காலை ஆறு மணியிலிருந்து  குமரவேல் கோபியை பலமுறை அழைத்துவிட்டார். அவருக்கு தெரியும்  நடைபயிற்சிக்காக செல்வதால் கோபி எப்பொழுதும் செல்பேசியை எடுத்து கொண்டு போக மாட்டார். தேவையில்லாத தொந்தரவு கொடுக்கும் சுமை என சொல்வார். செல்பேசி இருந்தால் முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் போன்றவைகளை பார்க்க சொல்லும். நடைபயிற்சியின் போது உடலும் மனமும் இணைந்து பேசியபடி இயற்கை காட்சிகளையும் மரம், செடி, கொடி பறவைகளை பார்த்தவாறு மெலிதான ஓட்டத்துடன் நடைப்பயிற்சி செய்வது மிகநல்லது  அவருக்கு அதுதான் பிடித்தமானது. செல்பேசி இருந்தால் பாட்டு கேட்டுக் கொண்டு போவதும் கோபிக்கு பிடிக்காது. மனதை பார்ப்பதை விட இப்பாதும் எதுவும் முக்கியமில்லை என்பார். குமரவேலின் நெருக்கடிக்காக வாய்ப்பு கிடைத்தால் பேசலாம் என நினைத்து தொடர்ச்சியாக போன் செய்தார்.

கோபிக்கு நடுத்தர வயது நாற்பத்தி ஒன்று, குமரவேலுவுக்கு முப்பத்தி முன்று நடக்கிறது. மாதம் ஒரு முறையோ இருமுறையோ போனில் அதிக நேரம் பேசிக் கொள்வார்கள். கோபி அக்குபங்ஞ்சர் சிகிச்சையில், அதில் ஊசிகளை கையாள்வதிலும், புள்ளிகள் தேர்ந்தெடுத்து குத்துவதிலும் நிறைய பயிற்சி பெற்றவர். பல மாஸ்டர்களிடம் சீன அக்குபங்சர் கற்றுக் கொண்டவர். சென்னைக்கும், எங்கெங்கு அக்குபஞ்சர் பயிற்சிகள் தருகிறார்களோ அங்கெல்லாம் சென்றபடி இருப்பார். முடிந்த அளவு கற்று அதில் சாதனை புரிய வேண்டுமென்ற வெறியே அவருக்கிருந்தது. ஐந்தரை ஆண்டுகள் அதில் உழன்றும் நோய்க்கான காரணிகளை கண்டுபிடிப்பதில் வெற்றி காண இயலவில்லை. இப்பொழுது என்ன நோய் இருக்கிறது என்பதை ஓரளவு சொல்லிவிடும் திறமை மட்டுமே வளர்ந்திருந்தது.

நடைபயிற்சி முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததவுடனே மனைவி சொல்லிவிட்டார் உங்களுக்கு தொடர்ச்சியாக போன் வந்து கிட்டேயிருக்கு. குமரவேல் மட்டும் பல முறை போன் செய்து விட்டார். இனிமேல் நீங்கள் வாகிங் போகும் போது செல்போனை சைலன்ட் மோடில் போட்டுட்டோ  எடுத்துக்கிட்டோ போய்டுங்க என்னால எடுத்துப்பேசி மாளல, என நொந்து கொண்டார்.

குமரவேலை அழைத்தேன். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்து விட்டார்.

-சொல்லுங்க குமரவேல் என்னாச்சி போன் பண்ணீங்க

-சார் கொஞ்சம் அவசரம் அதனால போன் பண்ணேன் குழந்தைக்கு முடியல அதான்.

-சரி பரவாயில்ல என்னா பண்ணுது மொதல் குழந்தைக்கா? ரெண்டாவது குழந்தைக்கா?

-இரண்டாவது பையனுக்கு சார் மூன்று வருசம் முடிய போவது சளி அதிகமாயிருக்கு மூச்சுவிட சிரமப்படுறான் என்ன பண்றதுன்னு தெரியல

-குழந்தைகளுக்கு நான் பார்த்ததில்லை குமரவேல் நீங்க நம்ம அகடமி நண்பர்களுக்கும் நிறுவனர் மாதவனிடம் இல்லேன்னா தலைவர் உலகநாதன்கிட்ட பேசி பாருங்களேன். அப்படியும் இல்லேன்னா நம்ம வாட்சாப் குழுவுல போட்டு கேட்டு பாருங்க

-பேசிட்டேன் சார் மாதவன் சார்தான் போன் ஹீலிங் தந்தாரு ஆனாலும் மூச்சுவிட சிரமப்படுறான் எனக்கு பயமா இருக்கு. குழுவுல போட்டா ஆளாளுக்கு ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க சார்.  அதனால போடல

-அவரு போன்ல ஹீலிங் குடுத்துமா இப்படி இருக்கு  சரி குழுவுல போடலன்னா விடுங்க.

-ஆமா சார் மூனு நாளா சரியா சாப்பிடல பால் கூட குடிக்க மாட்றான். அவங்க அம்மா எம்மேல ரெம்ப கடுப்பா இருக்காங்க. ஆஸ்பிடலுக்கு போலாம் வாங்கன்னு சத்தம் போடுறாங்க.

-என்ன சொல்றீங்க குமரவேல் மூனு நாளாவா? உடனே ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க வறட்டு பிடிவாதம் வேண்டாம்.

-ஆமாம்சார் மூனு நாளா மாதவனும், உலகநாதனும் போன் ஹீலிங் தர்றாங்க அவங்க தான் பயப்பட வேண்டாம் சரியாய்டும்னு சொன்னாங்க. என்றார்

எனக்கு கடுமையான  கோபமும் வருத்தமும் உண்டானது. என்ன மடத்தனமான காரியம்.

-குமரவேல் நீங்க மொதல்ல செய்ய வேண்டியது உடனே ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறது தான் நல்லது. அவசரத்துக்கு பாவமில்ல. நம்ம கொள்கைக்கும் எதிரானதில்லே உடனே பையன கொண்டு போங்க.

-ஒகே சார் கடைசி முறையா மாதவன் சார்கிட்ட பேசிட்டு செஞ்சிடுறேன் என போனை கட் செய்து விட்டார் குமரவேல்.

கோபியும் குமரவேலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட அக்குபங்சர் கற்றுக்கொள்ள வந்த போது  பங்கஜம் அகடமி ஆப் அக்குபங்சரில்  , படிப்பதற்காக தொலைநிலை பல்கலைகழக வாயிலாக சுப்ரீம் ஸ்டார்  பல்கலை கழகத்ததோடு புரிந்துணர்வு ஒப்பந்ததோடு தொடர்ந்து நடத்தப்பட்ட வகுப்பில் சந்தித்தனர்.

கோபி இதற்கு முன்பே அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டு முதுவலி சரியானதா? அல்லது வேறு வகையில் சரியானதா எனத் தீர்மானிக்க முடியாமல். அலோபதி மருத்துவத்தின் மேல் இருந்த காழ்புணர்ச்சியாலும் கேள்விப்பட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வுகள் தரப்படாமல் மருத்தும் மாத்திரைகளுமே கொடுத்து நோயாளிகளை வதைப்பதும் அவர்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை செலவழித்தும் வறுமையில் வாடுவதை பார்த்து விட்டும். சீன முறையிலான அக்குபங்சரில் பல நோய்கள் சரியாகும் என நண்பர்கள்,

இயற்கை விரும்பிகள். பல சீன அக்குபங்சர் புத்தகங்கள்,விளம்பரங்கள் மூலமும் கேள்விப்பட்டும் புதியதாக ஏதாவது கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் நாமும் சிறந்த மருத்துவராகலாம் என்ற கனவில் இருந்த போதுதான் பங்கஜம் அகடாமி ஆப் அக்குபங்சரை பற்றி பல நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டான்.

பங்கஜம் அகடாமி ஆப் அக்குபங்சரில் படித்தால் வருமானமும் புகழும் கிடைக்குமென நிறைய எதிர்பார்த்தோம். அதன் செயல்பாடுகளும் . அடைந்திருந்த வீச்சும் அவர்களை அப்படி சிந்திக்க தூண்டியது . மாயையான தோற்றத்தை காட்டி சிகிச்சைக்கு வந்த நபர்களை நாம் சரியாகி விட்டோம் என்ற மன மயக்கத்தில் சிக்க வைத்தது. தொட்டால் சரியாகிவிடும். “உடலே மருத்துவர்” இதுவே அடிப்படை எனவும். உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் வர்ம அழுத்தம் தரும் இடங்களை போலவே சீன அக்குபங்சரில் உடலில் புள்ளிகள் உண்டு எனவும், அதில் மயிரளவு தடிமன் கொண்ட ஊசிகளை சொருகும் போது நோய்கள் குணமடைவதாக நிறைய. கேள்விப்பட்டிருந்தோம். அக்காலகட்டத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கத்தையும் நோய்களை குணப்படுத்துவதில் தொடு சிகிச்சை “மருந்தில்லாமல் மருத்துவம்.” என்ற தாரக மந்திரம். அதிக அளவில் மக்களிடம் போய் சேர்ந்து போன் ஹீலிங் என்ற வார்த்தையும் புழக்கத்தில் இருந்தது.

போன்ஹீலிங் என்பது நோயாளி சிகிச்சை அளிப்பவருக்கு போன் செய்தால் போதும் அவர் எடுத்து ஹலோ சொல்லி ஒரு சில வினாடிகள் கழித்து  சிகிச்சை அளித்தவர் சொல்வார் சிகிச்சை முடிந்துவிட்டது சரியாகிவிடும் என்று. அப்போது இது போல நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

அதிகம் கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் மழுப்பலாகவோ நம்பிக்கை வேண்டுமென்றே கிடைக்கும்.

மாதவன் சாரும் உலகநாதனும்  பதில் சொல்வதில் வேறுபட்டவர்கள்.

மாதவன்  கைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன் ஆள்காட்டி விரலால் தொட்டு சில வினாடிகள் வைத்திருந்து விட்டு அடித்துச் சொல்வார் சரியாகிவிடும் போங்க என்பார்.

உலகநாதனோ ஒரே  ஒரு அக்குபங்சர் ஊசியை மட்டும் சொருகி சில வினாடிகளே வைத்திருந்து விட்டு எடுத்து விடுவார்.. பசித்தால் உங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிடுங்கள். பசி, தாகம் வரும் வரை காத்திருந்து செய்யுங்கள் என்பார்.

பசித்து புசி மருந்தில்லா மருத்துவம் என்பது அவர்களது குறிக்கோள்.

ஆரம்ப காலத்தில் நன்றாகத்தான் இருந்தது கேட்பதற்கும். அவர்களை பார்க்கவரும் கூட்டத்தை பார்க்கும் போது பிரமிப்பாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது. குறுகிய காலத்திலேயே விலையுயர்ந்த கார்களில் பவனி வர ஆரம்பித்ததையும் பார்த்தோம்.

நாமும் அது போல கற்றுக் கொண்டு வருமானத்தையும் பெரும் புகழடைவோம் என எதிர்பார்த்தோம்.

கசப்பே மிஞ்சியது..

வாட்சப் குழுக்களை உருவாக்கி அதில் சிகிச்சை முறைகள், சிகிச்சை எப்படி செய்வது போன்ற  தகவல்களையும் கேள்விகளுக்கு பதில்களும் தரப்பட்டன. தமிழகம் முழுவதும் முன்னூறுக்கும் மேற்பட்ட நபர்கள் அக்குழுவில் இருந்தனர் அட்மின்களாக மாதவனும் உலகநாதனும் இருந்தனர். நாட்கள் செல்ல செல்ல நோயாளிகளை மாத்திரைகளை உடனே நிறுத்துமாறு சொன்னதன் விளைவாக விளையாட்டு வினையானது. பல ஊர்களில் பலரும் மரணத்தையும் சகிக்க முடியாத தாங்க முடியாத துன்பத்தையும் அனுபவித்தார்கள் .

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களிடம் பதிலில்லை.

பங்கஜம் அகடாமியின் நிறுவனர் மாதவனிடமும், தலைவர் உலகநாதனிடம் இது பற்றி கேட்டால் மழுப்பலான பதிலே கிடைத்தது. நீங்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என எங்களையே குற்றம் சாட்டினர்.

ஆரம்ப காலத்தில் காட்டிய பிரமிப்பும் மயக்கமும் பனி போல விலகத் தொடங்கியது.

பயிற்சி எடுத்துக் கொண்ட எங்களில் சில நண்பர்கள் கிளினிக் வைத்து சிகிச்சையளிக்கும் போது பல உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது. அவர்களுக்கும் குறிப்பிட்ட நோய்கள் குணமாகவில்லை. அதை பற்றி வாட்சாப் குழுக்களில் பதிவு செய்து கேள்விகள் கேட்டால்  முறையான பதில்கள் கிடைக்காது.

குமரவேலின் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அப்போதுதான் வாட்சாப்பில் பதிவிட்டிருந்தார். குழந்தைக்கு ரெம்ப முடியல நிறுவனர் மாதவனும் தலைவர் உலநாதனும் மூன்று நாட்களாக போன் ஹீலிங்கும் நேரில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை என்ற தகவலும் பரவி இருந்தது.

மாலை ஆறு மணி இருக்கும் கோபியின் செல்பேசிக்கு குமரவேலின் அழைப்பு வந்தது. சார் என்ன செய்யுறதுன்னு புரியல மாதவனும் , உலகநாதனும் போனே எடுக்க மாட்றாங்க பையனுக்கு ரெம்ப முடியல போல மூச்சும் குறைஞ்சிகிட்டே வருது என்ன பண்ணலாம்.?

-நா உங்ககிட்ட அப்பவே சொல்லிட்டேன் உடனடியா ஆஸ்பிடலுக்கு கொண்டு போங்க மொதல்ல உயிர காப்பாத்துங்க மத்தத அப்புறம் பாத்துக்கலாம். உடனே கிளம்புங்க

-சரி சார் என்றார்.

இரவு எட்டு மணிக்கு எனது செல்பேசிக்கு அழைப்பு மேல் அழைப்பாக வந்தபடியே இருந்தது. குமரவேலின் குழந்தைக்கு என்ன ஆனது என வாட்சாப் குழுக்களில் இது பற்றி பதிவுகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டு . கலவரமாக இருந்தது.

முடியாத இரவு முடிந்தது. அதிகாலை முதல் செய்தியாக நிறுவனர் மாதவனின் இரங்கல் வெளியானது. அதை அவர் வெளியிடாமல் தனது உதவியாளர் மூலம் பதிவிட்டிருந்தார்.

குமரவேலின் குழந்தைக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் தலைவிதி என தனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்

அடுத்த அரை மணியில் வாட்சாப் குழு கலைக்கப்பட்டது.

இன்றும் வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

00

கலியபெருமாள்


தொழில் மோட்டார் ரீவைண்டர். தஞ்சாவூரை சார்ந்தவன். வேலை நேரம் போக  வாசிப்பதுதான் ஒரே செயல் 35 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். இப்பொழுது கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிவருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *