வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப்  பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின் மூளையைக் கரைத்து நீராவியாக்கி தன்வசம் உறிஞ்சிக்கொள்வது போல கதிரவன் அனல்களைக் கக்கிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவிறுக்க அக்கம் பக்கம் பங்காளி முறைக்காரர்கள் எல்லாரது வீடுகளிலும் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாமியானா பந்தல் போடுபவனுக்கு இந்தச் சமயத்தில் கிராய்க்கி ஜாஸ்த்தி. “கட்டுப்படி ஆகாதுங்கண்ணோவ், இந்த ரேட்டுனா பண்ணிக்கலாமுங்க” என்று கிராய்க்கு பண்ணுவார்கள். எப்படியும் முப்பதிற்கும்  மேற்பட்ட பங்காளி வகையராக்கள் வீடுகளிலும், காட்டு கொட்டாய்களிலும் சாமியானா பந்தல்களும் அதற்குப் போட்டியாக தென்னங்கீற்று பந்தல்களும், சீரியல் லைட்டுகளும் திருவிழாவின் பிரம்மாண்டத்தைக் கண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தன. ஆம்பளை ஆட்கள் தலையில் துண்டையும், பொம்பளை ஆட்கள் முந்தானையை முக்காடாகவும் வெயிலின் வெப்பத் ததும்பல்களைத் தாங்க முடியாமல் தலையில் போட்டுக்கொண்டு தார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர் சேந்தமங்கலத்தின்  ஒரு கிராமத்தை நோக்கி.

மொட்டை வெயிலென்றும் பார்க்காமல் உறவுக்காரர்களைப் பார்க்க, தனக்காக அவ்வளவு தூரம் வந்து அழைத்ததற்கு மரியாதை செலுத்த, பங்கு பங்காளிகளின் அழைப்பை ஏற்காமால் போனால் உறவில் பிசகு ஏற்படுவதைத் தடுக்க, மாமன் மச்சான்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து அவர்களை கௌரவிக்க, பொண்ணுக் கொடுத்த வீட்டிற்கு சம்பந்திங்களும், தங்கையை அக்காளை கட்டிக் கொடுத்த வீட்டிற்கு அண்ணன்களும் தம்பிகளும் சீர் செய்ய, நண்பனின் அழைப்பை ஏற்காமல் போனால் தங்களுக்காக வாங்கி வைத்த குவாட்டர் வீணாகிவிடுமே என்ற கவலையின் காரணமாக, அத்தைப் பெண்ணை வம்பிழுக்க, எப்பொழுதோ பார்த்த மாமன் மகனை ஆசை ஆசையாய்ப் பார்க்க, கொழுந்தியாளின் அன்பான அழைப்பிற்காக, நங்கையா கூப்பிட்டுப் போகவில்லை என்றால் முகத்தினை சுழித்துக் கொள்வாள் என்பதற்காக, பேரன்களையும், பேத்திகளையும் கண்டு ஆரத் தழுவுவதற்காக முக்கு ரோட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர் பலர்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை சாமி செய்து கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்கிற மாதிரி பஸ் ஏறி, பஸ் இல்லா ஊருக்கு நடையோ நடவென்று நடந்து ஒரு சொந்தக்காரர்கள் விடாமல் அனைவரிடமும்  “தெவத்துக்கு வந்தரணும் கண்டிப்பா, அல்லாரு வந்தரணு, நம்ம ஊட்டுக்குத்தான் மொதல்ல வரோணும்” என்று நான்கைந்து அழைப்புகள் ஒரு ஊரிலிருந்து வந்துவிடுவதன் பொருட்டு நம்ம வீட்டில்தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துவிட்டு வருவார்கள். கல்யாணவிழா தோற்றுப்போகும். சாமி செய்து கிடா விருந்து வைத்து, சம்பந்தி வீட்டாரிடம் சீர் வாங்குவதில் இருபத்தைந்து முதல் அறுபது வரை உள்ள மாப்பிள்ளைமார்களுக்கு அப்படி ஒரு பெருமிதம். சீர் செய்யவில்லை என்றாலும் என் மாமனார், என் மச்சான், என்று முன் வந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறைந்தபட்சம் தேங்காய் பழத்தடட்டாவது சீராக எடுத்துக்கொண்டு முன்வந்து நிற்கவேண்டும் மரியாதை செய்ய. அதற்கும் பங்கம் வந்துவிட்டால் பிணக்கு ஏற்பட்டுவிடும் உறவுகளில்.

சின்னசாமியும் அவரின் அண்ணன் பையனும்  நேற்று இரவு பஸ்ஸை பிடித்து வந்து சேருவதற்கும் பூஜை முடிந்து கிடா வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. அக்காள் கணவரின் குணம் தெரிந்தே சின்னசாமி “ராத்திரியே நாம போய்டலாம்” என்று கல்லூரி முடித்துவிட்டு வேலைத் தேடி கொண்டிருக்கும் தனது அண்ணன் மகன் ‘அருளை’ அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வந்தார். ஒரு வெள்ளை வேட்டி,வெள்ளைத் துண்டு, தேங்காய் பழம் பூ என்று தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார் சின்னசாமி. இரவின் சீரியல் செட் வெளிச்சத்திலும் அக்காள் கணவரின் முகம் கருத்தது. பணமில்லா இடத்தில் மனிதர்களின் பிரியம் வற்றி வரக் கிணறாகத்தான் இருக்கும் என்பதற்கு அவரது நடவடிக்கைகள் ஒரு சாட்சி. அங்குதான் அலட்சியம் அதிகமாகி குப்பைகள் மட்டுமே கொட்டப்படும். ‘வாங்க’ என்று  ஒரு வாய் கூப்பிடவில்லை அக்காள் கணவர். மாமான் ‘பொங்கப் பொங்க’ சீர்வரிசை கொண்டு வந்திருக்க வேண்டும், ஒரு நாள் முன்னாடி வந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார். மனிதனின் எதிர்பார்புகளை, கிடாய்களைக் காணிக்கையாகப் பெறும் அந்தக் கடவுளாளையே சரிவர நிறைவேற்ற முடியாது. சாமாணியனால் எப்படி நிறைவேற்ற முடியும்?

“ஊட்டுல ரண்டு பேரும் வரலையா” மரகதம் அக்காள் கேட்க.

“எங்க கடைய எடுத்து வச்சிட்டு இந்நேரத்துக்கு பொறப்பட வச்சி கூட்டியார நேரமாயிடும், அதான் நானும் அருளும் ஓடியாந்தோம், காத்தால நேரமே வரச்சொல்லியிருக்கேன்” சின்னசாமி பதிலளித்து விட்டு அருளைப் பார்த்தார்.

“உங்கப்பன் என்ன பன்றான், வரமாட்டானே மினிஸ்டரு” என்றாள்.

அவ்வளவு நேரம் இருக்கமாக இருந்த அருளின் முகம் அத்தையின் முகத்தைப் பார்த்ததும், அவள் வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்ததும் கொஞ்சம் தளர்வு பெற்று சிரித்தது. மாமன் எவ்வளவு அலட்சியம் அவமரியாதை பண்ணினாலும் அத்தை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று நினைத்தே எதையும் பெறுத்துக்கொள்வான். அத்தையிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பற்றற்று பற்றுதலாய் இருப்பான்.

சின்னசாமியின் அண்ணன் பெரியசாமிக்கு மாமனை அறவே பிடிக்காது, இது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுவார். தாமரை இலையும் தண்ணீருமாய் இருப்பார். அவரின் குணம் அறிந்தே அத்தை  பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைத் தெரிந்த யாருக்கும் தவறாக எடுத்துக்கெள்ள மனம் இராது. இப்படி சொந்தங்கள் கூடி கொண்டாடும் நிகழ்ச்சியை பெரியசாமி தவிர்ப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பொருளாதார நிலையை வைத்து ஏளனங்கள் எக்காளமிடும். புத்திமதிகள் நாலாபுறமும் அம்புகளாய் வந்து குத்திக் கிழிக்கும். அலட்சியம், அசட்டை எலக்காரம் என எல்லா வகைகளிலும் தன்மானத்தை சீண்டிய வண்ணமே மாமன் மச்சினன் வீடுகளில் நடக்கும். பெரியசாமியைத் தவிர குடும்பத்தில் மற்றவர்கள் இவற்றை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தியவண்ணம் பொறுமையாக இருப்பார்கள்.

“இந்தா புடிங்க ஆளுக்கு அர பவுனு எடுத்து வைங்க, நல்ல நாளு அதுவுமா முனுமுனுத்துட்டே இருப்பான் அந்தாளு கருமம்” என்று சின்னசாமியிடம் பணத்தைத் திணித்தாள், மரகதம் போனமுறை வீட்டின் கிரகபிரவேஷம் விஷேசத்திற்கு சீர் செய்வதற்காக.

“மிச்ச காசுல ரெண்டு பேரையும் நல்ல சேலையா எடுத்துக்க சொல்லு” என்று தம்பி மனைவிகளின் மீது பச்சாதாபம் பட்டாள். அவ்வளவு நெருக்கம் காட்டுவாள் பெற்ற வீட்டாரிடம் மரகதம். அவளுக்காகவே அவமரியாதைகளைப்  பொறுத்துப் பொறுத்து அதுவே கட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் போலாயிற்று.

பெரியசாமி, சின்னசாமி மற்றும்  மரகதம் செங்கோட்டு வேலவர் குடியிருக்கும் ஊரில் பிறந்தவர்கள். மலை அடிவாரத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் பூக்கடை நடத்தி வயிற்றைக் கழுவி வருகிறார்கள். பெரியசாமியின் மனைவி அடிவாரத்தில் பழக்கடை வைத்திருக்கிறாள். விஷேச நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் வெறுங்கைதான் முழம் போடும். எல்லா நாட்களுமே விஷேச நாட்களாக இருந்துவிடாதா என்பது இவர்கள் போன்ற அடிமட்ட வியாபாரிகளின் ஏக்கம். பெரியசாமிக்கு டிரைவர் வேலை. தத்தளிக்கும் கடலில் மரக்கலம் அங்கலாடுவது போல இவர்களது வாழ்க்கையும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

“நானும் போய் பொண்ணெடுத்துருக்கறன் பாரு, எல்லாரு ஊட்டுலயும் பாரு சம்பந்தி ஊட்டாருங்க என்னென்ன மொற செய்யறாங்க, இங்க ஒரு சீலத்துணிக்குக் கூட நா காங்கமாட்டிக்கறன்” என்று கெடாவெட்டின் போது அவ்வளவு கூட்டத்திலும் பொறு பொறுவென்றிருந்தார் மாமன்காரன். மரகதம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாள் “என்னத்தையாவது ஒளரிக்கிட்டு இரு” என்று அவரை அசட்டையாகக் கையாளுவாள்.

கிடா வெட்டு முடிந்து இரவு கூறுபோடும் வேலைகள் நடந்த வண்ணம் இருந்தது.

சின்னசாமியும் அருளும் அதில் பங்கு கொண்டனர். சின்னசாமி குடலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அலசோ அலசோவென அலசி சுத்தப்படுத்தி பாங்கு செய்து கொண்டிருந்தார். அருள், சித்தப்பா சொல்லும் வேலைகளைச் செய்த வண்ணம் உதவியாய் இருந்தான்.

“என்னா உந்தம்பி ஊட்டுகாரிகள காணம்”

“ஆமா காணம், வேல வெட்டி இல்ல பாரு, காத்தால வந்துருவாங்க”

“அதென்ன காத்தால, வந்து கூடமாட வேல செஞ்சாதான ஆவும் போவும்”

“சின்னசாமி புள்ளைக்கு தெரட்டி வச்சாங்களே, அப்ப என்ன பண்ண நீயி வேணும்னே லேட்டு பண்ணி லேட்டு பண்ணிதான கூட்டிப்போன, நீ போயி கூடமாட வேல செஞ்சியா இல்ல என்னதான் செய்யவுட்டியா”

“நானென்னத்துக்கு வேல செய்யோனு, மொய்யி மட்டு இருவதாயிரம் வச்சன், அவ்ளோ மொய்யி ஆரு வச்சாங்க”

“இருவதாயரம் மொய்ய வச்சிட்டு அத நாப்பதாயர தடவ சொல்லி காமிச்சுப்புட்ட, ஊரெல்லாம் சிரிக்குது”

“ஆமா சொல்லோணும், சேந்தமங்கலத்துக்காரனோட அரும தெரியவாண்டாமா?”

“சோத்தாங்கையி கொடுக்கறது நொட்டாங்கைக்கு தெரிய கூடாது, இப்படி நீயே போய் பீத்திகரத போய் அரும எருமனு பெனாத்திக்கிட்டு இரு”

“ஏ உங்கப்பன் செத்தப்ப காரிய செலவுக்கு தடுமாறிட்டு இருக்கும் போது, நாந்தான கொடுத்தேன், நா மட்டும் கொடுக்கலனா அன்னிக்கி பொணத்தோட சேந்து எழவு ஊடு நாறிப்போயிருக்கும்”

“எங்கடா இத சொல்லலியேனு பாத்தேன், இப்புடி கொடுத்துப்புட்டு அவிங்கள அசிங்கப்படுத்துறதுக்கு நீ கொடுக்காமலே இருந்திருக்கலாம், அப்படி எழவெடுக்க கூட நாதியில்லாம போய்டல அங்க, பெரும மசுருக்கு நீயே கொண்டோயி நீட்டிட்டு, வியாக்கானம் பேசுறியா, இந்த லச்சணத்துல ஊருல நியாயம் பேசுற பெரிய மனுசன். உன் நாயத்துல கொண்டோயி பொட்ட நாய உடு” என்றாள் மரகதம் கோவமாக.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று, அவளின் பதில்களுக்குப் பதிலடி கொடுப்பது அவரது நோக்கமல்ல. அவள் வீட்டாரை மட்டம் தட்டியாயிற்று. மரகதத்தை வெறுப்பேற்றியாயிற்று. அது போதும் அவள் திரும்ப பேசியதைப் பற்றிக் கவலையேதும் இல்லை அவருக்கு. அவ்விடம் விட்டு நகர்ந்து சமையல் வேலைகளைப் பார்க்க சென்றார்.

இரவு முதல் இப்பொழுது விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை அனைவரிடமும் நன்றாக குசலம் விசாரித்தார். முகம் மலர்ந்து வரவேற்றார். விழுந்து விழுந்து உபசரித்தார் மச்சினனையும், மச்சினன் பையனையும் தவிர.

சின்னசாமியின் மனைவி மற்றும் மகளும், பெரியசாமியின் மனைவியும் வேகாத வெயிலில் செருப்பு தேயத் தேய நடந்து வந்து கொண்டிருந்தனர். பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீர் பத்தவில்லை. பேருந்தை உருட்டி எடுத்துவிட்டான். பேருந்து பாதி வழியில் வந்துகொண்டிருந்த போதே தண்ணீர் தீர்ந்துவிட்டது. தண்ணீர் தாகம், பாட்டிலில் உள்ள கடைசி சொட்டினை உறியும்படி இருந்தது.

வரும்பொழுதே ஊரின் அனைத்து வீட்டுக்கும் வரும் விருந்தினர்களைக் காண நேர்ந்தது. அவர்களுடன் ரெண்டு வார்த்தை கலந்துகொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் மேலும் இரண்டு வீடுகளில் அழைப்பு இருந்தது.

“வா செத்த நேரம் உக்கோரு” என்று பெரியசாமியின் மனைவி சொல்ல சாலையின் ஒரு வேப்பமர அடியில் சிறிய கல்லுக்கட்டு இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.

“மதிய நேரத்துக்கு இங்கேயே அல்லாரும் சாப்புட்டுருவம். மரகதக்கா ஊட்டுக்காரரு அவ்வளவுதான் பேசியே கொன்னுருவாரு அல்லாரும் சாப்படாம போனா. இங்க தின்னுட்டு பொழுதோடயா போயி ஆளுக்கொரு ஊட்ல தலைய காட்டிட்டு கொஞ்சமா சாப்புட்டு  வந்துருவோம்” பெரியசாமியின் மனைவி அவரின் குணமறிந்து கூறினாள்.

அந்த வேப்பமரம் வெக்கையைக் கொஞ்சம் தணித்து, லேசாக காற்றினை கொடுக்க அது அவர்களின் வியர்வையை ஆவியாக்கி குளிர்காற்றாய் உடல்களைத் தழுவியது. சின்னசாமியின் பெண்  துவண்டு போய்விட்டாள். அங்கேயே அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள். அவளின் விலகிய தாவணியைச் சரிசெய்துவிட்டாள் அவளின் அம்மா. மூவருக்கும் அங்கேயே அப்படியே தூங்கிவிடலாம் போலிருந்தது.

“என்னா பூக்காரமூடும், பழக்காரமூடும், களச்சி போயிட்டிங்களாட்டம். வாங்க வாங்க கறி தீந்துபோயிட போவுது, பந்திக்கு முந்தரதில்லியா” என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு விருந்திற்கு மக்கள் நடந்து போய்கொண்டும், ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொண்டும் இருந்தனர்.

“இப்பவே லேட்டு, போனதுமே உங்கப்பன் சிடுசிடுங்கும், எந்திரி” என்று பிள்ளயை எழுப்பினாள்.

“புள்ளைக்கு பூவு வச்சூடலாம்ல, வெறுந்தலையா போட்டு கூட்டியார, நானும் இப்பதான் பார்க்கறேன்”

“ரெண்டா நேரமா இருக்குது, காத்துகீத்து அடிச்சிரும்னுதான் வைக்கல, ஆனா வூனா பொசுக்குனு காச்சல்ல உழுந்துருது, பையில வச்சிருக்கேன் அங்க போய்ட்டு வச்சூடறேன்”

“நல்லா சாப்புடு புள்ள, எலும்பா இருந்தீனா எப்புடி” என்று பெரியம்மாவின் புத்திமதிகளை கேட்டவாறு எழுந்து நடந்தாள். மீண்டும் வெயிலின் பிள்ளைகள் போல் நடக்க ஆரம்பித்தனர்.

மரகதத்தின் வீட்டை எட்டும் முன்னே ஐந்தாறு வீடுகள் கடந்து வருகையில் கறிக்குழம்பின் வாசம் மூக்கை துழைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் பசியை அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. என்னென்ன வகைகள் இருக்கும் என்று தங்களுக்குள் அவர்கள் யோசிக்காமல் இல்லை. தாகத்தின் நினைப்பு தப்பிப்போய் அசைவத்தின் நினைவலைகள் சூழ்ந்துகொண்டன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் பாதங்கள் நடந்து தேய்ந்த களைப்பு சட்டென கலைந்தது. அசைவத்தின் ருசியை ருசிக்க எண்ணங்கள் ஆர்பரித்துக்கொள்ள, வீட்டின் முன் போடப்பட்டுள்ள பந்தலின் உள் நுழைந்தனர்.

சின்னசாமியும், அருளும் பந்தி பரிமாறுவதில் மும்மரமாக இருந்தனர். முகம் வாட்டமுடையதாகவே இருந்தது இருவருக்கும். இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைத்தார்கள். கண்கள் மரகதத்தைத் தேடின. நாத்தனார் மிடுக்கு சிடுக்கெல்லாம் இல்லாமல் கூடப் பிறந்தவள் போல் பாசம் காட்டுபவளைக் கண்கள் காண ஆவலுடன் இருந்தன. இருவரும் இயல்பாக அக்கா என்றே அழைக்க விருப்பப்பட்டனர் ஆரம்பத்திலிருந்தே.

இவர்களைக் கண்டதும் புன்னகை பொங்க ஓடோடி வாந்தாள் மரகதம். 

“வாங்க வாங்க நேத்தே வந்துருக்கலாம்ல, சரி வாங்க” என்று இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள்.

கொண்டுவந்த பூவையும் பழங்களையும் மரகத்திடம் கொடுத்தனர். மரகதம் ஆசை ஆசையாய் பொறந்த வீட்டு சீராக நினைத்து உரிமையோடு வாங்கிக்கொண்டாள்.

தாகத்தில் நாக்கு வறன்டவர்களுக்கு செம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஒரே மொடக்கில் தாகம் தீர தீர தண்ணீரைக் கண்டு பல நாள் ஆனது போல பருகினார்கள். ‘வெயில்ல வந்தது ரொம்ப தாகம் போல’ என்று திரும்பவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இரண்டு பேரும் பசி மறந்து போய் சற்று முன் இருந்த அசைவத்தின் மீதான ஆர்ப்பரியம் மறந்தவர்களாக, தாகம் தீர்ந்தவர்களாகப் பந்தி பரிமாறுதலில் பங்கு கொள்ள எண்ணி  புது உற்சாகமுடன் ஈடுபட முற்பட்டனர்.

“அட உக்காருங்க செத்த நேரம், அதலாம் அவுங்க பாத்துக்குவாங்க, வெயில்ல களச்சி போய் வந்துருப்பிங்க” என்று தடுத்தாள் மரகதம்.

“இல்லக்கா சாப்புட்டுக்கலாம் பொறுமையா” என்று உற்றார் உறவினர் வீட்டு வேலைகளில் விஷேசங்களில் பங்குகொள்ளும் நாகரீகத்தினைப் பொருட்டு வேலையில் மும்மரமாகினர்.

பிள்ளை ச்சேரில் உட்கார்ந்து கொண்டாள். மிகவும் களைப்புற்று காணப்பட்டாள். ச்சேரில் தலையை ஒருபுறமாக சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தாள். 

வந்தவர்களை வா என்று ஒரு வார்த்தை கூப்பிடவில்லை மரகதத்தின் கணவர். முகத்தினைக் கூட அவர்கள் பக்கம் தப்பித் தவறி திருப்பிவிடக் கூடாது என்று கவனமாக இருந்தார். அதுவரை வந்திருந்த அனைவருக்கும் பார்த்து பார்த்து வரவேற்று சாப்பிட வைத்து, நல்லபடியாக பேசிக்கொண்டிருந்தவர், தேவையில்லாத, அநாவசியமான கோபத்தை வழியன தன்னுள் புகுத்திக் கொண்டவராகக் காணப்பட்டார். இவர்களுக்குத் தண்ணீர் தெளிக்காது வாடிப்போன பூ போன்று பொக்கென்று முகம் வாடிப்போயிற்று.

பந்தி  பரிமாறுவதில் மும்மரமாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். தண்ணீர் மட்டுமே போதுமென எண்ணிக் குடித்து குடித்து வியர்வையாய் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். கூட்டம் கனமென பெய்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வரும் தூறல் மழைப் போல ஒன்றிரண்டு பேராக வருவதும் போவதுமாக இருந்தனர்.

மரகதம் “சாப்புட சொன்னா  சாப்புட மாட்டனு பண்றிங்க” என்று மிகவும் சலித்துக்கொண்டாள். 

வேலை ஓரளவு முடிந்து மிகவும் சோர்வுடையவர்களாக ச்சேரினை பந்தலின் ஒரு பக்கமாக போட்டு உட்கார்ந்தனர். சின்னசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உட்கார்ந்தவாறே தூங்க ஆரம்பித்தார். மரகதம் மிகவும் கோபம் கொண்டவராகவும், தம்பிகள் வீட்டினை அவமானப்படுத்துவதை எண்ணி வருத்தமாகவும், விருந்தாளிகள் வந்து போகும் வேளையில் வெளிப்படையாக எதையும் பேசமுடியாமல் வாயைக் கட்டிக்கொண்டாள். ஊமையாகத் தோற்றமளித்தாள்.

இந்த இடம், பொருள், ஏவல் எல்லாம் அவளுக்குத்தான் அவளின் கணவருக்கு இல்லை. ஊர் நியாயம் பேசும் பெரிய மனுசன் என்றுதான் பெயர். வீட்டு காரியங்களில் சின்னப்பிள்ளைகள் தேவலாம் போல் இருக்கும். ஓலைக் கொட்டாயின் மீது விழுந்த மழையாய் பேச்சு படபடவென்று பேசுவார். அதனால் மற்றவர்களின் மனம் வாடுவதெல்லாம் நினைத்துப் பார்க்காத மண்ட கணம் உடையவராய் வாயிலே ஆட்டம் கட்டிக்கொண்டிருப்பார்.

பந்தியே முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை அவர்களைச் சாப்பிட சொல்லவில்லை. சின்னசாமியும் அருளும் காலையிலிருந்தே சாப்பிடவில்லை. மரகதம் கேட்டதற்குச் சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டனர். மிகவும் சோர்வடைந்தவர்களாய்க் காணப்பட்டனர். இன்னும் சிலபேர் சாப்பிட்டுக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை மரகதம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பொறுக்கமாளாது என்பது போல, நியாயத்தை இப்பொழுதே கேட்டாங்க வேண்டும் என்னும் உத்வேகத்தில் அவர்கள் அருகே வந்து தனக்கென ஒரு சிம்மாசனமாக ஒரு ச்சேரை நகர்த்தி அமர்ந்தார் மரகத்தின் கணவர்.

“நேத்திக்கே வராம அப்புடி என்ன வேல,  நா நீங்க வருவிங்க வருவிங்கனு பாத்துக்கிட்டு கெடக்கேன், அவுங்களும் பூச முடிஞ்சதும்தான் வராங்க” என்று ஆரம்பித்தார்.

“அப்புடி என்னத்த சம்பாரிச்சு, என்னத்த நப்பி வச்சுட்டிங்க, இல்ல எங்களுக்குத்தான் சீரு செனத்தினு செஞ்சுபுட்டிங்களா” அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்க ஆயத்தமாகிவிட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவரின் பேச்சுக்கள் கேட்காமல் இல்லை. மரகதம் அவ்வப்போது மிதமான எதிர்வினையாற்றினாள். இருந்தும் நிறுத்தின பாடு இல்லை. நாமும் சத்தம் போட்டால் பெரிய சண்டையாகி விடும், அனைவரின் முன்பும் எதற்கு சங்கடம் என்று இதழ்களைப் பிரிக்காமல் இறுக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

‘ஊர் நாயம் பேசும் பெரிய மனுசன் அவரப்போயி நாம என்னனு பேசுறது. என்னதான் சொல்லி காமிச்சு அசிங்கப்படுத்தினாலும் ஆத்திர அவசரத்துக்குனா அக்காவிடம்தானே கையேந்துகிறோம். நம்ம நிலைமையைதான் நாம் நொந்துக்கனும்’ என்று அவமானங்களை அமைதியாய் கடப்பதே சாலச்சிறந்த செயல் என்னும் தோரணையில் அவரின் பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, பதில்களோ தரமால் அமைதி காத்தனர்.

வெற்றிலை இரண்டினை எடுத்தான் அருள். நன்றாக பாங்கு செய்து சுண்ணாம்பு தடவி பாக்கினை வைத்து நான்றாக சுருட்டி கடவாய் பல்லில் திணித்தான். சாப்பிடாமலே வெற்றிலைப் பாக்கு போடுவதன் அர்த்தம் அவனுக்குத் தவிர அங்கு யாருக்கும் விளங்கவில்லை. நன்றாக ருசித்தவாறு அவசரம் இல்லாமல் மதிய நேர பசுவின் அசைப் போல் நிதானமாக மென்றுகொண்டே அவரின் பேச்சுக்களுக்குச் செவிக்கொடுத்திருந்தான்.

“என்னத்த பொழப்பு நடத்துறிங்க. சொந்த ஊருலதான இருக்கறிங்க ஒரு சென்டு நெலமாவது இருக்குதா? இப்புடியே இருந்தா எப்புடி? நா என் மச்சினமூடுனு பெருமையா சொல்லிக்க வாண்டாமா? ஒரு நல்ல நாளு பெரிய நாளுனு எதுனா செஞ்சு சப நெறஞ்சால பரவால, நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். திரும்ப எதுவும் வரக்காணம்” இடைவிடாது அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை மட்டும் அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார் அந்த உத்தமர். அவர்களும் செக்கில் விழுந்த மழைநீராய் ‘சிவனேனு’ பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தனர்.

“உங்கூட்டுலையும் பொண்ணுருக்கு, எம்பையனுக்கு பொண்ணு கேக்க வரணும்னா நல்லா ஊடு கீடு கட்டி, பவுனலாம் சேத்தி வச்சி வசதி வாய்ப்பா இருந்தாதான பரவால” என்று கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் தன் மகனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

சொன்னதுதான் தாமதம் வாயில் நிரம்பி இருந்த அடர் செந்நிற திரவத்தைப் பந்தலின் பந்தக்காலின் அடியில் ‘பொளிச்’ என்று  துப்பிவிட்டு, “அப்புடி வசதியா இருந்தாதான் பொண்ணெடுப்பனா, நீரு என்ன மசுருக்கு சொந்தக்காரனு இருக்கீரு, வசதியா இருக்கவங்கள மட்டும் விருந்துக்கு கூப்டவேண்டிதான, எங்கள என்ன வெளக்கெண்ணைய்க்கு கூப்டீங்க” என்று கோவமாகப் பேசி, இதுவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்தியமைக்குப் பழிவாங்கியவனாய் திருப்தி அடைந்தான்.

“இன்னும் என்னா உக்காந்துக்கிட்டு இருக்கிங்க, வாங்க போலாம், ஏய் எந்திரிப்புள்ள” என்று தங்கச்சியும் உசிப்பிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.

மாமன்காரன் வாயடைத்துப் போய்விட்டார். முகத்தில் ஈ ஆடவில்லை. இப்படி ஒரு பதிலையும், அதுவும் ஊமை போல அமைதியின் சொரூபமாய் இருக்கும் அவன் வாயிலிருந்து உதிர்ந்ததை அவரால்  இன்னும்  நம்ப  முடியவில்லை. விருந்தினர்கள் முன்பு அவருக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. மரகதத்திற்கும் திடுக்கென இருந்தது, நெஞ்சு படபடத்தாள். இருந்தும் மனதிற்குள் கொஞ்சம் ஆனந்தம்தான் ஒரே பேச்சில் கணவரின் வாயைக் கட்டிவிட்டான் என்று. மருமவன் சாப்பிடாமலே போறானே என்னும் மனக்குறையுமாய் இருந்தாள். இதற்கு மேலும் அவர்களை வற்புறுத்தி சாப்பிட சொல்வதில் அர்த்தம் இல்லை என்று அமைதியானாள்.

சின்னசாமியும், சித்தியும் அவனின் அம்மாவும் ‘என்ன இந்தப் பையன் இப்புடி பேசிப்புடிச்சி’ என்று பதற்றமானார்கள். அவனை ஏதும் சொல்வதற்கு வாய்பளிக்காமல், இன்னும் அங்கு நின்றால் பாவம் தன்னைப் பிடித்துக்கொள்ளும் என எட்டு வைத்து எட்டிப்போனான். இருந்தாலும் நமக்கில்லா ரோசம் அவனுக்காவது இருக்கே என்று அவன் பின்னே அவன் பாதத் தடத்தினை தங்களுக்கான பாதையாகப் பாவித்து அமைதியாய் அனிச்சையாக எழுந்து சென்றனர். மரகதம் அவர்களைத் தடுக்கவில்லை.

வெக்கை இன்னும் தாழ்ந்தபாடில்லை, முன்பிருந்த அதே காந்தல் தான். ஆனால் இம்முறை வெப்பம் வெளி உடலுக்கு மட்டுமே. உள்ளூர இருந்த காந்தல் குறைந்திருந்தது. மனதிற்குள் ஈரக்காற்று வருடிக் கொண்டிருந்தது. எல்லாரது மனதும் லேசாக ஆனது. தெரிந்த, பழக்கப்பட்ட வழிதான் என்றாலும் அவன் பாதங்கள் வழிகாட்ட பின் சென்றார்கள்.

வெக்கை தணிந்தது.

000

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *