நன்னகரம் என்ற கிராமத்தில் குப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை குப்பன் என்று சொல்வதைவிட குரங்கு குப்பன் என்று தான் எல்லாரும் அழைப்பார்கள். ஏன் எனில் அவனுக்கு குரங்குகள் மேல அலாதி பிரியம் உண்டு. தினமும் குரங்குகளுக்கு அவன் உணவும் தண்ணீரும் கொடுப்பான். அவனை பார்க்க வேண்டும் என்றால் குற்றாலத்திற்கு சென்றால் போதும். அங்குள்ள குற்றாலநாதர் கோவில் மடத்தில் தான் இருப்பான். அங்கு வரும் குரங்குகளுக்கு வயிறார உணவு கொடுப்பது குப்பனுடைய அன்றாட பணிகளுள் ஒன்று .
அன்றும் அப்படி தான் வழக்கம்போல குரங்குகளுக்கு உணவு கொடுக்க மடத்துக்கு வந்தான். அவன் வழக்கமாக அமரும் இடத்தில் வந்து அமர்ந்து நெகிழி பாய் ஒன்றை தனக்கு முன்னால் விரித்து தான் கொண்டுவந்த கொய்யா, வாழைப்பழம்,தர்பூசணி போன்ற பழங்களை எடுத்து வைத்தான். அவன் இப்படி வைப்பதை மரத்துமேல் இருந்தபடி சில குரங்குகள் பார்த்துக்கொண்டு இருந்தன.பிறகு ஒவ்வொரு குரங்காக கீழ இறங்கி வர ஆரம்பித்தன .அதை பார்த்ததும் குப்பனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை ரொம்ப உற்சாகமா பாடிக்கிட்டே பழங்களை துண்டு துண்டாக நறுக்கி வைத்தான்.
குப்பன் அருகில் நெருங்கிவந்த குரங்கு ஒன்று சுற்றியும் முற்றியும் பார்த்தது. அப்போது குப்பன் சொன்னான் ” வா ராமா! உன்ன யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்க வா வந்து இந்த பழங்கள சாப்பிடு” என்றான்.
குப்பன் இப்படி சொன்னதும் மற்ற குரங்குகளும் அவன் பக்கத்தில் வந்தன. குப்பன் எதிர்பாராத நேரமாக ஒரு குரங்கு குப்பனுடைய வாயை பொத்தியது இன்னும் சில குரங்குள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து குப்பனுடைய கை, கால்களை கட்டி தூக்கியது. கொஞ்ச நேரத்துலயே எல்லா குரங்குகளும் சேர்ந்து குப்பனை அந்த இடத்துல இருந்து ரொம்ப தொலைவாக மலையின் நடுப்பகுதிக்கு தூக்கிகொண்டு சென்றன.
குரங்குங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து குப்பனை குற்றாலமலை உச்சிபகுதிக்கு கொண்டுவந்து இறக்கிவிட்டன. குப்பன் சுற்றியும் பார்த்தான் பார்க்கும் இடம் எங்கும் மரங்களாக இருந்தது. மரங்களுக்கு ஊடாக வகிடு எடுத்தது போல நடுவில் ஓடியது சிற்றாறு. கூலாங்கற்களுக்கு நடுவில் சலசலவென சத்தம் எழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்த சிற்றாற்றுக்குள் இருந்த வட்டப்பாறையில் குப்பன் அமர்ந்திருந்தான் அந்த ரம்மியமான சூழலை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை .
குப்பனுக்கோ பயம் தாங்கவில்லை ரொம்ப கோவமாக குரங்குளிடம் “ஏ குரங்குகளே என்னை ஏன் இங்கே தூக்கி கொண்டு வந்தீங்க?, நான் உங்களுக்கு நல்லது தானே பண்ணுனேன் ஆனா நீங்க உங்களோட குரங்கு புத்திய காட்டிட்டீங்களே ” அப்படினு கத்த ஆரம்பிச்சான் . எந்த குரங்கும் குப்பனோட கேள்விக்கு பதில் சொல்லல. அவனும் விடாம கத்திட்டே இருந்தான்” என்ன அவுத்துவிடுங்க இல்ல நான் உங்கள சும்மாவிடமாட்டேன் ” என்றான்.
குப்பனின் கத்தலை கேட்ட குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன .
“டேய் சுப்பு இவன் என்னடா இப்படி லெடலெடனு பேசிட்டே இருக்கான்” என்றது அப்பு.
“பேசாமா இவன இந்த மலையில் இருந்து உருட்டிவிட்டுட்டா என்ன “என்றது சுப்பு.
குரங்குகள் இப்படி பேசுவதை கேட்ட குப்பன் “என்ன சொன்ன என்ன உருட்டிவிட போறீங்களா” என்று அலரினான்.
“இதுவரைக்கும் உன்ன தள்ளிவிடவா வேண்டாமானு பேசிட்டு நான் இருந்தோம் நீ இப்படியே கத்திட்டு இருந்த உன்னை தள்ளிவிடுவது உறுதி” என்று கோரசாக கூறின அப்பு,சுப்பு குரங்குகள்.
“நான் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணுனேன் என்னை தூக்கிட்டு வந்து இப்படி கொலை பண்ண பாக்குறீங்களே” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.
“என்ன? உன்னை கொலை பண்ண பாக்குறோமா. குப்பா நாங்கள் உன்னை தூக்கிகொண்டு வந்தது என்னமோ உண்மை தான் ஆனால் உன்னை கொலை செய்யும் நோக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. நீ விடாமல் கத்திக்கொண்டே இருந்ததால் தான் அப்புவும் ,சுப்புவும் உன்னை பயமுறுத்த அப்படி கூறினார்கள் . நீ எங்களை கண்டு அஞ்ச வேண்டாம் ” என்று தன்மையாக எடுத்துக்கூறியது அங்கிருந்த மருதன் என்ற குரங்கு.
குப்பனுக்கு பயம் இன்னும் போகவில்லை அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க அந்த நேரம் எல்லா குரங்குகளும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. அவற்றின் இந்த செயல்களை புரியாது பார்த்துக்கொண்டு இருந்தான் குப்பன். அருகில் இருந்த இருள் சூழ்ந்த அந்த குகைக்குள் இருந்து சில இளம் குரங்குள் ஓடிவந்தன அதனை தொடர்ந்து சில பெரிய குரங்குகளும் வந்தன இறுதியாக வந்தது ஒரு குரங்கு . பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்த அந்த குரங்கு ராஜ நடைபோட்டு வந்தது. சுற்றி இருந்த குரங்குகள் எல்லாம் அமைதியாக நிற்க நேராக குப்பனிடம் வந்த அந்த குரங்கு “வணக்கம், குப்பா என்னுடைய பெயர் சுக்ரீவன் நான் இந்த குரங்கு கூட்டத்தின் தலைவன்” என்று தன்னை அறிமுகம் செய்தது.
“நீ யாராக வேண்டுமானாலும் இருந்துக்கோ ஆனா என்ன ஏன் இப்படி கடத்திட்டுவந்து கொடுமைபடுத்துறீங்க” என்றான் குப்பன்.
“அட நீ என்னப்பா வந்ததுல இருந்து கொடுமைபடுத்துறோம், கொலைபண்ணுறோம்னு நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தத சொல்லிட்டே இருக்க” என்றான் மருதன்.
“உன்னோட கையையும் காலையும் கட்டி தூக்கிட்டு வந்தா அப்ப தெரியும், மொதல்ல என்ன அவுத்துவிடச்சொல்லு” அப்படினு மறுபடியும் கத்த ஆரம்பிச்சான்.
குப்பன் விடாம கத்தவும் கோவம் வந்த குரங்கு தலைவன் சுக்ரீவன் குப்பனிடம் “இங்க பார் குப்பா நாங்க உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் அதற்காக தான் உன்னை இங்கே அழைத்து வந்தோம், நீ ஒழுங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா உன்ன கூட்டு வந்த மாதிரியே திரும்ப கூட்டு போயி விட்டுடுவோம், சும்மா இப்படி கத்தி கத்தி எங்கள கோவப்படுத்துன அப்பறம் இந்த மலைல இருந்து உன்ன உருட்டிவிட்டுருவோம்” என்று சொன்னது.
என்னாட இது இதுவும் நம்மள மலையில் இருந்து உருட்டிவிடுவோம்னு சொல்லுதே ஒருவேளை சொன்னது செய்துவிடுமோ என்று பயந்த குப்பன் உடனே “நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் மலையில் இருந்து மட்டும் என்ன உருட்டி விட்டுடாதீங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தான் .
“அந்த பயம் இருக்கட்டும். இப்போ பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாமா?” என்று தோரணையாக கேட்டான் சுக்ரீவன்.
பயத்துல நாலாபக்கமும் தலையை ஆட்டினான் குப்பன்.
சுக்ரீவன்ஆரம்பித்தது “ஆமா உன் பெயர் என்ன?”
“குரங்கு குப்பன்”
“குரங்கு குப்பனா? நீ என்ன எங்களமாதிரி காட்டுலயா பொறந்த?”
“இல்லை “
“அப்பறம் எங்களாட்டம் நாளு காலுலையா நடக்க ?”
“இல்லை “
“அட எங்களாட்டம் உனக்கு வாலாது இருக்கா?”.
“இல்லை”
“இப்படி எதுலையுமே எங்களோட நீ சம்பந்தபடல அப்பறம் எதுக்கு உன்னோட பெயர் குரங்கு குப்பன்”.அப்படினு கேட்டான் சுக்ரீவன். அதைக்கேட்டதும் ரொம்ப கர்வமா குப்பன் சொன்னான் “நான் தினமும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவு கொடுக்குறேன் அதனால தான் மக்கள் எல்லோரும் என்னை குரங்கு குப்பன்னு என்று அழைக்கின்றனர்”.
சுக்ரீவனும் மற்ற குரங்களும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சாங்க .
குப்பன் கொஞ்ச கோவமா” நான் இப்ப என்ன சொல்லிட்டேனு எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க” என்றான்.
குரங்கு தலைவன் சொன்னது
“இல்ல எங்களைப்போன்ற ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கும் , பல்லாயிரக்கணக்கான பறவைகள்,சிங்கம்,புலி,யானை, கரடி மாதிரி போன்ற பல உயிர்களுக்கு இடமும், உணவும்,நீரும் கொடுத்து பாதுகாக்கிற இந்த காடே தன்னடக்கமா இருக்கையில வெறும் நூறு குரங்குக்கு சாப்பாடு வழங்கிவிட்டு உன்னுடைய பெயருக்கு முன்னாடி எங்களின்பெயரை இணைத்துக்கொண்டு ஏதோ சாதனை பண்ணிய மாதிரி கொண்டாடுறீங்களே உங்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்பு தான் வருது போ” என்றான் சுக்ரீவன்.
குப்பனுக்கு அசிங்கமா போயிருச்சு என்னடா இது நாம இத்தன நாளா எதுக்காக நம்மள நினைச்சு பெருமை பட்டமோ அத இப்படி ஒன்னுமில்லைனு சொல்லிட்டுங்களே இந்த குரங்கு அப்படினு நினைச்சான். இருந்தாலும் நாம இந்த குரங்குங்க கிட்ட தோற்றுவிடக் கூடாது. அது எப்படி நாம் செய்யும் இந்த மகத்தான சேவையை இவங்க குறைவா பேசலாம் அப்படினு நினைத்த குப்பன் கேட்டான் “என்ன குரங்கே இப்படி சொல்லுற நான் என்னோட சொந்த காசுல இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாழைப்பழம், கொய்யாப்பழம்,தர்பூசணி னு இப்படி வகை வகையா பழம் வாங்கிட்டு வந்து குடுக்குறேன் தெரியுமா?, அது மட்டும் இல்ல சில நேரம் தயிர் சாதம், புளியோதரை, பிரட்டு, சப்பாத்தி லாம் கூட உங்களுக்காக கொண்டுவந்து கொடுப்பேன். நீ என்னடானா ரொம்ப சாதாரணமா இதொல்லாம் ஒரு விஷயமானு கேக்குற”.
குப்பன் இப்படி கேக்கவுமே மாட்டுனான்டா மானஸ்தன் அப்படினு சொல்லிட்டே குப்பன கிட்ட வந்த சுக்ரீவன் கேட்டான் “ஆமா எங்களுக்கு பழம் கொடுப்பதாக சொன்னீயே அதெல்லாம் எங்க மேல உள்ள அன்பாலையா கொடுக்க என்னமோ உன்னோட சொந்த பணத்துல செய்யிற மாதிரி பேசுற.
நீ மொதல்ல எங்களுக்கு உணவு கொடுக்க ஆரம்பிச்சப்ப எங்களில் சிலருக்கு தான் கொடுத்த அதன்பிறகு நாளடைவில் நீ இப்படி பழம் கொடுக்குறது தெரிந்து குற்றாலத்துக்கு வருகிற சுற்றுல பயணிகள் உனக்கு பணம் கொடுத்தாங்க. நீயும் அத வச்சு தான எங்களுக்கு பழம் வாங்கிதார . நீ பேரும் புகழும் வாங்குறதுக்காக பண்ணுற இந்த காரியம் எப்படி சேவையாகும் சொல்லு குப்பா” என்று கேட்டது .
இதைக்கேட்டதும் குப்பனுக்கு வேர்த்து கொட்டியது , “நான் அவங்க பணத்துல தான் உங்களுக்கு பழம் வாங்கி கொடுத்தேன் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அது கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்து உங்களுக்கு வெட்டி கொடுத்தது நான் தானே, நான் உங்களுக்கு பசியார உணவு தானே குடுத்துருக்கேன் நியாயமா நீங்க எனக்கு நன்றி தான் சொல்லனும் ஆனா ஏன் இப்படி கோவப்படுறீங்க” என்றான் குப்பன்.
“குப்பா நீ எங்க கூட்டத்துல உள்ள சிலருக்கு பசியாற உணவு கொடுத்ததை நாங்க மறுக்கவில்லை. ஆனா அதனால நீ செய்வதது சரி என்றாகிவிடாது. உன்னோட இந்த உணவு பழக்கத்தால் காட்டின் சமநிலையே நீ மாற்றிவிட்டாய் தெரியுமா?”என்றான் சுக்ரீவன்.
“நான் உங்களுக்கு உணவு கொடுப்பதற்கும், காட்டின் சமநிலை கெடுவதற்கும் என்ன தொடர்பு இருக்கு” என்று சந்தேகமாக கேட்டான் குப்பன்.
(தொடரும் ……,)

ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.
இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.