அந்த பாரோடு ஒரு தாபாவும் இணைக்கப்பட்டிருந்ததால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தோம், பெரும்பாலும் சிறியச் சிறிய வீடுகள். அதில் பாதி மிகவும் எளிமையானவைகளாக மங்கிய வெளிச்சத்தோடு காட்சியளித்தன. வீதிகளில் ஒன்றிண்டு பிள்ளைகள் மட்டும் உறங்காமல் அங்குமிங்கும் மெலிதான சத்தத்துடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த தெருவைத் தாண்டினால் கொஞ்ச தூரம் வெறும் பொட்டல் காடுதான். ஆங்காங்கே கருவேல மரங்களும் நின்றுக்கொண்டிருந்தன.
அதையொட்டி காலனிப் போல் வரிசையாக, சற்றுமுன் கண்ட வீடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டு எல்லாம் மாடி வீடுகளாக காட்சியளித்தன. புதிய உலகிற்குதான் வந்துவிட்டோமோ எனுமளவிற்கு பெரிய பெரிய விளக்குகள் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தன. ஒரு வேளை இது வசதியானவர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியோ என ஊகித்தபடி பிரசாத்திடம் கேட்டேன். சற்று கனைத்துச் சிரித்தபடி சொன்னார்,
“எல்லாம் பெரியப் பெரிய ஆட்களின் வீடுகள்தான், ஆனால் சின்ன வீடுகள்!”
அவர் சொன்னதின் அர்த்தம் எனக்கும் விளங்கியது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. எனக்கும் சோர்வாக இருந்தது.
நாங்கள் எங்கள் இடத்திற்குள் நுழைந்தபோது, ஹாலில் இரண்டு கட்டில்கள் கிடத்தப்பட்டிருந்தன. ஒன்றில் நானும் இன்னொன்றில் கோவிந்தமும் படுத்துக் கொண்டோம். அந்த சிறிய அறைக்குள் பிரசாத் சென்றுவிட்டார். குடிக்கொண்டிருந்த அசதிக்கு வந்த உடன் உறங்கியிருக்க வேண்டும். வந்ததிலிருந்து என்பதை விட கிளம்பியதிலிருந்தே வீட்டிற்கு இன்னும் பேசாதது ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. என்ன பேசுவது நல்லபடியாக இங்கே வந்து சேர்ந்துவிட்டேன் என்றா அல்லது நீங்கள் இருவரும் பிரியப்போவது உறுதிதானா என்றா?
காலையில் சீதம்மா முந்தைய நாள் மிச்சப்பட்ட சோறை வீணடிக்காமல் எள்ளு சாதம் போல, சிறிய வெங்காயம், கடுகெல்லாம் தாளித்துச் சேர்த்து எனக்கு பழக்கப்படாத அதே நேரம் சுவையான உணவைச் செய்து வைத்திருந்தார். என் அம்மாவும் இது போல உள்ளதை கொண்டு எதையாவது புதுமையாக செய்துப் பார்ப்பது வழக்கம்தான். சிலருக்கு வெளி இடங்களில் ஒரு கவளம் உண்டுப் பார்த்தாலே அதன் ரெசிபி மற்றும் செய்முறைப் பற்றியெல்லாம் ஒரு புரிதல் வந்துவிடுமே, அப்படிதான் என்னுடைய அம்மாவிற்கும்.
ஏதேனும் வேலையிருந்து வெளியூர் செல்லும் நேரங்களில் உயர்தர சைவ உணவகங்களுக்கே என்னையும் தங்கையையும் அழைத்துச் செல்வது அம்மாவிற்கு பிடித்தமான செயல்களில் ஒன்று. அடுத்த நாள் பார்த்தால் ஹோட்டலில் சாப்பிட்டதில் ஏதாவது ஒன்று எங்கள் வீட்டிலும் சமைக்கப்பட்டிருக்கும். அம்மாவுக்கே உரிய கைப்பக்குவமும், செய்முறைகளும் சேர்ந்திருந்தாலும் மணம், சுவையெல்லாம் அச்சு அசலாய் முந்தைய நாளை நினைவூட்டும்!
“சார்.. இன்னிக்கு டிபன் ஓகேவா?” பிரசாதுதான் வழக்கம் போல எந்திரி அஞ்சலி எந்திரி என என்னை மறுபடியும் நிகழ் உலகிற்குள் கூட்டி வந்தார். நான் புன்னகைத்தபடி நல்லாருக்கு சார் என்றேன். சீதம்மா நிறைவாக புன்னகைத்தார். அந்த நாளைக்கு திட்டமிட்டு வைத்திருந்த உடுப்புகளுடன் ஒரு சேல்ஸ் ரெப்பை போல தயாராகி பேக்டரி பக்கம் சென்றேன்.
அன்று டையெல்லாம் கட்டவில்லை. கண்விழித்ததும் கடையை திறக்கும் பெட்டிக்கடைக்காரர் போல மாடியிலிருந்து கீழே செல்வதற்கு டை என்ன வேண்டியிருக்கு? இந்த உத்யோகத்திற்கு இன் செய்து போவதே அதிகம் என்று நினைத்துக் கொண்டேன். கூடவே ஏதோ நான் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பது போலிருந்தது.
ஆனால் பிரசாதிற்கு உடை, உடல் பாவனைகளில் நான் ஒரு ஆபிசர் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருந்தது. அப்படி நினைத்ததற்கு ஒரு உபகதையும் உண்டு. அவர்கள் வீட்டில் யாரும் படித்தவர்கள் இல்லை. அவரது நாயனா அதாவது அப்பா தெனாலியிருந்து சென்னைக்கு கடைகளில் வேலைப்பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளியாகத்தான் வந்திறங்கியிருக்கிறார். அப்புறம் அண்ணாமலை படத்தில் வரும் ஐந்து நிமிட பாடல் மாதிரி இல்லாமல் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தனது கடின உழைப்பின் பலனாக நாயுடு ஸ்பைசஸ் எனும் சிறிய ட்ரேடிங்கை ஆரம்பித்த போதுதான் சந்தன் ஸ்பைசஸ் பெரியவர் வெற்றிவேலின் அறிமுகமும் அந்த குடும்பத்திற்குக் கிடைத்திருக்கிறது.
பெரியவர் சக்திவேலின் மைத்துனனான கிரணைப் போல் தன் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்றுதான் நாயுடும் நினைத்திருக்கிறார். ஆனால் பிரசாத் சகோதரர்களின் ஆர்வம் முழுக்க தந்தையின் வியாபாரங்களை கவனித்துக் கொள்வதிலேயே இருந்ததால், அந்த ஆசை நிறைவேறாமலேயேப் போயிற்று. அதனால் எதுவும் கெட்டுப் போகவில்லை. அதுவும் நாயுடு ஸ்பைசஸை இன்னொரு படிக்கு மேல் கொண்டு செல்லவே தோள் கொடுத்திருக்கிறது.
அதைத்தொட்டு இயல்பாகவே ஏற்பட்டிருந்த, எதையோ பெரிதாக சாதித்துவிட்ட ஒரு வித பெருமித உணர்வு, சந்தன் ஸ்பைசஸைப் போல் தானும் படித்த ஆட்களை வைத்து வேலை வாங்க வேண்டும், அதிலும் அவர்கள் தன் முன் டிப் டாப்பாக முதலாளி முதலாளி என்று வலம் வர வேண்டும். அதன் மூலம் தானும் ஒரு அண்ணாமலைதான் என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தன்னிச்சையாகவே முதலாளி பிரசாத்திற்குள் விளைந்திருக்கிறது!
இதில் இன்னொரு வரலாற்று உண்மை என்னவென்றால், நான்தான் அவர்களின் ஒரே ஒரு படித்த ஊழியன். பிறகு கேட்கவா வேண்டும்? “ஏதும் முக்கியமான விசிட் இருந்தால், அவசியம் டை கட்டிக்கொள்கிறேன் சார்!” என்றேன். பிரசாத் ஒப்புக்கொண்டார்.
அப்போது தலை நிறைய மல்லிகைப்பூ, பால் மஞ்சள் நீர் ததும்பும் கிணறொன்றில் மயங்கி விழுந்து, சிவந்து போன முழு நிலவை போன்று நெற்றியில் பெரிய பொட்டு என மங்கள விளக்காக வயலெட் மற்றும் பிங்க் பூக்கள் சிதறிய வெளிர் நீல வாயில் புடவையொன்றில் ஒரு பெண் பளிச்சென்று எங்களை கடந்து சென்றபோது, தனித்து தெரிந்து கவனம் ஈர்த்தாள். புதிதாக வந்திருக்கிறாளாம்.
பிரசாத் யார் என் நிறுத்தி விசாரித்தார். எங்களின் பிரகாச முகக்குறிப்பறிந்த கொட்டேஸ்வரம்மா “கொத்த அம்மாயி சார்!” என்று அறிமுகம் செய்து வைத்தார். அதில் ஒரு பெண் காவல் அதிகாரிக்குரிய பொறுப்பும், கட்டுக்கோப்புடனான ஆளுமை திறனும் வெளிப்பட்டது.
நான் பேரைக் கேட்டேன் “மல்லேஸ்வரி சார்!” என்று இப்போது அந்த பெண்ணே பதில் சொன்னாள். சீதம்மா மகளுக்கு மூத்தவள் என்று ஒருத்தி இருந்தால் இவள் சாயலில் எதிர்பட கூடும் என நினைத்துக்கொண்டேன். ஜலபதி, மல்லேஸ்வரியை கவரும் வண்ணம் பேச்சுக் கொடுத்து அவளிடம் அடிக்கடி அவள் பக்கமாகவே சென்று வழிந்துக் கொண்டிருந்தான்.
மதியம் வரை நான் தேடிக் கொண்டிருந்தவள் ஃ பேக்டரி பக்கம் வரவேயில்லை. அவளை காணும் ஆவலில்… காதலில்… இடையிடையே மேலே சென்று தண்ணீர் குடிப்பது போல், ரெஸ்ட் ரூம் போக என்று பாவ்லா காட்டிக் கொண்டிருந்தேன். அவளைப் பற்றி சீதம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அங்கேயே தொடர்ந்து லாவினேன்.
ஆபிசில் அமர்ந்திருந்து இதையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருந்த கோவிந்தம், என்னை புரிந்தும் புரியாததுமாய் குழப்பப் பார்வைகளை வீசத் தொடங்கியிருந்தார். சுதாரித்தவனாய் மேற்கொண்டு அவரை யோசிக்க வைக்காதவாறு சாப்பிடும் நேரத்திற்கே அந்த பக்கம் சென்றேன். முதல் ஆளாக! அதுவும் வசதியாகத்தான் போயிற்று. அக்கறையாக விசாரிப்பது போல், “உங்களுக்கு உதவி செய்கிற அந்த இளம் பெண் இன்று வரவில்லையா?” என் குரலிலிருந்த தெளிவும் செறிவும் ஒலிபெருக்கியில் கேட்பது போன்றிருந்தது. அருகில் கோவிந்தம் ஏதும் இருக்கிறாரா என்று நொடி வேகத்தில் தலை நோட்டம் விட்டு பார்வை சீதம்மாவின் முகத்தை ஏறிட்டது.
“ஆ அம்மாயி நா கூ(த்)துரு, நாக்கு சஹாயக்குராலு காது!”
நான் ஏதோ காது, மூக்கு, நாக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ‘அவள் என்னுடைய மகள், இங்கே உதவிக்கு வருபவள் அல்ல!’ என்பது அதன் மொழிப்பெயர்ப்பாகும். இருப்பினும் அன்றைய நாளிற்கு அவ்வளவு மொழி ஞானமெல்லாம் இல்லை. தெரிந்தேதான் கேட்டேன் என்பதால் அவள் அதைத்தான் சொல்ல வருகிறாள் என்று நானே அர்த்தப்படுத்திக் கொண்டேன்.
சீதம்மாவே தொடர்ந்தார். “எனக்கு இரண்டு பிள்ளைகள். இவள் பேர் கீதா, இப்போது இன்டர் முடித்துவிட்டு கல்லூரிச் செல்ல காத்திருக்கிறாள். பணம்தான் இல்லை. இவளுக்கு மூத்தவன் ஒருத்தன் இருக்கிறான், அப்பனைப் போலவே குடித்துக் கொண்டு திரிகிறான். ஆண்கள் இருவராலும் தனக்கு எந்தவொரு பிரயோஜமும் இல்லை என்பது போலும், தன்னுடைய அண்ணன்தான் அவ்வப்போது கோரும் பட்சத்தில் உதவிகள் செய்துவருவதாகவும், எனக்கு புரியாத தெலுங்கிலும், ஓரளவு புரியும் சைகைகளிலும் அதிக பிராயத்தப்பட்டு விளக்கினார். கேள்விகள் எதுவாகினும் தனது தாளாமைகளையும் சேர்த்துக் கொட்டிவிட எளிய மனங்கள் இது போன்றதொரு சிறு சிறு சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக் கிடக்குமோ என்னவோ! சோற்றில் புலப்படும் கற்களை அகற்றும் அறிவு வாழ்வின் தகிப்பில் சோர்ந்து, சேர்த்தே மென்று விழுங்கி ஜீவிப்பதுதான் இங்கே பலரின் நிலையோ என்னவோ!
மற்றவர்கள் வரும் சத்தம் கேட்கவே, இருவரும் கதவை சட்டென சாத்தி தாழிட்டது போல் உரையாடலை பட்டென முடித்துக்கொண்டோம். அப்படியென்றால் இன்று அவளைக் காண முடியாதா? இங்கே அடிக்கடியும் வர மாட்டாளா? என எனது எண்ணோட்டங்கள் முழுவதும் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டை மீறி அவளைப் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிக் கொண்டிருந்தது.
“சாப்புடுங்க சார்!” வழக்கம்போல பிரசாத்தின் எந்திரி அஞ்சலி எந்திரி அலாரமடித்தது.
சீதம்மாவிற்கு சைவ உணவை விட அசைவம் நன்றாக வரும் போல, அன்று சிக்கன் கிரேவி அருமையாக செய்திருந்தார், கூடவே பப்பு ரசமும்! அடிப்படையில் என்னைப் போன்ற சைவப்பிரியர்களுக்கு ஒரு காயாவது கூட்டாவது இருக்க வேண்டும். அன்று வொங்க்காயும், அதாவது கத்தரிக்காயும் இருந்தது. ஆனால் பாருங்கள் அந்த காய் மட்டும் எனக்குப் பிடிக்காது.
“சாப்பலு இஷ்டமா?” மீன் பிடிக்குமா என்று சீதம்மாக் கேட்டதற்கு ‘ஐயோ!’ என்று தோளை ஒரு சிலுப்பு சிலுப்பினேன்.
“குட்லூ திண்ட்டாரா?” முட்டையாவது சாப்பிடுவீர்களா என்றார் இப்படியும் ஒரு வாலிபனா என்ற அயற்சியுடன். அது பிடிக்குமென பலமாய் தலையாட்டினேன். சிரித்துக் கொண்டே செய்து தருகிறேன் என்றார்.
ஆனால் இவையெல்லாம் மீறி கீதாவை எப்போது மறுபடியும் காணப்போகிறோம் என்ற பரிதவிப்பும் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தது.
என்ன ஆச்சர்யம்… சட்டென கண்களை குளிர்விக்கும் ஒரு ஜன்னல் குருவியைப் போல அவள் அங்கே தரிசனம் தந்தாள். ஆமாம் உண்மையிலேயே வந்துவிட்டிருந்தாள். நான்தான் விரைந்து எழமுடியாமல், எனது குதூகளிப்பை மற்றவர்களிருக்க வெளிப்படுத்த இயலாமல், திரையிடப்பட்ட சிரிக்கும் சிலையாய் மூச்சு முட்டுமளவிற்கு என் உணர்வுகளை ஒளித்துக் கொண்டிருந்தேன். சோறு செல்லவில்லை! எழுந்து கை கழுவத் தொடங்கினேன். எல்லோரும் என்னை கவனித்தார்கள். இம்முறை எதையும் நான் பொருட்படுத்தவில்லை. மகாராணி வந்தவுடன் எழுந்து பாக்களை வாசிப்பதுதான் ஒரு கவிஞனுக்கு அழகு.
தெரிந்தால்தான் என்ன என்பது போல் ஒரு வேகம் கூடிவிட்ட மனநிலையது. இந்த காதல் வந்துவிட்டால் மலைகள் பறக்கின்றன மேகங்கள் போல; மேகங்கள் உள்ளங்கைகளில் அமருகின்றன சிறு பறவைகள் போல. அந்த ஏகாந்த உலகில் சிலுவையில் அறையப்பட்ட ஒரு காதல் குற்றவாளியாய் நானும் துய்த்துப் பறக்கிறேன். என் தோளின் மீது ஒரு விமானத்தை உணர்ந்தேன். சிலுவையாய் அவளேதான் ஒட்டி காட்சி தந்தாள். அதனால் சிறு வலியுமில்லை! உறுத்தலுமில்லை! உண்மையில் நான்தான் அவள் முதுகில் ஏறிக்கொண்டது போலிருந்தது. அந்நிலையில்தான் சிலுவையும் விமானமாகிப் போனது.
அம்மாவும் மகளும் மொட்டை மாடிப்பக்கம் ஆழ்ந்து எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, அவள் கண்பார்வைக்காக பாதசாரிகள் தென்படாத சாலையில் திரியும் யாசகனாய் அந்த வெயிலிலும் காற்றுக்கு நிற்பவன் போன்று அவளை கள்ளத்தனமாய் நோக்கினேன்.
முந்தைய நாள் நடந்த சம்பவத்திற்கு அவளும் என்னை எளிதாக மறந்துவிடுவாளா என்ன? இலை விலக்கி அவ்வப்போது தலைகாட்டும் சிறு பூவைப் போல மெலிதாய்… இரகசியமாய்… சிரித்தபடி பார்வைகளை என்மீது வீசினாள். மின்சாரம் பாய்ச்சும் அந்த கணைகள்… என்னை அடைந்த கணம்… அவள், தனது விருப்பத்தை ஊர்ஜிதப்படுத்தியத் தருணம் போலிருந்தது. உண்மையிலேயே நான்…
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது..
அதோடு எங்களை வெட்கமும் சூழ்ந்தது.
***
அந்த மயக்கம் எனக்கு புதில்லை. அது போன்றதொரு பேரின்பம் நான்காம் வகுப்பிலிருந்தே கிட்டத் தொடங்கியிருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவள் பெயர் ஜெயலட்சுமி, போலீஸ்காரன் மகள். பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். ஊரெல்லாம் ‘போவோமா ஊர்க்கோலம்..’ பாட்டு கிராமிய தேவாரம் போல் ஒலித்துக்கொண்டிருக்க, அவளோடு நான் வாய்க்கால், வரப்புகளில் ஜோடி ஆடெனத் திரிந்தும், நாதன் சைக்கிள் கம்பெனியில் வாடகைக்கு எடுத்த சின்னஞ்சிறு கருநீல நிற ஹீரோ சைக்கிளில் அவளை ஏற்றிக்கொண்டு வீதிகளில் அலைந்தும் கற்பனைகளில் மிதந்திருக்கிறேன்!
பள்ளிக்குச் செல்ல கொடுக்கப்படும் ஐம்பது பைசாவில் சில நாள் வரை பாதி அவளுக்கே செலவழித்திருக்கிறேன். அவளும் செலவு செய்வாள். மற்ற பெண் தோழிகளிடம் பேசுவது போல்தான் அவளிடமும் பேசுவேன். ஒரு நாள், அன்று இதமான மழைவேறு! நானும் அவளும் பள்ளிக்கூட வராண்டாவில் நின்றுக்கொண்டு, மழைப் பெய்வதை பார்த்தபடி நெடுநேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தோம். அன்றுதான் அந்த ஈர்ப்பு முதன் முதலில் எனக்குள் எட்டிப் பார்த்தது எனலாம். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வயதிலும் உள்ளூர ஏதோ திடீரென்று கலவரங்கள் ஏற்பட்டது போல் ஒரு கிளுகிளுப்பு!
அந்த கிறக்கம் பத்தாம் வகுப்பிலும் வந்திருக்கிறது, பன்னிரெண்டாம் வகுப்பிலும் நிகழ்ந்திருக்கிறது, ஏன் கல்லூரி நாட்களிலும் தொந்தரவு செய்திருக்கிறது. பருவம் வந்த பின் வந்த எல்லாவற்றையும் நான் காதல் என்றே கருதிக் கொண்டேன். இதில் சோகம் என்னவென்றால் கடைசியில் சொன்ன அந்த மூவரும் வேறொருவனை விரும்பிக் கொண்டிருந்தனர்!
இப்போது கீதாவைப் பற்றிதான் பேச வேண்டும், அவர்களெல்லாம் ஏன் வரிசைக்கட்டி நினைவுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை. இவளும் என்னை சாதாரணமாகப் பார்த்திருக்கலாம். நேற்று நடந்த களேபரத்தை நினைத்துச் சிரித்திருக்கலாம். நாம் வந்த வேலை என்ன? நம்முடைய நிலவரம் என்ன? என்னை நானே கடிந்துக் கொண்டேன். இனி அவளைப் பற்றி சிந்திக்க கூடாது என முடிவு செய்தேன். அவளைப் பற்றிய சிந்தனைகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள அல்லது மனதை திசை திருப்ப அப்போது வாழ்க்கையில் எழுந்திருந்த புதிய புதிய சிக்கல்களை நினைத்து சற்று ஒடுங்கலானேன்.
அன்று மாலையும் பிரசாத் கம்பெனிக் கொடுக்க பாருக்குக் கூப்பிட்டார். முந்தைய நாளை விட பேச்சில் அன்யோனியம் காட்டினார். நானிருந்த மனக் கவலைகளுக்கும் அன்று எனக்கும் கூட சாப்பிட வேண்டும் போலிருந்தது. கேட்க கூச்சமாக இருந்ததால், விரும்பியும் விரும்பாமலும் அவர் சொன்ன கதைகளை சுவாரஸ்யமின்றிக் கேட்கலானேன்.
அந்த பெரிய திரையில் அப்போது பாடல்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. ‘கோலோ கோலம்மா’ என்ற பாடலுக்கு சிரஞ்சீவியும் விஜயசாந்தியும் இடுப்பை வளைத்து, நெளித்து ஆடிக்கொண்டிருந்தனர். விஜய சாந்தியை தமிழ் சினிமாதான் வேறு மாதிரி பார்த்திருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டேன். விஜயசாந்தியால் இவ்வளவு நளினமாகவெல்லாம் ஆட முடியுமா, நடிக்க முடியுமா என்றெல்லாம் சூழ்நிலையை மீறி மனம் சினிமாவை அசைப்போட தொங்கியது.
கூடவே முந்தைய நாள் நடந்தது போல் யாராவது திடீரென ஆட தொடங்குவார்களோ என எதிர்பார்த்துக்கொண்டுமிருந்தேன். அதை ஆவல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லோருமுன் அப்படி ஆடியதை என்னால் ஒன்றி ரசிக்க முடியவில்லை. பிழைப்பிற்காக இந்த பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்றே தோன்றியது. அவளுடைய தகப்பனை, அண்ணன், தம்பிகளை அல்லது கணவனை, சம்பந்தப்பட்ட எல்லோரையும் அடித்து சாத்தணும் போலிருந்தது. நேற்று கண்ட அந்த பெண்ணுக்காக வருந்தினேன்.
“உங்களுக்கு யாரைப் பிடிக்கும் சார்?” பிரசாத் அப்படி கேட்டதும் புரியாமல் விழித்தேன்.
“நடிகைகள்ல்ல?” பட்டொளி வீசிக்கொண்டிருந்த வானத்தில் சட்டென மேகங்கள் திரண்டது போல், தேவையில்லாத யோசனைகளும், கவலைகளும் சூழ்ந்து கொண்டமையால், முந்தைய தினம் போல் அவரோடு ஆத்மார்த்தமாகப் பேச முடியவில்லை.
ஆனாலும் அவர் முன் என்னுடைய கோபதாபங்களைக் கொட்டவோ, காட்டவோ முடியாதே! வேதாளம் மரத்தில் ஏறியது போல்.. சரி, கீதாவைப் பற்றி யோசித்தாலாவது மனம் லேசாகுமா என ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். ஏனென்றால் இவையெல்லாம் அவளிடமிருந்துதானே ஆரம்பித்தன.
“உங்களுக்கு சார்?” என்றேன். ஆள் குஷியாகிவிட்டார்.
“சவுந்தர்யா சார்!” அடிவயிற்றிலிருந்து சொன்னது போல் இருந்தது. குணா படத்தில் கமல், அபிராமி அபிராமி என்று உருகுவாரே..! அதுபோல!
“ம்ம்” என்றேன்.
“சந்திரா சார்.. ஏன் பிடிக்கும் தெரியுமா?” ஏன்யா இப்படி என்னைப் போட்டு பாடாய்ப் படுத்துற என்பது போல் மிகவும் சலிப்பாயிருந்தது.
உண்மையில் அன்று நான்தான் மாறிப்போயிருந்தேன். “ஏன்?” என்று நான் கேட்பேனென எதிர்பார்த்திருப்பார் போலும், நான் ஒன்றும் பேசாமல் இருந்ததைக் கண்டு கொஞ்சம் ஏமாற்றம் கொண்டவராய், “ஏன்னு கேக்க மாட்டீங்களா?”
எனக்கு குபீரென சிரிப்பு வந்துவிட்டது. “ஏன்?” என்றேன். மீண்டும் கலகலப்பானார்.
“சவுந்தர்யா குளிச்சிப் பாத்திருக்கீங்களா?” மீண்டும் சிரிப்பும் கோபமும் முட்டிக்கொண்டு வந்தது. என்ன ஒரு அல்பமான கேள்வி இது! இம்முறை என் பதிலை எதிர்பார்க்காதவராய் அவரே தொடர்ந்தார்.
“அவங்க உடம்புல தண்ணீ பட்டா ஒட்டாம அப்படியே முத்து முத்தா நிக்கும் சார்!” ஏதோ இவர்தான் தினமும் போய் முதுகு தேய்ச்சி விட்ற மாதிரி பேசினார். சரியான சவுந்தர்யா வெறியன் என்று நினைத்துக்கொண்டேன்.
அன்றைய கூத்து அத்தோடு முடிந்துவிட்டது.
காலையில் நெற்றியில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சக்கொட்டையுமாக ஒருவர் பேக்கோடு வந்து நின்றார். பிரசாத்தோட ஃப்ரண்டாம், பிசினஸ் பார்ட்னர் வேறயாம். அன்றைக்குதான் அந்த பூஜையறைக்கே உயிர் வந்தது போலிருந்தது. பூஜை புனஸ்க்காரத்தோடு அமர்ந்தபடி ரொம்ப நேரம் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார். பிரசாத்தை விட வயது குறைவாக இருக்க வேண்டும். பிரம்மச்சாரியாம். பேரு கணேஷ்!
கணேஷ் வந்ததையடுத்து, பிரசாத் அன்றைக்கே சென்னைப் புறப்படலானார். இப்படிதான் மாறி மாறி இருந்துகொள்வார்களாம். பிரசாத், டைக்கி அடுத்த வாரம் வரவிருப்பதால், கவலை வேண்டாம் அச்சமயம் தானும் இங்கே இருப்பேன் என்றார். டைக்கி, ஜப்பான் நிறுவனத்தின் வணிக பிரதிநிதி. அவர் மட்டுமே அந்நிறுவத்திலிருந்து எங்களோடு நேரடித் தொடர்பிலிருந்துக்கொண்டிருந்தவர்.
கீதா அன்று முழுக்க அந்தப்பக்கம் வரவில்லை. இன்னொன்று, காலையிலிருந்து மல்லேஸ்வரியைக் காணாது அங்கிருந்த அனைவரும் அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஜலபதியின் முகமும் கொஞ்சம் வாடியிருந்தது. முந்தைய தினம் ஏதும் தவறாக நடந்துக்கொண்டு விட்டானோ என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான், ரொம்ப நேரத்திற்கு பின் கொட்டேஸ்வரம்மா மூலம் அந்த தகவல் கசிந்தது. அதாவது தலைவன் ஜலபதி, மல்லேஸ்வரியோடு இரவு சினிமாவிற்குச் சென்றியிருக்கிறான். அது அவளுடைய கணவனுக்கு தெரிந்துப் போக அவளது வீட்டில் பிரச்சினையாகிவிட்டிருந்திருக்கிறது. சில மாதங்களாக அவள் கணவன் வீட்டிற்கு வருவதுமில்லை; வந்தால் தங்குவதுமில்லை. அந்த தைரியத்தில் அவளும் ‘நம்பி’ சென்றிருக்கிறாள்.
“என்ன இருந்தாலும்… அது எப்படி பயமே இல்லாமல் இன்னொருவனோடு செல்ல இந்த பெண்களாலும் முடிகிறது?” என் அரைகுறை தெலுங்கு கேள்வி கொட்டேஸ்வரம்மாவை அவ்வளவு பாதிக்கவில்லை. அதுவும் எனக்கு வியப்பளித்தது.
“இங்க வர்ற பெண்கள் எல்லாம் கிட்டத்தட்ட வீட்டு ஆண்களின் ஆதரவு இல்லாம அல்லாடுறவங்கதான் சார்! ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டாய்ங்க! ஒரே குடி! குடி! குடி! வீட்டுக்கும் வர மாட்டாய்ங்க! வந்தாலும் சண்டைதான் நடக்கும்! பெண்களுக்கும் ஆத்திர அவசரத்திற்கு காசு தேவை இருக்கும் இல்லையா?”
“அதுக்கு?”
“இங்கே இதெல்லாம் சகஜம் சார்! நாங்கெல்லாம் சாதாரண வீட்டு பெண்கள்! என்ன செய்றது? பிள்ளைகளை வளக்கணுமே! இங்க வேலை பாக்குணும்னா இதெல்லாம் அனுசரிச்சிதான் போகணும்! உங்களுக்கு போகப் போக புரியும் சார்!”
“ஓ..!” மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.
“சேட்டுகாரு வெல்லிப்போயாரா?” முதலாளி பிரசாத் சென்னை போயாச்சா என்று கேட்டார்.
“ஆம்” என்றேன்.
“இப்புடு மீரு ச்சூடண்டி!” இனிமேல் என்ன நடக்கிறது பாருங்க என்றுச் சென்றுவிட்டார்.
கோட்டேஸ்வரம்மா சென்றதிலிருந்து, சீதம்மா தன்னுடைய குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்டதும் ஞாபகத்திற்கு வந்தது. அவளுடைய கணவனும், மகனும் கூட குடிப்பார்கள், வீட்டை கவனிக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார் அல்லவா!
கீதாவுடைய அப்பா மற்றும் அண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், நானும் இந்த பழக்கத்தை தவிர்க்கத்தான் பார்க்கிறேன், ஒரு வேளை இந்த மயக்கம் காதல் வரை என்னைக் கொண்டு சென்றால், அவளும் என்னை உண்மையாகவே விரும்பினால், இவர்களால் ஏதும் பிரச்சினைகள் வருமோ என்று ஏதோ நாளைக்கே கல்யாணம் என்பது போல் எல்லாவற்றையும் மனக்கண்ணில் ஓடவிட்டேன்.
சீதம்மா தனது மகளைப் படிக்க வைக்கப் போவதாகக் கூறியிருந்தாரே..! காசில்லை என்று வேறு சொன்னார்! நாம் ஏதும் உதவலாமா? அதன் மூலம் ஒரு நெருக்கம் வர வாய்ப்பிருக்கிறது அல்லவா? தேவையில்லாதது போல் தோன்றினாலும் மறுபடியும் அவள் நினைவில் மூழ்கலானேன்.
அன்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென்று தரையில் ஏதோ ஒரு அதிர்வுச் சத்தம்!
பார்த்தால், காலையில் கண்ட அந்த பக்திப்பழம், ஒரு பெண்ணை கையில் அள்ளிக்கொண்டு தடதடவென தனது அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டது!
தொடரும்..

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.