பிரபு தர்மராஜ்
ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் குப்பி முருகு அவனது மருமகன் ஏசுபாலனை அழைத்து, “மக்களே பாலேன்! ராத்திரி நம்ம பலவோட்டரச் சுடுகாட்டு சொள்ளமாடங்கோயில்ல ஆடுவெட்டுகேம் பாத்துக்கா! ஒரு நேச்ச மக்களே! நாங்கூப்ட்ட காரியம் ஒங்கம்மைக்கி தெரியாண்டாம்! தெரிஞ்சா ஏசுவா! நேரத்த வந்து சேரு! பையம்மாறுவட்டயுஞ் சொல்லியாச்சி! மற்ற குப்பி காரியங்கள்ளா உண்டும்! மறந்துறாத!” என்றதும் பாலனுக்குக் கைநடுக்கம் உண்டாகி விட்டது. அப்போது பெரிய அளவில் அவனுக்குக் குடிக்கும் பழக்கம் கிடையாது! பாதிக்குப்பி பீர் குடித்தாலே பைக்கை மறந்து எங்காவது போட்டுவிட்டு தெற்கும், வடக்குமாகக் கால்களைப் பின்னி நொண்டியவாறு வீடு வந்து சேர்ந்து தாயிடமிருந்து நான்கு இடிகளை வாங்கிக் கொண்டு கிடையைச் சாய்ப்பது வழக்கம்.
ராத்திரி ஒரு ஒன்பது மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறி பைக்கை எடுத்த ஏசுபாலனிடம் அவனது அம்மா கிரேசியம்மாள் கேட்டாள், “மக்களே ஏசு! எங்கடே போற இன்னேரத்துக்கு?” என்ற அவளது குரல் ஏசுபாலனுக்குத் தன்னுடைய சுயத்தை நினைவூட்ட மறந்து போய் குப்பி மாமன் பெயரைச் சொல்லிவிட கிரேசியம்மாள் மோப்பம் பிடித்து சத்தம் போட்டாள், “லேய்! ஆடிவெள்ளி ஆடுவெட்டுக்கா போற நாய? இதெல்லாம் ஏசப்பாக்குப் புடிக்காத்த காரியங்களாக்கும்? இம்மாதிரி அந்தக் கோயிலுகள்ள போயி கண்டதையும் வாங்கித் தின்னா பரலோக ராஜ்ஜியம் எப்புடி கிட்டும்?”
“ஒனக்க சொந்தக்காரக் கூய்மக்களுக்கே பரலோகம் கிட்டுகாம்? எனக்காக் கிட்டாது?” என்றவாறே ஏசப்பாவா? மாடனா? என்றதில் ஏசப்பாவும் மாடனும் தோற்று கறிச்சோறு வெற்றி பெற்றது. பைக்கை எடுத்து அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பலவோட்டரைச் சுடுகாடு என்று ஜிலுக்கு தமிழில் அழைக்கப்பட்ட பலவட்டாரச் சுடுகாட்டில் போய் வண்டியை நிறுத்தினான். ஏசுபாலனின் சித்தப்பன், மாமன், மச்சான், அண்ணன்மார்கள் என்று குறைய கோந்தன்மார்கள் ஏற்கனவே அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
“வாலே மக்கா! வந்துட்டியா? ஒங்கொம்மைக்கித் தெரியாமத்தானே வந்துருக்க? தெரிஞ்சா என்னிய மானங் கெட்ட கேள்வியள கேப்பாளே?” என்றவாறே இருட்டுக்குள் இருந்து முருகு வாயில் பீடி சகிதம் வந்தான்.
“அதெல்லாஞ் சொல்லிக்கிட்டுத்தா வந்துருக்கு மாமேன்! சொல்லாம கொள்ளாம வாறதுக்கு நா என்ன கோமதி அத்தையவா பாக்க வந்தேன்? கெடக்க மாட்டான் அந்தால?” என்றதும் முருகுக்குக் கோபம் வந்து, “அட எறப்பாளி நாய? என்னெடே சொல்லிக்கிட்டு வந்த அவகிட்ட? நாம் பிரத்தியேகமா சொல்லத்தானேஞ்சேன்… ஒங்க அம்மைகிட்ட சொல்லாதன்னி? இப்ப அவ பெரிய இஸ்ரவேல் கோத்தரத்துலேர்ந்து நேரா வந்த ஏசு கிறிஸ்துவுக்க சித்தப்பனுக்க மொவ மாதிரில்லா அளப்பா? நம்மள எழவுல இழுத்து வுடுகதுல அவனுவளுக்கு ஒரு உஜாறு? செவங்கள்?”
“மறுமொவன எதுக்கு வைய்யிதிய? மாறி ஒரு சிலுவட்டப் பயல வூட்டுல சொல்லாம கொள்ளாம இந்த அத்தராத்திரில மய்னி வெளிய உடுவாளா? திரியிதீரே மொழத்துக்கு நீட்டிக்கிட்டு? நீ வா மக்கா?” என்றாள் திருநெல்வேலிக்கார கோமதி அத்தை.
“ம்க்கும்… பாத்துக்கா? பத்து செக்கண்டுக்க முந்திதாம் இந்த நாயி சொல்லிச்சி… சொல்லாம கொள்ளாம வாறதுக்கு நா என்ன கோமதி அத்தையவா பாக்க வாரம்ன்னு? அந்த நாய இந்த நாயி ஜாமியத்துல எடுக்கியதுக்கு நிக்கி?” என்று தகித்தான் முருகு.
“யாவே? அவனுக்க அத்தைய பாக்கதுக்கு என்ன தபாலு எழுதி ஊரெல்லாஞ் சொல்லிக்கிட்டா வருவா? மறுமொவனுக்கும் எனக்கும் ஆய்ரங் கத காரியங்க இருக்கும்? நீ வா மருமோன?” என்றவாறே கோமதி ஏசுபாலனை இழுத்துச் செல்ல அங்கே பூசாரி வரிசையாக நேர்ச்சைக் கோழிகளை அறுத்து அதை நேர்ந்து விட்டவர்களின் கைகளில் கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார். அவர்களும் அதைப் பத்திரமாக வாங்கி சமைக்கக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அங்குள்ள தோப்புகளில் ஆங்காங்கே அடுப்பு போட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பூசாரியின் ஊளைச் சப்தமும், “எவனுக்க கோழில இது கொன்னத் தாய்ளிமக்க? என்ன பாவ காரியங்கள செஞ்சிக்கிட்டு கொண்டாந்தானுவளோ?” என்ற சப்தமும் கேட்டது.
நேர்ச்சைப் பொருளின் குற்றப்பாடு கருதி அதை நிராகரிக்க சாமி பூசாரியின் கைகளைப் பதம் பார்க்குமென்று சொல்லிக் கொண்டார்கள். அறுக்கும்போது பூசாரியின் கைகளில் வெட்டுப்படக் காரணகர்த்தாவான அந்தக் கோழியைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை. சற்றுநேரத்தில் முருகுவின் ஆட்டை வெட்டினார்கள். சாமி முருகுவை அழைத்து, “லே முருகேசா! ஆட்டப்புடி! செவம் கெடந்து ஒங்கையன மாதிரியே கழுத்தக் கழுத்த ஒதறுகு! எழவுல வெட்டு மாறி உழுந்துறப் போகு?” என்றதும் முருகு ஆட்டினருகில் போய் அதன் கழுத்தைப் பிடித்தான்.
“ஏலே குப்பி கோம்பையா! நா என்ன ஆட்டுக்க புடுக்கையா வெட்டப் போறேம்! கழுத்தப் புடிச்சிக்கிட்டு நிக்க? வெட்டு கைல வுழுந்துராம? ஒரு ஆட்டப் புடிக்க லெச்சனங் கொள்ளாம்! எம்மோ கோமதி! இங்க வா! நீ வந்து புடி! செவங்களுக்கு சிக்கப் போட்டா கெணறுந் தொவளமுந் தெரியாது!” என்று பூசாரி கிடாரன் சப்தம் போட்டார்.
உடனடியாகக் கோமதி அத்தை போய் ஆட்டின் பின்பக்கம் நின்று கொண்டு அதன் முதுகைப் பிடித்துக் கொண்டாள்.
“பாத்தியாலே முருகு! பெட்டப்பிள்ள! அதுக்கு தெரிஞ்சிருக்கு! நீயுந் திரியிதயே கொண்டுகிட்டு?” என்று பூசாரி சொல்லவே முருகு மாமன், “ஆமா யாம்னா என்னெஞ்சீரலாம்? பெரிய பாலங்கெட்டுத பணியில்லவா? கோலு கொழலெல்லாம் புடிக்கத் தெரிஞ்சிக்கிடுகதுக்கு?”
“தெரிஞ்சிக்கிடணும்லே? ஆடு நேந்து வுடத் தெரியில்லா? வெட்டுனப்பொறவு நல்ல வழிச்சி நக்கித் திம்பல்லா? – பூசாரி.
“வே கெடாரங் கெடந்தவர… அதெல்லாம் பொறவு பாத்துக்கிடலாம்! நீரு இந்த ஒலக ஓழியம் பேசாம ஆட்ட வெட்டுனா மதி? பெரிய நாடோடி மன்னன் எம்ஜியாருன்னு நெனப்பு புண்டாளுதைக்கி?” – முருகு.
கெடாரம்காத்தான் என்பதுதான் பூசாரியின் முழுப்பெயர். அவர் குப்பிக்கு ஒருவகையில் மாமன்முறை. குப்பி லேசான போதையில் சலம்பினான்,
“இந்தக் கெடாரந்தாய்ளி மொவனுக்கு ஒரு காடாத்து கல்லெடுப்பு வருவுல்லியே? வூட்டுல கெடகெடப்பு செல்லாம என்னைய மானங் கெடுத்துக்கதுக்கே திரிவானுவோ? ஒரு ஆட்டப் புடிக்கத் தரியாம இருக்கதெல்லாம் அவ்ளோ பெரிய குத்தம்னுலாம் யாருஞ் சொல்லி நாங் கேட்டதில்லை!”
குப்பி முருகுவின் அய்யன் நாக்காமடத்தான்தான் அந்த மாடனுக்கு கிடாரம்காத்தானுக்கு முன்பு ஆடிக் கொண்டிருந்தவர். நாக்காமடத்தான் ஒரு சுடலைமாடன்சாமி கொண்டாடி. ஒருபெருவெள்ளத்தில் வெள்ளத்தோடு மிதந்துபோன வைக்கோல்போரைக் கைப்பற்றப் போனவர் போனவர்தான். தன்னுடைய மேப்புடியான் கன்னியாகுமரி அம்மைக்குப் பாதுகாப்புக்குப் போனதாகச் சொல்லிக் கொண்டு திரிந்தாள் முருகுவின் தாயார் குஞ்சிலெச்சுமி. பின்பொரு நாள் குஞ்சிலெச்சுமி கிணற்றில் நீரிறைக்கும்போது கால்வழுக்கி கிணற்றுக்குள் பாய்ந்து நீரம்மனுக்குத் தன்னுடைய ரத்தத்தைக் களபமாய்ச் சாத்தினாள். தாயைக் காணாமல் தேடின முருகுவுக்குக் குழப்பம், “காலு நொந்த காலத்துல செவத்துக்கு ஆளுவகிட்ட சொல்லாம கொள்ளாம என்னவொரு போக்கு! ராமேஸ்வரத்துக்குப் போய்ட்டாளோ?”
மறுநாள் காலையில் குஞ்சிலெச்சுமி கிணற்றுக்குள் கரணம் அடித்தபோது அவள் கட்டியிருந்த சேலை லேசாக நீர்ப்பரப்பில் கண்சிமிட்டவே தன்னுடைய தாய் கிணற்று துவாரத்தின் வழியாக சிவலோகம் புறப்பட்டு தெய்வத் தாய் ஆன காரியம் புலப்பட்டு நீரின் ஆழத்திலிருந்து அவளது பூதவுடலை மீட்டு நெருப்பின் வாயிலாக கருக்கி வழியனுப்பப் பட்டாள். அந்தப் பயணம் ஒருவழியாகக் கோமதியின் வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டு சீரமைக்கவே கோமதி மகிழ்வான ஒரு வாழ்க்கையை ஏறெடுத்து வந்தாள்.
சுமார் ஒருமாதத்துக்கு முன்னர் முருகுவின் கனவில் வந்த அவனது அய்யன் நாக்காமடத்தான் கடலுக்குள் இருந்து எழுந்து வந்து நீரின் மேற்பரப்பில் நின்றவாறே கண்ணீரோடு சொன்னது இதுதான்,
“எலே முருகு தொட்டிப் பயல! அன்னைக்கி நா அந்த வைய்க்கப் படப்ப புடிக்கப் போவும்ப… வழியில ஒரு ஆடு வந்து எனக்க மேல சாடிட்டு! கரையில வாபாக்கியதுக்கு நின்ன ஒரு கூய்மொவனுவளும் என்னையக் கையேந்த வந்தானுவாயில்ல! அந்த ஆட்டையும் தொரத்திப் பாத்தம் பாத்துக்கா! செவம் போவ மாட்டாம்ன்னி ஒத்தக் காலுல நின்னுட்டு மக்கா! போதாக்கொறைக்கி கொம்பக் கொண்டு என்னைய முட்டுகதுக்கு நின்னு! எழவு நின்னுட்டுப் போவட்டும்ன்னு பாத்தா… கஞ்சிக்கிச் செத்த அந்த ஆடுக் கூய்வுள்ளையிம் ஒரண்டயிருந்தே வைய்க்கல திங்க ஆரம்பிச்சிட்டு! படப்புஞ் சுசீந்தரந் தாண்டி போகு… போகு… போக்கேடுத்து போகு! அப்பவும் பாலத்துக்கு மேல நின்னு வேடிக்க பாத்துக்கிட்டிருந்த ஒரு பெயலுஞ் செறக்கியும் நா என்னவோ வள்ளத்துல மீம்புடிக்கப் போற மாதிரி வேடிக்க பாத்தானுவளே ஒழிய ஒருத்தனுஞ் சாடி என்னையத் தூக்கலப் பாத்துக்கா! படப்பு மெதந்து மெதந்து கக்கரம்பொத்தைய தாண்டல! பாதிப் படப்ப அந்த வயித்துப் பக்காளி ஆட்டுக் கூய்வுள்ள தின்னுட்டு! மிச்சமிருந்த வைக்கோலு முச்சூடும் வெள்ளத்துக்க இழுப்புல திரிஞ்சி நாந் தண்ணீக்க மலந்துட்டம்டே! நா இப்ப மணக்குடிக்க தெக்க கடலுக்காத்தக் கெடக்கம் பாத்துக்கா! எனக்க மரிப்புக்குக் காரணம் அந்த செத்தபெய ஆடுதாம்லே! அப்புடியொரு பெருவிட்டாளி ஆட்ட எனக்க ஜீவியத்துல நாங் கண்டதில்ல கேட்டயா! புண்டாவுள்ள! அதுனால நம்ம பலவட்ற சுடுவாட்டு மாடனுக்கு அதே மாறி ஒரு வெள்ளையுங் கரியுமா ஒரு ஆட்ட நேந்துவுட்டு ஆடிமாசச் செறப்புக்கு அத வெட்டி கடிச்சித் தின்னுங்க! அப்பந்தாம்டே எனக்க சீவனுக்க பெறப்பாடு சிவன நோக்கிப் போவும்!” என்று சொல்லிவிட்டு கடலுக்குள் மூழ்கிவிட்டார்.
முருகுவுக்கு சலிப்பு, “யாம்னா பெரிய ஏசுநாதருல்லா? தண்ணீக்க மேல நடந்து போகு தாய்ளிவுள்ள? சொல்லச் சொல்ல கேக்காம அவ்ளோ கனத்த வெள்ளப் பெருக்குல பெரிய குண்ணேஸ்வரம்ன்னி நெனச்சி சாடம்பவே செத்துருவாம்னு தெரியும்! இதுல ஆடு நேச்ச குடுக்கணுமாமே! செரி அடக்கச் செலவ மிச்சப் படுத்துன கொறைக்கி ஒரு ஆடுதானே! அதயிம் நாமதான திங்கப் போறோம்!” என்ற கதைதான் இன்றைய கொடையும் ஆடுவெட்டுக் காதையின் பின்னணியுமாகும்.
ஆட்டை வெட்டிக் கறியாக எடுத்து வந்து ஒருபக்கம் சமையல் நடக்க மறுபக்கம் பானவிருந்து நடந்து கொண்டிருந்தது. ஓசியில் கிடைத்தால் கில்பக்கையே லிட்டர் கணக்கில் குடிக்கும் குழுவும் கிடைத்தோ கிடைக்கவில்லையோவென குடித்ததில் ஒருபயலும் ஒழுங்காய்ச் சாப்பிடவில்லை. ஒருபக்கம் அந்த அர்த்தராத்திரியில் ஆற்றில் சாடிக்குளியலென்ன? கூச்சலென்ன? என்று ஏகப்பட்ட தற்குறித்தனங்கள் அங்கே ஏறெடுக்கப்பட்டன.
முதலில் முருகு மாமன் ஆற்றில் குதிக்க எத்தனித்த போது கோமதி அத்தை எச்சரித்தாள், “வே சொன்னாக் கேளும்! ஆத்துல தண்ணி எப்புடி அம்மம்மான்னு போகு பாத்தீருல்லா? இந்த நட்டா நடு ராத்திரில சாடியதுக்கு நிக்கீறே மனியா மண்டைக்கி வெளியில்லியா? கொப்பன் வெள்ளத்துக்க வைக்கோல்ப்பிரி முறுக்கப் போனாம்! கொம்ம கெணத்துக்குள்ள நண்டு புடிக்கப் போனா! நீரு இப்ப எந்தப் பாதாளக் கரண்டிய தோண்டுகதுக்கு ஆத்துக்க சாட நிக்கீரு?”
முருகுவுக்கு ‘ச்சை’ என்றாகிப் போனது. “ஒரு காரியத்தத் தொடங்க உடுகாளுவளா? எல்லாத்துலயும் வந்து நின்னுக்கிட்டு அது சூத்த இது சொள்ளன்னு சொல்லுகது?” என்று முனங்கிக் கொண்டே முருகு மாமன் படித்துறையில் போய் ஒரு துண்டை விரித்துப் படுத்தவன் பாம்பாகிப் போனான். கோமதி கஷ்டப்பாடுபட்டு அவனை எழுப்ப முயன்று தோற்றாள்.
ஏசுபாலன் உடனடியாக ஒரு ஆட்டோவை வரத்தி முருகுவின் குடும்பத்தை அனுப்பி விட்டு படித்துறையில் அமர்ந்து கொண்டான். கிட்டத்தட்ட பதினெட்டு பேர் அங்கே இருந்தார்கள். இல்லையில்லை கிடந்தார்கள். ஏசுபாலனைத் தவிர மிச்சமிருந்த யாருக்கும் சுய நினைவுமில்லை! இடுப்பில் துண்டுமில்லை! செவங்களை நம்பி ஒரு கொடைக்குக் கூட வரமுடியாது என்று ஏசுபாலனுக்கு ஏகக்கடுப்பு. போதாக்குறைக்கு அவனது சித்தப்பன் ஒருவன் ஆற்றின் மறுகரையில் போய்ப் படுத்துக் கிடந்தான். பாலனின் வண்டி ஒரு தோப்புக்குள் இருந்தது. இருட்டுக்குள் போய் அதை எடுக்கப் பயந்து கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான்.
அப்போது ரவி மச்சானின் குரல், “எழவுல கறிச்சோத்தத் தாரம்னு கூட்டியாந்து இந்தக் குப்பிக் கூய்மோன் கெடக்கக் கெடையக் கண்டியா ஏசு மாப்ளேய்?”
அப்போதுதான் போதை லேசாகத் தெளிந்து எழுந்த மூதேவி இப்படிக் கேட்டதும் ஏசுபாலனுக்கு வாயில் வண்டி வண்டியாக வந்தது. ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. அப்போதுதான் அங்கே ஒரு சலங்கைச் சப்தமும் நெருப்பின் ஓளியும் நுழைந்தது. ஒரு கையில் தீப்பந்தத்தையும், மறுகையில் அரிவாளையும் ஏந்தி இடுப்பில் ஈரக்கச்சையணிந்த ஒரு ஆத்துமா ஆடிக் கொண்டே ரிவர்சில் வந்து கொண்டிருந்தது. பாலன் பயந்து போய் எழுந்து ஓட எத்தனித்த போது ரவி அவனிடம்,
“எங்கலே போற? பின்னமாறத்தானே நடந்து வாராம்… கொஞ்சம் பொறு! கிட்ட வந்தொடனே சவுட்டி ஆத்துக்க தள்ளிருவோம்! வெலியெல்லாங் குடுத்து ஆளுவ வீடுகளுக்குப் போன பிற்பாடும் மாடனுக்கு இங்கென்ன மயித்த செறைக்க பணியா கோணப் புண்டாளுதைக்கி? நீ செவனேன்னி இரு மாப்ளோய்!”
“என்னது சாமிய சவுட்டப் போறீரா? செத்த சும்மா கெடயும் வோய்!” என்றான் பாலன்.
“லேய் நாகேந்துரனுக்க மொவந்தானலே அது?” பாலன் திடுக்கிட்டுத் திரும்ப அங்கே மாடன் பேசிக் கொண்டிருந்தார்.
“ஆமா நாகேந்தரனுக்க மவந்தாம்! நீரென்ன ரேசங்காடுக்கு பேரு சேக்கதுக்கா வாரீரு!” இது ரவி.
“எக்கண்டம் பேசாதடே! இன்னேரத்துல இங்க என்னடே நித்திர ஒங்களுக்கு? வாத நடமாடுக காட்டுக்காத்த பொதப்பையிம் மூடிக்கிட்டு ஒரு கெடப்பு? வூடுங்குடியுங் கெடையாதா செத்தக் கூய்வுள்ளையளா?” இது மாடன்.
“அதையேத்தா நானுங் கேக்கெம்! ஒமக்கு இங்கென்ன பணி இந்தப் பேயி கெடக்கிய சமயத்துல? நாங்களும் கேப்பம்லா? கிக்கிக்கி… என்ன ஏசு மச்சினா சொல்லுக?” இது ரவி.
“நா என்னத்தவே சொன்னேன்? ஏந்தாலிய யாவ்வோய் அறுக்குரிய?” பாலனுக்கோ நடுக்கம். திரும்பிப் பார்க்காமலேயே ஆளைக் கண்டுபிடித்த மாடனுக்கு வேறு காரியங்களைச் சொல்லியா குடுக்கணும்?
“ஏல பிசாசுகள் நடமாடுக நேரத்துல இங்கன கெடக்குதியேளேன்னு கேட்டா கண்ணுக்குக் குண்ணையின்னு பேசுகயே?” இது மாடன்.
“ஆம்பளப் பிசாசுன்னா நீரு பாத்துக்கிடும்! பொம்பளப் பிசாசுன்னா இங்கன அனுப்பி விடும்! ஹெஹ்ஹெஹ்ஹே! என்ன சொல்லுத மாப்ள?” என்று சொல்லிவிட்டு ரவி பாலனைப் பார்க்க பாலன் அவனை வினோதமாகப் பார்த்தான்.
‘அடத் தொட்டிப் பயல! பேயக் கூட வுடமாட்டாம் போலுக்கே? இவங்கூடயா இன்னைக்கி ராத்திரி தங்குகதுக்கு?’
“ஒங்கப்பன் எப்புடிச் செத்தாம்னு ஓர்மயிருக்குவா ஒனக்கு?” இது மாடன்.
“தண்ணியப் போட்டுகிட்டு தண்டவாளத்துல போய்ப் படுத்தாஞ் செத்தாம்! அதுல ஒமக்கென்னவே நோக்காடு! அந்தக் கூய்வுள்ளைக்க பாடிய எடுக்க ரெயில்வேசுக்குப் பணம் பத்தாயாரஞ் செலவழிச்சவம்வே நா! எதுக்கு இப்ப அத இழுக்கீரு?” இது ரவி.
“எனக்க நேந்த நேச்சைய எடுக்காம லாந்துனதாலதானே செத்தாம்?” இது மாடன்.
அப்போதுதான் எங்களுக்கு அந்தப் பக்கம் வந்தது வேறு ஏரியா மாடன் என்பது புரிந்தது. அதாவது ரவியின் குடும்ப சுடலை.
“அடப் பிச்சக்காரக் கூய்மோன! எங்கய்யன் நேந்தது ஒரு ஒத்தக் கோழி! அதுக்கா அந்த நாய நீ பழி வாங்குன? எங்கப்பன வுட எச்சக்கலத் தா…ளியா நீ?” என்று சொல்ல இந்த வசவைக் கேட்டதும் சாமி விரைவாக முன்னோக்கிப் போய் விட்டது.
ரவி கண்கலங்கியவாறே பாலனிடம் கேட்டான், “எடே மக்களே ஏசுபாலா! எங்கைய்யன் நேச்ச குடுக்கலைன்னு செத்தாஞ் செரி! மாடனுக்கு ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூய்மொவனுக்க அப்பெம் யாஞ்செத்தாம்?” என்றவாறே முருகுவைக் கையைக் காட்ட முருகு புரண்டு படுத்தவாறே,
“எலே ரெவி மாந்தப் புண்டாளுத.. நம்ம ரெண்டு வேர்த்துக்க கொப்பம்மாறுவளும் தொட்டியளுதாம்டே! தொட்டிப்பெயக்களுக்கு யாது நல்ல சாக்காலம்? ஒனக்க அய்யஞ் சதாகாலமும் அந்தச் சாராயக்கட சாரதாளுக்க வூட்டுக்க பொறத்தாலயே கெடந்து அவளையும் ராவிக்கிட்டு சிக்குவாக்குல கட்டுலுன்னு நெனச்சி தண்டவாளத்துல போயி தாவாராந் தூங்குனாம் ரெயிலு முட்டிச் செத்தாம்! இதுல ரெயில கொற சொல்லுவியா? மாடனக் கொற சொல்லுவியா? எங்கய்யன் நாக்காமடத்து நாயி வெள்ளத்துல புடிக்கப் போனது எங்கூட்டு வைக்கப் படப்புன்னி நெனச்சியா? அதுதாம் இல்ல! அது பக்கத்து வூட்டு பூரணஞ் சித்திக்க படப்பு! தொடுப்புக்குப் படப்பு புடிக்காதுக்காண்டி நெஞ்சி துடுப்ப பறிகுடுத்தாம்! போதாக்கொறைக்கி அந்தா நிக்காம்லா மாடெம்! அவனுக்கு ஊருல நேருக ஒரு கோழியையும் எங்கய்யன் மாடனுக்கு அறுத்ததில்ல! தொண்ட நெறைய சாராயத்த நெரப்பிட்டு ஒவ்வொரு கோழியா புடிச்சிக்கிட்டு போயி எங்க சந்தனம் பெரியம்மகிட்ட குடுத்து அவளும் நல்லா கறிவெச்சி குடுப்பா! அதயிம் ஒய்யாரக் குண்ணையில பல்லுபடாம வழிச்சி நக்குனாம்! ரொம்ப நாளு பாப்பானா மாடெம்! தண்ணீயோட ஓடு கூய்வுள்ளான்னு அனுப்பி வச்சாம்! ஒடனே ஆடு கோழி மாடு வய்க்கப்படப்பு, ரயிலு மாடம்னு கெடந்து ஒரசாம படுங்களாம்லே! லே பாலேன்… இந்தக் கூய்மொவன்கூட என்ன வம்பளப்பு? ஒங்கம்ம கிரிச்சையம்ம தேடுவா! காலம்பர நேரமே எந்திச்சி வீடுகளுக்குப் போ!” என்று சொல்லிவிட்டு முருகு புரண்டு படுத்தான்.
இருவரும் அங்கேயே படுத்துக் காலையில் எழுந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றங்கரைப் புதருக்குள் ஒரு அசைவு கண்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பார்த்தால் நேற்று இரவில் வந்த மாடன் அணைந்த தீப்பந்தத்தோடு கீழே கிடந்து உருண்டு கொண்டிருந்தார். பாலனும் ரவியும் கீழே இறங்கி ஆளுக்கொரு கையாகப் பிடித்து சாமியாடி பத்துவெட்டு பூலோகத்தை மேலேத் தூக்கி வந்தார்கள். ஆம்! அவர் பெயர் அதுதான்.
“ஓசியில கெடச்சின்னு ராமுச்சூடுங் குடிச்சிப்புட்டு ஊதாப் பூக்கொளைக்காத்த வுழுந்து கெடக்குதீரே? வெக்கமில்லியே ஒமக்கு?” இது ரவி.
பாலன் ரவியை அதே வியப்போடு பார்த்தான்.
“ராத்திரி எவனோ ஒரு பாவிமுடிவாம் என்னைய பின்னுக்கெர்ந்து சமுட்டி ஆத்துக்கத் தள்ளிப் புட்டாம் பாத்துக்காடே மக்கா ரெவி? எனக்கென்னவோ இந்தக் குப்பிக் கூய்வுள்ளைக்க மேலத்தான் ஒரு சந்தேகம் கேட்டியா?” என்றவாறே சலித்துக் கொண்டார் சாமியாடிப் பாட்டா பத்துவெட்டு பூலோகம்.
000

பிரபு தர்மராஜ்
நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கவிதை தொகுப்பென ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். ’அரேபியாவுக்கு போன தீக்கொளுத்தி ஆவரான்’ நாவல் இவரது முதல் படைப்பு.