கூலியாக வழங்கியிருப்பான் கள்வன் சாம்பன்.(பக்.42)

நீதிக்கெடு:

களவில் மாட்டிக்கொண்ட ஒரு கள்வனின் தலைக்கு பத்துக் கள்வர்களை காவலராய் ஒப்படைத்தலுக்குப் பெயர் நீதிக்கெடு.(பக்.19)

பிரவேச பலி: தேடிச்செல்லும் ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் பலி பிரவேச பலி .(பக்.386)

பலிக்கொடை:

அரசின் நலன் பொருட்டு உயிர்துறக்கும் ஒருவர்க்கு வழங்கப்படும் கொடை பலிக்கொடை. இங்கு, தீக்கடம்பை மலரைத் தேடிய பயணத்தில், வனத்தில் ஏற்பட்ட பெரியசாமி பண்டிதரின் மரணத்திற்காகவும் பரிதியின் உடல்நிலையினைக் கருதியும் இரண்டு காணி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.(பக்.396)

அரிகண்டப்பலி:

அரசின் நலன் பொருட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துப் பலியிட்டுக்கொள்ளும் வழக்கம். இது பாண்டியர்களிடம் வழக்கமாக இருந்தது.(பக்.458)

மழைச்சடங்கு:

மழை வேண்டி குலப்பெண்டிரால் இரவு முழுக்க மலைமீது மேற்கொள்ளப்படும் நிர்வாண நடனம்.(பக்.311)

அதிகாரம்:

மெய்க்காவல் படைத் தலைவன் மாறவர்மனது ஆறு வயது மகள் நோயால் இறந்தமைக்கு அவரது நிலையறிந்து வாடுவதாக படை வீரன் ஒருவன் மூலம் மன்னன் கிருஷ்ணப்பர் செய்தி அனுப்புவது.

நாவிதர் குலத்தைச் சேர்ந்தோரில் உத்ராபதி பண்டிதர் மட்டும் ஆயிரங்கால் மண்டபத்தில் நுழைய அனுமதிக்கப்படுவது.

ராணி நாகம்மை பரிதியின் மனைவியான கோதையிடமும் காந்தர்வனிடமும் நடந்துகொள்ளும் முறை அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. உதாரணமாக,

●  என்னடி இவ்வளவு நேரம் வேசையே? என கோதையை வைதல்.(பக்.99)

●  வாயில் குதப்பிய எச்சிலை கோதையின் மீது துப்புதல்.(பக்.157)

●  நகரில் வேறு ஆண் மகனா இல்லை என பரிதியின் பிரிவில் வாடுபவளிடம் கேட்பது .(பக்.245)

●  ‘குதிரைக் கொட்டிலில் நீர் இருக்கிறது. அருந்திவிட்டு வந்து அடுத்தக் கதையைக் கூறு’ எனக் காந்தர்வனைப் பணிப்பது.(பக்.308)

●  காந்தர்வனையும் கோதையையும் தன்முன்னே கூடச்சொல்லி சாட்டையால் அடித்து துன்புறுத்தி கலவிகொள்ள நிர்பந்திப்பது. (பக்.365)

இப்படியான விரச விளையாட்டை ஸ்பார்டகஸ் நெடுந்தொடரின் (Web Series) முதல் பாகத்தில் அதிகாரத்தின் மூலம் அடிமைகளாக்கப்பட்ட  மானிடர்கள், ‘சமூகத்தில் பெரிய மனிதர்கள் எனச் சுட்டப்படுபவர்களின் காம இச்சையைப்போக்க போகப்பொருளென’ காட்சிப்படுத்தப்படுவர். அப்படியான காட்சியை இப்புதினத்திலும் காணலாம்.

மகாசங்கின் கட்டுமானத்திற்கு உத்தி(Plan) வகுத்துக்கொடுத்தமையால் கணியர் வேங்கடப்பர் விரல்கள் வெட்டப்படுதல்.

மகா சங்கின் ஒலியில் ஏற்பட்ட வேறுபாட்டைக் களைய  கல் சுமப்பவன் தரும் யோசனையை பெற்றுக் கொள்வதோடு  வர்ண இடைவெளியை மீறி பேச / சொல்லத்  துணிந்தமைக்காக ஞானகுருவான ஶ்ரீவத்சரால் கசையடி வழங்கப்படுதல். (பக்.301)

‘அரசர் முன்பு என்னால் நிற்க இயலாது என்றாலும் என் தேர் அவர்முன் கம்பீரம் தாளாது நிற்கிறது’ எனப் தேற்றிக்கொள்ளும் பெருந்தச்சர் முத்துக்குமார ஸ்தபதி.(பக்.358)

ஞானசபையில் கோபிலனின் நலனுக்காக யவன குருமார்களால் குழந்தையொன்று பலிக்கொடுக்கப்படுதல். மேலும், அவனது பற்களில் உதிரக்கறை படிந்திருத்தல். (பக்.427)

அரிகண்ட பலிக்கென வேம்பன் தேர்வு செய்யப்பட அவனின்  தாயானவள் தம் புதல்வனுக்காக  விசும்பி அழும் முன்னரே அரசால் நூறு காணி நிலம் தானமாக வழங்கப்படுதல். (பக்.459)

உளவியல்:

மாறவர்மன் தன் மகளின் இறப்பு குறித்தும்; மலைப்பெண் நீண்ட நாட்கள் வாழ்வதன் துக்கம் குறித்தும்; கோதை காந்தர்வன் மீது அவளைமீறி எழும் அன்பைக் குறித்தும்;  சாம்பன் தன் தந்தையின் மரணத்திற்கு தான்தான் காரணம் என எண்ணிக்கொள்வதோடு தானும் ஒரு சிற்பமாக நின்று அதில் வரும் கனவுதான் தன் வாழ்வா என்றும்;  சங்கன் தனது தற்போதைய நிலை குறித்தும் தன் தந்தை சுருளியின் வயோதிகம் குறித்தும் ‘புதினம் முழுக்க  உளவியல் ரீதியிலான உரையாடல் அகம்புறமெனத் தொடர்ந்தபடியே உள்ளது’.

காடு பற்றிய புரிதல்கள் / அவதானங்கள்:

சிறுமலை, பன்றிமலை ஆகிய மலைகள் சுட்டப்படுகிறது. எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவலில் வரும் வெப்ப மண்டல மழைக்காட்டினை ஒத்த மேற்கு மலை காட்டில்  இதன் கதை துவங்குகிறது.

●  பழுத்த இலைகளின் சுகந்தம் இனம் புரியாத தனிமை உணர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. (பக்.55)

●  காடு தன் திசைகளை மாற்றிக்கொண்டே இருக்கும். (பக்.56)

●  ஒரே உடலால் ஆன பேருயிர் காடு. (பக்.62)

●  காற்றில் புதிதாய் எழுந்த காளான்களின் மணம். (பக்.87)

●  பட்டு முதிர்ந்த மரங்களை அகற்றுவது காட்டின் கடமை முதலில் காற்றால்; பிறகு தீயால். (பக்.97)

●  பூமியில் நிழல் உதிராப் பொழுதும் இடமும் வௌவாலுக்கானவை. (பக்.101)

●  கானகம் ஏதோவோர் உயிருக்காக எப்போதும் விழித்திருக்கிறது. (பக்.139)

●  யானையின் பிண்டத்தைப் பற்றிச்சென்று கனிந்த பலாப்பழங்களைக் கொண்டுவந்தான்.(பக்.68)

கள்வர்களின் வாழ்வியல்  அறங்கள்:

கள்வர்களின் வாழ்வியல் அறங்கள்,  ஒழுக்க முறைகள்,  மன அவசங்கள், கள்வர்களுக்கான தண்டனைகள், வயோதிகம் மற்றும் அதன் பின்னரான வாழ்க்கை  என அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

●  உழுபவன் வீட்டில் களவு கூடாது.(பக்.70)

●  ஆண் துணையற்ற / பெண்ணால் பிழைக்கும் வீட்டில் களவு கூடாது. அவ்வாறான வீடுகளைக் காணும்போது கும்பிட்டு நகர்தல் வேண்டும்.(பக்.70)

●  வயதாவதால் அல்ல அரச கோட்டைக்குள் களவு நோக்கில் நுழைந்தால் மட்டுமே நீ ஆண்மகன்.(பக்.70)

●  களவில் வேகமல்ல விவேகம் வேண்டும். ஏனெனில் களவு சாகசமல்ல.(பக்.81)

●  நன்றி உணர்வு அரசனுக்கு இணக்கமாக்குமெனில் துரோகத்தைத் தேர்ந்தெடு.(பக்.88)

●  பெருங்களவில் சிக்கியவனை எண்ணி மறு களவிற்கு வரத் துணியாதோர்  நாய் புத்தி உள்ளோர்.(பக்.197)

●  எண்ணெய் பூசிக்கொண்டு இருளில் இறங்கும் வரைதான் உறவு.(பக்.197)

●  இரக்கம் / செய்நன்றி என்று கோழைத்தனத்திற்கு மறுபெயர் சூட்டுபவன் தினவு செத்தவன்.(பக்.197)

●  கள்வன் என்பவன் பெரும் நடிப்புக்காரன். தேவையெனில் கூத்துக்கூட இசைக்க வேண்டும்.(பக்.435)

மரணம் சார்ந்தவை:

இப்புதினத்தில் பல பாத்திரங்கள் வாயிலாக மரணம் சார்ந்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

1.மாறவர்மன்:

ஆறு வயது மகள் கண்ணம்மாளின் இறப்பின் பாதிப்பால் அவதியுற்று மனையாள் மீள கர்ப்பவதி ஆகும்போது கீழ்காணுமாறு உள்ள வினாக்களைக் தம்முள்ளே எழுப்பிக்கொள்கிறார். (பக்.293)

●  மீண்டும் அவளே பிறப்பாளா?

●  ஒருவேளை பிறப்பது ஆண் என்றால்? அப்படி இருந்தாலும் ஒரேயொருமுறை கண்ணம்மாளின்  சாயலை வெளிப்படுத்தினால்கூட போதும்.

●  இன்னொரு பிள்ளை வந்ததும் அப்பா என்னை மறந்துவிட்டார் என என் பிள்ளை மருகுவாளா?

2.சுருளி

சங்கனின் அப்பனும் சாம்பனின் மாமனும் ஆசானுமான முதுகள்வர் சுருளி.

●  மரணம் என்பது எத்தனை இன்னலிலும் உதவக்கூடிய இரண்டாம் வாய்ப்பு. (பக்.68)

●  இந்த ஆண்டு களவு நன்றிக்காக நாம் பேச்சிக்கு பலியிடப்போகும் ஆட்டை உற்றுப்பார். உடலை, கண்களை, அதன் தனித்த உடல் அசைவுகளை எல்லாவற்றையும் பார். மனதில் பதித்துக்கொள். வெட்டிப் படையலிட்டப்  பிறகு நாம் மீண்டும் அதே ஆட்டை  இன்னொரு மந்தையில் காண்போம். அந்த ஆடும் நம்மை அறிந்தவர்களாகக் கடந்துச் செல்லும்.  அப்போது மரணம் அர்த்தமற்றுப் போகும். (பக்.83)

3.உத்ராபதி பண்டிதர்

பிறந்தபின் எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்வு அமையாது அல்லவா? அப்படித்தான் இறந்த பின்னும் அமையாது என்றவர். பெருவைத்தியர். மரணத்தின் பின்னரான நிலை பற்றி சில கருத்துகளைப் பகிர்கிறார். (பக்.152)

1.  மறுபிறவி.

2.  சந்ததி வழியே உறவுகளாய் தொடரல்.

3.  சிந்தைகளாய் பலரில் தோன்றி மறைதல்.

4.  பிறவா நிலை.

5.  மேலும் – உறக்கம். அரை நாழிகையோ யுகங்களோ உறங்குபவர்க்கு ஒன்றே.

4.வேம்பன்

‘தன்னைக் கலங்கச் செய்வதுமரணம் என்னும் நிகழ்வு அல்ல. மாறாக அதன் அறிவிப்பு’ என்று வேம்பன் கூறுதல். (பக்.460)

5.சங்கன்

களவில் மாட்டிக்கொண்ட சங்கனின் கைகள் பிய்தெறியப்பட உண்ண கழுவ சொரிய  அவன் படும் இன்னல்கள் மூலம் / சலம்வைத்து வீசும் அழுகல் வாடை மூலம் வயோதிகத்தால் தம் தந்தை மீறும் களவொழுக்கம் மூலம் மரணத்தை அதன் மகத்துவத்தை உணர்த்துபவன்.

சமயம்

சமயத்தைப் பொருத்தவரை ஞான சபை, ஞானகுரு, ஞான இருக்கை, ஞானச்சுடர், சீடன் கோபிலன் போன்ற பாத்திரங்கள் மற்றும் சொல்லாடல்களுடன் கணியரால்  ஆறு ஆண்டுகள் திட்டமிடப்பட்டு  பெருந்தச்சருடன் ஈராயிரத்து ஐம்பது வேலையாட்களும் பன்னிரண்டு யானைகளும் நானூறு தச்சர்களும் பத்து ஆண்டுகள் உயிரைக்கொடுத்து மகாசங்கினை உருவாக்குகின்றனர்.

இங்கு, சமயத்தைப் பொருத்தவரை  முக்கியமாக பார்ப்பது மூன்று செய்திகள்.

1.  வழித்தோன்றல்கள்: சீடர்களை உருவாக்கக் கூடாது கண்டறிய வேண்டும்.

2.  சரித்திரம் / புராணம் வேறுபாடு: அறிதலுக்கு  உட்பட்டவை சரித்திரம்; உட்படாதவை புராணம்.

3.  சார்வாகர்களைப் புரிந்துக்கொள்ளல்: மகா சங்கின் பிழையை கல் சுமப்பவன் நிவர்த்தி செய்ததன்  மூலம் அதுவரை துச்சமாகப் பார்க்கப்பட்ட வள்ளுவப் பறையர்கள் போன்றோர் மதிக்கப்பட்டு வைத்தியர்கள் துவங்கி கவிராயர்கள் வரை ஏடுகள் சேகரிக்கப்படல்.

பகடி:

●  கோவலன் உன் கணவன் என்பதற்கு என்ன சான்று? எங்கே அவன் மச்சங்களை வரிசைப்படுத்து என்று சொல்லியிருந்தால் ‘திருமாப்பத்தினி’ நகரைவிட்டு ஓடியிருப்பாள். (பக்.135)

●  கண்ணகியின் கற்புதான் கோவலனை புயலிலிருந்து காத்தது. கனவில் கூட அவள் வேறொரு ஆணை நோக்கியதில்லை. அவள் எங்கே? இவன் எங்கே? எனக் கேட்கப்பட, கண்ணகியின் கனவென்ன தர்ம சத்திரமா?   அதற்குள் அண்டைக்கொடுத்துப் படுத்திருந்ததுபோல சொல்கிறீர்கள்? (பக்.136)                                     

●  நகரை தீக்கிரை ஆக்கும்முன் இடப்பக்க முலையை திருகி எறிந்தாளாம். முலை விழுந்த இடத்தின் பள்ளம் மூடாமலேயே இருக்கும் போலிருக்கிறது. வரும் வழியில்  இடறி விழுந்துவிட்டேன். இதோ பாருங்கள் காயம். (பக்.305)

●  பரிதி சாம்பனுக்கு முடி வெட்டும்போது அவன் தலையிலுள்ள தழும்புகளைக் கண்டு அடிக்கடி உம்  சித்தம் கலங்குவதன் பின்னணி இதுதான எனக் கேட்டல் அதற்கு சாம்பன் என்ன சொன்னாய் என வினவ ஒன்றும் இல்லை தலையை ஆட்டாதீர் என்றேன் என பரிதி பதிலுரைக்க உன் தந்தை நிறைய கற்றவர். ஆகையால்தான் அவர்மீதுள்ள மரியாதையின் பொருட்டு அவரிடம் தலையைக் கொடுக்காமல் உன்னிடம் தந்தேன். ஒழுங்காக வேலை செய் என சாம்பன் சொல்ல ஆம்ஆம் கவனமாகத்தான் செய்ய வேண்டும். உள்ளே தேள்கள் அடைந்திருக்கும் போல என பரிதி எள்ளல் செய்தல்.(பக்.161)

காலம்:

காலமானது என்.ஶ்ரீராமின் மாயாதீதம் நாவலில் வரும் ஒற்றைக் கருப்பு நாயைப்போல் இங்கு ஒற்றைக் கருப்புக் காக்கையாக  வருகிறது.

வனத்தில் உடைந்து காணப்படும் கல் மரம் மூலமாக காலப்பயணம் நடைபெறுகிறது. ‘காலம்தான் மாறும் காட்சிகள் மாறாது; எனக்கு பதில் இன்னொரு உடல் நான் செய்யும் அதே வேலையைச் செய்யும்’ என்பன போன்ற புரிதல்கள் காணப்படுகின்றன.

தத்துவங்கள்:

இப்புதினத்தில் காணப்படும் தத்துவங்கள் சிலவற்றைக் காணலாம்.

●  சுடரை அணைப்பது எது? காற்றா? காற்றில் மறைந்துள்ள இருளின் விருப்பமா?

●  நீங்கள் உங்களது ஞானத்தாலேயே நிம்மதியின்றி மடிவீர்கள். (பக்.66)

●  சொல்ல விழைவதும் சொல்வதும் ஒன்றல்ல. (பக்.209)

●  மரணமும் வாழ்வும் ஒன்றுதான். (பக்.228)

●  காலம் காயங்களை ஆற்றுவதே புதிய காயங்களை வழங்கத்தான். (பக்.266)

●  எடுத்துக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் இடையேதான் எத்தனை பெரும் அகண்ட சரித்திம் ஓடிக்கொண்டுள்ளது. (பக்.310 )

●  இருள் அனைத்தையும் நமக்கு உணர்த்தும். (பக்.317)

●  காட்சிகள் மூலம் நாம் அடைவது காலம் என்னும் எல்லைக்கு உட்பட்டது. ஆனால், உணர்தலின் வழியே அடையும் ஒன்றிற்கு காலம் ஒரு தடையே இல்லை. (பக்.317)

●  காலமும் வெளியும் இல்லாவிட்டாலும் இருள் இருக்கும். (பக்.318)

●  நாளை இதே நேரத்தில் நான் என்னவாவேன்? அவ்வளவுதான். எல்லாமும்… எல்லாமும்… (பக்.378)

●  மறைந்த பின்னரும் புகழ் நீங்காமல் இருப்பவன் துர்பாக்கியசாலி. (பக்.416)

●  புரிதலுக்கு அப்பாற்பட்ட வலுவான ஒன்றை எதிர்ப்பதைக் காட்டிலும் அதன் இருப்பை மறைப்பதே சாதுர்யம்.(பக்.466)

●  இறக்கின்ற பிள்ளைகள் அனைத்திற்கும் ஒரே சாயல்.(பக்.332)

●  குறையற்ற படைப்பு நிகழக்கூடாது. வெற்றிடமும் அதன் பண்பில் குறையற்றது. (பக்.340)

●  உறக்கமே உலகின் ஆகப்பெரும் தெய்வம். (பக்.368)

●  நாற்றம்தான் வாழ்வின் களங்கமில்லா நிஜம். (பக்.369)

புதினம் நம்மிடம் கேட்கும் சில வினாக்கள்:

இப்புதினத்தில் சில பாத்திரங்கள் சில வினாக்களை எழுப்புகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

●  ஒழுங்கின்மைதான் இயற்கையின் உண்மை சுயரூபமா?.(பக்.165)

●  மரண வீட்டின் இரவுக்கு அண்டத்தின் நீளமா? (பக்.332)

●  விழிப்பு நிலைதான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட பெரும் தண்டனையா?.(பக்.362)

●  அழிவின் வழியில்தான் செல்கிறோம் என்றாலும் ஏன் அந்த அறிதலை உடன் மறந்துவிடுகிறோம்?.(பக்.372)

●  இங்கு எவர் விரும்புகிறார் ஒவ்வொரு கணமும் ஒன்று அழிந்து புதிதாய் இன்னொன்று எழ வேண்டுமென?.(பக்.373)

●  வாழ்க்கையின் பேருண்மை கண்ணீர்தானா?.(பக்.398)

●  உடலை மாயமென்போரும் உண்மை என்போரும் இறுதியில் ஒரே முடை நாற்றத்தில் வீழ்வது ஏன்?.(பக்.400)

●  நானடைந்த மேன்மைகள் ஏன் ஒருபோதும் என்னுள் மகிழ்ச்சியைச் சுரப்பதில்லை.(பக்.456)

உவமை:

இப்புதினத்தில் அதிக உவமைகள் இருப்பினும் சிலவற்றைக் காண்போம்.

●  தென்னை ஓலையின் நிழலினைப்போல் நீள் வாக்கிலான தழும்புகள்.(பக்.19)

●  பாம்பின் வால் நுனைப்போல் இறுதியாக எஞ்சிய அந்தி.(பக்.46)

●  எவரோ ஒருவரின் வருகைக்காக காத்திருக்கும் கோடி விழிகளென இலைகள்.(பக்.124)

●  பச்சை நிறப் பிராணியின் கூரிடப்பட்ட உடலில் வடியும் வெண் குருதி  அருவி.(பக்.144)

●  மென்றுத் துப்பிய புகையிலை அடைகலாய் மரக்கலத் துண்டுகள்.(பக்.285)

●  ஈக்களைப்போல் கண்களில் மொய்த்த இருள். (பக்.373)

●  ஊமத்தை மலர்கள் வெடிப்பதைப்போல. (பக்.412)

சொற்சேர்க்கைகள்:

இரண்டு அல்லது மூன்று சொற்களைச் சேர்க்கும்போது சில சொற்கள் கவித்துவமாக வெளிப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாகக் காணலாம்.

துளைக்க முடியாத மௌனம், மழைக் கொப்புளங்கள், வியற்வைத் தடிப்புகள், இருள் பூத்த காடு, ஆறலை விழிகள், இரவெனும் மாயக் கடல், நிலவின் தூறல், சாம்பலை உதிர்க்கும் செடி, தேம்பலின் சாயல், நீர்ப் பாறையில் ஏறும் எறும்பு, நிழல் உரசும் மலர்ப்படுக்கை, களங்கமற்ற இன்மை, வனத்தின் வேர்கள், நீர்த்தோல், நன்கு பழகிவிட்ட நரகத்தின் இனிமை, காற்றின் திசு, நீர்ச்சாரல், கனவின் வடுக்கள்.

வாழ்க்கையைக் குறித்த சில அவதானங்கள் / அறிதல்கள் / அழகியல்:

●  அத்தனை இரணத்தையும் பொறுக்கும் குழந்தையாக அது (யானை) துயரேந்தியது.(பக்.85)

●  நிறமற்ற மழைத் தூரிகைகள் இலைதழை, மலைத்தொடர்கள் மீது பச்சை நிறத்தை மெழுகியிருந்தன.(பக்.123)

●  அதன் (அட்டை) நுண்ணிய நூறு கால்களில் ஏதேனும் ஒன்றிற்கு புண் கண்டிருக்குமோ!.(பக்.126)

●  அவள் தனது காதுகளில் ஆவாரம் பூவின் இதழ்களை எச்சில் தொட்டு ஒட்டி வைத்திருந்தாள். (பக்.97)

●  காடு நம்மை எதிரிகளாகவே பார்க்கும்.(பக்.149)

சொற்கள்:

சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களோடு சில அரிய சொற்களையும் பயன்படுத்தி இருப்பது வாசிப்பின்பத்தைக் கூட்டுகிறது. உதாரணமாக,

சீதம், அசுரவளி, கடி மணம், தட முலைகள், கிட்டி, கரலை, உந்தை, யாயும் யானும், மனையான், மனுவுமனுவாய், நவனம், பொலிச்சல், ஓகம், இலை சத்தை, மூங்கில் அமை, தேறல், தோயல், எங்ஙனம், நமன், வேளங்கள், அறவை, புடவி, நள் யாமம், துணி மடல்.

விடை:

இப்போது இரண்டாவது கேள்விக்கான விடையையும் முதல் கேள்விக்கான இரண்டாவது விடையையும் காண்போம்.

அதாவது ‘எளியோர் மற்றும் கள்வர்களின் வாழ்வியலை / யதார்த்தத்தை / உண்மையின் குரூரத்தை நேர்மையாக அணுகுவதால்’ இது வரலாற்றுப் புதினமாக மட்டும் எஞ்சிவிடாமல் இலக்கியப் பிரதியாகவும் நிற்கிறது.

சில ஐயங்கள்/ வினாக்கள்:

●  இப்புதினத்தின் அடிப்படையாக விளங்கும் தீக்கடம்பை மலர் சாம்பனுக்கு எப்படிக் கிடைத்தது? என்பது புதினத்தில் தெளிவாக இல்லை.

●  இரவாடிய திருமேனி என்னும் காவியம் இயற்றியது அதனை அரங்கேற்ற செல்லும் காந்தர்வனா? அல்லது கதைக்குள் உலாவும் காந்தர்வனா? என்பது புதினத்தில் தெளிவாக இல்லை?

●  வனத்தில் காணப்படும் காலப்பயண கல் மரத்தை தொடும்போது அது பரிதியை புத்தி பேதலிக்கச் செய்கிறது. ஆனால் சாம்பனை பாதிக்கவில்லை? ஏன்?

●  ஞானச்சுடர் ‘சூரியனைப்போன்ற வளர்ந்து தேயாத ஒரு ஒளிமிகு கல்’ என்றால் கள்வனின் வளரியால் தாக்கப்பட்டு கீழே விழும்போது அதன் ஒளி   எவ்வாறு அணையும்?

●  ஞானச் சுடரை அம்மலைப்பெண் ஏன் அணைக்க முயல வேண்டும்? அதுவும் சாம்பன் என்னும் கள்வன் மூலமாக.

●  புவியில் மனிதன் மட்டும்தான் வான்நோக்கி மனம் குவிக்கிறான். மற்ற உயிர்கள் வான் நோக்கி தலை உயர்த்தினாலும் அதைக் கண்டும் காணாததுபோல் மீண்டும் மண் பார்க்கும். (பக்.238) இதில் ‘கண்டும் காணாதது போல்’ என்று வருகிறது அல்லவா? மற்ற உயிரிகளின் மனதில் உள்ளதை மனிதன் எப்படிச் சொல்ல இயலும்!

●  ‘முதிய ஆண் பெண்ணுக்கு நிகரானவன்’(பக்.311) என வருகிறது. எனில் இப்புதினத்தில் வரும் அரசி நாகம்மை ஒரு பெண். அதிலும் வக்கிரம்மிக்க வயதானப்பெண். எனில் ’இக்கருத்து’ எதைச் சுட்டுகிறது?

●  மலையில் காணப்படும் தாவர வகைகள் / மலர்ப் பெயர்கள் / பறவையினங்கள் / பழங்குடியினர் என பெருமளவில் சுட்டப்படவில்லை.

●  அம்மலைப் பெண்ணின் முன்னோர்களான கடம்பர்களை சேரர்கள் போரில் அழிக்கின்றனர். ஆனால் அப்பெண்  நாயக்கர்களின் ஆட்சியை அழிக்க முயல்கிறாள். அது ஏன்?

அற்றுப்போதலின் மகத்துவம்

இந்த உலகில் எந்த ஒன்றை மிக உயர்வாக எண்ணி கொண்டுள்ளோமோ எந்த ஒன்றை அடைவதற்காக வாழ்நாள் முழுக்க போராடுகிறோமோ அதனை நாமே அழித்துக்கொள்வது அதாவது நம் இருப்பை நாமே அழித்துக்கொள்ளுவதைப் பற்றி இப்புதினம் பேசுகிறது. அதாவது இரவாடிய திருமேனி புதினத்தில் வரும் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் –

‘சரித்திரத்தில் நிலைக்கும் காவியங்கள் அசட்டுத்தனமான பெருமைக்கும் விலக்கமுடியாத அலட்சியத்திற்கும் தலைப்படும். ஆனால், இருளில் தொலைந்து மண்மூடிய காவியங்கள் புவியைப் படைத்தபின் மறைந்துபோன தெய்வத்தைப்போல மனிதர்கள் பாழ்படுத்த முடியாத ஒரு நிலையை அடையும்’.(பக்.17)

இதற்கு உதாரணங்களென,

●  இக்காவியத்தை இயற்றியவனே சிதை நெருப்பில் எறிந்து அழித்துவிடுகிறான்.

●  தமது வாழ்நாள் கனவான மகா சங்கை ஞான குருவான ஶ்ரீவத்சர் இடிக்க உத்தரவிடுகிறார்.

●  குறையேதுமற்ற பெருந்தேர் அழிந்து போகிறது.                                

றுதியாக –

காடு சார்ந்தும் காமம் சார்ந்தும் சமயம் சார்ந்தும் இதைவிடச் சுருக்கமாக இதே அளவிளான காத்திரத்துடன் பேசியிருக்க முடியும் எனத் தோன்றுகிறது. ‘வாழ்க்கையை தத்துவார்தமாக அணுக முயன்றிருப்பது’ இப்புதினத்தின் பலம் என்றால் ‘பாதையைத் தேடிக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு கதவினை அடைத்துவிடுவது’ இதன் பலவீனம் ஆகும்.

0

[ இது 31.05.2025 அன்று பொள்ளாச்சி எதிர் வெளியீட்டில் நடைபெற்ற இரவாடிய திருமேனி நூல் அறிமுக கூட்டத்தில் பேசிய உரையின் முழுமையான எழுத்து வடிவம் ஆகும். ]

00

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *