1
இணையத்தில் கொலை செய்யப்பட்டவன்
**
நேற்று காலை என்னைக் கொலை செய்தார்கள்.
இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றேன்
பேஸ்புக்,வாட்ஸ்அப் எல்லாவற்றிலும்
உன் புகைப்படத்துடன் அத்தனை RIP போட்டிருப்பதைக்
கவனிக்கவில்லையா என்றார்கள்
திரும்பத் திரும்ப
நீ இறந்தவன்தான் நீ இறந்தவன்தான் என்றார்கள்.
வெறுத்துப் போய் ஒத்துக் கொண்டேன்.
என்னை குளிர்பதனப் பெட்டிக்குள் வைக்காதீர்கள்.
துவாரங்களை துணியாலடைத்து
நாற்காலியில் உட்கார வையுங்கள் என்றேன்.
வேண்டாவெறுப்பாக ஒத்துக் கொண்டார்கள்.
நேற்றிரவு இறந்தேன்.
ஒரு உதவி செய்ய முடியுமா?
இந்தக் குளிர்பதனப் பெட்டியின் ஸ்விட்ச்சை
ஆஃப் செய்யுங்கள்.
இயலாதெனில்
அளவையாவது குறையுங்கள்.
எனக்கு சைனஸ் ப்ராப்ளமிருக்கிறது.
2
வளைவுகளில் ஒலி எழுப்பாதவர்கள்,
பதில் ஒலிக்காதவர்கள்
இஷ்டப்படி திரும்புகிறவர்கள்
நோ என்ட்ரியில்,எதிர் திசையில்
அதி விரைவாய் வருபவர்கள்
தனக்கு மட்டுமேயானது சாலையென
உறுதியாக நம்புகிறவர்கள்
பின் வரும் உங்களின் முகத்தில்
சைலன்ஸரின் கரி பூசுபவர்கள்,
அதிர வைக்கும் புயல் வேகத்தால்,
காதுகள் கூசும் வித்தியாசமான ஒலிகளால்
தடுமாற வைப்பவர்கள்
கொலை வெறியுடன் பரபரக்கும் சாலைகளில்,
அடிபட்டு வீழ்வதற்கான
சகல சாத்தியங்களுடன்தான்
உயிர்ப்புடனிருக்கும் ஓட்டுனர் உரிமத்தை
வைத்திருக்கும்,
சாலை விதிகளைப் பின்பற்றும் நீங்கள்,
வீட்டு வாசலில்,
சரியான இடைவெளிகளில் சர்வீஸ் செய்யப்படுகிற
உரிமம் முறையாகப் புதுப்பிக்கப்பட்ட
உங்கள் வாகனத்தை உயிர்ப்பிக்கிறீர்கள்.
**
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில்முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார். ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்