மேரி சுருண்டு விழுந்தவுடன் அனைவரும் பயத்தோடு அவளைத் தூக்கி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அமர வைத்தார்கள்.
இதை பார்த்த இளவரசிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு ஓடி வந்து விட்டாள்.
அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் மேரியைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் இளவரசி. மாலை பள்ளியிலிருந்து வரும்போது மேரி இளவரசியிடம் ஓடி வந்து, ’ஏன் இளவரசி என்னைப் பார்த்து ஓடுற?’ என்று கேட்டாள்.
இளவரசி எதுவுமே பேசவில்லை.
”நாம் எத்தனை தடவை சண்டை போட்டு இருக்கோம். அப்ப எல்லாம் உன் மேல எனக்கு கோவம் வரும். ஆனா நீ இப்ப அடிச்சப்ப முதல்ல எனக்கு கோவம் வந்துச்சு. அதன் பிறகு மாஸ்டர் இப்படி இங்க நீங்க சண்டை போட்டுப் பழகினால் தான் வெளியில் போட்டிகளுக்குப் போகும்போது ஜெயிக்க முடியும் என்று கூறினார். அதன் பிறகு மாஸ்டர் சொன்னது சரி என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த முறை நான் உன்னை ஜெயிப்பேன்” என்று கூறி சிரித்தாள்.
“மன்னிச்சுக்கோ இனிமேல் நான் உன்னை அடிக்கவே மாட்டேன் மன்னிச்சுக்கோ டி” என்றாள் இளவரசி.
“இப்பதானே சொன்னேன் நம்ம இங்க நல்லா அடிச்சு பழகினால் தான் போட்டிகளில் சென்று ஜெயிக்க முடியும். நீ என் மேல கோபப்பட்டு அடிக்கலையே. நம்ம கத்துகிறதுக்காக தானே அடிச்சோம்” என்றாள் மேரி.
சில நாட்கள் அங்கு நடைபெற்ற வகுப்பு அதன் பிறகு அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கின்ற பஸ் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஒரு மண்டபத்தில் நடைபெற ஆரம்பித்தது.
அதுவரை வீட்டிற்கு அருகில் என்பதால் இளவரசி குங்ஃபூ வகுப்பிற்குச் செல்வதற்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அதன் பின் மாலை நேரப்பயிற்சி திரும்பி வர இரவு ஆகும் அதனால் அனுப்புவார்களோ மாட்டார்களோ என்ற பயத்தில் இருந்தாள் இளவரசி.
முதலில் யோசித்தார் இளவரசியின் அம்மா. சில நாடுகளில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
இளவரசி குங்ஃபூவின் மீது வைத்திருக்கும் பெரும் பற்றை அவள் வீட்டில் தொடர்ந்து செய்யும் பயிற்சி வழியாக இளவரசியின் அம்மா உணர்ந்திருந்தார்.
வேறு எதைக் காட்டிலும் இளவரசி குங்ஃபூவின் மீது வைத்திருந்த பற்று அம்மாவிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இளவரசி மேரி ஜான் எல்லோரும் சேர்ந்து வகுப்பிற்குச் சென்றார்கள்.
இப்படி வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஒரு போட்டி ஒன்று ஈரோட்டில் நடைபெறுவதாக அறிவிப்பு வந்தது. போட்டிக்காக எல்லோரையும் மாஸ்டர் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது ’என்னதான் பயிற்சி கொடுத்தாலும் உடல் தயாராக இருக்கும். மனதை தயார்படுத்துவது மிக முக்கியம்’ என்று அவர் கூறினார். போட்டிக்குச் செல்லும் முன் உடலை விட மனதைத் தயார்படுத்த வேண்டும். ஏனென்றால் மனது நம்பினால் மட்டுமே உடல் செயல்படும். அதற்கு நீங்கள் தினமும் செய்யும் மெடிடேஷன் மிக முக்கியம். இங்கு வகுப்பில் வந்தவுடன் உங்களுக்கு மெடிடேஷன் கொடுப்பதற்கு அது தான் காரணம். மனதை ஒருநிலைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்ந்து மனதை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே உடல் செயல்படும். தோல்வி வரும்போது துவண்டு விடக்கூடாது. எல்லாவற்றிலும் வெற்றியை மட்டுமே நாம் காண வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நாம் இன்னும் நம்மைத் தயார்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தோல்வி அடையும்போது வர வேண்டும். தோல்வியடையும்போது தாங்கிக் கொள்ளும் மனம் மட்டுமே ஒரு விளையாட்டு வீரனுக்கு மிக முக்கியம். எதிரில் நிற்கும் போட்டியாளர்களை போட்டியாளர்களாக பார்ப்பதோடு அவர்களும் உங்களைப் போன்ற சக மனிதன் என்றும் பார்க்க வேண்டும்.
போட்டி என்பது மனதையும் உடலையும் வலிமைப்படுத்தும். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கும். வெற்றியோ தோல்வியோ நீங்கள் அந்தக் களத்தில் இருப்பது முக்கியம். ஒரு முறை தோற்று விட்டால் துவளக் கூடாது. அந்தத் தோல்வி உங்களின் வெற்றிக்கு படிக்கட்டாக இருக்கும் என்று எண்ண வேண்டும்.
தைரியம் என்பது முதலில் மனதிலிருந்து வரவேண்டும். உங்களால் முடியும் நீங்கள் எதிரே நிற்பவரை வெல்ல முடியும் என்ற உறுதியோடு களத்துக்குள் இறங்குங்கள்.
நம்மோடு இருக்கும் நமது நட்புக்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்களால் முடியும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும் அளவிற்கு அவர்களோடு உரையாடுங்கள்.
இப்படி போட்டியை பற்றிய அறிவிப்பு வந்த நாள் முதல் ஒவ்வொரு பயிற்சியின் போதும் மாஸ்டர் தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பதை எல்லோரும் உள்வாங்கிக் கொண்டார்கள் போட்டிக்கான நாளும் வந்தது.
பத்துக்கு மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு மாஸ்டர் ஈரோட்டை நோக்கி அதிகாலையிலேயே கிளம்பினார். அங்கு பல்வேறு ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். முதல்ப் போட்டி என்பதால் எல்லோரும் படபடப்புடனும் பயத்துடனும் தான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் போட்டிக்கான பயிற்சியைக் கொடுக்கும் போதும் மாஸ்டர் அவர்களுக்கு தனித்துவமான பயிற்சியை தான் கொடுத்தார்.
அனைவரும் தங்களுடைய பெயரை பதிவு செய்து விட்டு உயரத்தையும் எடையையும் பதிவு செய்வதற்கு என்று வைக்கப்பட்டிருந்த இடத்தில் பதிவு செய்தார்கள்.
இளவரசி சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தாள். அங்கு குங்ஃபூவைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கராத்தேவைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள்.
இவர்களோடு வந்திருந்தவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் அமர வைத்திருந்தார். மாஸ்டர் காலை உணவு சாப்பிட பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். முதல் முறையாக அன்றுதான் அவ்வளவு பெரிய ஹோட்டலை பார்க்கிறாள் இளவரசி. எல்லோரும் பூரி ஆர்டர் செய்தார்கள். அவளும் பூரியையே ஆர்டர் செய்தாள். எல்லோரிடமும் சேர்ந்து சாப்பிடுவது அவளுக்குப் பிடித்திருந்தது.
சரியாக 10 மணியளவில் நிகழ்வு தொடங்கியது.
முதலில் எடை அதிகமான பிரிவிற்கான போட்டி நடைபெற்றது. இவர்களோடு வந்திருந்த நான்கு பேர் போட்டியில் பங்கு பெற்றார்கள். நான்கு பேரும் அடுத்த சுற்றிக்கு முன்னேறினார்கள்.
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மாஸ்டர் இவர்களிடம் வந்து நுணுக்கங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார். இப்படி எடுத்தால் இரண்டு பாயிண்ட். இப்படி எடுத்தால் ஒரு பாயிண்ட். இப்படி எல்லாம் அடிக்கக் கூடாது. இதெல்லாம் பவுல் என்று அவர்களுடைய சண்டையின் வழியாக இவர்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
சண்டை போட்டி முடிந்து கட்டா போட்டி நடைபெற்றது. இவர்களுடைய அணியில் இருந்த இரண்டு பேர் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தேர்வானார்கள்.
தேர்வாகாமல் போன சிதம்பரம் டேனியல் இருவரும் மிகுந்த வருத்தத்தோடு இருந்தார்கள்.
சிதம்பரம் அழுதே விட்டான்.
அவனைப் பார்த்த மற்றவர்களின் முகத்திலும் பயம் தெரிய ஆரம்பித்தது. இதை உணர்ந்து கொண்ட மாஸ்டர்
அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடி அதன் பின் அழைத்து வந்தார். சிதம்பரத்தின் முகத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது.
ஆனால் டானியல் இன்னும் தோல்வி வருத்தத்தில் தான் இருந்தான்.
இளவரசியின் எடை பிரிவிற்கான போட்டி தொடங்குவதாக அறிவித்தார்கள்.
எவ்வளவுதான் பயிற்சி எடுத்து இருந்தாலும் டேனியல் மற்றும் சிதம்பரத்தின் தோல்வி இளவரசிக்குப் பயத்தைக் கொடுத்தது.
முதலாவதாக மேரியும் வேறு ஒரு குழுவில் இருந்து வந்திருந்த ஒரு சிறுமிக்கும் போட்டி நடைபெற்றது. முடிவில் மேரி தோல்வியைத் தழுவினாள்.
மேரியின் தோல்வி இளவரசிக்குப் பயத்தைக் கொடுத்தது. முதலில் மேரியை அழைத்துப் பேசினார் மாஸ்டர்.
இளவரசியின் முகத்தைப் பார்த்து அவளுக்கு பயம் இருப்பதை அறிந்த மாஸ்டர் இளவரசியை தனியாக அழைத்துச் சென்றார். “எதற்கும் பயப்படக்கூடாது. தைரியமாகப் போட்டியிட வேண்டும். உன்னிடம் துணிவிருக்கிறது. பயிற்சி எடுத்திருக்கிறோம். நீ தான் கண்டிப்பாக வெற்றி பெறுவாய் மன உறுதியுடன் போட்டியை எதிர்கொள்” என்று தைரியத்தைக் கொடுத்து அழைத்து வந்தார்.
இளவரசி என்ற பெயர் அறிவித்த உடன் சற்று பயத்தோடும் படபடப்போடும் எழுந்து சென்றாள். இளவரசியோடு வந்திருந்தவர்கள் இளவரசி பெயரைச் சொல்லிக் கத்தி உற்சாகப்படுத்தினார்கள்.
அது அவளுக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்தது. அந்தக் கத்தல் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தையும் கொடுத்தது. களத்தில் நின்றவுடன் எங்கிருந்தோ ஒரு பெரும் தைரியம் வந்தது. எதிரில் இருந்த சிறுமியைப் பார்த்து புன்னகைத்தாள் இளவரசி. அந்த சிறுமியும் புன்னகைத்தார்.
இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். நடுவர் இருவருக்கும் இடையில் வந்து இருவரையும் அருகருகே நிற்க வைத்துப் போட்டியைத் தொடங்கினார்.
இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்கள். ஆனால் யாருக்கும் எந்தப் புள்ளியும் கிடைக்கவில்லை.
எதிரில் இருந்த சிறுமி காலைச் சுழற்றி அடித்ததில் இளவரசியின் தலையில் பட்டது. அவளுக்கு இரண்டு புள்ளி கிடைத்தது.
இளவரசிக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
உடனே கால்களை உயர்த்தி ஒரு குதி குதித்து சுழற்றி பேக்ரவுண்டாசை அடித்தாள். சிறுமியின் தலையில் பட்டது. மூன்று புள்ளிகள் இளவரசிக்குக் கிடைத்தது.
எல்லோரும் கைத்தட்டி இளவரசியின் பெயரைச் சொல்லி மறுபடியும் கத்தியவுடன் இளவரசிக்கு மீண்டும் உற்சாகம் பிறந்தது. திரும்பவும் ஒரு பேக்ரவுண்டாசை அடித்தாள். இந்த முறை சிறுமியின் தலையில் படவில்லை. சிறுமி லாபகமாக குனிந்து கொண்டாள்.
குனிந்த நேரத்தைப் பயன்படுத்தி வயிற்றில் ஒரு குத்து விட்டாள் இளவரசி.
அதற்கு ஒரு புள்ளி கிடைத்தது.
சிறுமியின் முகம் சிவந்தது. அடுத்தடுத்த அடிகளில் நான்கு புள்ளிகள் எடுத்தாள் அந்தச் சிறுமி. ஒரு நிமிடம் மாஸ்டர் சொன்னதை மனதில் நினைத்து பார்த்தாள். வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் களத்தில் நம்மை நிரூபிக்க வேண்டும். தோல்வியாக இருந்தாலும் எதிரில் எதிரில் இருப்பவருக்கு ஒரு பயத்தை உருவாக்க வேண்டும். எங்கிருந்து வந்ததோ அந்த தைரியம் தொடர்ந்து அடித்து அடித்து முன்னேறி முடிவில் இளவரசி வெற்றி பெற்றாள். அந்த முதல் வெற்றியை அவளுடைய பெயர் சொல்லி அறிவித்தவுடன் துள்ளிக் குதித்தாள். அவளோடு வந்த மற்றவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டாடினார்கள்.
அது அரையிறுதிப் போட்டி. இறுதிப்போட்டி நாளை நடைபெறும் என்று அறிவிப்பு வந்தது. அந்த நேரத்தில் ஒளிப்பெருக்கியில் கட்டா போட்டிக்கான அறிவிப்பும் வந்தது.
இளவரசியோடு வந்திருந்த ஒருவரைத் தவிர அனைவருமே சண்டைப் போட்டியில் முதல் சுற்றில் பெற்றிருந்தார்கள். வந்திருந்தவர்களில் கட்டா போட்டியில் இளவரசியும் மேரியும் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார்கள்.
மேரி கட்டா போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பது இளவரசிக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்தது.
மேரியின் முகத்திலும் மிகுந்த சந்தோஷத்தைக் காண முடிந்தது.
இரவு முழுவதும் மாஸ்டர் அனைவரையும் அமர வைத்து தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தார். மனோ ரீதியாக மிகப்பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது அவர்களுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது.
அடுத்த நாள் போட்டியை எதிர்கொள்ள மன அளவில் தயாரானார்கள்.
காலை 5 மணியிலிருந்து அவர்களுக்கான பயிற்சியும் கொடுத்தார். பயிற்சி நேரத்தில் திடீரென்று இளவரசி கீழே விழுந்தாள். கை கால்களை உதற ஆரம்பித்தாள். சுற்றி இருந்த அத்தனை பெரும் உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்கள்…
தொடரும்..

சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.