ஷாராஜ், லீலா அம்மு மற்றும் பொள்ளாச்சி கவிஞர்களின் முகநூல் பதிவுகளால் மட்டுமே நான் அறிந்த கவிஞர் ஜே. மஞ்சுளா தேவியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘இரண்டு கிராம் யானை’.
கோவை ஞானி அவர்கள் மீதும், சிற்பி அவர்கள் மீதும் பெரிதும் மதிப்பு கொண்டவர். தலைமையாசிரியராக பணியாற்றுபவர் என்பதை அவரின் முகநூல் பதிவுகளால் அறிந்தேன். கவிதை, கட்டுரை, தொகுப்பு நூல் என பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். இரண்டு கிராம் யானை இவரின் பத்தொன்பதாவது நூல். சாகித்ய அகாதெமியின் ‘இலக்கியச் சிற்பிகள்’வரிசையில் கோவை ஞானி அவர்களைப் பற்றி எழுதியுள்ளார்.
நூல் என் கைக்கு வந்ததும் மரியாதை நிமித்தமாக அவரை அலைபேசியில் அழைத்து தகவல் சொன்னதும் அவர் சொன்னது “ஷாராஜின் ஓவியங்கள் பற்றி எழுதுங்கள். கவிதை அதற்கப்புறம்” என்றது ஆச்சரியம் அளித்ததுடன் ஷாராஜின் ஓவியங்கள் பரவலாக பேசப்பட வேண்டும் என்கிற அவரின் ஆர்வம் புரிந்தது.
*******
ஷாராஜுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலிருக்கும். சுகன் இதழில் தி. ஜானகிராமன் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் தி.ஜா.வின் மேற்கோளான ‘எழுத்து என்பது அடுத்தவன் மனைவியை புணர்வது மாதிரியான சுகம்’ என்னும் வாக்கியத்தைக் குறிப்பிட்டிருந்தார். நா. பா., மு. வ. எழுத்துகள் மீது பெரிதும் ஈடுபாடு கொண்ட எனக்கு அந்த வாக்கியம் ஏற்படுத்திய எரிச்சல் காரணமாக கடுமையான தொனியில் வாசகர் கடிதம் எழுதினேன். அதற்கு ஷாராஜின் பதில், திரும்ப அதற்கு என் எதிர்வினையென சில இதழ்களுக்கு தொடர்ந்தது. அப்போதைய என் புரிதல் அந்த அளவில்தான் இருந்தது. ஷாராஜ் மிகவும் இளையவராக இருந்தாலும் நிதானமாக, முதிர்ச்சியுடன் அவ் விசயத்தை அணுகினார்.
அப்போது ஓவியம் வரைவதில் ஆர்வம் மட்டுமே கொண்டிருந்த எனக்கு அது குறித்து அடிப்படை ஞானம் கூட இல்லை. அந் நிலையில் நவீன ஓவியங்களை வரைய முற்பட்டேன்! கன்னா பின்னாவென கிறுக்குவது, உருவங்களை விகாரமாக வரைவதே நவீன ஓவியம் என்று நினைத்துக் கொண்டிருந்ததுடன், துணிச்சலாக இதழ்களுக்கு அனுப்பவும் செய்தேன்! (அவை வெளியானது என்பது வேறு விசயம்) அப்போது எனக்கு கொஞ்சமேனும் தெளிவைத் தந்தது ஓவியம் குறித்து ஷாராஜ் சுகன் இதழிலும், சிறகு இதழிலும் எழுதிய கட்டுரைகள். கவிதைக்கு கரு போல, ஓவியத்திற்கும் கரு அடிப்படை என்பதை அந்தக் கட்டுரைகள் வழியாகவே உணர்ந்தேன். அவ் வகையில் ஷாராஜ் என் குரு.
ஷாராஜின் சிறப்பு கற்றுக்கொள்வதில் அவர் காட்டும் சிரத்தை. அதற்காக அவரின் தேடல், கடின உழைப்பு, தொடர் ஊக்கம் ஆச்சரியம் அளிப்பது என்றால் தன் மீதும், தன் படைப்பாற்றல் மீதும் அவருக்குள்ள வித்யா கர்வம் ரசிப்பிற்குரியது. அது மட்டுமின்றி எவ்வளவோ சிரமப்பட்டு தான் அறிந்துகொண்டவற்றை சற்றும் தயங்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருங்குணம் பாராட்டுக்குரியது.
*******
‘இரண்டு கிராம் யானை’ தன் பக்கங்களை ஷாராஜின் ஓவியங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. அறுபது யானைகளின் அணிவகுப்பு. காட்சிகளுக்கு சட்டென்று கண்களை ஈர்த்திடும் சக்தி உண்டு. ஓவியம் முந்தி கவிதை பிந்திவிடக் கூடாதென கவிதைகளை நூலின் வலப் புறம் வடிவமைத்த ஷாராஜின் முன் யோசனை.. கவிதைத் தொகுப்புகளை வாசிக்கையில் வாசிப்பவர் கவனம் வலப்பக்கம் குவியுமாம். ஒவ்வொரு விசயத்தையும் அவர் எவ்வளவு நுட்பமாக பார்க்கிறார் என்பதற்கு சான்று.
“தமிழ் இலக்கியம் எனும் அடர் வனம். அது ஆனை வனம்” என்றதுடன் எங்கெல்லாம் யானைகளின் பிளிறலோசை ஒலிக்கிறது என்பதை அணிந்துரையில் குறிப்பிட்ட ஐயா சிற்பி அந்த நீண்ட பாரம்பரியத்தில் இந்தத் தொகுப்பு மூலம் மஞ்சுளா தேவியும் இணைகிறார் என்பது உண்மை. நூற்றியொரு கவிதைகளடங்கிய இந்தத் தொகுப்பு முழுவதும் யானைகளின் பிளிறலோசை.
நூல்களை சேகரிப்பதிலும், அவற்றை வகைப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்ட கவிஞர் பொன். குமார் ஒரே பாடுபொருளைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளாக அவரிடம் உள்ளவை என எண்பத்தியொரு நூல்களை பட்டியலிட்டுள்ளார். சுவையான செய்தி என்னவென்றால் கோ. தமிழ்ச்செல்வனின் ‘முனகலாய்க் கேட்கும் பிளிறலோசை’ இரண்டு கிராம் யானை போலவே யானையை பாடுபொருளாக கொண்டது.
இரண்டு கிராம் யானை என்கிற தலைப்பைப் பார்த்ததும் எனக்குள் எழுந்த படிமம் சின்ன ஸ்டூலில் தன் பிரம்மாண்டமான உடலைக் குறுக்கி அமரும் சர்க்கஸ் யானை. டன் கணக்கில் எடையுள்ள யானையைக் கிராம் கணக்கில் குறிப்பிட்டதால் எழுந்த படிமம்.
*******
உலகம் மனித குலத்துக்கு மட்டுமானதல்ல, பல்லுயிர்களுக்கும் உரித்தானது என்பதை அடிக்கடி மறந்துவிடும் மனிதர்களுக்கு இயற்கை அவ்வப்போது பாடம் படிப்பித்தாலும், அதிலிருந்து படிப்பினை கற்றுக் கொள்வதில்லை. மறதிக்காரர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதைத்தான் கவிஞர் இந்தத் தொகுப்பில் செய்திருக்கிறார்.
வனக் காவலர்கள் என்று விளிக்கப்படும் யானைகள், அவற்றின் வாழ்வில் மனிதர்களின் தலையீடு எத்தகைய விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை இதிலுள்ள கவிதைகள் பேசுகின்றன. உணவுச் சங்கிலி, உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணியான யானை இனம் அடையும் பாதிப்பு அந்த இனத்திற்கு மட்டுமானதல்ல, ஈசனின் பிரம்படியை உயிரினங்கள் அனைத்தும் உணர்ந்தது போல மனித இனம் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன என்பதை சூழலியலாளர்கள் பலரும் சொன்னாலும் கண்டு கொள்வதில்லை.
உயிரினங்கள் அனைத்துமே ஒன்றையொன்றை சார்ந்தே இருக்கின்றன என்பதை,
“பாகன் யானைக்கு
சோறிடுகிறார்
யானை பாகனுக்கு
சோறிடுகிறது”
– கவிதை நறுக்கென சொல்கிறது.
அதையே ‘யானை என்பது வெறும் பெயரல்ல’ கவிதை விரிவாக சொல்கிறது.
“யானைத் தின்றது போக எமக்கு” என்றிருந்த தமிழ்ப் பண்பாடு, பழத்திற்குள் வெடி வைத்து தருவதாக பரிணமித்திருப்பதை என்னவென்பது. அதை யானையால் மட்டுமல்ல, ஈர மனம் கொண்ட எவராலும் நம்ப முடியாது.
இழப்பின் வலியை சொல்வதாக
“இன்று அப்பத்தாளும் இல்லை
ஆனையும் இல்லை
ஆறும் இல்லை”
“சொற்களில் பெருக்கெடுக்கிறது
வனமிழந்த யானையும்
வறண்ட காவிரியும்”
வரிகள், வலிக்கும் வரிகள்.
யானையைக் கட்டுண்டு இருக்கச் செய்யும் சங்கிலியின் கண்ணிகள் அச்சமும் பழக்கமும் என்கிறார் ஒரு கவிதையில். அது உண்மைதான் என்பது உறுதியானது, யானை ஒன்று, தன் கால்களைப் பிணைக்க சங்கிலியை பாகனுக்கு எடுத்து தரும் காணொளியைக் கண்ட பொழுது.
அழகியல், அரசியல், சூழலியல், பெண்ணியம் என்றெல்லாம் அணுக வாய்ப்பளிக்கும் கவிதைகள்.
“யானைப் பாகன் இருக்கிறார்கள்
யானைப் பாகி இருக்கிறார்களா? “
“யானை இறந்தால்
ஆயிரம் பொன்.. யாருக்கு?
“ஒரு யானை முன் நிற்கும் போது
தெரிகிறது
மனிதன் எத்தனை சிறியவன்”
“அம்மாவின் அருகே
ஒரு பக்கம் சாய்ந்து இமைமூடி
படுத்துறங்கும் குட்டி யானை
காடு எழுதிப் பார்த்த கவிதை”
‘மஞ்சுளா தேவியின் கவிதைகளுக்கு விளக்கச் சித்திரமாக இன்றி, எனது தன்னிச்சைப்படி யானைகளை வரைந்து கொடுப்பதே எனது உத்தேசம்’
ஷாராஜின் உத்தேசத்தைத் தாண்டி சில கவிதைகளுக்கு அருமையாக பொருந்திவிட்டன சில ஓவியங்கள்.
*******
கவிதை போலவே ஓவியமும் தனித்தன்மை வாய்ந்த படைப்பு. கவிதையை படித்து உணர்கிறோம். ஓவியத்தை பார்த்து உணர்கிறோம். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு ஓவியங்களாக பார்த்து முடித்தபோது ஒரு சில ஓவியங்கள் சட்டென தம்மை வெளிப்படுத்திக்கொள்வதாகவும், ஒரு சில கொஞ்சம் மெனக்கெடல் கோருவதாகவும், சில புரிந்து கொள்ள முடியாமலிருப்பதாகவும் உணர்ந்தேன். கவிதை புரியவில்லை என்று சொல்கையில் பயிற்சி தேவை என்று சொல்வது போலவே, ஓவியங்களை அவற்றின் உட்பொருளை உணரவும் பயிற்சி தேவை.
இயல்பற்ற தும்பிக்கை உடைய யானை ஓவியம் அதன் இயல்பான வனச் சூழலிலிருந்து விலக்கப்பட்டு, கோயில்களிலும், சர்க்கஸ் கூடாரங்களிலும், உயிர்க் காட்சி சாலைகளிலும் இருப்பதை உணர்த்துவதாகத் தோன்றியது. பிரம்மாண்டமான யானையை அண்ணாந்து பார்க்கும் பாகன் இயற்கையின் முன் மனிதன் எத்தனை சிறியவன் என்று சொல்வதாக உணர்ந்தேன்.
திருநீறு தரித்த, நாமம் தீற்றப்பட்ட இரண்டு யானைகள் அன்புடன் தும்பிக்கைகளை பிணைத்துக்கொண்டு இருப்பது, மதத்தின் பேரால் பிரிவினைகளை கற்பிப்பது மனிதர்கள் குணம் என்று கூறுவது போல காட்சியளிக்கின்றன. இரண்டு யானைகளுக்கும் தந்தங்கள் இல்லை. பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது என்பதையும், பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறது.
சில ஓவியங்களில் உள்ள யானைகளுக்கு வரையப்பட்ட தாமரை மலர், சூரியன், சந்திரன் குறியீடுகளாக கொண்டு பார்க்கலாம். தாமரை மலர் புனிதமானதாகவும், தூய்மை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்லப்படுகிறது. இந்து மதக் கடவுளர்கள் தாமரை மலரில் அமர்ந்திருப்பவர்கள். சூரியன் சக்தி, ஒளி, வெம்மை, ஆற்றலை உணர்த்துவது. யானை வலிமை, அறிவுத் திறன், அதிர்ஷ்டத்திற்கும் அடையாளப்படுத்தப்படுபவை. இன்றும் தாய்வழிச் சமூக அமைப்பை பேணுபவை.
தாந்ரீக வழிபாட்டில் சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உண்டு. தாந்ரீக ஓவியராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஷாராஜ், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள், வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் குறித்து ஆழ்ந்த தேடல், அதனால் பெற்ற தெளிவு இத்தகைய ஓவியங்களில் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன்.
என்னால் பொருள் யூகிக்க முடியாது தடுமாறிய ஓவியங்கள் முகப்பு யானையும், உள்ளே உள்ள யானை ஒன்றும். இரண்டுக்கும் ஏழு தும்பிக்கைகள் உள்ளன. ஷாராஜ் வரைந்த விநாயகர் ஓவியம் ஒன்றில் ஐந்து தும்பிக்கைகள் இருக்கும். பிள்ளையாரின் நான்கு கரங்களையும் தும்பிக்கைகளாக உருவகித்து, வழக்கமான தும்பிக்கையுடன் ஐந்து யானை பலமாக குறிப்பிட்டிருப்பார். அப்படி ஏதேனும் இருக்குமோ அல்லது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள மல்லர் கம்பம் சிற்பத்தை கவிஞர் இந்திரன் மனிதனின் அசைவை நிலையாக இருக்கும் பாறை சிற்பத்தில் படைத்த தமிழ் அழகியல் என்று வியந்திருப்பார். அப்படி தும்பிக்கையின் அசைவை வரைந்திருப்பாரோ என்று தோன்றியது.
“நவீன ஓவியம் வரைவது எளிது. அதற்கு விளக்கமளிப்பது கடினம்” எப்போதோ படித்த நினைவு.
*******
தொகுப்பின் இறுதியில் உள்ள ஷாராஜின் எட்டு பக்க பின்னுரையில் ஓவியத்தின் மீதான அவரின் காதல், அவரின் எதிர்காலத் திட்டம், நட்ப பேணும் பண்பு, தொகுப்பு உருவான காலத்தில் பெற்ற அனுபவம் என விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கனவு பலிக்க வாழ்த்துகள்.
ஒரே பாடுபொருளைக் கொண்டிருந்தால் கூறியது கூறலாகவோ நீர்த்து போனது போன்ற உணர்வையோ தோற்றுவிக்கலாம். ஆனால் இன்னும் பல கவிதைகளைக் குறிப்பிடலாம் என்று எண்ணும்படி தெறிப்பான வரிகள் கொண்ட தொகுப்பு. வாசிப்பவர்கள் யானையுடனான தமது அனுபவங்களை அசைபோடத் தூண்டும் தொகுப்பு.கவிஞருக்கு வாழ்த்துகள்.
*******
நூல்: இரண்டு கிராம் யானை (கவிதைகள்)
ஆசிரியர்: ஜே.மஞ்சுளாதேவி
வெளியீடு: ஸீரோ டிகிரி பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 140
விலை: ரூ.180
சக்தி அருளானந்தம்
இயற்பெயர் அருள்மொழி. 1961-ல் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் பிறந்தவர். குறிஞ்சியிலிருந்து மருதத்திற்கு இடம்பெயர்ந்த குழந்தைப் பருவம் இவருடையது. தஞ்சையில் சிறிது காலம் வசித்துவிட்டுத் திரும்பியவர், தற்போது நிரந்தரமாக சேலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தொழில்: வீட்டுப் பயன்பாடு மின் சாதனங்கள் பழுது நீக்குதல்.
தொண்ணூறுகளிலிருந்து இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது முதன்மைக் களம் கவிதை. சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஓவியம் வரைவதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு. அவ்வப்போது முகநூலில் நூல் விமர்சனங்களும் எழுதுவார்.
வெளியான நூல்கள்:
· இருண்மையிலிருந்து (2003) – சரஸ்வதி பதிப்பகம்
· பறவைகள் புறக்கணித்த நகரம் (2007) – இருவாட்சி பதிப்பகம்
· தொடுவானமற்ற கடல் (2017) – இருவாட்சி பதிப்பகம்
· இனியாவின் இளஞ்சிவப்பு வானம் (2019) – வசந்தா பதிப்பகம்
· கல் பூக்கும் காலம் (2023) – வசந்தா பதிப்பகம்