அம்மாவுக்கு இந்தப்பழக்கம் வந்து நான்கைந்து வருடத்திற்குள்தான் இருக்கும். விட்டுனுவிடியாமல் காலையில் எழுந்ததும் டி.வி. ஸ்விட்சை தட்டிவிடுவாள். ஏதாவதொரு சேனலில் பக்தி பாடலை சிறிது நேரம் பார்ப்பாள். பிறகு வீட்டு வேலையைத் தொடங்குவாள். டி. வி. யில் இராசிபலன் நிகழ்ச்சி வந்ததும், செய்கின்ற வேலையை  அப்படியே போட்டுவிட்டு வேகமாக டி.வி. யை நோக்கி வருவாள். துலாம் ராசி வரும்போது அவளுக்கு ஆர்வம் அதிகரிக்கும். அவளுதடுகள் திடீரென்று இஷ்ட தெய்வங்களை முணுமுணுக்கும்.கைகள் இரண்டும் தானாக சேர்ந்து  சாமியை வணங்கும். இராசிபலன் சொல்பவர் துலாம் ராசிக்கு ஏதேனும் பரிகாரம் செய்யச் சொன்னால், உடனே வந்து என்னிடம் ஒப்பிப்பாள். “எம்மா ஒனக்கு வேற வேலையே இல்லையா..? என்பேன் எரிச்சலுடன். “ஓங்கெரகம் நல்லாயிருந்தா நானெதுக்குடா இந்த வேலையப் பார்த்திட்டு தெரியப்போறேன். ஓங்கெரகதான்டா என்ன பிடிச்சு வாட்டா வாட்டுது” என்பாள் ஆவேசமாக. அவளுடம்பு சரியில்லாததற்கு என் கிரகம்தான் காரணம் என்று சொல்லும்போது எனக்கு கோபம் உச்சிக்கு ஏறும். நான் ஏதாவது சொல்ல வாயெடுப்பேன் பிறகு சிறு யோசனைக்குப் பிறகு அமைதியடைந்து எல்லாம் அந்த சோசியக்காரன் செஞ்ச வேல என்று எனக்குநானே சமாதானம் ஆகிக்கிருவேன். என்னதான் சோசியக்காரன் சொன்னாலும் அதை நம்பிக்கிட்டு அம்மா என்னை அப்படி சொல்லும்போது எனக்கு சோசியக்காரனைவிட அம்மாவை பார்க்க ஒரு மாதிரியாதான் இருக்கும். அதுவும் பத்துபேர் முன்னாடி “இவங்கெரகந்தான் என்னை வாட்டுது” என்று சொல்லும்போது எனக்கு கோபம் உச்சிக்கு ஏறும். பல வருடங்களுக்கு முன் இதே அம்மாதான் என் காதுபட ‘எம்மகன் ராசிக்காரன் அவன் பிறந்த வருஷம் பத்து குண்டால் பருத்தி வெளஞ்சது கரிசக்காட்டுல. இவன் பிறந்த பின்னாடிதான் வீடு விருத்தியடைஞ்சுருக்கு” என பலதடவை சொல்லியிருக்காள். ஆனா இப்போ…?

சொன்னாலும், சொல்லாட்டாலும் அம்மா முன்னமாதிரி இல்ல. இப்ப எது சொன்னாலும் விருட்னு கோவப்படுறாள். அம்மாவ இப்படிப் பேசுதுனு கூட ஆச்சரியமா இருக்கும். அவ ஒடம்பு வேதனைதான் இப்படி பேசவைக்குது போல என நினைத்துக் கொள்வேன். அவ இரண்டு நாளு நல்லாயிருந்தா, நாளு நாளைக்கு உடம்பு சரியில்லேனு படுத்துக்கிருவாள். அவ உடம்பு சரியில்லாத நேரத்தில் ஏதோ பாசத்தில் கலங்குகின்ற கண்ணீருடன் “ஒடம்புக்கு என்னம்மா செய்து என்று பதட்டத்துடன் கேட்பேன். “இப்ப ஓங்கிட்டு சொல்லி என்னாகப்போகுது. என் ஒடம்பு வேதனையா நீ சொமக்கவாப் போற. வேலயப் பார்த்திட்டு போறதில்லை” என்பாள் மூஞ்சிய கோணுச்சிக்கிட்டு. அப்போது எனக்கு “ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசுதுனு ஆத்திரம் வரும். இதனால் என்னவோ அம்மாவிடம் வரவர பேச்சைக் கொறச்சுக்கிட்டேன்.

அவளுக்கு உடம்பு சரியில்லாத சில நேரங்களில் எதுவும் பேசாமல் கம்முனு இருப்பேன். ஆனாலும் என் மனசு “ஒடம்புக்கு என்னம்மா செய்யுதுனு’ கேட்க துடிக்கும், பிறகு எதுக்கு வம்பு நான் ஏதாவது கேட்க அவள் நாய்மாதிரி  எம்மேல லொள்ளுனு விழுவாள்னு.

கண்டுகொள்ளாமல் இருந்திடுவேன்.

நான் அவளை கண்டுகொள்ளாததை மனதில் வைத்துக் கொண்டேயிருப்பாள்.

அக்காக்களிடம் எப்போதாவது போன் பேசும்போது “எனக்கு ஓடம்பு சரியில்லேனா என்னென்னு கூட கண்டுக்க மாட்டேங்கிறான். இதுக்காகவா இவன தவமிருந்து பத்து மாசம் சொமந்து பெத்தேன்?’’ என்பாள் சிறு கண்ணீருடன். அம்மா சொல்லும் விஷயத்தைக்கேட்டு அக்காமார்கள், என்னை கோபமாக வைவார்கள். ‘உடம்பு சரியில்லேனு அம்மா படுத்திருந்தா என்னம்மா செய்யுதுனு கூட கேட்கமாட்றாயுமில்ல. நீ அவ்வளவு தூரம் வளர்ந்திட்ட?’ என்பார்கள்.

       “உடம்பு சரியில்லையானா கேட்டா. கேட்டு என்னபண்ணப்போற. ஓ வேலையா பார்த்துட்டுப்போங்குது அம்மா. கேட்கலேனா உங்ககிட்ட இப்படி கண்டுக்க மாட்றயானு புகார் பண்ணுது. நான் என்னத பண்ண.” என்பேன் மொகத்த சுழிச்சுக்கிட்டு.

     “ஏய் பெரியாள்னா அப்படித்தான்டா இருப்பாங்க. வயசாயிருச்சுனு குழந்தமாதிரிதான் நடந்துக்கிருவாங்க. நாமதான் பொறுத்துப்போகணும்” என்பார்கள் அக்காமார்கள். அவர்கள் சொல்வதற்கெல்லாம் மறுப்பேதுமின்றி சரி என்று சொல்லிக்கொள்வேன்.

சின்னக்கா சிலநேரங்களில் “உனக்கு மட்டும் கல்யாணம் முடிஞ்சிருச்சுனா அம்மாவாட்டு நிம்மதியா இருக்கும்டா. ஓங் கவலைதான்டா அதுக்கு பெரிய கவலை. ஒன்ன நெனச்சுதான்டா அதுக்கு ஓடம்பு சரியில்லாம போச்சு. ஒனக்கொரு கல்யாணம் பண்ணிவச்சுட்டா அதோட கடம முடிஞ்சுரும். உனக்கு தெரிஞ்ச பொண்ணுகிண்ணு ஏதாச்சும் இருக்காடா..? இருந்தா சொல்லு முடிச்சிருவோம்”.என்று அக்கா கேட்கும்போதெல்லாம் “எரிச்சலோடு எனக்கு தெரிஞ்ச பொண்ணு யாருமில்லக்கா” என்பேன். 

“ஏன்டா இந்த காலத்தில இம்புட்டும் அம்புட்டும் லவ் பண்ணி கூட்டிட்டு ஓடிப்போகுதுக. நீயென்னடானா ஒரு பொண்ணக்கூட தெரியாதுங்குற.   எம்மகளனா கட்டிக்கிறயாடா..?” என்று அன்பாக சொல்வாள் சின்னக்கா.

“ச்சு”என்ற எரிச்சலில் “ஓம்பொண்ணு சின்ன புள்ளக்கா” என்பேன் .

“சரி உன்னிஷ்டம்” என்பாள் சின்னக்கா.

என் மனசுக்குள் திடீரெனு பெரியக்கா சொன்னது ஞாபகம் வந்தது “இல்ல மாமா வேறடத்தில் பொண்ணு தரணுங்கிறாரு. இவனுக்கு வேற இடத்தில பொண்ணு பார்த்துக்கிங்க”

பெரியக்காவ இப்படிச் சொல்லுது என்று எனக்கே ஆச்சரியாமயிருந்தது. சின்னக்கா, பெரியக்காவிடம் எவ்வளவு  சொல்லிப்பார்த்துச்சு பொண்ணுகொடுக்கச் சொல்லி.. எதுவும் பெரியக்கா காதில் ஏறவில்லை.

சின்னக்காமாதிரி, கடைக்குட்டி அக்கா, பெரியக்காவிடம் எனக்கு பொண்ணுதரச்சொல்லி வாதாடவில்லை. எதுக்கு வம்புனு கம்முனு இருந்துக்கிருச்சு.

சின்னக்கா எவ்வளவு கெஞ்சியும் மறுப்பு தெரிவித்து ஒரேயடியாக சொல்லிவிட்டது “மாமாவுக்கு விருப்பமில்லையென்று”. மாமாவுக்கு மட்டுமில்ல. பெரியக்காவுக்கு விருப்பமில்லையென்று அவளது சொல், செயல், முகபாவனையிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆமா முப்பது வயசு வரைக்கும் எந்த வேல வெட்டி இல்லாமல் சினிமாவில் உதவி சேர்வதற்கு முயற்சி பண்ணி, ஏதோ சிறுசிறு படத்தில் உதவி இயக்குநராய் சேர்ந்து, பிறகு சரியாக வாய்ப்பில்லாமல் மனம் நொந்து சொந்த ஊருக்கும் சென்னைக்கும் மாறி மாறி அலைகின்ற வெட்டிப்பயனுக்கு எப்படி பொண்ணு தருவா பெரியக்கா… ஆனா சின்னக்கா மட்டும் என் பொண்ண கட்டிக்கோ என்று உண்மையாக சொல்கிறாளே அதெப்படி.. இத்தனைக்கும் நான் சின்னபிள்ளையிலிருந்து காலேஜ் படிக்கும் வரைக்கும் இல்ல.. இல்ல… இப்பவரைக்கும்கூட மூன்று அக்காக்களில் எந்த அக்கா பிடிக்குமென்றால் பெரியக்காவத்தான் பிடிக்கும் என்று சொல்லியிருக்கேன். நான் பள்ளி படித்த நோட்டு புத்தகங்களில்கூட என் பெயரை விட மற்ற பெயர்களைவிட பெரியக்கா பெயரைத்தான் அதிகம் எழுதி வைத்திருப்பேன். ஆனால் அந்த அக்காவ இப்படிச்சொல்லுச்சு என்று ஆச்சரியமாக இருக்கும்.

பெரியக்கா கல்யாணத்தக்கி ரெம்ப அழுதனாம். எங்கக்காவ என்கூட அனுப்பிச்சிருங்கனு எங்க மாமாகிட்ட சொல்லி மூக்க வடிச்சிக்கிட்டு அழுதனாம். அதப்பார்த்து எங்கம்மா எங்க சின்னக்கா, கடைக்குட்டி அக்கா எல்லாம் அழுதாங்களாம். கல்யாணத்துக்கு வந்தவங்க சிலபேரு இதப்பார்த்திட்டு அழுதுட்டாங்களாம். அக்காவ கல்யாணம் முடிஞ்சு மொதநாளு மாமா ஊருல விட்டுட்டு வந்த அடுத்தநாளே எனக்கு காச்ச வந்திருச்சாம். அம்மா அடுத்தநாளு அக்காவ பார்க்கிறதுக்கு தூக்கிக்கிட்டு ஓடிச்சாம். அக்கா என்ன கட்டிப்பிடிச்சு அழுதச்சாம். என் ராசாவுக்கு என்னப்பார்க்காம காச்ச வந்துருச்சாக்கும்னு.. தேம்பி தேம்பி அழுதுச்சாம்” இந்த சம்பவமெல்லாம் என் ஞாபகத்தில் மங்கலாக நினைவிருக்கிறது என்றாலும் எங்கம்மா சொல்லும்போது சுவாரஸ்யமா இருக்கும்.

என்ன கட்டிபிடிச்சு அழுத அக்காவ இப்ப மூஞ்சியல அடிச்சாப்ல பொண்ணு தரலேனு சொல்லுச்சு.. என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கும். மனசு ரொம்ப வலிக்கும்.

பெரியக்கா கல்யாணமாகி மாசமா இருந்த சமயம் அடிக்கடி இப்படிச்சொல்லும் “தலப்பிள்ள பொம்பளபிள்ள பெறந்தா அது எந்தம்பிக்கதான்” என்று. அந்தக்காதான் பொண்ணு தரலனு சொல்லுச்சு. மாமா பொண்ணு தரலனு சொல்லிருந்தா அது சாதாரண விஷயம். ஏன்னா அவரு மூனாந்தர மனுஷன். அக்காவ கட்டுனதால எனக்கு சொந்தம் . ஆனா கூடப்பிறந்த அக்கா.. அதுவும் என்ன தோள்ள மார்ல போட்டு வளர்த்தக்கா சொல்லும்போதுதான் மனசு தாங்கமுடியாத துயரத்தல வலிச்சது… வலிக்குது.

என் முதல் காதல் தோல்வியைவிட அதிகமா அழுதது, பொண்ணு தரலுனு அக்கா சொன்னனைக்குதான். அதுக்கப்புறம் அக்காகூட பேசவே ரொம்ப கூச்சமாயிருந்துச்சு. அதற்குப் பிறகு அக்காமேல பிரியம் விட்டுப்போச்சு.

ஒரு பேச்சுக்காவது அக்கா பொண்ணு தாரேனு சொல்லிருந்தாக்கூட எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும். அக்கா பொண்ணு தாரேன்னு சொன்னாக்கூட நான் அக்கா மகள கட்டுற ஆள் கிடையாது. அக்கா மகள கட்டனும்னு துளி விருப்பமுமில்லை. ஆனாலும் ஒரு பேச்சுக்காவது அக்கா சொல்லியிருக்கலாம்.

என்னைவிட எங்கம்மாவுக்கு பெரியக்கா மேலதான் பாசம். அது என்னதான் சொன்னாலும் சரிங்கும். ஏன்னா அப்பைக்கப்ப ஊருக்கு வந்தா ஐந்நூறு ஆயிரம் எங்கம்மா கையில தரும் எங்கக்கா. என்னால எங்கம்மாவுக்கு ஒரு பிரயோஜனமில்லை.

எங்கம்மா அடிக்கடி  சொல்லும் “மூனோட சேர்ந்து இவனும் பொம்பளப்புள்ளையா பெறந்திருந்தா.. எனக்கு எந்த கவலையுமில்லையே..! எவனக்காவது கட்டிக்கொடுத்திட்டு நிம்மதியா இருந்திருப்பேன்” என்று -அதையெல்லாம் நான் காதில வாங்காமல் இருந்திடுவேன்.

அம்மா சொன்னதுமாதிரி சிலநேரத்தில பொம்பளப்புள்ளையாவது பெறந்திருக்காமப்போச்சே என்று தோணும் சிலநொடிகளில்.

நான் பிறந்தது அப்பா, அம்மாவுக்குதான் பெரிய சொம. எவ்வளவு கனவோடு என்ன படிக்கப்போட்டாங்க. படிச்சு உருப்படிய வேலைக்குப் போயிருந்தாவது ஏதோ அப்பா அம்மாவுக்கு நிம்மதியா அரை வயிறு கஞ்சியாவது ஊத்திருப்பேன். தேவையில்லாம சினிமா கனவால இப்போ இந்த நிலமையில இருக்கேன்.

இப்பக்கூட அது ஞாபகத்துக்கு வருது. எங்க ஊர்ல அஞ்சு வரைக்கும்தான் பள்ளிக்கூடம். ஆறாம் வகுப்பு சேர்ப்பதற்கு பக்கத்து ஊருக்கு கூட்டிட்டு போகுது அம்மா. அப்பா வரமாட்டேன் சொல்லிட்டாரு. அப்போது மாட்டுத்தரகு வேல பார்த்து அவரு சாராயம் குடிப்பதில் மும்மரமா இருந்தாரு.

“ராசா அப்பாதான் குடிச்சு கெட்டுப்போனாரு. நீயினாச்சும் படிச்சு நல்லா வரணும்டா. நீதான்டா இனி அம்மாவுக்கு துணை” என்று அழுதுகொண்டே சொன்னாள். அத இப்ப நெனச்சாக்கூட அழுக வரும்.

நான் படிச்சுமுடிச்சு படிச்ச வேலைக்குப் போகாம. சினிமாவுல உதவி இயக்குநனரா சேரணும்னு போயி. வயசு தொலைச்சு. வீட்லயும நல்ல பேர எடுக்கமுடியாம வீதியிலயும் நல்ல பேரு எடுக்கமுடியாம.. அதெல்லாம் நெனச்சாலே கிறுக்கப்படிச்சதுமாதிரி ஆயிரும்.                              

அடிக்கடி ச்சே பெத்தவங்களுக்கு உருப்படியா ஏதாவது செஞ்சிருக்கேனா..? என்று மனசாட்சி உறுத்தும். அதுவும் கொஞ்சநேரந்தான். சினிமா வட்டார நண்பர்களிடமிருந்து போன் வந்ததும் பெத்தவங்க நெனப்பு மறந்திடும். தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு சென்னை கெளம்பிருவேன்.

எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக்கொடுக்காதது சின்னக்காதான்.

சின்னக்கா சில நேரத்தில “எம்மகளதான் வேண்டாங்கிற ..சரி வேறயெடத்திலனா பொண்ணு கேட்டுப்பாக்குறேன். அதுக்குதட்டிக்கும் வேற வேலக்கி எதுக்காவது போ.மெட்ராஸக்கு படம் எடுக்கப்போனதெல்லாம் போதும். சரியாடா..

“ம் சரிக்கா” என்பேன்  குரலில்

சொன்னமாதிரியே சின்னக்கா ரெண்டு இடத்தில பொண்ணு கேட்டுப்பார்த்துச்சு. ஆரம்பத்தில பொண்ணு தாரேன்னு சொன்ன பொண்ணு வீட்டுக்காரங்க. ரெண்டு மூனு நாளுல தரலனு சொல்லிருவாங்க. அப்போது என்னவிட எங்க சின்னக்காதான் ரெம்ப வருத்தப்படும். 

“பாவம் அம்மா, ரொம்பவும் ஆக்கவிட்டுப்போச்சு. நீதான்டா இனி பாத்துக்கிறணும் அம்மாவ. எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்துச்சு நம்மல. அதெல்லாம் நெனச்சுப்பாருடா. ஒடம்புக்கு சரியில்லாம போனதிலிருந்துதான் அம்மா கொணமே மாறிப்போச்சு. அதுக்கு முன்னாடி எப்பனாச்சும் எரிச்சப்பட்டு அம்மா பேசுனத பார்த்திருக்கயா..?” என்று புலம்பும்  சின்னக்கா.

நானும் “சரிக்கா பார்த்திக்கிறேன்” என்று எரிச்சலோடு சொல்லுவேன். எரிச்சலடைவதை பார்த்திட்டு “சரி உன்னிஷ்டம்” என்று பேச்சை முடித்துக்கொள்ளும் சின்னக்கா.

எல்லாவித எரிச்சல்களுக்கிடேயே என்னை நானே உயிர்ப்பாக வைத்திருக்க பக்கத்துவீட்டு நிர்மலா இருந்தாள்.

ஒரு புதுப்பட இயக்குநர் படம் ஆரம்பித்து பாதியிலே நின்னுபோனபோது என்ன செய்வதென்று தெரியாமல் மனவிரக்தியில் இருந்தபோதுதான், சின்ன அக்காவிடமிருந்து போன் வந்தது. திருப்பியும் அம்மாவுக்கு உடம்பு சரியில என்று. நான் உடனே கிளம்பி போக முடிவெடுத்தேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்ல என்ற சோகம் மனதுக்குள் இருந்தாலும, இன்னொருபுறம் நீண்டநாளுக்குப்பிறகு நிர்மலாவை பார்க்கப்போறம் என்றதுமே ரோமமெல்லாம் உணர்ச்சியில் எழுந்து நின்றது. நிர்மலா அக்கா முறைதான் என்று ஆரம்பத்தில் தயக்கமிருந்தாலும், போகப்போக நாமதான் முதலாமுதலா அக்கா முறைமேல ஆசைப்படுறம்மா. நமக்கு முன்னாடி நம்மூர்ல அக்கா உறவுமுறைய மீறி எத்தனைபேரு இருந்திருக்காங்க என்று எனக்குநானே சமாதானம் செய்துகொண்டேன். என்ன நடந்தாலும் நிர்மலாவை அடையாமல் இனி மெட்ராஸ்க்கு கிளம்பி வரக்கூடாது என்ற நினைப்போடியது.

சென்னையிலிருந்து கிளம்புனதிலிருந்து நிர்மலாவோட எப்படி எப்படி உடலுறவு பண்ணனும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன். அந்த நினைப்பு என் உடலெங்கும் ஒரே திருவிழாவை நடத்தியது.

நான் நெனச்சு மாதிரியே எப்படி என்னோட உடலுறவு கொள்ளணும்னு கண்டிப்பா நிர்மலா நினைச்சிருக்கும் என்றாவது என்று நினைப்பு என்னுள் ஓடியது.

போனவாட்டி ஊருக்கு போகும்போதுதான் நிர்மலாவுக்கும் எனக்கும் பார்வை ரீதியா தொடர்பானது. அதுக்குப்பிறகு நிர்மலாவை நினைத்து தினமும் சுயமைதுனம் செய்யாத நாளில்லை. சுயமைதுனம் செய்து முடித்த பிறகு எனக்குள் குற்ற உணர்ச்சி அதிகமா வரும். அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத நேரம் இந்த மாதிரி இருக்கோமே என்ற குற்ற உணர்ச்சியெல்லாம் கொஞ்ச நேரம்தான். பிறகு நிர்மலா நெனப்பு வந்து மீண்டும் சுயமைதுனம் செய்வேன். ச்சீ என்று மனசு காரித்துப்பும். கொஞ்சநேரங்கழிச்சு பிறகு மீண்டும் சுய மைதுனம்…

ஊருக்குப்போனலே எப்போதும் காலையில பத்துமணிக்குமேலதான் சாப்பிடப்போவேன் வீட்டுக்கு. அதுவும் அப்பா வேலைக்குப் போன பிறகுதான் வீட்டுக்குப் போவேன். அப்பா இருந்தா என்னை தண்டச்சோறுனு ஏதாவது சொல்லுவாரு. பிறகு அவர ஏதாவது நான் சொல்லுவேன். பிறகு வாக்குவாதம் ஆகும்.

எப்பயும் போலதான் அன்றைக்கு வீட்டுக்குப் போனேன். என் வீட்டிலிருந்து நாலுவீடு தள்ளியிருந்த வீட்டின் வெளிப்பறத்திலிருந்து நிர்மலா துணிக்கு சோப்புப் போட்டாள், பாவாடை சேலையை தொடை வரை ஏத்தி வைத்துக்கொண்டு, ஆரம்பத்தில் நிர்மலா தொடையை பார்க்க கூச்சமாக இருந்தாலும், மனசு விடுவதாக இல்லை. நான் சைஸ்ஸா அவள் தொடையை பார்ப்பதை எதார்த்தமாக அவள் கவனித்துவிட்டாள். ஐயயோ என்று எனக்குள் பயம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு ரெண்டுநாளு அக்கா முகத்தையே பார்க்க முடியவில்லை குற்ற உணர்ச்சியில். பிறகு மனசில் தைரியம் வந்தது. மீண்டும் அவளை இன்ச் இன்ச்சாக பார்க்க ஆரம்பித்தேன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். அவளின் செய்கையெல்லாம் எனக்கு ஆதரவு தருகிறேன் என்ற பாவனையில் இருந்தது. முப்பது வயசு வாழ்க்கையில் இப்போதுதான் எனக்கு வசந்தகாலம் தொடங்குகிறது என்ற நினைப்போடியது.

நாம் மற்றவரை தூண்டி பெறும் காமத்தைவிட, மற்றவர் நம்மை தூண்டி பெறும் காமத்தில்தான் அதிக இன்பம் என்பதை நிர்மலா மூலம் தெரிந்துகொண்டேன்.

நிர்மலா -அக்கா என்ற உறவுமுறை மறைந்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கண் சிமிட்டல், பறக்கும் முத்தத்திற்கு அவள் புன்சிரிப்பு சிரித்தாள்.

நிர்மலா தன் புருஷன்கிட்ட சண்ட போட்டு  மூன்று குழந்தைகளுடன் அப்பன் வீட்டுக்கு வந்து ஒருவருடம் ஆகப்போகிறது. அதற்குப் பிறகு அங்கே போகமலே இங்கேயே இருந்துவிட்டாள்  .

இப்போதெல்லாம் யாரவது நிர்மலாகிட்ட “வந்து ஒரு வருஷம் ஆகப்போகிறது. புருஷன் வீட்டுக்குப் போகலயா “என்று கேட்டாலே எனக்கு பக்குனு ஆகிவிடும்.

முப்பது வருஷ வாழக்கையில் கல்யாணமாகாமல், வீட்டிலே யார்கிட்டயும் நல்லபேரு வாங்காமல், சினிமாக் கனவில் எந்த வேலைக்கும் போகாமல், சினிமாவிலும் ஜெயிக்காமல் இருந்தவனுக்கு கொஞ்ச நாளாக நிர்மலாதான் ஆறுதலாக இருக்கிறாள். அவளும் புருஷன் வீட்டுக்குப் போயிட்டால்… !

ஒருவேளை தப்பித் தவறி இந்த உறவு வெளியுலகத்துக்கு தெரிந்துவிட்டால் பெரும் அசிங்கந்தான். பெத்தவங்களுக்கு கெட்ட பேரு, கூடப்பிறந்தவங்களுக்கு கெட்ட பேரு என எல்லாவித யோசனைகளும் என் மனதில் ஓடாமலில்லை.

அதையெல்லாம் மீறி நிர்மலாவின் காமம் ஆகப் பெரும் சக்தியாக இருக்கிறது. எனக்கு என்ன வேணாலும் நிகழட்டும் -ஆனால் நிர்மலாவுக்கு எதும் ஆகிவிடக்கூடாது.

தின நாளிதழில் வரும் செய்தித்தாள்களில் எங்களின் உறவு பற்றி என்றாவது செய்தி வந்திரக்கூடாது என்று மனசு தினமும் வேண்டிக்கொள்ளும்.

எங்களின் உறவு ஊர் உலகத்துக்கு தெரிய வந்தால் அவசரப்பட்டு ஏதும் நிர்மலா ஏதும் தற்கொலை போன்ற தவறான முடிவு எடுத்துவிடக்கூடாது. பிறகு அவளின் குழந்தைகளின் நிலைமை …?

இந்த அறம் சார்ந்த கேள்விகள் என் மனதில் எழாமலில்லை. இதெல்லாம் கொஞ்ச நேரம்தான்.

நிர்மலாவின் காமம் கள்ளப்பருந்தாய் என் சுற்றி வட்டமிடம் போதெல்லாம். என் மனம் எனக்குள் உள்ள அறத்தை- கோழி அதன் குஞ்சுகளை இறக்கைகளால் பாதுகாப்பதுபோல என்னதான் பாதுகாத்தாலும், சர்வசாதாரணமாக என்னிடமிருந்து அறத்தை கொத்தி தூக்கிச் சென்று விடுகிறது நிர்மலாவின் காமக் கள்ளப்பருந்து.

அன்று அம்மாவுக்கும் எனக்கும் மிகப்பெரிய சண்டை “வரவர எனக்கு  வயசாத் திரும்புது. இப்பையெல்லாம் என்னால வேள பார்க்க முடியல. நீ என்னடானா வேல வெட்டிக்குப் போகாமா இப்படித் தெரியற.. நம்மூர்ல இம்புட்டும், அம்புட்டும் கொத்தனார் வேலைக்கு ஓடாதுக. நீ என்னடானா மெட்ராஸ்ல பத்துனா… இங்க வந்து பத்துனானு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்க. வயசு முப்பது ஆகிப்போச்சு இன்னும் உருப்படியா வேல இல்ல. கல்யாணம் பண்ணல்ல. ஓ வயசுக்காரங்கெல்லாம் ரெண்டு புள்ளகுட்டி ஆகிப்போனாங்கெ. நீ என்னடானா இன்னும் இப்படி ஊரச்சுத்திக்கிட்டு தெரியுற. ஓன்ன நெனச்சுதான் எனக்கு பெரிய கவல. ஓங்கவலையால நைட்டு படுத்தா பொட்டுனு கண்ணுல தூக்கம் வரமாட்டிங்குது. மூணு பொம்பளைப்புள்ளைக கட்டிக்கொடுத்து அதுபாட்டுக நிம்மதியா இருந்துக்கிருச்சிக. நீதான் எங்களுக்கு பெரும் தலவலியா இருக்கா. ஓங்கவலயாலதான் எனக்கு ஒடம்பு சரியில்லாமப்போச்சு. ஓ அப்பன் குடிச்சு குடிச்சு என்ன பாடப்படுத்துனயான். நீ படிச்சிட்டு வேளவெட்டிப் போகமா சினிமாவுக்குப் போறேன்னு பாடாப்படுத்துற. ஓங்கெரகந்தான் வாட்டா வாட்டுது. எனக்கு கஞ்சி ஊத்ததான் சம்பரிக்கல. நான் செத்துப்போனபிறகு சுடுகாட்டுல தூக்கிப்போடயாவது சம்பாரிச்சிருவயா …?” என்று அம்மா சொன்னபோது.

எனக்கு சுருக்குனு கோபம் வந்தது. படக்குனு இன்னைக்கு நைட் நான் மெட்ராஸ் கெளம்புறேன் என்றேன். அந்த நொடியில் நிர்மலாவின் நினைப்பு என்னை வாட்ட வாட்டியது. இதுவரை போன் நம்பர் வாங்காததை நினைத்து வருத்தமாக இருந்தது.    

அம்மாவின் வார்த்தை என் மனதை இறுக்கியது. அம்மாவின் முகத்தை பார்க்கவே எனக்குத் தெம்பில்லை.

நான் போனாவாட்டி மெட்ராஸ்க்கு கிளம்பிப் போகும்போது. வேளைக்குப் போயிட்டு வந்த நிர்மலா எனக்காகவே தெரு விளக்கு வெளிச்சத்தில் சோப்புப் போட்டுக்கொண்டிருந்தாள்.

இந்தவாட்டி வந்ததுமே கொஞ்சநேரம் கழித்துதான் கண்ணில் தட்டுப்பட்டாள். அப்போது வச்சுகண்ணு எடுக்காமல் பார்த்தாள். அந்த பார்வையிலே எனக்குள்ளிருந்து காமம் பேயாட்டம் ஆடியது.

நீண்ட கூந்தல் உடையவள், அள்ளி முடிந்தால் எவ்வளவு பெரிய கொண்டை வருமோ- அந்த கொண்ட அளவு இருந்தது அவளின் மார்பு ..! அதுதான் எப்போதும் என்னை பாடாய்படுத்தியது. அதைத்தான் சேலைக்கு மேலே பார்க்க ஆவலாய் பார்த்தேன்.

அந்த நேரம் பார்த்துதான் என் சின்ன அக்காவிடமிருந்து போன் வந்தது. நீண்ட நேரம் கழித்துதான் அட்டன் பண்ணினேன். இனி மாமாமார்கள் அம்மா ஓடம்ப சரியில்லேனு ஓயாம வந்து பார்க்கமாட்டாக… அப்படிப் பார்த்தாலும் செலவழிச்சத சொல்லிக் காட்டுறாங்க. ஓந்தம்பி என்ன பண்ணுறான். ஒங்கம்மாவ பார்க்கணும்தான என சொல்லிக் காட்டுறாங்க. நீயி கூரோட பெழச்சுக்கோ. அம்புட்டுதான் என்னால சொல்லமுடியும். இனி நீ மெட்ராஸ்க்கு போக வேண்டாம். அம்மா, அப்பாவ பார்த்துக்கிட்டு இங்கேயே இரு” என்றாள்.

நானும் “சரிக்கா” என்றேன். .

அக்கா சொன்னது கொஞ்ச நேரத்தில் என் மனதை குழப்பமடையச் செய்தது. பிறகு எத்தன நாளைக்குதான் அம்மா உடம்பு சரியில்லேனு மாமாமார்கள் பார்ப்பாங்க என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் . 

சிறிதுநேரத்தில் என் மனம் மீண்டும் நிர்மலா நினைப்புக்கு வந்தது.

வீட்டுக்கு வெளியே நிர்மலாவின் மூத்த மகள் சுந்தரி வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தாள். மூன்றாம் வகுப்பு படிக்கிறாள் போல. அவள் எதார்த்தமாக என்னைப் பார்த்தாலும் எனக்குள் ஏதோ குற்ற உணர்ச்சி வந்திடும். எப்போதும் அந்தக் குழந்தையின் முன்னாள் நீண்டநேரம் நிற்க முடியாமல் வீட்டுக்குள் வந்துடுவேன்.

அம்மா லொக்கு லொக்குனு இரும்பிக்கொண்டிருந்தாள். பத்து வருஷத்துக்கு முன்னாடி நூல் மில்லில் வேளை பார்த்தது. இப்போது பாதிப்பை காட்டுகிறது. நுரையீரல் சளி கட்டியாகப் பிடித்திருக்காம். டாக்டர் எக்ஸ்ரே பார்த்துச்  நுரையீரல் ரெம்ப வீக்கா இருக்கு என்று சொல்லும்போது எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

அம்மாவுக்கு ரொம்ப ஆசை எனக்கு கல்யாணம் பார்க்கணும் என்று. எனக்கும் ஆசைதான். நாம நெனச்ச ஆசையெல்லாம் பூராம் நடக்கவா செய்து.

அடுத்தநாள் காலையில அம்மா கம்மங்கூலு கேட்டாள். ஒடம்பு சரியில்லாததால் வாயுக்கு ஒண்ணும் நல்லாயில்ல. அதனால கம்மங்கூலு குடிக்கணும்போல இருக்கு என்றாள். இப்போது உள்ள வீட்டில் சோறு பெரும்பாலும் கிடைக்கும். கூலு… ?

யாருடைய வீட்டிலாவது கூல் இருக்கும். மத்தியான நேரத்தில் எல்லாம் வேலைக்குப் போன பிறகு யாருடைய வீட்டைப் போயி தட்டுவது. அதனால் பக்கத்து ஊரில்  தள்ளுவண்டியில் கூல் விக்கும் கடை ஞாபகம் வந்து பஸ் ஏறிப்போனேன்.

கூல் வாங்கிக் கொண்டு வரும்போது அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். “எம்மா கூல் வாங்கிட்டு வந்துருக்கேன் எழுந்திரு” என்று நான் சொல்லும்போது. “கூலு குடிச்சிட்டேன்” என்றாள் அம்மா.

“கூலு யாரும்மா கொடுத்தா “என்று நான் கேட்டபோது. நிர்மலா மகள் சுந்தரி கொடுத்தாள். நானு பார்வதி பாட்டிகிட்ட கூலுகீலு காய்ச்சிருக்கயானு கேட்டேன் பக்கத்தில புள்ளைகளோட விளையாடிக்கிண்டிருந்த சுந்தரி “பாட்டி எங்க வீட்ல கூலு இருக்கு. இருங்க ஊத்திட்டுவாரேன்னு சொல்லி ஓடிப்போய் பட்டுனு கூலோடு வந்துட்டாள்” என்றாள் அம்மா.

நான் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது சுந்தரி பிள்ளைகளுடன் தட்டாங்கல் விளையாடிக் கொண்டிருந்தாள். தொடர்ந்து சுந்தரி முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. வீட்டுக்குள் வந்து அமர்ந்தேன். எனக்கு மனது பூராம் நிர்மலா நினைவும், சுந்தரி நினைவும் மாறி மாறி வந்தது.

சிறிது நேரங் கழித்து அப்பா, அம்மா சொல்படி ஞானப்பழத்திற்க்காக உலகத்தையே சுற்றி வந்த முருகனை, கூல் வாங்க பக்கத்து ஊருக்குச் சென்ற எனக்கு பொருத்தமாகவும்…

அப்பா அம்மாவே உலகம் எனச் சுற்றி ஞானப்பழத்தை அருகிலிருந்த பெற்ற விநாயகரை, அம்மாவின் அருகிலிருந்து கூல் கொடுத்த சுந்தரிக்கு பொருத்தமாகவும் என் மனசு வைத்துப் பார்த்தது.

அடுத்த நொடியில் நிர்மலாவை நினைச்சுப் பார்க்கவே மனசு தடுமாறியது.

அம்மா கூல் சாப்பிட்ட இடத்தில் கூலோடு சேர்ந்து சில சோற்றுப் பருக்கைகள் கிடந்தன. வெறும் மொட்டக் கூலாக காய்ச்சினால் கூல் குடிப்பவர்களுக்கு பசி தாங்காது என்று, கூல் காய்ச்சும்போது கொஞ்சம் சோற்றுப் பருக்கைகளை கலப்பார்கள். அந்த பருக்கைதான் அது. அந்தப் பருக்கையை தொடர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை.

‘எம்மா நீ கூல் குடிச்ச இடத்தில் ஈ மொய்ச்சு கெடக்குது. அந்த இடத்த விளக்கமாத்தால கூட்டி விடு’ என்றேன்.

“திடீரென்று வீட்டுக்குள் ஓடிவந்த சுந்தரி” இன்னும் கூலு ஊத்திட்டு வருவா பாட்டி”என்றாள்.

“போதும் பாப்பா”என்றாள் என்னம்மா.

“சரி பாட்டி “என்று கூல் ஊற்றி வந்த பெரிய கிண்ணத்தை எடுத்தாள்.

“கிண்ணத்தை கழுவிக் கொடுக்குறேன். கொடு பாப்பா “என்றேன் நடுங்கிய குரலில்.

“மாமா கிண்ணத்தை கழுவிக் கொடுத்தால் சொந்தம் விட்டுப்போகும்” என்று பெரிய மனுஷிபோல பேசினாள் சுந்தரி.

என் அம்மா அந்த குழந்தையின் பேச்சைக்கேட்டு சிரித்துவிட்டு.

“பெரிய மனுஷி மாதிரி பேசுறா பாரு”என்றாள் .

அம்மாவின் சிரிப்பை நீண்டநாளுக்குப் பிறகு முழுமையாக பார்க்க முடிந்தது.

நானும் அந்த குழந்தையின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டேன்- ஆனால் அச்சிரிப்பு இயல்பானதாக இல்லை.

இத்தனை புள்ளைகள் மத்தியில் அந்த குழந்தை மட்டும் எதுக்கு எங்க வீட்ல கூல் இருக்கு பாட்டி என்று ஆர்வத்தோடு சொன்னது மட்டுமில்லாமல் கூல் ஊத்தி வந்தும் கொடுத்திருக்கு

இதுதான் விதியா… !

இரவானதும் நிர்மலா துணிக்கு சோப்புப் போடும் நேரம் வந்தது. என்றும்போல எழுந்துபோக மனசு வராமல் உட்கார்ந்திருந்தேன். முக்கியமா அந்த சோற்றுப் பருக்கை கிடந்த இடத்தை என்னால் அவ்வளவு எளிதாக தாண்டி போகமுடியவில்லை. அப்படியே ஏதோ ஒன்று என்னை பசைபோட்டு இறுக்கிப்பிடித்திருந்தது.

அதுக்குப்பிறகு பருக்கையை எங்கு பார்த்தாலும் சுந்தரி முகம் எனக்கு ஞாபகம் வராமலிருந்ததில்லை.

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *