பல மகிழுந்துகளும், விசையுந்துகளும், குதியுந்துகளும், மூன்று சக்கர ரிக்சாக்களும் அவ்வளவேன் சில லாரிகளும், மிதிவண்டிகளும் கூட அவ்விடத்தில் காத்துக்கிடந்தன. அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ வருவதையொட்டி தேக்கப்பட்ட வாகனங்கள் அல்ல அவை. அவ்விடம் தார்ச்சாலையை குறுக்காக கிழித்துக் கொண்டு இரயில் பாதை ஒன்று ஓடியது. அது ஒரு லெவல் கிராசிங். இரயில் வரவிருப்பதால் கேட் போடப்பட்டிருந்தது. அதனால், இரயில் பாதையின் இருபக்கங்களிலும் பல தரப்பட்ட வாகனங்கள்  இரயிலின் வருகைக்காக காத்து நின்றன. கேட் போடப்பட்டு ஒரு நிமிடம் தான் ஆகியிருந்தது. இரயில் வர இன்னும் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகலாம்.

     இப்போது அவ்விடத்திற்கு புதிதாக ஒரு அரசுப்பேருந்தும் வந்து சாலையின் ஒரு பக்கம் சேர்ந்து நின்று கொண்டு, அங்கு காத்துக்கிடந்த வாகனங்களில் ஒரு பேருந்து இல்லாததன் குறையைப் போக்கியிருந்தது. வண்டிகளெல்லாம் இன்ஜினை அணைத்து விட்டு ஒய்வு நிலையில் நின்றிருந்தன. அத்தனை வாகனங்கள் ஒரே இடத்தில் நின்றிருந்த போதிலும், ஒலிப்பான், இன்ஜின்களின் இரைச்சல் இல்லாமால் இருப்பது அரிதானதாயிருந்தது. ஆனால், வாகனங்களின் இரைச்சலுக்கு பதிலாக மனிதக் குரல்களின் பேச்சரவம் கேட்டபடியிருந்தது. புதிதாக வந்து நின்ற அரசுப்பேருந்து இருந்த பக்கத்தில் இரண்டு மூன்று மனிதக் குரல்கள் பேசுவதற்கு தேவையானதை விட பல மடங்கு அதிக சத்தத்துடன் ஒலித்தன. ஏதோ தகராறாக இருக்க வேண்டும். விசையுந்தில் வந்திருந்த இரண்டு மத்திம வயதுப் பெண்களுக்கும், குதியுந்தில் வந்திருந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே ஏதோ பிரச்சனை. இரு தரப்பினரும் அந்த இடத்தையே நீதிமன்றமாக்கி, கூடி இருந்தவர்களை நடுவர்களாக்கி, தத்தம் வாதங்களை எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கத்திக் கொண்டிருந்தனர். இரயில் வர இன்னும் நேரம் எடுக்கும் என்பதால் சண்டை நடந்த இடத்தைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. புதியதாய் வந்து நின்ற அரசுப்பேருந்தின், சன்னலோர இருக்கையை தவறவிட்டப் பயணிகள் கூட, பேருந்தை விட்டுக் கீழிறங்கி சண்டையைக் காணச் சென்றிருந்தனர். அங்கு எழுந்தக் கூச்சலால், எதிர்ப்புற சாலையில் நின்றிருந்தவர்களும் கூட சண்டையைக் காண பேருந்து நின்றிருந்த பக்கம் வந்துவிட்டிருந்தனர்.

            ஆனால், அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தவை எதுவும் அந்தப் பேருந்தின் மத்தியில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த சூசெனின் கவனத்தைப் பெற போதுமானதாக இருக்கவில்லை. பல சமயங்களில் அப்படித்தான் நிகழ்கிறது. புறச்சூழலில் நிகழும் களியாட்டங்களும், கூப்பாடுகளும், கூச்சல்களும், அலறல்களும், அபயக்குரல்களும், வெறிச்செயல்களும், துயரச்சம்பவங்களும், அவரவர் அகத்தின் ஆழத்தில் மூழ்கிவிட்ட மனிதர்களின் கவனத்தைப் பெற சக்தியற்றவைகளாகி தோற்றுவிடுன்றன. புறச்சூழலை மறந்து அம்மனிதர்கள் தங்களுக்குள் தேடிக்கொண்டிருப்பது தான் என்ன? அவர்கள் கடந்து வந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கிறார்கள். அல்லது, இதுவரையிலும் நிகழ்ந்திராத சம்பவங்களை கற்பனையில் படைத்து, அதில் தங்களை நிறுத்தி ஒத்திகைப் பார்க்கிறார்கள். இப்படி முடிந்தவைகளும், நிகழ்ந்திராதவைகளும் அம்மனிதர்களை களிப்பு, துயரம், கிலி என ஏதேனுமொரு உணர்ச்சியில் பீடித்து அவர்களை புறச்சூழலை விட்டு தனிமைப் படுத்திவிடுகின்றன. அம்மாதிரியான சமயங்களில் புறச்சூழல்களால் அம்மனிதர்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அப்படித்தான் நேற்று தேவாலயத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை மீண்டும் மனதினுள் அசை போட்டபடியிருந்த சூசெனை, இப்போது பேருந்துக்கு வெளியில் நடக்கும் தகராறும், கூச்சலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சூசென், ஒரு மத்திம வயது கைம்பெண். சூசெனின் கணவன் ஃபிரான்சிஸ் இறந்து ஒன்றரை வருடம் கடந்திருந்தது. சூசென், வங்கியில் ஒரு நல்வருவாய் ஈட்டக்கூடிய பணியில் இருப்பதால், அவளுக்கும் மேரிக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதாரச் சிக்கல்கள் ஒன்றுமில்லை. மேரி, சூசெனின் ஒரே மகள். மேரிக்கு இப்போது அகவை பதினொன்று. அவள் அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயில்கிறாள். படிப்பில் நல்ல சாமர்த்தியம் உள்ளவள். ஃபிரான்சிசின் இழப்பைக் கடந்து வர சூசெனுக்கும், மேரிக்கும் ரொம்ப நாட்கள் பிடித்தது. கடந்த ஆறு மாதங்களாகத்தான், கணவனை இழந்தத் துயரை சூசெனும், தந்தை இல்லாததன் ஏக்கத்தை மேரியும் மறந்து இயல்பு வாழ்க்கையை வாழப் பழகியிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் வாராந்திர வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. எல்லா வாரத்தையும் போலவே நேற்றும் சூசெனும் மேரியும் சென்றிருந்தனர். நேற்று தேவாலயத்தில் நடந்த சம்பவத்தைத் தான் இப்போது சூசென் பேருந்தினுள் அமர்ந்து நினைத்துக் கொண்டிருந்தாள்.

அது ஒரு கத்தோலிக்கத் திருச்சபை. வழிபாட்டுக்கு வருகிற கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். மேரி, சூசெனிடம் தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டுமென காலை வீட்டிலிருந்த போதிலிருந்தே சொல்லிக்கொண்டிருந்தாள். பலமுறைக் கேட்டும் காரணத்தை மேரி சொல்ல மறுத்ததால், சூசெனும் வேறு வழியின்றி சம்மதித்துக் கூட்டி வந்திருந்தாள். சூசெனால், மேரி என்ன பாவம் செய்திருப்பாளென சரியாக யூகித்தறிய முடியவில்லை. அதனாலேயே, சூசென் பல எண்ணங்களை மனதில் ஓடவிட்டபடி வழிபாடு முழுக்க இருந்தாள். அவ்வப்போது மேரியின் முகத்தையும் பார்த்தாள். அந்தக் குழந்தையின் முகத்தில் என்றுமில்லாதத் தெளிவை சூசென் கண்டாள். சூசெனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. மேரி பள்ளியில் ஏதோ சேட்டை செய்துவிட்டு அதை அவளிடம் சொன்னால் அடிப்பாள் என்று அஞ்சி, பாதிரியாரிடம் சொல்லித் தப்பிக்கலாம் என நினைக்கிறாள் போலும் என்று சூசென் ஒருவாறு யூகித்து வைத்திருந்தாள். ஆனால், மேரி அப்படியான குழந்தை அல்ல. எதுவாயினும் சூசெனிடம் சொல்லி விடுவாள். ஆகையால் சூசென் யூகித்து வைத்திருந்தாலும் மேரி என்ன செய்திருப்பாள் என அறிந்துகொள்ளும் ஆவலுடனேயே வழிபாடு முடியும் வரை இருந்தாள். பாதிரியாரிடம் சென்று மேரியின் கோரிக்கையைத் தெரிவித்து, வழிபாடு முடிந்து கூட்டம் குறைந்தவுடன் பாவ மன்னிப்புக் கேட்கும் கூண்டுக்கு அருகில் நிற்பதாகச் சொல்லி, அவரின் வருகையையும் உறுதி செய்து வந்திருந்தாள்.

வழிபாடு முடிந்து கூட்டம் குறைந்து போயிருந்தது. பாவ மன்னிப்புக் கேட்கும் கூண்டின் முன் குழந்தை மேரி நின்று கொண்டிருந்தாள். அவளின் பின்னால் சற்றுத் தள்ளி சூசென் நின்றிருந்தாள். பாதிரியார் கூண்டை நோக்கி வருவதைப் பார்த்த மேரி மண்டியிட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்கத் தயாரானாள். அதைப் பார்த்தபடியே வந்த பாதிரியார், “மேரி எந்திரி டா. ஏசப்பா எல்லாத்தையும் மன்னிக்கறவர்ˮ என்றபடியே கூண்டுக்குள் சென்று, பாவ மன்னிப்பு வழங்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அந்தக் கூண்டின் திறப்பு வழியே தெரிந்த மேரியின் முகத்தைப் பார்த்தார்.  மேரி எழுந்து நின்று கொண்டாள். அவள் வயதுக்கு மீறிய மனமுதிர்ச்சியை மேரியின் முகத்தில் பார்க்க முடிந்தது. சிறிதளவும் பயமில்லாத அவளின் கண்கள், உண்மையின் அடையாளங்களாக முகத்தில் மின்னிக் கொண்டிருந்தன. மழலை போலல்லாமல், ஒரு படையை முன்னிருந்து வழிநடத்தும் வீராங்கனையைப் போலத் துணிச்சலாய் அவர் முன் நின்றிருந்தாள் மேரி. “சொல்லுடாம்மா மேரி. என்ன தப்பு செஞ்ச. எதுனாலும் பரவால ஃபாதர் கிட்ட சொல்லு. ஏசப்பா உன்ன மன்னிச்சு இரட்சிப்பார்.” என்றார் பாதிரியார். மேரி தன் மழலைக் குரலில் சொல்லத் தொடங்கினாள்.

 “ஃபாதர் போன வாரம் ஞாயித்துக்கெழம சர்ச்ல ப்ரேயர் முடிஞ்சு நானும் அம்மாவும் வீட்டுக்குப் போனோம். கொஞ்ச நேரம் கழிச்சி சுப்பு அண்ணா எங்க வீட்டுக்கு வந்தாங்க”

   ‘சுப்பு’, பெயரைக் கேட்டதும் இதுவரையிலும் மேரி என்ன தவறு செய்திருப்பாள் எனவறியவிருந்த ஆவல் போய் புதிதாய் பற்றிக்கொண்ட பதற்றத்துடன் மேரி தொடர்ந்து பேசுவதைக் கவனித்தாள் சூசென்.

   “எங்க வீட்டுக்கு அப்பா இருக்கும்போதிருந்தே சுப்பு அண்ணா வந்திட்டு இருந்தாரு. அவரு மட்டும் இல்ல நெறைய அக்காங்க அண்ணன்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வருவாங்க. எங்க வீட்ல தா சீட்டு நடக்கும். அதனால வாரம் வாரம் அவங்கெல்லாம் வந்துட்டு இருந்தாங்க. சீட்டுப்பணம், ஏலம்-னு என்னமோ பேசிப்பாங்க. எனக்கு ஒன்னும் புரியாது. நா அங்க சேர்ல ஒக்காந்துட்டு சும்மா வேடிக்கப் பாத்துட்டு இருப்பன். அம்மாவும் அப்பாவும் தா அந்த சீட்ட நடத்துனாங்க. அம்மாகிட்ட எல்லாரும் பணம் குடுப்பாங்க. அத அம்மா வாங்கிப்பாங்க; ஒரு நோட்லையும் எழுதிப்பாங்க. அப்பா ஏசப்பா கிட்ட போனதுக்கு அப்புறம் கொஞ்ச வாரம் மட்டும் எல்லாரும் வந்தாங்க. அம்மா மட்டும் அதெல்லாம் பாத்துட்டு இருந்தாங்க. அப்புறம் யாரும் வரவே இல்ல. அம்மா கிட்ட கேட்டதுக்கு, ‘ சீட்டு முடிஞ்சு போச்சி யாரும் இனிமேல் வர மாட்டாங்க’னு சொன்னாங்க. அது எனக்கு கொஞ்சம் கவலையா இருந்துச்சு. ஆனா சுப்பு அண்ணா மட்டும் எப்பவாச்சும் எங்க வீட்டுக்கு வருவாரு. அப்டி ஒரு மாசத்துக்கு முன்னால சுப்பு அண்ணா வந்தப்ப நானும் வெளிய வந்து சேர்ல ஒக்காந்துக்கிட்டேன். சுப்பு அண்ணா அம்மா கிட்ட,

‘என் சீட்டுப்பணம் வெளிய யாருக்கோ குடுத்திருக்கேன்னு சொன்னீங்க சூசெனக்கா. அடுத்த மாசம் எனக்கு வேணும். வாங்கி வெச்சிருங்க’ னு சொன்னாரு. அதுக்கு அம்மாவும், ‘கண்டீப்பா சுப்பு அடுத்த மாசம் வா வாங்கிக்கலாம்.’ னு சொன்னாங்க. அப்பறம் சுப்பு அண்ணா அம்மா கிட்டயும் என் கிட்டயும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு,’ சூசெனக்கா அடுத்த மாசம் மறக்காம ரெடி பண்ணிடுங்க. அப்பாவுக்கு ஆபரேஷன் டைம் ஆயிடிச்சு’ அப்டீன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு எனக்கும் டாட்டா காட்டிட்டு போனாரு. பேசுன மாதிரியே சுப்பு அண்ணா ஒரு மாசம் கழிச்சி போன வாரம் நாங்க சர்ச் முடிஞ்சு வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்துல வந்திருந்தாரு. அம்மா வந்து அவரோட பேசிட்டு இருந்தாங்க. நானும் எப்பவும் போலவே வெளிய சேர்ல ஒக்காந்துட்டு அவங்க பேசுறதப் பாத்துட்டிருந்தன்.”

சுப்பு அண்ணா அம்மாகிட்ட, ‘சூசெனக்கா எனக்கு இந்த வாரம் கண்டீப்பா பணம் வேணும்க்கா. அப்பா ஆப்பரேஷன்க்கு டாக்டர் டேட் குறிச்சிட்டாரு. நா அதுக்காக வேண்டி தா சீட்டே போட்டன். கண்டீப்பா வேணும் கா.’ அப்டீனாரு.

அதுக்கு அம்மா, ‘ஆமா சுப்பு நான்தா உன்ன போன மாசம் இன்னைக்கு வந்து வாங்கிக்கச் சொன்னன். நா இல்லேங்குல. ஆனா சுப்பு நா பணம் குடுத்து வெச்சிருந்தவங்க இல்லேங்குறாங்க. ஒரு மூணு நாலு மாசம் பொறுத்துக்கோ சுப்பு, நா எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணிக் குடுக்கறன்.’ அப்டீனாங்க.

சுப்பு அண்ணா, ‘என்ன சூசெனக்கா இப்டி கை விரிச்சா எப்டீ? நா என்ன உங்கக் கை காசயாக் கேக்குறன். நா குடுத்து வெச்சிருந்த என்னோட சீட்டுப் பணத்த தான் கேக்குறன். நீங்க கண்டீப்பா வாங்கிக் குடுப்பீங்கனு நம்பித் தானே, நா குடுக்க சம்மதிச்சேன். இல்லனா நா அப்பவே பணத்த வாங்கிட்டு போயிருப்பேன்ல’ அப்டீனாரு.

நா அம்மா மொகத்தைப் பாத்தன். அவுங்க மொகமே கொஞ்சம் மாறிப் போச்சி. அம்மா என்னப் பாத்து, ‘ஏய் மேரி இங்க என்ன வேடிக்க உள்ள போயி படி போ’ னு கத்துனாங்க. மறுபடியும் சுப்பு அண்ணா ஏதோ பேச ஆரம்பிச்சதனால, நா உள்ளப் போகாம அப்டியே சேர்ல ஒக்காந்துகிட்டேன்.

‘அது மட்டுமில்ல சூசெனக்கா. நீங்க பணத்த வெளி ஆளுக்கு குடுத்திருக்கறதா சொன்னீங்க. ஆனா அப்ப தா ஒரு லட்சம் போட்டு ஸ்கூட்டி எடுத்தீங்க. அதுவும் இ.எம்.ஐ லாம் இல்லாம ரொக்கப் பணம் குடுத்து எடுத்ததா எல்லாரும் பேசிக்கிறாங்க.’ னு சுப்பு அண்ணா சொன்னாரு.

அம்மாவுக்கு சுப்பு அண்ணா அப்டிக் கேட்டதும் கோவம் வந்திருக்கணும்னு நெனைக்கறன். அம்மா என்கிட்ட கத்துன மாதிரியே, ‘இங்கப் பாரு சுப்பு தேவ இல்லாம பேசக்கூடாது. ஊர்ல ஒலகத்துல ஆயிரம் பேசுவாங்க. அதுக்கெல்லாம் நா பொறுப்பாக முடியாது. ஸ்கூட்டர் ஒன்னும் ஸ்பாட் பேய்மென்ட் லாம் கெடையாது. இ.எம்.ஐ தா போட்ருக்கு.’ னு சுப்பு அண்ணவாப் பாத்தும் கத்துனாங்க.

 நா அம்மா மொகத்தப் பாத்தன். அவுங்க மொகத்துல அவ்ளோ கோவம். நா இதுக்கு முன்னாடி அம்மாவ அப்டி பாத்ததே கெடையாது. ஆனா சுப்பு அண்ணா சொன்னது உண்ம தா. நானும் அம்மாவும் தா புது ஸ்கூட்டர் வாங்கப் போயிருந்தோம். சுப்பு அண்ணா சொன்ன மாதிரி, அம்மா ஒரு லட்சம் பணம் அப்பவேக் கட்டி தா ஸ்கூட்டி வாங்குனாங்க. ஆனா என்கிட்ட, ‘யாராச்சும் கேட்டா இ.எம்.ஐ னு சொல்லு’ னு சொல்லியிருந்தாங்க. எனக்கு அப்ப எதுக்குன்னு புரியல. அந்த இ.எம்.ஐ பத்தியெல்லாம் ஏங்கிட்ட யாரும் இதுவரைக்கும் கேட்டதே இல்ல. ஆனா அம்மா அந்தப் பொய்ய அவ்ளோ கோவமா சுப்பு அண்ணாகிட்ட சொன்னப்ப எனக்கு ஏன் அம்மா இப்டி பொய் பேசணும் னு புரியல. எனக்கு அம்மாவ அந்த மாதிரிப் பாக்கப் புதுசா, சொல்லப் போனா பயமா இருந்துச்சி.

அம்மாக் கத்துனதுனால சுப்பு அண்ணாவும் சத்தமா பேச ஆரம்பிச்சாரு, ‘என்னக்கா என் கிட்டக் கத்துறீங்க. சேரி நீங்க ஸ்கூட்டி எப்டியோ வாங்கிட்டுப் போங்க. எனக்கு என் பணத்த குடுத்துடுங்க. உங்கப் பேச்சே எனக்கு வேணாம்’ னாரு.

நா சுப்பு அண்ணா இப்டி அம்மாக்கிட்ட கத்திப் பேசியும் பாத்ததில்ல. எனக்கு அவரப் பாக்கவும் ஒரு மாதிரி பயமா தா இருந்திச்சி. நா ரெண்டு பேர் மொகத்தையும் மாறி மாறி பாத்துட்டிருந்தன். அம்மா சுப்பு அண்ணாவப் பாத்து, ‘டேய் கொரல ஒசத்திப் பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. என்ன உன் பணம்? இப்பத் தர முடியாதுன்னா என்ன பண்ண முடியும் உன்னால ‘அப்டீன்னு படத்துல வர வில்லி மாதிரி மெரட்டுனாங்க. ஆமா, அப்போ அம்மாவாப் பாக்க சினிமா வில்லி மாதிரி தா எனக்குத் தெரிஞ்சாங்க. அம்மா போட்ட சத்தத்துல பக்கத்து வீட்ல இருந்தவங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு முன்னாடி கூட்டமா கூடிட்டாங்க. எனக்கு இன்னும் பயமாப் போச்சி. நா சேர்ல இருந்து எந்திரிச்சி அம்மாவக் கட்டிப் பிடிச்சிகிட்டன்.

கூட்டம் கூடுனப்பறம் சுப்பு அண்ணாவும் இன்னமும் சத்தமாப் பேசுனாரு, ‘இந்தாக்கா இப்ப எதுக்கு தேவ இல்லாமாக் கத்தி இப்டி ஊரக் கூட்ர? நா என்ன உன்னக் கேட்டன். என் பணத்த தானுக் கேட்டன்’. அம்மாவப் பிடிச்சிருந்ததனால எதிர்ல இருந்த சுப்பு அண்ணா மொகத்த என்னால நல்லா பாக்க முடிஞ்சது. ஆனா அம்மாவோட மொகம் தெரியல. என் ஒரு காது அவுங்கத் தொடையோட நல்லா அழுத்தி மூட்ற அளவுக்கு அவுங்கள இறுக்கிக் கட்டிப் பிடிச்சிருந்ததனால அவங்கப் பேசுறது மட்டும் விநோதமா எனக்குக் கேட்டுச்சு.

‘ ஏன்டா ஊரக் கூட்டினா உன் மானம் போகுதா? உனக்கெல்லாம் இப்டி மானத்த வாங்குனா தாண்டா நீ சரிப்படுவ. நானும் எவ்ளோ நாள் தா பொறுமையாப் பாக்றது. வந்து வந்து தனியா இருக்கறப் பொம்பளய தொந்தரவு பண்ணா அக்கம் பக்கத்துல இருக்கறவுங்க பாத்துட்டு சும்மா இருப்பாங்கன்னு நெனச்சியா?’, அப்டீன்னு அம்மா கத்துனாங்க.

ஆனா அம்மா ஏன் திடீர்னு இப்டி சம்மந்தம் இல்லாமப் பேசுறாங்கனு எனக்குப் புரியல. நா எதிர்ல இருந்த சுப்பு அண்ணாவாப் பாத்தன். அவருக்கும் புரியாதது மாதிரி தா இருந்துச்சி. அம்மா மொகத்த நிமிந்து பாக்கல. பாக்கணும் னு தோனல. அம்மா அப்டி சுப்பு அண்ணாவாப் பாத்துக் கேட்டதும், எங்கப் பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்க பொம்மிப்பாட்டி, ‘என்ன கண்ணு என்ன பிரச்சன’ னு அம்மாவப் பாத்துக் கேட்டாங்க. அப்ப நா அம்மாவ விட்டுட்டு கொஞ்சம் பின்னாடித் தள்ளி நின்னு அம்மா மொகத்தப் பாத்தன். நா இதுவரைக்கும் யாருமே அப்டி பொய் சொல்லிப் பாத்ததேயில்லை. அம்மா அப்டீ பொய்யாப் பேசிட்டுருந்தாங்க. அவுங்க சுப்பு அண்ணவப் பத்தித் தப்பு தப்பா எல்லார்கிட்டயும் சொன்னாங்க. அப்டி அம்மா சொல்லிட்டிருக்கும்போதே, சுப்பு அண்ணாவ பொம்மிப்பாட்டி வீட்ல இருக்க குமாரண்ணா கன்னத்துலயே ஓங்கி அடிச்சிட்டாங்க. பளார் னு பெரிய சத்தம். நா பயந்து போய் மறுபடியும் அம்மாவக் கட்டிப் பிடிச்சிக்கிட்டன்…”. பாவ மன்னிப்புக் கேட்கும் கூண்டினுள் அமர்ந்திருந்த பாதிரியையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்த மேரி சற்று நிறுத்தினாள். ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.

தான் மேடையின் முன்பு நின்று வழிபாடு செய்யும்போது, தனக்கு முன்னே மண்டியிட்டு கண்களை மூடி உணர்ச்சிப் பெருக்கில் தன்னிலை மறந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் மனிதர்களை பாதிரியார் வெகுவாகக் கண்டுள்ளார். கழுத்தின் கீழே கண்ணீர் வழிந்தோடுமளவு விம்மி விம்மி அழுது, செய்தத் தவறுக்காக கடவுளிடம் மன்னிப்பு வேண்டி நிற்கும் சில மனிதர்களை இதே பாவ மன்னிப்புக் கூண்டின்முன் பாதிரியார் பார்த்திருந்தார். ஆனால், மேரி அத்தகைய எந்த உணர்ச்சிப்பெருக்கிலும் மூழ்காமல் நிதானத்துடன் பேசிக்கொண்டிருப்பதை எண்ணி உள்ளுக்குள் வியந்து கொண்டார். அவள் மன்னிப்புக் கோர வந்திருப்பவளைப் போலல்லாமல் ஒரு பிரசங்கம் பண்ணுபவள் போலவே பாதிரியின் கண்களுக்குத் தெரிந்தாள். அவளுக்குப் பின்னால் கூண்டை விட்டு சற்றுத் தள்ளி குற்றவுணர்வால் கண்களில் நீரத் ததும்ப நின்று கொண்டிருந்த சூசெனைப் பாதிரியார் கவனம் கொள்ளவில்லை. பேசத்தொடங்கியதிலிருந்து இன்னும் மேரியும் சூசெனைத் திரும்பிப்  பார்க்கவேயில்லை. தேவாலயத்தில் கூட்டமெல்லாம் கலைந்து இப்போது அவர்கள் மூவர் மட்டுமே அங்கிருந்தனர். இருப்பினும் சூசென் அவர்களால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள் அல்லது புறக்கணிக்கப்பட்டிருந்தாள்.

ஃபிரான்சிஸ் இருந்தபோதிலிருந்தே சூசென் ஒரு புது குதியுந்து வாங்க வேண்டுமென அவனிடம் சொல்லிவந்தாள். அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வதென்று ஃபிரான்சிஸ் கேட்டபோது, சீட்டுப் பணத்தை எடுத்து வாங்கிக்கொண்டு பின் ஏற்பாடு செய்து வைத்துவிடலாம் அல்லது மாதத்தவணை முறையில் வாங்கிக்கொள்ளலாம் என ஆலோசனையும் சொன்னாள். ஆனால், ஃபிரான்சிஸ் கடன் வாங்குவதை விரும்பாதவன். தேவையானப் பணத்தை சேமித்து பிறகு வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறி அதை மறுத்தான். பின் எதிர்பாராத விதமாக ஃபிரான்சிஸ் உடல்நலக் கோளாறால் இறந்து போனான். அவன் இறந்த சில மாதங்களில் சீட்டும் தீர்ந்து போனது. சூசென் சீட்டுப் பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டாள்; கடைசி ஆளாக சீட்டு எடுத்த சுப்புவுக்குத் தவிர. புதியதாய் குதியுந்து வாங்கியே தீர வேண்டுமென முடிவெடுத்த சூசென், சுப்புவின் சீட்டுப்பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள். சுப்புவிடம் பணத்தை தானே பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், அப்பாவுக்கு சிகிச்சை நெருங்கும்தருவாயில் வந்து கேட்கும்போது தருவதாயும் சொல்லியிருந்தாள். சுப்புவும் அவன் இருக்கும் தெருவில் ஏற்கனவே பணம் திருடு போயிருந்ததால், சூசென் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் எனவெண்ணி அதற்கு ஒப்புக்கொண்டான். சூசென் குதியுந்தை சுப்புப் பணத்தை பயன்படுத்தி வாங்கிக்கொண்டு, வெளியில் கடன் வாங்கி அவன் கேட்கும்போது கொடுத்துவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தாள். அதன்படியே, மேரியையும் கூட்டிச் சென்று குதியுந்தையும் வாங்கினாள். எல்லோரிடமும் மாதத்தவணைக்கு வாங்கியிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். மேரியையும் அப்படியே சொல்லும்படியாக சொல்லி வைத்திருந்தாள்.

குதியுந்தை வாங்கிய பின், சுப்புவுக்கு தர வேண்டிய பணத்திற்காக வெளியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க மறைமுகமாக முயன்றாள். பிறகு, ஒருநாள் சுப்புவிடம், அவன் பணத்தை நெருக்கடியில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கொடுக்கப்போவதாகவும், அவன் கேட்கும்பொழுது அவர்கள் நிச்சயம் தந்துவிடுவார்களென்றும் பணத்திற்கு தான் பொறுப்பேற்று பெற்றுக்கொடுப்பதாகவும் கேட்டாள். சுப்புவும் வெறுமனே கிடக்கும் பணம் யாருக்காவது பயன்படட்டும் தேவைப்படும்பொழுது பெற்றுக்கொள்ளலாம் என்றெண்ணி சம்மதித்தான். அப்படி சுப்புவிடம் சொல்லிவிட்ட பிறகு பல இடங்களில் சூசென் பணத்தை ஏற்பாடு  செய்ய முயன்றாள். எங்குமே அவளால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை . எல்லா இடங்களிலும் கணவனில்லாமல் தனி ஆளாக சூசெனால் வட்டி கட்டி சமாளிக்க முடியாதென்பதைக் காரணங்காட்டி மறுத்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பு சூசெனிடம் பணத்தை அடுத்த மாதம் தந்துவிடும்படியாகக் கேட்டபோது, வந்து வாங்கிக்கொள்ளும்படியாக அப்போதைக்குச் சொல்லி அவனை அனுப்பி வைத்திருந்தாள். அதன்பிறகு அவள் எவ்வளவு முயன்றும் பணம் கிடைக்கவில்லை. அவள் சொன்னபடியே மாதம் கழிந்து கடந்த வாரம் சுப்பு வந்து பணத்தைக் கேட்டபோது இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கால நீட்டிப்புக் கேட்டாள். சுப்பு மறுத்ததோடு குதியுந்தை வாங்கியப் பணத்தின் மூலத்தைக் குறித்தும் ஐயத்தை எழுப்பியாதால் சூசென் ஆத்திரம் அடைந்தாள். எப்படியேனும் அந்தச் சூழலைக் கையாண்டு அந்தப் பிரச்சனையை முடிக்க எண்ணிய சூசென், சுப்பு மீது வீண் பழியை சுமத்தத் துணிந்தாள். அவள் துணையில்லாமல் இருப்பதை சுப்பு பயன்படுத்திக்கொண்டு எல்லைத் தாண்டுவதாக கூறிவிட்டால் பிறகு பணத்தை பற்றி அவனால் கேட்க முடியாது என கணப்பொழுதில் யோசித்துக் கூடியிருந்தவர்கள் முன் அவனைக் குற்றவாளியாக்கினாள். ஆனால், மேரி அவளுடன் இருந்ததையே சூசென் அப்போது கவனித்திருக்கவில்லை. சொல்லப்போனால் மேரியின் நினைவுகளே சூசெனுக்கு அப்போதில்லை.

அப்போது தன் நினைவை இழந்தது தவறென, மேரி இப்போது பாவ மன்னிப்புக் கூண்டின் முன் நின்று கொண்டு சூசெனுக்கு சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள். மேரி பாதிரியாரிடம், ‘அம்மா சுப்பு அண்ணாவாப் பத்தி தப்பு தப்பா எல்லார்கிட்டயும் சொன்னாங்க’, என்று சொன்னபோது சூசெனுக்கு, பொம்மி கேட்டபோது தான் போன வாரம் கூடியிருந்தவர்கள் முன் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘அது ஒண்ணுமில்ல பொம்மியக்கா நா இவன் கிட்ட எல்லாருக்கும் சீட்டுக் காச குடுத்தப்பவே வாங்கிக்கோ ‘சுப்பு’ னு சொன்னன். அப்ப இவன், ‘இல்ல சூசெனக்கா நீங்களே வெச்சிருங்க. நா தேவையினா வாங்கிக்கறேன்’ னு சொன்னான். சேரினு நானும் வச்சிருந்தேன். அப்புறம் ஒரு நாள் பேங்க்குக்கே காச கொண்டு வரச்சொல்லி, வாசல்ல வெச்சே வாங்கிட்டும் போய்ட்டான். அப்பறமும் அடிக்கடி வந்துட்டே இருந்தான். சேரி, தம்பி மாதிரி தானேனு நானும் பேசிட்டிருந்தன். ஆனா ரெண்டு மாசமா ஆளு, பேச்சு, நடத்த எதுவுமே சரியில்ல. ஒரே ரெட்ட அர்த்தமாவே பேசிட்டிருந்தான். நா போன மாசமே புடிச்சி திட்டிவுட்டன். அப்புறம் ஆளு ஒரு மாசமா இந்தப்பக்கம் வராமலே இருந்தான். இன்னைக்கி மறுபடியும் வந்து ஆரம்பிக்கறான். நானும் போனா போவுது சின்னப் பையனுப் பாத்தா ஓவரா போறான். அசிங்கமா சைசு மயிறுனு பேசிட்டிருக்கான்… இவனமாரி நாயிங்கலாம் இதுக்குன்னே அலையறானுங்க…’, சூசென் பேசிக்கொண்டிருக்கும்போதே பொம்மியின் மகன் குமார் சுப்பு கன்னத்தில் அறைந்திருந்தான். அந்த அறை சூசெனுக்கு தெம்பூட்டியிருந்தது. அவள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் சுப்புவை எதிகொள்ளத் தயாரானாள். அதுவும் போகக் கூட்டத்தில்,’ பையனையும் மயிரையும் பாரு’, ‘உன்னைய உங்கொப்பனும் , உங்கொம்மாளும் இதுக்குத்தான் பெத்து விட்ருக்காங்களா?’ , ‘இவனையெல்லாம் டவுசரோட அடிப் பின்னினாதா சரிப்படுவா.. பொரிக்கி’, ‘உன்னைய நல்ல பையன்னு நெனச்சனேடா. இந்த வேல பாத்துட்டயேடா. பொறம்போக்கு இனிமேல இந்தத் தெரு பக்கம் வந்த கால ஒடச்சிறுவன்’, என்று எழுந்த அடையாளம் தெரியாதக் குரல்களும் சூசெனை துணிச்சல் கொள்ளச் செய்திருந்தன. அறை விழுந்த பிறகு சுப்பு எதுவும் பேசவில்லை. அதிர்ச்சியில் மௌனமாகியிருந்தான். குமார் அடித்த பின், சுப்பு சூசெனை ஒருமுறை பார்த்தான். சூசென் அவன் கண்களை எதிர்கொள்ள முடியால் பார்வையை விலக்கிக் கொண்டாள். சுப்பு ஏதாவது பேசுவானென சூசென் எதிர்பாத்தாள். அவன் சூசெனை கட்டிக்கொண்டிருந்த மேரியை தலை குனிந்து ஒருமுறை பார்த்தான். அதன் பிறகு சுப்பு பேசவேயில்லை. எதுவும் பேசாமலேயே அவ்விடம் விட்டு அகன்றும் போனான்.

அப்படி சுப்பு எதுவும் பேசாமல் போனது சூசெனுக்கு ஒரு மாதிரி பாரத்தை ஏற்படுத்தியிருந்தது. மேரியின் நிலை குறித்து சிந்தித்துத் தான் சுப்பு எதுவும் பேசாதிருந்திருக்க வேண்டுமென சூசென் நினைத்தாள். அவளின் செயலுக்காக வருந்தினாள். இரண்டு தினங்களுக்கு ஏதோபோல இருந்தாள். பின் தன்னை சரிப்படுத்திக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாள். அப்போது தன்னால் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப முடிந்ததற்காக, எளிதாக குற்றவுணர்விலிருந்து விடுபட முடிந்ததற்காக இப்போது சூசென் மனம் நொந்து கொண்டாள். அந்த சம்பவத்தைப் பற்றி மேரி சூசெனிடம் எதுவுமே இந்த வாரத்தில் கேட்கவில்லை. ஆனால், இன்று தேவாலயத்தில் தன் தவறுக்காக அவள் மன்னிப்பு கேட்க பாவ மன்னிப்புக் கூண்டின் முன் நின்றுகொண்டிருப்பதை பார்க்கும்போது சூசெனுக்கு அவமானமாக இருந்தது. சூசென் தன்னையே வெறுத்தாள். சுய வெறுப்புணர்ச்சியில் அவளை அறியாமலேயே கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் மௌனமாகியிருந்த மேரி எச்சிலை விழுங்கிக் கொண்ட பின் பேசத் தொடங்கினாள். “அப்புறம் எல்லாரும் சுப்பு அண்ணாவத் திட்டுனாங்க. ஆனா சுப்பு அண்ணா ஒண்ணுமே பேசல. அமைதியா இருந்தாங்க. அம்மா கிட்ட பொம்மிப்பாட்டி கேட்ட மாதிரி, சுப்பு அண்ணாகிட்ட யாருமே, ‘என்னாச்சி சுப்பு’ னு கேக்கல. ஒருவேள யாராச்சும் கேட்டிருந்தா சொல்லியிருப்பாரோ என்னவோ. அடி வாங்குனதுக்கு அப்புறம் சுப்பு அண்ணா அம்மாவப் பாத்தாரு. அப்பறம் குனிஞ்சி என்னப் பாத்தாரு. எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சி. அழுகையே வந்திரிச்சி. அவரு என்கிட்ட எதுவுமே கேக்கல. ஆனா எனக்கு

‘நீயாச்சும் சொல்ல மாட்டியா மேரி’ னு  என்னப் பாத்துக் கேட்ட மாதிரியே இருந்திச்சி. நா அம்மா பின்னாடி என் மூஞ்சிய மறச்சிக்கிட்ட. அப்டியே உண்மையையும் மறச்சிக்கிட்ட. எனக்கு அப்ப பயத்துல பேசவே வரல. கொஞ்ச நேரத்துல சுப்பு அண்ணா அங்கிருந்து போய்ட்டாரு.

நா இந்த ஒரு வாரமா சுப்பு அண்ணாவப் பத்தியே நெனச்சிட்டிருந்தன். அவரு ஏன் எதுவும் பேசாம போய்ட்டார்னு ரொம்ப யோசிச்சி பாத்தன். அம்மாவும் ரெண்டு நாள் ஏதோ மாதிரி தெரிஞ்சாங்க. அப்புறம் சரி ஆயிட்டாங்க. ஆனா என்னால முடியல. சுப்பு அண்ணா ஞாபகம் அடிக்கடி வரும். அவரப் பத்தி மட்டும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டிருப்பன். நா யோசிக்கற மாதிரியே அம்மாவும் யோசிப்பாங்களானு பல நேரம் யோசிச்சியிருக்கன். ஃபாதர் நீங்க ஜெபம் பண்ணும்போது அடிக்கடி நம்மல சில சமயம் சாத்தான் பிடிக்க முயற்சி பண்ணும் னு சொல்லுவீங்க. அம்மாவும் போன வாரம் சாத்தான் பிடியில தான் இருந்திருக்கனும். அதனால தான் அத்தன பேர் முன்னாலயும் சுப்பு அண்ணாவப் பத்தி பொய்யாப் பேசி பாவம் பண்ணினாங்க. அம்மா சொன்னது பொய்யிங்குறதுக்கு சாட்சியா இருந்தது ரெண்டே பேருதான். ஒன்னு சுப்பு அண்ணா. இன்னொன்னு நான். நாங்களும் எதேதோக் காரணத்துனால உண்மையப் பேசாம இருந்துட்டோம். ஃபாதர், அம்மா பொய் சொல்லி பாவம் பண்ணினாங்க. நான் எனக்குத் தெரிஞ்ச உண்மைய வெளிய சொல்லாம அந்தப் பாவத்துல பங்கெடுத்துகிட்டேன்.”

இதுவரையிலும் பாதிரியை மட்டுமே பார்த்து பேசிக் கொண்டிருந்த மேரி, தலையை மட்டும் பின்னால் திருப்பி சூசெனைப்  பார்த்து, “பாவம் பண்ணினவுங்க குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேக்கணுமில்ல ஃபாதர்” என்றவளாக மீண்டும் பாதிரி முன் திரும்பி மண்டியிட்டுக் கேட்டாள், “எல்லாத்தயும் மன்னிக்கிற ஏசப்பா இதையும் மன்னிப்பாரா ஃபாதர்?”. மேரி பேசுவதை நிறுத்தி அமைதியானாள். பாதிரியார் கூண்டை விட்டு வெளியே வந்து மேரியின் அருகில் நின்று கொண்டார்.

மேரியின் பேச்சைக் கேட்டு அடக்க முடியாத கண்ணீரோடு நின்று கொண்டிருந்த சூசென், மேரி திரும்பி அவளைப் பார்த்து, ‘பாவம் பண்ணினா மன்னிப்பாவது கேக்கனும்’ என்றபோது உடைந்து  போய் விம்மி, மூக்கை உறிஞ்சிக் கொண்டு மேலும் அழ  ஆரம்பித்திருந்தாள். மேரி அப்படிச் சொல்லி விட்டு பாதிரி முன் மீண்டும் திரும்பி, ‘மன்னிப்புக் கிடைக்குமா?’ எனக் கேட்டபோது சூசெனும் மேரியின் அருகில் மண்டியிட்டுக் கொண்டு அவளைக் கட்டிப்பிடித்து அழுதாள். மேரி அழவேயில்லை. அவள் அமைதியாக மட்டும் இருந்தாள். மேரி, சூசெனுக்காக, சூசென் சொன்ன பொய்க்காக, சூசெனை மன்னித்து விடும்படியாகத் தான் பாதிரியிடம் வேண்டுகிறாள் என சூசென் நினைத்திருந்தாள். ஆனால் மேரி,  ‘நான் பண்ணின பாவத்துக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்?’ எனக் கேட்காமல் கேட்டது சூசெனுக்கு செருப்பெடுத்தறைந்ததைப் போலிருந்தது. தன் மகளிற்கிருக்கும் அறம் கூட தன்னிடம் இல்லாமல் போய்விட்டதை நினைக்க நினைக்க சூசெனின் அழுகை நீண்டு கொண்டே போனது. சூசென் மேரியின் முகத்தை பார்க்க கூடத் துணிவில்லாதவளாக, அவளின் தோளில் தன் முகத்தை புதைத்தபடி அழுது கொண்டிருந்தாள். பிறகு பாதிரியார் எழுந்து அருகில் வந்து நிற்பதை உணர்ந்த சூசென், அவர் முகத்தை பார்க்கக்கூட முடியாதவளாக கூனி குறுகி, “ஃபாதர் என்ன மன்னிச்சிடுங்க ஃபாதர்” என்று உடைந்து போன குரலில் அழுகையினூடே சொன்னாள்.

தன் முன் மன்னிப்பு வேண்டி மண்டியிட்டுக் கிடக்கும் மகளையும், தாயையும் பார்த்தபோது பாதிரிக்கு மேரி தாய் போலவும், சூசென் மகள் போலவும் தெரிந்தார்கள். பாதிரி சூசெனைப் பார்த்து, “சூசென் நீ மன்னிப்பு கேக்க வேண்டியது என்கிட்டயோ , கர்த்தர் கிட்டயோ, இல்ல இந்த உயிரில்லாத கூண்டு கிட்டயோ இல்ல”, என்று மட்டும் அமைதியான குரலில் சொன்னார். பின் மேரியின் முன் அவர் மண்டியிட்டுக் கொண்டு அவள் கண்களை சந்தித்தவாறு, “மேரி நீ நெனைக்கற மாதிரி உன்ன நானோ, இந்தக் கூண்டோ, ஏன் ஏசப்பவே கூட மன்னிக்க வேண்டியதில்லடா. நீ எந்தப் பாவமும் பண்ணல. எனக்காக வேணும்னா அம்மாவ நீ மன்னிச்சிரு டா” என்று சொல்லிவிட்டு எழுந்து அவ்விடம் விட்டு அகன்று போனார்.

நேற்று தேவாலயத்தில் நிகழ்த்த இந்தச் சம்பவத்தை, லெவல் கிராசிங்கில் நின்றிருக்கும் பேருந்தினுள் இருந்துகொண்டு இப்போது நினைத்தபோதும் சூசெனுக்கு அவளறியாமலேயே கண்ணீர் வழிந்து மணிக்கட்டில் விழுந்தது. சூசென் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அவளை நிதானமாக்கிக் கொள்ள வேண்டி சன்னல் வழியே வெளியே பார்த்தாள். இன்னமும் இரயில் வருவதற்கான அறிகுறி எதுவுமில்லை. வெளியில் நிகழ்ந்து கொண்டிருந்த தகராறும் இன்னும் முடியவில்லை. பேருந்திலிருந்த பாதிக்கும் மேலானோர், கீழே தகராறு நடந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அந்த விசையுந்தில் வந்திருந்த பெண்களுள் ஒருத்தி மிகவும் சத்தமாக அந்த இளைஞர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அந்தப் பையன்களும் பதிலுக்கு அந்தப் பெண்களை திட்டிக் கொண்டிருந்தனர். அந்தச் சண்டை முடிவது போலவே தெரியவில்லை. சூசென் அந்தச் சண்டையை கவனித்தவாறு இருந்தாள். இரயில் தொலைவில் வரும்போதே சத்தம் கேட்டது. அங்கு சண்டையைக் காண கூடி நின்றிருந்தவர்கள் எல்லோரும் அவரவர் வாகனங்களை நோக்கி ஓடினர். அந்தத் தகராறில் ஈடுபட்டிருந்த விசையுந்து பெண்களும், குதியுந்து ஆண்களும் கூட தத்தம் வாகனங்களில் ஏறி அமர்ந்து, வண்டியை தயார் நிலையில் வைத்துக் கொண்டு முனு முனுத்தவாறு நின்றிருந்தனர். சூசென் அமர்ந்திருந்த பேருந்துக்குள் தட தட வென அதிர்வுகளை எழுப்பியபடி பலர் படிகளில் ஏறும் சத்தம் கேட்டு அடங்கியது. பேருந்தும் இன்ஜின் ஆன் செய்யப்பட்டு புறப்படத் தயார் நிலையிலிருந்தது.

கடைசி ஆளாக சற்று சிரமப்பட்டு பேருந்தின் பின்புற படிக்கட்டுகளில் எறிவந்திருந்த லட்சுமியக்கா, சூசெனைப் பார்த்ததும் அவளருகில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள். பின் சூசெனிடம் , “லூட்டி என்ன ஆச்சு சூசென்? ஏன் பஸ்ல வர?” என்று கேட்டாள். “ஸ்கூட்டியத் திருப்பி குடுத்திட்டேன்க்கா. என்னால இ.எம்.ஐ கட்டி சமாளிக்க முடியல. அதா குடுத்துட்டு பாதி பணம் வாங்கிட்டு வந்துட்டன்” , என சூசென் பதில் சொன்னாள். “அட என்னாப் போ…”,  என தன் பங்கிற்கு வருத்தம் தெரிவித்து கொண்டாள் லட்சுமியக்கா.

நேற்று தேவாலயத்திலிருந்து வந்தவுடனேயே குதியுந்தை கொண்டு திரும்ப விட்டுவிட்டு அவர்கள் கொடுத்த பணத்தை சூசென் பெற்றுக்கொண்டு வந்திருந்தாள். அந்தப் பணத்தையும் தன்னுடன் பையில் வைத்துக்கொண்டு தான் சூசென் பேருந்தினுள் அமர்ந்திருந்தாள். இரயில் லெவல் கிராசிங்கைக் கடந்து போனது. கேட் திறக்கப்பட்டு பேருந்தும் நகர ஆரம்பித்திருந்தது.

லட்சுமியக்கா இயல்பாகவே சத்தமாக பேசக்கூடியவள். அவள் சூசெனிடம் , “வெளிய அந்தப் பொம்பளைங்களப் பாத்தியா? பொம்பளைங்கலா அவுளுங்கெல்லாம். ஏறிட்டு வந்துட்டாளுங்க பெரிய வண்டீல. ஓட்டத் தெரியாம ஓட்டி முன்னாடி நின்னுட்டிருந்த அந்த லூட்டி வண்டி மேல மோதிட்டாளுங்க. இவளுகளயெல்லாம்  யாரு இப்ப பெரிய வண்டி ஓட்டலனு அழுதா?” என்றாள். லட்சுமியக்கா சொன்னது வெளியே நடந்த சண்டையைப் பார்க்க சென்றிருந்த இன்னொருவரின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபர் லட்சுமியக்காவைப் பார்த்து, “என்னம்மா இப்டி பேசுறீங்க? அந்த வண்டிக்கார அம்மாதான், ‘நா இப்ப தா புதுசா பைக் ஒட்டி பழகுறன். மன்னிச்சிருங்க. நானும் கேட் போட்டு இருந்ததனால தா வண்டிய பிரேக் போட்டு நிறுத்தப் பாத்தன். ஆனா கொஞ்சம் முன்னாடியே பிடிக்காம விட்டதனால கண்ட்ரோல் மிஸ் ஆகி முன்னாடி நின்னுட்டிருந்த ஸ்கூட்டர் மேல மோதிட்டேன்’ னு சொல்லிட்டாங்க. ஆனா அந்த ஸ்கூட்டர் கார பசங்க வயசுல பெரியவங்கனு கூட பாக்காம எடுத்த வார்த்தைக்கு கெட்ட வார்த்தையில பேசியிருக்கானுங்க. நீங்களே பாக்குல எப்படி எல்லாரும் இருக்கும்போதே பேசுனாங்கனு. யாருக்கும் எதும் ஆகல. வண்டியும் பெரிய அடியில்ல. அவனுங்க தா கொழுப்புல பேசுறானுங்க. நீங்க என்னடான்னா அந்த அம்மா பைக் ஓட்டுனது தா தப்புங்கற மாதிரி பேசுறீங்க” என்றார். அது பேருந்தினுள் இருந்த எல்லோருக்கும் கேட்டிருக்க வேண்டும்.

அதன் பிறகு லட்சுமியக்கா எதுவும் பேசவில்லை. பேருந்துக்குள் இருந்த எல்லோரும் அந்தச் சண்டையை பற்றி அருகிலிருப்பவர்களுடன் முனு முனுக்கத் தொடங்கியிருந்தனர். நடத்துநர் பின்புறம் வந்த போது லட்சிமியக்காவையும், அந்தப் பின் இருக்கை நபரையும் பார்த்து, “சண்டையே முடிஞ்சு போச்சி. நீங்க ரெண்டு பேரும் எதுக்கு அடிச்சிக்கிறீங்க. விடுங்க” என்றுவிட்டுப் போனார்.

சூசென் பேருந்தினுள் வந்து கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை, போன வாரம் தன் வீட்டின் முன் தான் கூட்டிய கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்க சென்றிருந்த இந்தக் கூட்டத்தில், இரு தரப்பிலும் பேச ஆட்கள் இருந்தனர். ஒரு சாரார் சொல்வதை மற்றொருவர் மறுத்து பதில் பேசி வாதிட்டனர். ஆனால், போன வாரம் தான் சுப்புவின் மீது வீண் பழி போட்டபோது கூட்டத்தில் அத்தனை பேரும் ஒருதலைபட்சமாக தனக்காகவே வாதிட்டிருந்தனர் என்பதை சூசென் உணர்ந்தாள். மேரி பாதிரியாரிடம் சொன்னதுபோல, “நீ அப்டி பண்ணுனியா சுப்பு?” என்று அந்தக் கூட்டத்தில் ஒரு குரல் கூட எழுந்திருக்கவில்லை. கூட்டத்தை விடுத்தாலும் சுப்புவும் கூட தனக்காக வாதாடிக்கொள்ளாததேன் என்ற கேள்வி அவள் மனதில் தோன்றி அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. லெவல் கிராசிங்கில் நின்றிருந்த பெண்களும், அந்தப் பையன்களும் எப்படி  தங்களை நிரூபித்துக் கொள்ளத் துடித்தனர். தொண்டையே போய் விடுமளவிற்கு கத்தினர். சுப்பு அப்படிக் கத்தாமல் போனதேன்? அவர்களை விடுத்தாலும் தன்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டாள். பொய்யைத்தான் எவ்வளவு உரக்கச் சொன்னோம். ஆனால், சுப்பு உண்மையையேப்பேசத் தயங்கி நின்றதன் காரணத்தை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டாள். குதியுந்தைத் திரும்பத் தந்துவிட்டு கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு சுப்புவைக் காணத்தான் சூசென் பயணித்துக் கொண்டிருந்தாள். சுப்புவிடம் கேட்பதற்காக சூசென் இரண்டு விடயங்களை வைத்திருந்தாள்.

அதிலொன்றுதான் அவனின் மௌனத்திற்கான காரணம். அதை சூசென் தனக்காக இல்லாவிடினும் மேரிக்காக கேட்கவேண்டிய அவசியம் இருந்தது. அன்று குமார் சுப்புவை அடித்த பின், சுப்பு சூசெனைப் பார்க்க, அவள் பார்வையை விலக்கிக் கொண்டதும் குனிந்து சூசெனைக் கட்டியிருந்த மேரியைப் பார்த்திருந்தான். அந்தப் பார்வை அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சிந்திக்க வைத்திருக்கிறது. அந்தப் பார்வை அவளிடம் உண்மையை யாசித்ததாக அல்லவா அவள் உணர்ந்திருந்தாள். இந்தச் சிறிய வயதில் மேரியால் இப்படிச் சிந்திக்க முடிந்ததை எண்ணி சூசென் வியந்து கொண்டாள். மேரி உண்மையை சுப்புவுக்காக சொல்லாமல் விட்டதற்காக எவ்வளவு குற்றவுணர்ச்சியில் தள்ளப்பட்டிருக்கிறாள். ஒரு வாரமாக மனதிற்குள் தன் செயலுக்காக வருந்தியிருக்கிறாள். அதே மேரியின் மீதான சுப்புவின் பார்வையை சூசென் வேறு விதமாக நினைத்திருந்தாள். சுப்பு தான் உண்மையைச் சொன்னால் மேரியின் நிலை என்னாகும் என யோசித்திருக்க வேண்டும். அதனால் உண்மையைச் சொல்லாமல் பழியை ஏற்றுக் கொண்டு பணத்தையும் தியாகம் பண்ணி அகன்றிருக்க வேண்டும் என சூசென் நினைத்திருந்தாள். சூசென் நினைத்தது தான் சரியாக இருக்கவேண்டுமென்ற கட்டாயத்திலும் இருந்தாள். மேரி தன்னால் சுப்பு அண்ணா கேட்டபோது அவளால் உண்மையை சொல்லமுடியாமல் போனது குறித்து மிகவும் வருந்திக் கொண்டிருப்பது அவள் பாதிரி முன் மன்னிப்புக் கேட்டதிலிருந்து சூசெனுக்கு நன்றாகக் புரிந்திருந்தது. அவளிடம், சுப்புவின் பார்வை யாசகம் அல்ல; அது கருணைக்கான பார்வை எனச் சொல்லி அவளை அந்தக் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிப்பது தன் கடமை என்பதை சூசென் உணர்ந்திருந்தாள். அதனால் தான் சுப்புவிடம் முதலில் அவனின் மௌனத்திற்கான காரணத்தை கேட்க எண்ணியிருந்தாள். அந்தக் காரணம் தான் நினைத்ததாக இருக்கவேண்டுமென்பதிலும் உறுதியாகவிருந்தாள். இரண்டாவதாக சூசென் சுப்புவிடம் கேட்க எண்ணியிருந்த விடயம், ‘ மன்னிப்பு’, ‘பகிரங்கமான பாவ மன்னிப்பு…’

000

என் பெயர் சு.விஜய். வால்ராசாபாளையம் என்னைப் பெற்று  வளர்த்த ஊர். வால்ராசாபாளையம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சியில் உள்ளது. தற்போது தண்ணீர்பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறேன். நான் கணினிப் பொறியியல் பட்டதாரி. கோவையில்  ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *