“உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதற்கும் இந்த காட்டின் சமநிலை கெடுவதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு குப்பா, நாங்கள் மரங்களில் ஏறி பழங்களையும்,பூக்களையும் பறித்து உண்ணும் போது சிதறும் பழங்களும், பூக்களும் எறும்பு,வண்டு,பறவைகள் போன்றவற்றிக்கு உணவாக மாறுகிறது.
நாங்கள் மரம்விட்டு மரம் தாவி எங்களுக்கான உணவைத்தேடும் போது அந்த மரங்களில் மகரந்தசேர்க்கை நடைபெறவும் உதவுகிறோம். மரம் ஏறத் தெரியாத சில விலங்குகளுக்கும் எங்களால் கீழே சிந்தும் பழங்கள் உணவாகின்றது. நாங்கள் உணவாக உண்டு செரிக்கும் கொட்டைகள் எங்களின் கழிவுகளின் மூலம் மீண்டும் மண்ணுக்குள் மரமாக வளர்ந்து காட்டினைசொழிக்க வைக்கும். இப்படி தொடர் உணவு சங்கிலி போன்ற அமைப்பை உங்களை போன்றார் கொடுக்கும் உணவுகளால் துண்டிக்கப்படுகின்றது குப்பா” என்றான் சுக்ரீவன்.
“அதுமட்டும் இல்லை உங்களின் இந்த உணவால் எங்களின் சக்தியே பறிபோகிறது தெரியுமா?” என்றான் சுக்ரீவன்.
“நீ என்ன சொல்லுகிறாய் சுக்ரீவா உணவு கொடுத்தால் சக்தி வரும் தானே எப்படி போகும், எனக்கு ஒன்னுமே புரியலையேப்பா கொஞ்சம் புரிகின்ற மாதிரி தான் சொல்லேன்” என்றான் குப்பன் அப்பாவியாக.
“சொல்லுகிறேன் கேளு நீ பாட்டுக்கு வந்து எளிமையாக எங்களுக்கு உணவைக் கொடுத்து விடுகிறாய் அதனால எங்களில் சில பேர் சோம்பேறிகளாக மாறிவிடுகிறார்கள்.
அதுமட்டும் இல்லை உணவு தேட போகாமல் ஒரே இடத்தில் கிடைக்கிற உணவுக்காக மந்தம் பிடிச்சுபோயி மரம்விட்டு மரம் தவுவதற்கு கூட மறந்து போகின்றனர்.
ஆமாம் உனக்கு எங்களை பார்ப்பதற்கு எப்படி தெரிகிறது. நாங்கள் என்ன உங்களைப் போன்று உப்புபோட்ட பற்பசையை வைத்தா பல்லைத்துளக்குகிறோம், இல்லை கரிக்கோல் பற்பசையை வைத்து பல்லைத் துளக்குகிறோமா” அப்படினு கோவமா கேட்டான் சுக்ரீவன்
ஆங்னு முழிச்சபடியே “ஏன் இப்படி கேக்கிறாய் ” என்றான் குப்பன்.
“வேற எப்படி கேக்கனும் உனக்கு எங்களைப் பற்றி என்ன தான் தெரியும்? நீ வெட்டி வைக்கும் பழங்களை உண்டுவிட்டு போகும் குரங்குகள் என்று நினைத்தாயா.
நாங்கள் இந்தக்காட்டின் பூர்வக்குடி இனங்கள். ஏன் உங்களைப்போன்ற மனிதர்களே எங்களில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள் தான் என்று அறிவியல் சொல்கிறது அப்படி பட்ட எங்களுக்கு ஒரு பழத்த கடித்து உண்ணத்தெரியாதா? என்ன” .
“எங்களுடைய பற்களுக்கு ஒரே நேரத்தில் பல தேங்காய்களை அதனுடைய மட்டையில் இருந்து உரிக்கின்ற வலிமை இருக்கிறது தெரியுமா உனக்கு? ஆனால் நீயோ எங்களுக்கு எதையுமே கடிக்கத்தெரியாததைப்போன்று பழங்களை துண்டு துண்டாக நறுக்கி குடுக்கின்றாய். கடித்து,மென்று சாப்பிடுவதன் மூலம் தான் பற்களின் வலிமைக்கூடும் ஆனால் நீ அளிக்கும் உணவுகளோ பெரும்பாலும் எங்களின் பற்களுக்கு வலிமை சேர்க்காத எளிமையான உணவுகளாக இருக்கிறது. அவற்றை உண்பதால் எங்களுக்கு எந்த பலமும் கிடைப்பதில்லை அதற்கு பதிலாக எளிமையான உணவை மட்டுமே உண்ணக்கூடிய வாழைப்பழச் சோம்பேரியாக மாற்றிவிட்டது எங்களை”.
“என்னப்பா இது உங்களுக்கு சாப்பாடு குடுத்தது தப்பா ? என்று சோகமா கேட்டான் குப்பன் .
“ஆமா தப்பு தான்….,” என எல்லா குரங்குகளும் ஒரு சேர சத்தமாக கத்தியது .
இதை கேட்டதும் குப்பனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவனின் சோகத்தை பார்த்த சுக்ரீவன் குப்பனின் அருகில் வந்து அமர்ந்தது. குப்பனுடைய கட்டுகளை விடுவித்துவிட்டது.
”இந்தா குப்பா நீ இங்கே வந்து ரொம்ப நேரம் ஆகுது உனக்கும் பசிக்கும் தானே இதை சாப்பிடு” என்றபடி குப்பன் முன் தன் கையில் வைத்திருந்த சிலக்காய்களை நீட்டினான் சுக்ரீவன்.
சுக்ரீவன் கொடுத்த காய்களைக்கண்ட குப்பன் “இவை பச்சைக்காய்கள் இதை எப்படி நான் சாப்பிட முடியும்?” என்று கேட்டான் குப்பன்.
“ஏன் சாப்பிட முடியாது குப்பா நாங்கள் எல்லோரும் இதை சாப்பிடுவோமே. இது ரொம்பவும் சுவையாக இருக்கும் நீயும் சுவைத்துப்பார்” என்றான் சுக்ரீவன்.
“இந்த உணவை சாப்பிட்டால் என் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது சுக்ரீவா, வாந்தி எடுத்துவிடுவேன்” என்று பதறினான் குப்பன்.
“இதைதான் நாங்களும் உன்னிடம் சொல்கிறோம் குப்பா. நீங்கள் கருணை என்கின்ற பெயரில் குடுக்கும் பல உணவுகள் எங்களின் வயிற்றையும், உடலையும் பாழாக்கிவிடுகின்றன. நீங்கள் குடுக்கும் பழங்கள் கூட பரவாயில்லை ஆனால் நீங்கள் வீணாக்கும் உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் எங்களுக்கு அளித்து எங்களின் வயிற்றை ஒரு குப்பைத்தொட்டிப்போன்று மாற்றிவிட்டீர்கள். இதனால் எங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளும் ஏராளம் குப்பா.”
“நிஜமாகவே இந்த உணவுகள் உங்களின் உடம்புக்கு ஏற்புடையது கிடையாதா” என்று வியப்பாக கேட்டான் குப்பன்.
”ஆமாம் குப்பா உங்களை போன்ற மனிதர்களால் எப்படி பச்சையாக உணவை உட்கொள்ள முடியாதோ அதைப்போல எங்களுக்கும் உங்களின் உணவுகள் ஏற்புடையதாக இருக்காது குப்பா.”
“அதோ அங்கு உட்கார முடியாமல் படுத்து கிடக்கின்றானே மாரி இந்த பயலுக்கு உங்களின் உணவு என்றால் கொள்ளைப்பிரியம். அந்த உணவுகளையே திண்று திண்று காட்டில் கிடைக்கும் எந்த உணவையும் அவன் உடம்பு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, சரி உங்களின் உணவை உட்கொண்டாலாவது நன்றாக இருப்பானா என்றால் அதுவும் கிடையாது. உடல்பருமனால் ஒரு மரம்விட்டு மற்றொரு மரம் தாவுவதற்கு கூட ரொம்பவும் சிரமப்படுறான். இவன் மட்டும் இல்லை இவனைப் போன்ற பல குரங்குகள் இப்படி உடல்பருமனால் அவதிப்படுகிறார்கள் குப்பா “.
சுக்ரீவன் கூறுவதைக்கேட்ட குப்பனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் நன்மை செய்வதாக எண்ணி செய்த ஒரு செயல் இவ்வளவு பாதிப்பை அளிக்கிறதா என்று அவன் மனமார வருந்தினான். அப்பொழுது அருகில் இருந்த மரத்திலிருந்து இரண்டு குரங்குகள் பொத் என்று கிழே விழுந்து ஒன்றுடன் ஒன்று மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக்கொண்டன. இரு குரங்களின் முகம், பிட்டம்,முதுகு,வால் போன்று பல இடங்களில் இரத்தக்காயங்கள் இருந்தது பார்க்கவே குரூரமாக அவைகள் இரண்டும் சண்டையிட அதைக்கண்ட குப்பனோ பயத்தில் சுக்ரீவனின் பின்னால் நின்றுகொண்டான்.
சுக்ரீவனும் மற்ற குரங்குகளும் இணைந்து சண்டையிட்ட இரு குரங்குகளையும் தடுக்க முயற்ச்சி செய்தன. ஆனால் அவைகள் சண்டையை நிறுத்துவதாக இல்லை. நேரம் கூட கூட சண்டையிடும் வேகமும் அதிகரித்தது. இறுதியில் சண்டையிட்ட ஒரு குரங்கு மரணிக்கவும் மற்றொன்று மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது. ஆனால் அதன் முகம் மட்டும் மிகவும் கோவமாகவே இருந்தது
“என்ன சுக்ரீவா இது ஏன் இவர்கள் இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டார்கள்?”என்றான் குப்பன்
“எல்லாம் உங்களின் உணவால் வந்த வினை குப்பா “
“சுக்ரீவா இதற்கும் நாங்கள் அளிக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்?”என்றான் குப்பன்
குப்பா உங்களின் உணவு எங்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து உடல்பருமனை மட்டும் உண்டாக்கவில்லை. எங்களின் ஹார்மோன்களையே மாற்றி எங்களின் இயல்புகளை தாண்டி மூர்க்கத்தனமாக செயல்படவைக்கிறது. உங்களின் உணவுகளை தேடி உங்கள் இடத்துக்கு வந்து உணவுகளை எடுப்பது, நீங்கள் அளிக்கும் உணவுக்காக எங்களுக்குள் சண்டையிடுவது, சக குரங்குகளையே மரணிக்கும் வரை தாக்குவது என்று எங்களுக்குள்ளும் வன்முறையை வளர்க்கிறது உங்கள் உணவு”.
குப்பனும் சுக்ரீவனும் பேசிட்டு இருக்கும் போது ஓடிவந்தான் வெள்ளையன்.
“தலைவரே.., தலைவரே…, “என்று கத்தியபடியே ஓடிவந்தான் வெள்ளையன்
வெள்ளையன் வந்த திசையை நோக்கி சுக்ரீவனும், குப்பனும் பார்த்தனர். மரக்கிளைகளை குறுக்கு, நெடுக்காக வைத்து கட்டப்பட்ட படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இரு குரங்குகளை கிடத்தியபடி நான்கு குரங்குகள் தூக்கி கொண்டு வந்தார்கள்.
சுக்ரீவன் தனது இருக்கையில் இருந்து எழுந்து அவர்களிடம் ஓடினான். சுக்ரீவன் ஓடும் திசையில் இரத்த வெள்ளத்தில் வரும் குரங்குகளையும் கண்ட குப்பன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
“என்ன நடந்தது?” என்று கேட்டான் சுக்ரீவன்.
“தலைவரே வழக்கம் போல இந்த சுற்றுல பயணிகள் தங்களின் வாகனங்களில் போகும் போது உணவுகளை சாலையில் வீசும் உணவுகளை எடுப்பதற்காக இவர்கள் தங்களுக்குள் போட்டிபோட்டு ஓடும் போது எதிரில் வந்த சரக்குலாரியை கவனிக்காமல் சென்றதால் விபத்து நடத்து போச்சு தலைவரே” என்று அழுதபடியே கூறினான் வெள்ளையன்.
சுக்ரீவன் கண்கள் கோவத்தில் சிவந்தன “உங்களுக்கு எத்தன தடவை சொல்வது. நீங்கள் கொஞ்சம் கூட என்னுடைய பேச்சைக்கேட்க மாட்டீங்களா, ஏன் இப்படி மறுபடி மறுபடி அதே தவறை செய்து உங்க உயிர விடுகின்றீர்கள். சாலைகளில் வீசப்படும் உணவை சாப்பிட போகக்கூடாது என்று போட்ட நம்முடைய சட்டத்தை யாரும் மதிப்பது இல்லை. இதுபோன்ற ஆபத்துகளை நீங்களே விலைகொடுத்து வாங்கினால் என்ன செய்வது” என கோவமாக கேட்டான் சுக்ரீவன்.
எல்லா குரங்குகளும் தலை கவிழ்ந்தபடி அமைதியாக இருந்தன.
சுக்ரீவன் பார்வை குப்பன் மேல் விழுந்தது “குப்பா நீங்கள் கொடுக்கும் உணவு சில சமயங்களில் எங்கள் உயிரையே பறித்துவிடுகிறது. இவர்கள் இருவர் மட்டும் அல்ல இதுபோல் பல உயிர்களை இப்படி நாங்கள் இழந்து வருகிறோம். இப்படி சாலை ஓர உணவுக்காக வாகனத்தில் மோதி இறப்புக்குள்ளாகுதல், ஒவ்வாத உணவு பழக்கத்தால் ஜீரணக்கோளாறு இன்னும் பிற காரணங்களால் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் குரங்குகள் தங்கள் இன்னுயிரை நீக்கின்றது” என்றான்.
குப்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை குற்ற உணவாக இருந்தது கண்ணீர் மல்க அவன் நின்றான்.
ஹாச்சு சூ…, ஹாச்சு சூ…., என்று தும்மிய படியே வந்த ராசு சுக்ரீவனின் ஏதோ காதில் கூறினான். அதைக்கேட்டதும் சுக்ரீவனின் முகம் இறுகியது. வேகமாக அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி பார்த்தான். மரத்திலிருந்து கிழே இறங்கிய சுக்ரீவன் தன் கூட்டத்தினரை நோக்கி இந்த முறை அவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் வாருங்கள் என்று தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு அவ்விடம் நோக்கி ஓடினான்.
(தொடரும் ……..,)

ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.
இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.