ராட்டினம்

நாள்தீர சுழன்ற

நாலுகூடை ராட்டினம்

சடைந்து நின்றது

வீழ்ந்த ராட்டினக்காரனை

விடியலுக்கான அரைபாட்டில்

இறுகப்பற்றி இருக்கிறது

சாராய மிடறுகளின்

ஓரவாய் ஒழுகலென

இன்றைக்குத் தேறியது

டஜன் கண்ணாடி வளையல்களும்

தேர்மிட்டாய்களும் தான்.

அவனும் ஓர் ராட்டினம்

சக்கரமாய் சுழன்றாலும்

அங்குலம் நகர்வதில்லை.

00

ரணந்தின்னி மீன்கள்

நித்தம் குறை காணும்

காதல்கூட நெற்றியில்

முத்தமிட்டு உன்னளவு காதல்

உலகினில் இல்லை என்னும்.

ஏறிட்டும் பார்க்காத பெருந்தகை

ஓர்நிமிடம் நின்று

கரம் பற்றி வாழ்த்துகிறார்.

கால்சட்டை கழன்று

நிர்வானமாய் நின்ற வாதங்களில்

சாட்டைத் தெறிக்கப்

பேசிப் புன்னகைப்போம்.

முட்களை வார்த்தைகளாக்கி

குத்தியவர்களே அவற்றை

அலுங்காமல் களைந்து

மன்னிப்பைக் கோருவர்.

கொஞ்சம் கண்களை மூடி

கனவில் மூழ்கி விடுங்கள்.

நிஜங்களின் காயங்களை

கனவுகள் தின்னுட்டும்.

கால்களின் ரணங்களைத்

தின்னும் சின்ன வண்ண

மீன்களைப் போல.

00

கீர்த்திவாசன் 

நான் கோவையைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது பள்ளிக் காலத்தில் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் தொடங்கியது. ஆனந்த விகடனில் சில கவிதைகளும், சிறுகதைகளும், சொல்வனம் மற்றும் வாசகசாலை இணையதளங்களில் சிறுகதையும் வெளியாகி இருக்கின்றன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *