1. கவிழ்ந்து பொருந்தி
கச்சிதமாகத் துடிக்கின்றன
கள் நிரம்பிய
இரு கலயங்கள்..
பொங்கிப் பிரவாகிக்க
தளும்பிக் கொண்டேயிருக்கிறது
என்னுள் உன் நதி.
ஓரிலைபோல் விரியும் உடலில்
நரம்புகள் அதிர
நாதம் ததும்பும் தருணம்
நானென்ன செய்ய
இசைப்பதும் ரசிப்பதும் தவிர.
2. சக்தியின் யோனி
விம்மி வெடிக்கிறது
சிவனின் சங்கூதலில்..
அர்த்தநாரியாய்
ஆவதைத் தவிர
வேறு வழியில்லை சிவனுக்கு
அத்தனை வலியது
சக்தியின் கூத்து
3. வெந்துத் தணிகிறது
வேகும் ஆவல்..
கொடுங்காமக் கடல்கடக்கும்
குறிப்புணர்ந்தத் தருணத்தில்..
மூச்சொலிகள் கீதங்களாகின்றன
குழல்களாகும் உடல்களில்..
நெடுங்காமக் கடல்கடக்கும்
அந்த ஒரு கணத்தில்..
தம்வசமாகித்
தம்மையும் கடக்கின்றன
ஓருடலான ஈருயிர்களும்.
4. குண்டலினி எழும்பி
படமாடும் நாகங்கள்
பின்னிப் பிணையும் பேரொலியில்
நடுங்குகிறது நள்ளிரவு..
சொர்க்கஞ் சேர்
கைலாயஞ் சேர்
காசி ராமேஸ்வரஞ் சேர்..
நெற்றிப்பொட்டிலிருந்து
துள்ளிக் குதிக்கிறது
நாகம் கக்கிய ரத்தினம்.
5. இடவலதாக
வலஇடதாக
சுழன்று கொண்டிருக்கின்றன
செறிவூட்டப்பட்ட உடல்கள்..
பெருவெடிப்பின்போது
தூள்தூளாகச் சிதறுகிறது இப்பேரண்டம்..
எல்லையற்றப் பெருவெளியில்
கலந்து மிதக்கிறது
அடக்கவியலா உச்சச்சிரிப்பு.
6. தன்வசமாகித்
ததும்பிப் பொங்கி
என்வசம் நீ கடக்க
உன்வசம் பூக்கும்
ஓராயிரம் வாசனை.
துன்பமனைத்தையும்
தொலைத்து
இன்புறுவாக்கிய ஜோதி
சுடர்ந்து எழுந்தது
ஆரத்தழுவி
நாம் அசைவற்றிருந்தபோது.
7. அணுகி நுணுகி
நுண்மையுள் நுண்மையாய்
இணுகி இறுகி இறுகி
இன்மையின் இன்மையில்
காணாமல் போகின்றன
இவ்விரு உடல்கள்..
அப்போதுதான் மலர்கின்றன
சகஸ்ராரத்தில்
ஆயிரம் தாமரைகள்.
8. விசையுறு நிலையும்
அசைவறு நிலையும்
இசைவுறும்போது
ஏக அனுபவம் ஆகும்
போகமென்னும் புத்தமுது..
எடுத்தெடுத்துச் செலவிடினும்
அடுத்தடுத்தோங்கும்
அலையலையாக..
000

கோகிலாராஜ்
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.