வைகறைப் பொழுதின்  வருத்த மனம்.

விடிவதற்கு முன்பான

கைபேசி அழைப்பில்

விழித்தபோது

நானொன்று நினைத்தேன்.

என்

மனைவியொன்று

நினைத்தார்.

என்

மகனொன்று

நினைத்தான்.

என்

மகள்

கனவிலடிப்பதாக

கண்கள் மூடியபடி

கைகளால் துழாவினார்.

ஏனோ

எவரும்

அது அவசரத்திற்கான

அழைப்பில்லையென

நினைக்கவே இல்லை.

எங்கள் வீட்டு

பௌசியா பூனையும்

எட்டிப்பார்த்தது

அது

என்ன நினைத்ததென்றுதான்

இன்றுவரை

எனக்குத் தெரியவில்லை.

****

ஆம்களின் வதை.

கொத்தித் தின்றது

கோழியாகத்தான்

இருக்கவேண்டுமா.

பாய்ந்து குரவலை

நெறித்து

குருதி குடித்தது

புலியாகத்தான்

இருக்க வேண்டுமா.

அரித்து சிதைத்தது

கரையானாக்கதான்

இருக்கவேண்டுமா.

நம்பிக்கை கூட்டி

ஊளையிட்டது

நரியாகத்தான்

இருக்கவேண்டுமா.

நன்றியாக வாலை

ஆட்டியது

நாயாகத்தான்

இருக்க வேண்டுமா.

நடு வீட்டிற்குள்

புகுந்து

நம்மையும்

நம் சொத்தையும்

பாதுகாக்கிறேனென்பது

நாடாளும்

அரசாகத்தான்

இருக்கவேண்டுமா.

இல்லையெனில்

நீ

நம்மவன்.

ஆமெனில்

நீயேயென்

பகைவன்

நீயே

நான் கொன்றழிக்கும்

இலக்கு.

***

பிரவாகப் பேரதிசயம்.

நேசித்தப் பக்கங்களின்

வாசிப்பில்

வசம் இழந்தபோது

கிறங்கி

இட்டுச் சென்ற

தூக்கம்

சொர்க்கமாகத்தான்

இருந்தது

உன்னோடு

சுற்றித் திரிந்ததால்.

,

துரத்தியதில்

துள்ளி ஓடிய

சிணுங்களில்

சிராய்ப்புகளற்ற

சாகசமாக

தடுக்கி விழுந்ததென்னவோ

நீதான்.

,

அதிர்ச்சியில்

தடுமாறி

எழுந்துவிட்ட

எனக்கெப்படி

கண்ணிக் கிடக்கிறது காலென்பதுதான்

இக் கணம் வரை

விளங்கவே இல்லை

வலிக்காது மேவிய

வாஞ்சையில்.

***

ஆயாசப்பொழுதின் கொள்முதல்.

நேர விரயத்தில்

காத்திருந்ததைத் தவிர

கைவரப்பெறவில்லை எதுவும்

எப் பிரயத்தணத்திலும்.

,

வலு கூட்டி

வீசிய வலையை

இழுத்துச் சோர்ந்தபோது

எஞ்சியது

கலைப்பைத் தவிர

வேறில்லை

கட்டு மரமாக ஆடி.

,

தூண்டிலின்

தக்கையசைவில்

சிக்கிவிட்டதென

நம்பியதும்

பொய்த்துப் போனது

சுய கழிவிரக்கத்தில்

நிராசைகளாக்கி.

,

பகலைத் தின்னக் கொடுத்த

அலுப்பில்

இரவெல்லாம்

வழிகிறது

கண்ணீர்

தாகம் தணிக்கச்சொல்லி

இப்பெருங்கடலில்.

,

காத்திரமான

கவிதையொன்றை

எழுதிவிட

எனக்கு மட்டும்

ஏனோ

சிக்கவில்லை

எந்த

வார்த்தையும்

நிறைந்திருக்கும்

மௌனத்தில்

மிதப்பதைத் தவிர.

***

கற்றலும் நன்று.

குட்டியாக

இருந்தபோது

தூக்கியதில்லை.

,

குதித்தலையும்போது

உணவிட்டதும்

இல்லை.

,

எட்டி நின்று

என்னைப் பார்க்கும்போது

எப்பொழுதும்

நான்

பார்த்ததுமில்லை.

,

என்னதான்

தேவையிருக்கிறது

இரவு வேலை முடித்து

பகலில் தூங்கிறவனின்

காலடியில்

படுத்துறங்கும்

இந்தப்

பூனைக்கென

ஒவ்வொரு

முறையும்

கேட்கின்றேன்

பரிவுகள் கொண்டு.

,

மியாவ்

மியாவ்

மியாவ்

என்கிறது

விடாமல்

என்னை நோக்கி.

,

கத்திப்

பார்த்துவிட்டேன்

அதைப்போலவே

எல்லா விதமாகவும்

கற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மியாவ்வை மட்டும்

மியாவ்வென

புரியுமாறு.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *