காளிங்கராயன் வாய்க்காலை தாண்டி செல்லும்போதுதான் பார்த்தான் .ஒரு முதிய நாவல் மரத்தை சுற்றிலும் பழங்கள் கிடந்தன.காற்று காலமாதலால் ஒன்றிரண்டு பழங்கள் இவன் கடந்து செல்லும்போது விழுந்தது.அந்த நிறமே ஒருவித பரசவத்தை கொடுத்தது.

வயல்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த போகத்திற்கான தண்ணீர் இன்னும் திறந்துவிடப்படவில்லை.இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிடும்.கிணற்று பாசனம் இருப்பவர்கள்  விதைப்புக்கு தேவையான வேலைகள் செய்யத் துவங்கி இருந்தார்கள்.பள்ளி கல்லூரிக்கு செல்வபவர்களின் காலை நேர பரபரப்பு …இவன் சித்தப்பா வீட்டிற்கு சென்றபோது அவர் பாதி சாப்பாட்டில் இருந்தார் .சித்தி இவன் பக்கம் பார்க்கவே இல்லை

”வா சுந்தரு ,இன்னிக்கு செம்மணம்பாளையத்துல காய் வெட்டு .. ஆளுகளுக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போலாம்னு வந்தேன் ”கொஞ்சம் சாப்பிடு கண்ணு ”

”இல்லீங்க …கொஞ்சம் உங்க கிட்ட பேசலாம்னு வந்தேங்க ”

”சேரி சேரி ‘’…சாப்பிட்டு முடித்தவர் கை கழுவி விட்டு வெளியே வந்தார் .

சித்தி எதுவும் பேசவில்லை .

”சித்தப்பா ..காலேஜ் முடிஞ்சிருச்சு ..அதான் மெட்ராஸ் போலாமுன்னு இருக்கேன் ..ஆடிட்டர் படிப்பு படிக்கலாம்னு ”

”ஓ ..சேரி சேரி வேம்பூர் கவுண்டர் பையனும் இந்த படிப்புதான் படிக்க போறார்னு நேத்து அவங்க தோப்புல காய் வெட்டும்போது சொன்னாப்பிடி ”’ நல்லா பண்ணு கண்ணு

”அப்பாவுக்கு இதில விருப்பமில்லை ..படிப்பு செலவுக்கு காசெல்லாம் தர முடியாதுன்னு சொல்லிட்டாரு”

‘’சேரி சேரி சுந்தரு’’

”ஒரு பதினஞ்சு ஆயிரம் வேணுங்க சித்தப்பா …படிப்பு செலவுக்கு தங்கறதுக்கு … ஒரு ஆறு மாசம் கழிச்சி தரனுங்க ”

”புதுசா கொஞ்சம் மரமெல்லாம் வாங்குனோம் சுந்தரு …கையில் ஒன்னும் இல்ல …தாமரையையும் இப்பதான் திருச்செங்கோடு காலேஜ் சேர்த்தி விட்டேன் …சரி போ நான் பார்த்து சொல்றேன் …

சாப்பிட்ட தட்டுகளுடன் வெளியே வந்த சித்தி காசு வேணுமின்னா நேரா இங்க வந்திரானுவ …என்று முனகியபடி சென்றார்.

சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தான் .சித்தப்பா வீடு இருந்த பகுதி முழுவதும் செம்மை நிற கற்கள்  கொண்ட மேட்டுப் பகுதி.சைக்கிள் இலகுவாக சென்றது. ஆவாரம் பூக்கள் நிறைந்த  மஞ்சள் பாதையின் பாதையும் செம்மண் நிறமும்  இவனுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது .

தாமரை பாளையம் நால்ரோடு தாண்டும்போது யாரோ அழைப்பது போல இருந்தது. சைக்கிளை நிறுத்தி பார்த்தான். சலூன் ராமசாமி தான் கை காட்டியபடி வந்தார்.

”ஏன் சுந்தரு எங்க போயிட்டு வர ”

”சித்தப்பாவ பார்க்க போயிருந்தனுங்க ”

”சரி ..வா கடைக்கு போயிட்டு பேசலாம் ”

நவீனங்கள் நுழையாத சலூன் கடை. ராமசாமிக்கு என்று வாடிக்கையாளர்கள் உண்டு. திருத்தமான  வேலைக்காரன் என்று பெயர் எடுத்தவர். இரண்டு மூன்று மாத நாவல்கள், தினமணி நாளிதழ் கடையில் கிடக்கும். வேலை நேரம் தவிர கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருந்து கொண்டிருக்கும்.

ஒருமுறை ஊரில் பெரிய காரியத்திற்கு சடங்குகள் செய்ய ஆட்கள் கடைக்கு வந்து கூப்பிட, வர முடியாதுன்னு போய் சொல்லிருங்க என்றவர். நான் வேலை செய்றது இந்தக் கடையில. இங்க பண்ற வேலைதா செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விட்டு விட்டார். ஆளும் கொஞ்சம் திடகாத்திரமா இருந்ததாலும் கையில் கொஞ்சம் பணம் இருந்த ஆளாக இருந்தமையாலும் ஊரின் பெரிய ஆட்கள் அமைதியாகி விட்டார்கள்.

அப்பாவின் நண்பர் எனக்கும் நண்பராக இருப்பது வினோதம் தான்.

பக்கத்துக்கு கடையிலிருந்து டீ வந்தது.

”குடிப்பா சுந்தரு ,எத பண்ணினாலும் தைரியமா பண்ணு ”

நான் எதுவும் பேசவில்லை.

”நான் கிளம்பறேனுங்க ”

ஒரு நிமிஷம், என்று கடைக்கு உள்ளே போனார்.ஒரு சிறிய கவர் ஒன்றை கொண்டு வந்தார் .

”இதில கொஞ்சம் பணம் இருக்கு. உனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் ”

”இல்லீங்க வேண்டாம் ”

”அட சும்மாயிரு … நீ வேலைக்கெல்லாம் போய் சம்பாரிச்சீனா இந்தக் கிழவன பார்த்துக்க மாட்டியா போப்பா..” என்றார் .

இவங்கல்லாம் நமக்கு உதவறாங்க ,,நம்ம அப்பன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரே …இவனுக்கு கோபமாக வந்தது.

நான்கைந்து பேர்களிடம் விசாரித்த பிறகு ஒரு வழியாக மேற்கு மாம்பலத்தில் பால் சுகந்தி மேன்சனை கண்டுபிடித்தேன். வாட்ச்மேன் தாத்தாவிடம் அறை எண்ணை உறுதி படுத்திக் கொண்டு முதல் தளத்திற்கு போனேன்.

கதவு திறந்தே இருந்த அறை. அடையாளம் கண்டுகொண்ட கைலாசம் அண்ணன்,

“உள்ளே வாடா சுந்தரம்,. ஆறு மணிக்கே டிரெயின் வந்திருமே, நீ என்னடா இவ்ளோ நேரம் கழிச்சு வர?”

‘’அண்ணா,வழி தெரியாம சுத்திட்டேனுங்க அண்ணா .. உங்க மேன்சன் போன் நம்பரும் மிஸ் ஆயிருச்சிங்க…”

”சரி சுந்தரம் பார்த்துக்கலாம் டா  …ரூமு ஏற்பாடு பண்ணிக்கலாம் .. சரி ..போய் குளிக்கிறதுனா குளிச்சுட்டு வா ..’’

‘’அண்ணா இன்னொரு விஷயம், நான் வேலைக்கி போய்கிட்டே படிச்சுக்கிறேன் அண்ணா …

‘’சரிடா …எனக்கு ஷிப்ட் போகணும். ரூம்லையே இரு.. நைட் நான் வந்ததுக்கபுறம் மத்த விஷயங்களை பேசிக்கலாம்’’ ரூமில் இருந்த ஒரு சாப்பாட்டு பார்சலை தந்துவிட்டு போனார்.

அறையில் யாருமில்லை.பக்கத்துக்கு அறையில் இருந்து பாட்டு சத்தம் கேட்டுகொண்டிருந்தது.ரேடியோ மிர்ச்சி, சூரியன் எப்எம் என்று மாறி மாறி கேட்டுகொண்டிருந்தது. ஊரில் கோடை அலைவரிசை ஒன்றுதான். அடிக்கடி ஆய்த எழுத்து படத்திலிருந்து யாக்கை திரி பாடலை யாரவது ஒருவர் விரும்பி கேட்டபடியே இருந்தார். அப்படியே உறங்கிப்போனேன்.

ஒரு வராந்தா போல இருந்தது அறை. காலையில் தண்ணி வரும்போது பிடிச்சு வச்சுக்கணும், அதுக்கு அப்புறம் தண்ணி போட மாட்டோம்  என்று மேனேஜர் சொல்லிவிட்டு சென்றார். வெம்மையான காற்று மின் விசிறியின் இறக்கைகள் வழியே மேலும் பரவி உடலை மனதை புளுக்கமாகியது.

கையிலிருந்த 5500 ரூபாய் பணத்தில் தான் அறை வாடகை. ஒரு மாதம் மயிலாப்பூர் வரை சென்று வர பேருந்துக் கட்டணம், உணவு போன்றவை பார்த்துக் கொள்ள வேண்டும்.வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சில ஆடிட்டர் ஆபீஸ்களுக்கு நேர்காணல் சென்றேன். ஆறாவது நேர்காணலில் தேர்வானேன். அன்றுதான் மேன்சன் நம்பரை கடிதமெழுதி அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து அப்பன் அழைத்திருந்தார்.

‘’என்னப்பா ,நல்ல மொறையிலே போய்ச் சேர்ந்துகிட்டயா ?

‘’ஆமாங்கப்பா’’

‘’தம்பி ,கைல பணமிருக்குதா .. பணங்கீது இல்லீனா நம்ம மேட்டுபாளயத்துக்காரரு வக்கீல் பண்ணையம் அங்கதே இருக்கிறாரு…. அண்ணா நகரு … எதாவது வேணுமின்னா அவர் வீட்டுக்கு போய்க் கேளு. அவரு போன் நம்பரு லெட்டர்ல அனுப்பறேன்”  என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.வெறுப்பாய் இருந்தது. அம்மாவின் தொடர்ந்த வற்புறுத்தலால் தான் இந்த அழைப்பு என்று புரிந்தது.

மேற்கு மாம்பலம் மேன்சனிலிருந்து திருவல்லிக்கேணி ஹாஸ்டலுக்கு மாறியிருந்த சமயம்.

கோச்சிங் கிளாஸ் உடனே ஆரம்பிக்கும் சூழலால் பணம் கொஞ்சம் தேவையிருந்தது. அப்பா கடிதத்தில் முகவரி அனுப்பி இருந்தார் . அண்ணா நகர் வக்கீல் பண்ணையம் வீட்டுக்கு சென்றேன்.

நான் சென்ற சமயம் வக்கீல் மனைவிதான் இருந்தார்கள்.

‘’யாருன்னு தெரியலையே’’

‘’ஏனுங், நான் சுந்தருங் …ஆலங்காடு சம்பு பையனுங்க …”

‘’அட ..நீதான ..அதான் பார்த்தேன் ..ஏதோ பார்த்த முகமாக இருக்குதேன்னு..”

வாசலில் இருந்த திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள். தண்ணீர் சொம்பை தந்துவிட்டு,

‘’சம்பு எப்படி இருக்கிறான் … இப்ப லெட்டர் கூட போடறது இல்ல … உங்க பண்ணையமும் பொங்கல் சமயமா பார்த்து ஊருக்கு வரலாம்னு இருக் கிறாங்க …”

‘’நல்லாருக்காங்க’’

‘’ஆமா ,நீ சிஏ படிக்கணும் னு சொன்னியாமா ..பண்ணையம் சொன்னாங்க …’’

‘’ஆமாங்க,அப்ளிகேசன் போட்ருகேனுங்க…”

நான் சொன்ன பதிலை அசுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் அமர்ந்திருந்த திண்ணை மாதிரியான அமைப்பு தாண்டி பெரிய வாயில். பிறகு வீட்டின் கதவு.முன்புறம் பூச்செடிகள், காய்கறி செடிகள் கொண்ட தோட்டம் போன்ற அமைப்பு.ஒரு பங்களா போன்ற அமைப்பில் இருந்தது. ஊரில்  வக்கீல் பண்ணையத்திற்கு சொந்தமான தோட்டங்கள், பண்ணை வீடு வேலைக்கு எல்லாம் அப்பாதான் மேற்பார்வை. சம்பளமெல்லாம் எதுவுமில்லை.தோட்ட வேலை ஆட்கள் கூலி, பண்ணை வீடு பராமரிப்பு  செலவு, வாட்ச்மேன் சம்பளம் என அப்பா கொடுத்துவிடுவார். இவர் ஊருக்கு வரும்பொழுது செலவான தொகையை அப்பாவிடம் தந்து விடுவார். மெட்ராஸிலிருந்து இவர் ஊருக்கு வரும் தகவலை கடிதம் எழுதி போட்டு விடுவார். அம்மா சென்று தோட்டத்து வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வைக்க வேண்டும் .

வெளிக்கதவு திறந்து கொண்டு வக்கீல் பண்ணையம் வந்தார். நடைபயிற்சிக்கென்றே விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஆடைகள், காலணிகள் அணிந்திருந்தார். அவர் வந்தவுடன் வடிவு கவுணிச்சி உள்ளே சென்றுவிட்டார்.

மெதுவாக வக்கீல் நடந்து வந்தார். பணக்காரர் ஆனாலும் இவரின் தயாளகுணம் உள்ளூர்காரர்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. சொந்த ஊரில் நூலகம் அமைத்து இருந்தார்கள். இவரிடம் கொஞ்சம் நாற்காலி டேபிள் எல்லாம் வாங்கித்தர முடியுமா? என்று கவுன்சிலர்  கேட்டிருக்கிறார். உடனே தன் வீட்டில் இருந்த அரதப் பழசான நாற்காலிகளை தந்துவிட்டு, அட என்ன பாக்கறீங்க மாமா நான் சின்ன வயசுல உட்கார்ந்து படிச்சதுதா என்றார். அதிர்ச்சியுற்ற கவுன்சிலர் மாப்ள, இல்லீங்க புதுசா கொஞ்சம் வாங்கி தந்தீங்கன்னா உபயோகமா இருக்கும் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டபின் வாங்கித்தர இசைந்தார்.

தன் பெயர் சரியாக  சேர்களில் அன்பளிப்பு என்று போட்டிருக்கிறார்களா? என்று உறுதி செய்தபிறகே நிம்மதியானார். தன்னுடை பிரபல்யம் மூலம் வேறு யாருக்கும் எவ்வித நன்மையும் கிடைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.

நல்ல ஆஜானுபாகுவான உடலைக் கொண்டிருந்தவர். அவன் அப்பாவின் வயதினும் அதிக வயதுடையவர் என்றால் நம்ப முடியாது. எதுவும் பேசாமல் வந்தவர் அவனருகே இருந்த தண்ணீர் சொம்பை பார்த்தவுடன் எரிச்சலும் வெறுப்பும் மேலிட பார்த்துவிட்டு வீட்டினுள் சென்றார்.

பின் திரும்பி வரும்போது முகத்தைக் கழுவி முன்பு உள்ளே போனவரா என்று சொல்லும்படியாக தெய்வீக சிரிப்போடு வெளியே வந்தார்.

”சம்பு சொன்னான் நீ வருவீனு …இரு இரு நான் குளிச்சிட்டு வந்திர்ரேன். அதோ அங்க பூவாளி எடுத்து இங்க இருக்கிற செடிகளுக்கு தண்ணிய தெளிச்சு விட்டுகிட்டு இரு …” என்று சொல்லிவிட்டு சென்றார்.

பூவாளியை எடுத்து தண்ணீர் நிரப்பி தோட்டத்தில் இருந்த குரோட்டோன் செடிகளுக்கு ஊற்றியபடி யோசித்தான். அப்பன் தன்னால மெட்ராஸுக்கு வரமுடியாதுன்னும் அதனால இந்த வேலைகளை தம் பையன் செய்வான்னு சொல்லி விட்டுட்டாரோ என்று யோசித்தான். தண்ணீர் ஊற்றி முடித்திருந்தான் . இவன் சட்டையும் வேர்வையில் ஊறி இருந்தது.

வக்கீல் பண்ணையம் வீட்டிலிருந்து பருப்பு சாம்பாரின் மணம் எச்சிலைக்  கூட்டியது.

வயிறு கபகபவென எரிந்தது. குளித்து முடித்து நெற்றி நிறைய திருநீறும் அதன் மணத்துடனும் வெளியே வந்த பண்ணையம் முருகா என்று கூறியபடி சாய்வு இருக்கையில் அமர்ந்தார். செடிகளுக்கு நீர் ஊற்றியிருப்பதை நோட்டமிட்டார்.

”வடிவு ..சுந்தருக்கு சாப்பாடு ரெடியா” என்று கேட்டவர் வீட்டின் முன் அறை ஓரமாய் கட்டி வைத்திருந்த பொமரேனியனை ராம்போ ராம்போ எனக் கொஞ்சிவிட்டு,

 ”சுந்தரு …இந்த இடமெல்லாம் பாரு மண்ணா இருக்குது ..கொஞ்சம் கூட்டி தள்ளி வுட்ரு’’

என வேண்டுகோளா அல்லது கட்டளையா என்று புரிந்து கொள்ள முடியாதபடி கூறினார். நாய் கட்டியிருந்த இடத்திலிருந்து வராண்டா முழுவதும் பெருக்கிவிட்டு நிமிர்ந்தான்.

‘’வடிவு , வாழ இல இருக்குதா கொண்டாந்து சுந்தருக்கு சோறு வை ”

அவர் அப்படி சொல்லி முடித்ததும் எங்கே உட்கார்ந்து சாப்பிடப் போகிறோம் என்று யோசித்தபடியே நின்றான் .

வடிவு கவுணுச்சி எதுவும் பேசாமல் கூட்டியிருந்த காரை தளத்தில் நாய் கட்டியிருந்ததற்கு அருகில் இலையைப் போட்டு ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்தார்.

ராம்போ இவனருகில் வர முயற்சித்தபடி இருந்தது. அவனுக்கு அதிர்ச்சியும் தயக்கமுமாய் இருந்தது.

”அட உக்காரு நீதான கூட்டி விட்ட ..ஒன்னும் பண்டாது” என்று சிரித்தார் பண்ணையம்.

வடிவு கவுணுச்சி இலையில் சாப்பாடு போட்டு விட்டு போகும் வரை யோசித்துக் கொண்டிருந்தவர் முதல் வாய் சோற்றைக் கையிலெடுத்ததும் பேசத் துவங்கினார் .

”சம்பு சொன்னே.. அவன் பேச்சைக் கூட கேட்காம வந்துட்டியாமா ? ரொம்ப வருத்தப்பட்டான்”

சுந்தர் என்ன சொல்வதென்று என்று யோசித்தான் .

”ஆமா, நீ என்ன படிச்சிருக்கிற ..எந்த தைரியத்துல இங்க கிளம்பி வந்த ?”

”பி.காம் முடிசிருக்கிரனுங்க .. பார்ட் டைம்  வேலைக்கு போய்கிட்டே படிக்கலாம்னு தாங்க வந்தேன்”

கன்னத்து சதைகள் இறுக ஒருமுறை தீர்க்கமாய் பார்த்தவர்,

”ஆமா சிஏ படிப்பெல்லாம் உன்னால முடியுமா ? உங்கப்பனோடு சேர்ந்துக்கிட்டு நாலு பக்கம் தோப்புல மரம் பேசினீன்னாக்கூட   கொஞ்சம் காசு பாக்கலாம். அவனுக்கும் ஒத்தாசையா இருக்கும் … இந்த படிப்பெல்லாம் ரொம்ப கஷ்டம் சுந்தரு”

‘’இங்க பாரு சுந்தரு, உங்கப்பன் பையன் ஏதாவது பணம் கேட்டா கொடுங்கன்னு சொன்னதால உன்னை வாசல்ல வச்சுப் பேசறேன் , இல்லேன்னா அப்படியே அனுப்பிருப்பேன். நீ சிஏ படிப்பீன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல. பணம் வேணுமின்னா வந்து வாங்கிக்க ,, ஆனா அதுக்கு கணக்கு வேணும் . இனிமே வீட்டுக்கு வராத ..போன் ல சொல்லு …முன்னாடி பஸ் ஸ்டாப்ல கொண்டாந்து கொடுக்கறேன்”  என்றபடி வீட்டுக்குள் போய் விட்டார்.

இவனுக்கு என்ன மாதிரி பதில் சொல்வதென்று தெரியவில்லை. சாப்பாட்டில் விரல்கள் அளைந்தது . கண்களில் நீர் திரண்டது.

ராம்போ குரைக்க ஆரம்பித்தது.

இலையை எடுத்துக் கொண்டு வெளியே போட வந்தவன்  தன்னை ஒரு குப்பைத் தொட்டியாக உணர்ந்தான்.

கை கழுவிவிட்டு வக்கீல் பண்ணையம் அருகில் வந்தான். பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்தான். அவனுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.கண்ணீர் வர ஆரம்பித்தது.

ஒரு வாரம் இருக்கும், ஹாஸ்டல் அலுவலகத்திற்கு மூர்த்தி  மாமா அழைத்திருந்தார் .

‘’டேய் சுந்தரு ,உன் அப்பா தாண்டா இந்த நம்பர் கொடுத்தாரு … நல்லாருக்கிறயா”

”நல்லாருக்கிறேன் மாமா”

”அட ..நம்ப கருக்கம்பாளையம்  செந்திலு தெரியுமில்ல அங்க அண்ணா நகர் தான் இருக்கான் .. கவர்மெண்ட் என்ஜினீயர் ஆ இருக்கான் .. அவன் நம்பர் குறிச்சுக்க ..போய் பாரு ”

”சரிங்க மாமா”

அந்த வார இறுதியில் செந்திலண்ணாவை பார்க்க சென்றிருந்தேன் .

தனி வீடு, முகவரி கண்டுபிடிக்க பெரிய சிரமம் ஏற்படவில்லை. காலின் பெல் அடித்துவிட்டு காத்திருந்தேன். மீனாட்சி அம்மாயி தான் கதவை திறந்தார்.

”வா சுந்தரு ,செந்திலும் அவஞ் சம்சாரமும் பக்கத்தில கோயிலுக்கு போயிருக்காங்க .. நீ வருவேன்னு சொல்லிட்டுதான் போனாங்க”

”நானும் போன வாரம் தான் இங்க வந்தேன்” என்றார்.

என் அம்மாயியின் தோழி …

”என்னமோ கண்ணு இப்ப எல்லோரும் வேலைன்னு மெட்ராஸ்க்கு வந்திரரீங்க … எங்களுக்கெல்லாம் தான் பயமா இருக்குது …”

”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க …இங்க தான் இந்த படிப்பு இருக்குதுங்க”

”இவன் அப்பா என்ன நிராதரவா விட்டுட்டு போனப்ப உன் அம்மாயிதான் நாலு ஆட்ட கொடுத்தா..  அப்படி விருத்தியாகி வந்தது தான் இந்தக் குடும்பம் .. செந்திலு நல்லா படிச்சான் .. இங்க வேலைக்கும் வந்திட்டான். இன்னிக்கு நல்லா சம்பாரிக்கிறான். என்னையும் நல்லா பார்த்துக்கிறான் ”

அம்மாயி பேசிகிட்டு இருக்கரப்ப அண்ணா வந்துவிட்டார்

செந்தில் அண்ணாவும் அக்காவும் வந்து விட்டார்கள்.

”சுந்தரு ,,கரெக்டா வந்துட்டியா … இரு சாப்பிடலாம் ..” என்றவர் வேறு உடை அணிந்து சாப்பாடு மேசைக்கு கூட்டி சென்றார். பெரிய மேசை.

அக்காவிடம் “அவன் கூச்சப்படுவான் …நீயே எல்லா ஐட்டம் ல யும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிரு’’

இலை நிறைவாய் அசைவ உணவுகள் தான் இருந்தது.

இவன் செந்திலன்னாவை பார்த்தான்.

”டே சுந்தரு நீ காச மிச்சம் பண்ணோணுமின்னு ஒழுங்கா சாப்பிட்டுருக்க மாட்ட .. அதான் நீ வரேன்னு சொன்னதும் ஆடு கோழி எல்லாம் வாங்கியாந்தேன்”

இவன் சாப்பிட ஆரம்பித்தான். கண்கள் கலங்கியது … வக்கீல் வீட்டில் சாப்பிட்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

மீனாட்சி அம்மாயி ”காரம் போட்டுட்டாங்களா கண்ணு ..கொஞ்சம் பொறுமையா சாப்பிடு” என்றார்.

குமார் சண்முகம் .

வயது 39. கோவையில் வசிக்கிறார்.கல்வியில் மலர்தல் என்ற தொகுப்பு நூல் தன்னறம் வெளியீடாக வந்திருக்கிறது.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *