-பரிவை சே.குமார்.

வனை அங்கே பார்ப்போமென அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, அவனும்தான். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாங்கள் சந்தித்துக் கொள்ளும் சூழல் அமையுமென இருவருமே நினைத்திருக்க மாட்டார்கள்தான். காலம் அதற்கான சூழலை உருவாக்கியிருந்தது.

சங்கரன் சார் வீட்டு வாசலில் நின்ற காரைப் பார்த்துக் கொண்டே, வாசல் கதவைத் திறந்து உள் நுழைந்தவள், செருப்பைக் கழட்டும் போதுதான் வலது ஓரமாய்க் கிடந்த இரு ஜோடி புதிய செருப்புக்களைப் பார்த்தாள். 

‘சாரைப் பார்க்க வேற யாரோ வந்திருக்காங்க போல… ஏதாவது முக்கியமாப் பேசிக்கிட்டு இருந்தாலும் இருப்பாங்க. அவங்க போனதும் நாம சாரோட அறைக்குப் போவோம்’ என யோசித்துக் கொண்டே வரவேற்பரையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

அவளுக்கு அந்தக் கல்லூரியில் சேரும் எண்ணம் துளிகூட இல்லை. அவளது விருப்பமெல்லாம் பள்ளத்தூர் பெண்கள் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் சேர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அவளது அம்மாவோ ‘இங்கிருந்து பேருந்தில் போய் வருவதெல்லாம் சரியா வராது. ஏன் இங்கே படித்தால் என்ன..? இங்க படிச்சவங்க, படிக்கிறவங்கள்லாம் மனுசங்க இல்லையா. எனக்குத் தெரிய இங்க படிச்சவங்களும் நல்ல வேலையில இருக்காங்க. அதுபோக பொம்பளைப்புள்ள எங்க படிச்சா என்ன… படிச்சி முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்’ என பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் பேசி, அவளை வலுக்கட்டாயமாக தங்கள் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த அந்தக் அரசுக் கல்லூரியில் அவளுக்கு விருப்பமான கணிப்பொறியில் சேர்க்காமல் இயற்பியலில் சேர்த்து விட்டார்.

விருப்பமில்லாமல்தான் முதல்நாள் வகுப்புக்குப் போனாள். முதல் நாளில் மூன்றாவது பாடவேளையில் தமிழ் இலக்கணம் எடுப்பதற்காக வந்தவர்தான் சங்கரன். பள்ளிகளில் தமிழாசிரியருக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கல்லூரியில் தமிழெடுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைப்பதில்லை. அவர் வகுப்பெடுக்க ஆரம்பித்ததும் உள்ளே புதிதாய் வந்திருந்த மாணவர்கள் அமைதியாய் இருக்க, அன்று கல்லூரி விடுமுறை என்றாலும், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வரக்கூடாது என்று முதல்வரின் ஆணை இருந்த போதிலும் கல்லூரி ரவுடிகளாய் அறியப்பட்ட சிலர் சிகரெட்டும், சிவந்த கண்ணுமாய் உள்ளே சுற்றி வரத்தான் செய்தார்கள். அதுவும் சங்கரன் வகுப்பெடுக்கும் போது வெளியில் நின்று கொண்டு ‘சங்கு..’, ‘வெண் சங்கு…’, ‘சிலந்தீ… சங்கு’, ‘வலம்புரிச் சங்கு’, ‘சங்குகுகு…குரங்கூகூ’ எனக் கத்திக் கொண்டே இருந்தார்கள்.

இவ்வளவு தொந்தரவுக்கும் இடையில் அவர் தனது பாடமெடுக்கும் பணியில் சிறிதும் பிசகாமல் நடத்திக் கொண்டிருந்தார்.  வகுப்பு முடிந்து போகும் போது ‘இந்தக் கல்லூரி உங்களில் பலரை அடுத்த வருடம் இதோ கத்திக் கொண்டிருக்கிறார்களே இவர்களைப் போல் மாற்றி வைக்கும். சிலர் தங்களது படிப்பில் கவனம் செலுத்தி சிறப்பான மாணவர்களாக மாறவும் காரணமாக இருக்கும். இதில் யார் எதாக மாறப் போகிறீர்கள் என்பது கல்லூரியின் கையில் இல்லை அது உங்கள் கையில்தான் இருக்கு. இந்தச் சங்கரனுக்கு இங்கே பல பேர் இருக்கு… கத்துனதைக் கேட்டிருப்பீங்க… இந்தச் சங்கரனுக்கு வெளியில ‘அருமையான ஆசிரியர்’ அப்படிங்கிற பேரும் இருக்கு. இன்னக்கி நமக்கு ஆசிரியர்களோட அருமை தெரிவதில்லை. அரியரோட வெளிய போய் எல்லாப் பக்கமும் அலையும் போதுதான் நாம் தொலைத்ததின் அருமை தெரியும் அப்போ வருந்தி எந்தப் பலனும் இல்லை. இங்க நாங்க எங்களோட பணிக்காலத்துல எல்லா மாணவரையும் ஒன்றாகத்தான் பார்ப்போம். எல்லாரும் ஜெயிக்கணுமின்னு நினைப்போம். காலம் அப்படி நினைக்காதுல்ல… கவனம்’ என்று சொல்லிச் சென்றார். அவரின் பேச்சு அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அன்றைய நாளின் முடிவில் மனதின் மேலெழுந்து நின்ற சங்கரன் இன்று வரை அப்படியேதான் இருக்கிறார்.

அவள் வெளியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த சங்கரனின் மனைவி சாந்தா “ஏய்… யாழி… எப்ப வந்தே..? ஏன் அங்கயே உக்கார்ந்துட்டே…? எப்பவும் போல சாரோட அறைக்குப் போக வேண்டியதுதானே… நல்லாத்தான் வந்தது தெரியாம உக்காந்திருக்கே…” என்றபடி வந்தார்.

“இல்ல… சாரைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க போல. ஏதாவது முக்கியமாப் பேசுவாங்க. அதான் இங்கயே உக்கார்ந்துட்டேன்”

“நல்லாத்தான்… இதென்ன புதுசா..? யாராச்சும் வந்து பேசிக்கிட்டுத்தான் இருப்பாக. அதுக்காக…  நீபாட்டுக்கு எப்பவும் போல உள்ள வரவேண்டியதுதானே. நாங்க கூப்பிட்டுத்தான் உள்ள வருவியாக்கும்”

“அய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா… நேத்து சார்கிட்ட பேசும்போது நீங்க சத்யா வீட்டுக்குப் போயிருக்கிறதாச் சொன்னாங்க. அதான் சார் மட்டும் இருக்காங்கன்னு இங்கயே இருந்துட்டேன். அதுபோக மத்தவங்க இருக்கும் போது சார்க்கிட்ட மனம் விட்டு எதுவும் பேசமுடியாதுல்ல”  என்றபடி எழுந்தாள்.

“ஆமா போயிருந்தேன்… இவரை விட்டுட்டு எங்கயுமே ஒருநா ரெண்டு நாளுக்கு மேலே இருக்கிறதில்லை. அதான் காலையிலயே கிளம்பி வந்துட்டேன்”

அவள் எழுந்து உள்ளே போனாள்.

“உக்காரு…  சாரப் பாக்க வந்திருக்கதும் உங்க செட்டுல படிச்ச பையந்தான்… பொண்டாட்டியோட வந்திருக்கான். வெளிநாட்டுல இருக்கானாம்… அப்போத்தான் பசங்க… இப்ப நீங்கள்ல்லாம் நடுத்தர வயது மனிதர்களா மாறி நிக்கிறீங்க. ஒருமையில சொல்ல என்னமோ மாதிரி இருக்கு”

“அம்மா உங்களுக்கா மறதி வந்திருச்சு… எங்க பிறந்தநாள், உங்க வீட்டுக்கு நாங்க வந்த நாள்ன்னு எல்லாமே எப்பவும் உங்க ஞாபகத்துல இருக்கும். இப்ப மறந்திருச்சுங்கிறீங்க…” சிரித்தாள்.

“உண்மைதான்… எம்புட்டு வருசமாச்சு. வயசும் ஆயிருச்சுல்ல… அதான் மறதி அதிகமாயிருச்சு. அடுப்புல சட்டியை வச்சி, என்ன ஊத்திட்டு என்னமோ நெனச்சோமேன்னு கடுகு டப்பாவை மறந்துட்டு யோசிக்கிறேன் இப்பல்லாம்… அவரு பேருதான் சட்டுன்னு ஞாபகத்துல வரல… என்னமோ சொன்னாரு…. சரி விடு… நீ உக்காரு காபி கொண்டு வர்றேன்” என நகர்ந்தார்.

எங்க செட்டா…? யார் அவங்க…? என்றெல்லாம் இவள் கேட்கவுமில்லை, அவர் சொல்லவுமில்லை. மனசு ஏனோ அவனாக இருக்குமோ என நினைத்து இருக்காது எனச் சமாதானம் சொல்லிக் கொண்டது.

கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் பேச்சுப் போட்டியில்  தனது வெற்றியைப் பதிவு செய்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்ததுடன், அடுத்தடுத்த போட்டிகளில் கல்லூரியின் பெயரை வெற்றி பெற்ற வரிசையில் அவள் அமர்த்த ஆரம்பித்தபோது சங்கரனுக்கு மிகவும் பிடித்த மாணவியானாள் அவள்.

இரண்டாமாண்டு படிக்கும் போது பெரும்பாலான மாலை நேரங்களை சங்கரன் வீட்டில்தான் கடத்தினாள். அங்குதான் அவனைச் சந்தித்தாள். அவள் படிக்கும் அதே கல்லூரியில்தான் அவனும் இரண்டாமாண்டு தமிழ்த்துறையில் படிக்கிறான் என்பதே அவளுக்கு அப்போதுதான் தெரியும். இப்படி ஒருவனைக் கல்லூரியில்தான் பார்த்ததே இல்லையே என நினைத்தாள்.

“இது மணிகண்டன்… நல்ல மாணவன். சிறந்த படிப்பாளி” என்றுதான் சங்கரன் அவனை அறிமுகம் செய்தார். அவர் வீட்டிற்கு வரும் மாணவர்கள் எல்லாரும் நட்பாக பழக ஆரம்பித்தார்கள். அதில் அவளோ காட்டாறு… அவனோ அலையில்லாக் குளம். அவள் நிறுத்தாமல் நிறையப் பேசினாள். அவனோ சிறு சிரிப்பில் நிறுத்தக்குறி இட்டுக் கொள்பவனாய் இருந்தான். அதுவே  அவளுக்கு அவனைப் பிடித்துப் போக காரணமாய் அமைந்தது.

இவர்கள் நட்பு கல்லூரியிலும் தொடர ஆரம்பித்தது. அவனோ பசங்க கேலி பண்ணுவாங்க என நினைத்துக் கொண்டு அவளுடன் பேச யோசிப்பான். அவளோ எதுக்குப் பயப்படுறீங்க…? ஆண்பெண் நட்பு இருக்கக் கூடாதான்னு கேட்பாள், செல்லக் கோபமும் கொள்வாள்.  இங்க தப்பாப் பேசுவாங்க என்பதைக் கூட யாரும் பார்க்கிறார்களா என்ற யோசனையுடன்தான் அவளிடம் சொல்வான். சொன்னாச் சொல்லட்டும் என அவனிடம் வேண்டுமென்றே போய் பேசுவாள்.

சாந்தா காபி கொண்டு வந்து கொடுத்தார்.

காபி எப்பவும் போல் மணமாக இருந்தது. அந்த வெயிலுக்கு இளநீர் நன்றாக இருக்கும் என மனசு நினைத்தாலும், அம்மாவின் காபி இளநீர் கொடுக்கும் இதத்தை விட அதிகமாக தொண்டையில் இறங்கும் போது கொடுத்தது.

சங்கரன் வீட்டில் ஒரு மாலை யாழி எல்லாரும் காபி போடுடா என சாந்தா சொன்னதும் காபி போடப் போனவள், அவனைப் பார்த்து விட்டுச் செல்ல, சிறிது நேரத்தில் அவனும் அடுப்படிக்குப் போனான்.

“என்ன சார்… ஆச்சர்யமா இருக்கு. இங்க வந்திருக்கீங்க..?”

“தண்ணி குடிக்க வந்தேன்”

“நம்பிட்டோம். மத்தவங்க பார்த்தா தப்பாச் சொல்லிடுவாங்களே” சிரித்தாள்.

“சொல்லட்டுமே…” சிரித்தான்.

அவளுக்கு அருகில் நின்று “காபி நல்லாயிருக்குமா..?” என்றவனிடம் “ருசி பாத்துட்டுச் சொல்லுங்க” என்றாள்.

“போடுறவங்க போட்டா நல்லாயில்லாமப் போகுமா…” எனச் சொல்லி நகர்ந்தவனை அவள் பார்த்தபோது அவனும் பார்த்துச் சிரித்தான். நட்பாய் ஆரம்பித்து காதலாய் பிடித்துக் கொள்ள அந்த ஒற்றைப் புன்னகை போதுமானதாய் இருந்தது. அதன் பின் கல்லூரி மரங்கள் அவர்களின் காதலைப் பேசியது. சங்கரன் காதுக்கு வந்தபோது ‘பழக்கம் வாழ்க்கையைப் பாதிச்சிடக் கூடாது… கவனம்’ என்று மட்டும் சொன்னார்.

காபி முடிந்திருந்தது. டம்ளரை டீப்பாயின் மீது வைத்தாள்.

முகமெல்லாம் வேர்த்திருந்தது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள்.

போன் வந்தது… எடுத்துப் பேசினாள்.

தலையை வலம் இடமாய் ஆட்டி கழுத்தை ஒடித்து நெறி எடுத்தாள். ‘எதுக்கு எப்பப் பார்த்தாலும் கழுத்தை ஒடிக்கிறே… ஒரு நாளைக்கு எலும்பு முறிஞ்சி மொத்தமா விழுகப் போகுது’ என அவன் கேலி செய்தது நினைவில் வந்தது. கழுத்தைத் தடவிக் கொண்டாள்.

“யாழி… சார் உன்னைய உள்ள வரச் சொன்னாரு. எதுக்கு அங்க உக்காந்திருக்குன்னு எங்கிட்ட கோபப்படுறாரு” சொல்லிக்கொண்டே சாந்தா வெளிய வர, அவள் எழுந்து உள்ளே போனாள்.

“யாழி… வா… வா… இது உன்னோட வீடு. நீ பாட்டுக்க உள்ள வர வேண்டியதுதானே…” என்றவருக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தவள், “இல்ல முக்கியமா யாராச்சும் சந்திக்க வந்திருப்பாங்கன்னு நினைச்சித்தான் அங்க உக்கார்ந்தேன்’ என்றபடி அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாள்.

“இது யாருன்னு தெரியிதா..?” சங்கரன் கேட்க, இருவரும் ‘தெரியலையே…’ என்றெல்லாம் இழுக்கவில்லை. “நல்லாயிருக்கீங்களா..?” என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாத்தையும் முடித்துக் கொண்டார்கள்.

அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவனின் மனைவி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு பேரும் காலேஜ்ல ஒரே செட்டு… இந்த வீடு கட்டி பத்து வருசமாச்சு. இவங்க படிக்கும் போது குமணன் நகர்ல வாடகை வீட்டுல இருந்தோம். எங்க பசங்களெல்லாம் வெளியூர்ல படிச்சாங்க. இவங்கதான் எங்க பிள்ளைகளா, எங்க வீட்டுல வந்து கிடப்பாங்க. காலேசுல வேலை பாக்குற வரையில எங்களுக்கு பிள்ளைகள் நிறைய. அப்பறம் வீடு வெறுமையாயிருச்சு. அந்த நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் எங்களுக்கு” சங்கரன் அந்த நாட்களின் நினைவுகளில் நீந்தி வெளியில் வந்தார்.

“இப்ப என்னதான் முடிவு மணி..?”

“முடிவுன்னா..?”

“படிப்பு முடிஞ்சிருச்சுல்ல… என்னைய மேலயெல்லாம் படிக்க வைக்கமாட்டாங்க தெரிஞ்சிக்க. எங்க அக்காவுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிருச்சு. எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. இப்ப நீ என்ன சொல்றே..?”

“இதுக்கு மேல படிக்க எனக்கும் வாய்ப்பில்லை யாழி… எதாவது வேலைக்குப் போகணும். குடும்பத்துல நாந்தான் மூத்தவன்… அது உனக்குத் தெரியும். ஒரு ரெண்டு வருசம் பொறுத்துக்க எந்தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டா…அப்பறம் தம்பிகதான். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“ரெண்டு வருசமா… அதெல்லாம் முடியாது. என்னைய நீ கூட்டிக்கிட்டுப் போயிரு. எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க. சாதியை அவங்கள்லாம் சடையாப் பிண்ணிப் போட்டு வச்சிருக்கவங்க. நம்ம வாழ்க்கையைப் பற்றி நாமதான் முடிவு பண்ணனும்”

அவன் பேசாமலிருந்தான்.

“என்ன மணி… பேசாமலிருந்தா என்ன அர்த்தம்..?”

“சூழலும் எதார்த்தமும் இதுதான் யாழி… எடுத்தோங் கவிழ்த்தோமுன்னு இதுல முடிவெடுக்க முடியாதுல்ல…” இழுத்தான்.

“அப்படின்னா…?”

மணி பேசாமல் நிலம் பார்த்தான்.

“என்னாச்சு… ரெண்டு பேரு முகமும் சரியில்லை” என்றபடி வந்த சாந்தாவிடம் “ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா… படிப்பு முடிஞ்சிருச்சு. இனி ஒவ்வொருத்தருக்கும் ஒரு  வாழ்க்கைப் பாதையாயிரும்ல… எப்போ, எப்படிச் சந்திப்போம்ன்னு தெரியாதுல்ல… அதான் பேசிக்கிட்டு இருந்தோம்”

“இப்படியே இருந்திட முடியாதுல்ல யாழி… நாம நினைச்சாலும் காலம் இருக்க விடாதுல்ல. அது கடந்து போய்க்கிட்டே இருக்கத்தானே செய்யும்…. கூடவே அது நம்மளைக் கடத்திக்கிட்டுப் போகவும் செய்யும்ல்ல. இந்த வீடு எத்தனையோ பேரோட நட்பைப் பார்த்திருக்கு. எல்லாருமே பிரிவுக்கு அழுவாங்க. அப்பறம் வாழ்க்கையில சந்திச்சாங்களான்னு தெரியாது. இது வேடந்தாங்கல்ன்னு பலர் சொல்வாங்க ஆனா இந்த வேடந்தாங்கலுக்குக் கூட பல பறவைகள் திரும்பி வர்றதேயில்லை. உங்க சார் ஓய்வு பெற்றுட்டாங்கன்னா இந்த வேடந்தாங்களுக்கு எதாவது ஒரு பறவை வருமான்னு நாங்களும் காத்திருக்கும் காலம் வரத்தானே போகுது. உங்க சார்தான் சில நேரங்கள்ல, படிச்சி முடிச்சிட்டுப் போனவங்க ஒவ்வொருத்தரைப் பற்றியும் நினைவில் வச்சிப் பேசுவாங்க. காலம் எல்லாத்தையும் மாத்திரும், மறந்துரும். வருடங்கள் கடக்கும் போது அதன் போக்குல எல்லாத்தையும் மறந்துட்டு பயணிக்க ஆரம்பிச்சிருவோம்.”

சாந்தா பேசிவிட்டுப் போனதும் “இப்ப நான் என்ன செய்யணும்..?” என்றவளிடம் “எங்கிட்டக் கேட்டா… என்னோட சூழல் இதுதான். பொறுமையா இருக்க முடிஞ்சா…” அவன் முடிக்கவில்லை “இனிமே ஜென்மத்துக்கு என்னோட முகத்துல முழிச்சிடாதே. வாழ்க்கையில உன்னைய நான் பார்க்கவே கூடாது” கோபமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தவளை கூப்பிட்ட அவனின் குரல் தேய்ந்து கொண்டே போனது.

சார் ஏதோ சொல்ல நினைவில் இருந்து மீண்டாள்.

இப்போது ஏனோ மீண்டும் அவன் முகத்தை நன்றாக நோக்கினாள். பெரிய மாற்றமெல்லாம் இல்லை. அப்படியேதான் இருந்தான். மீசையில் நரை கூடியிருந்தது.

தலை குனிந்து கொண்டாள். ‘எம்முகத்துலயே முழிக்காதே…’ மனசு எடுத்துக் கொடுக்க, உதடு மலர்ந்தது, உள்ளம் சிரித்தது.

அவர்கள் எழ, “இருப்பா… எம்புட்டு வருசங் கழிச்சி வந்திருக்கீங்க. இனி மறுபடியும் மலேசியா போயிட்டா எப்ப வருவியோ… அம்மா சமைக்கிறா சாப்பிட்டுப் போங்க. யாழி நீயுந்தான்” என்றார் சங்கரன்.

மணி யோசிக்க, “அட இருப்பா… ஏம்மா நீ எங்க வீட்டு மருமக, இப்பத்தான் வந்திருக்கே… நீயாவது சொல்லும்மா” என்றதும் மணியின் மனைவி சிரித்தபடி தலையாட்டி, அவனைப் பார்த்து கண்ணசைத்தாள். அவன் பதில் பேசாமல் அமர்ந்தான்.

சங்கரன் எழுந்து போய் ஒரு பேப்பரை எடுத்து வந்து அவளிடம் நீட்டியபடி, “யாழி… வாழ்த்து தயார்… எதுவும் மாற்றணுமான்னு பாரு” என்றார்.

அவள் வாங்கி வாசிக்க, மணி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

முதுமை அவள் முகத்தில் படம் வரைய ஆரம்பித்திருந்தது. முன் நெற்றியில் வெண்முடி சிரித்தது. அவளின் கன்னக்குழி அவன் மனசுக்குள் கல்லூரி நாட்களை கிளப்பி மகிழ்ந்து படபடத்தது.

“அருமையா இருக்கு சார். கல்யாணத்துக்கு முதல் நாளே நீங்களும் அம்மாவும் வந்திறணும்”

“எங்க பேத்திக்கு நான் வராமலா…?” சிரித்தவர், மணியைப் பார்த்து “நீங்கள்லாம் இன்னமும் எங்களுக்குச் சின்னப் பிள்ளைங்கதான். இப்போ நீங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற இடத்துக்கு வந்துட்டிங்க… காலம்தான் எவ்வளவு வேகமாப் போகுது பாத்தியா மணி. ஆமா உம்பொண்ணுக்கு எப்போ கல்யாணம்..?”

“அங்கயே ஒரு பையனை…” நிறுத்தி அவளைப் பார்த்தான். அவளோ வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறு செருமலோடு அவர் பக்கம் திரும்பி “மலேயாத் தமிழ்… நல்ல குடும்பம். இன்னும் ஒரு வருசம் படிப்பிருக்கு, அப்பறம்தான் கல்யாணம். அங்கயே வச்சிருவோம். இங்க வந்து சின்னதா ஒரு ரிசப்ஷன் வச்சிடலாம்ன்னு எண்ணம் சார்” குரலில் வேகம் குறைந்திருந்தது. அதை அவளும் உணர்ந்தாள்.

“ம்… அன்னைக்கு காதல்கள் சேர்றதுக்கு நிறையத் தடைகள்…” சங்கரன் நிறுத்த, அவள் அவர் முகம் பார்த்தாள். அவரும் இருவரையும் பார்த்த கண்களை சுவரின் ஓரத்திற்கு கொண்டு செல்ல. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

சூழலின் இறுக்கத்துக்கு தான் காரணமாகிவிட்டதை உணர்ந்த சங்கரன் ஒரு செருமலுடன், “இப்ப அப்படியில்லை… பசங்க முடிவா நிக்கிறாங்க. ஜெயிக்கிறாங்க. அன்னைக்கு முடிவா நிக்க முடியாமலே எனக்குத் தெரிஞ்சே நிறைய விருப்பங்கள் நொறுங்கிருச்சு. ம்ம்ம்ம்ம்…. காலத்தோட முடிவுக்கு காதல் மட்டும் என்ன விதிவிலக்கா” சிரித்தார்.

மணி ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.

அவள் வெறுமையாய் புன்னகைத்தபடி, “நினைச்சது எல்லாமே நடந்தால் இந்த வாழ்க்கை ருசிக்காது சார்” அவள் சிரிக்க, மணியின் மனைவியும் சிரித்தாள்.

“மணி… யாழியோட பொண்ணு கல்யாணமும் காதல் கல்யாணம்தான். இருவீட்டாரோட பூரண சம்மதத்தோட நடக்குது”

“கிரேட்” என்றான்.

சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போது “மணி… யாழியை பஸ்ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிருவேன். இப்ப பஸ்ஸ்டாண்ட் கட்டுறோமுன்னு அழகப்பா ஊரணிப் பக்கம் கொண்டு போயி போட்டுட்டாங்க” என்றாள் சாந்தா.

“அதுக்கென்ன… கூட்டிப்போறேன்”

‘கூட்டிப் போன்னு சொன்னப் போ கூட்ட முடியலை. இப்பக் கூட்டுறாராம்’ என நினைத்தவள், “இல்லம்மா… நான் ஆட்டோவுலயே போய்க்கிறேன்” என்றாள்.

“பரவாயில்லை வாங்க அங்கிட்டுத்தான் போறோம்” என்றாள் மணியின் மனைவி.

அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“எங்க போகணுமின்னு சொன்னா அங்கயே கொண்டு போய் விட்டுடுறோம்” என்றான் கண்ணாடியில் அவள் முகம் பார்த்து.

அவளும் கண்ணாடி வழி அவனைப் பார்த்து, “எங்கூட யாராலயும் கடைசி வரைக்கும் வரமுடியாதுங்க. நான் ரொம்பத்தூரம் போகணும். மனிதர்களுக்கு பாதியில இறக்கி விடுறது புதுசில்லையே… எனக்கு அது பழகிருச்சு… அப்படியே வாழவும் பழகிக்கிட்டேன். நல்லாவும் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்” சிரித்தாள்.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவள் ஒரு பத்திரிக்கையை எடுத்து மணிகண்டன் என அவனது பெயரை எழுதினாள், இந்தப் பெயரை சதா எல்லா இடத்திலும் கிறுக்கியவள், முப்பது வருசத்துக்குப் பின் இப்போதுதான் எழுதுகிறாள். கை பிசிறியது. எழுத்து ஒழுங்கில் இல்லை.

“பொண்ணு கல்யாணம்… இங்க இருந்தா கண்டிப்பா வந்திருங்க” என அவன் மனைவியிடம் நீட்டினாள்.

அவள் ‘கண்டிப்பா வர்றோம்’ என்றபடி வாங்கிக் கொண்டாள்.

அழகப்பா ஊரணி வந்ததும் ‘இங்க இறங்கிக்கிறேன்’ என அவள் இறங்கிச் செல்ல, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவங்க கணவர் பெயரே பத்திரிக்கையில் இல்லை” எனப் பத்திரிக்கையை அவன் கண் முன்னே  மனைவி நீட்டியதும் சுயத்துக்கு வந்து வாங்கிப் பார்த்தான்.

‘மனிதர்களுக்கு பாதியில இறக்கி விடுறது புதுசில்லையே… எனக்கு அது பழகிருச்சு…’ என அவள் சொன்னதன் அர்த்தம் விளங்க, மறுபடியும் அவள் போன பாதையில் பார்த்தான்.

அவள் கூட்டத்தில் கரைந்திருந்தாள்.

00

பரிவை சே.குமார்

இதுவரை எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார், அறுகு, மாதரசி என்ற சிறுகதைத் தொகுப்புகளும்; வேரும் விழுதுகளும்,  திருவிழா, காளையன், சாக்காடு, மருள், உன்மத்தம், கறுப்பி என்ற நாவல்களும்; உள்ளூர் இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. எதிர்சேவை சிறுகதைத் தொகுப்புக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் வட்டார வழக்குக்கான பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். விண்மீன் மின்னிதழில் ஆசிரியராகவும் இருக்கிறார். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *