மழையும் வெயிலும் சற்று அடங்கியிருந்த மந்தகாசமான மாலை நேரமது. வீட்டையடைந்ததும் அசோக், வண்டியின் கண்ணாடியில் ஒரு முட்டும் சிரிப்போடு தன்னைத் தானே ஒரு முறைப் பார்த்துக் கொண்டான். மடித்து விடப்பட்ட  கருநீல முழுக்கை சட்டையில் ஈரத்தை மீறிய அடர் அழுக்கு ஒரு பக்கமாக ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அப்பியிருந்தது.

கதவைத் திறக்குமுன் வந்துக் கொண்டிருந்தச் சிரிப்பு அடங்க வேண்டி சில நொடிகள் அப்படியே நின்றுப் பார்த்தான். அவனது கருப்பு நிற பேன்ட்டிற்கே நடுக்கமெடுக்குமளவிற்கு குளிர்க்காற்று அவனை அள்ளிச் செல்வது போல் படபடவென வீசிக்கொண்டிருந்தது.

திருட்டுப் பூனையை போல் அசோக் மெதுவாக கதவைத் திறக்க, அவனது வருகையை எதிர்பார்த்திருந்தவளாக காதல் மனைவி கீதா உள்ளே பிரபல விளம்பர அழகியை போல் ஒய்யாரமாக நின்றுக் கொண்டிருந்தாள்.

சொல்லி வைத்தாற் போல அவளும் கருநீலத்தையொத்த நிறத்தில் வெள்ளைப் பூக்கள் சிதறிய இரவு கவுனை அணிந்திருந்தாள். எரியும் விளக்குகளையொத்த நிறத்தில் அவளது சந்தன மேனி பேரொளி வீசிக்கொண்டிருந்தது.

சொல்லவா வேண்டும்? அவளைக் கண்டதும் அசோக் முகத்தில் எப்போதும் போன்ற பிரகாசம்! ஆனாலும் அதே நேரம் வெகுநேரமாக வழிந்துக் கொண்டிருக்கும் வழக்கத்திற்கு மீறிய அந்த அசட்டு சிரிப்பையும் அவனால் மடைப் போட்டு நிறுத்த முடியவில்லை!

“நல்லா நனஞ்சிச்சிட்டியாடா குட்டீ..?” அவளது காதலும் பிரியமும் இரண்டறக் கலந்து, தோய்ந்து வந்த கேள்விக்கும் கூட ஒரு வழிசலையே பதிலாக தந்தான். அவன் சுகித்தான். அவள் மீது புதிதாக மயக்கம் கொள்பவன் போல மோகித்தான். அவளது குரலில்தான் எவ்வளவு இதம்! அதுவும் அவள் நேருக்கு நேர் பார்த்து பேசினாள் மதுவே தேவையில்லை! அவள் பேசும் சொற்களை கையிலேந்தினால், உள்ளங்கைகளில் றெக்கைகள் விரிக்காத கோழி குஞ்சுகள் குதித்து விளையாடுவது போல் உணக்கைகள் தோன்றுமோ என்னவோ!

வார்த்தைகள்… பக்கவாட்டில் படுக்கப்போட்டு காதுகளில் இளம் குருவிகளின் இறகுகளை கொட்டிவிடுவது போல் சுகம் சேர்க்கும்!

இதையே அவள் பின்புறத்திலிருந்து கைகள் கோர்த்து, கட்டியணைத்து, கழுத்திற்கு தோளிற்கும் மத்தியில் முகம் புதைத்தபடி கிசுகிசுப்பாய் கேட்டிருந்தால் அவனுடைய காதுமடல்களுக்கு இறகுகள் பட்டது போல் கூசியிருக்கும்.

‘அவள் ஒரு காதல் பறவை..! காதல் பறவை..!’ – அந்த வேளையில் எங்கிருந்தோ இன்னொரு குரல் முனகிக் கொண்டிருந்தது.

வேறுலகத்தில் சற்று சஞ்சரித்து வந்ததவன் போல் ஒரு கணம் உடல் சிலிர்த்து மறுபடியும் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான். உண்மையிலேயே அவளது பேச்சும் ஸ்பரிசமும் கிறக்கமுற்ற ஒரு மதியத்தில் சன்னலோர திரைச்சீலை இதமாய் தீண்டுவதற்கு சமமானது!

“என்னடா அங்கேயே நின்னு சிரிக்கிற? சாக்ஸோடு வந்திடாதே! ஷூஸோடு சேர்த்து அதையும் ஸிட் அவுட்லேயே தனித்தனியா விட்டுட்டு வா! சீக்கிரம் ரெஃப்ரெஷாகு, காஃபி கொண்டு வர்றென்…” என்றபடி அவள் கிச்சன் பக்கம் செல்ல, கொடிகள் போல் அவள் பின்புறம் அசைந்தாடிய சுருள் முடியை இரசித்தவாறு ஓய்வறைக்குள் நுழைந்தான். என்ன நினைத்தானோ சற்றென்று மறுபடியும் வெளியே வந்தான்.

ப்ச்!’ – அந்தஉருவம்புரண்டுப்படுத்தது.

அவளையே தின்பது போல் மீண்டுமொரு முறைப் பார்த்தான். இருப்பினும் அவையெல்லாம் மீறிய அவனது அந்த நமுட்டுச் சிரிப்பு மட்டும் மாறுவதாகவேயில்லை. அசோக் அன்றைய பொழுதை ஏனோ ஒரு சிறப்பான நாளாக உணர்ந்தான். அவனது கண்களில் மட்டுமல்ல உடல்மொழிகள் யாவற்றிலும் இன்பச்சொறிவும் விவரிக்க முடியா கிறக்கமும் காதலும் பின்னிப் பிணைந்தபடி அவன் உடலை ஒடித்துக் கொண்டிருந்தது.

அதற்கேற்றாற் போல் மேசையில், கட்டப்பட்டு சூடிக்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு – மூன்று முழம் நீள மல்லிகைச் சரமும், சரத்தின் மணமும் அந்த மாலையை மேலும் இனிமையாக்கிக் கொண்டு ஒரு வித கொண்டாட்டக் கிளர்ச்சியை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.

அவனது நோக்கங்களை உணர்ந்தவள் போல்,

“ராஸ்கல்! என்னடா யோசிச்சிட்டு நிக்கிற..?” சன்னல் பக்க மின்மினிகளை போல் அவளும் ஒரு குறும்புப் பார்வையை பதிலுக்கு வீச ஆரம்பித்தாள்.

“ஹாஹ்ஹ்ஹா… கீத்து! ஒண்ணுல்ல..! ஒண்ணுல்ல..!”

அவளை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்க இன்னொரு முறை சிரிக்கத் தொடங்கியவன், சமாளிப்பது போல் பிறகு அவள் மீது காந்தப்பார்வையை வீசினான்.

“இதோ ரெஃப்ரெஷாகி வந்திர்றேன்ப்பா! இன்னைக்கு என்ன டின்னர்?” அரையும் குறையுமாக நனைந்திருந்த உடைகளை கலைந்து குளியலறை வாசலின் ஒரு பக்கம் ஒதுங்க போட்டுவிட்டு, டவலுடன் உள்ளேச் சென்றான்.

அக்கணம் அந்த உருவத்திடமிருந்து புறப்பட்ட உஷ்ண மூச்சு கோபமாய் கதவை தாழிட சொன்னது.

அசோக் சாப்பிடும் போதும் கூட எதிரினில் அமர்ந்திருந்த கீதாவைப் பார்த்து பார்த்து கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அவன் எதையோ மறைக்க முயல்வதாகவும் அதே நேரம் பேசவும் முனைவதாகவும் தோன்றியது.

‘என்னடா..? சொல்ல வந்ததை சொல்லு..!’ என்பது போல் அவனை ஏறிட்டாள். அவனுடைய அசட்டுச் சிரிப்பு முகம் மாறவேயில்லை!

“திருட்டு முழி எதையோ மறைக்கிற மாதிரி தெரியுதே…!” ஆர்வங்கள் அதிகமாகி விசாரணையைத் தொடங்கினாள்.

“ஆமா கீத்து…! எப்படி கண்டுபிடிச்சே? ஹாஹஹாஹா!” மறுபடியும் அவனிடம் ஒரு வெடிச்சசிரிப்பு.

“அதான் ஈ…ன்னு பல்லக் காட்டிட்டிருக்க உன்னோட அம்மாஞ்சி இளிப்பிலேயே தெரியிதே.! விஷயம் என்ன சொல்லு!”

“ஆஃபிசிலேர்ந்து வந்துகிட்டு இருந்தேனா… நல்ல மழைப்பா… வள்ளுவர் கோட்டம் சிக்னல் – டி நகர் ரோட்டுல திரும்பும்போது, ஸ்கிட் ஆகி சர்ருன்னு… வண்டி வழுக்கி விழுந்துட்டேன்ப்பா!” ஏதோ பெரிய சாகசம் புரிந்துவிட்டு வந்தவன் போல உடலை குலுக்கிக்கொண்டு மறுபடியும் ஹாஹாவென சிரிக்க ஆரம்பித்தான்.

கேட்டு பதறி எழுந்தவள், “அப்புறம் என்னாச்சி அஷோக்? உனக்கு அடி ஏதும் படலையே?”

“ஒண்ணும் ஆகலை ஒக்காரு!” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

மறுபடியும் சிரிப்பு.

அவளுக்கு அவனது செய்கைகள் வினோதமாகப்படவே, “என்னடா ஆச்சு? சொல்லி தொலையேன்!” அவளுக்கு பதற்றத்தில் இரத்தம் அழுத்தம் கூடியது போல் கோபம் அதிகமானது.

“விழுந்தேனா… பின் தலைல டம்முனு ஒரு அடி! பார்த்தா… ஹெல்மெட்டு கழண்டு உருண்டு ரோட்டுல எங்கேயோ ஓடிட்டு இருக்கு! ஹாஹ்ஹ்ஹஹ்ஹா!” மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தான். அவளால் அவன் சிரிப்பை அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. அடிக்க ஓங்குவது போல் மீண்டும் நாற்காலியிலிருந்து எழுந்தாள்.

“அப்புறம் என்னாச்சு?” அவள் அவனருகே வர முற்பட்டாள்…

“ரிலாக்ஸ் மை டியர்… எனக்கு ஒண்ணும் ஆகல. ஆனா அப்பத்தான்…” சொல்லும்போதே அவன் இதழ்களில் ஆனந்த ரேகைகள் கிளை பிடித்து சுழிப்பது போல் மேலும் கீழும் ஓட ஆரம்பித்தன.

“நான் சட்டுன்னு சுதாரிச்சி எழ ட்ரை பண்ணினேன். அப்பத்தான் அந்த பொண்ணு… அந்த க்யூட் கேர்ள்…” யாரைப் பற்றி சொல்கிறான் என்பது போல் கீதா, அசோக்கை புரியாமல் பார்த்தாள்.

“ஹலோ சார்…! சார்…! என்று ஓடி வந்து அந்த ஹெல்மெட்டை எடுத்து வந்து கொடுத்தா!” அவன் குதூகலித்து சொல்லி முடிக்க, அங்கே ஒரு மௌனம் இழையோடியது.

“என்ன அவசரம் சார்? மழை நேரத்துல இப்படியா வண்டி ஓட்டுவீங்க? பாத்து போக மாட்டீங்க..?ன்னு அக்கறையோடு எங்கிட்ட கோவிச்சிக்கிட்டா” கீதாவின் முகமும் அப்போது கோவை பழம் போன்றுதான் சிவந்திருந்தது.

“ஹேய் ஹனி, என்ன கோவமா? பட் அவ ரொம்ப ஏஞ்சலிக் லுக் ப்பா! உன்ன லவ் பண்ணின மாதிரியே டக்குனு பாக்க ஒரு ஃபீல் வந்திச்சின்னா பாத்துக்கோயேன்..! ஹாஹ்ஹா…!”

“வரும் வரும்! என்ன மாதிரியே அவளையும் கல்யாணம் பண்ணிக்கோயேன்! ரொம்ப நல்லாருக்கும்!”

“ஹேய்..! அந்த மொமெண்ட்ல உன் சாயல்ல இன்னொரு தேவதையாட்டம் வந்து நின்னாப்பா!”

“ஹெல்மெட் எடுக்காம போயிருந்தா என்னாயிருக்கும்!”

“உன்னோட நானும் வந்து சேர்ந்திருப்பேன்..” என்று அவன் முடிக்கவில்லை… அவன் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது!

பேயறைந்தவன் போல விழிப்புத் தட்டி, வியர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்து கொண்டார் தீனதயாளன். தனது கன்னத்தை தடவிக் கொண்டார். சட்டென பிரஞை வந்து, பக்கத்தில் பார்த்தார்… ஒரு ஓரமாய் அவருடைய மனைவி ரேவதி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

கடிகாரத்தை நோக்கினார்… மணி அதிகாலை மூன்று முப்பது. அறையை விட்டு வெளியில் வந்தவர், சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை திறந்து மடமடவெனக் குடிக்க ஆரம்பித்தார். மேசையின் இரு புறங்களிலும் அசோக்கும் கீதாவும் எதிரெதிரே அமர்ந்திருப்பது போல பிரம்மைகள் தோன்றி மறைந்தன. நிதானித்து குடிப்பதை சற்று நிறுத்தினார்.

முந்தைய நாள் மாலை ஆறரை மணிக்கு தீனதயாளன் தனது மனைவியோடு மிதமான வேகத்தில் குறிப்பிட்ட சாலையில் வந்துக் கொண்டிருந்தபோது, ஒரு முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் சடாரென்று தனது வண்டியை வளைத்து வந்து இவர்கள் முன்பு புரண்டு விழுந்தான்.

சட்டென சுதாரித்து தீனதயாளன் அதிர்ச்சியோடு வண்டியை நிறுத்தியதும், பதறியடித்துக் கொண்டு ரேவதி அந்த இளைஞனை நோக்கி ஓடினாள். தலையிலிருந்து அகன்று, உருண்டோடிக் கொண்டிருந்த ஹெல்மெட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அந்த இளைஞன் கருநீல சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தான். பார்க்க அழகாகவும், இளம் பெண்களை பார்வையாலும் தனது வசீகரமான சிரிப்பாலும் வீழ்த்திவிடும் வல்லமையுடையவனாகவும் அவர் கண்ணிற்கு தெரிந்தான்.

என்னதான் ஒரு மனிதாபிமானம் என்றாலும் ரேவதி, அப்படியொருவனை நோக்கி ஓடியிருக்க வேணாம்.

அடியென்று பெரிதாக எதுவும் பட்டிருக்காத நிலையில் அந்த இளைஞனை தேற்றுவது போல் அன்பொழுகப் பேசியதும் அவன் வீட்டு முகவரியை, பணி புரியும் விபரங்களையெல்லாம் விசாரித்ததும், ‘பார்த்துப் போங்க!’ என்று சிரித்தபடி அனுப்பி வைத்ததும் அந்த இடத்தை விட்டு வந்ததிலிருந்து தொடர்ந்து அவர் மனதை ஏனோ ஒரு மூலையில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

ரேவதிக்கும் அவருக்கும் பத்து, பதினைந்து வயது வித்தியாசமிருக்கும். அந்த இளைஞனுக்கும் ரேவதிக்கும் ஐந்து வயது இடைவெளி கூட இருக்காது. அதுவும் அவரது மனச்சலனத்திற்கு பெரும் காரணமாக இருந்திருக்கலாம்.

அசோக் – கீதா ஜோடி மிகவும் கலகலப்பானவர்கள்; பார்க்க ஒருவருக்கொருவர் செய்து வைத்தவர்கள் போலதான் தோற்றமளிப்பார்கள். அவருடைய அலுவகத்தில் பணிபுரிந்து, தற்சமயம் இளம்தம்பதிகளாகவும் சமீப நாட்களில் தீனதயாளனின் பொறுமையை மேற்கொண்டு தினம் தினம் சோதித்தும் வருபவர்கள்.

கீதாவின் மீது தயாளனுக்கும் ஒரு ஈர்ப்பு நெடுங்காலமாக இருந்து வந்தது. அவள் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்களில் அலுவலகத்தில் அவள் மட்டும் தனித்திருந்த இருட்டிய மாலையொன்றில் தவறாக நடக்க முயன்று பதிலுக்கு அரையொன்று கிடைத்ததும், யாரிடமும் சொல்லிவிட வேண்டாமென அவள் காலை பிடிக்க முயன்றதும், இன்னோர் புறம் அசோக் மீதான அவளுடைய காதல் தீவிரமாகி அவள் அவனையே கைப்பிடிக்க நேர்ந்ததும்… நாளுக்கு நாள் அவருக்குள் அவளை அடைய முடியாத கைசேதம் கொலைவெறியளவிற்கு வளர்ந்துவிட்டது. கற்பனைகளிலும் கனவுகளிலும் சில முறை இருவரையும் கொலையும் செய்திருக்கிறார். இப்போது ரேவதியையும் கொன்று விடலாம் போன்றிருந்தது அவருக்கு.

***

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி புக்ஸ், விகடன் தளங்களிலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *