ஆங்கிலத்தில்: ஓ ஹென்றி
தமிழில்: கோ.புண்ணியவான்
மேற்கு வாஷிங்டன் நகரத்தின் ஒரு சிறிய உட்பகுதிக்கு எண்ணற்ற சாலைகள் பலவாறாய் பிரிந்து சென்றன. அவை குறுக்கு மறுக்குமாக பல்வேறு திசைகளில் உள்ள ஊர்களுக்கு இட்டுச் சென்றன. ‘இடங்கள்’ என்று அழைக்கப்பட்ட சிறு சிறு துண்டு நிலப்பகுதிகள் அவை. ஓர் இடத்துக்குச் செல்ல ஒரே பாதையை இருமுறை கடந்து போகக் கூட நேரிடும். ஒரு முறை ஓர் ஓவியர் இந்தப் பாதையில் சாத்தியமான, விலை மதிப்பற்ற ஏதோ ஒன்று இருப்பதாகக கண்டுபிடித்தார். ஒர் ஓவியர் பணம் செலுத்தாமல் சில ஓவியப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் பணமில்லை என்றும் வைத்துக்கொள்வோம். அவர் வாங்கிய பொருட்களுக்கான கடனைத் திரும்பப் பெற கடன் கொடுத்தவர் வவரைத் தேடி வந்தார் என்றும் வைத்துக்கொள்வோம். அந்த மனிதர் இந்தப் பாதையைப் பயன்படுத்துவாராயின் அவர் சுற்றிச் சுற்றி ஒரே இடத்துக்கே மீண்டும் மீண்டும் வந்து, மண்டை குழம்பி, கொடுத்த பொருளுக்கான பணத்தை வாங்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிப் போக நேரிடும்.
அந்த நகரின் அந்தக்குறிப்பிட்ட ஊரின் பெயர் கிரீன்விச் பழைய கிராமம். அவ்வூருக்குப் பல ஓவியக் கலைஞர்கள் வந்து சேர்ந்திருந்தனர். அங்கே வாடகைக்கு அவர்கள் விரும்பிய தூய்மையான, வெளிச்சமான அறைகள் மலிவு விலையில் கிடைத்தன.
சூவும் ஜோஷியும் ஒரு கட்டடத்தின் மூன்று அறைகள் கொண்ட மேல்மாடியில் குடியிருந்தனர். அந்த இளம் பெண்களின் ஒருத்தி மேய்ன் என்ற ஊரிலிருந்தும், இன்னொருத்தி கெலிபோர்னியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியிருந்தனர். இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டது எட்டாவது தெருவிலுள்ள உணவுக் கடை ஒன்றில். அவர்கள் விரும்பிய பல வகையான ஓவியங்களும், விதம் விதமான உணவும், அவர்கள் ஆசையோடு உடுத்தும் ஆடைகளும் அங்கே எளிதில் கிடைத்தன. எனவே இருவரும் அங்கே ஒன்றாகத் தங்கி தங்கள் கலைப்பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது வசந்த காலம் தொடங்கியிருந்தது.
குளிர்காலம் தொடங்கும் வேளையில் அந்த ஊருக்குள் ஒரு ‘குளிர்ந்த மனிதர்’ நுழைந்திருந்தார். யாரும் அவரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் தன் குளிர்ச்சியான விரல்களால் வெவ்வேறு மனிதர்களைத் தொட்டுத் தொட்டுச் சென்றிருக்கிறார். ‘அவர்’ ஒரு பயங்கர நோய். டாக்டர்கள் அவரை நிமோனியா என்றழைத்தனர். ஆவ்வூரின் கிழக்குப் பகுதியில் அவர் அவசர அவசரமாகப் பலரைத் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அந்தக் குறுகிய கிரீன்விச் வீதியிலிருந்து மட்டும் அவர் அவ்வளவு சீக்கிரமாக நகர்ந்துவிடவில்லை.
திருவாளர் நிமோனியா ஒன்றும் மரியாதைக்குரிய மனிதர் கிடையாது. அவர் மரியாதைக்குரியவராக இருந்திருந்தால் கெலிபோர்னியாவிலிருந்து வந்த அந்த மெலிந்த உடலமைப்புகொண்ட பெண்ணைக் கண்டிப்பாய்த் தொட்டிருக்கமாட்டார். ஆனால் தனது குளிரான விரல்களால் திருவாளர் நிமோனியா ஜோஷியைத் தொட்டுவிட்டிருந்தார். இப்போது அவள் படுத்த படுக்கையாகக் கிடத்தப்பட்டுவிட்டார். கட்டிலில் கிடந்தவாறு சன்னலுக்கு வெளியே தனது அறைக்கு அடுத்த வீட்டுச் சுவரை அவள் பார்த்துகொண்டிருந்தார்.
ஒருநாள் காலையில் ஜோஷிக்குக் கேட்காதவாறு அந்த வேலைபளு மிகுந்த டாக்டர், வரவேற்பறையில் சூவிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“அவள் உயிரோடிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் அவள் தான் உயிரோடிருக்கவேண்டும் என்று திண்ணமாக நம்பினாலே ஒழிய நீண்ட நாள்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை. நான் ஒன்றுமே செய்வதற்கில்லை. அவள் முழுமையாகவே நம்பிக்கையிழந்துவிட்டாள். தன்னம்பிக்கையைக் கைவிடும் அளவுக்கு அவளை ஏதும் தொந்தரவு செய்கிறதா?” என்று கேட்டார் டாக்டர்.
சூ சொன்னாள், “அவள் இத்தாலிக்கே மீண்டும் திரும்பப்போய், நேப்பாள வளைகுடாவை ஓவியமாக வரைய எண்ணம் கொண்டிருந்தாள்.”
“ஓவியமா? ஓவியம் வரையாமலிருப்பதா அவளைத் தொந்தரவு செய்கிறது? நான் அதைக் கேட்கவில்லை. கவலைக்குள்ளாகும் அளவுக்கு வேறெவரும் அவள் மனதில் உள்ளார்களா?….யாராவது ஆண் நண்பர்?”
“ஆணா? அவள் எண்ணத்தில் அப்படி யாரும் இல்லை டாக்டர். கண்டிப்பாய் இருக்கமுடியாது.”
“அவர் மனச் சோர்வில் இருக்கிறார்.” டாக்டர் சொன்னார். அவரைக் குணப்படுத்த என்னால் முயன்ற எல்லாவற்றையும் நான் செய்வேன். ஆனால் ஒரு நோயாளி தான் இறந்துவிடுவேன் என்று மன உறுதியற்றிருந்தால், என் பாதி முயற்சி வீண். அவரிடம் புதிய குளிர்கால ஆடையைப் பற்றிப் பேசுங்கள், அவருக்கு எதிர்காலத்தின் மீது ஆர்வம் உண்டானால் அவர் மீண்டுவர வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.”
டாக்டர் விடைபெற்ற பின்னர் சூ மனம்விட்டுக் கதறி அழ தன் ஓவிய கூடத்துக்குப் போனாள். பின்னர் ஜோஷியின் அறைக்கு நடந்தாள். அவள் வரைந்த ஓவியங்களைக் கையோடுகொண்டுபோய்க் காட்டியதும் அதில் ஜோஷி கையொப்பமிடத் தொடங்கினாள்.
ஜோஷி எந்தச் சலனமுமின்றி படுத்துக்கிடந்தாள், உடல் மெலிந்திருந்தது. மிகவும் சோர்வுற்றிருந்தாள். அவள் முகம் சன்னல் பக்கமாகத் திரும்பி இருந்தது. அவள் கையொப்பமிடுவதை நிறுத்தி இருந்தாள். சூ அவள் உறங்கிவிட்டாளோ என்றுதான் நினைத்தாள்.
சூ வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஜோஷியின் அறையிலிருந்து மெல்லிய ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. சூ உடனே அவள் படுக்கைக்கு விரைந்தாள்.
ஜோஷியின் கண்கள் அகலத் திறந்திருந்தன. சாளரத்துக்கு வெளியே பார்த்தவாறு எதையோ மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தாள்.
“பன்னிரண்டு” என்று சொல்லி நிறுத்தி, சற்று நேரம் கழித்து ”பதினொன்று” என்றாள். பின்னர் “பத்து” என்றாள். அப்புறம் “ஒன்பது” “எட்டு” “ஏழு” என்று எண்ணிக்கொண்டே இருந்தாள்.
இவள் எதனை எண்ணுகிறாள் என்று துணுக்குற்று சாளரத்துக்கு வெளியே உன்னிப்பாய் கவனித்தாள். சூவின் பார்வையில் அண்டை வீட்டுச் சுவர் மட்டுமே தெரிந்தது. அது சன்னலற்ற சுவர். ஒரு முதிர்ந்த மரம் மட்டுமே சுவரை ஒட்டி வளர்ந்திருந்தது. குளிர்காற்று வீசியதால் அது அசைந்துகொண்டிருந்தது. அம்மரத்தின் கரிய கிளைகளிலிருந்து கிட்டதட்ட எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டு பட்டமரம்போலக் காட்சியளித்தது.
“என்ன அன்பே?” சூ மென்மையோடு வினவினாள்.
“ஆறு,” என்றாள் தன் தளர்ந்த குரலில் ஜோஷி. “இப்போது அவை வேகமாக உதிர்கின்றன. மூன்று தினங்களுக்கு முன்னர் ஏறத்தாழ நூறு இருந்தன. அவற்றை எண்ணி எண்ணி எனக்குத் தலைவலி உண்டாகிவிட்டது. ஆனால் இப்போது எண்ணுவது எளிதாகிவிட்டது. தோ இன்னொன்று! இப்போது மரத்தில் ஐந்து மட்டுமே எஞ்சி இருக்கின்றன.”
“என்ன ஐந்து! அன்பே? உன் சூவிடம் சொல்லமாட்டாயா?”
“மரத்தில் உள்ள இலைகள். கடைசி இலை உதிர்ந்துவிட்டால் நானும் உதிர்ந்துவிடுவேன். எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தெரிந்துவிட்டது. உன்னிடம் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லையா?” அவளின் ஒவ்வொரு வார்த்தயிலும் தளர்வு வெளிப்பட்டது.
“ஓ… உன் நிலைமையைப் பற்றி டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை. நீ சொல்வது அறிவுக்கு எட்டாத ஒன்று. உன் நிலைமைக்கும் அந்த முதிர்ந்த மரத்துக்கும் அப்படி என்ன தொடர்பு உண்டு? அல்லது நீ குணமாகிக்கொண்டிருப்பதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? உனக்குத்தான் அந்த மரம் ரொம்பப் பிடிக்குமே. இப்படி அசட்டுத் தனமாகப் பேசாதே. நீ மீண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் சொன்னார். இன்று காலையில்தான் அதனைச் சொல்லிவிட்டுப் போனார். நீ விரைவில் குணமாகிவிடுவாய் என்று உறுதிபடச் சொன்னார். இந்தா.. கொஞ்ச முயன்று சாப்பிடு. நான் என் ஓவியப் பணிகளைச் செய்யவேண்டும். அந்தப் படங்களை விற்று, நீ மேலும் திடகாத்திரமடைய உனக்கு சத்துள்ள உணவு வாங்கிவர முடியும்.”
“எனக்கு ஏதும் நீ வாங்கிவர வேண்டாம்,” என்று ஜோஷி பதிலளித்துவிட்டு சன்னலுக்கு வெளியே பார்ப்பதைத் தொடர்ந்தாள். “இதோ இன்னொன்று விழுந்துவிட்டது. எனக்கு ஏதும் உணவு வேண்டாம். இப்போது நான்குதான் எஞ்சி இருக்கின்றன. கடைசி இலை இந்த இரவுக்குள் உதிர்ந்துவிடும். நானும் போய்விடுவேன்.”
சூ அதிர்ந்தவளாய், “ஜோஷி அன்பே, உன் கண்களை திறக்கமாட்டேன் என்று எனக்கு உறுதியளிக்கிறாயா? கண்டிப்பாய்க் கண்விழித்துப் பார்க்கக்கூடாது. என் சித்திர வேலை முடியும் வரை, சன்னலுக்கு வெளியே உன் பார்வை போகாது என்று சத்தியம் செய்வாயா? இந்த ஓவியத்தை நாளைக்குள் நான் முடித்தாகவேண்டும். அதற்கு இந்த அறை வெளிச்சமாக இருக்கவேண்டும். அதனால் நான் சன்னலை மூடிவைக்க முடியாது!”
“நீ பக்கத்து அறைக்குப் போய்விடேன்,” என்று ஜோஷி தன் சக்தியிழந்த குரலில் மென்மையாகச் சொன்னாள்.
சூ அவளுக்கு இப்படி பதில் சொன்னாள். “நான் உன் அருகில்தான் இருப்பேன். நீ அந்த இலைகளைப் பாரக்கவே கூடாது என்பதற்காக,”
“நீ முடித்த கையோடு என்னிடம் தெரிவிக்கவும்,” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் ஜோஷி. ”நான் கடைசி இலை உதிர்வதைப் பார்த்தே ஆகவேண்டும். நான் அதற்காக வெகுநேரம் காத்திருந்துவிட்டேன். நீண்ட நேரம் அதுபற்றி சிந்தித்துக் களைப்படைந்துவிட்டேன். நான் அந்த உதிர்ந்த இலைகளைப்போல மிதந்து அடித்துச்செல்லப்பட்டுப் போய்ச் சேர்ந்துவிடவேண்டும்.”
“ஜோஷி தயவு செய்து, தூங்க முயற்சி செய், நான் பெஹர்மனை அழைத்து வந்து அவரை ஓவியமாக வரையவேண்டும். என் கற்பனை ஓவியத்துக்கு பெஹர்மன் தோற்றத்தை ஒத்த ஒருவர் தேவைப்படுகிறார்,” என்று சூ சொன்னாள். ”நான் அவரை அழைத்துவர ஒரு நிமிடம்கூட ஆகாது. நான் வரும்வரை நீ படுக்கையிலிருந்து எழ முயற்சி செய்ய வேண்டாம் ஜோஷி.”
முதல் மாடியின் வீடொன்றில் வசிக்கும் முதிர்ந்த வயதுடைய பெஹர்மனும் ஓர் ஓவியர். அவர் அறுபதைக் கடந்திருந்தார். ஒவியத் துறையில் அவரால் பேர் போட முடியவில்லை. நாற்பது ஆண்டுகளாக இக்கலைத்துறையில் இருக்கிறார், ஆனால் ஒரு ஓவியத்தைக்கூட அவரால் கலை அழகோடு வரைய முடியவில்லை. சிறந்த கலைநயம் மிகுந்த ஒன்றை எப்படியாவது வடித்திடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதுமே இருந்தது. ஆனால் அப்பணியை அவர் இன்னும் தொடங்கவே இல்லை.
அவர் பிறரை ஓவியம் வரையப் பணித்து அதிலிருந்து சிறிய வருமானம் ஈட்டுகிறார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதைக்கு அடிமையாகிவிட்டார். இன்னும் தான் ஓர் அற்புதமான ஒவியத்தை வரைந்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார். சூ மற்றும் ஜோஷியின் வாழ்க்கையை எவ்வகையிலாவது மேம்படுத்திவிடவேண்டும் என்ற தலையாய கடமையைத் தான் கொண்டுள்ளதாக நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
சூ அவரைத் தன் அறையில் அமரவைத்து வரைந்துகொண்டிருந்தார். அவர் பொறுக்கக் குடித்திருக்கிறார் என்று சூவுக்குத் தெரியும். வாடை அறை முழுதும் வியாபித்து சூவையையும் தாக்கியது. அவரிடம் ஜோஷியைப் பற்றியும் மரத்தில் வளர்ந்த கொடியின் இலைகளைப் பற்றியும் சொன்னாள். ஜோஷி இலைகளைப்போல வீழ்ந்து காணாமற்போய்விடவேண்டும் என்று அனத்திக்கொண்டே இருப்பதைக் உடைந்த வார்த்தைகளில் குறிப்பிட்டாள். அவளின் உலக வாழ்க்கைப் பிடிப்பு பலவீனமாகிக்கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.
அவ்வரிகளைக் கேட்டதும் பெஹர்மன் கோபத்தில் கத்தத் தொடங்கினார்.
“என்ன? இப்படிப்பட்ட முட்டாள்களும் உலகில் இருக்கிறார்களா? இலைகள் உதிர்வதால் உயிரை விட்டுவிடுவர்களா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லை! இனி நீ ஓவியம் வரைய நான் வந்து இங்கே அமரமாட்டேன். அவள் இப்படியெல்லாம் அபத்தமாகச் சிந்திப்பதை நீ ஏன் அனுமதிக்கிறாய்? பாவம் ஜோஷி!”
“அவள் நோயில் விழுந்து மிகவும் பலவீனமாக இருக்கிறாள். அவளைப் பீடித்திருக்கும் நோய் இப்படி அபத்தமாகச் சிந்திக்க வைக்கிறது. திரு பெஹர்மன், நீங்கள் வரவில்லையென்றால்.. வரமாட்டீர்கள்! நான் உங்களை மிக நல்லவர் என்று கருதுவதை நிறுத்திவிடுவேன்,” என்று சூ சொன்னாள்.
“இந்த இளம் பெண்,” கத்திச் சொன்னார் பெஹர்மன். “யார் சொன்னது நான் வரமாட்டேன் என்று? போ, நான் உன்னோடு வருகிறேன். நான் அரைமணி நேரமாக வருகிறேன் என்று தானே சொல்லிக்கொண்டிருந்தேன். இறைவா, ஜோஷி போல நல்ல பெண் நோயில் படுத்திருப்பதற்கா இங்கே வந்தாள்? என்றாவது ஒருநாள் நான் என் கனவான அற்புத ஓவியத்தை வரைவேன். அதன் பிறகு நாமெல்லாம் இங்கிருந்து கிளம்பிவிடலாம். ஆமாம், கடவுள் சத்தியமாகக் கிளம்பிவிடலாம்.”
ஜோஷி உறக்கத்தில் இருந்தபோது அவர்கள் இருவரும் அவள் அறைக்குப் போனார்கள். சூ சாளரத்தை மூடியவுடன் இருவரும் வேறு அறைக்குச் சென்றார்கள். சன்னலுக்கு வெளியே இருந்த அந்த மரத்தைச் சற்று அச்சத்தோடு பார்த்தார்கள். பின்னர் இருவரும் ஒரு கணம் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். குளிர் மழை பொழிந்துகொண்டிருந்தது. அதன் ஊடாக பனித் தூறல்களும் சொரிந்தன.
பெஹர்மன் மீண்டும் அமர்ந்தவுடன் சூ சித்திரம் தீட்டத் தொடங்கினாள்.
அன்று இரவு முழுதும் அதே வேலையாக இருந்தாள்.
காலையில் கொஞ்ச நேர உறக்கத்துக்குப் பின்னர் சூ ஜோஷி அருகே சென்றாள். ஜோஷி விழித்த கண்களோடு சாளரத்தை நோக்கினாள். ”நான் வெளியே பார்க்கவேண்டும்,” என்று சூவிடம் கேட்டாள்.
சூ மூடிய சன்னலைத் திறந்தாள்.
இரவு முழுதும் மழை கடுமையாக அறைந்து பெய்தும், பேய்க்காற்று இடைவிடாமல் வீசியும் எஞ்சிய அந்த ஓரிலை, சுவரோடு ஒட்டி வளர்ந்த மரத்தில் அப்படியே அசையாமல் இருந்தது. அதுதான் மரத்தில் இறுதியாக மிஞ்சியிருந்த இலை. மரத்தின் கிளைகள் கருத்த பச்சையாக இருந்தன. ஆனால் முதிர்ந்த கிளையாதலால் லேசான பழுப்பு மஞ்சள் நிறம் ஓரத்தில் ஓடியது. தரை மட்டத்திலிருந்து இருபது அடி உயரத்தில் அக்கிளை தொங்கியது.
“இதுதான் ஆகக் கடைசி இலை.” ஜோஷி சோகத்தில் சொன்னாள். நான் என்ன நினைத்தேன் என்றால் அது நேற்றைய இரவின் மழைக்காற்றில் உதிர்ந்துவிடும் என்று. எனக்கு காற்றின் வீச்சு நன்றாகக் கேட்டது. இன்று அவ்விலை கண்டிப்பாய் விழுந்துவிடும். நானும் அதே நேரத்தில் அதனோடு வீழ்ந்து மரணித்துவிடுவேன்.”
ஜோஷி உடனடியாக,” அன்பே, அன்பே ஜோஷி! என்னைப்பற்றிச் நினைத்துப் பார்? அப்படி இல்லையென்றால் உன்னைப்பற்றியாவது நீ நினைத்துப் பார். நான் வேறு என்னதான் செய்ய?”
ஆனால் ஜோஷி பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள். மிகவும் கொடுமையான தருணம் எதுவென்றால் இறுதி யாத்திரைக்காகக் காத்திருக்கும் ஒரு ஜீவன் மௌனமாகவே இருப்பதாகும். இவ்வளவு நாள் இருவரையும் இணைத்தே வைத்திருந்த நட்புறவும், உலக லௌகீக பந்தமும் அறுபடும் தருணம் மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது.
அன்றைய தினம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தும், அவ்விலை அசையாமல் கிளையிலேயே தொங்கிக்கொண்டிருந்தது. இரவில் தெற்கிலிருந்து காற்று வீசத் தொடங்கியது. சாளரத்தை மழை விலாசிக்கொண்டிருந்தது.
காலை வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. ஜோஷி இலையைப் பார்த்தாகவேண்டும் என்று அடம் பிடித்தாள்.
ஒற்றை இலை அப்படியே இருந்தது.
ஜோஷி படுக்கையில் கிடந்தவாறே நெடுநேரம் அந்த இலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் சமைத்துக்கொண்டிருக்கும் சூவைப் கூப்பிட்டாள்.
“நான் கெட்ட பெண் சூ. ஏதோ ஒன்று அவ்விலையை அங்கேயே நிலைக்கச் செய்து நான் எவ்வளவு கெட்டவள் என்பதைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது. நான் சாக முடிவெடுத்தது தப்புதான். நான் இப்போது சாப்பிட முயற்சி செய்கிறேன். அதற்கு முன் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு வா. நான் என்னையே பார்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் எழுந்து உட்கார்ந்து நீ சமைப்பதை வேடிக்கை பார்க்கவேண்டும்.” என்றாள்.
கொஞ்சம் உற்சாக மனைநிலைக்கு வந்துவிட்ட ஜோஷி சொன்னாள், “சூ, நான் ஒருநாள் வங்காள வளைகுடாவை வரைவேன்.”
டாக்டர் அன்று மாலை வந்திருந்தார். டாக்டரைப் பின்தொடர்ந்து ஜோஷியின் அறைக்குத் சற்றுத் தள்ளியிருக்கும் விருந்தினர் அறைக்குப் போனாள்.
சூவின் நடுங்கும் மென்மையான கரங்களைப் பற்றி டாக்டர் சொன்னார், “அவள் குணமாகும் அறிகுறிகள் தென்படுகின்றன. அவளை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும், அவள் முற்றாய் குணமாகிவிடுவாள். இதே அடுக்கு மாடியில் இருக்கும் அடுத்த நோயாளியை நான் போய்ப் பார்த்தாக வேண்டும். அவர் பெயர் பெஹர்மன். ஓர் ஓவியர். அவருக்கு நிமோனியா என்றே யூகிக்கிறேன். அவர் வயதானவர். மிகுந்த அக்கடுமையான நோயில் வாடுகிறார். பலவீனமானமாகிக் கிடக்கிறார். அவர் பிழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நாம் இன்று அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகலாம். அவரைச் சிரமப்படுத்தாமல் நாம் மென்மையாகக் கையாளவேண்டும்.”
மறுநாள் ஜோஷியைப் பரிசோதித்த டாக்டர் சொன்னார், “அவள் தேறிவிட்டாள். நீ அவளைக் கண்ணுங் கருத்துமாய் கவனித்திருக்கிறாய். அவளுக்குச் சத்துள்ள உணவு கொடுத்தால் முழுமையாகத் தேறிவிடுவாள். அவ்வளாவுதான்!”
மாலையில் சூ, ஜோஷி ஓய்வெடுக்கும் அறைக்கு வந்தாள். அவள் தோள் மீது கைபோட்டாள்.
“நான் உன்னிடம் ஒரு விடயம் சொல்லவேண்டும் ஜோஷி. திரு பெஹர்மன் இன்று நிமோனியாவால் மருத்துவ மனையில் இறந்துவிட்டார். அவர் இரண்டே நாள்கள்தான் காய்ச்சலாக இருந்தார். யாரோ ஒருவர் அவரை அவருடைய அறையில் பார்த்திருக்கிறார்கள். அவர் கடுமையான நோயில் யாருடைய உதவியுமற்றுத் தனியாகக் கிடந்திருக்கிறார்.
“அவருடைய ஆடைகளும் காலணியும் சில்லிட்டுச் சொத சொதத்து இருந்தன. அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த இரவு பனிமழை கொட்டி கடுமையான குளிராக இருந்திருக்கிறது. பிறகு எதையோ கண்டெடுத்திருக்கின்றனர். அவர் வெளியே எடுத்துச் செல்லும் ஒரு கைவிளக்கு. ஓவியம் வரையும் உபகரணங்கள் வேறு கிடைத்திருக்கின்றன. பச்சை வண்ணமும், மஞ்சள் வண்ணமும், அப்புறம்….சன்னலுக்கு வெளியே பார் அன்பே, அந்தக் கடைசி இலையை…அந்த இலை அசுரக் காற்றிலும் ஏன் அசையவில்லை என்று நீ அறியவில்லையா? ஓ… அன்பே. அது பெஹர்மனின் கனவான அற்புத ஓவியம். அவர் நோயில் வீழ்ந்த அந்த இரவில்தான் இந்தச் சுவர் ஓவியத்தை அவர் வரைந்திருந்தார்.
00

கோ.புண்ணியவான்


மிகவும் நுனுக்கமாகவும் உணர்வுகளை கையகப்படுத்தி கதையாடல் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. உயிர்ப்பான ஓரிலை மரத்தைவிட ஓவியம் உயிரை நிலைநிறுத்தியது இன்னொரு ஈர்ப்பு பாராட்டத்தக்கது. ஓவியரின் உயிர் பிரிந்தது மர்மமாக படைக்கப்பட்டது….