அவசர அவசரமாய்

சிலுவை பற்றிய கவிதையொன்றை

கேட்கிறாய்,

கொஞ்ச நேரம் காத்திரு…

நேசித்தவர்களால்

என் கைகளில் அறையப்பட்ட

ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!

***

காசில்லாத போது கேட்கப்படுகிறது

கொடுத்த கடன்,

பசியில்லாத போது தரப்படுகிறது உணவு,

சோர்ந்து போன நேரங்களில்

திணிக்கப்படுகிறது,

கடினமான வேலை,

அவநம்பிக்கையில் வாழும்

போது நிகழ்கிறது துரோகம்,

நம்மை நமக்கே பிடிக்காத

போது

செலுத்தப்படுகிறது புது புது

குற்றம்,

கையில் குடையில்லாத போது

ஓயாமல் பெய்கிறது மழை,

ஆறுதல் தேடி அலைகின்ற போது,

அழுகின்றது பச்சிளம் குழந்தை,

கையிருப்பு குறைவாகயிருக்கும் போது

அதிகரித்திருக்கிறது விலைவாசி,

இன்றோ நாளையோயென உயிருக்கு

போராடிக்கொண்டிருக்கும் போது நிகழ்கிறது…

இயற்கைச் சீற்றம்,

எப்படி இக்கவிதையை முடிப்பதென

திணறிக்கொண்டிருக்கும் போது தொடர்கிறது …

பேனாவின் மௌனம்!

***

நீண்டதூரம் நடக்கக்கூடாது

வெயிலில் அலையக்கூடாது

என்ற மருத்துவரின்

அறிவுரைகளை காற்றில்

பறக்கவிட்டு விட்டு

ஆட்டோக்காரன் கேட்ட தொகை

அதிகமென வெயிலில்

நடந்து வரும் அப்பாவின்

கைகளில்

பிள்ளைகளுக்கான தின்பண்டம்!

***

காலொடிந்த

பறவையொன்றை

வீட்டுக்கு அழைத்து வந்தேன்

அழகாகயில்லையென்கிறாள்

மனைவி,

அருவருப்பாயிருக்கிறதென்கிறான்

மூத்தமகன்,

ஓடி ஒளிந்து கொள்கிறான்

இளையமகன்

வாங்கிய இடத்திலே  கொடுத்திடுங்களென்கிறாள்

மகள்,

சார் உங்களுக்கு இது எதுக்கும் பயன்படாதென்கிறாள் வேலைக்காரி,

தேவையில்லாத வேலை உனக்கெதுக்கென்கிறார் அப்பா,

அவசர அவசரமாய்

என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு

காயத்திற்கு மருந்தை தேடிக்கொண்டிருக்கிறாள்…அம்மா!

***

**

என் மீதான கோபத்தில்

கையில் கிடைத்த

பொருட்களை எல்லாம் வீசிக்கொண்டிருக்கிறாய்…

வீசிய

பொருட்களையெல்லாம்,

உன் அருகிலேயே

மீண்டும் மீண்டும் எடுத்து

வைத்துக்கொண்டிருக்கிறது…

என் காதல்!

***

மழையில் நனைவது

பிடிக்கும்

வானவில்லை பிடிக்கும்

சுற்றி வரும்

வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்,

அதிகாலையில் புல்லின் மீது

அமர்ந்திருக்கும்

பனித்துளியைப் பிடிக்குமென,

எழுதிய கவிதையை

கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்…

கணவனுக்கு பிடிக்காதென!

**

அப்பாவின் அவசர வேலை

தடைபட்டிருந்தது,

அம்மாவின் வீட்டு வேலைகள்

தேடலாகியிருந்தது,

தாத்தாவின் கையிலிருந்த

நாளிதழ் நான்காகியிருந்தது,

பாட்டியின் பக்தி

திசைமாறிக்கொண்டிருந்தது,

யாராவது குழந்தையின்

தொலைந்து போன டெடிபியரை

கண்டுபிடித்து கொடுங்களேன்!

**

**

திரையில்

கொலைகளை சாதாரணமாய் செய்பவன்

ஒரு எறும்பை தெரியாமல்

மிதித்ததற்கு

வருந்திக்கொண்டிருக்கிறான்…

திரையில் மக்களுக்கு

கோடி கோடியாய்

அள்ளிக் கொடுத்தவன் பசிக்குதென கையேந்திய சிறுமியை

கண்டும் காணாமல் கடக்கிறான்,

ஒவ்வொரு மேடைகளிலும்

கடவுளில்லையென பேசிக்கொண்டேயிருப்பவன்

தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நாளில் காக்கச் சொல்லி கடவுளிடம்,

மனமுருகி

பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறான்,

நேர்மை நேர்மையென பேசிக்கொண்டிருந்தவன்

இலஞ்சப் பணத்தை கையில் கொடுக்காமல் கூகுள் பே’ யில்

அனுப்பி வைக்குமாறு சைகை செய்கிறான்,

நிமிடத்திற்கு நிமிடம்

நிறமாற்றிக் கொள்ளும் உலகத்தில்

பல ஆண்டுகளாய்

யாரோ ஒருவருக்கு கொடுத்த

வாக்குறுதிக்காய் இன்னும்

ஒரு ரூபாய்க்கு

இட்லி விற்றுக்கொண்டிருக்கிறாள் பாட்டியொருத்தி!

***

எதுவுமே

தெரியாமலிருந்த

என்னை

கவிஞனாக்கிவிட்டு,

எல்லாம் தெரிந்த நீ

கவிதையாகி விட்டாய்!

***

ஏதேதோ செய்கிறது…

மரம் வெட்டுபவனை

குயில்பாட்டு!

***

அவசர அவசரமாய்

மேய்ந்து கொண்டிருக்கிறது …

மரணத்தை,

சற்று நேரத்தில்

பலி கொடுக்கப்படவிருக்கும் ஆடு!

**

உன் கவிதையில் வந்த

தேவதையும்

என் கதையில் வந்த தேவதையும்

ஒரு நாள்

சந்தித்துக்கொண்டார்கள்…

என்ன பேசிக்கொண்டார்களென அறிய

ஒரு கவிதையோ கதையோ

இப்போது

எழுத வேண்டியதாகயிருக்கிறது!

**

மு.முபாரக்

தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவரான இவர் கூட்டுறவு வங்கி செயலாளராக திருச்சியில் பணி புரிகிறார். விகடனிலிருந்து கணையாழி வரை பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார். ஆ காட்டு என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது. பல்வேறு சிறப்பு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *