என் பெயர் பூஜா. நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டெக்னிக்கல் லீடாக இருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். யார் வம்புக்கும் அநாவசியமாக போகமாட்டேன். குடும்பத்தினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சக ஊழியர்களாக இருந்தாலும் சரி, நேரடியாக வாக்குவாதத்திற்கு போகவே மாட்டேன். அவர்கள் செயல்களில் உடன்பாடு இல்லை எனிலும் நாசுக்காக எனது அபிப்ராயத்தை சொல்லவே விரும்புவேன். எனது அக்கா கவிதா எனக்கு எதிர்மறை. எதிலும் ஒரு அபிப்பிராயம், பொறுமையின்மை, குறிப்பாக இங்கிதம் தெரியாதவள்.

உதாரணத்திற்கு, ஒரு நாள் அவளது மாமியார் அவளை ஒரு சோம்பேறி என்று எங்கள் அம்மாவிடம் குறைகூறியதை அறிந்து, அவளது மாமியாரை பார்த்து நேராக, “நீங்க என்ன பத்தி சோம்பேறின்னு எங்க அம்மா கிட்ட சொன்னீங்களா? இனிமேல் என்ன பத்தி ஏதாவது குறை சொல்லனும்னா என்கிட்ட சொல்லுங்க, அம்மாவிடம் வேண்டாம்,” என்று சொல்லிவிட்டாள். இது ஒரு உதாரணமே, இதைத் தவிர அவளைப் பற்றி பல கதைகள் என்னிடம் இருக்கிறது. ஓலா, உபர், மாதிரி தளங்களில் புக் செய்து வாகன ஓட்டிகள் ஓடிபி போடவில்லை என்றால், அல்லது, அதிகம் ஒரு பத்து ரூபாய் கேட்டால் கூட, பெரும் சண்டை போடுவாள். எனக்கு அவளுடன் வெளியே போகவே அவமானமாக இருக்கும்.

நான் அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அஜய் எனது கம்பெனியிலேயே பொறியாளராக இருக்கிறார். பார்க்க ஜம்முனு இருப்பார். சிரித்தால் கன்னத்தில் அழகான குழி விழும். புது மாடல் எஸ்.யூ.வி கார் வைத்திருக்கிறார். புது ஆப்பிள் போன் வைத்திருக்கிறார். குறிப்பாக என் மீது கொள்ளை பிரியம். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை அழைத்து விடுவார். இதை தவிர்த்து வாட்ஸ் அப்பில் எப்போதும் மெசேஜ்கள். ஃபோனை உடனே எடுக்காவிட்டால், பதறிப் போய்விடுவார். உடனே என் நண்பர்கள், அம்மா, அப்பா, என்று அனைவரையும் அழைத்து என்னைப் பற்றி விசாரிப்பார்.

ஆனால் இந்த கவிதா இருக்காளே… சரியான பொறாமை பிடித்தவள். அஜய்யின் அன்பை பொசசிவ்னஸ் என்றாள். “ பூஜா, எப்பப் பாரு அவருக்கு ஃபோன் பண்ணி நீ எங்க இருக்கன்னு சொல்லிட்டு இருக்காத! உனக்கும் அவருக்கும் பர்சனல் ஸ்பேஸ் வேணும். காதல் என்பது அளவா இருந்தா தான் அழகு, இல்லாட்டி டார்ச்சர்,” என்பாள். அவளிடம் எனக்கு வருமே கோபம். அவ புருஷன் இதுபோல அக்கறையா நடந்து கொள்ளாததால் அவள் இப்படி பேசுகிறாள் என்று நினைப்பேன். இருந்தும் மரியாதை கருதி அவளிடம் எதுவும் சொல்லமாட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, கவிதா என் வீட்டிற்கு திடுதிப்பென வந்தாள். எனது முகத்தில் உள்ள வியப்பைக் கண்டு, “நேத்திகே நான் உன் வீட்டுக்கு வரேன்னு வாட்ஸ்அப் பண்ணினேன்… நீயும் வான்னு சொன்னியே?” என்றாள். “ஓ சாரி பூஜா, நான் தான் அவங்களுக்கு ரிப்ளை பண்ணினேன், உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்,” என்றார் அஜய். அவரது கையில் எனது ஃபோன் இருந்ததை கவனித்தேன்.

“எதுக்கு உன் போன்ல அவர் மெசேஜ் பண்றார்? எதுக்கு நீ அந்த மாதிரி செய்ய அனுமதி தர?” என்று வழக்கம் போல ஆரம்பித்து விட்டாள் கவிதா.

“ஐயோ கவிதா! எனக்கு ஒண்ணும் தப்பா தெரியல… ஏன் உன் ஃபோனை உன் ஹஸ்பண்ட் உபயோகிச்சது இல்லையா?” என்றேன் அலுப்பாக.

“ம்.. ஹும்… என் அனுமதி இல்லாம பயன்படுத்த மாட்டார் பூஜா” என்று தலையசைத்தாள்.

“சரி, நீ அவர் ஃபோன மற்றும் சோஷியல் மீடியாவை பயன்படுத்த மாட்டியா என்ன?” என்று கேட்டு அவளை மடக்கினேன்.

“அய்யோ… அது தப்பு, பிரைவசி இஷ்யூ!” என்று பதறினாள்.

பிரைவசி பற்றி நான் அறிந்திருந்தால் கூட, அவளோடு உரையாடியது சற்று கலக்கமாக இருந்தது. ஒரு சந்தேகத்திற்காக, “உன் பாஸ்வேர்ட் எல்லாம் உன் ஹஸ்பண்ட் கிட்ட பகிர்ந்துப்ப தானே?” என்றேன். அவளது முகம் கவலை அடைந்தது.

“பூஜா, பாஸ்வேர்டு எல்லாம் ஹஸ்பண்டா இருந்தா கூட பகிரணும்னு அவசியம் இல்ல. நீயும் அவருடையத கேட்கக்கூடாது. அவருக்கும் உன்னுடையதை கொடுக்கக் கூடாது” என்றாள். அதுதான் எனக்கு கிடைத்த முதல் எச்சரிக்கை.

“பூஜா, அஜய் எனக்கு பேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து இருக்கார், அக்சப்ட் பண்ணலாமா? உனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே?” என்று கேட்டாள் என் டீமில் வேலை செய்யும் அனு.

“உன் இஷ்டம் அனு, ஐ டோன்ட் மைண்ட்,” என்றேன்.

சில நாட்கள் கழித்து அஜயின் சினேகிதன் கிஷோர் எனக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தான். அவனும் எனக்கு பரிச்சயமானவன் தான், அதனால் ஏற்றுக் கொண்டேன். அன்று மாலை, “பூஜா, ஏன் கிஷோரோட ஃப்ரெண்டா இருக்க?” என்றார் அஜய்.

“கிஷோர் எனக்கும் ஃப்ரெண்ட் தானே? நீ கூட தான் அனுவோட ஃப்ரெண்டா இருக்க?” என்றேன்.

“ஏன் பூஜா என்ன சந்தேகப்படற? உன்மேல உள்ள அக்கறையாலதான் நான் அனுவுடன் நட்பாக இருக்கேன். உன் கூடவே அவ வொர்க் பண்றா, அதோட உன்னை எப்பவாச்சு காண்டாக்ட் பண்ண முடியலன்னா, அனுவோட நட்பு எனக்கு ஹெல்ப் பண்ணும். அதேபோல, கிஷோர் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் கிடையாது, சரியான ஃபிளர்ட். உன்ன பாதுகாக்கவே அப்படி சொன்னேன்,” என்றார் அஜய், பிறகு என்னை கெஞ்சி, கொஞ்சி, கிஷோரை எனது நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்க வைத்தார்.

அவரது விளக்கம் எனக்கு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இருந்தும், எனக்கு இதற்காக அவரிடம் சண்டை போட விருப்பமில்லை. அதனால் அம்முறை அந்த சம்பவத்தை விட்டு விட்டேன். ஆனால், தொடர்ந்து என் கணவரின் நண்பர்களை சமூக வலைத்தளங்களில் கண்காணித்தேன். என்னுடைய பல நண்பர்களை, அவரும் நண்பர்களாக்கிக் கொண்டிருந்தார். அதேபோல, என்னுடைய திறன் பேசியை தினமும் நான் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் கண்காணித்துக் கொண்டிருந்தார். அதையும் நான் அப்போதுதான் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒருமுறை எனக்கு மாதவிடாய் சில நாட்கள் தள்ளிப் போனது, அப்போது  நான் கர்ப்பத்திற்கான அறிகுறிகளை இணையதளத்தில் தேடினேன். அரை மணி நேரத்தில், “ நீ கர்ப்பமாக இருக்கியா?” என்று என்னை கேட்டார் அஜய். நான் அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனெனில், அவர் எனது திறன் பேசி, இமெயில், மற்றும் சமூக வலைத்தளங்களை மட்டும் வேவு பார்க்கவில்லை… நான் என்னென்ன விஷயங்களை இணையத்தில் தேடுகிறேன், படித்து அறிந்து கொள்கிறேன், போன்ற விஷயங்களைச் சொல்லும் எனது சர்ச் ஹிஸ்டரியையும் கண்காணிக்கிறார் என்று புரிந்து கொண்டேன். இந்த கண்டுபிடிப்பு என்னை கவலை அடைய செய்தது. நல்ல வேளை, அப்பொழுது நான் கர்ப்பமாக இருக்கவில்லை. நான் மேற்கொண்டு சொல்லவிருக்கும் செய்திகள் என் நிம்மதி பெருமூச்சை நியாயப்படுத்தும்.

என் கணவரின் நடவடிக்கையைப் பற்றி நான் படித்து அறிந்து கொண்டேன். குடும்ப வன்முறை, சந்தேகப்படுவது, பாலியல் வன்முறை, என்பது போல இதனை டிஜிட்டல் வன்முறை என்பார்கள். அதிலிருந்து தப்புவது எப்படி என்று ஆராய்ந்தேன். எனக்கு நெருடலாக இருக்கும் டிஜிட்டல் அத்துமீறல்களை குறித்துக்கொண்டு, அதற்கு ஆதாரங்களை சேர்க்கத் துவங்கினேன்.

எனது அந்தரங்கத்தை பாதுகாக்க, ஒரு புது அலைபேசியையும், மொபைல் எண்ணையும், வாங்கினேன். அதை அவருக்குத் தெரியாமல், முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்தேன். இத்தனை வருடங்கள் எனக்கு கபடம் தெரியாது. கணவன் மனைவிக்கு இடையே ரகசியம் இருக்கக் கூடாது என்று நினைத்தேன், ஆனால், இந்த டிஜிட்டல் அத்துமீறல்கள் என் மனதை மாற்றியது. நான் சமூக வலைத்தளத்தில் ஒரு போலி கணக்கை தயார் செய்து, அஜயின் தோழியானேன். அவர் என்னுடைய போலியிடம் ஆசை வார்த்தைகளில் பேசினார். முதலில் விளையாட்டாக ஆரம்பித்த எங்கள் நட்பு, வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. போலி என்னுடைய உறவிற்காக, நிஜ என்னை ஏமாற்ற ஆரம்பித்தார்.

ஒருநாள், அலுவலகம் முடிந்து அருகே உள்ள சினிமா தியேட்டருக்கு சென்றேன். அங்கே சென்றிருப்பதாக என்னுடைய போலி கணக்கில் பதிவேற்றம் செய்தேன். என்னுடைய உள்ளுணர்வு அஜய் அங்கு கண்டிப்பாக வருவார் என்றது. அதேபோல அவரும் அங்கு வந்திருந்தார். அப்போதுதான் நான் அஜய் என்னை மட்டும் அல்ல, மற்ற பெண்களையும் இவ்வாறு இணையவழியில் பின் தொடர்கிறார் என்று அறிந்து கொண்டேன். நான் மறைந்து நின்று, எனது கணவர்… வர் என்ன வேண்டி கிடக்கு அவனுக்கு? நான் மறைந்து நின்று என் கணவனுக்கு கால் செய்தேன்.” சொல்லுமா பூஜா! நீ வீட்டுக்கு போயிட்டியா? எனக்கு ஆபீஸ்ல ரொம்ப வேலை இருக்கு… பிஸியாக இருக்கேன் வர லேட் ஆகும்,” என்றான் மிகவும் கனிவாக.

நான், எனது ஃப்ரெண்ட்ஸ்ஸோட சினிமா பார்க்க வந்திருக்கேன். வீட்டுக்கு வர லேட் ஆகும்,” என்றும் கூறி அதே தியேட்டரின் பெயரை கூறினேன்.

“இது என்ன என்கிட்ட சொல்லாம ஃப்ரெண்ட்ஸ்ஸோட சினிமா?” என்று கோபமாக கத்தினான்.

நான் பதிலுக்கு, “அதே தியேட்டரில் உன்ன பார்க்கறேன், நீ யாரோட சினிமா பார்க்க வந்த? என்கிட்ட பொய் வேற சொல்ற?” என்று அவன் முன் போய் நின்றேன். அவன் அதிர்ந்து போனான். மேலும் பொய்கள் சொல்லி என்னை சாந்தப்படுத்த தடுமாறினான். அவனுக்கு அந்த சிரமத்தைத் தராமல், என் போலி கணக்கு பற்றியும், அவனுடைய டிஜிட்டல் அத்துமீறல்கள் பற்றியும் அவனிடம் நேரடியாக கேட்டேன். உடனே பழியை என் மேல் போட்டு, என் நடத்தையை அவதூறாக பேசத் துவங்கினான்.

பொது இடம் என்பதால், நான் அங்கிருந்து பதிலுக்கு எதுவும் பேசாமல் கிளம்பினேன்.

நான் நாகரீகமான பெண் தான், எனக்கு உரக்க சத்தம் போட்டு சண்டையிட பிடிக்காது தான், ஆனால் நான் முட்டாள் அல்ல! நான் என் வக்கீலைப் பார்க்க கிளம்பினேன்.

00

மஞ்சுளா சுவாமிநாதன் சுயகுறிப்பு:

 நான் முதலில் ஓர் வாசகர். எனக்கு  சமூகக் கதைகள் மற்றும் கட்டுரைகள் படிப்பது மிகவும் இஷ்டம். மூன்று ஆண்டுகள் ‘அடையார் டைம்ஸ்’ என்ற ஆங்கில செய்தித் தாளில் துணையாசிரியராக  பணி புரிந்தேன். மங்கையர் மலர் மின் இதழிலும் சில காலம் பணியாற்றினேன். கோவிட் ஊரடங்கு எனக்கு புத்தகங்கள் படிக்க ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். மங்கையர் மலர், கல்கி, அமுத சுரபி , கலைமகள், குவிகம் மின்னிதழ், இலக்கியபீடம், வாரமலர், ராணி ஆகிய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள்  பிரசுரம் ஆகி உள்ளது. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *