அரவிந்த் வடசேரி

“அப்பா, அப்பா ஓடிவாங்களேன். இத வந்துப் பாருங்க.”

என்  குரலில் இருந்த அவசரததைக் கண்டு பயந்ததிநினாலாக  அப்பா  படபடப்பை   கட்டுப்படுத்த முடியாமல் இரண்டிரண்டு படிகளாகத் தாவி மாடிப்படியில் வேகமாக ஏறி வந்தார். முக்கியமான  காரணம் இல்லாமல் அவர் காலையில் யோகாவும் தியானமும் செய்யும்போது இடையூறு செய்யக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார். அப்பா அன்பானவர் என்றாலும் கண்டிப்பானவரும் கூட. வீண் பிடிவாதங்களையும் அவருடைய அறிவுரைகளை மீறுவதையும் ஒருபோதும் விரும்ப  மாட்டார்.    

“அப்பா யோகா செய்யும்போது தொந்தரவு செய்யறியேம்மா” என்றபடியே வந்தார் அவர்.

நான் படுக்கையறை ஜன்னலின் வழியாக பால்கனியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குருவிக் குஞ்சுகளுக்கு என்னவோ ஆகியிருக்க வேண்டும் என்று அவர் ஊகித்திருக்க வேண்டும்.

“பாருங்கப்பா, திரும்பவும் குஞ்சுகளைக் காணோம். அந்தக் குருவி பாருங்க இரை கொண்டுவந்து அழுதுகிட்டே இருக்கு”, என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

வீடு கட்டும்போதே மாடியில் பெரிய பால்கனி வேண்டும் என அடம்பிடித்தவர் அம்மா தான். பெரிய பால்கனி நிறைய செடிகள் வைப்பது குறித்தும் முன்னிரவு நேரம் மங்கலான மஞ்சள் நிற விளக்கு ஒளியில், சிலு சிலுவென வீசும் தென்றல் காற்றில் குடும்பமாக அமர்ந்து கதை பேசுவதும் விளையாடுவதும் குறித்தும் அம்மா பேசுவதைக் கேட்டு நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன்.

“இனி ஒரு வீடு கட்டவா போறோம். இப்போ அனுபவிச்சாத்தான் உண்டு இதெல்லாம். அந்த கான்ட்ராக்டரும் கூட இதைத்தானே சொன்னார்” என்றார்  அம்மா.  

“இப்படியே ஒவ்வொன்னையும் பெரிசாக்கீடடே போனா வீடு கட்டும் செலவும் அதிகமாகும். கான்ட்ராக்டருக்கு வீடு பெரிசாகப் பெரிசாக இலாபமும் அதிகமாகும்னு அவர் அப்படிச் சொல்வார் “  என கவலையோடு சொன்னார் அப்பா. இருந்தாலும் அவர் அம்மாவின் ஆசைகளுக்கு தடை போடுபவர் இல்லை என்பதால் பெரிய பால்கனியோடு வீட்டைக் கட்டினார் .      

வீட்டிற்கு குடி வந்த நாள் முதலாக நானும் அம்மாவும் போட்டி போட்டுக் கொண்டு செடிகளை வைப்பதும் பராமரிப்பதுமாக பால்கனியில் ஒரு குட்டித் தோட்டத்தையே உருவாக்கி வைத்தோம். நான் போகுமிடங்களிலெல்லாம் கிடைக்கும் செடிகளை பறித்துக் கொண்டு வந்து அம்மாவிடம் தருவேன். அவரும் சளைக்காமல் அனைத்தையும் நட்டு பாராமரித்தார். வீட்டிற்கு வருபவர்கள் தோட்டத்தைக் கண்டு பாராட்டுவது அம்மாவிற்கும் எனக்கும் மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள், தொட்டியில் வளர்த்த செடி ஒன்றின் கீழே ஒரு குருவிக் கூடும் அதில் மூன்று முட்டைகளும் தோன்றின. அரவம் கேட்டால் பறந்து விடும் குருவிகள் உடன் திரும்பிவந்து அடைகாப்பதைத் தொடரும். அப்பாதான் சில நாட்களாகவே வீட்டைச் சுற்றி பறந்துக் கொண்டிருந்த கரிச்சான் குருவிகள் அவை என்றார். சில நாட்களுக்குப் பிறகு முட்டைபொரிந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்தன. இறகுகள் இன்னும் முளைக்காமல் மொட்டையாக கண்மூடிக் கிடந்தன குஞ்சுகள். அம்மா குருவியும் அப்பா குருவியும் மாறி மாறி சிறு பூச்சிகளையும் புழுக்களையும் கொக்கில் எடுத்துவந்து கூட்டிற்கு அருகில் வந்து கீ கீ என அழைக்க கண் மூடிய படியே கழுத்தை நீட்டி சிவந்த வாய் திறந்து குஞ்சுகள் இரை எடுத்தன. சில நாட்கள் கழிந்த ஒரு காலையில் இறக்கை முளைத்த குஞ்சுகள் கண் விழித்து துள்ளி பால்கனித் தரையில் விழுந்தன. காத்திருந்தது போல காக்கைகள் வந்து மூன்றையும் கொத்திச் சென்றன.

இந்த எதிர்பாராத துயர நிகழ்வு எங்கள் அனைவரையும் மிகவும் பாதித்தது. எப்படி இந்தக் குஞ்சுகள் பிற பறவைகள், பூனை போன்றவற்றிலிருந்து தப்பித்து பெரிய பறவையாக வளர முடியும் என நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். இனிமேலும் அவை இங்கே கூடுகட்டாது என நாங்கள் நம்பினோம்.  

ஆனால் அதிசயமாக, சில நாட்களுக்கு முன்னர்தான் மீண்டும் அதற்கு பக்கத்துச் செடியின் அடியில் கூடு கட்டி மூன்று முட்டைகளைப் போட்டிருந்தது அதே வகைக் குருவி.

“அதே குருவிதான் அப்பா” என்றேன் நான்.

“அதெப்படி உறுதியா சொல்லமுடியும் பாப்பா. அதே வகைப் பறவைன்னு தான் உறுதியா சொல்ல முடியும் இல்லையா?” என்றார் அப்பா.

“ஆமாம் அப்பா” என ஒத்துக் கொண்டேன் நான்.

“நாம் முடிவெடுக்கும்போது அவசரப்படக்கூடாது.  எல்லா வாய்ப்புகளையும் நாம கருத்தில் கொள்ளனும்.” என்றார் அப்பா.

“நிகழ்தகவுன்னு நீ படிச்சிருக்கையில்லையா?“ என்றார் அம்மா. 

“ஆமாம் அப்பா. நீங்கள் சொன்னதை இனி என்றும் மறக்கமாட்டேன்“ என்றேன் நான்.

அப்பா சிறிய விஷயங்களைக் கூட மிகவும் தீவிரமாக என்னிடம் பேசுவார். சரியான எண்ணங்களை சிறிய வயதிலேயே வளர்த்துக் கொண்டால் பெரியவர்களானாலும் பழக்கமாகி, தவறு செய்ய மாட்டார்கள் என்பது அப்பாவின் கருத்து. அது சரிதான் என மஞ்சு மிஸ்ஸும் சொன்னார்கள். அவரும்  எப்போதும் அப்பாவைப் போல கதைகளையும் அறிவுரைகளையும் சொல்வார். எனக்கு மிஸ்ஸை மிகவும் பிடிக்கும்.                          

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் குஞ்சு பொரித்திருந்தது. அந்தக் குருவிகளைப் போலவே நாங்களும் இந்தக் குஞ்சுகள் எப்படியும் தப்பி வளர்ந்துவிடும் எனும் நம்பிக்கையோடு இருந்தோம்.

“என்னங்க, என்ன ஆச்சு”, எனக் கேட்டுக்கொண்டே அம்மாவும் வந்து சேர்ந்தார். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர் “அடப் பாவமே! திரும்பவும் குஞ்சுக எல்லாம் போச்சா” என்றார் சோகமாக.                                        

“பாருங்கம்மா, இன்னும் கண்ணு கூட முழிக்கல” இதைச் சொல்லும்போது எனக்கு வார்த்தைகள் வெளி வரவில்லை.

அப்பாக்  குருவியோ அம்மாக்  குருவியோ வாயில் இரையுடன் வந்து குஞ்சுகளை அழைத்துக் கொண்டிருந்தது மேலும் துயரம் தருவதாக இருந்தது.

“சரி, சரி, கொஞ்சம் நேரம் சும்மா இருங்க. கதவைத் திறந்து என்ன ஆச்சுன்னு பாக்கறேன்” என அப்பா பால்கனிக்கு சென்றார்.

கதவைத் திறந்ததும் எங்கள் வீட்டுப் பூனை அங்கே இருந்து ஓடிப்போனது.

“நம்ம பூனைதான் பிடிச்சிரிச்சா அப்பா?” என நான் கத்தினேன்.

“இப்பத்தானே முடிவு செய்யும் முன் நன்றாக ஆராயணும்னு சொன்னேன். பாக்கலாம்” என்றார் அப்பா.

பூனை எறியிருந்தால் சட்டியே கூட கவிழந்திருக்கும் என்றும் இல்லை கூடாவது கீழே விழுந்திருக்கும் என்றார் அப்பா. ஒரு குஞ்சின் மீது ஈட்டியால் குத்தியது போன்ற ஒரே காயம் மட்டும்தான் இருக்கிறதென்றும் அநேகமாக காக்கைதான் மீண்டும் குஞ்சுகளைக் கொத்திக் கொன்றிருக்கும், என்றார் அப்பா.

“அந்த மொறத்தையும் துடைப்பத்தையும் எடுத்துவாம்மா” என்றார் அம்மாவிடம். அந்தக் குருவிக் குஞ்சுகளின் சடலத்தை முறத்தில் கூட்டி எடுத்து வீட்டின் பின்புறம் சிறு குழி தோண்டிப் புதைத்தார் அப்பா.

“இந்தக் காக்காய்க்கு என்னதான் கோபமோ குருவி மேல” என ஆதங்கத்துடன் சொன்னேன் நான்.

“ஒன்றை ஒன்று கொல்வதும் தின்பதும் இயற்கை. அதை நாம் ஒழிக்க முடியாது” என்றார் அப்பா “நீ பார்த்துக் கொண்டிருந்தாயே சிறு பூச்சிகளை பிடித்து குஞ்சுகளுக்கு இரையாகக் கொண்டு வந்ததை. அதுவும் ஒரு உயிர்தானே. சிறியதாக இருக்கிறது என்பதால் உன் கண்களுக்கு அவை தெரிவதில்லை. அதனால் உனக்கு அதன்மேல் அன்பும் பரிவும் இல்லை. இப்படித்தான் நாம் நம் பார்வையில் படுவதை மட்டும் வைத்து இயற்கையை தவறாகப் புரிந்து  கொள்கிறோம்” அவர் தொடர்ந்து சொன்னார்.

எனக்கும் அது சரிதான் எனத் தோன்றியது.

“இனி இந்தக் குருவிக இங்கே கூடுகட்டாது இல்லையா அப்பா?” என்றேன் நான்.

“யாருக்குத் தெரியும். அந்தக் குருவிகளைப் பொறுத்தவரை இதுதான் பாதுகாப்பான இடமாகத் தெரிகிறதோ என்னமோ!” அப்பா சொன்னார்.

“அடுத்த முறை கூடு கட்டினால் குஞ்சுகளைக் காப்பாத்த நாம ஏதாவது செய்யணும் அப்பா” என்றேன் நான்.

“முயன்று பார்ப்போம். மனிதனின் பிற உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் தன்னலமற்ற எண்ணம்தான் இன்னமும் நம் சுற்றுச்சூழலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நாமும் ஏதாவது செய்ய முனையலாம்“ என்றார் அப்பா.

அப்பா இப்பொழுதே அதைப் பற்றி நினைக்கத் தொடங்கியிருப்பார். அவர் ஏதாவது செய்வார் என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது. 

00                                                    

அரவிந்த் வடசேரி

கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  மொழிபெயரப்பிலும் தமிழில் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். ஆவநாழி மொழிபெயர்ப்புச்  சிறுகதைகள் மற்றும் உன் கனவுகளை உரைப்பவன் என இரு சிறுகதைத் தொகுதிகள் தரு வெளியீடாக வந்துள்ளன. ஆவநாழி இதழில் துணை ஆசிரியராக பொறுப்பாற்றுவதோடு இலக்கியக் கூட்டங்களில் நூல் அறிமுக உரைகளையும் அவ்வபோது நிகழ்த்துகிறார். விரைவில் ஒரு நாவல் மொழிபெயர்க்க வேண்டும் எனும் ஆர்வம் கொண்டுள்ளார்.      

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *