1

அந்தப் பெரிய மரத்தின்

நிழலில்

ஓர் எறும்பு

ஊர்ந்து கொண்டிருக்கிறது

அதற்கு மட்டும் கிட்டாமல்

நிழல்

தன்னை மறைத்துக் கொள்ள முடியாது

அது இயற்கை.

அதைச் சுரண்டி வாழும்

மனிதன்

இன்னொரு மனிதன்

எப்போது மூச்சுவிட வேண்டும்

என்பது வரை தீர்மானிக்கிறான்

அதைத்தான் நாம்

வாழ்க்கை என்கிறோம்.

ஆகப் பெரும்

அநீதி ஏற்பாட்டை

வரலாறாக, பண்பாடாக

பேசுகிறோம்

யாராவது

வாழப் பிடிக்கவில்லையென்றால்

அது உண்மையில்

பொருள் நிறைந்ததும்கூட.

2

அந்த ஜோதிடர் பரிந்துரைத்த

எல்லா பரிகாரங்களையும்

செய்துவிட்டார் அவர்

இருந்தும்கூட

நினைத்தது நடக்கவில்லை

ஏனெனில் அவர்

நினைக்க மட்டுமே செய்தார்

அவரிடமிருந்து

மிகத் தள்ளிக் கிடந்தது

முயற்சி.

அடுத்த பெயர்ச்சி வந்தது

நினைத்ததெல்லாம் நடக்காது

என்றார் ஜோதிடர்

சரியான கணிப்பு

என்றெண்ணி

வியந்து நின்றார்

நடக்கவில்லை

ஏதும் கடைசிவரை.

3

பொதுவில்

யாதொரு தனிமனிதனுக்காகவும்

காற்று வீசுவதில்லை

ஸ்விட்சை போட்டால்

அறையில் காற்றாடி

அவன் ஒருவனுக்கு மட்டும்

முடி இங்குமங்குமாய் பறக்கிறது

ஏதோ

சொல்வது போல இருக்கிறது

காற்றாடி இரைச்சலில்

கேட்கவில்லை.

4

அவளிடமிருந்து வந்த

குறுஞ்செய்தி

அதிர வைத்தது

காதலிக்கவில்லை என்றால்கூட

ஏற்றுக்கொண்டிருப்பான்

வாங்கிய கடனை

தரப்போவதில்லை என்கிறாள்

கடன் அன்பை முறிக்குமாம்

முறிக்கட்டும் என்றுகூட

சொல்லிப் பார்த்தான்

நடக்கவில்லை

நிதி மேலாண்மையில்

அவள் நுண்திறன்.

5

வியாபாரத்தின்

நெளிவு சுழிவுகளை

மகனுக்கும் கற்றுக்கொடுத்தார்

அந்த முதலாளி

கூடுதலாக மகனும்

சில நெளிவு சுழிவுகளை சேர்த்தான்

அதே வாடிக்கையாளர்கள்

நெளிவு சுழிவு தெரியாமல்

இன்னும் இன்னும்

வாங்கிச் செல்கிறார்கள்

பரம்பரை நம்பிக்கை.

6

அவரைப் போல

எழுதிக் குவித்தவர்

யாருமில்லை….

எங்கே அவர்?

குவியல்களுக்கிடையில்

எங்கேனும்

இருக்கக்கூடும் என்று

நம்பப்படுகிறது

நம்பிக்கைதானே

வாழ்க்கை.

7

உச்சி வெயிலில்

உலக்கையை ஏந்தி வருது போன்று

ஏதேனும் வினோதமாகச் செய்கிறார்கள்

விருப்பக் குறி அள்ளுகிறது

சமூக ஊடகங்களில்

மூக்குக்கு கீழே வாய்

முகத்துக்கு கீழே உடல்

என்பது போன்ற

கிளிஷேக்கள் கூடாதாம்

த்ரில்லாக வேறுமாதிரி கேட்கிறது

புத்திளம் தலைமுறை

ஒரு முகம்

இரண்டு கைகள், கால்கள் உள்ள

ஜீவராசிகள்

பதுங்கிப்பதுங்கி வாழ வேண்டியிருக்கிறது

என்ன நடக்கும்

என்றே தெரியவில்லை.

ஏதோ நடக்குமென்றே

தோன்றுகிறது.

***

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *