வா.மு.கோமு வழங்கும் வாழும் கலை அல்லது மரண விளையாட்டு பயிற்சி

-சுகதேவ்

நோயை விட நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் எவ்வாறு அக மற்றும் புற வலிகளை  தொடர்ந்தும் அல்லது விட்டுவிட்டும் வாழ்வில் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நுட்பமாகப் பேசுகிறது வா.மு. கோமு என்கிற வா.மு. கோமகன் எழுதிய “சானடோரியம்” நாவல். ஜனவரியில் நடந்த சென்னை புத்தகக் காட்சியில் வாங்கினேன். ஒரே அமர்வில் படித்துவிட்டிருப்பேன். இடையில், நாவலில் வருவது போல ஓர் உறவின் மரணத்துக்காக ஊருக்குச் சென்றதால், தடைபட்டுவிட்டது. இரண்டு அமர்வுகளில் படித்து முடித்தேன்.

நாவலின் களம் கொங்கு மண்டலம் என்றாலும் சில எழுத்தாளர்களைப் போல வட்டார அல்லது கொட்டார மொழிகளைப் பேசி வாசகனை இம்சை செய்யவில்லை வா.மு.கோ. இதர மண்டலக்காரர்களும் வேகமாகப் படித்துச் செல்வதற்கு ஏதுவாக எளிமையான நடை. ஆங்காங்கே சமூக நடப்பின் மீதான மிதமான முதல் தீவிரமான விமர்சன எள்ளல். அடிச்சரடாக நகர்ந்து செல்லும், சமகால வாழ்வின் விடைகாண முடியா கேள்விகள், புதிர்கள்.

“அம்மா சின்னதாய் சிரித்தது. அப்பா எங்கே வீழ்ந்திருப்பார் என்ற கேள்விக்கு விடை எனக்கு கிடைத்துவிட்டது.” – போகிறபோக்கில் ஒரு மகனின் உள்ளார்வத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.

“இப்படியாக என் காதில் கிணத்துப்பாளையத்தில் குடிவாழ நுழைந்த பட்டாம்பூச்சியை ஒருமணி நேரத்தில் பெருந்துறை மருத்துவமனையில் கொண்டு வந்து வாழ விட்டுவிட்டேன்.” – சிகிச்சை பெற வந்த இடத்தில் அவரது சொல்லோட்டத்தைக் கவனியுங்கள். நாவல் முழுவதும் வாசிப்பவன், நின்று ரசிக்க இப்படிப் பலவாறு எழுதிச் செல்கிறார்.

பரந்து விரிந்து கிடக்கும், பழம்பெருமை வாய்ந்த ஒரு மருத்துவ வளாகத்தில் காசநோய் சிகிச்சைக்காக சில நாள்கள் தனியறையில் தங்கியிருக்கும் ஒரு மனிதன் எப்படி இருப்பான்?

எப்போதும் இருமிக்கொண்டு, “பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா…” என்ற பாடல் பின்னணியில் ஒலிப்பது போல, படுக்கையில் சுருண்டு கிடக்கும் சோகச் சித்திரம் உங்களுக்குள் தோன்றுகிறதா? இல்லை. இவன் வேறுமாதிரி. பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் நாம் காண்பது போல, அக்கம்பக்கமுள்ள சக நோயாளிகளிடம் உறவாடுவது ஒருபுறமிருந்தாலும், அதுகடந்து – சட்டென்று பிரியும் உயிர்கள், அதற்குப் பிந்தைய உடல்கள், அந்த உடல்களுக்குரிய உற்றார்கள் என அந்த மனிதனின் உள்மன விசாரணை வளையம் விரிகிறது. சுற்றிலுமிருக்கும் மரங்கள், காக்கைகள், மயில்கள் உள்பட பலவும் அவனது வளையத்தில் உண்டு.

“இப்படித்தான் அடிக்கடி என் பிணக்குழி மேட்டிற்கு நானே சென்று நான்கைந்து செம்பருத்திப்பூக்களை வைத்துவிட்டு திரும்பிக் கொண்டே இருக்கிறேன்” என்கிறான் நாவலின் மையப் பாத்திரமான பழனிவேலு.

“எந்த நேரமும் சாவு ஒருவனை துரத்திக்கொண்டே தான் இருக்கிறது அல்லது சாவை நோக்கித்தான் ஒவ்வொருவரும் பிரயாணம் செய்கிறோம். அது சிலருக்கு முன்பாகவும் சிலருக்கு பின்பாகவும் நடந்துகொண்ட இருக்கிறது” என்கிறான் இன்னொரு இடத்தில். இதுவரை நடக்கவில்லை என்ற நிம்மதியுடன் படித்துக்கொண்டிருக்கும் வாசகனிடம், அடுத்த நொடியிலிருந்து இனி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அதிர்வை ஏற்படுத்தும் இடம். அதுதானே உண்மையும்கூட.

பழனிவேலுவின் அல்லல் வாழ்க்கையை மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நகர்த்தி, அதே நேரத்தில் வாசகனின் படபடப்பு குறையாமல் சொல்கிறார் வா.மு.கோ. நாவலின் பின்பாதியில், பழனிவேலுவின் மரண விசாரணை தீவிரமாகிறது. அவன் நோய் முற்றியதால் அல்ல. சிகிச்சையில் தேறி வருகிறான். ஆனாலும் அந்தப் பொழுதுகளில், சுற்றிலும் நடக்கும் மரணங்கள், அதற்குப் பிந்தைய நுண்ணுணர்வுப் பதிவுகள், கேள்விகள் என திடீரென்று படமெடுத்து ஆடும் பாம்பைப் போல, நாவல் பல அடுக்குகளின் வழியே வாசகனை அழைத்துச் செல்கிறது.

முந்தைய நாள் பக்கத்து அறையில் இறந்தவர் உள்பட அந்த வளாகத்தில் இதற்கு முன்பு மரணமடைந்தவர்களின் ஆவிகள் அல்லது ஆத்மாக்கள், நமது அன்றாட வழக்கில் சொன்னால் – நீத்தாருடன் உரையாடுகிறான் பழனிவேலு. சுற்றியிருக்கும் காக்கைகளின் உருவில் அவர்களைக் காண்கிறான். சாப்பாடு மட்டுமல்ல, மது வரை அவர்களுக்கு அளித்து – அதாவது பூமியில் தெளித்து – கிறங்கடிக்கிறான். நீத்தார் ஆடவர் மட்டுமல்ல, பெண்களும் மது அருந்துகிறார்கள். இந்த உறவாடலின் உச்சம் அவனை எங்கே அழைத்துச் செல்கிறது…?

படித்துப் பாருங்கள். ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல நகர்த்திச் செல்கிறார் வா.மு.கோ. இத்தனைக்கும் அமானுஷ்யம், பித்ரு லோகம் போன்ற இப்படியான ஏரியாக்களின் டெம்பிளேட் வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை.

அன்றாட வாழ்வில் மரணம் பற்றி வெளிப்படையாக அல்ல, மறைமுகமாகக்கூட பேசுவதற்கு மனிதர்கள் தயங்குகிறார்கள். பேசுவதைத் தவிர்ப்பதன் மூலம் நடக்கவிருப்பதை தவிர்க்கமுடியாது என்பதை அறிவார்கள். ஆனாலும் பேச விரும்பவில்லை. இந்தப் பின்னணியில், வா.மு.கோ.வின் பழனிவேலு நோய்ப் படுக்கையில் இருந்துகொண்டு, – ஏதோ கடைவீதிக்குச் சென்று வருவது போல – மரண உலகத்துக்குள் போவதும் வருவதுமாய் இருக்கிறான். நாவலின் முடிவில், “பழனிவேலு மரணத்தை வென்றவன் – இதுவரை வரவில்லை, வந்தாலும் லெஃப்ட் ஹேண்டால் டீல் பண்ணுவான்…” என்பது போன்ற உணர்வை வாசிப்பவர்கள் மனத்தில் வா.மு.கோ. மெல்லப் படரவிடுகிறார்.

“பழனிவேலு போல நாமும் மரணத்துக்கு நேயமாக இருந்தால்தான், என்ன?” என்ற ரீதியில்கூட வாசித்த சிலர் சிந்திக்கக்கூடும்.

வாழ்வின் எல்லையை, வாழும்போதே தொட்டுத் தொட்டு விளையாடும் நுண்கலையை நமக்குப் பயிற்றுவிக்கிறார், வா.மு.கோ. புதிய விளையாட்டுகளில் ஆர்வமுள்ளோர் வாசித்துப் பயனுறலாம்.

***

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *