தேஸ்பூர் பெண் யாஷிகாவுடன் ஓய்வு வேளைகளில் பேசினேன். பேசுவதில் அவள் காட்டிய முனைப்பால் தான் அரைகுறை ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி அவளுடன் சாட் செய்து கொண்டிருந்தேன். அவ்வப்போது அழைப்பிலும் சில வார்த்தைகள் பேசினோம். 2கே கிட் என்று சொல்லப்படுகிற புத்தாயிரத்தின் குழந்தை அவள். பக்குவத்தின் வாடையைக் கூட நுகராதவளாகத்தான் அவளது பேச்சு இருந்தது. சில வேளைகளில் குழந்தைத்தனமாக அவள் பேசுவது என் பொறுமையை ரொம்பவே சோதிக்கும். அந்த பாவனையை அவள் க்யூட் என்று நினைத்திருக்கலாம். எனக்கு ஏனோ அது அயற்சியளித்தது. வெறுமனே நீளும் உரையாடல்கள் வெகுசீக்கிரத்திலேயே அலுப்பை உண்டாக்கி விடும். அந்த சலிப்பு விரைவில் ஏற்பட்டு விட வேண்டாம் என்பதற்காக ஓய்வு வேளைகளில் மட்டும் அவளிடம் பேசி வந்தேன். எங்களுக்குள்ளான இடைவெளியை அவள் தகர்த்தபடியே முன்னகர்வதை நான் அறிந்த கணத்தில் அவளே அதனை வெளிப்படுத்தினாள்.

‘I Need You’ என அவள் அனுப்பிய செய்தியின் பொருளை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஓரளவு புரிந்தாலும் ஏனோ அப்படி நடந்து விட வேண்டாம் என்கிற பதட்டமே என்னுள் நிறைந்திருந்தது. இதன் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு, அதற்கு அர்த்தம் அதுவேதான் என்று பதில் தந்தாள். வாழ்க்கை முச்சூடுமா என்று கேட்டதற்கு ஆம் என்று அவளிடமிருந்து பதில் வந்தது. அவளது பக்குவமின்மை அப்பட்டமாக வெளிப்படுவதாகவே எனக்குத் தோன்றியது. நடைமுறைச் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். காதலில் எதுவும் சாத்தியம் என்கையில் இதுவும் சாத்தியம்தான் என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் இது காதல்தானா என்பதிலேயே எனக்கு ஐயப்பாடு இருந்தது. அவளுக்குப் பதில் தருவதில் நானும் சற்றுக் குழம்பியே போயிருந்தேன். எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை எனச் சொன்னபோது “நான் அசாமிப் பெண் என்பதால்தானே?” என்று கேட்டாள். அப்படிக் கிடையாது என்றேன். பிரச்னை என்னவென்றால் காதல் மீதான கனவு மயக்கத்தையெல்லாம் நான் முன்பே கடந்து போயிருந்தேன். அனைத்திலும் நடைமுறைச் சாத்தியங்களை ஆய்வுக்குட்படுத்தும் மனநிலை உருவாகி விட்ட நிலையில் இவளது இந்த அணுகுமுறை குழந்தைத்தனமாகப் பட்டது. அந்த உரையாடலை நீட்டிக்க விரும்பாமல் எனக்கும் தோன்றினால் சொல்கிறேன் என்பதோடு முடித்துக் கொண்டேன்.

பாடல்களை ஒலிக்கவிட்டு இசையைத் துணையாக்கிக்கொண்டு மாண்டலே பாட்டிலைத் திறந்து மூன்று சுற்றுகள் முடித்திருந்தேன். இங்கு தமிழர்கள் ஒரு பகுதி வாழ்கிறார்கள் என்றால் நிச்சயம் தமிழ் உணவகம் இருக்கும் என்கிற எண்ணம் இயல்பாகவே எழுந்தது. விசாரிக்கையில் அங்காள மாரியம்மன் கோவில் செல்லும் பாதைக்கு முந்தைய தெருவில் ஒரு உணவகம் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு சாப்பிடச் சென்றேன். அந்த உணவகத்தை ஒரு பெண் நிர்வகித்து வந்தார். நான் போனதும் இட்லி சொன்னேன். ஆறிப்போய் கொஞ்சம் தடித்திருந்தது. இருந்தாலும் தேங்காய்ச் சட்னி, சாம்பாரோடு சேர்த்துச் சாப்பிடுகையில் கொஞ்சம் தேறியது. திருவிழா நேரம் என்பதால் வேறு வேறு  ஊர்களில் வாழும் தமிழ்மக்கள் விருந்தினர்களாக வருகின்றனர் என்பதால் என்னையும் திருவிழாவுக்கு வந்தவனாகவே அங்குள்ளவர்கள் பார்த்தனர். ஆகவேதான் அந்த அக்கா பரிச்சயமற்ற ஒரு தமிழ் முகத்தை எந்தக் கேள்வியும் இல்லாமல் அணுகினார். அவரது பேச்சில் மதுரை வட்டார வழக்கு லாவகமாகத் தெறித்தது. இவர்களெல்லாம் பிறந்ததில் இருந்தே இங்குதான் இருக்கிறார்களா இல்லை போன ஆண்டுதான் புலம்பெயர்ந்து வந்தார்களா என்று குழப்பும்படியாக இருந்தது அவரது மதுரைப் பேச்சு. மோரேவில் வாழும் தமிழர்கள் எல்லோருமே தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும்போது இங்கேயே பிறப்பவர்களுக்கும் இந்த வழக்குதானே கூடிவரும்.

அடுத்த நாள் அந்நகரைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நாய்க்கறி மீதான தயக்கத்தைக் கலைந்திருந்தேன். ருசிக்காக இல்லை பரிட்சித்துப்பார்க்கும்  முனைப்போடு நாய்க்கறி சாப்பிட்டுப் பார்ப்பதென முடிவெடுத்தேன். அம்முடிவினை எடுக்கும் முன்னர் நன்றாகவே யோசித்தேன். மாட்டுக்கறி சாப்பிடுவதையே விலக்கத்தோடு பார்க்கிற தமிழ்நாட்டுச் சூழலில் வளர்ந்த எனக்கு நாய்க்கறி சாப்பிடுவது குறித்து சிறு தயக்கம் கூட எழவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்ல முடியாதல்லவா! எந்த ஒரு சமூகத்தின் உணவுக் கலாச்சாரத்தையும் விமர்சிக்கிற, கேள்வி கேட்கிற உரிமை இங்கே எவருக்கும் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். மாட்டுக்கறி மீதான உணவு அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. இந்த உணவைச் சாப்பிடுவேன் என்று சொல்வது தனிமனித உரிமை. அதே போல் இந்த உணவைச் சாப்பிட விருப்பம் இல்லை என்று சொல்வதும் தனிமனித உரிமைதான். குற்றச்செயலைத் தவிர்த்து தான் விரும்புவதைச் செய்ய ஒரு மனிதனை இடையூறு செய்யாமல் இருப்பதே ஜனநாயகம் என்பதை உறுதியாக நம்புகிற நான் நாய்க்கறி சாப்பிடுவதொன்றும் குற்றம் அல்ல என்பதைச் சொல்லித்தான் என்னை நானே தயார்படுத்தினேன்.

ஒரு கப் அளவிலான நாய்க்கறியை நூறு ரூபாய்க்கு வாங்கினேன். விற்பனை செய்து வரும் அப்பெண்களிடம் நாய்க்கறி வேண்டும் என்று கேட்டதும் ஏதோ நாகாமியில் சொல்லியபடி சிரித்தனர். நேற்றுக் கேட்டபோது வேண்டாம் எனக்கூறி மறுத்தவன் இன்று வந்து கேட்கிறேன். ‘வா அருணாச்சலம்… நீ வருவேன்னு தெரியும்’ என்கிற வசனத்தை ஒத்து ஏதேனும் யோசித்து அவர்கள் சிரித்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஒரு கப் நூறு ரூபாய் என்பது சிக்கன், பீஃப் ஐ காட்டிலும் விலை அதிகம். சீனா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நாய்க்கறி பரவலாகவும், சில நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உண்ணப்படுவதாகவும் இருக்கிறது. ஆக நாய்க்கறியைத் தின்னும் விசித்திர உயிர்களாக நாகா பழங்குடிகளைப் பார்க்க வேண்டிய தேவை இல்லை.  நாகாமிகளுக்காக விற்கப்படும் நாய்க்கறியினை மோரேவில் வாழும் குக்கி, மெய்த்தி இன மக்கள் சாப்பிடுவது போல் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

எனது அறைக்கு வாங்கி வந்து பொட்டலத்தைப் பிரித்து, வாழை இலையின் சாயலில் அச்சிடப்பட்டிருந்த காகிதத் தட்டுக்கு அதனை மாற்றினேன். மொத்தம் பத்துத் துண்டுகளுக்குள் அடங்கும் அக்கறியினை பன்றிக்கறியோடுதான் ஒப்பிட முடியும். நம்மிடையே பரவலாக சாப்பிடப்படுகிற இறைச்சிகளில் பன்றிதான் தோலை உரிக்காமல் தீயில் வாட்டப்படுகிறது. நாய்க்கறியும் அவ்விதமே வாட்டப்பட்டு சமைக்கப்படுகிறது. பன்றி இறைச்சியின் சிறப்பம்சமே அதன் தோல் பகுதிதான். பேச்சுவழக்கில் அதனை ‘வார் பீஸ்’ என்போம். தடித்த தோலின் கீழே கொழுப்பும், தசையும் அடுக்கடுக்காக சேர்ந்திருக்கிற அந்த வார் பீஸை தடித்த சீஸ் துண்டு என்று கூட சொல்லலாம். பன்றியளவு மொத்தமாக இல்லாமல் நாய்க்கறியின் வாட்டப்பட்ட தோல் பகுதி சற்று திண்மை குறைவாகவே இருந்தது. வாட்டியதன் வெப்பத்தில் காளான் குடை போல் சுருண்டிருந்தது. சாப்பிடும் முன் இறைச்சியின் கவுச்சி அடிக்கும் என பயந்தேன். அப்படி எதுவும் இல்லாத அளவுக்கு சரியான முறையில் சமைக்கப்பட்டிருந்தது. இறைச்சி பன்றிக்கறியை விட சற்று தடிமனாக மாட்டிறைச்சியை ஒத்து இருந்தது. நாய்க்கறி என ஒவ்வாமை கொள்ளாமல் இருந்தால் நன்றாகவே சாப்பிடலாம். நாய்க்கறியைப் படமெடுத்து நான் சாப்பிட்டதை எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அப்பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் ‘மூளை, இதயம் இரண்டையும் கழற்றி வைத்து விட்டுத்தான் நாய்க்கறியை சாப்பிட முடியும்’ எனக் கருத்திட்டிருந்தார். இப்படியான எதிர்வினை எழும் என்பது தெரிந்ததுதான். இந்தப் பதிவை எழுதும் இக்கணத்தில் கூட இது எப்படியாக எடுத்துக் கொள்ளப்படும் என்கிற சிறு பதட்டம் என்னை அழுத்துகிறது. நாய்க்கறி என்றதும் முதலாவது எழுவது அருவருப்பு, அடுத்தது நாய்ப் பிரியர்களின் கோபம். ‘அந்தக் கறியையெல்லாம் எப்படி சாப்பிட முடியுது?’ என்கிற ஒவ்வாமை கொண்டவர்களை விட டாக் லவ்வர்ஸ் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடும். நீயெல்லாம் மனிதப்பிறவிதானா? என்று கூட அவர்கள் என்னைக் கேட்கக்கூடும். பரிட்சார்த்த முயற்சியாக மட்டுமே சாப்பிட்டேன் அதுவே எனது முதலும் கடைசியும். மேரேவில் தங்கியிருந்த 10 நாள்களில் அதன் பிறகு நாய்க்கறியைத் தேடி நான் போகவில்லை.

மோரேவில் மிகக்குறைந்த வாடகையில் தங்குமிடம் கிடைத்ததாலேயே பத்து நாள்கள் தங்கி எனது எழுத்து வேலைகளை மேற்கொண்டிருந்தேன். முதல் ஐந்து நாள்கள் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அம்மன் பாடல்கள் மட்டுமின்றி முருகன் பாடல்களும் தூரத்தில் ஒலிப்பது மிக மெலிதாகக் கேட்கும். அவ்வப்போது கோயிலுக்குச் சென்று தானச்சோற்றை சாப்பிட்டபடியும், பிற வேளைகளில் அந்தத் தமிழ் உணவகத்திலேயே சாப்பிட்டும் எனது மேரோ நாள்கள் கடந்தன. பத்தாவது நாள் மோரேவிலிருந்து கிளம்பலாம் என எத்தனிக்கையில் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேருந்து இயங்கவில்லை. அடுத்த நாள்தான் கிளம்ப முடிந்தது.

மோரேவில் இருந்து அடுத்ததாக எங்கு கிளம்புவது என யோசிக்கையில் பூடான் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். அதற்கான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டபோது பூடானின் திசை நோக்கி கும்பிடு வைத்து விட்டுத் திட்டத்தை மாற்றிக் கொண்டேன். சுற்றுலாப் பயணியாக பூடானுக்குள் நுழைய வேண்டுமென்றாலே கட்டாயம் ஒரு ‘வழிகாட்டி’ உடன்தான் செல்ல வேண்டும். அவருக்கான தொகை போக நாம் எங்கு சென்றாலும் அவருக்கென தனி விடுதி அறையில் தங்க வைக்க வேண்டும். அவர் பைக்கில் எல்லாம் வர மாட்டார். நாம் பைக்கில் செல்கிறோம் என்றால் அவருக்குத் தனியே கார் டாக்சி ஏற்பாடு செய்து தர வேண்டும். பூடானில் உள்ள பாரோ மற்றும் திம்பு ஆகிய இரு பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் வழிகாட்டி இல்லாது சுயாதீனமாகச் செல்ல அனுமதி உண்டு. மற்ற பகுதிகளுக்கு வழிகாட்டி இல்லாமல் நுழைய அனுமதி கிடையாது என்கிற விதிமுறைகளை பூடான் அரசு வகுத்திருக்கிறது. இது போகவும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் அதிகம் என்பதால் பூடானை இன்னொரு மாலத்தீவு என்கின்றனர். பொருளாதார வலுக்குறைந்த பூடான் போன்ற நாடுகள் சுற்றுலாவை முதன்மைப் பொருளாதாரமாகக் கொண்டுள்ளதாலேயே இது போன்ற கட்டுப்பாட்டுகள். இது எந்த அளவுக்குப் பலனளிக்கும் எனத் தெரியவில்லை. எல்லா வாசல்களையும் திறந்து விட்டால்தானே எல்லாப் படிநிலைகளில் உள்ளோரும் வந்து செல்வார்கள். அதன் வழியாக சுற்றுலாப் பொருளாதாரம் வீறு கொண்டெழும். அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு விடுதி தேடி அலையும் பொருளாதார சூழலில் பயணிக்கிற, பொதுப்போக்குவரத்துச் சேவையை நாடிச்செல்கிற எனக்கு அச்செலவுகள் தாங்கும் திறன் இல்லை என்பதால் நேபாளுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். நான் பூடான் செல்லாததால் எனக்கு ஒன்றும் இழப்பில்லை பூடானுக்குத்தான் இழப்பு எனச் சபித்தேன்.

மோரேவில் இருந்து இம்பாலுக்குச் செல்ல தினசரி காலை 6 மணிக்கு ஒரு பேருந்தும், மதியம் 1மணிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. அடுத்த நாள் திங்கள்கிழமை மதியம் 1 மணிக்குப் புறப்படும் அரசுப்பேருந்தில் கிளம்பினேன். பின் மதியம் 04.30 மணிக்கு இம்பாலை அடையும் அப்பேருந்துக்கு 230 ரூபாய் கட்டணம். இம்பால் சென்று நாகாலாந்து, அசாம் வழியே நேபாளம் செல்லும் திட்டத்தோடு திரும்ப வருவேனா என்கிற உத்தேசம் இல்லாத மோரே நகரிலிருந்து கிளம்பினேன்.   

இம்பாலை அடைந்த போது அங்கிருந்து திமாபூர் செல்ல பேருந்து கிடையாது என்றும் விங்கர் என்னும் மினி வேனில்தான் செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். வடகிழக்கு மாநிலங்களில் மதியத்துக்கு மேல் பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்குவது அரிதான ஒன்று. விங்கரில் செல்வதைக் காட்டிலும் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில் 1200 ரூபாய் எனச் சொன்ன கட்டணத்தை 400 ரூபாய் குறைத்து 800 ரூபாய்க்குக் கொண்டு வந்தேன். பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போதே எனக்கு ஓட்டுநர் இருக்கைக்கு அருகே இருக்கும் முன்பக்க இருக்கைதான் வேண்டும் எனத் தீர்மானமாகக் கேட்டேன். அந்த ட்ராவல் ஏஜெண்டும் ‘ஆவோ… ஆவோ’ என்று சொல்லியபடி ஒரு இருக்கை எண்ணை எழுதி சீட்டைக் கொடுத்தான். அவனுக்கு நான் ஆங்கிலத்தில் சொன்னது உண்மையிலுமே விளங்கியதா இல்லை பதிவுச் சீட்டுப் பதிகையில் என்ன கேட்டாலும் ஆகட்டும் எனச் சொல்லி விடுவதை யுக்தியாகக் கொண்டிருக்கிறானா என்கிற சந்தேகம் எழுந்து மறைந்தது. இந்த விங்கரில் திமாபூர் சென்றடைய 7 மணி நேரம் ஆகும். அப்படியெறால் இரவு 8 மணிக்குப் புறப்படும் இந்த வேன் நள்ளிரவில்தான் திமாபூரை அடையும். ரயில் நிலைய லாக்கரில் பேக்கை வைத்து விட்டு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கிக் காலையில் அசாம் கிளம்பி விடலாம் என விங்கரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி இத்திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ட்ராவல் ஏஜென்சி ஊழியர் ஒருவர் வந்து முன்பக்க இருக்கை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்றார். முன்பக்க இருக்கைதானே எனக்கு வேண்டும் எனக்கேட்டு சீட்டு வாங்கியிருக்கிறேன் எனச்சொல்லி விட்டு குழப்பத்தில் அமர்ந்திருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு நபர் வந்தார். அவருக்கு 50 – 60 வயது இருக்கும். சீட்டைக்கொடு என்று கேட்டவர் வாங்கிப் பார்த்ததும் இந்தியில் ஏதோ சொன்னார்.

எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதும் இந்தியில் திட்டிக் கொண்டே அடிக்கக் கை ஓங்கினார். தன்னுணர்வு என்னைச் சீண்ட தமிழில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசித் திட்டியபடி  சீட்டை விட்டு இறங்கினேன். என்ன நியாயம் எனக்கேட்க இருவரும் ஏஜென்சியின் டிக்கெட் கவுன்டருக்குப் போனோம். அங்கேயும் யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. என்னை அடிக்கக் கை ஓங்கிய அந்த ஆள் என்னை பின் இருக்கையில் உட்காரச் சொல்லும்படி சொல்லிக் கொண்டிருந்தார். நான் முன் சீட்டுதானே கேட்டுப் பதிவு செய்தேன். இப்போது வந்து அந்த சீட்டு ஏற்கனவே பதியப்பட்டு விட்டது எனச்சொல்வத அர்த்தமின்மையைக் கேள்விக்குட்படுத்தினேன். அதற்குள் அங்கு ஏழெட்டுப் பேர் கூடி விட்டனர். அவர்கள் எல்லோரும் ட்ராவல் ஏஜென்சியைச் சார்ந்தவர்கள். நான் தனியொருவனாக அவர்களிடத்தில் நியாயத்தைக் கோரினேன். முன் இருக்கை எனக்கு வேண்டும் என்பதைத் தாண்டி இந்த ஆள் எப்படி எனை அடிக்கக் கை ஓங்கலாம் என்கிற கொதிப்பு என்னுள் தணியாது இருந்தது. நான் முன் இருக்கைதான் வேண்டுமெனக் கேட்டேன் எனத் திரும்பக் கூறுகையில் “உன் சீட்டை நன்றாகப் பார்” எனக் கோபமாக என் கையில் இருந்த பயணச் சீட்டினை (ரசீது) அந்த ஆள் தட்டவே அதன் வலதுபுற விளிம்பு கிழிந்தது. அந்த ஆளிடமிருந்து அப்படியொரு கோபம் கனன்றெழுந்து கொண்டிருந்தது. பயணச்சீட்டில் எழுதப்பட்டிருக்கும் இருக்கை எண் முன் இருக்கைக்கானது அல்ல என்று அந்த ஆள் வாதிட்டார். சரிதான் ஆனால் இருக்கையைப் பதிவு செய்யும்போதே இதனைச் சொல்லாமல் விட்டது யார் பிழை எனக் கேட்டேன். அந்த ஏஜென்சியைச் சேர்ந்த இன்னொரு நபர் என்னிடம் இனி இருக்கை எண்ணை மாற்ற முடியாது எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கையில் ‘அந்த ஆள்’ நான் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் பக்கவாட்டில் நின்றபடி சட்டென என் கன்னத்தில் அறைந்தார். அந்த திடீர் தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இரண்டு நொடிகளிலேயே மீண்டு வந்து ஏழெட்டுப் பேர் அரணாகச் சுற்றியிருக்கிற தினவில் என்னை அறைந்த அந்த ஆளை தமிழ் ஆங்கிலம் என இரண்டிலும் உள்ள கெட்ட வார்த்தைகளில் திட்டினேன். “I won’t hit you back because you’re old bastard” என்றேன். எப்படி அவர் என்னை அடிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த ஆள் உள்ளே சென்று ஒரு அலுமினிய ஸ்டேண்டை என்னை அடிப்பதற்காகத் தூக்கி வந்தார். அங்குள்ளவர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகையில் அவர் திமிறிக்கொடிருந்ததைப் பார்க்கையில் எனக்குக் கடுங்கோபமும் அதனூடே சிரிப்பும் வந்தது. என் உடல் வலுவுக்கு எட்டி உதைத்தால் அவர் நிலை தடுமாறி விழுந்து தொலையக்கூடும். பிறகு எதற்கு அந்த ஆளுக்கு இந்த வீராவேசம் என்பதை நினைக்கையில் சிரிப்பு எழாமல் எப்படி! எக்காரணத்தைக் கொண்டும் அவரைத் திருப்பித் தாக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

காவல் நிலையம் சென்று அந்த ஆள் மீது வழக்குக் கொடுக்கிறேன் என்றேன். நான் நியாயத்தை விளம்பிக் கொண்டிருந்த அந்த நபர் என்னைத் தனியாக அழைத்துச் சென்று “அந்த ஆளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். அந்த ஆள் வயதானவர் என்பதால் இப்படி நடந்து கொண்டார் ஆகவே இதனைப் பெரிதுபடுத்தாமல் உங்கள் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று தயவு கூறிக்கேட்டுக் கொண்டார். நான் சரியென ஒப்புக்கொண்டு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்குப் பயணச்சீட்டு எழுதிக் கொடுத்த அந்த ‘ஆவோ… ஆவோ’ பயலைத் தேடினேன்… காணவில்லை. ‘அவந்தாண்டா இன்னைக்குப் பெரிய வேலைய பார்த்து விட்டுப் போயிட்டான்’ என்கிற வசனம்தான் நினைவுக்கு வந்தது. இந்தி தெரியாதவன் இங்கு யாரிடமும் போய் ஆதரவு கோர முடியாது என்கிற இளக்காரத்தில்தான் அந்த ஆள் என்னை அறைந்திருக்கிறான். வண்டியில் ஏறி உட்கார்ந்தும் அந்த ஆள் அறைந்தது என்னை உறுத்திக் கொண்டே இருக்கத் திரும்பச்சென்று அறையலாமா என்கிற யோசனை கூட வந்தது. அப்படி மட்டும் நடந்தால் காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும். திமாபூர் பயணம் ரத்தாகி இம்பாலிலேயே தங்க வேண்டி வரும். போக இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஊழியர் வைத்த கோரிக்கைக்கு அர்த்தமில்லாது போய் விடும். எல்லாவற்றையும் தாண்டி அங்குள்ள மணிப்பூரிகள் சக மணிப்பூரியான அந்த ஆளுக்கு ஆதரவாகத்தா நிற்பார்கள் என்பதால் எனக்கான நியாயத்தைப் பெற நான் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். நடைமுறைச் சாத்தியங்களை யோசித்துப் பார்த்து விட்டு என்னை நானே தணித்துக் கொண்டேன்.

வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லைதான். மொழி தெரியாத காரணத்தினால் எவனுக்கும் தாழ்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நான் திரும்ப அறையவில்லை என்றாலும் கடைசி வரை பயப்படாமல்தான் நின்றேன் என்பதை உணர்ந்ததும்தான் அமைதியானேன். எந்த ஒரு சூழலிலும் உரிமையை இழக்காமல் துணிச்சலைக் கை விடாமல் இருக்க வேண்டும். இந்தி கற்றுக் கொள்கிறேனோ இல்லையோ இந்தி கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மூர்க்கம் என்னுள் பிறந்தது. 

8 மணிக்கு இம்பாலில் இருந்து கிளம்பிய விங்கரில் ஆட்கள் நிரம்பியிருந்தனர். பெருஞ்சினமும், ஆற்றாமையும் என்னுள் கொப்பளித்துக் கொண்டிருந்தது. பாடல்களை ஒலிக்க விட்டு மனதை சமநிலைக்குக் கொண்டுவரப் போராடிக் கொண்டிருந்தேன். விங்கர் 20 கிமீ தாண்டிய பிறகு ஒரு தாபா முன்னே நிறுத்தப்பட்டது. டி சர்ட், ஜீன்ஸ் அணிந்த இருவர் எனது இருக்கை எண்ணைக் கூறி என்னைக் கீழே இறக்கினர். “நாங்கள் போலீஸ்… உன்னை விசாரிக்க வேண்டும்” என்று சொன்னபடி எனது பேக் பேக்கை வாங்கிக் கொண்டு தாபாவினுள் போனார்கள். அவர்கள் போலீஸ் இல்லை என்று கூடவா எனக்குத் தெரியாமல் போகும். எல்லாம் அந்த ஆளின் ஏற்பாடு என்று நன்றாகத் தெரிந்தது.

எனது பேக் பேக்கை சோதனையிட தாபாவினுள் இருந்த டேபிள் மேல் வைத்தபடி என்னைப் பற்றிக் கேட்டனர். நான் பத்திரிகையாளன் என்றேன். அடையாள அட்டையைக் கேட்டதும் பர்ஸில் இருந்த பழங்காலத்து ஐடி கார்ட் ஒன்றைக் காண்பித்தேன். பேக்கைத் திறக்கச் சென்றவர்கள் ஐடி கார்டைப் பார்த்த பிறகு திறக்காமல் என்னிடம் கொடுத்துக் கிளம்பச் சொன்னார்கள். அவர்களது நோக்கத்தை அறிந்து விட்டேன் என்பதை உணர்த்தும்படி “அந்தப் பிரச்னைக்காக நானே இம்பால் காவல் நிலையம் செல்ல வேண்டியவன்தான்… திமாபூர் செல்ல முடியாமல் போகும் என விட்டு விட்டேன்” என்று அவர்களிடம் சொன்னேன். “எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கிளம்புங்கள்” என்றனர்.

இம்பாலில் இருந்து நள்ளிரவு 2 மணிக்கு திமாபூர் வந்து சேர்ந்தேன். மலைப்பாதையினூடான அப்பயணம் கடும் சோர்வுக்கு ஆட்படுத்தியிருந்தது. நேபாள் செல்ல வேண்டுமெனில் சிலிகுரி வழியாகத்தான் போக முடியும். தேஸ்பூர் போய் ஓய்வெடுத்து விட்டுச் செல்வதென முடிவெடுத்தேன். சில கட்டுரைகள் எழுத வேண்டியிருந்ததும் அதற்கு முக்கியக் காரணம். திமாபூரிலிருந்து தேஸ்பூருக்கு காலை 6 மணிக்குதான் பேருந்து. அக்குளிர் இரவில் 4 மணி நேரத்தைத் தூங்காமல் கடத்த வேண்டியிருந்தது. பின்னர் பேருந்து ஏறி மதியம் 2 மணிக்கு தேஸ்பூரை அடைந்து ஐநூறு ரூபாய் வாடகையில் ஒரு விடுதியில் தங்கினேன்.

குவஹாத்தியில் இருந்து சிலிகுரிக்கு (நியூ ஜல்பைகுரி) ரயில் முன்பதிவு செய்த பிறகு அபினவை அழைத்தேன். நெருங்கிய நண்பனுக்கான சிநேக உணர்வை அபினவ் எப்போதும் தருகிறான். கல்லூரி வேலைகள் முடிந்ததும் நேரே விடுதிக்கு வந்து விட்டான். கூடவே நண்பர் கஸ்தவ்தாஸும் வந்திருந்தார். மாலை வேளையில் தவாங் சாலையில் ஒரு தேநீர் விடுதியில் கூடினோம். எனக்கு இட்லி செய்து தருவதாகச் சொன்ன ரூஹி பஞ்சாப்பில் உள்ள தன் சொந்த ஊருக்குப் போய் விட்டாள் என அபினவ் சொன்னான். ஒரு பஞ்சாபிப் பெண்ணின் திருக்கரங்களால் படைக்கப்பட்ட இட்லியைச் சாப்பிடும் பேறு இப்போதும் வாய்க்கவில்லை. நான் தேஸ்பூரில் இருந்த நாள்களில் எல்லாம் அபினவ் என்னை உணவகங்கள், மாலை நேரச் சிற்றுண்டிக் கடைகள் மற்றும் தேநீர் விடுதிகளுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான். அதற்கு சிறு கைம்மாறாக இம்முறை தேஸ்பூர் வரும்போதே அபினவை நான் எங்காவது கூட்டிச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியிருக்க டீ குடித்த முடித்த பிறகு “இரவுக்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்” எனக்கேட்டு அதற்கான தொகையைக் கொடுத்து ரசீதினை வாங்கி என்னிடம் தந்தான். “எப்போது சாப்பிட விரும்புகிறீர்களோ அப்போது வந்து இந்த ரசீதைக் கொடுத்து உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான். அபினவ் ஐ எங்காவது சாப்பிட அழைத்துச் செல்லலாம் என நினைத்திருந்ததைச் சொன்னபோது “அதெல்லாம் வேண்டாம் பிரதர்… உங்களுக்கு பயணத்தில் நிறைய செலவுகள் இருக்கும்… அதைப் பாருங்கள்” என்றான். நாங்கள் மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு விடைபெற்றோம்.

பதிவு செய்து இரண்டு நாள்களாகியும் சிலிகுரிக்கான ரயிலில் எனக்கான இருக்கை காத்திருப்புப் பட்டியலிலேயே இருந்தது. அபினவிடம் இதுபற்றித் தெரிவிக்கையில் ‘தேஸ்பூரிலிருந்து நேரே சிலிகுரிக்குச் செல்லும் பேருந்துகளே இருக்கின்றன” என அவன் சொல்லவும் ‘ரெட் பஸ்’ அப்ளிகேஷன் வாயிலாக 850 ரூபாய்க்கு சிலிகுரிக்கு அன்று மாலை 4.30 மணிக்குச் செல்லும் பேருந்தில் ஜன்னலோர இருக்கையைப் பதிவு செய்தேன். அன்றைக்குத் தேதி ஏப்ரல் 14 அதாவது சித்திரைத் திருநாள். தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிற அந்நாளில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்நாளில் அசாமில் ‘பிஹு’ என்கிற பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு மதியம் அபினவ் என்னை அவனது வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றான். பண்டிகை நாள்களில் சமைக்கும் உணவுகளில் விசேஷம் கூடி விடுகிறது. நிறைவாகச் சாப்பிட்டு விட்டுக் கிளம்புகையில் அபினவ் – ன் அம்மா எனக்கு ஒரு சால்வையைப் போர்த்தி விட்டார். அந்த சால்வையை ‘கமுசா’ என்கின்றனர். பண்டிகை நாள்களில் அன்பின் நிமித்தம் இதனை போர்த்துவது அசாமிகளின் வழக்கம் என்றனர். அவர்களின் அன்புக்குரியவனாகி விட்ட நெகிழ்வோடு அங்கிருந்து கிளம்பினேன்.

என்னை வழியனுப்ப அபினவும் அவனது நண்பன் ராஜிவ் ஷர்மாவும் வந்தனர். மாலை 04.30 மணிக்கு தேஸ்பூரில் இருந்து கிளம்பும் பேருந்து அடுத்த நாள் காலை 06.30 மணிக்கு சிலிகுரியைச் சென்றடையும். அங்கிருந்து நேபாள எல்லை மிகவும் அண்மையில் இருக்கிறது. நேபாளம் செல்வதற்கான நடைமுறை என்னவென்பது குறித்தும், நேரடியாக காத்மாண்ட் செல்வதற்கான பேருந்து வசதி குறித்தும் போய்தான் விசாரிக்க வேண்டும். என்னதான் நேபாள் இந்தியாவைச் சார்ந்திருக்கிற நாடு என்றாலும் அது வெளிநாடுதானே எனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிற கொண்டாட்ட மன நிலையில் எனது போருந்து வந்ததும் அபினவ் -ஐ கட்டியணைத்து விடைபெற்றேன். 

பேருந்தில் ஏறி எனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த பிறகு நிச்சலனம் கொண்டிருந்தேன். பின்னோக்கி விரையும் அசாமின் செழிப்பான நிலக்காட்சிகளைப் பார்த்தபடியிருக்க சட்டென பைக்கர் ஆகாஷ் நினைவுக்கு வந்தான். அவன் பயணத்தை முடித்து விட்டானா எனத்தெரியவில்லை. அவன் ஒரு introvert. சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் கூட பதிவிட மாட்டான் என்பதால் அவனைக் கண்காணிக்க முடியவில்லை. அவனுக்கு அழைத்துப் பேசினேன். அவன் தனது மோட்டார் சைக்கிள் டைரியை நிறைவு செய்து விட்டான். நேபாளம், பஞ்சாப், குஜராத் என 40 நாள்களுக்கு மேல் சுற்றி விட்டு தனது ஊரான பெங்களூரை அடைந்து விட்டதாகச் சொன்னான். அவனிடம் நேபாளப் பயணம் குறித்துக் கேட்டேன். பைக்கில் செல்வதற்கான நடைமுறை மட்டுமே அவனுக்குத் தெரிந்திருக்கிறது. பைக்கில் நேபாளம் செல்ல 8 நாள்களுக்கு மட்டுமே பர்மிட் தருகிறார்கள். அதைக் கடந்தும் நேபாளில் இருந்தால் நாளொன்றுக்கு 1500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனச்சொன்னான். நான் பைக்கர் இல்லை என்பதால் அதுபற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பீகாரிகள் தினக்கூலிகளாக நேபாளுக்குச் சென்று வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேபாளுக்குச் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்பது தெரியும். பொதுப்போக்குவரத்தில் பயணிக்க பர்மிட் தேவையா? பேருந்தில் செல்கிறவர்களுக்கும் இந்த 8 நாள்கள் மட்டுமே கால அவகாசம் தரப்படுகிறதா? சிலிகுரி போகும் வரையிலும் இது புதிராகவே இருக்கட்டும் என நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் யாஷிகாவிடமிருந்து மெசேஜ் வந்தது.

உலவித்திரிவோம்… 

கி.ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *