யாரிடத்திலும் புத்தர் இல்லை

வாசிப்பனுபவம் : விஜயராணி மீனாட்சி

விசைத்தறித் தொழிலாளியான கவிஞர் நாகாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு “யாரிடத்திலும் புத்தர் இல்லை” என்ற இந்த நூல்.

படிப்படியாக கவிதையின் சொற்கள் கனம்கூடினாலும் சாதாரணச் சொற்களாலேயே கவிதை மொழியை நெய்திருக்கிறார். யாரிடத்திலும் என்னென்னவோ அறப்பாடுகள் இல்லாமல்போன கலியுகத்தில் யாரிடத்திலும் புத்தன் இல்லையென்று அங்கலாய்ப்பது கவிஞரின் வெள்ளந்தித்தனத்தைக் காட்டுகிறது.

எடுத்தவுடன் முதல் கவிதையிலேயே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண்ணுக்கென்றே போடப்பட்ட. பாதையை வெட்டவெளிச்சமாக்கி கசப்பான யதார்த்தத்தைச் சொல்லி பெண்ணினத்தை உசுப்பேற்றிவிடுகிறார்.

அவள் சென்று கொண்டே இருக்கிறாள்

சமையல் அறையிலிருந்து அறைகளுக்கு வராந்தாவுக்கு

வாசலுக்கு கடைத்தெருவுக்கு அலுவலுக்கு

இப்போது

பணியிலிருந்து பேருந்திலிருந்து படுக்கையிலிருந்து

புணர்ச்சியிலிருந்து கிளம்பி

சமையல் அறைக்குத்

திரும்பிக்கொண்டிருக்கிறாள்

இந்தப் பாதை

பல்லாயிரம் ஆண்டுகளாக அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது…”

கொரோனோ காலத்திற்கென அணிந்த கவசம்… அந்தக் கவசப் புன்னகை அதன் தொடர்புடைய பிரிதொருவரின் கவசம் பொருந்தாமல் போவது மன அவசங்களை,  ஒவ்வாமையைச் சொல்கிறது.  இங்கே முகமென்பது எதிரே வருபவரின் முகம் பொருந்தாமை மனம் பொருந்தாத்தன்மையாகி உறுத்துவதைச் சொல்கிறது.

புத்தனைத் தேடிச்சென்ற பயணத்தில் கௌதமனின் ராஜ்ஜியங்களே தெரிந்ததாலோ என்னவோ அமைதிக்காக புத்தர்சிலையை அறைக்குள் கொண்டுவந்து வைத்தால் யசோதரையின் அழுகுரல்தானே கேட்கும்?

பதின்மப் பொழுதில் திருவிழா நாளொன்றில் தொலைந்துபோன ஒருவன் பெரிய வயதானபின் அந்தச் சின்னவயது ஊருக்குப் போகிறான். என்ன செய்வது? எல்லாப் பெரிய வயதும் என்னதான் சின்ன வயதுக்குள் சென்று தேடியலைந்தாலும் சின்ன வயது ஊரைக் காண இயலாது என்பது மறுக்கமுடியாத உiண்மைத்துயரம்.

பால்யத்தில் தொலைத்த நினைவுகள் ஒருவிதமென்றால் பால்யகால ஊரைத் தொலைத்தல் என்கிற சூழலியலின் காலமாற்றத்தை இன்னும் சில கவிதைகள் சொல்கின்றன. பயிர்நிலங்கள் விற்கப்பட்டதும், கிணறு தூர்க்கப்பட்டு தண்ணீர் டேம் கட்டப்பட்டதும் ஆலமரம் சிதைக்கப்பட்டு வீதியானதும், மலையெல்லாம் உடைபட்டு பாறையானதுமாகவும், வாய்க்கால் வரப்பும் நெல்லடித்த களங்களும் தேடித் திரிகிற பழைய மனிதனாகிற அவலம் ஊரோடு கொண்ட உறவை அதன் நெருக்கத்தை ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.  அதுமட்டுமா? நாலு தெருவும் அறுபது வீடுமாக இருந்த தங்கள் ஊர்ப் பெருமை பழங்கதையானதை, காதல் மலர்வதற்கான இடமாகவும் இல்லாமற்போனால் மடிவதற்கான களமாகவும் ஒரு காலத்தில் இருந்த இப்போதெல்லாம் காணாமல் போன கிணற்றின் அருமையைச் சொல்கிறது ஒரு சில கவிதைகள்.

வாசிப்பு ஒருவனை அறச்சீற்றம் கொள்ளச் செய்யும் என்பதை, “முனை மழுங்கும் போதெல்லாம் கூர்மையாக்குகின்றன சில புத்தகங்கள்” என்ற வரிகள் உணர்த்துகின்றன.

கோயில்களும் மசூதிகளும் தேவாலயங்களும் பெருகிவிட்டாலும் துன்பங்கள் குறையவில்லை, கடவுளே எங்கிருக்கிறீர்? என்றொரு கவிதை வரிகள் சொன்னாலும் அதற்கு முந்தைய கவிதை இப்படித் தொடங்குகிறது….

அவன்

ஜன்னலைத் திறந்துவைத்தான்

எனக்குள்

தானாகவே திறந்துகொண்டன

பல ஜன்னல்கள்….

என்றும்… பிறகு

அவன்பற்றவைத்த நெருப்பில்

மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது

என் இருள்” என்று முடிகிறது. இங்கே அறிந்தோ அறியாமலோ ஒரு உள்ளொளிப் பயணம் நிகழ்ந்துவிடுகிறது.

வண்ணதாசனின் மிகப் பரிச்சயமான. ஒரு கவிதை வரிகளையொத்த ஒரு கவிதை இது…

எல்லாம் முடிந்துவிட்டன

என்று

எண்ணிவிடாதீர்கள்

கடைசிப் புள்ளிக்குப் பிறகுதான்

கோலம்

தொடங்குகிறது

அம்மாவின் மரணத்தை ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்.. உயிரோடு இருக்கையில் அவளுக்கு வீடே உலகம். இறந்த பிறகோ உலகே வீடாகிப் போகிறாள்.

அரசியலுக்கோ அமைப்புக்கோ நடக்கும் உட்பூசலைச் சொல்லாமல் சொல்லும் தகுந்த சிறந்த ஒரு கவிதை…

ஆரம்பத்தில்

ஒன்றாகத்தான் விளையாடினோம்.

இப்போது

தனித்தனி பிரிவுகளாக

…….

……..

களம் பிரிக்கப்பட்டிருந்தாலும்

கனவுகளில்

நாம் வேறுவேறல்ல”

எது எப்படியாயினும் கவிஞர் நாகா குறைகளுக்கு நடுவே நிறைகளை நிறுத்தி நேர்செய்யும் நேசத்தோடு எப்போதும் இருப்பார்.  அதை அவரே ஒரு கவிதையில் சொல்லி முடிக்கிறார் இப்படி…

எனக்குத் தெரிந்ததெல்லாம்

வாய் நிறைய புன்னகையும்

மனசு நிறைய அன்பும்தான்

எல்லோரிடமும்

எந்த நேரமும்”.

யாரிடத்திலும் புத்தர் இல்லை (கவிதைகள்)

ஆசிரியர் : நாகா

சரோஜினி பதிப்பகம், கோவை

விலை ரூ.130/-

00

விஜயராணி மீனாட்சி

   இராஜபாளையம்

தனியார் பள்ளியில் முன்னாள் ஹிந்தி ஆசிரியர்

உள்ளூர் தொலைக்காட்சி நேரலை செய்தி வாசிப்பாளர்,

தனியார் நூலகத்தில் நூலகராக இரண்டு ஆண்டுகள்.

2016 லிருந்து இலக்கியம் தொடர்பான  வாசிப்பு 

2017 ல் கலை இலக்கியப் பெருமன்றத்தில் 3 ஆண்டுகள்  நகரத் தலைவர்.

பகிர்வு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர்.

கவியரங்களில் பங்கு பெறுதல்,

கவிதை , கதை, கட்டுரை  ஆகியவை பல மின்னிதழ் , அச்சிதழ்களிலும் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *