ரவி அல்லது.

    பாத்திமாவிற்கு கவலையாக இருந்தது. வகுப்பில் நடத்தும் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சன்னலில் பௌசியாவைக் காணவில்லை. இரண்டாவது பீரியட் முடியும்போது எப்பொழுதும் வந்துவிடும். இன்று அதுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.

அது விரும்பி சாப்பிடும் பிஸ்கெட்டு எடுத்து வந்திருப்பதால் அவளின் கவலை அதிகமானது. கண்கள் கலங்க ஆரம்பித்தது.

வகுப்பில் ராஜராஜ சோழனைப்பற்றி விரிவாக மிஸ் சொல்லிக்கொண்டு இருந்தார். கேள்வி எதுவும் கேட்டால் அவள் பாடு திண்டாட்டம் தான். வெளியில் பார்க்கும்போது பார்த்தாலும் சிக்கல்தான். 

வகுப்பு முடிந்ததும் பௌஷியாவை தேடலாமென கச்சிதமாக திட்டம் போட்டாள். மதிய சாப்பாட்டு நேரத்தில் பிள்ளைகள் எல்லாப் பக்கமும் திரிவார்கள். மாலை வகுப்பு முடியும்போது வேன் தயாராக வந்து நிற்கும். அதனால் இண்டர்வெல் பீரியட் தான் சரியானது என்று முடிவெடுத்தாள்.

ஒரு வழியாக வகுப்பு முடிந்து மிஸ் வெளியே போனதும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் நுழைந்து சன்னல் பக்கம் இருக்கும் சுற்றுச்சுவரை ஒட்டி உட்கார்ந்துப் பார்த்தாள். இரண்டு வகுப்புக்கள் தள்ளி ஸ்டோர் ரூமிற்கு பக்கத்தில் படுத்துக் கிடந்தது பௌஷியா பூனை. அதைப் பார்த்ததும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பக்கத்தில் சென்று பார்த்தால் கால் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தது. அடிபட்ட முன் காலில் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. ‘அல்லாஹ்வே எதில் அடிபட்டிருக்கும். இந்நேரம் ஒரு மனுசன் அடிபட்டு இருந்தால் எவ்வளவுக் கூட்டம் கூடியிருக்கும் ‘ என நினைத்தபடியே அடித்தவனைத் திட்டியவாறு அவள் அதைத் தூக்கியதும் கண்களை விழித்துப் பார்த்தது.

அவள் தன்னுடைய கர்சீப்பால் வழிந்த இரத்தத்தை ஒத்தி எடுத்தாள். துடைக்கத் துடைக்க இரத்தம் வருவது குறைய ஆரம்பித்தது. அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

உம்மா ஒரு முறை விளையாடும்போது கீழே விழுந்த பொழுது ஆத்துப்பூண்டு செடியின் இலையின் காம்பைக் கில்லி அதில் வரும் பாலை வைத்தது நினைவுக்கு வர அந்தச் செடியைத் தேடினாள். அந்தச் செடியின் பாலை அப்போது வைத்தபொழுது சுள்ளுன்னு  எரிந்தது.

காம்பவுண்டை ஒட்டி வளர்ந்திருந்த ஆத்துப் பூண்டு செடியின் இலைகளைப் பறித்து கசக்கி அடிபட்ட இடத்தில் வைத்து அவள் வைத்திருந்த கர்ச்சீப்பால் இருக்கக் கட்டினாள்.பௌஷியாக் கத்தியது. பிறகு அது எந்த எதிர்ப்பும் செய்யவில்லை.

கர்சீப்பால் காலைச் சுற்றி கட்டிய பிறகு தான் அந்தக் கர்சீப் அவளின் வாப்பா டெல்லியில் வாங்கி வந்தது நினைவுக்கு வந்தது. அதை ஒரு விசேசமான இடத்தில் வைத்து துவாச் செய்ததாகவும் சொன்னார். அதில் பான்டாக் கரடி பொம்மை இருந்ததால் பாத்திமாவுக்கு அந்தக் கர்சீப்பை மிகவும் பிடிக்கும்.

கொண்டு வந்த பிஸ்கெட்டை அதனிடம் வைத்ததும் அது சாப்பிடத் தொடங்கியது. கழிப்பறைக்கு சென்று கைகளை கழுவிச் சுத்தம் செய்துவிட்டு வகுப்பறைக்கு வந்துவிட்டாள்.

பௌஷியாவிற்கு அடிபட்டது அவளுக்கு கவலையாக இருந்தது.

இரண்டாவது படிக்கும்போது பிஸ்கெட்டை சாப்பிடப் பிரித்ததில் அது வழக்கத்துக்கு மாறாக கசந்தது. அதை மோந்துப் பார்த்தால் ஒரு விதமான வாடை வந்தது. வாப்பா அவளுக்கு சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வர காலாவதி தேதியைப் பார்த்தாள். அது இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது.

பிறகு எப்படி கெட்டுப்போனது என்றுதான் தெரியவில்லை.

அவள் உடனே பயந்தவளாக பிஸ்கெட்டைத் தூக்கி வெளியே வீசிவிட்டாள். சன்னலின் வழியாக எதையும் அந்த சந்துப் பகுதியில் குப்பையாக்கினால் பள்ளியில் தண்டனைத் தருவார்கள். அதுவும் உணவுப் பொருட்களைப் போட்டால் பிரேயரில் வைத்து மன்னிப்புக் கேட்க வைப்பார்கள். நல்ல வேளை மிஸ் போனில் எதையோக் காட்டி சொல்லிக்கொண்டு இருக்க அவர் மேசையைச் சுற்றி குழந்தைகள் எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘அல்லாஹ்வே அல்லாஹ்வே’ என்று மனசுக்குள் கெஞ்சிய போதுதான் அந்த பூனை வந்து பிஸ்கெட்டை எடுத்தது. அப்போது தான் அவள் நிம்மதியானாள். எதேச்சையாக பாத்திமா அந்தப் பூனையைப் பார்த்து

“பௌஷியா… பௌஷியா” என்று அழைக்க அது திரும்பிப் பார்த்தது.

“அது கெட்டுப் போனது சாப்பிடாதே. நாளைக்கு உனக்கு நல்ல பிஸ்கெட் கொண்டு வாரேன் ” என்றாள்.

இப்படியாகத்தான் அதற்கு பெயர் வைத்ததும்  அதனுடன் அவள் பழகியதும் நடந்தது.

சரியாக இன்டர்வெல் பீரியடில் அது வந்துவிடும்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.” என்பாள்.

“மியாவ்.”எனக் கத்தும்.

 அவள் கொடுக்கும் உணவை அங்கு சாப்பிடாமல் எடுத்துக்கொண்டு போய்விடும். அவள் எப்பொழுதும் பேப்பரில் மடித்து தான் உணவைப்போடுவாள்.

‘குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை தரமாக தயாரிக்காதவர்களை தூக்கில் போட வேண்டும். இன்று குழந்தைகளை நோக்கிய வியாபாரம் உலகம் எங்கும் கொடி கட்டிப் பறக்கும் வேலையில் அரசாங்கம் இதற்குத் தனிக்கவனம் எடுக்கவேண்டும் ‘ என்று அவள் அந்த வருடம் பேச்சுப்போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கினாள்.

பிரின்சிபால் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் ‘தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் நொறுக்குத்தீனிகளில் தனிக்கவனம் வைக்கவேண்டும்’ என்று பேசியதாக மிஸ் சொல்லிவிட்டு அவளைப் பாராட்டினார்கள்.

இப்படியாகத்தான் இரண்டு வருடங்களாக அவள் பௌஷியாவின் தோழியாக இருக்கிறாள்.

ஒரு முறை அவள் வாப்பாவும் அவளும் ஜாமன்டிரி பாக்ஸ் எடுக்க மறந்து போனதாக வாட்ச் மேனிடம் சொல்லிவிட்டு பௌஷியாவை வீட்டிற்கு எடுத்து கொண்டு போய்விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தார்கள். மூன்று முறை இதேபோல் வந்து தேடிப்பார்த்தார்கள்.

அப்பொழுதெல்லாம் பௌஷியாக் காணாமல் போனதால் அதற்கு வர விருப்பமில்லை என்று அந்த முயற்சியைக் கை விட்டுவிட்டார்கள்.

அவள் கண் மூடி துவாச் செய்தாள். ‘யா… அல்லாஹ் நீ கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளன். எனது பௌஷியாவை சீக்கிரம் குணமாக்கிவிடு. நான் ஏதாவது ஒரு முஸாபிருக்கு சாப்பாடு கொடுக்கிறேன்.’ என்று வேண்டியதோடு இருக்காமல் நிய்யத்தும் செய்து கொண்டாள்.

அதன் படி அன்று மாலையே தன்னுடைய சேமிப்பு பணத்திலிருந்து உணவு வாங்கிப் பேருந்து நிறுத்தத்தில் தர்மம் கேட்கும் முதியரிடம் கொடுத்தாள்.

“ஜஸாக்கல்லாஹ் ஹைர். அல்லாஹ்… உனக்குப் பரக்கத் செய்யட்டும்.” என்றார்.

நான்கு நாட்களாக அவள் பௌஷியாவைப் பார்க்கவில்லை. அவள் தினம் அல்லாவிடம் அதற்காகத் துவாச் செய்தாள். பௌஷியா வராததால் சன்னல் ஓரம் இருந்த சிறிய செடிக்கு சலாம் சொல்வாள். அது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. சில சமயம் காற்றில் அது அசைவது ‘வலைக்கும் சலாம்’ எனப் பதில் சொல்வதாக தோன்றும். பௌஷியாவை பார்க்காமலையே கடந்துபோன நாள் ஒன்றின் மாலை வேளையில் அவளும் அவளது வாப்பாவும் பெய்த மழையில் நனைந்து விளையாடியதில் அவளுக்கு ஜூரம் வந்துவிட்டது.

உம்மா வாப்பாவைத் திட்டிக்கொண்டே இருந்தார்.மாத்திரை சாப்பிட்டும் ஜூரம் நிற்பதாகத் தெரியவில்லை. பாத்திமா மிகவும் சோர்வாக எழுந்து நடக்க முடியாமல் இருந்தாள்.

மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி உடல் நிலையை சரி செய்து வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பாத்திமா உடல் மெலிந்து காணப்பட்டாள். ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளிக்கு போகாமல் இருந்தாள்.

இந்த நிலையில் அவளின் வாப்பா வேறொரு ஊரில் தொழில் தொடங்கும் ஆசையில் அந்த ஊர்க் கடை ஒன்றில் முதலில் வேலை பார்க்கலாமென முடிவெடுத்து வீடு எல்லாம் பார்த்து கிளம்புவது அவளுக்குத் தெரியாது. அந்த ஊர் பள்ளியில் சேர்க்க இருப்பதால் இனி ஸ்கூலுக்கு போக வேண்டாம் என்று உம்மா சொல்லிவிட்டார்.

வாப்பா ஆட்களை வைத்து சாமான்களை ஏற்றி அந்த ஊரில் உள்ள வீட்டில் எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு வந்துவிட்டார். காலையில் நாங்கள் கிளம்ப வேண்டியது மட்டும்தான் பாக்கி. இரவு உணவு கூட வாப்பா கடையில்தான் வாங்கி வந்திருந்தார்.

அவளுக்கு பௌஷியாவிடம் சொல்லாமல் போவது வருத்தமாக இருந்தது. டிசி வாங்க வாப்பா கூட்டிக்கொண்டு போவாரா என்றும் அவளுக்கு தெரியவில்லை. அப்படியே போனாலும் பள்ளியில் வகுப்புகள் நடக்கும் போது பௌஷியாவை எல்லாம் தேடிப் போக முடியாது. அல்லாஹ்விடம் துவாச் செய்வதைவிட அவளுக்கு வேறு வழித் தெரியவில்லை.

“வாப்பா… வாப்பா..” என்று அவள் கத்தியதும் சமயலறையில் இருந்த வாப்பாவும் உம்மாவும் உடல் நோவினையில் மறுபடியும் ஏதோ செய்கிறதென பதறி ஓடி வந்தார்கள்.

பாத்திமா சன்னலைக் காட்டினாள். அங்கு பௌஷியா வாயில் கர்சீப்பை கவ்யபடி உட்கார்ந்து இருந்தது. பாத்திமாவைவிட வாப்பாவும் உம்மாவும்தான் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

பாத்திமா பௌஷியாவை சன்னல் கம்பியின் வழியாக கையைவிட்டு தூக்கினாள். அதன் வாயில் இருந்த கர்சீப்பை எடுத்தாள்.பௌஷியாவிற்கு அடிபட்ட இடத்தில் முடி குறைவாக வளர்ந்து இருப்பதால் அதைப் பார்ப்பவர்கள் அந்த இடம் நோவினையானதென எளிதாக புரியும் படியாக இருந்தது .உம்மா அந்த கர்சீப் வாங்கிக்கொண்டு வெளியே போனார்.அவளுக்கு அழுகையாக வந்தது.பௌஷியாவும் கத்திக்கொண்டே இருந்தது.

பௌஷியா வந்ததில் பாத்திமா பழையபடி உற்சாக துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்து வாப்பாவும், உம்மாவும் சந்தோசமடைந்தார்கள்.

அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் பேருந்து நிறுத்தத்தை காரில் கடந்து செல்லும் போது பாத்திமா வண்டியை ஓரமாக நிறுத்தச் சொன்னாள். அவள் வாப்பாவிடம் பணம் கேட்டு வாங்கினாள். ஊருக்குப் போனதும் தான் சேமித்திருக்கும் பணத்திலிருந்து எடுத்து வாப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

அந்தப் பணத்தை அங்கு தர்மம் வாங்க உட்கார்ந்திருந்த முதியவரிடம் கொடுத்தாள்.

“ஜஸாக்கல்லாஹ் ஹைர். அல்லாஹ் உனக்கு நற்கூலி தரட்டும். அல்லாஹ் உன் வாழ்க்கையில் பரக்கத் செய்யட்டும்.” என்றார். அவள் பின்னால் பௌஷியாவும் காரில் ஏற ஓடியது.

பேருந்து நிறுத்தத்தில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு ‘ இப்படித்தான் நீ பிறருக்கு உதவி செய்து வாழனும்’என்று சொல்லிக்கொண்டு இருந்தார். பௌஷியா அவர்களைத் திரும்பிப் பார்த்தது.

****

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *