நீ எங்காவது போய்க்கொண்டேயிருப்பாய் தேடியலைவது எனக்கு இயல்பாகி விட்டிருந்தன.

மலர்ச் செடிக்குள் ஒளிந்து கொள்வாய்

மலருக்கும் உனக்கும் வேறுபாடு தெரியாது தவிப்பேன்

உனது பிஞ்சு கால்கள் தொடாத நிலமென்பது

புல் இல்லாத நிலம்

நீ நடந்த நிலமனைத்தும் ஈரமாகவே இருக்கின்றன

நீ தொட முடியா தூரத்திற்கு சென்று விட்டாய்

நானோ நீ வைத்து விளையாடிய பொம்மையின் தலைக்கோதிக் கொண்டேயுள்ளேன்

நிலம்

இன்னும் ஈரமாகவேயிருக்கின்றது

வாணியும்

கண்ணீரும் ஒன்றல்லவே

ஈரப்படுத்துவதில்

நெடுந்தூரம்

பறந்து செல்லும் பறவைகள்

சிறு புள்ளியாகிப் போகின வானத்தில்

நினைவுகளும்

அவ்வாறே

####

விலைப் பட்டியலுக்குள் அடங்கிப் போன வாழ்வு.

வெள்ளிக்காசுகளை விட்டெறிந்து வனம் வாங்கி விடத் துடிக்கும் மகள்.

நீல வண்ணக் காருக்கு பதிலாக நீர்வீழ்ச்சியின் வெண்நுரையை மாற்றாகக் கேட்கும் மகன்.

வானத்தை பங்கிட்டுக் கொள்ளச் சொல்லும் அமச்சூர்.

வனங்கள் விற்பனைக்கல்லவென போராடும் மெலிந்த யானைகள்.

வாழ்க்கை நதி போல் தெளிந்த நீரோடையென வகுப்பெடுக்கும் வாட்சப் குழுக்கள்.

மூட்டுவலி தரும் காய்ச்சலுக்கு 

பப்பாளி இலைச்சாறு பரிந்துரைக்கும் டெலிகிராம் தோழமை.

எல்லாம் கேட்டுக் கொண்டே

மரப் பொந்தில் தவமாற்றும் ஆந்தை மனிதன் நானும்.

தூண்டா மணி விளக்கை ஏற்றி நோக்கு வர்மம் பயிலும் வனப் பேச்சியும் .

அர்த பழசான பாடலை முனுமுனுத்த படி

மாடர்ன் சிட்டியாகி நிற்கும் வனத்தில்

பூவரசப் பூவினாலான

குழலிசைக்கிறோம்.

# ###

மீனாக மாறி

பெருங்கடல் நீந்த

குஞ்சுகளை பொறிக்க

நயன தீட்சையைக் கூட்டிட வனத்திற்குள் சென்றேன்.

அங்கிருந்த

நீர்வீழ்ச்சியை காட்டி

இதில் குளித்தால் ஆற்றல் பெறுவாய்

ஆனால் யாருக்கும் சொல்லாதே

என்று

அணில் சொன்னது.

சொல்லாதிருப்பதா?

முடியாதே

நான் சொற்களின் தலைவனாச்சே

கூவி பறவைகளை

அழைக்க மலை உச்சிக்கு செல்கிறேன்

நில் அணில் சொல்வதைக் கேள்

புற்கள் தடுத்து

கோரசாகச் சொல்லின

“இல்லையேல்

நீரைப் போல்

எல்லாவற்றோடும் கலந்திரு

ஆனால் உனது நிலை மாற்றாதே”

மலமுருட்டும் வண்டு

சொன்னது

“காற்றைப் போல் வனத்தின் வாசனையை மாற்றிடு

கடத்திடு

நீ மாறாதே

மாறாததுதான் மாற்றும்

அறிந்திடு”

அணில் திரும்பவும் கேட்டது

இப்போது சொல் நீ யாராக மாற வேண்டும்.

####

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *