வலி மிகுந்த நாளொன்றில்
நிச்சலமான இரவில்,
இமைகள் முழுவதும்
அழுகையின் பாரங்கள் கூடி,
உறக்கம் கண்களை தழுவினாலும்
ஏதேதோ கடந்து போன
நினைவுகள் நிழலாடும்
மன முற்றத்தில்.,
உயில் எழுதிக்கொள்கிறது
விடியல்
இந்த இரவு தனக்கானதென்று.
000
மழை காலம் இல்லாத
ஒரு நாளில்
மழையை வேண்டியிருக்கிறேன்.
மேகம் வரை வந்த மழை
மண்ணைத்தொடும் முன்
கலைந்துப்போனது
என் ஆசைகளைப்போலவே.
000
எங்கிருந்தோ நீ
என் கவிதைகளை
வாசித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையில் தான்
இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உன் மொத்த வாழ்நாளில்
ஒரு முறையேனும் எனக்காக
ஒரு கவிதையை எழுத
முயற்சித்திருப்பாய் தானே..,
அந்த ஒரு கவிதை தான் என்
கவிதைகளுக்கும், எனக்கும்
கிடைத்த பெரும் விருது.
00

வணக்கம் தோழமைகளே நான் ஜாகிர் உசேன். முதுகலை கணினி பயன்பாட்டியல் படித்திருக்கிறேன். சொந்த ஊர் வந்தவாசியில் வசிக்கிறேன். இ-சேவை மையத்தில் பணிபுரிகிறேன்..மீ யூசுப் ஜாகிர் என்ற பெயரில் பல நாளிதழ்கள், வார,மாத இதழ்களில் கவிதை, கேள்வி- பதில், விமர்சன கடிதம், என்று ஆயிரம் தடவைக்கு மேல் பிரசுரமாகி இருக்கும். இதுவரை மூன்று கவிதை தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறேன். நினைவுகளின் நதி – படைப்பு பதிப்பகம் 2023 , நீ உதிர்த்த சிறகின் பறவை – மௌவல் பதிப்பகம் 2024 மற்றும் உயிரில் கலந்த சொற்கள் – மௌவல் பதிப்பகம் வழியே 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

