ரவி அல்லது.
வீட்டின் அனைத்து வேலைகளும் முடிந்து வண்ணமடித்து விளக்குகள் பொருத்த வேண்டியது மட்டும் மீதம் இருந்தது. செப்டிக் டேங்க் வேலையோடு சில சில்லறை வேலைகள் கொஞ்சம் இருந்தன. வீட்டின் உரிமையாளர் சதாசிவம் இன்ஜினியர் பாலனிடம் குடிபோக தேதி குறித்துவிடவா என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்.
பாலனுக்கு சொல்ல முடியாத சங்கடங்கள் இருந்தன. இந்நேரம் வேற இன்ஜினியர்களாக இருந்தால் பேசியத் தொகையைவிட அதிக தொகையைப் பெற்றிருப்பார்கள். பாலன் தனக்கென பல கொள்கைகளுடன் வாழக்கூடிய ஆள். அவர் நண்பர்கள் பல பேர் திட்டி இருக்கிறார்கள்.
“இதுமாதிரி நீ இருந்தியன்னா. மேஸ்திரி பணத்தை தின்பான். வீட்டு ஓனர் டீல்ல விட்டுருவாங்க. நாம நல்லவர்களாக இருந்தால் பத்தாதுடா. எல்லோரும் நல்லவர்களாக இருக்கனும்.”
அவருக்கும் அது தெரியும். ஆனாலும் அவரால் சில விசயங்களைச் செய்ய முடியாது. செங்கல் கட்டு வேலைக்கு கலவை ஒன்றுக்கு பத்து பதினொன்று போடுகிற ஆட்களும் இங்கு இருக்கிறார்கள். பவுண்டேசன் போடும் போதும் , காலம் கான்கிரீட் போடும் போதும், சிலாப் கான்கிரீட் போடும் போதும் என்று அவர் எப்போதும் சைட்டில் இருப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவர் அப்போது இருக்க முடியாத சூழ்நிலை என்றால் அங்கு சைட் இன்ஜினியர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்த நகரத்தில் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு சன்னலுக்கு யாரும் சில் பீம் போடுவதில்லை. அப்படி சில பேர் சில் பீம் போட்டாலும் அது எதுக்காக போடுகிறோம் என்று தெரிவதில்லை. கஜாப் புயல் வந்தபோது பல பங்களாக்களிலும் எல்லா கான்கிரீட் வீடுகளிலும் சன்னலுக்கு கீழே தண்ணீர் ஒழுகி வீட்டிற்குள் தண்ணீர் வந்ததாக பேசிக் கொண்டார்கள். பாலன் கட்டிய வீடுகளில் மட்டும் சன்னல் வழியாக தண்ணீர் ஒழுகவில்லை. அவருடைய பழைய கஸ்டமர்கள் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பாராட்டினார்கள்.
பாலனைத் தேடி சதாசிவம் அவரின் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.
“சார் பெயிண்டர் வேலைகளை முடித்து வந்துவிட்டார்களா.”
“இந்த வாரம் வந்துருவாங்க சார்.”
“சார் என் ப்ரண்ட் வீட்டிற்கு வந்தான். எல்லா வேலைகளும் முடிஞ்சிருச்சேடா. இந்த வேலைகள் மட்டும் பாக்கி இருக்குன்னா. இன்ஜினியருக்கு ஏதாவது பணம் பென்டிங்க் வச்சிருக்கியான்னு கேட்டான். ஆமான்னே. உடனே ரெடி பண்ணிக் குடுடா அவர் உடனே முடிச்சிருவாருடா என்றான். அதனால்தான் லேட் பண்ட்றீங்களா சார்.”
“இந்த ஸ்டேஜ் வரும்போது எங்களுக்கு நாம் பேசிய தொகை வந்திருக்கனும் சார். நான் அதைப் பார்க்காம முடிக்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். ஃபைனல் ஸ்டேஜ்ல பையன்கிட்ட கணக்கு போயிரும் சார். அவன் அதுக்கு மேல மூவ் பண்ண விடமாட்டான். அதை என்னால உங்ககிட்ட சொல்ல முடியல சார்.”
“என்ன சார் இப்படி சொல்றீங்க”
சதாசிவம் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பாலனுக்கு கைபேசியில் அழைப்பு வர அதைப் பேசி முடித்தார்.
“சார் தானே. குடி புகுந்த உடனே மொய் பணம் வரும். அதிலிருந்து கொடுத்துவிடலாம்ன்னு நினைச்சேன் சார். பையன் சிட்டிசனுக்காக வெயிட் பண்ட்றதால. அவன் பேங்க் பேலன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்ங்கிறான் சார்.எனக்கு கடன் வாங்கி பழக்கமில்லை. கடன் வாங்கக் கூடாதுன்னு நினைக்கிற ஆள். அதான் யோசிக்கிறேன்.”
“இதுல நான் என்ன சார் ஹெல்ப் பண்ட்றது. கதவு, சன்னலுக்கு மரம் எடுத்ததை மூனு மாதம் கழித்து கொடுங்கள் என்று அவர்களிடம் உங்களுக்காக சொல்லி விட்ருக்கேன் சார். இதுக்கு மேல நான் என்ன சார் பண்ட்றது.”
இருவருமே நல்லவர்கள் தான். பாலன் மகனைத் தாண்டி அவரால் இதுதான் செய்ய முடியும். கடன் எதுவும் வாங்கிவிடக்கூடாது என்று வாழும் சதாசிவம் பாலனைத்தான் முழுமையாக நம்பி இருந்தார். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சதாசிவம் மனைவியிடம் ஆலோசனை கேட்பது வழக்கம். அவர் மனைவிக்கு போனில் பேசியதும் முகம் மலர்ந்தவராக
“சார் வீட்ல ஐந்து பவுன் காயின் வச்சிருக்கா. அதை வித்துட்டு வேலையை முடிக்கச் சொல்றா.அது போதுமா சார்.”
“தரவேண்டிய தொகைக்கே இன்னும் மூனு லட்சம் குறையுது சார். அது இல்லாம நீங்கள் பல இடங்களில் மாற்றங்கள் சொல்லி இருக்கீங்க. அளக்கும்போது ஸ்கொயர் பீட் கூடுதலாக வரும் சார். அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்டிரியர் ஒர்க் வேற இருக்கு. அதுல பாதிய குடி புகுந்த பிறகு செய்யலாம் சார்.”
“இன்னும் மூனு பவுன் விக்க சேர்த்து எடுத்துக்கிறேன் சார். இன்னும் இரண்டு மாசத்துல எஃப் டி போட்டிருக்கிறதை எடுத்துக்கலாம். நீங்க வேலைய ஆரம்பிங்க சார்.”
“ஏன் சார். அடகு வச்சுக்கிட்டு பிறகு திருப்பிக்கலாமே.”
“இல்ல சார். இதுவரைக்கும் இது மாதிரியான வட்டி சிக்கல்ல மாட்டல. உங்க ப்ரண்ட் கடை இருந்தால் கேட்டுச் சொல்லுங்க சார். அங்கேயேக் கொடுத்திருவோம்.”
பாலன் கைபேசியை எடுத்து தொடர்பு கொண்டார்.
“ரஜினி எங்க இருக்கீங்க.”
“சென்னையில் இருக்கேன். துர்கேஷ் சிங்கப்பூருக்கு படிக்கப் போறான். அவனை அனுப்பி விட வந்தோம்.”
“என்னா படிக்கப்போறார்.”
எம்.டெக் படிக்கப் போறான். எதுவும் முக்கியமான செய்தியா.”
“இல்லை இல்லை.ஊருக்கு வந்தவுடன் பேசுங்கள்.”
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் கோயில் திருவிழாவிற்கு நிதி கேட்டு ஆட்கள் வந்து உட்கார்ந்து இருப்பதாக சொன்னார்.
“நூறு ரூபாய் கொடுங்கள். ஏதாவது சொன்னால் சார் மீட்டிங்க்ல இருக்காங்க. அப்புறம் வந்து நேரடியாக அவர் கிட்டேயே வந்து வாங்கிக்கன்னு சொல்லி அனுப்புங்க.”
அடுத்து அவர் நண்பர் பிரகாஷிற்கு பேசினார்.
“பிரகாஷ்.”
“சொல்லுங்கண்ணே…”
“பிரகாஷ் நம்ம பிரண்ட் 916 காயின் எட்டு வச்சிருக்கார். நல்ல ரேட்டாகப் போட்டுக் குடுங்க. வேற எங்காவது விசாரிச்சா. என்னைத் தப்பாக நினைப்பாங்க.”
“சரிங்கண்ணே. வரச் சொல்லுங்க. பார்த்துக்கலாம்.”
“சின்னையாத் தெருவில் ராஜா ராணி ஜூவல்லரி தெரியுமா.”
“தெரியாது சார்.”
” மணிக் கூண்டிலேர்ந்து கோர்ட்டுக்கு போறீங்க பார்த்தீங்களா. அப்படியே லெப்ட்ல பார்த்தீங்கன்னா. ஸ்டார் டவர் பில்டிங் தெரியும். அப்பல்லோ கம்ப்யூட்டர் ஃபோர்டு அந்த பில்டிங்கில் தூரமாகப் பார்த்தாலே தெரியும். அந்தப் பில்டிங்கில் கீழே இருக்கு ராஜா ராணி ஜூவல்லரி.”
“வக்கில் ஜெயக்குமார் சார் இருக்காரே அந்தப் பில்டிங்கா சார்.”
“அதேதான் சார். அதான் கரைக்டாச் சொல்றீங்களே.”
“ஜெயக்குமார் சார் கிட்ட பையன் வெளிநாடு போனப்போ அட்டஸ்டேசன் வாங்கப்போனேன் சார்.”
பாலனுக்கு ஒரு வேலை முடிந்ததில் சந்தோசம். உடனே வேலைகளை முடித்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் வைக்கலாம் என்ற நிம்மதியில் இருந்தார்.
சதாசிவத்தால் அப்படி இருக்க முடியவில்லை. இந்த வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து பாலனிடம் பல குடும்ப விசயங்களை அவர் மனம்விட்டு பேசி இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தன் அனுபவத்தில் பாலனைப்போல சிறந்த மனிதரைச் சந்திக்கவில்லை என்ற கருத்து மறுக்க முடியாதபடி அவருக்குள் வேரூன்றி வியாபித்துவிட்டது. அவர் தயங்கியபடியே அமர்ந்திருந்தார்.
“சார் வேறு ஏதாவது சொல்லனுமா சார்.”
சதாசிவம் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். பலானுக்கு விசயம் எதுவென்று தெரியாமல் குழம்பினார். ரிசப்ஷனுக்கு போன் செய்து கொஞ்ச நேரம் எம்.டி ரூமிற்கு யாரும் வர வேண்டாம் என்றார்.
“சார் என்ன சின்னக் குழந்தை மாதிரி. விசயம் என்னன்னு சொல்லுங்க சார்.”
சதாசிவம் முகத்தை துண்டால் துடைத்து விட்டுச் சொன்னார்.
“மகன் வெளி நாடு கிளம்பும்போது என் மக கிட்ட காசு கேட்டான் சார். அது ஏதோ சொல்ல அதுவே பிரச்சினையா மாறி ஐந்தாறு வருசமா போக்கு வரத்தே இல்லை சார். இந்த தேவையில(குடி புகும் விழா) எப்படி ஒதுக்கி வச்சி பண்ட்றதுன்னு கவலையாக இருக்கு சார். மனை போடக் கூப்பிடல. சிலாப் போடவும் கூப்பிடல சார்.”
“இதெல்லாம் ஒரு பிரச்சினையா சார். அதவிடுங்க அதை நான் சரி பண்ணி வரச் சொல்றேன். உங்க மக நம்பரையும் மருமகன் நம்பரையும் குடுங்க.”
மருமகன் போன் எடுக்கவில்லை. சதாசிவத்திற்கு கவலை சூழ ஆரம்பித்துவிட்டது. அவர் தன் மகளுக்கு போன் செய்யச் சொன்னார். அது நாகரிகம் இல்லை என பாலன் மறுத்து விட்டார்.
கொஞ்ச நேரத்தில் சதாசிவம் மருமகனிடமிருந்து போன் வந்தது.
“யார் சார் பேசுறது.”
“சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா. நான் உங்க மாமனாருக்கு வீடுகட்டிக் கொடுக்கிற இன்ஜினியர் சார்.”
“சொல்லுங்க சார்.”
“ப்ரியா இருக்கீங்களா கொஞ்சம் நேரம் உங்க கிட்ட பேசனும்.”
“சொல்லுங்க சார்.”
“இரண்டு மாதங்களாக வீட்டு வேலை அப்படியே கிடக்கு சார். எனக்கு ஒரு பதினைந்து இருபது நாள் வேலைதான் சார் பாக்கி இருக்கு. சதாசிவம் சார் காரணம் இல்லாம தாமதம் பண்ட்றார். ஒரு நாள் நான் தனிப்பட்ட முறையில் கேட்டேன் சார். அவர் சொன்னக் காரணத்தைக் கேட்டா எனக்கே வருத்தமா இருக்கு சார்.”
“என்ன சொன்னார்.”
“ஒரு சின்ன மன வருத்தத்தில மகளுக்கும் எங்களும் பேச்சு வார்த்தை இல்லாமப் போயிருச்சு. இடையில சேர்த்துவிடப் பேசுறேன்னு இரண்டு பக்கமும் கிளறிவிட்டுட்டாங்க சார். நீங்கள் வேலையை முடிச்சிட்டீங்கன்னா. உடனே குடி போற வேலையைப் பார்க்கனும். மவ இல்லாம எனக்கு விசேசம் செய்ய விருப்பமில்ல சார். யாரை விட்டுப் பேச விட்றதுன்னு தெரியவில்லைன்னு அழுவுறார் சார்.”
“…..”
“உங்கள் மச்சான் கிட்டையும் பேசினேன். ‘அக்கா அன்றைக்கு நகை கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. அசிங்கமா பேசியிருக்கக்கூடாது சார். அதெல்லாம் எனக்கு இப்போ மறந்தே போச்சு சார்.’ன்னு சொல்றார். உங்கள் இரண்டு பேரும் மேலயும் நான் குற்றச்சாட்டு வைக்க மாட்டேன். உங்களுக்கு அப்போது என்ன சூழ்நிலையோ. அது பத்தி நாம் இப்போது விவாதிக்க வேண்டாம் சார். நீங்கள் ஆட்சேபிக்கலன்னா. சாரை உங்ககிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றேன். உங்க மச்சானையும் சாரி கேட்கச் சொல்றேன்.அவர் சிட்டிசன் வாங்க அலஞ்சிக்கிட்டு இருக்கார் சார்.”
“நீங்கள் யாருன்னே எனக்குத் தெரியாது சார். நாங்கள் சேரனும்ன்னு இவ்வளவு முயற்சி எடுத்து இருக்கீங்க. என் ஒய்ஃப் மேலயும் மிஸ்டேக் இருக்கு சார்.என் அக்கா எங்களை வழி தவற வச்சிருச்சி சார்.”
“அதெல்லாம் விடுங்கள் சார். நாளைக்கு நாங்கள் உங்கள் வீட்டுக்கு வரட்டுமா சார். உங்க ஒய்ஃப் கிட்ட நான் பேசவா சார்.”
“அதெல்லாம் வேண்டாம் சார். நான் அவகிட்ட பேசிக்கிறேன். நாளைக்கு நானே வர்றேன்.”
“இல்ல சார். அது தப்பு சார். நாளைக்கு நான் வந்து உங்களை அழைச்சுக்கிட்டு வர்றேன். அதுதான் உங்களுக்கு மரியாதை.”
அவருக்கும் அது சரியாகப் பட்டதால் பாலன் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.சதாசிவம் ஆச்சரியமாக பாலனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“சார் எங்க யார்கிட்டேயும் நீங்க பேசல. ஆனா எப்படி சார் இவ்வளவு தெளிவாக மாப்பிள்ளைக் கிட்டப் பேசுனீங்க.”
“உங்கள் வீட்டுப் பிரச்சினை எனக்கு ஓரளவு தெரியும். அதைவிட முக்கியம் நான் சின்ன வயசிலேர்ந்து உறவுகளை அதிகமா இணைத்துப் பழகிய ஆள் சார். அதனால இதெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை சார்.”
“நீங்கள் செஞ்ச உதவி சாதாரணமானது இல்லை சார். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. தம்பியும் வீட்லயும் சேதி தெரிஞ்சா சந்தோசப் படுவாங்க சார்.”
சதாசிவம் தேதி குறித்த நாளில் பாலன் வீட்டு வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டார். பகையைப் போக்கி சேர்ந்துவிட்டதோடு விடாமல் அவரது மகனுக்கும், பேத்திக்கும் சம்பந்தத்தை பேசி முடித்துவிட்டார். சதாசிவம் மகனுக்கும் சிட்டிசன் கிடைத்துவிட குடும்பமே கூட்டாக மகிழ்ந்து இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் பாலனை மிகவும் பிடித்துப்போனது. அவர்களின் நெருங்கிய உறவினருக்கு கொடுக்கும் அத்தனை மரியாதைகளையும் பாலனுக்கு கொடுத்தார்கள்.
நல்லவர்கள் அசௌகரியப்படவும், அல்லல்படவும் தருணங்கள் வாழ்க்கையில் வந்த வண்ணமே இருப்பது பாலனுக்கு புதிது இல்லை என்றாலும் சதாசிவம் குடும்பம் தடுமாறித்தான் போனது.
பாலன் கட்டிக்கொடுக்கும் வீடுகளில் எப்பொழுதும் அவரது செலவில் அந்த வீட்டின் மதிப்புக்குத் தகுந்த மாதிரி புத்தகங்கள் வைக்கும் செல்ஃப் செய்து அதற்கு மர வேலைப்பாடுகளுடன் கண்ணாடியில் புத்தகங்கள் தெரிவது போல செய்து கொடுப்பார். அதிகபட்சம் எழுபத்தி ஐந்தாயிரம் வரை அதற்கு அவர் செலவுகள் செய்வார். வீட்டை முடித்து சாவியைக் கொடுக்கும்போது அந்த செல்ஃபில் திருக்குர்ஆன், பைபிள்,ஓஷோ பேசிய தம்மபதம் பாகங்கள் அனைத்தும் வைத்துக் கொடுப்பது அவரது வழக்கம். வாசிப்புப் பழக்கம் உள்ள வீடுகளுக்கு இலக்கியப் புத்தகங்கள், அரசியல் மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை அவரேப் பரிந்துரைப்பார். ‘நல்ல புத்தகங்களை நான்கு பேரிடம் பரிந்துரைப்பதும் ஒரு நல்லறம்’ என்று அவரின் நண்பர்களிடம் பாலன் அடிக்கடி சொல்வார்.
புத்தக வாசிப்பை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். பூஜை அறைப் போலப் புத்தக அறையும் இருக்க வேண்டும் என்பார். இங்கும் அதுபோல செய்து இருந்ததை விழாவிற்கு வந்திருந்த சதாசிவம் மருமகனின் நெருங்கிய உறவினர் பார்த்துவிட்டு கத்த ஆரம்பித்து விட்டார்.
“யாருய்யா இந்த வெளிநாட்டு மதத்துப் புத்தகத்தை இங்க வச்சது. இது யாரோட வேலை.”
பாலன் மிகவும் பணிவாக அவரிடம்
“சார். நான் தான் வைத்தேன். அது குழந்தைகளுக்கு பிரிவினைகள் இல்லாமல் வாழப் பழக்க வைத்தது. நீங்கள் எந்தப் புத்தகங்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் சார்.”
“உங்களை அவுங்க இந்த புத்தகம் வைக்கச் சொன்னாங்களா.”
“இல்ல சார்.”
“பகவத்கீதை வைக்காம. அதென்ன தம்மபதம்.நீங்க என்ன வெளிநாட்டு மிஷனரி ஆளா.”
அவர் அடுத்து புத்தகங்களைத் தூக்கி வீசப் போகிறார் என்பதை அனுமானித்த பாலன் அவைகளை தான் வைத்திருந்த துணிப்பையில் எடுத்து வைத்தார்.
சதாசிவத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை. மருமகனை இப்போது தான் சமாதானம் செய்து இணைத்துள்ளோம் அவரது உறவினரை ஏதாவது சொல்லப்போய் அதுவேப் பெரிய பிரட்சினையாகிவிடுமோ என்று பயந்தார். அவர் அரசியலில் அதிகாரம் படைத்தவர் என்பதால் சதாசிவம் மருமகனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பலருக்கு தவறாக தெரிந்தாலும் மௌனமாக இருந்தார்கள்.சிலருக்கு சரியாகவும் தோன்றியது.
“இப்படித்தான் நல்லது பண்ட்றது மாதிரி உள்ளே நுழைவாங்க. நம்ம நாட்டையே மொட்டையடிச்சிருவாங்க. இனிமே அதெல்லாம் நடக்காது.” என்று பேசியவர் திடீரென்று பாலன் நாற்காலிக்குப் பக்கத்தில் வைத்திருந்த புத்தகப் பையைத் தூக்கி குப்பைத் தொட்டிப் பக்கம் வீசியபோது அதை எழுந்து ஓடிச் சென்று பாலன் பிடித்துவிட்டார்.அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. பாலன் எழுந்து நின்று
“இங்கு எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இது என் தவறுதான் இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்.”
தான் கோபமாகிவிட்டதாக யாரும் நினைக்கக்கூடாது என்று எவரும் தன்னை சமாதானப்படுத்துவதற்கு முன்பாக அவரே சாப்பாடு போடும் இடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்து விட்டார். அங்கு நடந்தது எதுவும் தெரியாததால் எல்லோரும் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார்கள்.
சதாசிவமும் அவரது மருமகனும் சாப்பிடுகின்ற இடத்தின் பக்கம் பாலனின் பார்வை படுவதுபோல வந்தாலும் பாலனிடம் பேச அவர்களுக்கு தயக்கமாக இருந்தது. பாலன் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவதால் அவர்களால் பார்வையால் கூட மன்னிப்பு கேட்க முடியவில்லை.
அங்கு சண்டை போட்டவர் அவரது உதவியாளரிடம் தன் கருத்தியல் சார்ந்த புத்தகங்களை எடுத்து வரச்சொல்லி செல்ஃபில் வைத்து எல்லோரிடமும் போட்டோ எடுத்துக் கொண்டு வேறு அவசர வேலை இருப்பதாக கிளம்பிவிட்டார். பாலன் அவர்களை ஆசுவாசப்படுத்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு காரை எடுக்க கதவைத் திறந்தார். அப்போது அவர் பின்னால் வந்த சிறுமி அவரிடமிருந்த புத்தகப் பையைக் கேட்டது. அவர் சிரித்துவிட்டு அதனிடம் கொடுத்து அதன் முதுகில் தட்டி தம்ஸ் அப் செய்துவிட்டு கிளம்பி விட்டார்.
பாலன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சதாசிவத்திடமிருந்து போன் வந்தது.
“என்ன சார் இது இப்படி டிவியில் போட்டுவிட்டுட்டீங்க.”
“எதை சார்.”
“காலையில் எங்க வீட்டுல நடந்த விவகாரத்தை டிவியில போட்டு, ஊரே அதான் பேச்சா இருக்கு சார்.எனக்கு போன் மேலப் போனா வருது. நான் என்ன சொல்றதுன்னு தெரியல சார்.”
” சார் உங்க வீட்டு விசேசப் போட்டோ எதுவுமே என்கிட்டே இல்லை. நான் நேராக வீட்ல வந்து தூங்கிட்டேன். என் வீட்டு சிசிடிவி கேமராவைப் பாருங்கள். என் போன் கால் ரிஜிஸ்டரைப் பாருங்க. நான் யாருக்கும் பேசல. உங்க போன் வந்துதான் நான் முழிக்கிறேன்.”
“நான் என்ன சார் பண்ட்றது.”
“உங்களுக்கு தோன்ட்றதைப் பேசுங்க சார் . என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.”
விழாவிற்கு வந்த இன்ஃப்ளூயன்சர் சண்டைக்காரர் பேச ஆரம்பித்ததிலிருந்து பாலன் குழந்தையிடம் தம்ஸ் அப் காட்டுவது வரை தெளிவாக எடுத்து பதிவேற்றம் செய்து இருந்தார். இன்ஸ்டா, எஃப்.பி, எக்ஸ் தளம் என்று அவர் சண்டைக்காரரைப் பங்கம் பண்ணி இருந்தார். ஒரே இரவில் பாலன் உலகம் அறியப்பட்டவராக ஆகிப்போனார்.
பாலன் செய்தது சரி என்றும் தவறு என்றும் விவாதங்கள் பொதுவெளியில் நடந்தபடி இருந்தது. இளைஞர்கள் பாலனுக்கு ஆதரவாக ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். பாலனுக்கும் சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் கணக்குகள் உண்டு. அவர் எப்பொழுதாவது ஏதாவது எழுதுவது உண்டு.
இரண்டு நாளில் அவர் எந்தப் பதிவும் போடாவிட்டாலும் இரண்டு கோடி சப்ஸ்கிரைபரும் பாலோவரும் வந்துவிட்டார்கள். அங்கு அவரைப் பற்றியும் அவரது செயலைப் பற்றியும் கருத்துக்கள் பதியப்பட்டுக் கொண்டே இருந்தது.
தோழர்கள் ‘பூஜையறையைவிட புத்தக அறையே வீட்டிற்குச் சிறந்தது’ என்று அரசியல் கட்சியொன்றின் அந்தரங்க செயலை வம்பிற்கு இழுத்தது. தொலைக்காட்சி விவாதங்கள் இது பற்றிய விவாத மேடைகளை வைத்தது. ஒரு பக்கம் அவரின் செயலைப் பாராட்டியும் ஒரு பக்கம் அவர் வெளிநாட்டு கைக்கூலி என்றும் விவாதம் உச்சத்திற்குப் போனது.
பாலனது பொறியாளர் கூட்டமைப்பு அவசரமாக கூடியபோது அங்கு விவாதங்கள் வேண்டாம் என்று பாலனே பேசினார்.
“இது எனது சொந்தப் பிரச்சனை இதனை நானேப் பார்த்துக்கொள்கிறேன். அசோசியேஷன் உதவி தேவைப்பட்டால் நானே சொல்கிறேன். அதுவரை நீங்கள் பொறுமையாக இருங்கள்.”
அவர் இப்படி பேசியதில் பலருக்கு நிம்மதி. ‘தான் எந்தப் பக்கம் உள்ளவர்கள்’ என்று யாரும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
இதற்கு முன்பு பாலன் கட்டிய வீடுகளின் உரிமையாளர்களின் வீட்டு செல்ஃப்கள் படம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. அவைகள் புத்தகங்களாக நிரம்பி வழிந்தது. அவர்களில் சில எழுத்தாளர்களாக மாறி இருந்தார்கள். ஒருவர் மட்டும் பாலன் கொடுத்தப் புத்தகங்களை இந்தப் பிரச்சினைக்கு பிறகு லைப்ரரியில் கொடுத்துவிட்டதாக பேட்டி கொடுத்து இருந்தார். பாலன் பேட்டிக்காக தன்னை அனுகியவர்களைத் தவிர்த்தார். அவரின் புதுமனைப் புகுவிழா புகைப்படங்களேப் பகிரப்பட்டுக் கொண்டு இருந்தது.
ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்கள் தன்னொழுச்சியாக கூடியதைப்போல இந்த விசயத்திலும் எல்லோரும் கவனம் வைத்தார்கள். இது ஒரு நல்ல அறிகுறி என்று நடுநிலையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
முதல்வர் பேச விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட பாலன் வைத்த முதல் கன்டிசனே ‘பேசுவதை தொலைகாட்சியில் ஒளிபரப்பக்கூடாது’ என்பதுதான். லோக்கலில் உள்ளவர்கள் அவரை மிரட்ட முடியாதபடி அவரின் உறவினர்கள் பல கட்சிகளில் பெரிய பதவிகளில் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இவரின் உறவினர்கள் என்பது இப்போது தான் பலருக்குத் தெரியும். முதல்வர் பேசும்போது வீடே அவரது கட்சிக்காரர்களால் நிரம்பி இருந்தது.
“தம்பி வாழ்த்துகள். உங்களுடைய இந்த ஐடியா உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவர் இருந்திருந்தால் உங்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார். அவரது வழி வந்த அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நாங்கள் அடுத்த ஆட்சிக்கு வந்தால் புத்தக அலமாரி இருந்தால்தான் மின் இணைப்பு மற்றும் கட்டிட அனுமதி என்ற சிறப்பாணை பிறப்பிக்கப் போகிறோம் தம்பி. எந்த உதவி என்றாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். வீட்டில் உள்ளவர்களைப் பயப்படாமல் இருக்கச் சொல்லுங்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களைத் தலைகுனியவிடாமல் காப்பதுதான் என் வேலை. வாழ்த்துகள் தம்பி.”
சொற்பொழிவாற்றுவதைப் போல பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவரது கட்சியில் இருந்த சோர்ஸ் ‘ஆட்சிக்கு வந்தால் அரசின் திட்டம்’ இருப்பதாகச் சொன்னதை அவர் தொடர்பில் இருக்கும் பத்திரிகைக்கு சொல்லிவிட அது அடுத்த பேசு பொருளான பொழுது எதிர்கட்சித் தலைவர் பேசினார்.
“தம்பி கவலைப்படாதீங்க. அடுத்த ஆட்சி நம்மளோடதுதான். அவிங்க ஆட்சியில சட்டம் ஒழுங்கு கெட்டு நாசமாப் போச்சு. நான் அடுத்த மாசம் உங்க ஊருக்கு கல்யாணத்துக்கு வர்றேன். அவசியம் சந்திப்போம் தம்பி. நீங்கள் நம்ம மலையரசன் சொந்தக்காரங்களாமே. …..”
இப்படியாக அவர் கால் மணி நேரம் பேசினார்.
சதாசிவம் ஏதோவொரு தொலைக்காட்சியில் ‘தான் புத்தக அலமாரி வைக்கச்சொல்லவில்லை என்றும் அவர் வைத்தப் புத்தகங்களை தான் கேட்கவில்லை.’ என்றும் பேட்டிக் கொடுத்தார்.
பாலனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறுவது திகைப்பாக இருந்தது. சதாசிவம் யாராலோ மிரட்டப்பட்டு பேட்டி கொடுக்கிறார் என்பது பாலனுக்கு தெளிவாக தெரிந்தது. பேட்டி முடிவில் அவர் கும்பிடுவது தன்னிடம் மன்னிப்புக் கேட்பது போல இருந்தது. அடுத்த நாள் அதேத் தொலைக்காட்சியில் சதாசிவம் மகன் வெளிநாட்டிலிருந்து பேசிய தொலைபேசி பதிவு ஒலிபரப்பப்பட்டது. அதில் தனது குடும்பத்தை மிரட்டி அந்தப் பேட்டி எடுக்கப்பட்டதாக அவர் பேசியது பாலனுக்கு ஆறுதலாக அமைந்தது.
ஏன் இந்த விசயத்தை இப்படி எல்லோரும் பிடித்து தொடங்குகிறார்கள் என்று பாலனுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரின் கைபேசியும் ஸ்விட்ச் ஆஃப் செய்ததில் அவர்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவரின் வீட்டில் உள்ளவர்கள் புதிதாக வாங்கிய பட்டன் போன்களில் அவசரத்துக்கு அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
சமூக ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு அடுத்த மாநிலங்கள் நாடுகளென வைரல் செய்தது. வட நாடுகளில் பகவத்கீதையை அவமதித்ததாக பொய்யான வாட்ஸ் ஆஃப் செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது. வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று இதை அழகான டாக்குமெண்டரியாக எடுத்து ஒளிபரப்பியது.
பாலன் எதிலும் சிக்காமல் தன்னைத் தற்காத்துக் கொண்டார். அதற்குரிய பின்புலம் அவரிமிருந்தது. அதுவே அவரை மக்கள் சந்தேகப் படவும் வைத்தது. அவர் ‘தான் சுதந்திரமாக செயல்பட பொது வெளிக்கு வரவில்லை’ என்று எவரிடம் சொன்னாலும் அது ஏற்புடையதாக எவருக்கும் தோன்றவில்லை.
ஐந்து கோடி சப்ஸ்கிரைபரை சமூக ஊடகத்தில் அவரின் அக்கவுண்ட் எட்டிய வேலையில் அது உலக ஊடகங்களில் செய்தியானது. இப்படியான சூழ்நிலையில் கவர்னர் விருந்துக்கு அழைப்பதாக சண்டை போட்டவர் மறுபடியும் வந்து சண்டை போட்டார்.
இப்போது பாலன் பேசியதில் அவர் உண்மையிலையேப் பயந்து போனார். ஒன்றுமில்லாத விசயத்தை ஊதிப் பெரிதாக்கி தனக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிட்டதை பலன் கோபமாகச் சொன்னார். ‘இப்போது நீங்கள் பேசிய இந்த சிசிடிவி புட்டேஜை நான் வெளியிட்டால் உங்கள் எதிர்கால அரசியலே கேள்விக்குறியாகிவிடும்’ என்றபோது அவர் அங்கிருந்தே பயந்து போன் செய்து ‘சார் அவர் பாவம். பயப்படுகிறார். விடுங்க சார். நம்ம பிரண்ட்டோட சொந்தக்காரர்தான். நான் அவரிடம் பேசி அழைத்து வருகிறேன்’ என்றார்.
பாலன் பழையபடி தாடி வைத்தார். அவரது தோற்றம் முற்றிலும் மாறிப்போனது.
அரசியல்வாதிகள் அத்தனைப்பேருக்கும் வரும் சட்ட மன்ற தேர்தல் சவாலாக இருந்ததால் அவர்கள் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். கவர்னர் தான் வந்திருக்கும் வேலையில் கவனம் செலுத்தியதால் பாலன் விவகாரம் அவர்கள் அஜெண்டாவில் பின்னுக்குப் போனது.
கூட்டணி அமைக்க எதிரணியில் எல்லோரும் ஒன்றாக இணைய முன்பு பேசியவைகளை மக்களிடம் மறக்கச்சொல்லிக் மன்றாடிக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்குறுதியில் ‘வீட்டில் புத்தக அலமாரி வைக்க ஆவன செய்யுமென்ற’ வாக்குறுதி இருந்தது.
ஆளும் கட்சி தங்களது வாக்குறுதியில் ‘ ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அலமாரி இருப்பது கட்டாயம் அதில் திருக்குறள் இருக்க வேண்டும். அந்த செலவுகளை அரசே ஏற்கும்’ என்று சொல்லி இருந்தார்கள்.
யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது கணிப்புகளாக நாட்கள் நகர்த்து கொண்டு இருந்தது. மக்கள் தங்கள் புது மனை புகு விழாக்களில் புத்தக அலமாரி வைத்துப் புத்தகங்களை வாங்கி வைத்தார்கள். பரிசுப் பொருளாக புத்தகங்கள் கொண்டு வரப்பட்டது. கிடைத்தப் புத்தகங்களை வீட்டில் வைக்க இடமில்லாமல் லைப்ரரியில் கொடுத்தார்கள். நகரங்களின் தெருக்களிலும் கிராமங்களிலும் புதிது புதிதாக லைப்ரரிகள் உருவானது. ஒவ்வொரு வீட்டில் கிடைக்கும் மொய்த்தொகைப் பற்றி மக்கள் பேசியதை மறந்து புத்தகங்களின் எண்ணிக்கையே கௌரவத்தின் அடையாளமானது.
பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்களின் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களின் விற்பனை எப்பொழுதையும் விட பல மடங்கு அதிகரித்ததாக பேசினார்கள். அதன் மொத்த உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு பாலனுக்கு பாராட்டு விழா நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பொறுப்பாளர்கள் பாலன் வீட்டிற்கே வந்துவிட்டார்கள்.
“மேடம் பாலன் சாருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருக்கிறோம். அவரை நாங்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.”
பாலன் மனைவிக்கு அவர் இருந்தால் இதற்கு கண்டிப்பாக சம்மதித்து இருப்பார் என்று தோன்றியது.
“அவர் வெளியூர் போயிட்டார் சார்.”
“எந்த ஊருக்கும்மா.”
“பெரும்பாலும் தனியாக போகும் போது அவர் எங்களிடம் எதுவும் சொல்லமாட்டார் சார். தியானம் பண்ணப் போறப்போ நாங்க எங்கன்னு கேட்கவும் மாட்டோம் சார்.”
வந்தவர்கள் சுவாரசியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“சார் பொதுவாக எங்கப்போவாங்க.”
“திருவண்ணாமலை,டெல்லி, ஜெய்ப்பூர். அவர் அதுக்கான இடங்கள் இங்கே நிறைய வச்சிருக்கார் சார். இப்போ எங்கன்னு தெரியல சார்.”
“அவரோட பழைய நம்பர் எங்ககிட்ட இருக்கு. புதிதாக ஏதாவது நம்பர் இருக்கா மேடம்.”
“இல்லை சார். அதுக்கே ஒரு ஆடியோ மெஸேஜ் போடுங்கள். அவரே உங்களைத் தொடர்பு கொள்வார். நாங்கள் அப்படித்தான் பண்ணுவோம்.”
புயலடித்து ஓய்ந்தது போல கடந்து கொண்டிருந்த நாட்களில் பபாசியின் புத்தகக் கண்காட்சி வந்து போனது அவரது மனைவிக்கு பெரிய ஆறுதலாக அமைந்து இருந்தது. அவரும் பாலனைப் போல வாசிப்பில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் கலையில் தேர்ந்தவர்தான்.
பாலன் கண்களை மூடி தனக்குள் மௌனத்தை அமைதியாக சுவைத்துக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவர் எதார்த்தத்தின் இயல் நிலைக்கு மாறினால் நிச்சயமாக இங்கு மறுபடியும் ஒரு பிரளயப் பேரதிர்வு நிகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
****

