ஜார்ஜ் ஜோசப்
1
மான் நீரோடையை வாஞ்சித்துச் செல்வதுபோல் அவன் வெம்மை ஏறிய கற்பாறைகளை நோக்கி ஓடினான். கையில் அவனைவிட உயரமான தடி இருந்தது. செங்கோல்களைக் காட்டிலும் அதற்கு கனம் அதிகம் எனத் தூக்கி எறியும்போது சொல்வதாகத் திட்டமிட்டிருக்கிறான். சுற்றிலும் பகுதிபகுதியாய்ச் செழிப்புற்று வளர்ந்திருந்த முட்புதர்கள் எரியக் காத்திருந்தன. ஆனாலும் அவன் தடியை நீட்டி அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆடுகள் பாறையிடுக்கில் கசியும் நீரையும் உப்பையும் சுவைத்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த மண்டபத்தின் தூண்கள் மட்டும் மலையின் சரிவுக்கு மேல் வீராப்பாய் நின்றன. யாரேனும் ஒரு புலவராவது அங்கே தன் நீண்ட புராணத்தை அழியாக் காவியம் எனக் கருதி அரங்கேற்றம் செய்திருக்கக் கூடும்.
ஏறுவதற்கு வாகாக உள்ள பாறையின் மீது நின்று தன் இரு கைகளையும் விரித்துக் கீழே பார்த்தான்.
“வழிவிலகிப் போனதாய் நம்பவைக்கப்பட்ட தூய சந்ததியே, நீ வாழ்க” என்றான்.
புள்ளினங்கள் வட்டமடிப்பதை விட்டுவிட்டு, செவியைக் கூர்தீட்டித் தூண்களில் வந்தமர்ந்தன. விண்ணகத்தின் விருந்தினரே வந்துவிட்ட திருப்தியில் அவன் தொடர்ந்தான்.
”நீங்கள் பேசுகிறீர்கள்… நித்தம் ஓயாமல் சொற்களை அடுக்கி அடுக்கிப் பேசுகிறீர்கள். அந்தப் பேச்சினால் கொல்லவும் வாழவும் வைக்கிறீர்கள். அழிக்கவும் உண்டாக்கவும் செய்கிறீர்கள். சபிக்கவும் வாழ்த்தவும் கற்றுக் கொள்கிறீர்கள். கொஞ்சுவும் கொஞ்சப்படவும் வாய்த்துத் தொலைகிறது. சிலவேளை கெஞ்சவும் சிலவேளை மீறவும் துணிகிறீர்கள்.
பேதைகாள்… பேதைகாள்… உலகத்தார், சொற்கள் என்ற ஒன்றையே எல்லாவற்றுக்கும் மேலாய்க் கண்டித்து வருவதைக் கண்டிருப்பீர்கள். மூடிக் கொண்டவன் ஞானி; அடக்கிக் கொண்டவன் யோகி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நம்பாதீர்கள். வாழ வைக்கும் மழையைக் கண்டிக்கும் பதர்கள் அவர்கள். அள்ளிக் கொடுக்கும் நிலத்தைக் கூருபோடும் மூடர்கள். ஊன்றி வளர்ந்த செடிகளைப் பிடுங்கி எறியும் பைத்தியங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்…” அவன் சொற்களுக்கு ஊம் கொட்டுவதைப் போல் வெள்ளாட்டுக் குட்டி ஒன்று ’மே’ என்று விளித்தது. புறாக்கள் குனுகின. தோகை விரித்த ஆண் மயில் மலையுச்சி சிவன் கோபுரத்தின் மீது நின்று அகவியது. ஆவேசமான தன் அலைவுறுதலை நிறுத்தியபடி அவனது சொற்களின் அடர்த்திக்காக அமைதியை வாரி வழங்கியது காற்று.
”வெறிக்கொண்டு வெட்டிச் சாவும்படியும், தினவுகொண்டு முட்டி மோதும்படியும் உங்கள் தரப்பை நிறுவிடுமாறு பேசுங்கள். அப்போதுதான் அதை ஒருபோதும் சாதிக்க முடியாது என்பதை அறிவீர்கள். லட்சோபலட்ச பதங்களை விட்டுவிட்டுப் புதிய சொற்களைத் தேடிக் கண்டடைந்து நேசத்திற்கு உரியவர்களைக் காதலியுங்கள். அப்போதுதான் அவர்கள் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டார்கள் எனக் கண்டுகொள்வீர்கள். சுருங்கச் சொன்னதை எல்லாம் ஏன் விரித்துப் போடுகிறாய் என்பீர்கள் என்றால், நிறைத்துக் கொட்டப்படாமல் ஒளித்து வைக்கப்படும் ஒன்று கரைந்து போகாது என்பதை நீங்கள் அறியத்தான் வேண்டும்.
கொடுமுடியில் அமர்ந்திருப்பவனையே நோக்கிப் பேசி வைத்திருக்கிற பதர்களின் சொற்களை வாசிப்பதை நிறுத்துங்கள். இதோ என்னை எடுத்துக்கொள்ளுங்கள் நான் ஓய்வதும் இல்லை. உழைப்பதும் இல்லை. முன்னகர்வதும் இல்லை. பின்னோடுவதும் இல்லை. ஒருவன் வா என்றுகூறி அடித்தால் திரும்பி அடிக்கிறேன். ஒருத்தி என்னிடம் தா என்று கேட்டால், கேட்டதை மட்டும் கொடுக்கிறேன். உண் என்று தட்டை நீட்டினால் வாங்கிச் சாப்பிடுகிறேன். இன்று கிடையாது என்றால் கையசைத்து விடைபெறுகிறேன். என்னிடம் எதுவும் கைம்மாறு கேட்கப்படாததால், என்னால் என்ன வழங்க முடியும் என்பதையே அறியாதிருக்கிறார்கள். ஆகவே தான் உங்களுக்குச் சொல்கிறேன் பேதைகாள்… என்றும் நிலைத்திருப்பதாய் எண்ணும் பாறையே, எப்போதும் வேண்டுமானாலும் சாக நேரும் என்றறிந்த பறவைகளே, உணவைத் தவிர வேறு ஒன்றும் அறியாத ஆடுகளே என்னைப் பாருங்கள். நான் என்ன கெட்டாப் போய்விட்டேன். சொன்னதைச் சொன்னபடி செய்யும் மூடர்களைவிட நன்றாகத்தானே இருக்கிறேன்…” என்று உரத்துச் சிரித்தான்.
”இதோ என்னை அனுமதித்திடு. உன்னதமானவனுக்கு இடங்கொடு” என்று சினையாட்டின் முதுகில் ஏறி அமர்ந்தான். அது பாரம் தாங்காமல் கத்தியெடுத்தது. துள்ளித் தப்பியோடப் பார்த்தது. அவன் வசமாய் அதைத் தன் பிடியில் வைத்திருந்தான். ”ஓசன்னா ஓசன்னா என்று நீ அழைக்கத் தவறினாலும் எரி நகரத்திற்குப் போ எனச் சொல்ல மாட்டேன். கவலைகொள்ளாதே” என்று அதைத் தேற்றினான்.
சத்தம் வழமைகடந்து உயரவே, கோபுரச் சுவரில் சாய்ந்தபடி சுயமி எடுத்துக்கொண்டிருந்த திரளிலிருந்து ஒருவன் அவனைக் குறிபார்த்துக் கல்லெறிந்தான். தொலைவும் காற்றும் உதவவே அது அவன் மீது படவில்லை. அவர்கள் அவன் ஆடுகளைக் கடத்துபவன் என்றோ அடித்துத் துன்புறுத்துபவன் என்றோ கருதியிருக்க வேண்டும். ஆயிரம் வில்லாளிகள் அம்புகளை ஒரே நேரத்தில் எய்வதுபோல் எண்ணற்ற சிறுகற்கள் அவனை நோக்கி வரவே, அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்ட ஆபத்தான வெளியை விட்டுச் சற்றே அகன்று போனான்.
சுவரில் தன்னை அணைத்து நின்ற காதலியிடம், போதகனைச் சுட்டி ”அவன் ஆட்டைப் புணர்கிறான்” என்றான் காதலன். முதுகில் ஏறித்தான் புணர்ச்சி நிகழும் என்கிறானே என்று தன் காதலனை எண்ணி அவள் அச்சம் கொண்டான். இருவரும் காரணமே இல்லாமல் சிரிப்பதாய் ஒருவருக்கொருவர் நினைத்துக் கொண்டிருந்தனர்.
காரணமற்ற சிரிப்புகளின் மீது வாஞ்சை கொண்ட அவன், தூண் மேடை மீது ஏறி அமர்ந்துகொண்டான். ஆடு பெருமூச்சுவிட்டது. ஆனால் ஓடிப்போகவில்லை. அங்கிருந்து அவனுக்குத் தாழ்வாரக் குடியிறுப்புகள் நன்றாகத் தெரிந்தன. நெருக்கமாக வளர்ந்திருந்த மழைக்காளான்கள் போல் அந்த ஓட்டு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கண்டுண்டு கிடக்கும் மனங்கள், மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதை எண்ணி வருந்தினான்.
”பேதைகாள் பேதைகாள்… இங்கு எதைத் தேடி வந்தீர்கள்… கடலின் சாரத்தை விழுங்கி மழையெனப் பொழியும் மேகத்தின் இரக்கத்தையா? விண்மீனின் தூரத்தைத் தனதெனக் காட்டி மயக்கும் வானச் சீலையின் அழகையா? அல்லது ஒரு பொய்யனின் நாவிலிருந்து வெளிப்பட்டு வீணாகும் அதிசயச் செய்தியையா? நிச்சயமாகவே நிச்சயமாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தேடி வந்திருப்பது உங்களிலும் சீர்கெட்ட ஒரு பேதையின் உளறலைக் கேட்கத்தான். அர்த்தமுள்ள ஒன்றை அர்த்தமற்றது என்றும் பொருள்பொதிந்த ஒன்றைப் பாழானது என்றும் கேள்வியுற்றுத் திருப்திகொள்ளத்தான்” எனத் தன் கைலியைத் தூக்கி மூத்திரம் பெய்தான். அது மலையின் வழவழப்பான இறக்கத்தில் வேகமாய்ப் பாய்ந்து ஓடியது. அது ஓர் ஊற்று வெள்ளமாய் மாறி குடியிருப்புகளை விழுங்காதோ என ஏக்கத்தோடு பார்த்துவிட்டுத் திரும்பினான். மேலாடையைப் பார்த்திடாத அவனது வெற்றுடலை நனைத்திருந்தது வியர்வை. ஆங்காங்கே ஓட்டை விழுந்த கைலி அவனது தழும்புகள் நிறைந்த கருந்தொடையைப் பிசிறு பிசிறாகக் காட்டியது. மலர்ந்திருந்த தன் மார்க்கூட்டின் மயிரைக் கொத்தாய்ப் பிடித்து இழுத்தான். ஒன்றும் கையில் வரவில்லை. அதன் உறுதி அவனுக்குக் கவலை அளிக்கவே அமைதியானான்.

2
மலைக்குக் கிழக்கே கூத்தப்பார் ஏரியைக் கடந்து நகரின் ஓரத்தில் கிடக்கும் ஒரு பாழடைந்த வீட்டில் தங்கிய நினைவு மீண்டும் தாக்கியது. குப்பைகளும் ஒட்டடைகளும் உடைந்த மதுபோத்தல்களும் நிறைந்த அவ்வீட்டில் அவன் மாலைதோறும் சென்று அடைக்கலமாகிக் கொள்வது வழக்கம். எதிர்பாராச் சில இரவுகளில் ’எழுந்து போடா லூசு’ என்று அவனைத் துரத்திவிட்டு விடியற் காலம்வரை சிலர் இருந்துவிட்டுச் செல்வார்கள். பூச்சு நீங்கியச் சுவரோடு சாய்ந்தபடி உள்ளிருந்து வரும் முனகல்களையும் மிதமிஞ்சிய சத்தத்தில் கொட்டப்படும் கெட்ட வார்த்தைகளையும் கவனித்தபடி இருப்பான். ஒருநாள் அசதியோடுகூட அவன் படுத்திருக்கையில் ஒரு தேவதை வந்தாள்.
”முழுமையான மனிதனே, நீ எதுவும் சாப்பிடவில்லை போல் தெரிகிறதே” என்று அவனுக்கு சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சுவையான மன்னாத் துண்டை வழங்கினாள். அது வாயில் வைக்கவே கரைந்து உருகி உள்ளிறங்கியது. குளுமையும் இனிப்பும் கலந்திருந்த அதிலிருந்து ஒரு மிருதுவான துண்டு சாப்பிட்டதுமே வயிறும் நாவும் திருப்திகொண்டுவிட்ட மாயத்தை அவனால் நம்ப முடியவில்லை.
”மீண்டும் பசிக்கும்போதெல்லாம் எனக்கு இது வேண்டும். அதனால் நிறைய தந்துவிட்டுப் போ” என்று தேவதையுடன்கூட மல்லுக்கட்டினான்.
”மன்னா ஓர் அற்புதம். அது யாசிப்பவர்களுக்குக் கிடைக்காது. உன்னைப் போய் முழுமையானவன் என்று அழைத்துவிட்டேனே!” என்று அவளும் தன்னிடம் உள்ளவற்றைக் காப்பாற்றும் பொருட்டு அவனோடுகூட உருண்டு பிரண்டாள்.
தேவதை மேல் கமழ்ந்த நொச்சி இலையின் சுகந்தத்தை ஒத்த வாசனையில் சொக்குண்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான். எது அவனோடு கூடும்படி தன்னை ஆட்டுவித்தது என்று அறியாமல் அழுக்கடை நீங்காத அவன் மேனியிலிருந்து நீண்ட கணத்திற்குப் பின் தன்னைப் பிரித்தெடுத்துக் கொண்டாள். கடுமையான வயிற்று வலி அவளை வாதித்தது. வயிறு வீங்கிக் கொண்டே சென்றது. பின்பு மூத்திரம் கழிப்பதுபோல் லகுவாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்து அவன் கையில் தந்தாள். அதே நொச்சி மணம்.
”உனக்கு நான் பெயரற்றவள் என்று பெயரிடுகிறேன். நீ இந்தப் புதிய உலகின் தாயாக இருப்பாய்” என்று முத்தமிட்டான். அழுகை அறியாத அக்குழந்தையும் தேவதையும் புறக்களாக மாறிப் பறந்து மறைந்தனர்.
3
கண்ணீரோடு அவன் தோள் மீது அமர்ந்த புறாக்களிடம் ”ஏன் சென்றீர்கள்?” என ஆங்காரத்துடன் கேட்டான். அவற்றின் கழுத்துக்களைத் திருகலாம் என்று பார்த்தவன், இறக்கைகளை வருடித் தந்துவிட்டுப் பறக்க விட்டான்.
”பேதைகளே, உண்மை உண்மை எல்லாம் உண்மை என்று இந்த உலகத்தைக் கண்டுகொண்ட நான் சொல்கிறேன்…” எனக் கண் திறந்தான்.
வாடிக்கையாக மலைக்கு ஏறி மலம் கழிக்கும் சிறுமி அங்கு வந்து நின்றாள்.
”மாமா நான் ரெண்டுக்குப் போற இடம். நீங்க வேற பக்கம் போறீங்களா?” என்றாள் சுருட்டிப் பிடித்த பாவாடையுடன் அமரத் தயாராய் இருந்தவள்.
”நானும் போக வேண்டும் சிறுபிள்ளையே. சேர்ந்து போகலாம் இரு வருகிறேன்” என்று அவளை நோக்கி அவன் செல்லவே, சறுக்கலான இறக்கத்திலும் துரிதமாயும் நேர்த்தியாயும் இறங்கி வீடடைந்தாள்.
கீழே குடியிருப்பிலிருந்து வந்த ஆட்கள் ”இனிமே நீ மேலே வருவீயா!” என்று அவனை அடித்து விரட்டும்போது, முழுவதும் மலம் கழிக்க முடியாத அதிருப்தியோடுகூட ”நான் என்னைப் போ என்றால் என்னுள் இருப்பான் போகிறான். வா என்றால் என்னுள் இருப்பவன் வருகிறான். அறிவிலிகளே நீங்கள் யார் என்னை விரட்ட! என் மீது கைபோட உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?” என்று கேட்டபடியே மலையிறங்கினான்.
நெரிசலான தேசிய நெடுஞ்சாலையின் முனையில் நின்றபடி கூசிய கண்களைச் சுருக்கியவாறு மலையை ஏறிட்டவன், ”இதோ சீக்கிரமாய் உங்களிடத்தில் வருகிறேன்” என்று வாக்களித்துவிட்டுச் சாலைப் பக்கம் திரும்பித் தடியூன்றி நடந்தான்.
மலையிலிருந்து ஆடுகளும் பட்சிகளும் கோபுர மயிலும் கனிகொடாத வில்வ மரமும் துணைவேண்டாத் தூண்களும் வானம் பார்த்த புதர்மேடுகளும் தனித்து நிற்கும் பாறைகளும், தங்கள் போதகனை; உலகத்திற்காய் வந்தவனை உலகம் கைவிடுவதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.
00

ஜார்ஜ் ஜோசப் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனச் செய்துவரும் இவரது இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எமரால்ட் என்கிற சிறுகதைத் தொகுப்பும், பூனைகளில்லா உலகம் என்னும் ஜப்பானிய மொழிபெயர்ப்பு நாவலும் சீர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன. இஸ்மாயில் என்கிற அமெரிக்க சூழலிய மொழிபெயர்ப்பு நாவலும் வெளிவர இருக்கிறது. மெய்யியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். கலீல் ஜிப்ரான், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன் போன்றோரை எழுத்துலக ஆதர்சங்களாகக் கருதுகிறார்.

