நிறப் பார்வைக் குறைபாடு
விஸ்வம் முற்பகலில் தற்செயலாக தனது ஆறு வயது மகன் ப்ரசன்னாவின் தொடக்கப் பள்ளி அருகில் இருந்தார். மகனை ஆச்சரியப்படுத்த விரும்பி, அவனைக் காணச் சென்றார்.
அவனது வகுப்பினருக்கு அப்போது விளையாட்டுப் பாடவேளை என்பதால் மைதானத்தில் இருந்தனர். விஸ்வம் அங்கே சென்றார். குழந்தைகளின் கூட்டத்தில் இருந்த ப்ரசன்னா அவரைப் பார்த்ததும் ஓடி வந்தான். அவனது கைகளில் பவர் ரேஞ்சர் மாதிரி ஒரு சிறிய பொம்மை.
“இது ஏது?” அவர் கேட்டார்.
“என்னோட ஃப்ரன்டு ஒருத்தன்கிட்டருந்து, கொஞ்ச நேரம் வெச்சுட்டிருக்கறதுக்காக வாங்கினேன் டாடி…” சொல்லிவிட்டு தன் குழுவில் யாரையோ சுட்டிக் காட்டினான்.
அங்கே சுமார் ஒரு டஜன் குழந்தைகள் இருந்தன. அவர்களில் யாராக இருந்தாலும் இருக்கலாம் என்பதால் விஸ்வம் சிரித்தார்.
சிறுவன் அதை கவனித்துவிட்டு, “அந்த… ப்ளூ ஷர்ட் போட்ட பையன்” என சுட்டிக் காட்டினான்.
அது ஏழு குழந்தைகளாக சுருக்கியது.
ஆயினும் அவன் யாரைச் சுட்டுகிறான் என்பது தெரியவில்லை. அதை மகனுக்குத் தெரிவிக்க தலையை இட வலமாக ஆட்டினார்.
“ரெட் ஸ்னீக்கர் போட்டிருக்கானே,… அவந்தான், டாடி!”
அது நீல சட்டை அணிந்த எந்தக் குழந்தைகளுக்கும் பொருந்தவில்லை. ஒருவேளை, அந்தப் பையனின் ஸ்னீக்கர் வரைகலையில் எங்கேனும் சிறிய அளவில் சிவப்பு இருக்கலாம். இங்கிருந்து பார்க்கும்போது தெரியவில்லை.
இறுதியாக, ப்ரசன்னா, “அங்கே,… டாடி! இப்ப பந்தை வெச்சிட்டிருக்கானே,… அவன்!” என்றபோது, விளையாட்டு மைதானத்தின் மறு பகுதியில் உள்ள ஒரே கருப்புக் குழந்தையைக் குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது.
“நீ சொல்றது கருப்புக் குழந்தையா?” கேட்க வாயெடுத்தவர், உதடுகளைக் கடித்து நிறுத்திக்கொண்டார்.
ப்ரசன்னா அந்தக் குழந்தையின் தோலின் நிறத்தைப் பார்க்கவே இல்லை. அதன் சட்டை மற்றும் ஸ்னீக்கர்களின் நிறத்தைப் பார்க்க முடிந்த அவனால், தோலின் நிறத்தை எப்படிப் பார்க்க முடியவில்லை என்பது விஸ்வத்துக்குப் புரியவில்லை. இருப்பினும் அதில் அவருக்கு திருப்தி, மகிழ்ச்சி. மகனுக்குத் தெரியாத அதை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் உணர்ந்தார்.
00
கடவுளின் விளையாட்டுத் தோழர்கள்
கடவுளுக்கு சொர்க்கத்தில் துணைவர்களோ, தோழர்களோ இல்லை. அவரின் பணியாட்களாக வானவர்களும், தெய்வங்களும் இருந்தாலும், அவர் தோழர்களாக ஆக்கிக்கொள்கிற அளவுக்கு அவர்களிடம் புனிதமோ, உன்னதமோ இல்லை. அதனால் வறண்ட தனிமையில் சலிப்புற்றிருந்தார்.
அவருக்கு தூரத்து உறவாக பூமியில் சில விளையாட்டுத் தோழர்கள் இருந்தனர். நீங்கள் யூகிக்கிறபடியே, குழந்தைகள்தான். கடவுளுக்கு நீண்ட ஓய்வு கிடைக்கும்போதும், மனம் வருத்தமுற்றிருக்கிற சமயங்களிலும், அவர்களை தரிசிக்க புனிதப் பயணம் மேற்கொண்டு பூமிக்கு வருகை புரிவார். தனது தோழர்களோடு விளையாடி மகிழ்ந்து, வருத்தங்களைப் போக்கிக்கொள்வார்.
அப்போது கடவுள் கடவுளாகவே இருந்தார்; குழந்தைகளும் குழந்தைகளாகவே இருந்தன.
பிற்பாடு குழந்தைகள் வளர்ந்து இந்து, பௌத்தர், சமணர். சீக்கியர், தாவோயிஸ்ட், கன்ஃபூஷியர், ஷின்டோ, யூதர், கிறிஸ்துவர், இஸ்லாமியர், கௌதாயிஸ்ட் (Caodaist), லிங்காயத் என ஆகிவிட்டனர். கடவுளும் அதற்குப் பிறகு பூமிக்கு வருவதை நிறுத்திவிட்டார்.
00
காலத்துக்கும் வெளிக்கும் இடையிலான விவாதம்
இருத்தலின் எல்லையற்ற பரப்பில், ப்ரபஞ்சத்திற்கும் காலத்திற்கும் இடையே கடுமையான விவாதம்.
நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களால் மின்னும் ப்ரபஞ்சம் கர்வத்தோடு கூறியது:
“ஒரே ஒரு அணுவிலிருந்து விரிவாக்கம் அடைந்தவனும், எல்லையற்றவனும், இன்னும் விரிவடைந்துகொண்டே இருப்பவனுமான நான்தான் பெரியவன்!”
காலம், அமைதியான, ஆனால் சக்திவாய்ந்த குரலுடன் எதிர்த்தது:
“உன்னையே இயக்குகிற நான்தான் பெரியவன்! நானும் மைக்ரோன் விநாடியிலிருந்து விரிந்து யுகங்களாக நீள்கிறவன். நான் இல்லையெனில் உனது இருப்பு அசைவற்ற பிம்பமாக, இத்தனை இருந்தும் எதுவுமே இல்லாததாக, அர்த்தமின்மையின் முடிவற்ற நீட்சியாக மட்டுமே இருக்கும்.”
அப்போது அண்டப் பெருவெளியின் ஏதோ ஒரு மூலையில் துளியாக உள்ள பூமிக் கிரகத்தில், நிலத்தைத் துளைத்தபடி ஒரு புல்லின் நுனி வெளிப்பட்டது.
அந்த நொடியில் ப்ரபஞ்சமும் காலமும் ஆழமான ஒன்றைப் புரிந்துகொண்டன. அவர்கள் எதிரிகள் அல்ல; மாறாக, ஒரே முழுமையின் இரு பகுதிகள்.
பிறகு வெளி பெண்ணாயிற்று; காலம் ஆணாயிற்று. இரண்டும் ஒன்றையொன்று ஆரத் தழுவிக்கொண்டன.
00
கௌரவமான பிச்சைக்காரன்
பழைய, புதிய பேருந்து நிலையங்களை ஒட்டியுள்ள நாற்சந்திக்குக் கிழக்கே, தென்புற நடைபாதை மேடைதான் அவர்களின் வசிப்பிடம். நடைபாதைவாசிகளான அவர்களை அங்கே பகல், இரவு எந்த நேரத்திலும் பார்க்கலாம். சுமார் 8 – 10 பேர் இருப்பார்கள். நடுத்தர வயதினர் மற்றும் கிழவர்களான ஆண்கள்தான் அதிகம். ஓரிரு கிழவிகளும் இருப்பர். பழைய, அழுக்கான ஆடைகள், பரட்டைத் தலைகள் இவர்களின் பொது அடையாளம். யானைக் கால் வியாதி, தொழு நோய், கை – கால் முடம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்களும் இருப்பர். சிலர் இந்த நடைபாதைக்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள். சிலர் தற்காலிக குடியிருப்பாளர்கள்.
இவர்களில் எவரும் உழைத்து வாழ்பவர்கள் அல்ல. பிச்சை எடுப்பதற்கும் போவதில்லை. இங்கே இருந்தபடி யாசிப்பதும் கிடையாது. சுமார் பத்து அடி இடைவெளிகளில் தனித்தனியே அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருப்பார்கள். வெயில் கொளுத்தும் பகல் பொழுதில் கூட, நகரின் மையமாக உள்ள அந்த பரப்பான சாலையின் மருங்கில், வாகன சத்தங்களை மீறி, இவர்களில் ஓரிருவர் தங்கள் முகத்தை துணியில் மூடி, நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.
இந்தக் காலத்தில் மனிதாபிமானம் பெருகிவிட்டது வியப்புக்குரியதுதான். வறியவர்கள், அபலைகள், கைவிடப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள், தெருப் பைத்தியங்கள் ஆகியோருக்கு ஒரு நேரம் உணவளிப்பதை சில நல்லுள்ளங்கள் சேவையாக செய்து வருகின்றன. அப்படிப்பட்ட சிலர் இவர்களுக்கு தினமும் மதிய நேரம் வந்து உணவுப் பொட்டலம் விநியோகித்துச் செல்வது வழக்கம். அதிகப்படியாக வாங்கி உணவை வீணாக்குகிறார்கள் என்பது, இவர்களுக்குப் பின்புறமாக, வளாக சுவர் ஓரங்களில், பாதி – முக்கால் பாகத்துக்கு உணவோடு வீசப்பட்டுக் கிடக்கும் அலுமினிய ஃபாயில் கன்டெய்னர்களிலிருந்து தெரிய வரும்.
ஒரு நாள் மதியம் ஒரு மணி வாக்கில், புதிய பேருந்து நிலையத்தை நோக்கி இந்த நடைபாதையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். ஸ்கூட்டியில் வந்திருந்த, ஜீன்ஸும் டாப்சும் அணிந்த இளைஞி, மேற்கு முனையில் நின்றபடி நடைபாதைவாசிகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகித்துக்கொண்டிருந்தாள். நாலைந்து பேர் அவளிடம் சென்று வாங்கிக்கொண்டிருந்தனர். நான் சென்றுகொண்டிருந்த இடத்துக்கு அருகே, நடைபாதையில் முக்கால்வாசி தூரத்தில் இருந்த கிழவியும் உணவுப் பொட்டலம் வாங்க எழுந்தாள். அப்போது அவளின் அருகே அமர்ந்திருந்த, ஆரோக்கியமான உடல் கொண்ட, நடுத்தர வயது ஆண், “நீ எதுக்கு அங்க போற? அந்தப் பொண்ணு இங்க வந்து குடுக்கட்டும். உக்காரு!” என்றார், ஜம்பமாக. கிழவி யோசனையோடு தயங்கி நிற்கவே, அவளை அமரச் சொல்லி அந்த நபர் சைகை செய்தார். கிழவியும் மனசின்றி அமர்ந்துவிட்டாள். அவள் எதிர்பார்ப்போடு பொட்டலத் திசை பார்த்துக்கொண்டிருக்க, ஜம்ப ராஜா அலட்சியமாகக் காலாட்டியபடி அமர்ந்திருந்தார்.
மூலையில் உணவு விநியோகத்தை முடித்துவிட்டு இளைஞி மிச்ச பொட்டலங்கள் அடங்கிய பிக் ஷாப்பர் பையோடு அவர்களை நோக்கி வந்தாள்.
00
கனவுகள் பூக்கும் பெருவனம்
மனிதக் கனவுகளைப் பூக்களாக மலர்த்தும் அற்புத வனத்துக்குள் அவள் ஆவலோடு பிரவேசித்தாள். அவள் இதுவரை பார்த்திராத புல் – பூடுகள், எதார்த்தத்தில் எங்குமே இருக்க முடியாத செடி – கொடிகள், நம்பவியலாத அளவு ப்ரம்மாண்டமான மரங்கள் ஆகியவை இருந்தன. வரலாற்றுக்கு முந்தைய வன விலங்குகள், புராணப் பிராணிகள், கற்பனைக்கும் எட்டாத புழு – பூச்சி இனங்கள் தென்பட்டன. வினோதமான வடிவங்கள் கொண்ட பறவைகள் விந்தையான இசை ஒலிகளை எழுப்பின. மூலிகைகளின் வாசனையோடு இதமான தென்றல் தவழ்ந்துகொண்டிருந்தது. இலைகளும் கிளைகளும் ஒயிலாக அசைந்தன. கொடிகள் ஒத்திசைவான நாட்டிய அசைவுகளைச் செய்தன.
வனம் தனது கனவுகளை மலர்த்துவதற்காகக் காத்திருப்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.
அவளுக்குள் சிந்தனாபூர்வமான எண்ணங்கள், ஒடுக்கப்பட்ட ஆசைகள், தணிக்கை செய்யப்பட்ட கனவுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தாள். அவை யாவும் உடனுக்குடன் அங்குள்ள செடிகள், கொடிகள், மரங்களில் பூக்களாயின. நூற்றுக் கணக்கான வண்ணங்கள், ஈர்ப்பான வண்ணச் சேர்க்கைகள், புதுமையான வடிவங்கள், மூன்று மில்லி மீட்டர் முதல் இரண்டே கால் மீட்டர் வரையிலான அளவுகள், நுட்பமான வரைகலைகள், மெல்லியது முதல் காட்டமானது வரையிலான நறுமணங்கள் கொண்ட பூக்கள்.
அந்த அதிசயங்களால் பிரமித்து மெய்மறந்தாள். பூக்களாக மாறிய தனது கனவுகளின் வசீகரத்தைக் கண்டு அவளின் இமைகள் மூட மறந்தன. மாறாக, அகல விரிந்தன.
அதன் பின் தனது ரகசியக் கனவுகளை மெதுவாக வெளிக் கொணர்ந்தாள். அவை அவளின் வெளிப்படையான கனவுகளின் மலர்களைக் காட்டிலும் ப்ரகாசமான வண்ணங்கள், கவர்ச்சியான வடிவங்கள், மயக்கும் நறுமணம் கொண்டிருந்தன. தேன் உண்ணிகளான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பிற பூச்சிகள் மற்றும் வண்டு இனங்கள், தேன்சிட்டுகள் ஆகியவை அந்த மலர்களால் கவரப்பட்டு அவற்றை நாடி வந்து தேன் அருந்தி இன்புற்றன. அதைக் கண்டு அவள் மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்டாள்.
தேன் உண்ணிகள் போதையில் மயங்கிக் கிறங்கும்போது, அவளின் ரகசியக் கனவுப் பூக்கள் தம் இதழ்களை மூடிக்கொண்டன. ஆபத்தை உணர்ந்து அந்த உயிரினங்கள் கீச்சிட்டுத் தப்ப முயன்றன. ஆனால் முடியவில்லை. ரகசியக் கனவுகளின் மலர்கள், தம் இதழ்களை இறுக்கி, தம்முள் சிக்கிக்கொண்ட அந்த உயிரினங்களைக் கசக்கின. அவற்றின் சாறை விழுங்கிக்கொண்டு சக்கைகளை வெளியே துப்பின.
அவள் அரண்டாள். பயத்தில் அலறியடித்து ஓட முற்பட்டாள். தன்னால்தானே அந்த அப்பாவி உயிரினங்கள் கொடூரமாக பலியாகின என்ற குற்ற உணர்வு மேலிட்டது. இனி உள்ள மிச்ச உயிரினங்களையாவது காக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்புணர்வும் ஏற்பட்டது. அதற்கு என்ன செய்வது? அவற்றை எப்படிக் காப்பது? தெரியாமல் குழம்பித் தவித்தபடி வனத்தில் அலைமோதினாள்.
உயிர் தின்னிக் கனவுப் பூக்கள் வளர்ந்து பெரிதாக விரிந்துகொண்டேயிருந்தன. அவற்றின் அல்லிவட்டங்கள் நீண்டு, அவளையும் பிடித்து இழுத்து சுற்றி வளைக்கத் தொடங்கின.
*******

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.