– அவை நாயகன்
தைமாதக் குளிர் காலையில் அந்த ஒரே குரல் மட்டும் உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. நல்லுசாமி தான் அது. இருந்த சில பேர் போய் விவரம் கேட்பதும் சமாதானம் செய்வதுமாக இருந்தார்கள். அவர் அடங்கவில்லை. மாறி மாறிக் குற்றம் சாட்டும் குரலில் இரைந்து கொண்டிருந்தார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் கொண்டம்பட்டி சாமுவேல். நாயனக் காரர். தூக்கத்திலிருந்து எழுந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டே நல்லுசாமியின் கூச்சலைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
முக்கால் பவுன் மோதிரத்தைக் காணவில்லையாம். லவ்டேல் எஸ்டேட்டில் இருந்து வந்திருக்கும் நல்லுசாமியின் மைத்துனியுடையதாம்.
ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வையைக் குழந்தைகளுக்குப் போர்த்தி விட்டு, நிச்சயதார்த்தம் முடிந்து தூங்கப்போனவள் பெட்ஷீட் ஏதாவது கிடைக்குமா என்று தேடி வந்தவள் வாத்திய கோஷ்டியிடம் கிடந்த ஒரு பழைய சேலையை எடுத்துக்கொண்டு போய்த் தலைக்கு மப்ளரைச் சுற்றித் தூங்கத் தொடங்கிய போது அனிச்சைச் செயலாக இடது கைவிரலைத் தொட்டுப் பார்த்தபோது தெரிந்திருக்கிறது. மோதிரம் இல்லை. நடந்து போன இடம், உட்கார்ந்த இடமெல்லாம் பொறுமையாகத் தேடிப் பார்த்து விட்டாள். ஒரு இடம் மட்டும் மங்கலாகவே நினைவில் இருந்தது. சுதி வாசிக்கும் பையனின் அருகில் கிடந்த பழைய சேலையைக் குனிந்து எடுத்த போது நழுவி விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். அப்போது அரவம் கேட்டு ஒரு செருமலுடன் சாமுவேல் திரும்பிப் படுத்துக் கொண்டதாகவும் அவளுக்கு அரைகுறையாய் நினைவு. அதற்கு முன், உக்கார்ந்திருந்த கித்தானில் இருந்து கையில் ஒட்டிக் கொண்ட கறையைப் பார்த்தவள், பாத்ரூமுக்குப் போய் அங்கே தேடிப் பிடித்த ஒரு லக்ஸ் சோப்புத் துண்டில் சுத்தமாகக் கழுவிவிட்டுக் கையை முகர்ந்து பார்த்துக் கொண்டும் வந்திருக்கிறாள். பட்டத்து ராணி காஞ்சனா உபயோகிக்கும் சோப்பு அது.
அக்காள் புருசனிடம் காதைக் கடிக்க, அவரும் கேட்டுவிட்டு ஒரே நிமிடம் யோசனையில் இருந்தபின் அவளுக்கு ஏதோ ஆலோசனைகள் கொடுத்தார். உடனே ஆரம்பித்துவிட்டது பிரச்சினை. நல்லுசாமி குதிக்க ஆரம்பித்து விட்டார். தூக்கம் வராமல் உலாத்திக் கொண்டிருந்த மிலிட்டரி, சத்தம் கேட்டு அங்கே வந்ததும் சற்றே அடங்கினார். விவரம் கேட்டுக் கொண்ட பிறகு,
‘டேய் நல்லு. இதெல்லாம் சரியில்லப்பா. நல்லாத் தேடிப் பாக்கச் சொல்லு. பொம்பளப் பிள்ளைகளுக்கு ஆயிரம் யோசனை இருக்கும். கியாபகம் தப்பிப் போயிருக்கலாம். அதுவும் யாரை இழுத்து விட்டிருக்கே. சாமுவேல் நம்ம சொந்தக்காரன்டா. விரல்ல வித்தை வெச்சிருக்கிறவன். அப்பாவி. திருட மாட்டான். அவன் திறமைக்கு இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்ல. பொல்லாத காலமடா. முதலில் உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துப் போடு. அப்போது உனது சகோதரனின் கண்ணில் உள்ள துரும்பை எடுக்கலாம் -னு வேத வசனம் சொல்றது தெரியாதா உனக்கு..? யாரையும் தூஷணமாய்ப் பேசப்படாதப்பா. பொறுமையாப் பாக்கலாம். போ. போய் தூங்கு..’
‘நாளைக்குப் பேசத்தான் வேணும் பெரியப்பா..’ சொல்லிவிட்டுப் போனார் நல்லசாமி.
சுவரில் சாய்ந்து வலது கையைத் தரையில் ஊன்றியவாறே கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல் எழுந்து கொண்டார். வேலுச்சாமியும் பையனும் அந்தச் சத்தத்திலும் உறக்கம் கலையாமல் கிடந்தார்கள். வெளியே வந்தார். வில்லியம் வீட்டின் முன் கிளை பரப்பியிருந்த வேப்ப மரத்தடியில் போய் நின்றார். சட்டைக்காலரை உயர்த்தி இரு காதுகளுக்கும் சேர்த்து குளிருக்கு அணைப்பாகக் கொண்டு அமர்ந்தார். உட்கார்ந்த நிலையில் சற்றே கண்ணயர்ந்தும் விட்டார். யாரோ வந்து எழுப்பி விட்டார்கள்.
நேராக வாய்க்காலுக்குப் போய்க் குளித்து, துணி மாற்றிக் கொண்டு வந்து சகாக்களை உசுப்பி விட்டார்.
கொண்டம்பட்டி சாமுவேலுவைத் தெரியாதவர்கள் அந்தப் பகுதியில் யாரும் இருக்க முடியாது. அற்புதமான நாதசுரக் கலைஞர். தவில்காரர்களாகவே இருக்கும் அவரது உறவுகளில் இந்த ஊது கருவியை விருப்பத்துடன் தேர்ந்து கொண்டவர். ஒற்றை நாயனம் தான். துணைக்குத் தவில் வாசிக்க வேலுச்சாமி, ஒரு சிறு பையன் சுதிப்பெட்டியில்.
கல்யாணப் பத்திரிக்கையில் கிறிஸ்தவர்கள் சாமுவேல் என்று ஆர்வத்துடன் போட்டுக் கொள்வார்கள். இந்துக்களுக்கு அவர் சாமிவேலன்.
துல்லியமாக இருக்கும் வாசிப்பு. கிறிஸ்தவக் குடும்பங்களில் கல்யாண, துக்கச் சடங்குகள் கலந்து கட்டித்தான் இருக்கும். மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், தாரா முகூர்த்தம் எல்லாம் உண்டு. துக்க நிகழ்ச்சியில் பையன் மொட்டையடித்து வந்து நிற்க, முறை உள்ளவர்கள் கட்டி விடும் உருமால், வசூல் முடியும் வரை அவன் தலையிலேயே இருக்கும். வசதிக்குத் தகுந்த மாதிரி இந்து கிறிஸ்தவச் சடங்குகள் அவர்கள் சொல்படி கேட்டுக் கொள்ளும்.
சுப நிகழ்ச்சிகள் அந்தி சாய்ந்ததும் தொடங்கும். மாப்பிள்ளை அழைப்பை வேலுச்சாமியின் தவில் மேளம் தொடங்கி வைக்கும். ‘தோத்திரம் செய்வேனே.. ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே..’ என்று நாயனத்தில் தொடர்வார் சாமுவேல். இந்துக் கல்யாணம் என்றால் ‘முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே.’
நல்லுசாமி வீட்டில் கல்யாணம். அவரது மகள் ரெபேக்கா இரண்டு முறை எஸ் எஸ் எல் சி எழுதித் தேறாமல், கழுதை கிடக்கிறது என்று டைப்ரைட்டிங் லோயர் போய்க் கொண்டிருந்தாள். கணியூர் பையன் சத்திய குமார் மாப்பிள்ளை. வீட்டிலேயே நாலு தறி ஓடுகிறதாம். மீனாட்சி இண்டஸ்ட்ரீஸில் லேத் வேலை பார்க்கும் நல்லுசாமிக்கு இது எட்டாத உயரம். ஆனாலும் கடனை வாங்கி, ஒண்டிப்புதூர் ஓபிஸிஎஃபில் நகைகளை அடகு வைத்துச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். கல்யாணத்திற்கு இரண்டு சபையார்கள், ஏரோட்ரூம் காட்டில் பிள்ளையார் சிலை வைத்துத் தினமும் போய்க் கும்பிட்டு வரும் சுந்தரராஜ் குடும்பம் வரை எல்லாரையும் அவர் அழைத்திருக்கிறார்.
சாமுவேல் கோஷ்டி திருமண வீடுகளிலேயே தங்கிக் கொள்ளும். கள்ளு சாராயப் பழக்கம் இல்லாமல் தனது குழுவை வைத்திருந்தார் அவர். வேலுச்சாமி மட்டும் அவ்வப்போது நழுவிப் போய் பாத்ரூம் தடுக்கு மறைப்பில் பீடி குடித்து வருவார். சாமுவேல் மகன் ஊரில் குண்டு விளையாடிக் கொண்டிருப்பான். புல்லாங்குழல் தான் அவனுக்குப் பிடித்தது. விசேஷங்களுக்குக் கூப்பிட்டால் வரமாட்டான். வேறு பையனைச் சுதி வாசிக்க வைக்க வேண்டியதாயிற்று.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு பிறகு நிச்சயதார்த்தம் நடத்தப் பதினொரு மணி ஆகிவிடும். அந்த இடைப்பட்ட நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை வாசித்துவிட்டார் சாமுவேல். தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே, தாசரே இத்தரணியை அன்பாய், என்ன என் ஆனந்தம் -என்றெல்லாம் வாசிப்பு தொடர்ந்தபோது முக்காடிட்ட பெண்கள் உடன் பாடவும் செய்தார்கள். சிறுவர்கள் தாமும் முயன்று, முடியாத போது தாய்மார்களின் வாயசைப்பைப் பார்த்து உடன்பாடினார்கள்.
அவர்களுக்குப் பரீட்சை வைப்பதற்கு என்றும் ஒரு சில பாடல்களை வைத்திருப்பார் சாமுவேல். ராஜ ராஜ பிதா மைந்த தேசுலாவு சதா -என்று நாயனத்தில் எடுத்துக் கொண்டு போகும்போது, நாக்கைச் சுழற்றிச் சில சொற்களை மாற்றியாவது பாடிச் சமாளித்துக் கொள்வார்கள் பெண்கள்.
அன்று மிலிட்டரி ரகுநாத தாத்தாவின் விருப்பத்திற்கிணங்க செந்தமிழ்த் தேன்மொழியாள், இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் -என்று வாசித்து அவரையும் பரவசப்படுத்தினார்.
நிச்சயதார்த்தம் தொடங்கும் நேரம். இரு வீட்டாரையும் அழைத்துக் கித்தான் விரித்த தரையில் உட்கார வைத்தார்கள். வெற்றிலை பாக்கு, பழத்தட்டு, சீர் வகைகள் சேலை எல்லாம் வந்து சேர்ந்தன.
ஆயிரம் முறை பார்த்த சடங்குகள்தான். ஆனாலும் அவற்றில் இருக்கும் சுவாரசியம் கருதி ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து கொண்டு கவனிக்கலானார் சாமுவேல்.
மிலிட்டரி தான் ஆரம்பித்தார் : ‘சாமீ.. ஒரம்பரை எல்லாரும் வாங்க..’ வந்தவர்கள் கையெடுத்தனர்.
‘ஆமா.. எதுக்கு வந்துருக்கீங்க..? நீங்களெல்லாம் யாரு..? எங்கிருந்து வாரீங்க..? எதுவுமே தெரியாது போல அடுக்கினார். அவர்களும் புரிந்துகொண்டு தங்களது ஊர், வந்திருக்கும் நோக்கம் எல்லாவற்றையும் விளக்கினார்கள். ‘ஓகோ.. அப்பச்செரி. தடம் வழியெல்லாம் சரியாக் கண்டு வந்தீங்களாப்பா..?’ கேள்வியின் அர்த்தம் சரியான உறவு முறையைத் தெரிந்து தான் வருகிறார்களா என்பது.
‘எல்லாம் சரியாப் பாத்துதான் வந்தமுங்க. முறையில்லாமல் வந்தா மிலிட்டரித் துப்பாக்கியால சுட்டுத் தள்ளீர மாட்டீங்க..?’ ஒருவர் சொன்னதும் சிரிப்பு பரவியது. மணப்பெண்ணுக்குக் கொண்டு வந்த சீர்ப் பொருட்களைச் சரி பார்த்துச் சொன்னார் ஒருத்தர். கண்ணாடி,
சீப்பு, ஜடை வில்லை, ரிப்பன், கண்மை, ஆறுவண்ணச் சாந்துப் போட்டு, தவிர ஜாக்கெட் துண்டும் நிச்சயதார்த்தச் சேலையும் மல்லிகைச் சரத்துடன் தனித் தட்டில் என எல்லாருக்கும் காட்டி மறுபடியும் தட்டில் வைத்தார்கள். குறை இல்லாமல் கொண்டு வந்திருக்கிறார்களாம்.லாக்டோ காலமைன் புட்டியை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தார் அறிக்கை வாசிப்பவர். பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டு முக அழகைச் சிவப்பாக்கும் கிரீம் என்றவுடன் சலசலப்பு தொடங்கியது.
‘அதென்ன அவ்வளவு நெறமில்லாமலையா இருக்குது புள்ள.. ஒரு குரல் பெண்கள் கூட்டத்தில் இருந்து வந்தது. அறிக்கை தந்தவர் ‘நம்ம புள்ளய எல்லாரும் பாக்கலயில்லீங்களாக்கா. அம்மிணி எலிசபெத்து டெய்லரு மாதிரி இருக்குமுன்னும் யாரும் சொல்லல. பரவால்ல விடுங்க. பையனத்தான் பாக்கறீங்கில்ல. அந்த லைட்டைக் கொஞ்சம் சார் கிட்ட திருப்பிக் காட்டு தம்பி. அவரே கிரீம் போட்டுக்கட்டும். ஆறே வாரத்தில பாருங்க. எம்ஜிஆர் மாதிரி மாப்பிள்ள ஜோரா மின்னப் போறாரு..’ என்றதும் ‘சேம் சைடு கோல் போடுற மாமா’ -இடுப்பைக் கிள்ளினான் ஓர் இளைஞன்.
நிச்சயதார்த்தச் சேலையை மணப்பெண் கட்டிக்கொண்டு வரும்வரை என்ன செய்வது. அரட்டைக் கச்சேரிதான். அவரவர் ஊர்ப் பெருமைகளை அளந்து விடுவார்கள். ஊரில் தண்ணீர் வசதி தான் முக்கியமான கேள்வியாக இருக்கும். போர் பைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டு வரும் ரெபேக்காவுக்குக் கட்டிக் கொடுக்கும் ஊரில் பைப்பைத் திருகினால் சப்பைத் தண்ணீர் வந்துவிடும் என்பது பெற்றோருக்கு நிம்மதியாகவும், சிலருக்குப் பொறாமையாகவும் இருந்தது. அத்திக்கடவுத் தண்ணீரைக் கொண்டு வருவதாக மு. கண்ணப்பன் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குத் தரும் பரியத்தொகை எவ்வளவு என்ற கேள்வி வந்தது. ஊர்ப் பரியம் என்னவோ அதையே கொடுத்திரலாங்க -என்று சொன்னதற்கு இணங்க பத்தாயிரம் என்று முடிவாகி, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை காட்டி அதுதான் பத்தாயிரம் என்று சபையிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டார்கள். ‘பொண்ணுக்கு என்ன போடறீங்கன்னு கேக்கற காலமெல்லாம் மலையேறிப் போச்சுப்பா. வசதிக்குத் தகுந்தாப்புல உங்க பிள்ளைகளுக்குச் செஞ்சுக்கங்க. சபையில சொல்றதானாலும் சரி..’ என்றவுடன் அவசர அவசரமாக அந்தப் பேச்சு தொடராமல் பெண் வீட்டார் பார்த்துக் கொண்டார்கள்.
வெற்றிலை பிடிக்கும் சடங்கு தொடங்கியது. விளையாட்டும் வேடிக்கையுமாக நடந்தேறும் வைபவம். அண்டா மூடி போன்ற பெரிய தட்டு ஒன்றை நடுவில் வைத்து இருவீட்டாரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டார்கள். தத்தமது செல்வ வளத்தைக் காட்டும் வகையில், கொண்டு வந்து மறைவாக வைத்திருக்கும் வெற்றிலைக் கவுளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தமது பெருமைகளைப் பேசிக்கொண்டே மூடியின் ஓரத்தில் வெற்றிலையை அடுக்கத் தொடங்கினார்கள்.
‘இந்தாங்க நூறு கவுளி. எங்க சிறுமுகை கொடிக்காலில் இருந்து கொண்டு வந்திருக்கறோம்..’
‘இருகூரு நொய்யல் கரையிலே விளைஞ்ச நயமான வெத்தலைங்க. நம்ம கணக்குக்கு இதோ நூறு கவுளி..’
இரண்டையும் சேர்த்தால் மொத்தமே பதினைந்து வெற்றிலைகள்தான் இருக்கும். நேரம் போக்குவதற்கான விளையாட்டு என்பதால் சுவாரசியத்திற்குக் குறைவில்லை. அடுக்கும் வெற்றிலை வட்ட வடிவமாகச் சேர்ந்து தட்டை நிரப்பும் அளவுக்கு வந்தது. இனி இருவீட்டாரும் வெற்றிலையைப் பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். சமபங்கு எல்லாம் கிடையாது. இதற்கென்றே காத்திருக்கும் இருபக்க ஆட்களும் புலிபோலப் பாய்ந்து தட்டில் இருக்கும் வெற்றிலை அடுக்குகளை கைப்பற்றிக் கொள்வார்கள். யாருக்கு அதிகம் கிடைத்தது என்று நிர்ணயித்து அறிவிக்க நடுவர் கிடையாது. விளையாட்டு இப்படியாக முடிந்தது.
நிச்சயதார்த்தச் சேலையுடன் ரெபேக்கா வந்து எல்லாரையும் வணங்கிக் கொண்டாள்.
சோபியா லாரன் என்று முணுமுணுத்தான் ஒரு பையன். சாமுவேல் எழுந்து கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டார் அவர்களுக்கென்று ஒதுக்கி விடப்பட்ட விடுதி வீட்டில் தங்கிக் கொண்டார்கள்.
அதிகாலை முகூர்த்தம் என்பதால் சபை கலைந்து ஓய்வை நாடிப் போனது. மாலை வேளையில் தொடங்கி உற்சாகமும் கொண்டாட்டமாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கெடுப்பதற்கென்றே அந்தச் சம்பவம் வந்து சேர்ந்திருக்கிறது.
முகூர்த்த நேரம் தொடங்கிவிட்டது. ‘ஸ்தோத்திரம் ஏசு நாதா உமக்கென்றும்’ என்று நாயனத்தைத் தொடங்கி விட்டார். வீட்டு வாசலிலேயே பந்தல் போட்டு, காட்டன் மில் கித்தானைச் சுற்றிக் கட்டி வாழைமரத் தோரணத்துடன் மின்விளக்கில் ஜொலித்தது கல்யாண வீடு. உபதேசியாரை அழைத்து வரும்போது நல்ல வெளிச்சம் வந்து விட்டது.
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம். புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு -பாடும் குரலில் தொடங்கினார் உபதேசியார். கானா ஊரில் நடந்த திருமணம், ஏசு நடத்திய அற்புதங்கள் பற்றி விளக்கித் திருமணத்தை முன்மொழிந்தார். சர்ச்சில் இரு முறை மண ஒப்புதல் கூறும் ஓலைவாசிப்பை நல்லுசாமி தவிர்த்து இருந்தார். பெரிய இடம். சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிலேயே கல்யாணத்தை வைத்துக் கொண்டார். தீவிர உறுப்பினர் என்பதால் உபதேசியாரும் மறுக்காமல் கலந்து கொண்டது அவருக்கு நிறைவுதான்.
ஒரு வார காலமாகப் பயிற்சி எடுத்துக்கொண்ட வாழ்த்துப் பாடலோடு ரெஜினா வந்தாள். டீச்சர் டிரெய்னிங் போய்க் கொண்டிருப்பவள். துணைக்கு ஒரு சிறுமி. உனக்கு மட்டும் எனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் -என்ற சினிமாப் பாடலை, மகிழ்வுடனே மகிழ்வுடனே மலர் தெளிப்போமே எனப் புனைந்து பாடினார்கள். ரெஜினாவின் குரல் பாக்கு இடிக்கும் சத்தம் போலிருக்க, சிறுமி ஒப்பேற்றி முடித்தாள்.
சிற்றுண்டி முடிந்து உபதேசியாரை வழியனுப்பி வைத்த பின் சாமுவேலின் வாத்திய நேரம் தொடங்கியது. முந்தைய இரவு குளிர் காரணமாக வராமல் இருந்த சுந்தரம் தாத்தா தனது பித்தளைப் பூண் போட்ட கைத்தடியுடன் வந்து சேர்ந்தார். கல்கத்தாவில் இருந்து அவரது மூத்த பெண் இந்திராகாந்தி வாங்கிக் கொடுத்தது.
‘சின்னஞ்சிறு பெண் போலே போடு சாமி வேலு..’ தாத்தாவின் நேயர் விருப்பம் உடனே நிறைவேற்றி வைக்கப் பட்டது. தொடர்ந்து சினிமாப் பாடல்களும் கீர்த்தனைகளுமாகத் தொடர்ந்தது. கச்சேரியில் எதிர்பாராத விதமாக ஒரு பாடலை நுழைத்தார் சாமுவேல். ‘வாருமையா போதகரே. வந்தெம்மிடம் தங்கியிரும்.’ ரசிகர்களுக்கு ஒரே குழப்பம். மாலை நேர ஆராதனையில் பாடப்படுவது அது. வேளை பிந்தி வாசிப்பதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை. அவரோ ‘ஒளி மங்கி இருளாச்சே. உத்தமனே வாருமையா’ வரியை வாசித்து விட்டுக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
மோதிரப் பஞ்சாயத்தை நல்லுசாமி கொண்டு வந்தார். பொறுமையாகக் கேட்டார் தாத்தா. மிலிட்டரியும் வந்து சேர விசாரணை தொடங்கியது. லவ்டேல்காரி குழப்பமாகச் சொல்வதும், நல்லுசாமி அவளை அடக்கி விட்டுக் குற்றத்தை வலுப்படுத்துவதுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டாரிடம் போடுவதாகச் சொன்னதில் இரண்டு பவுன் குறைவதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை அவருக்கு. எல்லாம் மச்சினி கையில் தான் இருக்கிறது. ‘நாங்க யாரும் எடுக்கலைங்க..’ சாமுவேல் ஒரே வார்த்தையைத் திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கோஷ்டிக்கு அப்போதுதான் விசாரணையின் தீவிரமே தெரிந்தது.
எழுந்து கொண்டார் சாமுவேல். நேராகப் போய்த் தனது நாயனத்தை மட்டும் உறையோடு சேர்த்து எடுத்து வந்து தாத்தாவின் முன்னால் வைத்தார்.
‘இதுவரைக்கும் உங்க எல்லாரையும் என்னோட உறவுக்காரங்களாத்தான் பார்த்திருக்கிறேன். இன்னிக்கு எல்லார் முன்னாலயும் பழியைச் சுமந்து நிக்கறேன். ஊர்க்காரங்க, உறவுக்காரங்க, புதுச் சொந்தங்க எல்லாரும் சாமி சாமியா இருந்து என்னை மன்னிச்சிடுங்க. இனிமே நான் வாசிக்கப் போறதில்லை. திருட்டுப் பட்டத்தோட என்னோட உசுரா இருக்கிற நாயனத்தை நான் தொட மாட்டேன். ‘ துண்டை எடுத்து உதறினார்.
‘பைத்தியக்காரா.. பொருள் தொலஞ்சுதான் போயிருக்கு. கிடைச்சிரும். அதுக்காக நீ ஏண்டா தொழிலைத் தொலைச்சுக்கணும். பேசுன பணத்தை வாங்கிக்க. அதோட, பெரியவன் சொல்றதக் கேளு. நாயனத்தை எடுத்துக்க. எண்ணும் போல வந்து போ..’ வற்புறுத்தினார் தாத்தா. அவரோ அசையவில்லை. மாப்பிள்ளை வீட்டாரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள்.
‘சரிடா. நீயே பெரிய மனுசனா இருந்துக்க. என்ன இஷ்டமோ செஞ்சுக்க. இதில நாங்க எதுக்கு. டேய் மிலிட்டரி. தெரியுமா உனக்கு.? இவனோட அப்பனும் நானும் கோதவாடிக் குளத்துல நீச்சலடிச்சு, புளியம்பழம் பொறுக்கி ஒண்ணாத் திரிஞ்சவங்க. இவன் நான் சொல்றதக் கேக்க மாட்டானாம். விட்ருடா..’ கைத்தடித் துணையுடன் எழுந்து கொண்டார்.
‘மாமா.. மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க யாரையும் நான் மீறி நடக்கிறவன் இல்ல. மனசுக்குச் சரின்னு பட்டதைத் தான் செஞ்சிருக்கேன். வேற என்ன சொல்றது. பொருள் கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டும். பழியைச் சுமந்துட்டு நெஞ்சை நிமித்தி நடக்க என்னால முடியாதுங்க. எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க..’
சொல்லிவிட்டு மேல் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்த போது அவரின் உடம்பு லேசாக அதிர்வது தெரிந்தது. வேலுச்சாமியும் சுதிப்பெட்டிப் பையனும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அடுத்த நாள், பாத்ரூமில் கிடந்த மோதிரத்தை லவ்டேலின் பேத்தி எடுத்துப் பாட்டியிடம் ஒப்படைத்தாள்.
—-000—-

அவைநாயகன்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.
சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

