வா.மு.கோமு

குபேரவனக்காடு மிகப்பெரிய பரப்பளவைக்கொண்டது. எல்லா வனங்களிலும் சிங்கம் மட்டுமே ராஜாவாக இருந்து வருவது ஒரு நியதி என்றாகிப்போனதால் குபேரவனக்காட்டையும் சிங்கராஜா நரசிம்மன் தான் அரசாண்டு வந்தார். அவரது ஆட்சியின் கீழ் குபேரவனக்காடு செழிப்பாய் இருக்க பருவம் தவறாமல் மழை பெய்வதை நாம் சொல்லியாக வேண்டும். வனத்திலுள்ள நீர்க்குட்டைகள், குளங்கள் எல்லாமும் எல்லாக்காலமும் நிரம்பியே இருந்தன. இதனால் வனத்தில் வாழும் விலங்கினங்களுக்கு தண்ணீர்ப்பிரச்சனை என்பது இல்லாமல் இருந்தது. தண்ணீர்ப் பிரச்சனை இல்லாத வனம் சொர்க்கம் தானே!

இப்படியான குபேரவனக்காட்டை முற்றுகையிட்டு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட சுந்தரவனக்காட்டின் அரசனான சிங்கமுகனுக்கு நீண்டநாள் ஆசை. அதனால் தன் படை  பரிவாரங்களுடன் எந்த நேரமும் குபேரவனக்காட்டினுள் அவன் நுழைந்துவிடலாம் என்கிற அச்சம் வனத்திலுள்ள மற்ற விலங்கினங்களுக்குள் இருந்துவந்தது. அப்படி ஏதேனும் தாக்குதல் நிகழ்ந்தால் அது இரவு நேரத்தில் நடைபெறுமா அல்லது பகலிலேயே நடைபெற்று முடிந்துவிடுமா? என்ற கேள்வியும் குபேரவனத்தில் வாழும் விலங்கினங்களுக்குள் உலவிவந்தது.

எப்படியும் சிங்கராஜா நரசிம்மனும், சிங்கமுகனும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நாள் தொலைவில் இல்லையென ஏனைய விலங்குகள் நம்பிக்கொண்டிருந்தன. அப்படி நேருக்கு நேரான சண்டையில் யார் ஜெயிப்பார்? சுந்தரவனக்காட்டின் ராஜா சிங்கமுகன் சிறுவயதுக்காரன். கடந்த ஒருவருட காலமாகத்தான் ஆட்சிபீடத்தில் ஏறியவன் என்கிறார்கள். இங்கே நரசிம்மனுக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான். நீண்டகாலமாக நரசிம்மன் குபேரவனத்தின் ஆட்சிபீடத்தில் இருக்கிறார். வம்புச்சண்டைக்கு செல்லாதவர் என்றாலும் நிச்சயமாக வந்த சண்டையை நிச்சயம் எதிர்கொண்டு வெற்றிபெறுவார் என்றே எல்லா விலங்கினங்களும் நம்பிக்கை வைத்திருந்தன. குடிவிலங்குகளை காக்கத்தானே அவர் பதவியில் அமர்ந்திருக்கிறார்!

சுந்தரவனக்காட்டின் ராஜா சிங்கமுகன் குபேரவனத்தினுள் நுழைந்துவிடுவான் என்கிற செய்தி சமீப காலமாகத்தான் இங்கே சுற்றிவருகிறது. இதை வேண்டுமென்றேகூட யாரேனும் வனத்தினுள் பரவ விட்டிருக்கலாம். எந்த நிச்சயமும் இந்த விஷயத்தில் இல்லை.

இப்படியான நேரத்தில் குபேரவனத்தினுள் ராமு, சோமு என்கிற இரு நரிகள் அருகருகே இருக்கும் குகைகளில் குடும்பமாக வசித்துவந்தனர். இருவரும் அண்ணன் தம்பி தான். ராமுவும் சோமுவும் தாய் தந்தையருடன் கூட்டாய் இருக்கையில் ஜோடி போட்டுக்கொண்டு சென்று வேட்டையாடியவர்கள் தான். ஆனால் மனைவி என்றும் பிள்ளைகள் என்றும் வந்தபிறகு இருவரும் எதிரிகளாகிப்போனார்கள். இருவருக்குள்ளும் இப்போது பேச்சுவார்த்தை இல்லை. இரவு நேரத்தில் ராமுவும் அவன் மனைவியும் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து ஊளையிட்டால் போட்டிக்கு என்று மறுகுகையிலிருந்து சோமுவும் தன் குடும்பத்தாருடன் இணைந்து ஊளையை ஆரம்பித்திடுவான். அதுவொரு ஊளைச்சண்டை! தினமும் நாள்தவறாமல் அரைமணி நேரமாவது ஊளைச்சண்டையிடாமல் அவர்கள் வேட்டைக்கு கிளம்புவதில்லை. ஊளைச்சண்டையிடாமல் கிளம்பிய இரவுகளில் அவர்களுக்கு வேட்டையும் சரியாய் அமைவதில்லை.

அம்மா கடைசிப்பையனான சோமுவின் குடும்பத்தாரோடேயே தங்கிவிட்டது குகையில். வயதாகிப்போனதால் வேட்டைக்கெல்லாம் செல்லும் அவட்டை அவளிடமில்லை. பெரிய பையன் பக்கத்து குகையில் வாழ்ந்தாலும் கடந்த ஒருவருடமாகவே அவனிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டாள். அப்படி மீறிப்பேசினால் சோமுவும், அவன் மனைவியும் குகையிலிருந்து விரட்டியடித்து விடுவார்களோ என்கிற பயம் தான் அவளுக்கு. கடைசி காலத்தில் காடுமேடு என்று அலைய முடியாதுதான். சின்னவன் போட்டதை தின்றுவிட்டு குகையை பாதுகாத்தபடி படுத்திருப்பதுதான் அவளது வேலை.

சோமு சிலசமயம் தன் அம்மாவிடம் ஓய்வாயிருக்கையில் குபேரவனக்காட்டின் நிலைமையை எடுத்துச் சொல்லிகொண்டிருப்பான். ”பக்கத்து வனக்காட்டிலிருந்து சிங்கமுகனின் தலைமையில் பல விலங்குகள் நம்மை தாக்கவரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நம் சிங்கராஜா  உன்னைப்போல் வயதான ஒரு சோப்ளாங்கி. என்ன நடக்குமோன்ற கவலையில் வனவிலங்குகள் இருக்கின்றன அம்மா!” என்று சொல்வான்.

“எவன் படையெடுத்து வந்தா எனக்கென்னடா? எவன் ஆட்சி செஞ்சா எனக்கென்ன? அவனா எனக்கு தேடிவந்து தீனி குடுக்கிறான்? அவங்கவிங்களுக்கு அவங்கவிங்க பொழப்பு. அவங்கவங்க வயிறு ரொம்பினாச்சரி!” என்பாள். அம்மாகிட்ட போயி வன அரசியலைப்பத்தி சொன்னேன்பாரு என் புத்தியை மொசல்கறியாலதான் அடிச்சிக்கணும்!

இப்படியான நேரத்தில் ராமு பகல்வேளையில் வனத்தினுள் மரங்கூட்டங்களுக்கிடையில் பதுங்கிப் பதுங்கிச் செல்லுகையில் அதன் காலருகில் ஒரு தொப்பி கிடப்பதை கண்டு மிரண்டு பின்வாங்கினான். முதலில் அவனுக்கு அது என்ன பொருளென்றே தெரியவில்லை. அதை காலால் உதைக்கக்கூட மிரண்டு போயிருந்தான். வெகுநேரம் அதைச்சுற்றிச்சுற்றி வந்தபடியிருந்தான். அது மரக்கட்டை வகையில் ஒன்றாயிருக்கலாம் அல்லது மரத்திலிருந்து விழுந்த பூவாய்க்கூட இருக்கலாம்! தொப்பியை ஒருவழியாய் முன்னங்கால்களால் எடுத்தவன் அதை திருப்பித் திருப்பிப்பார்த்தான். வனத்தில் இதுநாள்வரை கண்ணுக்குச் சிக்காத அழகான பூ இது. இதை நாம் கையோடு எடுத்துச் செல்வோமென தீர்மானித்தவன் தொப்பியோடு வனத்தினுள் பிரயாணப்பட்டான்.

ரொம்பகாலமாக அவனுக்கு ஒரு குரங்கு நண்பன் இருந்தான். அவன் பெயர் மணி. மணிக்கும் இவனுக்கும் ஒரே வயது தான். சிறுவயதில் ஒரு குட்டிப்பாம்பை கையில் பிடித்துக்கொண்டு கதறிக்கொண்டிருந்த மணியை நெருங்கி பாம்பைக் கடித்து துண்டாக்கி ராமு காப்பாற்றியதிலிருந்து மணி இவனோடு நட்பாய் இருந்தான். மணி தன் கூட்டத்தாரோடு எப்போதும் சேர்ந்திருக்க மாட்டான். அவன் வனத்திலிருந்து வெளிப்பிரயாணமெல்லாம் செய்பவன். திடீரென ஒரு மாதம்வரை கண்ணில் தென்பட மாட்டான். அவனைத்தேடித்தான் மாமரக்குளம் நோக்கி ராமு சென்று சேர்ந்தான். இது மாம்பழ சீசன். வனத்திலுள்ள மாமரங்கள், நாவல் பழங்கள் என எல்லாமும் பழுத்து மரத்தில் கொத்துக்கொத்தாய் தொங்கியபடியிருந்தன. எல்லாமரங்களிலும் பறவையினங்களின் கூட்டம் இருந்தது.

“மணி.. டேய் மணி!” என்று குரல் கொடுத்துக்கொண்டே ராமு  சென்றபோது கையில் பாதி கடித்த மாம்பழத்துடன் எதிர்க்கே மணி வந்தான். “ஐ தொப்பி!” என்றான் கண்களை விரித்தபடி.

“தொப்பியா? இது பூவுன்னு நெனச்சிருந்தேன்!”

“மனுச மிருகங்க தலையில் இதத்தான் வெய்யிலுக்கு போட்டிருக்கும்! உன் தலையில தொப்பியை வச்சிக்க! அழகா இருப்பே நீயி!” என்று மணி சொன்னதும் ராமு தொப்பியை தன் தலையில் வைத்தான். அவ்வளவுதான்!

அந்த இடமே திடீரென மாறிப்போயிற்று! அருவிக்கருகே ராமு நின்றிருந்தான். இது அவன் குபேரவனமல்ல! குபேர வனத்தைவிட பலமடங்கு அழகான வனம். அங்கே பறந்து திரியும் பறவைகள் எல்லாமும் மிகப்பெரியதாய் இருந்தன. அருவியின் கரையோரத்தில் பல பெண் நரிகள் குளித்துக்கொண்டிருந்தன. எங்குபார்த்தாலும் அழகழகான பெண் நரிகள். ஆண்நரிகளே அங்கே இல்லை.

“யார் நீ? இங்கெல்லாம் நீ வரவே கூடாது! இதெல்லாம் தப்பு தெரியுமா.. கிளம்பிடு! ஆமா நீ எப்படி இங்கே வந்தே?” குளித்துக்கரையேறியிருந்த பெண்நரி ஒன்று ராமுவிடம் வினவியது.

“நான் வந்தது இருக்கட்டும் அழகான நரிப்பெண்ணே! இது எந்த வனம்? இதன் பெயரென்ன? இப்படி அழகான வனத்தை நான் பார்த்ததேயில்லையே!”

“இது லோகம் பதிமூனு! ஆமா உன் லோகத்தின் எண் என்ன?”

“லோகமா? அதெல்லாம் எனக்குத்தெரியாது.. குபேரவனம் என் வனம்! இங்கிருக்கவும், இங்கேயே தங்கிடவும் எனக்கு கொள்ளைத்த ஆசையாய் இருக்குது அழகிய நரிப்பெண்ணே!”

“அப்படியெல்லாம் நீ இங்கே தங்கிட முடியாது. குபேரவனம் என்கிறாய்.. அப்படியானால் அது பூமியில் இருக்கவேண்டும். லோகம் ஒன்பது. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் எப்படி நீ இங்கே வந்தாய்?”

“இது உங்க எடமாவே இருந்துட்டு போவுது என் அழகிய நரிப்பெண்ணெ! நான் ஒரு சுத்து இந்த அழகிய வனத்தை சுற்றிப்பார்த்துவிட்டு மெதுவாய்த்தான் செல்வேன்!”

“இங்கே அதற்கெல்லாம் அனுமதி கிடையாது. வேண்டுமானால் உனக்கு நான் உதவமுடியும்!”

“அழகிய நரிப்பெண்ணே.. நீ எனக்கு உதவுகிறாயா?”

“ஆமாம்! லோகம் பதிமூனு சொர்க்கலோகத்திற்கு இணையானது. இங்கே உயிர்வாழும் நரிகள் தந்திரங்கள், மந்திரங்கள் நிரம்பியவை. உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். அதை வைத்துக்கொண்டு லோகம் ஒன்பதில் நீ நலமாய் வாழலாம். மீண்டும் இங்கே வராதே! எப்படி வந்தாயோ அப்படியே திரும்பச் சென்றுவிடு! இந்த டீல் உனக்குப் பிடிச்சிருக்கா?”

“நல்லாருக்கே! சரி நீ எப்படி எனக்கு மூன்று வரங்கள் தரமுடியும்? நம்பிக்கை வைக்கிற மாதிரி ஒன்னும் தெரியலையே! ஏமாத்து வேலையா இருந்தா? இருந்தாலும் எனக்கொன்னுமில்ல!”

”ஏமாத்துற வேலையெல்லாம் இல்லே! உன்னை இங்கிருந்து சந்தோசமா அனுப்பனும்னு யோசிச்சு சொல்லியிருக்கேன்! சரி நீ கேளு!”

“சரி ரொம்ப ஆசைப்படுறே என் அழகிய நரிப்பெண்ணே! மூனு தான் கேட்கணுமா? சரி முதலாக எங்க குபேர வனத்துல மழை வருடம்தோறும் தவறாம அதிகமா பெய்யணும்!”

“நல்ல விஷயமா கேட்டே நீ! இப்படித்தான் கேட்கணும். மழையினால மற்ற விலங்குகளுக்கும் சந்தோசம் தான்! சரி அடுத்ததை கேளு!”

“எங்க வனத்தை ஆளுறவர் நரசிம்மன்ற சிங்க ராஜா.. அவரு வனத்துல நுழையிற எதிரிங்களை தோற்கடிச்சு நீண்டகாலம் வாழணும்!”

“நீ முன்னே கேட்டதை விட இது அற்புதம்! நீயொரு சிறந்த வனவிலங்கு. கடைசி வரத்தை கேளு!”

“எப்பவும் போல என் குடும்பத்துக்கு வயிற்றுக்கு தேவையான உணவு மட்டும் திணமும் கிடைச்சாலே போதும்!”

“கொடுத்தாச்சு!”

அதே சமயம் ராமுவின் தலையிலிருந்த தொப்பியை மணி எடுத்துவிட்டான். ராமு திடீரென லோகம் பதிமூனிலிருந்து குபேரவனக்காட்டுக்கு திருப்பிவிட்டான்.

“என்னாச்சுடா உனக்கு? தொப்பியை நீ தலையில மாட்டினதும் அப்படியே படுத்து கொறட்டை போட்டு உடனே தூங்க ஆரம்பிச்சுட்டே! நானும் உன்னை கூப்பிட்டு கூப்பிட்டு பார்க்கேன்.. நீ எந்திரிக்கிற பாடில்லை! சரி கொஞ்சநேரம் தூங்கட்டும்னு விட்டுட்டேன். அப்பத்தான் யோசனை வந்துச்சு.. இந்தத்தொப்பி பண்ணுற வேலையா இருக்குமோன்னு! அதான் தொப்பியை உன் தலையிலயிருந்து எடுத்தேன்.. நீ உடனே முழிச்சிக்கிட்டேடா!” என்று மணி சொல்லவும், நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் ராமு மணியிடம் சொன்னான். கேட்டு முடித்த மணி, ‘சரி சரி இனிமேல் இந்தத்தொப்பியை நீ தலைக்கு வச்சிக்காதேடா!’ என்றான். ராமுவும் ‘சரி’ என்று சொல்லிவிட்டு தன் குகைக்குத் திரும்பினான்.

“உங்களுக்கு விஷயம் தெரியுமா? சுந்தரவனக்காட்டு ராஜாவுக்கு ஒடம்புக்கு முடியலையாம்! படுத்த படுக்கையில மாசக்கணக்கா இருக்கணுமாம். ஒடம்பு சரியான பின்னாலும் வேட்டையாட ஒருவருஷம் பக்கமா அவரால போக முடியாதாம்! நம்ம வனத்துக்கு வர்ற ஆபத்து இப்போதைக்கு இல்லங்க!” என்று ராமுவின் மனைவி மகிழ்ச்சியாய் சொன்னாள். ராமு வாங்கிய வரத்தைப்பற்றி எண்ணினான்.

பின்பாக ராமுவின் கையில் இருக்கும் பொருளைப்பார்த்து என்னவென அவள் வினவினாள். ராமு அவளுக்கு நடந்த விசயங்களை மீண்டும் மணியிடம் ஒப்பித்தது போலவே ஒப்பித்தான். இதைத்தான் ஒட்டுக்கேட்டுவிட்டான் பக்கத்து குகைவாசியான தம்பி சோமு. கேட்டதிலிருந்து அவனுக்கு நான்கு கால்களும் ஒரு கிடையில் நிற்கவே மாட்டேனென அடம் பிடித்தது. குட்டிகளை ஈன்ற தாய்ப் பூனையைப்போல தன் குகைக்குள்ளும் வெளியேயும் வெக்குடு வெக்குடுவென நடையிட்டான். இவன் செய்யும் அலப்பறையை கவனித்த அவன் மனைவி என்னவென அவனது நடையை நிறுத்தி விசாரித்தாள்.

“என் அண்ணங்காரனுக்கு ஒரு தொப்பி கிடைச்சிருக்காம்டி! அதை தலையில போட்டதீம் மாயலோகத்துக்கு போயிட்டானாம்! ஆனா முட்டாப்பயல் மூனு வரத்துல ஒரு வரத்தைக்கூட உருப்படியா வாங்கிட்டு வரலை. அவன் அப்படித்தான் எப்பயும். வெளங்காதபயல்! நீ போய் என் அண்ணிகாரிகிட்ட பேச்சுக்குடுத்து அந்த தொப்பியை வாங்கிட்டு வந்துசேரு! நாமளாச்சிம் உருப்படியா வரம் வாங்கி பிழைக்கலாம்!”

“நான் போய் கேட்டா தொப்பியை குடுப்பாங்களா?”

”அவங்கதான் வரம் வாங்கிட்டு வந்துட்டாங்கள்ல.. தொப்பியை வச்சுட்டு இனி என்ன பண்ணப்போறாங்க? தொப்பி அவங்க குகையில சும்மாதான் கிடக்கும். அதெல்லாம் எங்கண்ணங்காரனே நீ போய் கேட்டா எடுத்துக் குடுத்துடுவான்! என் மேல அவனுக்கு பிரியம் ஜாஸ்த்தி தெரிஞ்சுக்கோ!”

இப்படித்தான் சோமுவின் மனைவி புருசனின் கட்டளைக்கு மதிப்புக்கொடுத்து ராமுவின் குகைக்குச்சென்று பேசி தொப்பியை வாங்கி வந்துவிட்டாள். சோமுவிற்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! ‘நாஞ் சொன்னேன்ல.. என் மேல எங்கண்ணங்காரனுக்கு பிரியம் ஜாஸ்த்தின்னு.. கொண்டா கொண்டா!’ என்று வாங்கியதும் தன் தலையில் தொப்பியை அணிந்தவுடன் குகையிலேயே சாய்ந்து கொறட்டை போட்டு தூங்க ஆரம்பித்துவிட்டான்.

ராமு சென்ற அதே லோகம் பதிமூனுக்கு சோமுவும் போய்விட்டான். அருவிக்கரையோரம் அழகிய நரிப்பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். ‘ஐயோ! இன்னொருத்தன் இங்கே வந்து சேர்ந்துட்டானே! இதென்ன நம் லோகத்துக்குள் இப்படி அடிக்கடி அன்னியர்கள் வந்து வந்து போகிறார்களே! இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்படி இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதை முதலில் தகர்க்க வேண்டும் அல்லது கைப்பற்ற வேண்டும்’

“யார் நீ? லோகம் ஒன்பதிலிருந்தா வருகிறாய்?” நரிப்பெண் சோமுவிடம் கேட்டது.

“நான் யாராய் இருந்தாலென்ன.. எனக்கும் மூன்று வரங்கள் கொடுத்தால் இங்கே ஒரு நிமிசம் நிற்க மாட்டேன்! கிளம்பி போயிட்டே இருப்பேன்!”

“சரி தருகிறேன்.. ஆனால் இங்கே எப்படி வந்தாய் என்பதை மட்டும் சொல்லிவிடு!”

“அது தொப்பி! அந்த தொப்பியை தலையில் போட்டுக்கொண்டதும் நேராக இங்கே வந்துவிட்டேன்!”

“உன் தலையில் ஒன்றுமில்லையே! லோகம் ஒன்பதில் வைத்திருக்கிறாயா?”

“லோகம் ஒன்பதா?”

“அதுதான் நீ வாழும் இடம்!”

“ஆமாம்!”

“சரி உனக்கு வரங்கள் வேண்டுமானால் எனக்கு உன் தொப்பி வேண்டும் !”

“எனக்கு வரங்கள் கிடைத்த பிறகு தொப்பியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்! உனக்கே கொடுத்துவிடுகிறேன்.”

“சரி அப்படியானால் லோகம் ஒன்பதிற்கு இப்போதே நான் வருகிறேன்!”

அடுத்த நிமிடம் அழகிய நரிப்பெண் சோமுவின் குகையினுள் நின்றாள். சோமு குறட்டை போட்டு தூங்கிக்கொண்டிருப்பதையும் அவள் பார்த்தாள். அருகில் நின்றிருந்த சோமுவின் மனைவியிடம், ‘அந்த தொப்பியை எடுத்து என்னிடம் கொடு’ என்றாள். சோமுவின் மனைவி தொப்பியை சோமுவின் தலையிலிருந்து எடுத்ததுமே விழித்தெழுந்தான் அவன். எல்லாம் கனவில் நடந்தது போலத்தான் அவனுக்கிருந்தது. ஆனால் எதிரே அழகிய நரிப்பெண்ணைக் கண்டதும் மகிழ்ந்தான்.

“எனக்கு மூன்று வரங்கள் கொடுப்பாயா பெண்ணே!” என்றான்.

”கண்டிப்பாக! நீ வரங்களைக் கேள்!”

“நானே கேட்பதை விட வயதான என் தாய் ஒரு வரத்தை கேட்கட்டும். தப்பில்லைதானே!”

“தவறில்லை!”

சோமுவின் மனைவி குகையில் படுத்துக்கிடந்த தன் மாமியாரை எழுப்பி ஒரு கைப்பிடித்து கூட்டிவந்து நிறுத்தினாள்.

“அம்மா.. உனக்கு என்ன வேணுமோ அதை இந்த அழகிய நரிப்பெண்ணிடம் கேள். உடனே உனக்கு நீ கேட்டதை இந்த நரிப்பெண் தந்திடுவாள்!” சோமு சொன்னான்.

”பல காலம் நோய் நொடி இல்லாம நான் இந்த வனத்துல வாழணும்! எனக்கு அதுவே போதும்!”

“அப்படியே ஆகட்டும் அம்மா!” என்று அழகிய நரிப்பெண் சொல்லிற்று!

“உயிரோட இருக்குற வரைக்கும் நோயில்லாம் இருந்தாலே போதுமுங்க அத்தே!” என்று சோமுவின் மனைவி சொல்லவும், ‘அப்படியே ஆகட்டும்!’ குரல் அழகிய நரிப்பெண்ணிடமிருந்து வந்துவிட்டது!

சோமுவின் அம்மா உடம்பை வளைச்சு, நெளிச்சு.. குடுகுடுன்னு குகைவாயிலை நோக்கி ஓடி பின் திரும்பி ஓடி வருவதைக்கண்ட சோமுவிற்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அம்மா தெம்பாயிடிச்சுன்னு சோமுவிற்கு சந்தோஷம்! ஆனா இந்த பொண்டாட்டிகாரி வேற குறுக்கே ஒரு வரத்தை கேட்டு கெடுத்துட்டாளே!

”சரி ஒரு வரம் வீணாப்போயிடுச்சின்னா என் குகையென்ன இடிஞ்சா போயிரும்?” என்று சொல்லவும் ‘அப்படியே ஆகட்டும்!’ என்று தொப்பியை எடுத்துக்கொண்டு அழகிய நரிப்பெண் அந்த இடத்திலிருந்து காணாமல் போனாள். குகை உள்புறத்திலிருந்து சரிய ஆரம்பித்திருந்தது!

“அடக்கொடுமையே!” என்று சோமுவின் அம்மா குகையின் வாயிலுக்கு ஓட.. சோமுவும் அவன் மனைவியும் வெளியே ஓடி வந்தார்கள். குகையும் முழுதாய் சரிந்து மூடியிருந்தது!

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *