1

உனக்கான

எனது இருப்பு

உன்னைக்காட்டிலும்

உன்னுயரத்துக்கு

பங்களிக்கிறது என்ற

பழுத்த உண்மையை

நீயுணர்வாய்.

உனது

அடையாளத்துடன்

பிரிக்கமுடியாமல் கலந்துவிட்ட

எனது இருப்பை

ஓரமாகக்கூட

தள்ளிவைக்க முடியாது

உனக்குள்.

என்றாலும்கூட

எனது இருப்பு என்பது

உனக்கான காத்திருப்பு என்பதாகவே

நிறுவ முற்படுகிறாய்

உனது இருப்பின்

பற்றாக்குறை

இன்னமும்கூட நீடிக்கிறது

என்பதாகவே புரிந்துகொள்கிறேன்.

2

குழந்தைகள் வழிநடத்த

பெற்றோர்கள் வாக்களிக்கும்

காலம் இது

உங்களுக்குள்ளிருந்து

கேள்விகள் எழுந்தால்

பொது இடங்களில்

வாயில் சுரக்கும்

உமிழ்நீரைப் போல

உடனுக்குடன்

விழுங்கிவிடுங்கள்

இல்லையெனில்

உங்களுக்கு எதிரான

கேள்விகளால்

நீங்கள்

சிதற நேரிடும்.

பெற்றோர்கள் புத்திசாலிகள்

பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு

முன்னுரிமை

அளித்திருக்கிறார்கள்.

3

இருப்பதையெல்லாம் கவிழ்த்து

கடைசிக் குவளையில்

ஊற்றும் பாவனையுடன்

முதல் குவளையிலேயே

நீர் ஊற்றும் திறன் படைத்தவர்கள்

உங்களைச் சுற்றிலும்

இருக்கிறார்களா….

பரவாயில்லை

உங்கள் குவளை

காலியாகவே இருக்கட்டும்.

4

ஆடை அணிந்த

மனிதர்கள்

நாகரிகமானவர்கள் என்று

நம்பினால்

உங்கள் அறியாமை

ஆடையைப் பார்த்து

மதிப்பிடுகிறார்களா…

அவர்கள் அறியாமை

சமகால உலகின்

ஆகப் பெரும் மயக்கம்

ஆடை

அணிவதற்கும் களைவதற்கும்

இடையில்

உலகம் தள்ளாடுகிறது.

5

அன்றாடம்

உதிரும் முடிக்காக

மனஉளைச்சலில் தவிப்பவர்கள்

ஒரு கணமேனும்

நினைத்துப் பார்த்ததுண்டா…

உதிர்வதற்கே வழியில்லாத

மொட்டைத் தலைகளைப் பற்றி.

நான்கைந்து முடிகளாவது

துளிர்விடாதா என்று

அவர்களும்

மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள்

ஒருவருகொருவர்

ஒத்தாசையாக இருங்கள்.

ஒட்டியிருக்கும் உயிர்

எப்போது வேண்டுமானாலும்

உதிரலாம்.

6

நாட்டுப்புற இசையை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

சாஸ்திரிய சங்கீதத்தை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

ஹிந்துஸ்தானி இசையை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

மேற்கத்திய செவ்வியல் இசையை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

ஆப்பிரிக்க பழங்குடி இசையை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

சமகால கலப்பிசையை

கேட்டு வளர்ந்தவன் நான்

இருக்கட்டும்

இளையராஜா இசையை

கேட்டிருக்கிறாயா…

நேற்றுதான் கேட்டேன்

சரி

இன்றும் கேட்கிறேன்

சரி சரி

நாளையும் கேட்பேன்

அது சரி.

7

பசி வேகத்தில்

உணவுப் பொட்டலத்தை

கட்டியிருந்த நூலை

அவசரமாகப் பிரிக்கையில்

சிதறிய துண்டிலிருந்து

ஒரு குரல் ஒலித்தது…

உனது

பாத்திரம் சிறியது.

*****

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *