HE ASKED IF HE MIGHT KISS MY LIP, ALTHOUGH
NOT WHICH LIPS-THOSE ABOVE OR THOSE BELOW?
-MEHRI
சூஃபி ஞானி அத்தார் பற்றி கட்டுரை எழுத தகவல்களைத் திரட்டிய போது அவருடைய இலாஹிநாமாவில் “பாஸ்கா பகுதியின் அரசனும் காதலில் வீழ்ந்த இளவரசியும் “என்ற தலைப்பில் ஒரு காதல் கதை பற்றிய தகவல் கிடைத்தது. அது என்ன காதல் கதை எனத் தேடியபோது ரபீஹ் என்ற பாரசீக பெண் கவிஞரைப் பற்றிய கதை என அறிய முடிந்தது.
தொடர்ந்து சென்ற போது பாரசீக கவிதைகள் மேல் கவனம் சென்றது.
பாரசீக இலக்கியத்தில் பல பெண்கவிஞர்கள் தங்கள் பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் சிக்கல்களை பிரதிபலிக்கும் பல படைப்புகளைப் படைத்துள்ளது தெரிய வந்தது.
பழம் பெருமைவாய்ந்த தமிழ், லத்தீன், ஆங்கிலோ-சாக்ஸன்,பிரஞ்ச்,ருஷ்யன் மொழிகளுக்கு ஒப்பானது பாரசீகமொழி. இந்தோ- ஜரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. ஈரானில் ஃபார்ஸி எனவும், ஆப்கானிஸ்தானில் தாரி எனவும், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் தாஜிக் எனவும் வட்டார வழக்கில் அழைக்கப்படுகிறது. ஆங்கில இலக்கிய உலகில் பொதுவாக பெர்ஷியன் என்றே அழைக்கப்படுகிறது. பாரசீக காலிகிராபி மிகவும் பிரசத்திப் பெற்றது.
11-16 ஆம் நூற்றாண்டுகளில் பாரசீக மொழிக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் பெரும் வளத்தைச் சேர்த்தனர். அவர்களுக்கு அரச சபையின் ஆதரவும், சலுகைகளும் கிடைத்தன. கல்வி கற்பதற்கான சூழலும், கவிதைகளை புனையவும் பாடவும் நல்ல சூழல் இருந்துள்ளது. இவர்களுள் பெண்பால் கவிஞர்களும் அடங்குவர். பெண் கவிஞர்கள் இஸ்லாமிய மயமாக்கலுக்குப் முந்திய பாரசீக பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், காதலையும்,காமத்தையும், தனிமையையும், இழப்புகளையும் கவிதைப் பாடல்களாக , கருத்தாழமிக்க வசன கவிதைகளாக , இரங்கற்பாக்களாக படைத்து அளித்துள்ளனர். பெரும்பாலான கவிஞர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்ட செல்வந்தர்களின் மகள்கள், சகோதரிகள்,அவர்களின் துணைவியர்கள். படித்தவர்கள்.அரச சபையை அலங்கரித்தவர்கள். குறைந்தபட்சம் இரு மொழிகளைப் பேசவும் எழுதவும் அறிந்தவர்கள். வளமான வாழ்க்கைப் பின்னணி கொண்டவர்கள்.
16ஆம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரமான அரசியல் சூழலும் ஹாஃபித் கால பாரசீகத்திலும்,முகலாய கால இந்தியாவிலும் நிலவியது .
அந்த சூழல் அவர்கள் பரந்துப் பட்ட அளவில் கவிதைகளையும், பாடல்களையும்,கஜல்களையும் படைக்க ஏதுவாக இருந்தது.படைப்புத்திறன் மேலோங்கி இருந்த காலகட்டம் அது. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கத்திய நாடுகளுடான தொடர்பு உலகளாவிய கல்வியும், சமூக இயக்கங்களுடான தொடர்பும், பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளும் வளர வழிவகுத்தது. இந்த தொடர்பு அவர்களின் படைப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் தான் உரைநடை பக்கம் அவர்கள் கவனம் திரும்பியது. சிறுகதைகள், நாவல்கள்,தத்துவ விசாரணைகள் என அவர்கள் படைப்புகள் விரியத் தொடங்கின. தேசிய அடையாளங்கள், தேசப்பற்று என அவர்கள் கருத்துக்களம் திசைதிரும்பியது. பல பெண்படைப்பாளிகள் ஆழமான பல படைப்புகளைத் அளித்தனர்.
“அபு அப்துல்லா ரூடாகி” (858-940AD) “பாரசீக கவிதையின் தந்தை” என்றழைக்கப்படுகிறார். நவீன பாரசீக மொழி கவிஞர்களின் முன்னோடி. தாஜிகிஸ்தான் உள்ள பஞ்ச்ரூத் கிராமத்தில் பிறந்தவர். ஷாமின்ட் பேரரசின் அங்கமான பக்குர அமீரான இரண்டாம் நாசரின் அரசவைக் கவிஞராக விளங்கியவர். ஆயிரக்கணக்கான கவிதைகளை இயற்றியவர். எனினும் சில கவிதைகளே கிடைக்கப்பெற்றுள்ளன. எளிமையான வார்த்தைகளும், இயற்கைச் சார்ந்த படிமங்களும் , நேரடியான கூறல் முறையும் கொண்ட அவரது கவிதைகள் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னும் நவீன பாரசீக வாசகர்களிடம் செல்வாக்கோடு விளங்குகிறது. அவர் பிறவிலேயே கண் பார்வை இழந்தவர் என்று ஒரு சிலரும், முதிய வாழ்வில் பார்வையை இழந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. அவரது வாழ்வின் இறுதியில் அமீரின் ஆதரவை இழந்தார். அதனால் இறுதி நாட்கள் ஏழ்மையில் கழிக்க நேர்ந்தது. இந்த இருண்ட காலத்தை “வயதானவர்களின் இரங்கற்பா” என்ற கவிதை பிரதிபலிக்கிறது.
@@
ஃபர்தொளசி (940-1025 AD) ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள டூஸ் நகரில் பிறந்தவர். இவரது”அரசர்களின் புத்தகம்” பாரசீகத்தின் தேசிய காவியமாகும். இஸ்லாமிய மயமாக்கத்திற்குப் முந்திய ஈரானின் பண்பாட்டு வரலாற்றையும், 7ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரேபிய ஊடுருவலில் இருந்து பாரசீக மொழியின் தொன்மையை காப்பது பற்றியதுமாகும். 30 ஆண்டுகால உழைப்பில் உருவான கிட்டத்தட்ட 60,000 இசைப்பாடல்களை கொண்ட உலகின் நீண்ட காவியங்களில் ஒன்றாகும். மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டது
- ஜூராஸ்ட்ரியனித்தின் உதயம் மற்றும் மாயவாத ஈரான்
- வீரம்சொறிந்த ஈரானின் வரலாறு
- அலெக்ஸாண்டர் படையெடுப்பில் துவங்கி அரேபியர்களின் ஊடுருவல் வரையான விவரங்கள். Keyumar முதல் Yazdegard III வரையிலான 50 அரசர்கள் பற்றிய விவரிப்புகளைக் கொண்டது.
இரண்டாம் பகுதி பாரசீக பழங்குடியினரின் தொன்மங்கள் பற்றியது. குறிப்பாக தொன்ம கதாபாத்திரமான பாம்பைப் போன்ற தோள்பட்டை கொண்ட வஞ்சக அரசன் ஸாஹாக், Irajன் மரணம், Zalன் பிறப்பு , Rostam மற்றும் Esfandiyar இடையேயான போர், Rostam -Sohrab ன் சோகநிகழ்வுகள், Bizhan-Manizheh இடையேயான காதல் மற்றும் Siyavashன் வெளியேற்றம் போன்ற கதைகளைக் கொண்டது.
@@
நிஸாமி கன்ஜி இவரது காலம்1150 AD. அஜர்பைஜானை சேர்ந்தவர். காதல் கதைகளைக் கூறுவதில் புகழ் பெற்றவர். அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் தந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். தாயார் பானு ராய்ஹ் குர்தீஷ் பகுதியை சேர்ந்தவர் -தந்தை யூசுப் அஜர்பைஜான். காதல் திருமணம் புரிந்தவர்கள். பாரசீக மொழி, இலக்கியம், தத்துவம், பாரம்பரிய இசை, அரபு மொழி ஆகியவற்றில் பெரும் புலமை கொண்டவர் கன்ஜி. இறைத்தூதர் “அலி” அவர்களை தீவிரமாக பின்பற்றியவர். ஷாஃபி பள்ளியைச் சேர்ந்தவர்.
அவரது புகழ் பெற்ற படைப்பு “ஐந்து பொக்கிஷங்கள்” 5 பகுதிகளைக் கொண்டது.
- புதிர்களின் பொக்கிஷம். சூஃபி தத்துவம் சார்ந்தது
- இளவரசன் குஸ்ரூ-இளவரசி ஷீரின் இடையேயான காதல் பற்றியது.
- லைலா-மஜ்னு சோக காதல் கதை.
- ஏழு அழகிகள்- ஸஷானின் அரசன் Bahram-e-Gur -ன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட காதல் காவியம்
- அலெக்ஸாண்டரின் புத்தகம். அலெக்ஸாண்டரின் வாழ்க்கையை விவரிப்பது
1209 ADல் நிஸாமி கன்ஜி காலமானார். அவரது சிறப்பைப் போற்றும்வகையில் ஷாவித் அரசரான ஷா அப்பாஸ் கன்ஜாவியில் அவருக்கொரு நினைவாலயத்தை எழுப்பினார்.
@@
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபா தாஹீர் ஈரானின் ஹமீதானில் பிறந்தவர். அவருடைய எளிமையான மாய எழுத்து வடிவம் இன்றும் பாரசீகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. தன் தோற்றத்தைப் பற்றி அக்கறைக் கொள்ளாதவர்.
உணர்ச்சிக் கொந்தளிப்பான விஷயங்களைக் கூட எளிமையாக இனிமையாக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படைத்தவர். அவரது படைப்புகள் காதல் மற்றும் பிரிவின் துயரை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வின் ஏற்ற இரக்கங்கள் எல்லாம் படைத்தவனின் செயல்களே என்றவர். அவரது Fahlaviyat காவியம் மத்தியகால பாரசீக மொழிக்கான ஒரே ஆதாரமாக இருக்கிறது. அவரது படைப்புகள் Fahlaviyst -e-Lori என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.ஆங்கிலம், பிராஞ்ச், அரபி, துருக்கி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அரபுக் கவிதை உலகில் புகழ் பெற்ற பெண்கவிஞர் அல் கன்ஷா. இஸ்லாமிய காலத்திற்க்கும் முற்பட்டவர். போரில் வீர மரணமடைந்த தன் சகோதரர்களுக்காக அவர் எழுதிய இரங்கற்பா பிரபலமானது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக பெண்கவிஞர் ரபீஹ் எழுதிய காதல் கவிதைகள் புகழ் பெற்றவை. 11ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் வாழ்ந்த அல்லாமா-பின்- முஷ்யானவி காதல் மற்றும் ஆன்மீக கவிதைகளை எழுதியுள்ளார். அதே காலகட்டத்தைச் சேர்ந்த மாஹக்தி கஞ்ஸவி சமூக நீதி, பெண் விடுதலைப் பற்றி பாடியுள்ளார் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவ்சா-பின்-அல்ஹஜ்-அல் ரூகுனிஸ்ஸா ஆன்மீக பாடல்களை இயற்றியுள்ளார். அவர்கள் குறிப்பாக எத்தனை கவிதைகளைப் படைத்தனர் என அறிய இயலவில்லை. கால ஓட்டத்தில் பலவும் அழிந்துவிட்டன. எனினும் கிடைக்கப் பெற்ற கவிதைகள் பலவும் தற்போது தொகுக்கப்பட்டு உள்ளன.
@@@@
டிக் டேவிஸ் பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர்களில் முக்கியமானவர். அவர் தொகுத்தளித்த ஆயிரம் ஆண்டுகால பாரசீக பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பு The Mirror of my Heart. பாரசீக மொழியின் முதல் பெண்கவிஞர் என அறியப்படும் ரபீஹ் பால்கி முதற்கொண்டு இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் Fatemeh Ekhtesari வரை 65 பெண்கவிஞர்களைப் பற்றிய தகவல்களையும் , கவிதைகளையும் கொண்ட விரிவான தொகுப்பு.
பெண் கவிஞர் என்ற சொல் பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் பெண் அடையாள அரசியலின் விளைபொருளாகக் கருதப்பட்டாலும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் அதன் தோற்றம் நவீன காலத்திற்கு முந்தியதாக மதிப்பிடுகின்றனர் பாரசீக இலக்கிய வரலாற்றைப் பொருத்தவரை தொடக்கத்திலிருந்தே பாலின அடிப்படையில் கருத்துருக்கள் உருவாக்கப்பட்டன. பாரசீக இலக்கிய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக அரசவைக் கவிஞர் என்பது ஆண் கவிஞர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. ஆணாதிக்க அரசியல்,பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் சமூகப் பாத்திரங்களில் பெண் கவிஞர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டனர்.
எடுத்துக்காட்டாக மத்தியக்கால கவிஞரான மாசதி, சுல்தான் சஞ்சரின் பிரியத்துக்கு உரிய
விபச்சாரியாகவே கட்டமைக்கப்பட்டுள்ளார்.
அவரது துயரத்தையும் வலியையும் ஏமாற்றத்தையும்
“உன்னுடன் உறங்கிய
அந்த இனிய இரவுகள் போய்விட்டன
உன்னுடன் கண்ணிமைகளில்
முத்துப் போன்ற கண்ணீர் துளிகளோடு அழுதது
போய்விட்டது
என் இதயத்தின் பேரமைதி நீ
என் ஆன்மாவின் நண்பன் நீ
நீயும் சென்று விட்டாய்
உன்னிடம் நான் கொண்டிருந்த
அனைத்து நம்பிக்கைகளும் போய்விட்டன “
— என மாசதி வருத்தத்துடன் பதிவு செய்கிறார்
நான் அழைத்தேன்
விரைவாக அந்த ஓயினை கொண்டு வா என
மறுதலித்தவன் கூறினான்
இங்கே பார்
இன்று வெள்ளிக் கிழமை அல்லவா
நீ உறங்கச் செல்ல வேண்டுமல்லவா
அவனுக்கு உரைத்தேன்
ஒவ்வொரு வாரமும் மற்றுமொரு வெள்ளிக்கிழமை வரும்
ஆனால்
வருடத்திற்கு ஒரு முறைதான் நமக்கான
இம்மலர் மலரும்.
—- மாசதி
நன்கு அறியப்பட்ட கவிஞர்களான ஹபீஸ்ஷிராசி மற்றும் உபைத் ஜகானி ஆகியோரின் சமகாலத்தவரான பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசியும் கவியுமாகிய ஜஹான் மாலிக் காதுன் இறந்த தன் பச்சிளம் பெண்குழந்தையின் நினைவாக 23 இரங்கற்பாக்களை இயற்றியவர்.
தனது கவிதைகளை(கிட்டத்தட்ட 1500 கவிதைகள்) திறம்பட தொகுத்திருந்தாலும் அவரது படைப்புகள் இலக்கிய அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட 600 ஆண்டுகள் ஆனது.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஷமுரித் காலத்தில் இந்நிலை மெதுவாக மாறத் துவங்கியது.ஃபக்ரி ஹரவி என்ற ஆண் கவிஞர் ,பெண் கவிஞர்களின் கவிதைகளை The jewels of wonder என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். அது பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான கவிதை வகையை உருவக்கத் தவறி விட்டதாக இருப்பினும்,சமூக ரீதியாக மிகவும் பழமைவாத சூழலில் பெண்கல்வி. நகர்புற நிர்வாகம், மத மற்றும் அரசியல் மேல்தட்டு வர்க்கத்துக்கு இடையேயான அந்தஸ்து வேறுபாடுகள் பற்றிய அரிய பார்வைகளைத் தந்தது.
பெண்ணின் கவிதைகளை மதிப்பிடுவதில் ஆணாதிக்கப் பார்வை தகுதியான மதிப்பாய்வுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தது. அதேசமயம் அவர்களின் கவிதைகளை வெளியிடவும் பாதுகாக்கவும் அனுமதித்தது என்பதை இத்தொகுப்பு தெளிவாக்குகிறது.
பாரசீகம் தீவிர இஸ்லாமிய மயமாக்கலுக்கு உள்ளான போது பெண்கள் 15 வயதில் அவர்களைவிட மூன்று மடங்கு வயதுடைய முதியவர்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.அவர்கள் இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
ஈரானின் முதல் பெண்ணிய கவிஞர் என்றழைக்கப்பட்ட ஆலம் தாஜ் (1883-1947) யாருக்கும் தெரியாமல் கவிதைகளை இயற்றினார். அவரது மறைவிற்க்குப் பிறகுதான் அவை கண்டெடுக்கப்பட்டன. “நம் நாட்டில் பெண்கள் செய்த குற்றம் என்னவென்றால் அவர்கள் பெண்களாக இருப்பதுதான்” என ஆலம் தாஜ் குறிப்பிடுகிறார். தான் வெறுத்த கணவனைப் பற்றி குறிப்பிடுகையில்
“கணவனின் மீசை தோளில் உராசுகையில் ஏற்படும் உணர்வு கண்ணின் கருவிழியை துளைத்துச் செல்லும் கத்தியினைப் போல் உயிரின்வதையாக இருந்தது “என்கிறார்.
1800க்கு முந்திய கவிதைகள் பொதுவாக சிறிய கவிதைகள். நெருக்கமான நண்பர்களின் சிறிய வட்டத்தில் பாடப்படும் வகையில் இயற்றப்பட்டவை. ஜப்பானிய ஹைக்கூவில் உள்ளது போன்று அழகிய தோட்டங்கள், விடியற்காலைத் தென்றல் ,கண்ணீர், ரோஜாக்கள், ஒயின், இசை, துயரத்தையும் வலிகளையும் பின்னணியாக கொண்டவை. நித்திய கருப்பொருள்களான காதல்,ஏக்கம், பிரிவு, தனிமை, இழப்பு பற்றிய ஒப்புதல் வாக்குமூலங்கள். ஓர் பாலின ஆசைகள், வயதான கணவர்களின் ஆண்மைக் குறைவு பற்றிய புகார்கள்,தீராத காம இச்சை என எதையும் மறைக்காதவை.
உதாரணமாக 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கவிஞர் மெஹ்ரி- அவரின் இந்த நான்கு வரி கவிதையை சொல்லலாம். காதலனாக முன்னிறுத்திய ஒரு முதியவருக்குக்கான பதில்
“கடவுளே!
என் சதையை என்னவென்று நினைக்கிறீர்கள்
நான் விரும்புவது இளமையான, சூடான அழகான ஆண்களை
பலவீனமான வயதானவர்களை நான் விரும்பினால்
ஏற்கனவே பெற்ற ஒன்றைப்பற்றி ஏன் சிணுங்குகிறேன்.
@@
மற்றொரு கவிஞரான கெளஹர் பேகம் அஜர்பைஜானை சேர்ந்தவர். தன் கவர்ச்சிமிக்க கண்களைப் பற்றி
“மரணம் எடுத்துக் கொண்ட
இருநூறு மனிதர்களை
மீண்டும்
உயிர்பிக்கும் வல்லமை கொண்டது
என் ஓரே ஒரு கண்வீச்சு”. என கண் சிமிட்டுகிறார்.
@@
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் மஸ்துரே குஸ்தி -அவரின் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது
“நான் ஒரு துளி மதுவிற்கு உலகத்தின் செல்வத்தைத் தருவேன்
நியாயத் தீர்ப்பு நாளின் இரு உலகங்களையும்
கையளிப்பேன்.
@@
மொகலாயப் பேரரசர் பாபரின் இளைய மகள் குல்பதன் பேகம்
“காதலர்களை மோசமாக நடத்தும் பெண்களே
உங்கள்
வாழ்க்கை விரைவில் சோகமாக
முடியும் என்பதை அறியுங்கள்”
என எச்சரிக்கிறார்
+++
ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் நகரில் பத்தாம் நூற்றாண்டில் பிறந்தவர் ரபீஹ் பால்கி. பாரசீக மொழியின் முதல் பெண் கவிஞர் என அறியப்படுகிறார். Samanid காலகட்டத்தில் (913-943 ) அரசவைக் கவிஞராக இருந்தவர். சூஃபி ஞானி அத்தார் மற்றும் ரூடாகி இவரது சமகாலத்து கவிஞர்கள். தன் சகோதரனும் அரசனுமாகிய ஹரீதின் அரசவையில் துருக்கிய அடிமையாக இருந்த பக்தாஷ்யை காதலித்ததால் சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். (பின்னர் பக்தாஷ் இளவரசனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான்). இவரது துயரமான காதல் வாழ்க்கை பற்றி கவிஞர் ரிஷாகுலிகான் ஹிதயத் “பக்தாஷ் நாமா”என்ற பெயரில் கவிதையாக எழுதி பதிவு செய்தார். அத்தார் இவரது காதல் நிலையை தெய்வீக காதல் கதையாக படைத்துள்ளார்.
ரபீஹ் வாழ்க்கை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை.மிக குறைவான கவிதைகளே கிடைத்திருக்கின்றன.ஜம்பது வரிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அப்துல் ரஹ்மான் அவ்ஃபி ரபீஹ்யை பெண்மைக்கு மீறிய திறமையானவராகவும்,புத்திசாலியாகவும்,அதிக சாதனை படைத்தவராகவும் சித்திரிக்கிறார். பாரசீக இலக்கிய பாரம்பரியத்தில் macaronic வகை கவிதைகளை இயற்றியவர்களுள் அவர் முக்கியமானவர். வசனக் கவிதைகளை அரபி மற்றும் பாரசீக மொழி வரிகள் ஊடும் பாவுமாய் மாறி மாறி அடுத்தடுத்து வருமாறு எழுதியவர்.
அத்தாரின் இலாஹினாமா சூஃபி இலக்கியத்தில் ஒரு முக்கிய உரையாகும். இது ஒரு அரசன் தன் ஆறு மகன்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சொல்லப்பட்ட மாய யதார்த்த கதைகளைப் கொண்டது. இலாஹினாமாவின் இருபத்தியோராம் சொற்பொழிவில் ரபீஹ்கின் கதை மாயக் காதலுக்கு உதாரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கதை முழுவதும் அத்தார் ரபீஹ்யை தெய்வீக காதலனாக கட்டமைக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறார். கதை முழுவதும் குறைந்தபட்சம் மூன்று உருவங்களாக ரபீஹ்யை காண முடிகிறது. ஒரு புறம் ரபீஹ் ஒரு மகள்/சகோதரி/ இளவரசி மற்றொரு புறம் கவிஞர்/காதலர். இன்னொரு புறம் தெய்வீகத்தை நேசிப்பவர். அத்தார் ரபீஹ்கை நேரடியாக குறிப்பிடுவதில்லை மாறாக காஃபின் மகள், அரேபியர்களின் அழகு என்றே குறிப்பிடுகிறார்.அவள் கவர்ச்சியான அழகான பெண். வசீகரமான முகங்களின் சாம்ராஜ்யத்தில் அரசி அவள். உலக அழகை எல்லாம் அவள் பெற்றிருந்தாள். அவள் முன்னிலையில் அறிவு பைத்தியமாகிறது. உலகின் பழம்பெரும் அழகு அவள் என்கிறார் அத்தார். ரபீஹ் பற்றிய அத்தாரின் கதை பிற்கலத்தில் மற்ற சூஃபி கவிஞர்களுக்கு உத்வேகமாக அமைந்தது. அவர்கள் ரபீஹ்வை ஒரு புராண உருவமாக அங்கீகரிக்க முயன்றனர்.
சிறுகவிதை ஒன்றில் ரபீஹ் தனது காதலியுடன் மீண்டும் இணைவதைக் கொண்டாடுகிறார்.
“இன்றிரவு நான் துக்கத்திலிருந்தும்
பயத்திலிருந்தும் விடுபட்டேன்
என் அன்பின் அருகில் அமர்ந்து
ஆர்வத்துடன் சொல்கிறேன்
என் காதல் இன்றிரவு
இங்கே இருக்கிறது
கடவுளிடம் வேண்டுகிறேன்
கடவுளே
காலைக்கான திறவுகோலை மறையச் செய்திடு”.
காதலியின் பக்கத்திலிருந்து கடவுளிடம் நேருக்கு நேர் பேசுவது என்பது பிரியமானவருடன் உடலோடு உடலாக பேசுவதற்கு இணையாகும்.
அவரது புகழ் பெற்ற கவிதை
“அவன் காதல் மீண்டும் ஒருமுறை
எனைப் பற்றிக் கொண்டது
விடுபட கடுமையாக போரடினேன்
வீணான செயல்
(சரி நிதானமானவர்களே!
எனக்கு விளக்கவும்
காதலின் கரையில்லாத கடலை
யாரால் நீந்திக் கடக்க முடியும்!
அன்பின் இலக்கை அடைய
உள்ளுணர்வாக நிராகரிக்கும் அனைத்தையும்
நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
அசிங்கத்தை அழகு என்றும்
கொடிய விஷத்தை இனிப்பென்றும்
அழைத்திட வேண்டும்)
இப் பிடியிலிருந்து மீள
தலையை தளர்வாக அசைத்தேன்
அச் செயல்
கயிற்றின் பிடியை
மேலும்
இறுக்கியது.
ரபீஹ் தன்னை ஒரு கலகக்காரராக, காதலனாக சித்தரிக்கிறார். அவர் சமூக ஒழுங்கின் விதிகளை,மரபுகளை உடைத்தெறிந்தவர் .
சகோதரன் ஹரீதின் உத்தரவின்படி ரபீஹ் பால்கின் கை மணிகட்டுகள் துண்டிக்கப்பட்டன. இரத்தம் தொடர்ந்து வெளியேற பொது குளியலறைக்குள் அடைக்கப்பட்டார். மறுநாள் கதவைத் திறந்துப் பார்க்கையில் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கிடந்தது. குளியலறையின் சுவர் முழுவதும் இரத்தத்தால் தன் காதல் வாழ்வின் துயரத்தை கவிதையாக எழுதியிருந்ததைக் பொதுமக்கள் கண்டனர்.
@@@
முகலாய பேரரசர் ஓளரங்கசீப்பின் இளைய மகள் ஜைப் -உன்- நிஸா(1638-1702). பாரசீகம், அரபி, உருது மொழிகளில் புலமைப் பெற்றவர். இளமையிலேயே தந்தையின் மறுப்பையும் மீறி மக்ஃவி என்ற புனைப் பெயரில் பாரசீக மொழியில் பாடல்களைப் புனைந்தவர். இலக்கியத்தின் மீது பெருங்காதல் கொண்ட இவரது தனிப்பட்ட நூலகத்தில் பலதுறைகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றிருந்தன. இவரது இலக்கிய செயல்பாடுகளுக்காக ஒளரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கவிதைகள் தாஜிகிஸ்தானில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தாஜிக்-பெர்ஷியன் பதிப்பகம் இவரது கஜல்களை தாஜிக் மொழியில் தொகுத்து வழங்கியுள்ளது.
இவருக்கும் லாகூரின் ஆளுநராக இருந்த ஆகில்கானுக்குமிடையே நல்ல புரிதல் இருந்தது. ஆகில் இவருக்கு அனுப்பி வைத்த கவிதையும் மக்ஃவி அவருக்கனுப்பிய பதில் கவிதையும்(கேள்வி-பதில் பாணியில் அமைந்த நீண்ட கவிதையின் ஒரு பத்தி)
ஆகில்:
“உங்களை தோட்டத்தில் காண வேண்டுமெனில் இராப்பாடியாக நானிருப்பேன்.
மற்றவர்கள் அங்கிருப்பின்
படபடக்கும் வண்ணத்துப்பூச்சியாக நானிருப்பேன்.
சபையில் ஒளிரும் ஒளியாக இருப்பீர்கள் எனில்
அது எனக்கு உகந்ததல்ல”
மக்ஃவி:
“பக்திமானான பிராமணன் எனைக் கண்டதும்
தன் சிலைகளை தவறவிட்டது போல்
தோட்டத்தில் ரோஜாவாக இருந்த என்னை
பார்க்கத் தவறியது இராப்பாடி.
ரோஜாவின் இதழ்களில் ஒளிந்திருக்கும்
வாசனை திரவத்தைப்போல்
வார்த்தைகளில் நான் மறைந்திருக்கிறேன்
உள்ளன்போடு பார்க்க விரும்புபவர்கள்
என் வார்த்தைகளில் எனைக் காண்பார்கள்.”—
——
மக்ஃவி:
என் உணர்வுகள் லைலாவாக இருக்க விரும்பினாலும்
என் இதயம் மஜ்னுடையதைப் போல்
வனாந்தாரத்தில் அலைய விரும்புகிறது
ஆனால்
வெட்கத்தின் சங்கிலி
என்னை வீட்டோடு இருத்தி வைத்துள்ளது.
—-
ஔரங்கசீப்பின் மூத்த மகள் ஜீனத்-அல்- நிஸா பேகம். நன்கு கல்வி கற்றவர் .மணமாகதவர். மிக எளிமையாக வாழ்ந்தவர். ஔரங்கசீப்பின் இறுதிக் காலத்தில் அவரது உற்ற துணையாக,நிர்வாகத்தில் ஆலோசணை கூறுபவராக இருந்தவர் . டெல்லியில் காலமானார். அங்கு அவரே கட்டிய மசூதியில் அடக்கம் செய்யப்பட்டார்.
அவரின் ஓர் கவிதை
“கல்லறையில்
கடவுளின் அருள்
எனக்கு துணையிருக்கும்
கருணை மழை பொழியும்
அவரது மேகத்தின் நிழலே
போர்வையாக இருக்கும்”
@@
ஃபத்திமா பாராகஹனி (1814-1852) ஈரானின் காஸ்வின் நகரில் பிறந்தவர். தூய்மையான ஒன்று, கண்களின் ஆறுதல் போன்ற இவரது கவிதைகளின் தலைப்புகள் பிரபலமானவை. இவரது களச் செயல்பாடுகள், அறிவுச்சார் போராட்டங்கள், துயரமிக்க வாழ்க்கைச் சூழல் , தூக்கிலிடப்பட்ட விதம் போன்ற காரணங்களால் இன்றும் ஈரானில் கண்ணீரோடு நினைவு கூறப்படுகிறார். பெண் விடுதலை, பெண்ணுரிமை போரட்டங்களின் அடையாளச் சின்னமாக திகழ்கிறார். மிக வளமான குடும்பத்தில் பிறந்தவர். இறையியல், தத்துவம் , பாரசீக இலக்கியம் ,இறையியல் சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றை தந்தையிடமிருந்து கற்றவர். இறையில் சட்ட த்த்துவங்கள் இவரை ஷியாகி மற்றும் பஹாய் மத கோட்பாடுகளின் பக்கம் நகர்த்தியது. அதில் தீவிர ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தவர் பஹாய் கூட்டங்களில் தொடர்ந்து பங்கு கொண்டார். பொதுவெளியில் தனது பர்தாவை கழற்றி வீசினார். இச்செயலுக்காக கைது செய்யப்பட்டு ஒருதலைபட்சமான விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டார்.
@@
ஆயிஷா துரானி பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் புகழ் பெற்ற பர்காஸி பாஸ்துன் குடும்பத்தில் பிறந்தவர். தைமூர் ஷாவின் துணைவியார். பாரசீக இலக்கியம், அரபி இலக்கியம், இஸ்லாமிய கோட்பாடுகளை ஆழ்ந்து கற்றவர். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்காக முதல் பள்ளியை நிறுவியவர். இவருடைய பெரும்பாலான கஜல்கள் தாய்மார்களின் துயரத்தையும் வலிகளையும் இழப்புகளையும். கண்ணீரோடு பாடியவை .இவரது மூத்த மகன் போரில் உயிர்நீத்தவர் . அவருக்கான இ்ரங்கற்பா அனைத்து தா்ய்மார்களின் இதயங்களையும் நெகிழச் செய்வது. அபத்-அல்-ரஹமான் கான் (1880-1901) காலத்தில் இவரது கஜல்கள் தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது.
@@
பர்வீன் இஸாமி (1907-1941). ஏழு வயதிலேயே இவரது தந்தை நடத்தி வந்த பாஹர் என்ற இதழில் கவிதைகள் எழுதியவர். இவரது கதைப்பாடல்கள் மிகப் பிரபலமானவை. “கண்ணீர் துளியின் பயணம் “பாரசீக கவிதைப் பாடல்களிலேயே சிறப்பானது என கொண்டாடப்படுகிறது. அக்காலத்திய சீர்திருத்த போக்குகள் இவரது படைப்பாற்றலில் எவ்வித மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. பழமையான பாணியிலேயே கவிதைகளை இயற்றியவர்.
@@
ஷமின் தனிஸ்வர் (1921-2012) புகழ் பெற்ற கல்வியாளர்.சிறுகதை மற்றும் நாவலாசிரியர். மொழிபெயர்ப்பாளர்.1940 ல் வெளி வந்த இவரது சிறுகதை தொகுப்பு தான் பாரசீக மொழியின் முதல் பெண் சிறுகதையாசிரியரின் தொகுப்பு. இவரது “பாரசீகத்தின் கோரிக்கை” என்ற நாவல் முக்கியமானது . அம் மொழியின் முதல் பெண் நாவலாசிரியரும் இவரே. பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கணவர் செல்வாக்குமிக்க சமூக விமர்சகரான ஜலால் -அல்- அகமது.அவரது மறைவிற்க்குப் பின் அவருடனான வாழ்வைப் போற்றும் வகையில் “ஜலாலின் இழப்பு” என்ற நூலை எழுதினார். அந்தன் செக்காவின் செர்ரித் தோட்டம் தொகுப்பு, நாதானியலின் ஸ்கர்லட்டின் கடிதம் மொழிபெயர்ப்புக்காக பெரிதும் மதிக்கப்படுகிறார்.
+++
ஷிமின் பெஹ்பஹானி இருபதாம் நூற்றாண்டின் பாரசீக இலக்கிய முகமாக அறியப்படுகிறார். பதினான்கு வயதிலேயே இவரது கவிதைகள் வெளியாக்கம் பெற்றன. நவீன ஈரானின் தினசரி வாழ்க்கையை கஜல்களாக பாடியுள்ளார். இருமுறை நோபல் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவரது வெளிப்படையான பெண்ணிய செயல்பாடுகளுக்காக ஈரானின் புரட்சிகார அரசின் தொடர் கண்காணிப்பிற்கு உள்ளானவர் . பல படைப்புகள் அரசின் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. உலகின் பல முக்கிய இலக்கிய விருதுகளைப்பெற்றவர். பெஹ்பஹானி 2014ல் காலமானார். அவரது பிரபலமான கவிதை “விபச்சாரியின் பாடல் “ஆறுபகுதிகளைக் கொண்டது. அவ்வாழ்க்கையின் கொடூரங்களை விவரிக்கிறது. ஷிமின் பெஹ்பஹானி பாலின பாகுபாடுகளைப் பற்றி கூறுகையில் “ஆண் எழுத்தாளர்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் இடையில் இழுக்கப்படும் திரைச்சீலை காரணமாக நான் அவதிப்படுகிறேன். ஒரு கவிஞன் உண்மையிலேயே ஒரு கவிஞன் என்றால் ஏன் பாலுறவு, பாலின பிரச்சனையை சிறப்புரிமையாக்க வேண்டும்? கவிதையின் அரங்கம் மல்யுத்த அரங்கமல்ல, பாலினம், எடை என்ற அடிப்படையில் மல்யுத்தம் செய்வதற்கு.
@@
“சர்க்கஸில் பணிபுரியும் பெண்னை
எந்த ஆணும்
காதலிக்க விரும்புவதில்லை-எனத் தொடங்கும் சாரா முகமதி அர்தேஹாலியின் “ஒரு முழு நேர நிலை” என்ற தலைப்பிலான கவிதை ஆணாதிக்கப் பொருளாதரத்தில் பெண்களின் நிலையை இந்த நீள் கவிதை திறம்பட சித்தரிக்கிறது.
சாரா முகமதி அர்தேஹாலியின் சிறுகவிதை “பெண்”
“முப்பத்தைந்தில்
ஏதுவுமற்று
நிர்வாணமாக இருக்கையில்
எல்லாம்
தெளிவாக உள்ளது.
@@
மினா அஸாதியின் அழகான கவிதை ஒன்று
“பிராத்தனை விரிப்புகளைப் பற்றி நினைக்கவில்லை
முழுவதும் பட்டு பூஞ்சைகள் நிறைந்த
நூறு தோட்டங்களின் வழிச் செல்லும்
நூறு பாதைகளை நினைக்கிறேன்
சிட்டுக்குருவிகளின் இசையால் நிறைந்த
பட்டுச் சாலையில்
பிராத்திக்கிறேன்
எனக்குத் தெரியும்
மகிழ்ச்சியான இடத்தில் தான்
கிப்லா இருக்கிறது என.”
@@
பாத்திமா எக்ஷரி யின் நீண்ட கவிதையின் இரு சிறுபத்திகள்
“ரத்தம் வடியும் கத்தி போல்
என் முதல் நிர்வாணம்
உன் கண்களுக்கு முன்னால்.
நீ வாசிக்கும்
தடைசெய்யப்பட்ட கவிதைப் போல்
நிர்வாணம்
….
…
வா! என் வாயில் பாராஃபினை ஊற்று
வா! நூலகத்திற்கு தீ வைக்க வா!
என் மனக் கசப்புகளை தகர்த்து விடு
உன் சோர்வை
என் உடலில் செலுத்திடு
+++
பாரசீக இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்றவர் Furugh Farrukhzad. இவரது வசனக் கவிதைகள் மூலம் அடிப்படைவாத ஈரானின் சமூகத்தை கேள்விக்கு உட்படுத்தியவர். இவரது முதல் புத்தகம் Asir (சிறைபிடிக்கப்பட்டவர்) ஈரானிய பாரம்பரிய திருமண முறையையும்,பெண்களின் அவல நிலையையும் , விவாகரத்து பெற்ற தன் நிலையையும் விவரிப்பது. 16வயதில் திருமணம், 18 வயதில் குழந்தைப் பிறப்பு, 19 வயதில் விவாகரத்து. இந்த நிகழ்வு பெரும் மாற்றத்தை அவருள் ஏற்படுத்தியது. Farrokhzad பெண் வெறுப்பு கதைகள் தனது படைப்பைப்பற்றிய புரிதலையும் வரவேற்பையும் எவ்வாறு கறைப்படுத்தியது என்பதைப் பற்றி Iraj Gergin-உடனான நேர்காணலில் உணர்ச்சியுடன் விவரித்துள்ளார். “நீங்கள் குறிப்பிடுவது போல் என் கவிதையில் பெண்ணிய குணம் இருந்தால் , அது நான் இயல்பாகவே பெண்ணாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதிர்ஷ்டவசமாக நான் ஒரு பெண். ஆனால் கலை மதிப்பீடுகள் என்று வரும்போது பாலினத்தை அளவிடும் அளவுகோலாகப் கொள்வது பொருத்தமற்றது, சாரமற்றது என நான் நம்புகிறேன். ஆண்/பெண் இருமை எந்த கவனத்திற்கும் தகுதியற்றது. தனது படைப்பில் பெண்பால் ஒளி வேண்டுமென்றே புகுத்தியது அல்ல, மாறாக அது தனது இருப்பை நினைவிலியிலிருந்து வெளிப்படுத்துவது என்கிறார் . மனிதனாக இருப்பது முக்கியமானது. பாலின அடையாளம் என்பது அரபியிலிருந்து கடன் பெற்ற வார்த்தை என்கிறார்.
அஜெர்பைஜானில் உள்ள தொழுநோயாளிகளின் காலணி பற்றி அவர் இயக்கிய“The house is black” என்ற குறும்படம் அவருக்கு பெரும் புகழிட்டியது. அக்காலணியைச் சேர்ந்த இரு குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டவர்.
இறுதிகட்ட படைப்புகளான “மறுபிறப்பு” “குளிர்பருவத்தின் துவக்கத்தில் நம்பிக்கை வைப்போம்” தொகுப்புகள் பாரசீக கவிதையின் மரபான கூறுகளை மாற்றியமைத்தவை. இஸ்லாமிய புரட்சி அரசு ஈரானில் இவரது பல படைப்புகளை தடை செய்துள்ளது. மொழியாக்கங்கள் மூலமே இவரது படைப்பைகள் கிடைக்கின்றன. 1967ல் கார் விபத்தொன்றில் அகால மரணமடைந்தார்.
“எனக்கு நீ வேண்டும்
என் கைகளில்
உன்னை ஏந்த இயலாது.
தெளிவான பிரகாசமான
வானத்தைப் போலிருக்கிறாய் நீ
நானோ
கூண்டிலடைக்கப்பட்ட
சிறுபறவை.”
(சிறைபிடிக்கப்பட்டவர் கவிதையிலிருந்து )
“குழந்தையின் அழுகுரல் எனக்கு கேட்கிறது
தாயைப் பிரிந்த துயரமும் வலியும் அதன்
மனதில் நிறைந்திருப்பதை அறிவேன்
ஆனால்
காயப்பட்ட, உடைந்த,
மன உளைச்சலுக்கு உள்ளான
இதயம்
அதன் ஆசையின் பாதையில்
செல்ல விரும்புகிறது
என்
நண்பனும்
காதலனும்
கவிதைதான்
அவனைத் தேடிச் செல்கிறேன்.
(நிராகரிக்கப்பட்ட வீடு)
“ஆசை எனும் ஆலயத்தில்
உணர்ச்சி பொங்கும்
உன் உடலினருகே
படுத்திருக்கிறேன்
என் முத்தங்கள்
பாம்பின் கூரிய பற்கள்
பதித்த தடங்களைப் போல்
உன் தோள்பட்டையில்
பதிந்துள்ளதை கண்ட வண்ணம்”
(அழகின் பாடல்)
@@
ஷாஹர்நூஸ் பர்ஸிபூர் ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பிறந்தவர். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மாய யாதார்த்த வகை எழுத்துக்காக கவனம் பெற்றவர். புரட்சிக்குப்பிந்தைய ஈரானில் படைப்புகளுக்காகவும் களச் செயல்பாடுகளுக்காகவும் பலமுறை சிறை சென்றவர். பல படைப்புகள் தணிக்கைக்கை உட்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளன. அவரது முக்கிய படைப்புகளான
“Tuba and the meaning of the night “, “women without men”
இரண்டும் முழு நீள திரைப்படங்களாக வந்துள்ளன. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
@@
சூஃபி இலக்கியமும், ஞானிகளும் கொண்டாடப்பட்ட அளவிற்கு பிற மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியம் இங்கு பெரிதாக தமிழில் அறிமுகமாகவில்லை.
இன்றுகூட ஈரானிய திரைப்படங்களும் இயக்குஞர்களும் அறிமுகமான அளவிற்கு ஈரானிய பெண்கவிஞர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது படைப்புகள் இல்லை.
இந்நிலையில் டிக் டேவிஸின் இதயத்தின் கண்ணாடி என்ற பாரசீக பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பு பெரும் திறவுகோலாக அமைந்தது. ரபீஹ், ஜஹான் மாலிக் காதுன்,Farrokhzad,ஜைப் -உன்- நிஸா போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. பெரும்பாலான பாராசீக,முகலாயா அரசிகளும் இளவரசிகளும் கவிஞர்களாக , கஜல் பாடல்கள் புனைபவர்களாக திகழ்ந்துள்ளனர். பாபரின் இரு மகள்கள், ஷாஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான்,ஒளரங்கசீப்பின் இரு மகள்கள் , ஷாஜகானின் மகள் என பலரும் சிறப்பான படைப்புகள தந்துள்ளனர். தமிழின் சங்கப் பாடல்களைப் போல் அகம், புறம் என்ற பிரிவுகள் இல்லை. திணைகள் இல்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முந்திய கால கட்ட கவிதைகளில் பொதுவாக காதல், பிரிவு, தனிமை, ஏக்கம் பற்றியே அதிகம் காண முடிகிறது. மொழிபெயர்ப்புகள் வழியேதான் அவை நம்மை வந்தடைகின்றன. எனவே மொழிபெயர்ப்பாளரின் ரசனை சார்ந்த விஷயங்கள் உண்மையை முழுவதும் தரும் என நம்ப இயலாது. பெண் கவிஞர்கள் துதிப் பாடல்கள், மதம் சார்ந்த விவாதங்கள்.கடவுள் பற்றிய சிந்தனைக்கு அதிகம் இடமளிக்கவில்லை. எனினும் பரந்துப்பட்ட அளவில் அக்கால பாரசீக வாழ்வியலை தரத் தவறுவதில்லை. மேற்கத்தியநாடுகளுடான தொடர்பால் பிற்கால பெண்கவிஞர்களின் கவிதைகளில் நேர்மறையான பாதிப்பினைக் காணமுடிகிறது. பெண் விடுதலை, தனிநபர் சுதந்திரம், பெண் ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தங்கள் உடலை முன்னிருத்துவதில்லை. தன்னிரக்கம் கொள்வதில்லை. வெற்றுக் கோஷங்கள் இடுவதில்லை. அழுத்தமாக தான் சொல்ல வருவதைச் சொல்கின்றனர். நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பற்றி, நிகழ்த்த வேண்டிய விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். எப்படியிருப்பினும் தொன்மையான பாரசீக மொழிக் கவிதைகள் நம்மை வசீகரிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கிறது. பாரசீக இலக்கியம் தமிழில் அவசியம் வர வேண்டிய ஒன்று. இரு தொன்மையான மொழிகளுக்குடையேயான இலக்கிய உறவு மேலும் வலுப்பெற அது உதவும்.
கட்டுரைக்கு உதவிய இந்நூலாசிரியர்களுக்கு நன்றி
The Mirror of my Heart- Dick Davis
Women poet in Persian poetry -Fatemeh
A thousand years of the Persian book.
Modern Persian poetry by Mahmud kianush.
The IIahi Nama: Book of God of Farid al din Attar translated by: John Andrew Boyle
அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.