“அப்றம் மாப்ள, ரெண்டாவது மவளுக்கும் நல்லபடியா காது குத்தி முடிச்சாச்சு. அடுத்தென்ன? மூத்தவளோட சடங்கு தா. இப்பருந்தே கொஞ்சங் கொஞ்சமா சேத்தி வெக்கப் பாருங்க. அப்பத்தான் கடன குடன வாங்காம உங்க சக்திக்குண்டான படி தெரட்டிப் பண்ண முடியும்”, என்று தனக்கு எதிரே அமர்ந்திருந்த கார்த்தியிடம் கேசவ மாமா சொன்னார்.
அவர் அப்படிச் சொல்லி முடித்ததும், தான் படித்து முடித்தது, வேலையில் சேர்ந்தது, கிருத்திகாவைக் கட்டிக்கொண்டது, அவளுக்கு வளைகாப்பு நடத்தியது, அவர்களுக்கு மூத்தக்குழந்தை சுவாதி பிறந்தது, சுவாதிக்கு மொட்டைப் போட்டுக் காது குத்தியது, இளையவள் பிறந்தது, இன்று அவளுக்கும் காது குத்தி முடித்திருந்தது எல்லாம், ஒரு தொடர்வண்டி லெவல் கிராசிங்கை கடந்து போகும் வேகத்தில் கார்த்தியின் மனதினுள் ஓடி மறைந்தது. அடுத்ததாக அவனுக்குக் காத்திருப்பது மூத்தவளின் சடங்குதானாம்; மாமா முடிவு கட்டி விட்டார். இளைய மகளுக்கு காது குத்தி முடித்து இன்னும் முழுவதுமாக ஒரு மணி நேரம் கூட அவன் இளைப்பாறியிருக்கவில்லை. அதற்குள்ளாக கேசவ மாமா, அவனுக்கு அடுத்த இலக்கை நிர்ணயம் செய்து அதை விரட்டி ஓடும்படியாக அறிவுரை சொன்னது அவனுக்கு அவ்வளவாகப் பிடித்திருக்கவில்லை. எனும்போதிலும், அவர் சொன்னதற்கு சரியென்பதைப் போல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.
கேசவ மாமா வேறுயாருமில்லை; கார்த்தியின் மனைவியான கிருத்திகாவின் தாய்மாமன். கார்த்தி-கிருத்திகாவின் இளைய மகள் நான்கு வயதுப் பிள்ளை. அவளுக்குத் தான் இன்று மொட்டைப் போட்டுக் காதுக் குத்தியிருந்தார்கள். மூத்த மகளுக்குப் போல் விமர்சையாக அல்லாமல், நெருங்கிய உறவுக்காரர்களை மட்டுமே கார்த்தி இம்முறை அழைத்திருந்தான். கிருத்திகாவின் அம்மாவும் அப்பாவும் இப்போது உயிருடன் இல்லை. அவளுக்கு உறவென்று அவளின் தம்பி சுந்தரும் , தாய்மாமன் கேசவனும் மட்டுமே இருந்தனர். அதனால், கேசவ மாமா அவள் வீட்டு எல்லா விழாக்களிலும் கட்டாயம் இருப்பார்.
கார்த்தி, காது குத்தை அவன் குலதெய்வக் கோவிலில் தான் எளிமையாக ஏற்பாடு செய்திருந்தான். கேசவ மாமா பந்தியிலிருந்து சாப்பிட்டு எழுந்தவர், வேம்படியில் ஒரு நாற்காலியில் தனியாக உட்கார்ந்துகொண்டு ஏதோ சிந்தனையிலிருந்த கார்த்தியைப் பார்த்ததும், தானும் ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டு போய் அவன் எதிரில் போட்டு உட்கார்ந்துதான் அவனிடம் இப்போது பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
கேசவ மாமா சொன்னதற்கு கார்த்தி தலையசைத்துக்கொண்ட பிறகு இருவருக்கும் பேச எதுவும் இல்லாததால் அவ்விடம் சற்று அமைதி நிலவியது. பின் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அலுப்புக் கொண்டு பரஸ்பரமாகப் பார்வையைத் தங்களைச் சுற்றிலும் அலைய விட்டனர். இவர்கள் அமர்ந்திருந்த வேம்படியிலிருந்து ஓர் இருபது அடி தள்ளி இருந்த கோவில் மண்டபத்தில் பந்தியில் உணவுப் பரிமாறிக்கொண்டிருந்த சுந்தரை, கேசவ மாமா பார்க்கலானார். அவரின் கண்கள் சுந்தரை நோக்கிய வண்ணம் உறைந்திருந்ததை கார்த்தியும் கவனித்தான்.
அப்போது கார்த்திக்கு, சுவாதி பிறந்தபோது குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்த கேசவ மாமா, இவனைத் தனியே அழைத்துச் சொன்னது நினைவிற்கு வந்தது.
“மாப்ள ஒன்னு மட்டும் போதும்னு இருந்திர வேணாம். ரெண்டாவது பாப்போம். கண்டீப்பா பையன் தான் பொறக்கும். அதுக்கப்றம் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கலாம்”
இந்த மாதிரியெல்லாம் பேச கேசவ மாமாவால் மட்டும் முடிந்திருந்தது. தான் ஒரு கச்சிதமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாக அவருக்கு எண்ணம். அதனாலோ என்னவோ அவர் மற்றவரிடம் பேசும்பொழுது அதிகமாக ஆலோசனைகளைச் சேர்த்துக் கொள்வார். கார்த்தி-கிருத்திகாவுக்கு இளைய மகள் பிறந்தபோதும் மருத்துவமனைக்குப் பார்க்க வந்திருந்த கேசவ மாமா, கார்த்தியிடம் இப்படிக் கேட்டிருந்தார்.
“ரெண்டும் பொண்ணாப் போச்சேன்னு கவலப் படாதீங்க மாப்ள. வர காலத்துல எல்லாம் பொண்ணுங்களுக்குத் தான் கிராக்கி அதிகம். இனிமேலும் பாக்க வேணாம். ஆபரேஷன் பண்ணிடச் சொல்லீட்டீங்கல?”
என்னதான் நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தாலும் இவ்வளவு உரிமையாக பிறரின் வாழ்க்கையில் தலையிட்டு ஒருவரால் கருத்துச் சொல்ல முடியுமா? என அப்போதெல்லாம் கார்த்தி, கேசவ மாமாவை எண்ணி வியந்திருக்கிறான். காலப்போக்கில் அவரின் பேச்சுகளும் நடத்தையும் அவனுக்கு நன்கு பழகி விட்டிருந்தன. அவற்றில் சில முகச்சுழிப்பை ஏற்படுத்துவனவாக இருந்தாலும் முடிந்தவரை அவற்றை இலட்சியம் செய்யாமல் தவிர்ப்பான். அவர் எந்தெந்த நேரங்களில் என்னென்ன பேசுவார் என்பதை யூகித்தறியும் அளவுக்கு அவரைக் கார்த்தி புரிந்து வைத்திருந்தான். இப்போது கூட சுந்தரைப் பார்த்தபடி இருக்கும் அவர், சுந்தருக்காக வந்திருக்கும் வரன்களைப் பற்றித்தான் ஏதாவது இவனிடம் விசாரிப்பார் என எண்ணி மனதிற்குள் பதில்களைத் தயார் செய்தபடி இருந்தான்.
“மருமவன் எப்ப வந்தான் மாப்ள?”, சுந்தரைப் பார்த்துக்கொண்டிருந்தவர் கார்த்தியின் பக்கம் திரும்பி கேட்டார்.
அவன் எதிர்பார்த்தபடியில்லாமல் மாமா வேறொன்றைக் கேட்டதால், “ம்ம்ம்” என்றவனாக நிதானித்து, “முந்தா நேத்து நயிட்டே வந்துட்டான் மாமா” என்றான்.
அவருக்கு எப்போதும் சுந்தர் ‘மருமவன்’ தான்; கிருத்திகா ‘மருமவள்’ தான். அவர்களின் பெயரைச் சொல்லி கேசவ மாமா கூப்பிட்டதாக கார்த்திக்கு நினைவேயில்லை. அது அவனுக்கும் ஒருவாறு பிடித்துத்தான் போயிருந்தது. எப்போதாவது அவர் வீட்டிற்கு வந்து விட்டுப் போன சமயங்களில், “மருமவளே அந்தட் டீ டம்ளர்லா எடுத்துக் கழுவப் போடு” , “அந்த மூலையிலப் பாரு மருமவளே ஒரே எறும்பாத் திரியுது”, “என்னாதிது இவ்ளோ காரம் கொழம்புல? வர வர நெனப்பு வேலயிலயே இல்ல மருமவளே உனக்கு”, என அவரைப் போலவே எதையாவது நடித்துக் காட்டிக் கிருத்திகாவை நக்கலடித்திருக்கிறான். அதேப்போல கிருத்திகாவும், சுந்தரும் அவரை மாமா என்றழைப்பதால் அவனும் அவரை மாமாவென்றே அழைத்துப் பழகிப்போனான். அடுத்ததாக நிச்சயம் சுந்தரின் திருமணப் பேச்சைத்தானெடுப்பார் என நினைத்தவனுக்கு அவர் கேட்டது ஏமாற்றமாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும்.
“யா மாப்ள எ மருமவன் என்னாக் காரியம் பண்ணியிருக்கான்னு உங்குளுக்கெதாச்சுந் தெரியுமா? ”
அந்தத் தொனியில் இரகசியம் பகிர்வதன் ஆவலுடன் சேர்ந்து கோவமும் எட்டிப் பார்த்தது தான் கார்த்தியின் அதிர்ச்சிக்குக் காரணம். தான் சுந்தரை உமாவுடன் சேர்த்துப் பார்த்ததைப் போல கேசவ மாமாவும் பார்த்திருப்பாரோ? என உள்ளுக்குள் அஞ்சினான். இவருக்கு மட்டும் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் என நினைத்தவன் தனக்குள் எழுந்த கலவரம் முகத்தில் பிரதிபலிக்காதபடி பாவனை செய்துகொண்டே அவரிடம் கேட்டான்.
“தெரியாதே மாமா அப்டி என்னப் பண்ணா?”
“போலீஸ் ஸ்டேஷன்க்குலாம் போயி பஞ்சாயத்துப் பண்ணியிருக்கான்.. பெரிய மனுசனாட்டம்”
அவன் ஐயப்பட்டது போல் உமாவைக் குறித்து மாமா எதுவும் கேட்காததால் எழுந்த நிம்மதி பெருமூச்சினூடாகவே கார்த்தி பேசத் தொடங்கினான்.
“அதக் கேக்குறீங்களா. ம்ம்.. சொன்னா.. சொன்னா… ஏதோ அவன் ஃப்ரண்டாம். பேரு கிரியாம். அந்தப் பயனோடத் தங்கச்சிப் புருசன் அந்தப் பொண்ணப் போட்டு அடிச்சி, மண்ட ஒடஞ்சி ரத்தம் வர அளவுக்கு ஆயிப்போச்சாம். அப்றம் அந்தப் பொண்ண ஆஸ்ப்பிட்டல் கூட்டிகிட்டு போயிக் கட்டுப் போட்டுக்கிட்டு அந்தக் கட்டோடவே போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளயின்ட் குடுக்கப் போனாங்கலாம். அந்தப் பொண்ண, அவிங்க அப்பா அம்மாவெல்லாம் கூட்டிகிட்டு ஆஸ்பத்திரிக்கு, ஸ்டேஷனுக்கு போறதுக்கு வண்டி எடுத்துட்டு அந்த கிரிப் பய கூப்டான்னு இவன் போனானாம். சும்மாத் தொணைக்குத் தா நா போன மாமான்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்த நயிட்டே எங்கக் கிட்ட சொன்னான்”
“தொண என்னா மாப்ளத் தொண வேண்டியிருக்கு? ஆஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போனான் ரைட்டு. போலீஸ் ஸ்டேஷன் ல நமக்கு என்னா வேல சொல்லுங்க?”
மாமாவின் பேச்சில் கோபம் கூடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதைக் குறைப்பதற்காக கார்த்தி, “ஆமா மாமா, எங்கக் கிட்ட சொன்னப்பவேக் கிருத்திப் புடிச்சி நல்லாத் திட்டிவுட்டா. நானும் ரெண்டுப் போட்டுட்டன். அப்றம், ‘இல்ல ஏதோத் தொணக்கிக் கூப்ட்டானேன்னுதா போன. நா ஒரு ஓரமா போயி நின்னுட்டுத்தா இருந்த. வேற ஒன்னுமில்ல’ அப்டீனு சொன்னான்” என்றான்.
“வேற ஒன்னுமில்லையாமா ? உங்கக் கிட்ட அப்டிச் சொல்லியிருக்கான். மாப்ள எ மருமவன் எப்பேர்ப்பட்ட ஆளுங்கிறீங்க? இவன் தா ஸ்டேஷன் ல போயி கம்ப்ள்ளையின்ட் எழுதிக் குடுத்திருக்கான். அந்தப் பொண்ணோடப் புருசங்காரனப் போலீஸ் கூட்டிட்டு வரச் சொன்னப்போ இவன் தா போயி கூட்டிட்டு வந்திருக்கான். அதுபோக போலீசு கேச எடுத்துக்க பணங்கேட்ருக்கு. அதயும் இவன் தா குடுத்திருக்கான். எல்லாத்துக்கும் மேல ஸ்டேஷன் ல போலீஸ் பேசிட்டிருக்கும்போதே அந்தப் பிள்ளையோடப் புருசங்காரன அடிக்கக் கை ஓங்கியிருக்கான். அந்த ஸ்டேஷன்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு போலீஸ்காரரா இருக்காரு. அவரு சொல்லித்தா எனக்கு இந்த வெவகாரமெல்லாந் தெரிஞ்சது. அன்னிக்கு அந்த இன்ஸ்பெக்டருக்கு இவன் மேல பயங்கரக் கோவமாம். அந்த ஆளு சொன்னாரு. உங்க மருமவ போலீஸ் ஸ்டேஷன்லயே வந்து பெரிய நாட்டாமத்தனம் பண்ணிட்டுடப்போயிட்டானு. அவரு அப்டி சொல்றப்ப என் மானமேப் போச்சி”
கேசவ மாமா உணர்ச்சிப் பெருக பேசி முடித்து அமைதியடைந்தார். கார்த்தியும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
கேசவ மாமாவுக்குத்தான் மானம் எவ்வளவு முக்கியம்? சொல்லப்போனால் அவர் வாழ்வதற்கு மானமும் கௌரவமும் உதிரத்தையும், சதையையும் போலத் தேவையாயிருந்தது. அவ்விரண்டுக்கும் ஏதாவதொன்றெனும்போது அவர் இப்படி உணர்ச்சிப் பெருக பேசுவதில் புதுமை எதுவுமில்லை. அதேப்போல, அவ்விரண்டும் கலங்கப்படும் நிலைமை தன் கை மீறிப் போவதாய் அவர் உணர்ந்தாரானால் வெறுமனேப் பேசி மட்டும் கொண்டிருக்க மாட்டார். எதையாவதுச் செய்து அவற்றைக் காத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவர். ஊர்க்காரர்களுக்கும் உறவுக்காரர்களுக்கும் மத்தியில் அவர் இவ்வளவு திமிராக இப்போது இயங்கிக்கொண்டிருக்க, எப்போதோ பறிபோயிருக்க வேண்டிய மானத்தையும் கௌரவத்தையும் அந்தச் சாமர்த்தியத்தால் மீட்டுக்கொண்டது தான் காரணம்.
ஒரு பத்து பதினோரு வருடங்களுக்கு முன்பு இது நடந்தது. கேசவ மாமாவுக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் செல்வம். அவனுக்குத்தான் திருமணம் நடக்கவிருந்தது. இளையவன் வாசு. அவன் வெளியூர்க் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். கல்லூரி விடுதியிலேயேத் தங்கியுமிருந்தான். அண்ணன் திருமணத்திற்காக வேண்டி, திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னமே ஊருக்கு வந்தான். ஊருக்கு வந்தவன் அவன் மட்டும் வரவில்லை. உடன் படிக்கும் ஒரு பெண்ணையும் கூட்டி வந்திருந்தான்; தோழியாம். அப்படித்தான் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். வாசு அந்தத் தோழமைப் போர்வைக்குள் அவர்களின் காதலை மறைக்க முடியுமென நம்பியிருக்க வேண்டும். காதல் அப்படி ஒளிந்திருக்கக் கூடியதா என்ன? காதலிப்பவர்களுக்குத்தான் தங்களைத் தாண்டிய உலகம் நினைவிலிருப்பதில்லை. மற்றவருக்கும் அப்படியா? இந்த உலகத்திற்கு காதல் ஒரு வேடிக்கை. அதை நிகழ்த்துபவர்களின் நாணத்திலும், புன்சிரிப்பிலும் பகுதியளவையேனும் அதன் பார்வையாளர்களுக்குக் கடத்த அந்தக் காதல் ஒருபோதும் தவறுவதில்லை. அப்படித்தான் வாசுவையும் அந்தப் பெண்ணையும் பார்த்து, மறைமுகமாக நாணி ஊரேப் புன்னகைத்துக் கொண்டிருந்தது.
திருமண நாளன்று மணமகன் செல்வத்தின் பெயரை விடவும் வாசுவின் பெயர் தான் அதிகம் முணுமுணுக்கப்பட்டது. அந்தத் தோழியின் பெயரையும் சேர்த்துத் தான். அந்த இரு சோடி விழிகளின் நேர்த்தியானக் காதல் மொழியினையும், வெட்கச் சிரிப்புகளையும், இரகசியச் சந்திப்புகளையும் பொறுக்கி எடுத்துத்தான் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எனக் கல்யாண வீடே மென்று கொண்டிருந்தது. ஒரு சிலர் மட்டும் வெள்ளைச் சட்டையும் பட்டு வேட்டியுமாய்த் திரிந்து கொண்டிருந்த கேசவ மாமாவைத் தேடிப் போய் மென்றதைத் துப்பிக்கொண்டிருந்தனர். அந்தச் சிலரில் இராசாத்தியும் ஒருத்தி. இராசாத்தி கேசவ மாமாவின் வீட்டம்மாள் ஜீவரத்தினத்தின் தம்பிப் பொண்டாட்டித் தான்.
“என்னாண்ணே, செல்வம் தாலிக் கட்னவுடனே வாசுவயும் ஒக்கார வெச்சிரலாம் போலிருக்கே. எல்லாத்துக்கும் ரெடியாத் தான் இருப்பான் போல. அந்தப் பிள்ளயப் பாத்தா நம்ம சனமாட்டந் தெரியிலியே. நா ஒரு லூசு. உங்குளுக்கா இப்ப வரைக்குந் தெரியாம இருக்கு. நீங்க தா மொக வெட்ட வெச்சே மூலம் இன்னதுன்னு கணிக்கரவராச்சே. அது ஒன்னுமில்லண்ண எங்கவூட்டுப் புள்ள காதலிச்சானு தெரிஞ்சதுமே உங்க மான ஈனமெல்லா பறந்து போச்சு…. ஆச்சா போச்சா னு அந்தக் குதி குதிச்சீங்க. இப்ப வாசுவும் இழுத்துட்டு வந்து தா நிப்பாம்போலயே. எம்புள்ள மாசமா இருக்கான்னு நா வீட்ல கூட்டிட்டு வந்து வெச்சிருக்க. கல்யாணத்துக்கு அழைக்க வந்தப்போ என்ன கேட்டீங்க?’ சாதியக் கெடுத்த புள்ள ஒன்னு போதாதா? பேரப் புள்ளயுங் கேக்குதா?’ னு கேட்டிங்கில்ல. கேட்டுட்டு ஒரு சிரிப்பொன்னு சிரிச்சீங்களே. அந்தச் சிரிப்பெல்லா இப்பவும் இருக்குதான்னு பாக்கத் தா வந்த. எங்களச் சொன்னீங்க இப்ப உங்க வீட்டுக்கு வரதுக்கு எவ்ளோ நாளாச்சு? பொறக்காதயாப் போயிரும் வாசுவுக்குப் புள்ள? உங்கப் பேரப் புள்ள. அப்பயும் எங்கக் கிட்டக் கேட்டதயேத் தா கேப்பீங்களோ? நாங்கதா எதிர்ல நிக்கரம் ஈசியா கேட்டுட்டீங்க. அப்ப உங்கள நீங்களே கேட்டுக்க வேண்டியிருக்கும். நாக்க உள் பக்கம்மத் திருப்ப முடியுமான்னு பாத்துக்கோங்க. அது அவ்ளோ லேசா இருக்காது”
இராசாத்தி அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது கேசவ மாமா மட்டும் தான் அவளுடன் இருந்தார். அவளுக்கு எதிரில் நின்றபடி , அவளைப் பார்க்காமல் எங்கோ இருந்தத் தூணை வெறித்தவாறு ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே, வாசுவும் அந்தப் பெண்ணும் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டிருந்தனர். மூன்று மாதங்கள் கழிந்து, இறுதியாண்டின் பருவத் தேர்வுகளை முடித்துக் கொண்டு வாசு வீடு திரும்பினான். கேசவ மாமா, வாசுவின் நடவடிக்கைகளை கவனித்தபடி இருந்து வந்தார். அவன் பொழுதுகளை முழுக்க அலைப்பேசியுடனேயே செலவிட்டான். தினமும் நண்பர்களுடன் அரட்டை; அந்த அரட்டையினூடே எப்போதாவது வேலையில் சேர்வது குறித்தக் கலந்துரையாடல். ஆனால், வெகுநேரம் அந்தப் பெண்ணுடன் தான் பேசிக்கொண்டிருந்தான். அதையும் கேசவ மாமா கவனிக்காமல் இல்லை. இப்போது அந்தப் பெண்ணை வாசு தினமும் சந்திக்க வாய்ப்பில்லாததால், அந்தப் பிரிவு தன் மகனை தன்னிடம் மீட்டுக் கொடுக்கும் என கேசவ மாமா நம்பினார்.
இப்படியே நான்கு மாதங்கள் கழிந்தன. கேசவ மாமா வற்றும் வற்றும் எனக் காத்துக் கிடந்த காதல் கிணறு வற்றவேயில்லை. மாறாக, ஊற்றெடுத்தது. வாசு ஏதேதோ நண்பர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு அடிக்கடி வெளியில் சென்று வரத் துவங்கினான். திடீரென ஒரு நாள் சுந்தரின் அம்மா அதாவது கேசவ மாமாவின் தங்கை அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அவர் தான் வரச் சொல்லியிருந்தார். அண்ணனும் தங்கையுமாக ஏதோக் கோவிலுக்கு போய் வருவதாக எல்லோரிடமும் கூறிவிட்டு விடியற்காலையில் கிளம்பிச் சென்றவர்கள் நள்ளிரவு தான் வீடு திரும்பினர். போகும்போது தன் கருத்த குழலினூடே புதியதாய் முளைத்த சிறு சிறு நரை முடியுடன் போனவர், திரும்பி வரும்போது தன் தலை முடியை வழித்தபடி மொட்டையாய் வந்தார். வாசுவின் காதலையும் அந்த மயிரென வழித்திருந்தார். நேரே வாசு படித்தக் கல்லூரிக்குப் போன அண்ணனும் தங்கையும் அந்தப் பெண்ணின் பெயர் பாடப்பிரிவு எல்லாம் சொல்லி விசாரித்து முகவரி வாங்கி அந்தப் பெண் வீட்டுக்கே சென்றிருந்தனர். இவர்கள் அங்குச் சென்ற நேரம் அந்தப் பெண் வீட்டில் இல்லாதது இவர்களுக்கும் வசதியாக போய்விட்டிருந்தது. கேசவ மாமாவும், சுந்தரின் அம்மாவும் என்னவெல்லாமோப் பேசினர். அந்தப் பெண் வீட்டாரும் இவருக்கிணையான கெளரவம் பிடித்தவர்களாம். இவர்களின் பேச்சைக் கேட்டு, முகம் சிவந்து வீங்கிப்போய் இனிமேல் அந்தப் பெண்ணிடமிருந்து எந்த அழைப்பும் அவர் மகனுக்கு வராதென்றும், இவர்கள் இங்கு வந்த சுவடேத் தெரியாமல் பார்த்துக் கொள்வதாகவும் வாக்குக் கொடுத்து அண்ணனையும் தங்கையையும் வழியனுப்பி வைத்திருந்தனர்.
கேசவ மாமா மொட்டைப் போட்டு வந்ததிலிருந்து எண்ணி மூன்றே நாள். வாசுவின் நடத்தைகளில் பெருவாரியான மாற்றங்கள். அவன் மற்றவர்களுடனானத் தொடர்பைக் குறைத்துக் கொண்டான். எந்நேரமும் அறைக்குள்ளேயே தாழிட்டுக் கொண்டு படுத்திருந்தான். சாப்பிட மட்டும் வெளியே வருபவன் எந்திரம் போல சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்வான். மனிதர்களைப் போல அவன் நீரையும் ஏனோ ஒதுக்கினான். தாகம் இருந்தும் நீரருந்தாமல் வேண்டுமென்றே தவிர்த்தான். உதடுகள் நனையுமட்டும் அவ்வப்போது ஒரு விழுங்கு அவ்வளவுதான். மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு தரமென தான் குளிக்கவே செய்தான். காதல் தோல்வியில் மகன் அப்படியெல்லாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கேசவ மாமா உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் மனைவி ஜீவரத்தினம் அவரிடம், அவனிடம் பேசும்படி கேட்ட போதெல்லாம்,
“நா என்னத்த அவங்கிட்டப் பேசறது. வேலையப் பாரு. அதெல்லா ஒன்னும் ஆவாது உம்மவனுக்கு”, என்பார்.
ஆறு மாதங்களுக்குப் பின் தன் நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் ஒரு வேலைப் பார்த்துக் கொடுத்து வாசுவைப் போகச் சொன்னார். முதலில் மறுத்தவன், பின் அவனாகவே போய் வரத் துவங்கினான். பின் இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து சுய சாதியிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து வைத்து திருமணம் என்றார். அதற்கும் முதலில் வேண்டாமென்றான்; பின் சம்மதம் தெரிவித்து மணம் முடித்துக் கொண்டான். ஒன்றரை வருடத்தில் கேசவ மாமாவின் பேரக் குழந்தை அவர் கைகளில் இருந்தான். குழந்தைப் பிறந்ததும் முதல் அழைப்பை இராசாத்திக்குத் தான் போட்டார் கேசவ மாமா. குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து இராசாத்தி மருத்துவமனைக்கே பார்க்க வந்திருந்தாள்.
குழந்தையைப் பார்த்துவிட்டு கேசவ மாமாவிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட இராசாத்தி வந்த போது, அவர் கையில் மூத்த மகன் செல்வத்தின் குழந்தையுடன் நின்றிருந்தார். அவளைப் பார்த்ததும் “வா இராசாத்தி கெளம்பீட்டயா. இரு உன் கிட்ட ஒரு விசயம் பேசணும். ஒரு தாத்தனா இப்பிடி சொல்லக் கூடாது. இருந்தாலும் உன் கிட்ட மட்டுஞ் சொல்ற. தா… கையில இருக்கானே மூத்தவன் மவன் இவன விட உள்ள படுத்திருக்கானே வாசு மவன் அவன் தா கொஞ்ச ஒசத்தி எனக்கு. இவன் பொறந்தப்போ ஒரு வெள்ளி அரணாக்கொடி எடுத்துப் போட்டன். ஆனா அவனுக்கு தங்கச்செயினு. பாத்திருப்பியே கழுத்துல. மூத்தவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் என் மேல சலுப்பு; சின்ன பேரனுக்கு மட்டுஞ் செய்யறான்னு. பின்ன இருக்காதா ரெண்டு பவுனில்ல. இதைச்சொல்லிவிட்டு இராசாத்தியின் முக அசைவுகளை பார்த்தபடியேக் கையிலிருந்த மூத்தப் பேரனுக்கு முத்தமிட்டுவிட்டுத் தொடர்ந்தார். ‘அப்பறமா இவனுக்கும் ஒன்னு எடுத்து போட்ற வேண்டியதுதா இப்ப என்ன? அவன் மேல என்னப் பிரியம்னா ராசாத்தி வேற ஒன்னுமில்ல அவனப் பாக்கறப்பல்லாம் உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம்; அத விட நிம்மதினு கூட சொல்லலாம். அவன் எனக்கு நீ ஜெயிச்சிட்டனு நியாபகப் படுத்திகிட்டேயிருக்கான்; ஒரு பரிசுப் பொருளாட்டம். அதுக்குத் தா அவனுக்கு அந்தத் தங்கச்செயினு பரிசு. என்ன ஜெயிச்சது? என்னப் பரிசு? உனக்குப் புரியும்னு நெனைக்கற. இருந்தாலுஞ் சொல்றக் கேட்டுக்க. அன்னைக்கு செல்வங் கல்யாணத்தப்ப நீ சொன்ன மாரி வாசு விசயத்துல நடந்திருந்தா என்ன ஆயிருக்கும். இந்நேரம் ஒன்னு நா சுடுகாட்ல இல்லனா ஜெயில்ல இருந்திருப்ப. நல்ல படியா அப்டி எதும் நடக்க நா வுடுல. அதப் பத்தி தா சொல்லிக்கிட்ருக்கன். நம்ம சாதியும் அந்தச்செயினு மாரிதான் ராசாத்தி, ஒன்னு தொட்டு அடுத்தொன்னுனு இருக்கனும். அது ஒரு பலம்; தனித்தெம்பு. நடுவுல கலப்பு வந்துட்டா அந்த பலம் போயிரும். அப்பிடித் தப்பிக் கலக்க இருந்த எங்குடும்ப வித்தத் தா, நா சுதாரிச்சி மீட்டெடுத்து உள்ள மெத்தையில படுக்க வெச்சிருக்கன். ஆனா என்ன ? உன் மவ விசயத்துல தா, எப்பிடியோ தப்பிரிச்சி. அப்பக் கூட ஒன்னும் பண்ண முடியாதயில்ல. உம்புருசந்தா உடுல. மவதா உசுருன்னுட்டான். நானும் எம் பொண்டாட்டி வழி ஒறவுதானேனு லேசுல உட்டுட்டன். ஆனா எங்கப்பமூட்டுவழி ஆணோ பொண்ணோ எப்பயும் நா இருக்குறவர உடமாட்ட. சேரி பழயக் கதயெல்லாம் பேசி எதுக்கு ஆவுது. பாத்து போயிட்டு வா இராசாத்தி. “
இவ்வளவையும் கேசவ மாமா இராசாத்தியிடம் பேசி முடித்துவிட்ட பிறகும் எதுவுமே பதில் பேசாமல் இராசாத்தி போய் விட்டாள்.
கேசவ மாமாவின் அந்த வெற்றிச் சரித்திரக் கதையை, ஏதோ அந்த வேம்பும் கேட்டுக்கொண்டிருந்ததைப் போல, அது மெல்ல தன் தலையை ஆட்டிக் கொண்டது. அதனால் எழுந்த ஒரு அவசரத் தென்றல் வேம்படியில் இருந்த அந்த இரு உடல்களையும் தழுவிச் சட்டென நகர்ந்தும் கொண்டது.
“மாப்ள…” என்று ஏதோக் கேட்க கார்த்தியிடம் கேசவ மாமா வாய் திறந்தபோது,
“கார்த்தி சாப்ட்டு வந்து உக்கார வேண்டியது தானு”, என்று
சொன்னபடியே தன் கைகளில் ஒரு நாற்காலியை ஏந்தியபடி கிருத்திகாவும், கார்த்தியுடனும் கேசவ மாமாவுடனும் அந்த வேம்படியில் வந்தமர்ந்து கொண்டாள். கிருத்திகா கேட்டதற்கு கார்த்தியிடம் எந்த எதிர்வினையும் இல்லாததால் கேசவ மாமா,
“வா மருமவளே வா ” என்றபடித் தொடர்ந்தார்.
“இப்ப தா மாப்ள கிட்ட அந்தச் சின்னசாமி எதாச்சுந் தகவல் சொன்னானானு கேக்கலாம்னு வாயெடுத்த அதுக்குள்ள நீயும் வந்துட்ட. அந்தாளு ஏதாச்சும் சொன்னானா? இல்ல காச வாங்கீட்டு அப்பிடியேக் கெட்டப்புல போட்டானா?”
கேசவ மாமா அப்படிக் கேட்டதும் அதுவரையிலும் அவளுக்குள்ளேயே ஒரு ஓரமாகத் துயில் கொண்டிருந்த சோகம் திடீரென விழித்துக்கொண்டதால், அவளுக்குக் கண்ணீர் முட்டி விழிகளின் மேல் திரையிட்டுக் கொண்டது. தேங்கி நின்ற கண்ணீரோடு அவள் கேசவ மாமாவுக்கு பதில் சொல்லத் தொடங்கியிருந்தாள். கார்த்தியும் அங்கு தான் இருந்த போதிலும் கிருத்திகாவுக்கும், கேசவ மாமாவுக்கும் இடையேத் தொடங்கிய அதன் பிறகான உரையாடலில் கார்த்தியின் மனம் செல்லவில்லை.
கிருத்திகாவின் கண்ணீர்த்திரை அவள் விழியில் பரந்து கிடந்த வெண்மைக்கு நடுவேயிருந்த வட்டத்தின் மெல்லியப் பழுப்பு நிறத்தைத் தெள்ளெனக் காட்டிக் கொண்டிருந்தது. அக்காவின் அதே பழுப்புக் கண்மணிகள் தான் சுந்தருக்கும். மிக மெல்லிய, யாரும் உற்றுக் கவனிக்காதவரை கண்டுபிடிக்க முடியாத பழுப்பு நிறம். கிருத்திகாவினுடையதை கார்த்தி பலமுறைப் பார்த்திருக்கிறான். கூடல் பொழுதுகளில் ஆசை பொங்க, அவன் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியபடி அவள், இவன் உதடு சுவைக்கும் சமயங்களிலெல்லாம் அகலத் திறந்திருக்கும் அவள் விழிகளின் மணிகளின் பழுப்பை அவன் பார்த்ததுண்டு. ஆனால், சுந்தருக்கும் அந்த உருவ ஒற்றுமை இருக்குமென்பதை நேற்றைய இரவு தான் கவனிக்கலானான். இப்போது கண்ணீர்த்திரைக்குள் தெரிந்து கொண்டிருந்த கிருத்திகாவின் பழுப்பு கண்மணிகள் கார்த்திக்கு சுந்தரையும் நேற்றைய இரவையுமே நினைவூட்டிவிட்டிருந்தன.
இன்றைய காது குத்து விழாவையொட்டி நேற்றைக்கு முன்தினத்தின் இரவன்றே சுந்தர் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். சுந்தரின் அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அம்மாவுக்கு முன்பே அப்பா மறைந்து விட்டிருந்தார். கடந்த இரண்டு வருடங்களாகவே சுந்தர் அவர்களிருந்த அதே வீட்டில் தனியாகத்தான் இருந்து வருகிறான். கிருத்திகாவின் வீடு, சுந்தர் வீட்டின் ஊருக்குப் பக்கத்து ஊர்தான். அக்காவும், மாமாவும் பலமுறைக் கேட்டுப் பார்த்தும் அவர்களுடன் வந்து தங்கிக்கொள்ள சுந்தர் சம்மதிக்கவில்லை. எப்போதாவது சிறப்பு தினங்களுக்கு வந்தால் ஓர் இரண்டு தினங்கள் தங்கி அக்காப் பிள்ளைகளுடன் நேரத்தைக் கழித்துப் போவான். இப்போதும் காதுகுத்துக்காகத்தான் நேற்றைய முன்தினம் இரவு வந்திருந்தான். கார்த்தியின் அப்பாவும், அம்மாவும் கூட நேரடியாக கோவிலுக்கே வந்து விடுவதாகச் சொல்லி விட்டதால், சுந்தரைத் தவிர்த்து வேறெந்த உறவுக்காரர்களும் கார்த்தியின் வீட்டிற்கு முன்பே வந்திருக்கவில்லை. இரு படுக்கையறைகள் கொண்ட அவ்வீட்டில் சுந்தர் வரும் சமயங்களிலெல்லாம் அவனும் கார்த்தியும் ஒரு அறையிலும், கிருத்திகாவும், பிள்ளைகளும் இன்னொரு அறையிலும் படுத்துக்கொள்வதுப் பழக்கம்.
அப்படி, நேற்று கார்த்தியும் சுந்தரும் இருந்த அறையில் இரவு நேரத்திற்கான சிறிய குண்டு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, சுந்தர் படுக்கையில் அவன் கைகளில் அலைப்பேசியை ஏந்தியபடி புலனத்தில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். எதிர்புறத்திலிருந்து செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணமிருக்க சுந்தர் எல்லாவற்றிற்கும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த அறை இருட்டில் அவன் முகத்திற்கெதிரே அலைப்பேசி வீசிய வெளிச்சத்தில்தான் அவனும் அக்காவை ஒத்தப் பழுப்புக் கண்மணிகளைக் கொண்டிருப்பதை படுக்கையில் உடன் படுத்திருந்த கார்த்தி கவனித்திருந்தான். கொஞ்ச நேரம் சுந்தரின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் பின் சற்றுத் தயங்கி,
“சுந்தரு கொஞ்ச நேரம் பேசீட்டிருக்கலாமா?”, என்றான்.
கார்த்தி அப்படிக் கேட்டதும் உடனே புலனத்திலிருந்து வெளியேறி அலைப்பேசியை பொத்தானை அழுத்தி அணைத்து படுக்கையின் அருகிலிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு கார்த்தியைப் பார்த்தபடி திரும்பிக் கொண்டான், சுந்தர். அலைப்பேசி அடித்துக் கொண்டிருந்த வெளிச்சமும் இல்லாமற்போனதால் அந்த இரவு நேர சின்ன குண்டு மின்விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் தெளிவற்றுத் தெரிந்த முகங்களை ஒருவரையொருவர் பார்த்தபடி சுந்தரும், கார்த்தியும் படுத்துக்கொண்டு பேசத் தொடங்கினர்.
“சொல்லு மாமா என்ன விசியம்?”
“ஒன்னுமில்ல அந்தப் பொண்ணு யாரு?”
“எந்தப் பொண்ணு?”
“இது தெனமும் நடக்குதா என்னன்னு எனக்குத் தெரீல. ஆனா, போன மூனு மாசமா உங்கூரு பஸ் ஸ்டாப்ல நீ ஒரு பொண்ணு கூட நிக்கறதையும், அந்தப் பொண்ண சிரிக்க வெச்சி பேசிகிட்டிருக்கறதையும் நா ஒரு நாலு வாட்டியாச்சும் பாத்திருப்பேன் ”
“அட உமாவ சொல்றியா?”
“அந்தப் பொண்ணு பேரு உமாவா?”
“ஆமா எங்கூட வேல செய்யிற பொண்ணு”
“அது மட்டுந்தானா?”
“ஃபிரெண்டு”
“அவ்ளோதானா?”
“ஃபிரெண்டு தா மாமா. நீ நெனைக்கற மாதிரி ஒன்னுமில்ல”, இப்படிச் சொல்லுகையில் சுந்தர் வெட்கிச் சிரித்துக் கொண்டான்.
ஆனால், கார்த்தி இறுக்கம் தளர்த்தாமல் தொடர்ந்தான்.
“உண்மையா சொல்லனும்னா, நா நெனைக்கற மாதிரி இருந்தா எனக்கு சந்தோஷம் தா சுந்தரு. நானே வந்து அவுங்க வீட்ல பேசுற”
“இல்ல இல்ல. அப்பிடி எல்லாம் ஒண்ணுமே இல்ல. யாரும் யார் வீட்லயும் வந்து பேச வேண்டியதிருக்க்காது”
“யாரும் வேண்டா நாங்க ரெண்டு பேரும் பஸ் ஸ்டாப்லயே பேசிக்கிட்டிருந்துக்கரம்கிரியா சுந்தரு?”
“இல்ல அப்படி இல்ல மாமா. வெறும் ஃபிரெண்டு தாணு சொல்ற”
“பஸ் ஸ்டோப்போட சேரியா? இல்ல ஃபிரெண்ட வீட்டுக்கு கூட்டிட்டு போயீ பேசரப் பழக்கமுமிருக்குதா சுந்தரு?”
“ஐயோ மாமா லூசு மாறி பேசாத மாமா. அப்பிடி எதுவுமே இல்லனு நாந்தா சொல்றன் ல என்ன நம்ப மாட்டியா நீ? ஆறர மணிக்கு ஆஃபீஸ் முடிஞ்சிறும். அவுளுக்கு ஏழு மணிக்கு தா பஸ்ஸு. அதனால அவ பஸ்ஸு வர வரைக்கும் பேசிட்டிருப்போம். அப்பறம் நா வண்டிய எடுத்துட்டுக் கெளம்பீருவ. அவ்ளோ தா”
“ஒ.. அவ்ளோ தா.. என்ன அந்தப் பொண்ணு பேரு? உ.. ஆஹ் உமாவுக்கும் உனக்கும் இருக்கறத் தொடர்பு அந்த பஸ் ஸ்டாப் ஓடயே முடிஞ்சிறும் அப்பிடி தானு சுந்தரு?”
“உம்… யார் சொன்னா? இப்ப நம்ம பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி கூட அவ கூட தா வாட்ஸ்ஆப் ல பேசீட்டிருந்த. வாட்ஸ்ஆப் என்ன? நாங்க டெய்லி கால் பண்ணி பேசிட்டு தானிருக்கோம். அப்பப்ப வீடியோ கால் கூட பேசுவமே”
“உங்குளுக்குள்ள ஒன்னுமே இல்லைங்கற அப்பறம் அப்படி என்ன பேசுவீங்க?”
“எதுவாச்சும் தா. ஆஃபீஸ், அவுங்க வீடு, நெலமை. இல்ல நம்ம வீடு, சூழ்நிலை, அதுவும் இல்லாட்டி பஸ் ஸ்டாப் ல நிக்கற பாக்கறவங்களப் பத்தி இல்லனா எதுவாச்சு பத்தி தா. ரெண்டு மனுசங்க பேசிக்கறதுக்கு விசியம் கெடைக்கரதாப் பஞ்சம்”
“ம்ம்ம்…”
“அப்பாடா ஒரு வழியா உங்கேள்வியெல்லாம் முடிஞ்சிருச்சா?”
“இன்னும் இல்ல சுந்தரு”
“வேற என்ன மாமா?”
“பஸ் ஸ்டாப்ல உன்னையும் உன் ஃபிரண்டையும் நா இல்லாம, கிருத்தியோ இல்ல, உனக்கு நல்லாத் தெரிஞ்ச வேற யாராச்சும் பாத்து இருந்தாங்கன்னா?”
“பார்த்து இருந்தாங்கன்னா… கிருத்தி பாத்தா என்ன? இப்ப உங்கிட்ட சொன்ன மாரியே அவ கிட்ட சொன்னா செரிங்கப்போறா. வேற யாராச்சும் பாத்தா? அதே தா. அவுங்குளுக்குன்னு என்ன ஸ்பெஷலா பொய்யா சொல்ல முடியும்?”
“சேரி கிருத்திய உட்ரு மத்தவங்க நீ ஃபிரெண்டுனு சொல்றத நம்புவாங்கனு நெனக்கிரியா?”
“அதைப் பத்தி எனக்கு அக்கற இல்ல மாமா”
“உனக்கு கல்யாணம் ஆவுணும்னு அக்கற இருக்கும்னு நம்பர சுந்தரு”
“நெரயவே இருக்கு மாமா”
“இனிமேட்டுக்கு பொண்ணு குடுக்கறேன்னு வரவங்க கூட நீ இப்பிடி பஸ் ஸ்டாப்ல ஒருத்தியோட நின்னு பேசிட்டு இருக்கறது தெரிஞ்சா அப்பிடியே ஓடீருவாங்க”
“ … ”
“உங்கம்மா மட்டும் இந்நேரம் உயிரோட இருந்திருந்தா இப்பிடி ஏழு மணி வரைக்கும் பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணோட நின்னு பேசிட்டு இருந்திருப்பியா?”
“ … ”
“சேரி அந்தப் பொண்ண பத்தி உடு சுந்தரு. வேற ஏதாச்சும் பொண்ணு உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு போய் அவங்க வீட்ல பேசலாம்”
“ … ”
“என்னடா எதக் கேட்டாலும் அமைதியாவே இருக்க உங்கிட்ட பதில் எல்லாந் தீந்து போச்சா என்ன?”
“உம்… இல்ல மாமா நீ இப்ப கேட்டதுக்கு அப்பறந்தா எனக்கே ஒரு விசயம் புரிய வருது”
“என்ன?”
“நீ சொன்ன மாரி இந்நேரம் அம்மாவோ இல்ல ஒரு பேச்சுக்கு அப்பாவோ உயிரோட இருந்திருந்தா உமாகிட்ட நா இப்பிடி நின்னு பேசறது மட்டும் இல்ல, அம்மா காலமானதுக்கப்பறம் இந்த ரெண்டு வருஷமா நான் தனியா இருக்க ஆரம்பிச்சதிலிருந்து பண்ண நெறய விசியத்த என்னால பண்றது இல்ல, பண்றதுப் பத்தி நெனச்சு கூட பாத்து இருக்க முடியாது”
“அப்படி என்ன என்னத்தடா பண்ணி வெச்சிருக்க?”
“பெருசா ஒன்னுமில்ல. எல்லாஞ் சின்ன சின்ன விசியந்தான். டக்குனு சொல்லனும்னா … ஒரு நாளு என் ஃபிரெண்டு ஒருத்த வண்டீல போயி எங்கயோ உழுந்துட்டான். எவ்ளோ அடிங்கற மாமா?, நெறையா ரத்தம் போயிரிச்சி. கையி காலு எல்லாம் கட்டு. அவன ஒரு மாசத்துக்கு ஹாஸ்பிட்டல்ல வெச்சி இருக்கணும்னு சொல்லீட்டாங்க. நம்ம ஜி.எச் ல தா. ரெண்டு கைலயும் பயங்கர அடி; தூக்கவே முடீல அவனால. சாப்பிடவும் முடியாது; கால் கழுவவும் முடியாது. எல்லாத்துக்கும் இன்னொருத்தர் வேணும். அவனுக்கு அம்மா, அப்பா மட்டும் தா; கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; கல்யாணமும் ஆகல. அவுங்கம்மா பாவம் தனி ஆளா அங்க இருந்தாங்க. அப்ப நா அவுங்க அம்மாவப் பேசி சம்மதிக்க வெச்சி, என்னோட லீவு நாளுல எல்லாம் அவுங்கள மாத்தி வுட்டுட்டு அவன் கூட ஹாஸ்ப்பிட்டல்ல இருந்த. எங்க அம்மா இருந்திருந்தா இது முடிஞ்சியிருக்குமா? முடியாது”
“ … ”
“எங்க ஊர்ல, கீழ ஒரு பெரியவரு ரொம்ப வருசமா இருந்தாரு; எப்பிடியும் தொண்ணூறு கிட்ட இருக்கும் வயசு; தனியா தா இருந்தாரு. திடீர்னு காச்சல் வந்து செத்துப் போய்ட்டாரு. வைரஸ் காச்சல்னாங்க. எங்க ஊருத் தலைவரு தா செலவெல்லாம் ஏத்துக்கிட்டு காரியம் லா பண்ணாரு. எல்லாம் முடிஞ்சி கொண்டுபோறதுக்கு மூனாளு இருந்துச்சி. கடைசீ ஒரு ஆளுக்கு, நா போ, நீ போனு ஒரேக் கொழப்பம். எல்லா வீட்லயும் பொம்பளைங்க அவுங்க ஆம்பளைங்கள போக்கூடாதுங்கறாங்க. கேட்டா என்னா நோவுண்ணே தெரில புள்ளைங்களுக்கு ஏதாச்சுன்னா என்னாப் பண்றதுங்கிறாங்க. எனக்கு அப்பிடி ஒன்னும் தொத்திக்குமுன்னு தோணல. அப்பறம் நா போயி ஒரு கை புடிச்சிகிட்ட. எங்க அம்மா இருந்தா இந்நேரம் வுட்ருக்குமா?”
“ … ”
“சேரி இதெல்லாம் கூட அம்மாவோ, அப்பாவோ இல்ல யாரோ சொல்லி நம்மநாள பண்ண முடியாம போறதுன்னு வையி. ஆனா, நம்மளே நம்மள தடுத்துக்கறதும் செலது இருக்கு. அது என்னான்னா… அதா உனக்கு கூடத் தெரியுமே. அன்னிக்கு என் ஃபிரெண்டு கிரி கூட போலீஸ் ஸ்டேஷன்ல நடந்தது. அம்மா இருந்திருந்தா அன்னைக்கு அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட அப்பிடி கண்டீப்பா எதுத்துப் பேசி இருக்க மாட்டேன்; அந்த ஆள் முன்னாடியே அந்தப் பிள்ளையோட புருசங்காரன அடிக்கக் கை ஓங்கியிருக்க மாட்டேன். அந்தத் தைரியம் எனக்கு இருந்திருக்காது. நமக்காக வீட்ல யாரோ இருக்காங்கற நெனப்பு எந்நேரமும் ஒரு உறுப்பு மாறி கூடவே இருக்கும். அதோட வேலயே இந்த மாதிரி தைரியம் தேவப்பட்ற எடத்துல பயத்தக் குடுத்து நம்மள பலவீனமாக்கறது தா.”
“என்ன டா சொல்ற தனியாவே சந்தோசமா இருக்கங்கிரியா?”
“தனியா இருக்கறதுல ஒரு சொதந்திரம் இருக்குது மாமா. சந்தோஷம் இருக்குதான்னு கேட்டா எனக்குத் தெரியல. ஆனா, ஒரு குடும்பத்துக்குன்னு என்ன சுருக்கிக்காம பொதுவானவனா இப்பெல்லாம் இருக்க முடியுது. அந்த நெனப்புத் தர நிம்மதி தா, நமக்குன்னு யாரும் இல்லயேங்குற ஏக்கத்த, கடைசீ காலத்துல என்ன செய்யப் போறோம்னு நெனச்சிப் பாத்தா வர பயத்த, எம்மேல எனக்கே அப்பப்ப வரக் கருணய, அது குடுக்கற சோகத்த, லேசான அழுகைய எல்லாத்தயும் கொஞ்சம் தள்ளி வெச்சிப் பாக்க சௌகரியமா இருக்கு…”
“ … ”
கார்த்தியை நேற்றைய இரவின் நினைவுகளிலிருந்து இழுத்துக் கொண்டு வந்து அந்த வேம்படியில் மீண்டும் சேர்த்தது, கேசவ மாமா அழுதுகொண்டிருந்த கிருத்திகாவின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தான் அமர்ந்திருந்த நாற்காலியுடன் முன்னகர்ந்தபோது எழுந்த ஓசைதான். அவள் கண்ணீரைத் துடைத்து விட்டபடியே கேசவ மாமா சொன்னார்.
“அழுவாத மருமவளே, என்னத்துக்கு அழுவுரவ?”
கிருத்திகா சுந்தரின் திருமணம் குறித்து நினைக்கும்போதெல்லாம் துக்கம் பெருக்கெடுத்து அவளை நிரப்பிக் கொள்கிறது. சுந்தருக்கு வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்க, இன்னும் திருமணம் முடிந்திருக்கவில்லை என்பது தான் காரணம். அவனம்மா மரணிக்க ஒரு வருடம் இருக்கும் போதிலிருந்தே வரன் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; தேடல் இன்றைய தேதி வரையிலும் தொடர்கிறது. அந்தத் துக்கம் தாளாமல் தான் அது குறித்து எண்ணும்போதும், பேசும்போதும் இப்படி அழத் தொடங்கி விடுகிறாள்.
அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட கேசவ மாமாவின் கைகளைக் கெட்டியாக பிடித்துக்கொண்டவளாகச் சொன்னாள்.
“இல்ல மாமா எனக்கு பயம் வந்துருச்சு, கடைசி வரைக்கும் சுந்தரு
இப்பிடியே இருந்துருவானோன்னு…”
அவளின் பிடியில், அந்தக் கண்ணீரின் ஈரத்தில், கேசவ மாமா இறந்து போன தன் தங்கையைக் கண்டிருக்க வேண்டும். அந்நேரம் அவரின் மனக்கண் முன்னால் அவரின் தங்கை தோன்றி,
“அண்ண இப்பிடியே எம்புள்ளய வுட்றாதண்ண”, என்று சொல்லி மறைந்திருக்க வேண்டும்.
அவர் மிக நெகிழ்ந்தவராய்,“ அழுவாத… அழுவாத… நாங்கல்லாம் இல்லியா? அப்படி மருமவன உட்ருவமா?”
என மனக்கண்முன் எழுந்து மறைந்த தங்கைக்கும் அழுதுகொண்டிருந்த தங்கை மகளுக்கும் ஒருசேர சமாதானம், சொன்னார். அப்படிச் சொன்னவர் உடனே ஏதோ நினைவு வந்தவராய்,
“இரு அந்த புரோக்கர் கிட்ட நாம்பேசறன்” என்று தன் அலைப்பேசியை எடுத்து அதில் சற்று நேரத்திற்கு முன்பு அவர் கிருத்திகாவிடம் விசாரித்த சின்னசாமியின் எண்ணைத் துழாவி, அழைப்பை விடுத்து, அலைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டார். அழைப்பு மணி நின்று எதிர்முனையில் இருந்து குரல் வந்தது.
“அண்ண சொல்லுங்கண்ண“
“நீதா சொல்லுனும் சின்னசாமி இப்ப வரைக்கும் ஒரு ரூவா கிட்ட வாங்கியிருப்ப இன்னமும் என் மருமவனுக்கு ஒரு எடம் நீ பாக்கலயே”
“பாக்காம இல்லண்ண. எதுவும் நம்ம தம்பிக்கு ஒத்துவர மாட்டேங்குது. அப்பிடி ஒத்து வந்தாலும் ஏதேதோ காரணஞ்சொல்லி தட்டிக் கழிக்கறாங்க”
“அப்பிடி என்னதா கேக்குறாங்க சின்னசாமி? மருமவன் தா முப்பதாயிரம் சம்பாரிக்கறானே வேறென்ன?”
“நீங்க வேறண்ண… இப்பெல்லாம் பையன் சம்பாத்தியத்தக் காட்டி பொண்ணுக் கேக்க முடியாதுண்ண. பொண்ணுங்களும் தா நல்லா சம்பாதிக்குதுங்களே. நம்ம தம்பிக்கு செட் ஆன ஜாதகத்துல ரெண்டு மூணு பிள்ளைங்க நம்ம தம்பியோட ஜாஸ்தி சம்பளம் தா.”
“ஓகோ காலம் மாறிப்போச்சா?”
“அட அத ஏங்கேக்குறீங்கண்ண? செல பொண்ணு ஊட்டுக்காரங்க சம்பளத்தக் கூட மொதல்ல கேக்கறதில்ல. காரு இருக்குத்தாம்பாங்க? அப்பறம் வீடு. அதுக்கப்பறந்தா சம்பளம் மத்ததெல்லாம். நம்ம தம்பிக்கு வீடு இல்லனு சொல்லி வேணாம்னது கூட ஒரு அஞ்சாறு எடம் இருக்கும்”
“என்ன சின்னசாமி நம்ம வாசுவுக்கு கல்யாணம் பண்றப்பெல்லாம் இப்பிடி இல்லையே?”
“அண்ண எந்தக் காலத்துல இருக்கீங்க? பத்து வருசத்துக்கு முன்னாடி கதையில்ல நீங்க பேசறது. அது என்னன்னாண்ண நம்ம காலத்துல, நம்ம அதப் போடு இதப் போடு அவ்ளோ வேணும் இவ்ளோ வேணும்னு கேட்டுகிட்டிருந்தம். இப்ப அவுங்க இது இருக்கா அது இருக்கானு கேக்குறாங்க. எனக்கென்னமோ நேரந்தா ஆம்பளைங்கள பழி வாங்குதோன்னு தோணுது”
“என்னாத்தபோ… நீ சொல்ற படி பாத்தா இப்பத்தா பிள்ளைங்களும் சம்பாதிக்குதுங்கல்ல. அப்பறம் பையனுக்கு வீடு இல்லாட்டித்தா என்ன ? கல்யாணம் பண்ணி கிட்டு சேந்து கட்டிக்க மாட்டாங்க. எங்க மூத்தவன் செல்வமெல்லாம் போன வருசந்தா வீடு காட்டுனா”
“சரிதாண்ண. ஞாயமானப் பேச்சு தா நீங்க பேசறது. ஆனா பொண்ணு ஊட்டுக்காரங்கல்ல இத நெனைக்கனும். நம்மப் பேசி என்ன ஆவப் போவுது”
“ம்ம்… சேரி சின்னசாமி நீ ஒன்னு பண்ணு. கொஞ்சம் இல்லாதப்பட்டவங்கலாப் பாரு. நம்ம வசதிக்கே இல்லாட்டாலும் பரவால்ல”
“அதுவும் பாப்பா சொல்லுச்சுண்ண. அப்பிடியும் செல எடம் வந்துச்சி. ஆனா அவுங்க என்னங்கறாங்கன்னா, மத்த எல்லாம் இல்லாட்டியும் பரவால்ல; ஆனா அம்மா அப்பா இல்லீங்கறது தா ஒரு யோசனையா இருக்குனு சொல்லி வேணான்ட்ராங்க…”
சின்னசாமி சொன்னதைக் கேட்டு பதிலேதும் இல்லாததால் கேசவ மாமா அமைதியாக இருந்த அதே சமயத்தில்தான், செல்வமும், வாசுவும் அவனவன் பையன்களுடன் வண்டியில் வந்து இறங்கினர். வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டதும் செல்வமும், வாசுவும் சாப்பாட்டுப் பந்திக்கு நேராகச் சென்று சுந்தருடன் ஒத்தாசையாக சேர்ந்து கொண்டனர். செல்வத்தின் பையன் அவனுக்கென ஒரு நாற்காலியை தேடி எடுத்து வந்து வேம்படியில் உட்கார, வாசுவின் மகன் ஓடிப்போய் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தாத்தாவின் மடியில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டான். பிள்ளைகள் வந்ததும் கிருத்திகா சற்று முன் அழுததால் ஏற்பட்ட இறுக்கம் குறைந்து சாதாரணமானது அந்த வேம்படி சூழல். கிருத்திகா கண்ணீரைத் துடைத்து தன்னை சரிப்படுத்திக் கொண்டாள். கார்த்தியும் பையன்களிடம் வேடிக்கை பேச்சுகளை பேசத் தொடங்கியிருந்தான். கேசவ மாமா அலைப்பேசியில் சின்னசாமியுடனான உரையாடலில் தீவிரமாக இருந்ததால் இப்போது நிகழ்ந்தவை எதிலும் அவர் கவனம் செல்லவில்லை. கண்கள் வெறுமனே நடப்பதை நிகழ்படம் பிடித்துக்கொண்டிருக்க அவர் மனமும், புத்தியும் அலைப்பேசி உரையாடலில் இருந்தது.
“நீயே இப்பிடி ஏதோ மத்தவங்கழுதாட்டம் சொன்னா எப்பிடி சின்னசாமி கொஞ்ச எல்லாம் பொருந்தற எடமாப் பாரு”
“தம்பி சின்ன வயசுலர்ந்து எங்கண்ணு முன்னாடியே வளந்த பையன். அப்பிடி மத்தவங்கழுதாட்டம் அசால்ட்டா உட்ருவனா சொல்லுங்க”
“ … ”
“அண்ணா நீங்க கோவிச்சிக்கலன்னா நா ஒன்னு சொல்லவா?”
“ம்ம்ம்”
“நம்ப தம்பிக்கு செட் ஆவர மாதிரி ஒரு அஞ்சாறு ஜாதகம் எங்கையில இருக்குது. ஆனா…”
“சொல்லு சின்னசாமி ஆனா என்ன?”
“அதெல்லாம் நம்ப சனமில்ல. நா உறுதியாச் சொல்ற. அதுல எப்பிடியும் ஒன்ன நம்ப தம்பிக்கு பேசி முடிச்சிரிலாம்”
“என்னது?”, கேசவ மாமாவின் குரலில் ஆத்திரம் தொனித்தது.
“கோவப்படாம நா சொல்றத முழுசாக் கேளுங்கண்ண. தம்பிக்கு வர்ற பங்குனி வந்தா வயசு முப்பதுன்னு பாப்பா சொல்லிச்சி. அதுக்கப்பறம் பொண்ணு கெடைக்கறது இன்னும் செரமமாயிரும். பாப்பாகிட்டயும் வேற சனத்துல பாக்கலாமான்னு கேட்ட. பாப்பா உங்கக்கிட்ட கேட்டுக்க சொல்லிச்சி. நானே நேர்ல வந்து சாவுகாசமா சொல்லலாம்னு இருந்த. அதுக்குள்ள நீங்களே கூப்ட்டுடீங்க. கொஞ்சம் யோசனப் பன்னுங்கண்ண”
“ … ”
“அப்பறம் நம்ப வேலப்பண்ண இருக்காருல்ல. அவுருப் பையன் ஜாதகமும் எங்கிட்ட தா இருக்கு. அவருகிட்ட இல்லாதக் காசா பணமா சொல்லுங்க. அந்தப் பையனுக்கும் ரொம்ப வருசமா ஒன்னும் செட் ஆவாமேயே தா இருக்கு. நம்ப தம்பிக்காவுது பரவால்ல இப்பத்தா முப்பது; அந்தப் பையனுக்கு முப்பத்தி மூனே முடியப் போவுது வர வைகாசியோட.
அவுருகிட்டயும் வேற சனத்துல பாத்துக்கிலங்களாண்ண ன்னு கேட்ட. உங்குளுக்கு நா சொல்லித் தெரிய வேண்டியதில்ல அவுரு கொணம். எப்பவும் நம்ப சனந்தான்னு இருக்கற ஆளு. சனத்துக்குண்ணே நெறய செஞ்சிருக்கிற ஆளு. சேரி வேறைல தா பாரு சின்னசாமின்னுட்டாரு. இப்பப் பொண்ணு வீட்ல பேசிக்கிட்டிருக்கன். இந்த மாசத்துல சுவர்ரா முடிச்சிருவன்”
“ம்ம்ம் …”, கேசவ மாமாவின் குரலில் ஆத்திரம் வெளியேறி ஒருவித ஏமாற்றம் புகுந்திருந்தது. அந்நேரம் அவருக்கு மடியில் அமர்ந்திருந்த வாசுவின் மகனின் கை மணிக்கட்டில் மின்னிக்கொண்டிருந்த அந்தத் தங்கச்சங்கிலி அவர் கண்ணில் பட்டது. அவன் பிறந்த போது அவர் பெருமையாக வாங்கி அணிவித்த அதே தங்கச் சங்கிலிதான். அவன் வளர வளர கழுத்தில் பொருந்தாததால் மணிக்கட்டில் பிரேஸ்லெட்டாகக் கட்டிக் கொண்டு விட்டான். கேசவ மாமா, தீவிரச் சிந்தனையுடன் அதைப் பார்த்துகொண்டே, அலைப்பேசியில் சின்னசாமி பேசுவதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
“அதுமட்டுமில்லாம இன்னொரு முக்கியமான விசியம்ண்ண. இது உங்கக் காதுக்கு வந்துச்சா என்னன்னு எனக்குத் தெரீல. நானே ரெண்டு, மூனு வாட்டிப் பாத்திருக்கன், தம்பி பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணோட சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டிருக்கறத. நம்மளா கெட்டி வெக்காம தம்பி கொலங்கெட்ட யாரையாச்சும் இழுத்துட்டு வந்து நின்னா நமக்குத்தானுண்ண அசிங்கம். நம்ப தம்பி அப்பிடி எதுவும் பண்ணாது தா. இருந்தாலும் என்னடா இன்னும் கல்யாணம் ஆவுலயேன்னு ஒரு விரக்த்தியில செஞ்சுட்டா அப்ப என்னப் பண்ண முடியும் சொல்லுங்க. எல்லா நம்ம நெனைச்சது மாதிரியே நடந்தட்றது இல்லல்ல? அதனால நா சொன்னதையெல்லாம் பொறுமையா யோசனப் பண்ணி ஒரு நல்ல முடிவா முடிஞ்ச அளவு சீக்கிரம் சொல்லுங்கண்ண…”
கேசவ மாமா எதுவுமே சொல்லாமல் அழைப்பைத் துண்டித்து விட்டார். சுந்தர், வாசு, செல்வம் மூன்று பேரும் பந்தியைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் கார்த்தியின் மூத்த மகள் சுவாதியையும், இன்று மொட்டை போட்டுக் காது குத்தப்பட்ட இளைய மகளையும் கூட்டிக் கொண்டு வேம்படிக்கு வந்து அவர்களுடன் நின்று கொண்டனர். அவர்கள் வந்த பிறகு, ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் ஏதோவொன்றை பேசவும், பிள்ளைகள் மாறி மாறி ஒருவரை ஒருவரை கேலி செய்யவும் என கேசவ மாமா ஒருவரின் முகத்தைத் தவிர பிற எல்லோர் முகங்களிலும் புன்னகையோ, சிரிப்போ எழுந்தெழுந்து மறைந்தபடி இருந்தது. கேசவ மாமா மட்டும் மடியில் அமர்ந்திருந்த பேரனின் மணிக்கட்டைச் சுற்றிக் கொண்டு நெளிந்தபடியிருந்த அந்தத் தங்கச் சங்கிலியையே அதி தீவிரச் சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏன்டா அங்கப் பாரு உங்கண்ணன. சேர்ல ஒக்காந்துட்டு இருக்கா. நீ மட்டும் ஜம்பமா எங்க மாமா மடியில ஒக்கந்துட்டிருக்க. எறங்குடாக் கீழ. நா கொஞ்ச நேரம் எம்மாமா மடியில ஒக்காரப் போறன்”, என்று வாசுவின் மகனைச் செல்லமாக வம்பிழுத்துக் கொன்டே அவன் சங்கிலி கட்டியிருந்த கையின் மணிக்கட்டைப் பற்றி இழுத்தான், சுந்தர். கேசவ மாமாவைப் போல அந்தச் சங்கிலியும் தளர்ந்திருக்க வேண்டும். சுந்தர் இழுத்த இழுப்பில் இடையில் உடைந்து அறுந்தது. கேசவ மாமா அறுந்து விழுந்த சங்கிலியைப் பார்த்தார்; அலைப்பேசியில் சின்னசாமியின் எண்ணைப் பார்த்தார்.
000

என் பெயர் சு.விஜய். வால்ராசாபாளையம் என்னைப் பெற்று வளர்த்த ஊர். வால்ராசாபாளையம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சியில் உள்ளது. தற்போது தண்ணீர்பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறேன். நான் கணினிப் பொறியியல் பட்டதாரி. கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். புத்தக வாசிப்பின் மீது ஆர்வமுள்ள நான் சமீபத்தில் ” உடையும் சங்கிலி ” என்ற சிறுகதை ஒன்றை எழுதி இருக்கிறேன். எனது நண்பர் ஆரவ் எனக்கு நடுகல் பக்கத்தை அறிமுகப் படுத்தி என் படைப்பை அனுப்ப ஊக்குவித்ததால் நான் என் படைப்பை நடுகல் இணையதள பக்கத்திற்கு அனுப்ப முன் வந்துள்ளேன்.