– கே.பாலமுருகன்
1
முதல் நாள் இரவு. சமிலா கடற்கரையினோரமிருந்த சிறிய விடுதியில் தங்கினேன். பெரும்பாலும் தனியாக சுற்றுலா வருவதைதான் நான் விரும்புவேன். அது என்னை நானே நிரப்பிக் கொள்ள பயனாக இருக்கும்.
அறையிலிருந்து சன்னல் வழியாக அவளைப் பார்க்க முடிந்தது. இணையத்திலிருந்து இந்தத் தங்கும் விடுதியை நோட்டமிடும்போது தங்க கன்னியின் சிலையைப் பார்த்தவாறு அறை இருப்பதைப் பலமுறை உறுதி செய்தேன்.
தாய்லாந்து என்றதும் ஹத் யாய் ஷோப்பிங் பற்றிதான் அலுவலகத்தில் உள்ளவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இம்முறை எதையாவது கடந்துபோக வேண்டும் எனத் தோன்றியது. அதுவும் அந்தக் கணினியின்முன் உட்கார்ந்து எட்டு மணிநேரம் இறுக்கமடையும் சுழற்சியின் அனலைக் கடக்க வேண்டும் எனத் தோன்றியது. அதுவும் சுனிதாவின் வார்த்தைகளை அள்ளி எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
மகள் சுனிதாவை வாரம் ஒருமுறைதான் சந்திப்பேன். ஜொகூருக்கு விடுமுறைக்குப் போகும்முன் என்னிடம் அன்றைய சந்திப்பின்போது சொன்ன கதைதான் இப்பொழுது சொங்க்லா நகருக்கு வரவைத்தது. அவள் ஒவ்வொருமுறையும் என்னைச் சந்திக்கும்போது ஏதாவது ஒரு விநோதமான கதையைச் சொல்வாள். அதில் அவளுக்கும் எனக்கும் ஒருவித குதூகலம்.
“அப்பா, ஒரு தாய்லாந்து மீனவர் இருந்தாராம்… அவர் சொங்க்லா கடற்கரைக்குத் தினம் வரும் ஒரு கடல்கன்னியைப் பார்த்துட்டாராம்…”
“வாவ்… நான் பார்த்ததே இல்லமா…”
“ப்பா… இருங்க நான் சொல்லி முடிச்சிடரேன்… அந்தக் கடல்கன்னி ஒரு பெரிய சீப்பு வச்சு அதோட தலைய சீவுமாம்… அது தங்க சீப்புபா…”
“அப்புறம் என்ன ஆச்சுமா?”
“அந்த மீனவர் அங்கள் பார்த்தோன அது சீப்பைப் போட்டுட்டுக் கடலுக்குள்ள குதிச்சு போயிருச்சாம்…”
“அடடா! அப்போ அந்தச் சீப்பு எங்கமா?”
“அது தெரியலப்பா… ஆனா அந்த மீனவர் அங்கள் ரொம்ப வருசமா அந்தக் கடல்கன்னி வரும்னு சீப்போட காத்திருந்தாராம்… அதுனாலத்தான் அந்த இடத்துல சிலையே வந்துச்சாம்…”
“சூப்பரா இருக்கு கதை… இப்போ அப்பா என்ன செய்யணும்?”
ஒவ்வொரு கதையைச் சொல்லி முடித்ததும் சுனிதா எனக்கொரு இடுபணியைக் கொடுத்துவிட்டுதான் போவாள். அடுத்த ஒரு வாரம் வரை நான் அந்த நினைவுகளோடு இருப்பேன்.
“எனக்கு அந்த மாதிரி தங்க சீப்பு வேணும்பா…”
“அதுக்கென்னமா… என் செல்லக்குட்டிக்காக இதுகூட தர மாட்டனா?”
அவள் சிரித்தாள். அவள் கண்கள் என் பதிலில் அத்தனை உயிர்ப்பாயின.
“எனக்குத் தங்க கன்னியோட சீப்புதான் வேணும்…”
அழுந்த சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

2
ஏனோ அறைக்குள் சூடு தாளவில்லை. நடுநிசி. மெதுவாக அறைக்குள்ளிருந்து வெளியேறி சாலைக்கு வந்தேன். கடல் அமைதியாக இருந்தது. சோங்க்லா பழைய நகரத்தின் சுவர்கள் இரவில் உறங்குவதில்லை எனத் தோன்றியது. தெருவிளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் சுவர்கள் தூரத்தில் எதையோ சொல்ல முயன்றன. பகலில் பார்த்த சுவர் ஓவியங்களின் அருகில் சென்றேன்.
பகலில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கும் அந்தச் சுவர்களின் மேல், இரவின் ஈரக்காற்று படரத் தொடங்கியவுடன், வர்ணங்களுக்குள் சிக்கியிருந்த பெண்களின் கண்கள் மெதுவாகத் திறப்பது போல் உணர்ந்தேன். நள்ளிரவு மயக்கமாக இருக்கலாம். அவற்றின் மேல் கடலின் உப்பு ஒளிர்கிறது. அந்த நகரம் முழுவதும் கடலின் மூச்சு நிரம்பியிருந்தது.
ஒரே நேரத்தில் பல காலங்களைத் தாங்கிக் கொண்டிருந்தது. சீன மரவீடுகளின் நிழல்கள், தாய் கோவில்களின் பொற்கூரைகள், மலாய் வாசனைப்பொருட்களின் மணம், சாலையோர மீன்சந்தைகளின் உப்பு வாசனை. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று கலந்திருந்தன. சோங்க்லா ஒரு நகரமாக எனக்குத் தோன்றவில்லை. அது பல தலைமுறைகள் சேர்ந்து மறக்காமல் வைத்திருந்த கனவாக இருந்தது.
தங்க கன்னியின் நிழல்கள் எல்லா இடங்களிலும் படர்ந்திருந்தன. காலையிலிருந்து அவளைப் பற்றிதான் கேட்டறிந்தேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியான கதைகளுடன் இருக்கிறார்கள். பெரும்பாலோர் அவளைக் கண்டு கொள்வதில்லை.
“”போய் போட்டோ எடுத்துக்கோ… அவ்ளதான்…”
என்று விரக்தியுடன் சொன்னார்கள். சிலர் அச்சிலைதான் சமிலாவை வாழ வைக்கிறது என்றார்கள். அவளைப் பற்றிய ஏதோ நிழல் எல்லோரிடமும் இருந்தது.
ஒரு சுவரில் அவள் நோரா நடனத்தின் வளைந்த விரல்களுடன் நின்றிருந்தாள். மற்றொரு சுவரில் வணக்கத்தில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள். ஒரு பழைய மரக்கதவின் நடுவில் மலர்களைத் தாங்கிய சிறுமியாக இருந்தாள். இன்னொரு சுவரில் வெண்மையான வட்டத்தின் மையத்தில் பேய்நிழல்போல ஆடியபடி இருந்தாள். எங்கும் அவள்தான் இருப்பதாக நினைத்தேன். அது என் நினைப்பாகக்கூட இருக்கலாம்.
“நீ எதுக்கு அவளைத் தேடி வந்தாய்? அவள் ஒரு கட்டுக்கதை…”
இன்று மதியத்தில் ஒரு வயதானவர் சொன்னார். நான் அசடு வழிந்தேன். என் மகள் சொன்னதற்காக வந்துள்ளேன் என எப்படிச் சொல்வது. அவர் அடுத்த கேள்வியாக மகள் எங்கே எனக் கேட்பார். தேவையில்லாமல் உரையாடல் நீடிக்கும் என விட்டுவிட்டேன்.
ஒவ்வொரு ஓவியத்திலும் அவள் வேறுபட்டிருந்தாலும், கண்கள் மட்டும் ஒன்று போலத்தான் இருந்தன. அநேகமாக அவளின் கண்களைத்தான் நான் அனைத்து ஓவியங்களிலும் பார்க்கிறேன்.
கடலை நீண்டகாலம் பார்த்துவிட்டு திரும்பிய கண்கள்.
3
சோங்க்லாவின் காற்றில் எப்போதும் இரண்டு வாசனைகள் இருந்தன. ஒன்று கடலின் உப்பு. மற்றொன்று பழைய மரவீடுகளின் ஈரமடைந்த காலம்.
சுவரில் பார்த்த கண்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே உறங்கிவிட்ட நகரத்திலிருந்து மீண்டும் தங்கும் விடுதிக்குத் திரும்பினேன். ஏனோ மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது. தங்கியிருந்த விடுதி, பழைய சீன தாய்லாந்து கலப்பு கட்டிடம். அதன் படிக்கட்டுகள் ஏறும்போது காலத்தைப் பின்னோக்கிக் கடப்பது போன்ற உணர்வு எழுவதைத் தடுக்க முடியவில்லை.

சுவர்களில் மங்கிய பழைய புகைப்படங்கள். கண்ணாடிகளில் பழைய முகங்களின் நிழல்கள். ஜன்னல்களுக்கு வெளியே வளைந்து தொங்கிய மின்கம்பிகள். அந்த விடுதியின் உரிமையாளர் மே சாய் என்ற முதிய பெண். அவளது முகம் உலர்ந்த இலை போல சுருங்கியிருந்தாலும், கண்களில் மட்டும் விசித்திரமான ஒளி இருந்தது.
“நீங்கள் சுவரோவியங்களை பார்த்தீர்களா?”
சட்டென அதிர்ந்துவிட்டேன். அவளைப் பற்றி நினைக்கும்போதே அவளே முன்வந்து நின்றால் எப்படி இருக்கும்? தூக்கி வாரிப் போட்டுவிட்டது.
“பார்த்தேன்.”
“அவள் இன்னும் உங்களைப் பார்க்கவில்லை.”
நான் புன்னகைத்தேன். மதியத்தில் விடுதிக்கு வரும்போது இவரிடமும் அந்தத் தங்க கன்னியைப் பற்றி விசாரித்தன் தொடர்ச்சியாக அவர் கிண்டலடிக்கிறார் எனத் தோன்றியது.
“அவள் உங்களைப் பார்க்க நினைக்கும்போது நீங்கள் அவளைக் கண்டுபிடிப்பீர்கள். அதுவரை தேடுங்கள்,”
இதுவரை இந்த நகரில் சமிலா கடற்கன்னியைப் பற்றி யாரும் இவ்வளவு உள் அர்த்தங்களோடு சொன்னது இல்லை.
“இரவு நேரம் கடற்கரையில் அதிகம் இருக்காதீர்கள். கடல் தூக்கிக் கொண்டு போய்விடும்…”
அந்த முதியவர் சிரித்த முகத்துடன் மீண்டும் அவருடைய அறைக்குள் போய்விட்டார். அடர் பழுப்புநிறக் கதவு.
அறைக்குள் வந்து கண்களை மூடினேன். ஆனால் அந்த இரவு தூக்கம் வரவில்லை. வெளியில் கடல்காற்று. தொலைவில் பிபாட் இசையின் மங்கிய ஒலி. அறையிலிருந்து மீண்டும் வெளியே வந்தேன். மரப்படிக்கட்டுகளில் ஈரமான காலடிச்சுவடுகள் தெரிந்தன. யாரோ கடலிலிருந்து நடந்து வந்தது போல. இங்கு மொத்தமே இரண்டு அறைகள்தான் இருந்தன. இன்னொன்றில் யார் இருக்கிறார் எனத் தெரியவில்லை. பகலில் இங்கு வரும்போது நான் மட்டும்தான் இன்றிரவு தங்குகிறேன் என அந்த முதிய பெண் சொன்னது நினைவில் எட்டியதும் சற்றே மனம் களேபரம் அடைந்தது.
அந்தக் காலடித்தடத்தின் ஈரம் பிசுபிசுப்புடன் இருந்தது. கடலின் உப்பு மணத்தை என்னால் நன்றாக நுகர முடிந்தது. முதலில் இந்த மணம் இவ்வளவு காட்டமாக இல்லை. மீண்டும் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டேன். கடலின் சத்தம் இப்பொழுது மெதுவாகக் கூடி வந்தது.
4
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மீண்டும் சமிலா கடற்கரைக்குச் சென்றேன்.
காலை வெயிலில் கடல் வெண்மையாக ஒளிர்ந்தது. அலைகள் கரையைத் தட்டும் ஒவ்வொரு முறையும், பாறைகளின் மீது ஒளிச் சிதறியது. கடற்கரையில் குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். சுனிதா அங்கு இருந்திருந்தாள் எப்படியிருக்குமென மனம் வழக்கம்போல கற்பனை செய்து கொண்டது. குதிரை சவாரிகள் மும்முரமாக இருந்தன. பெரியவர்கள் குழந்தைகளோடு பயத்துடன் குதிரை மீது அமர்ந்திருந்தனர்.
அதன் நடுவில், மெர்மெய்டு சிலை. அவள் தங்கம் போல ஒளிர்ந்தாள். அருகில் சென்றபோது, அந்தச் சிலையின் முகம் என்னை உலுக்கியது. அதே கண்கள். நேற்று பார்க்கும்போது அவளது இமைகள் கண்களைப் பாதிவரை மூடியிருந்ததால் கண்களை உற்று நோக்கவில்லை. என் குறிக்கோள் அவளுடைய சீப்புதான். ஆனால், நான் நினைத்தது நிஜம்தான். சுவரோவியங்களில் இருந்த பெண்ணின் கண்கள். இங்குத் தங்க கன்னியின் மூடிய இமைக்குள் ஒளிந்திருக்கும் அதே கண்கள்தான்.
அவள் கடலை நோக்கவில்லை. யாரையோ நோக்கிக் காத்திருந்தாள். சுனிதா கதை சொல்லும்போது இப்படித்தான் கண்களை நீண்ட நேரம் நிறுத்துவாள். வெகுநேரம் அந்தக் கண்களைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். ஒன்றுமே நினைக்கத் தோன்றவில்லை. அந்த முகத்தினுள் அப்படியே புதைந்து போய்விடலாம் என நினைத்தேன். காலம் அப்படியே உறைந்தது போல ஆகிவிட்டேன்.
பிறகு, சமிலா கடற்கரையொட்டி இருந்த தெருவோரக் கடைகளில் பெரிய சீப்பு கிடைக்குமா என்று அலசினேன். எதுவும் என்னைக் கவரவில்லை. சுனிதா அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டாள் எனத் தோன்றியது. அடுத்த வாரம் பார்க்கும்போது என் கையில் கன்னியின் சீப்பு இருக்கும் எனக் கனவு கண்டு கொண்டிருப்பாள்.
அன்றிரவு விடுதிக்கு வந்ததும் மே சாய் மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“பல வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெண் இருந்தாள். அவள் நோரா நடனக் கலைஞர். பெயர் மாலி.”
வெளியில் மழையின் மணம். மின்விளக்கின் மஞ்சள் ஒளி அவளது முகத்தில் நடுங்கியது.
“அவள் நடனம் ஆடும்போது மீனவர்கள் கடலுக்குப் போக மாட்டார்கள். கடல் அவளுடைய கால்களின் ஒலியைக் கேட்கும் என்று நம்பினார்கள்.”
“பிறகு?”
“அவள் ராசியானவள். மாலி என்றால் எல்லோருக்கும் கனவு. அவளை அடையத் துடிப்பார்கள்,”
“அழகு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது,”
“நான் சொல்வதைக் கேள். அவளை ஒரு மீனவன் அடைய துடித்தான். அவளுக்குப் பிடிக்கவில்லை. விடாமல் துரத்தினான்…”
“ஐயோ! இங்கும் மீனவனா? பிறகு?”
“ஒரு தமிழ் ஓவியன் அவளைக் காதலித்தான்.”
“யார் அவர்?”
அந்த முதிய பெண்ணும் சுனிதாவைப் போலத்தான். இடையில் குறுக்கிடுவதை விரும்பவில்லை.
“அருண்மொழி. அவன், அவளை எல்லா சுவர்களிலும் வரைந்தான். ஆனால் அவள் ஒருநாளும் அவனுக்காகவும் நிற்கவில்லை. அவள் எப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.”
“ஏன்?”
முதிய பெண் மெதுவாகச் சிரித்தாள்.
“அவள் மனிதரைக் காதலிக்கவில்லை. திரும்ப வராத ஒன்றைக் காதலித்தாள்.”
“அப்படியென்றால் மாலிதான் கடல்கன்னியா? மாலியைத்தான் கடல்கன்னி என்று சொல்கிறார்களா?”
“அதை நீயே தெரிந்து கொள்வாய். இதுவரை தங்க கன்னியைத் தேடி வந்தவர்கள் இருவர்தான். மற்றவர்கள் அவளைப் பார்த்து அவளைப் புகைப்படம் எடுக்க வந்தவர்கள்…”
சொங்க்லாக் வந்தது முதல் நடக்கும் ஒவ்வொன்றும் எனக்குப் புரியவில்லை. இந்த நகரம் முழுவதும் என்னை முன்னரே அறிந்தது போல இருந்தது.
“காத்திருந்தது மீனவர்தானே? அப்படியென்றால் மாலி கதையில் மீனவர் கெட்டவரா? அவர் சிலை ஏன் இங்கு இல்லை? அவர்தானே சீப்பை வைத்துக் காத்திருந்தார்?”
சுனிதா சொன்ன அனைத்தையும் நான் மறக்கவில்லை. அவர் அமைதியாகச் சிரித்தார்.
“அவள் வராததைக் கண்டு அந்த மீனவன் அந்தத் தங்க சீப்பைக் கரையிலேயே வைத்துவிட்டுக் கடலுக்குள் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது பலருக்குத் தெரியவில்லை… கோழைகளுக்குச் சிலைகள் வைக்க மாட்டார்கள்,”
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால், அந்த முதிய பெண்ணின் கண்களில் சொங்க்லா நகரத்தின் மொத்த வரைப்படமும் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
5
மழைக்கால இரவுகள் சோங்க்லாவில் வேறுபட்டவை. வானம் முழுவதும் கரைந்து கடலுக்குள் விழுவது போல இருக்கும்.
ஏற்கனவே தங்க கன்னியைப் பற்றி தேடி மலாயாவிலிருந்து வந்த ஓர் ஓவியனின் கதையும் அங்கு இணைத்துப் பேசப்படுவதை இன்று அறிந்தேன். அவர் பெயர்கூட அருண்மொழி என்று இருவர் சொன்னார்கள். அதையேதான் முதிய பெண்ணும் சொன்னாள். அவர்களின் நினைவில் தங்கியிருந்த கதை அது. அருண்மொழி அந்த நகரத்துக்குள் நுழைந்தபோது, அவனுக்குள் ஓர் அழுகிய நினைவு இருந்தது. அவன் ஓவியர். ஆனால் சில ஆண்டுகளாக எந்த ஓவியமும் அவனுக்குள் முழுமையாக பிறக்கவில்லை. கோடுகள் வந்தன. வண்ணங்கள் வந்தன. ஆனால் உயிர் மட்டும் வரவில்லை.
சோங்க்லாவில் தங்கி, பின்னர் காணாமல் போன அவரைப் பற்றிய கடைசி சில நினைவுகள் மட்டுமே மிச்சமிருந்ததாகச் சொன்னார்கள்.
“அவன் கடலைக் வரைந்து கொண்டிருந்தான். ஆனால், கடலுக்குள் ஒருத்தி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தத் தங்க கன்னி சிலையின் அருகே நாளெல்லாம் உட்கார்ந்து எதையோ அவசரம் அவசரமாக வரைந்து கொண்டிருந்ததாகச் சிலர் சொன்னார்கள். அதன்பின் அவன் காணவில்லை என்கின்றனர்.
அந்தக் கதையை நினைத்தபடி புரண்டு புரண்டு படுத்தேன். உறக்கம் வரத் தாமதமாகியது. மழை சத்தமும் தூரத்தின் சன்னமாகக் கேட்கும் கடலின் சத்தமும் இதமாகக் காதுக்குள் ஒலித்தன. அவ்வளவு மன நிறைவு என்னைத் தூங்க விடாமல் செய்தது. அறைக்கதவைத் திறந்து நேற்று பார்த்தது போலக் காலடித்தடங்கள் ஏதும் தெரிகிறதா எனப் பார்த்தேன். வெறுமை மட்டுமே கண்களில் பட்டது. அறையிலிருந்து வெளியேறி சா மேய் முன்கதவின் ஓரத்தில் வைத்திருந்த குடையை எடுத்துக் கொண்டு சாலையில் இறங்கினேன்.
பழைய நகரச் சுவர்களைத் தேடி நடந்தேன். மழையில் அந்தச் சுவரோவியங்களைப் பார்க்க நினைத்தேன். தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. கடைகளின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மின்விளக்குகளின் கீழ் மழைத்துளிகள் வெள்ளி நூல்கள்போல் விழுந்தன.
அப்போதுதான் கவனித்தேன். ஒரு சுவரோவியத்தில் இருந்த பெண்ணின் கை இடம் மாறியிருந்தது. கைப்பேசியை எடுத்து நேற்று எடுத்த அதே ஓவியத்தின் புகைப்படத்தைக் கவனித்தேன். ஏனோ உடலின் தன்னிச்சையாக நடுக்கம் தோன்றியது.

முன்பு வணக்கத்தில் இருந்த விரல்கள் இப்போது அழைப்பது போல வளைந்திருந்தன.
அங்கேயே நின்றேன். காற்று திடீரெனக் குளிர்ந்தது. சுவரின் வர்ணத்திலிருந்து ஈரம் வடிந்தது. பின்னர் மெதுவாக அவள் கண்கள் என்னை நோக்கித் திரும்பின.
என்னால் பின்னோக்கி நகர முடியவில்லை. அவள் சுவரிலிருந்து வெளிவரவில்லை. ஆனால் முழுத் தெருவும் அவளுடைய பார்வையால் நிரம்பியது.
“அருண்மொழி என்னை வரைந்ததில்லை,” என்ற குரல் கேட்டது.
“அவன் என்னை நினைவில் வைத்துக்கொள்ள முயன்றான்.” மீண்டும் அதே குரல்.
விறுவிறுவென அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். அந்தக் குரல் உண்மையா அல்லது இவையாவும் என் கற்பனையா எனத் தெரியாமல் மனம் குழம்பி நடுங்கியது.
6
அடுத்த நாள் அருண்மொழி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் பழைய கோவிலின் பின்னால் இருந்த கைவிடப்பட்ட மரவீட்டுக்குச் சென்றேன். வீடு முழுவதும் தூசி. சாளரங்களின் இடைவெளியில் இருந்து சூரியஒளி நீண்ட கத்திகள்போல உள்ளே விழுந்தன.
அங்கே தூசியில் மூழ்கியிருந்த ஓவியச்சட்டங்கள் ஏராளம் இருந்தன. அதனை அரசு பாதுகாக்கவில்லை என நினைத்தேன். அவற்றின் நடுவில் பாதியாக அழிந்திருந்த ஓர் ஓவியம். கடலை நோக்கி அமர்ந்த பெண். அவளின் பின்னால் நின்றிருந்த தமிழ் மனிதன். அவன் முகம் முழுவதும் அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓவியத்தின் கீழே ஒரு வரி:
“கடல் எடுத்துச் சென்றவர்கள் இறப்பதில்லை. அவர்கள் காத்திருப்பாக மாறுகின்றனர்.”
அந்த வரியின் கீழ் கருந்தாமிர நிறத்தில் ஒரு சொல் இருந்தது.
மாலி.
மனம் திடுக்கென ஆகிவிட்டது. விரைந்து அங்கிருந்து வந்துவிட்டேன். மீண்டும் அந்த முதிய பெண்ணிடம் சென்றேன்.
“எனக்குத் தங்க கன்னி வைத்திருப்பது போன்ற பெரிய சீப்பு கிடைக்குமா?”
“இது மழைக்காலம். நாளை இன்னும் அதிகமாகலாம். அப்பொழுது கடற்கரைக்குப் போ. உனக்கு வேண்டியது கன்னியிடமே கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
7
அந்த இரவு புயல் போலப் பலத்த காற்று. விடுதிக்கு வெளியில் இருந்த மரங்கள் ஆவேசத்துடன் கூரையை உரசிக் கொண்டிருந்தன. கடல் வெறித்தனமாகக் கரையைத் தாக்கியது. சன்னலைத் திறந்து கடலைப் பார்க்க முடியவில்லை. அறையைவிட்டு வெளியில் வந்தேன். அந்த முதிய பெண்மணியின் அறைக்கதவு திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சிவப்பு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து அணைவதற்குத் தயாராக இருந்தது. தீபத்தின் படபடப்பு நிழல் போலச் சுவரில் படர்ந்திருந்தது.
விடுதியை விட்டு சமிலா கடற்கரைக்கு விரைந்தேன். நாளை சொங்க்லா விட்டுப் புறப்பட்டாக வேண்டும். ஆனால் இப்பொழுதுவரை சீப்பு கிடைக்கவில்லை. மெர்மெய்டு சிலை முழுவதும் மழையில் நனைந்திருந்தது. மின்னல் வெட்டிய ஒளியில் அவள் உயிரோடு இருப்பது போலத் தெரிந்தது.
கன்னியின் அருகில் போய் நின்றேன். கடல் நீர் கால்களைத் தட்டியது.
அவளின் மூச்சு சத்தத்தை என்னால் அவ்வளவு மழையிலும் கேட்க முடிந்தது. இதுவரை இந்தக் கடலுக்கு வந்த யாருக்கும் கிட்டாத வரமா? அல்லது கடலே அவளின் சுவாசத்தைப் போலித்தம் செய்கிறதா?
“அவன் என்னை வரைந்து கொண்டிருக்கவில்லை. என்னுள் எங்கோ தொலைந்து போய்க்கொண்டிருந்தான்…”
சிலையிலிருந்துதான் அந்தக் குரல் ஒலித்தது போலத் தோன்றியது. அவள் கண்கள் அசைந்தன. இமை மெல்லத் திறந்தது. எனக்குள் ஏதோ உடைந்தது. கடலா, காற்றா, அலையா அனைத்தும் ஒன்றிணைந்த ஒலிதான் குரலாகக் கேட்கிறதா எனக் குழம்பினேன்.
“அருண்மொழி எங்கே?”
நீண்ட அமைதி.
பின்னர், “கடலுக்குள் வரையப்பட்ட ஓவியங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது.”
“நீதான் மாலியா?”
துணிவை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேசினேன். கடல் அலைகள் கடுங்காற்றல் மேலெம்பி அவளை அடித்துச் சென்றன. நானும் தடுமாறி சற்றே விலகினேன். உடல் முழுவதும் நனைந்தது.
“நான் மாலி… நான் தான் ஓவியர். நடனக்காரி…மீனவள்…நான் தான் சுனிதா…”
“என்ன சொல்ற? யாரு நீ?”
“நினைவு அதிக நாட்கள் உயிரோடு இருந்தால், அது மனித உருவத்தை விட்டுவிடும்,”
அடுத்த அலை அடித்ததில் நான் சுருண்டு போய் விழுந்தேன். முகம் மணலில் புதைந்து எரிச்சலை உண்டாக்கியது. தட்டுத்தடுமாறி அவளை விட்டுத் தூரம் வந்தேன்.
8
காலை. காற்றின் ஆவேசம் நின்றிருந்தது.
சமிலா கடற்கரையில் மக்கள் வழக்கம்போல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எனக்கு சீப்பு கிடைக்கவில்லை. நேற்றிரவு கரையில் என்ன நிகழ்ந்தது என்பதுகூட கனவுபோல் இருந்தது. அறையை விட்டுத் துணிப்பையுடன் வெளியில் வந்தேன்.
முதிய பெண் அறைக்கு வெளியில் நின்றிருந்தாள். குடிக்கச் சொல்லி எனக்குச் சூப் கொடுத்தார்.
“இந்தச் சூப் எப்பொழுதும் உன் நினைவில் இருக்கும்,”
வெளியேறும் முன் அவர்களின் மரியாதை எனச் சொன்னார். நான் உம் மட்டும் சொல்லி வைத்தேன்.
“உனக்குச் சீப்பு கிடைத்ததா?”
“இல்லை. ஆனால் சில குழப்பங்கள் மட்டும் கிடைத்தன,”
“அவள் உன்னைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்,”
நான் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. முதலில் சொங்க்லா நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டும் தொடர்ந்து மனத்தை உந்திக் கொண்டிருந்தது. சுனிதாவை அடுத்த வாரம் சந்திக்கும்போது என்ன சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை.
போகும் முன் அந்தச் சுவர் ஓவியங்களை மீண்டும் ஒருமுறை பார்த்துவிடலாம் எனத் தோன்றியது. விடுதியை விட்டு அதே சொங்க்லா பழைய பட்டணத்தின் சுவர் ஓவியங்கள் இருந்த இடத்திற்கு விரைந்தேன்.
கடந்த இரண்டு நாள்களாக நான் பார்த்த பெண்ணின் ஓவியங்கள் ஏதும் அங்கு இல்லை. தேநீர் விற்றுக் கொண்டிருக்கும் சீனக்கிழவர், பெரிய மீன், மீனவர் ஒரு வாளியில் மீன்களைத் தரும் காட்சி என வேறு ஓவியங்கள் இருந்தன. கூகளில் இந்தப் பழைய சுவர் ஓவியங்களைப் பற்றித் தட்டினேன். இப்பொழுது இருக்கும் இந்த ஓவியங்களைத்தான் அது காட்டியது. கால்கள் வேகமாக நடந்தன. ஒரு வாடகை வண்டியைப் பிடித்து டன்னோக் போய்விட வேண்டும் என அவசரமாக நடந்தேன்.
சொங்க்லா பழைய பட்டணத்தின் அருங்காட்சியகத்தின் எதிரில் வந்து நின்றேன். ஒரு தாய்லாந்து பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்துக் கையசைத்தாள்; புன்னகைத்தான். நான் நின்றிருந்த சுவரைப் பார்த்தேன்.
ஒரு நடுத்தரத் தமிழரின் முகம். உடன் சிறுமி.
அவர்களினருகில் மெர்மெய்டு. கையில் தங்க சீப்பு. மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. கடலை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த ஓவியத்தின் கீழே யாரோ தாய்லாந்து மொழியில் எழுதியிருந்தார்கள்:
“ทะเลเก็บทุกความทรงจำ”
கடல் எல்லா நினைவுகளையும் பாதுகாக்கிறது.
00

கே.பாலமுருகன்
மலேசியத் தமிழ் எழுத்தாளர், சிறார் இலக்கியவாதி
சிறுகதைகள், நாவல்கள், சினிமா கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை 29 நூல்கள் இயற்றியுள்ளார். ‘தேவதைகளற்ற வீடுகள்’, ‘மூக்குத் துறவு’ ‘பசித்திருக்கும் பேய்கள்’, நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள், உயாங் மலை, மாயவிடுதி, இறந்தகாலத்தின் ஓசைகள், ‘தேவதைகளின் காகித கப்பல்’, ‘தீர்ந்துபோகாத வென்கட்டிகள்’, ‘மரங்கொத்தியின் இசை’, ‘தலேஜூ’ என இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
பன்முக நவீனப் படைப்பாளியாகக் கருதப்படும் இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக எழுதி வருகிறார். கே.பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், ஏழு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் எனப் படைத்துத் தொடர்ச்சியாக சிறார் இலக்கியத்திலும் இயங்கி வருகிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழக அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே சிறுகதை மலேசியாவின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் இரண்டாம் பருவத்திற்கான பாடமாகச் சேர்க்கப்பட்டிருப்பதும் பெருமைக்குரியதாகும்.
தாம் எழுதுவது மட்டுமல்லாமல் நம் நாட்டிலுள்ள சிறார்களையும் போட்டியின் வழியாக எழுத வைத்து கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கீகரித்து வருவதும் அவருடைய இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதுவரை மலேசியத் தமிழ் சிறார்களுக்கு ஆறு முறை சிறார் இலக்கிய விழாவை நடத்தி கற்பனைவளத்தினையும் எழுத்தாற்றலையும் வளர்த்து வருகிறார்.
2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் பாலமுருகன் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். மேலும், தமது குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்ற கலைஞர் என்றும் அவரை அடையாளப்படுத்தலாம். தமது No Exit என்கிற மௌனக் குறும்டத்தின் வழியாகப் பலரையும் பேச வைத்தவர். அக்குறும்படத்திற்காக இதுவரை இந்தியா, மஹாராஷ்ட்ரா, லண்டன் என பல உலகலாவிய திரைப்பட விழாக்களில் கவனித்தக்க விருதுகளை வென்றுள்ளார். இதுவரை கரிகாற்சோழன் விருது, தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, ஆதி.ராஜகுமாரன் விருது, சிறந்த எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திர விருது, பாஷோ ஹைக்கூ விருது, சோழன் கடார விருது, கற்பனையாற்றல்மிக்க ஆசிரியர் விருது, மலேசியத் தேசிய நூலகத்தின் சிறந்த நூலுக்கான விருது என கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எனப் பல நாடுகளில் சிறுவர் இலக்கியம் தொடர்பான பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் பாலமுருகன் அவர்கள் கடார மண்ணைச் சேர்ந்தவர்.

