ஆர். சீனிவாசன்

‘மாறுதலே நிரந்தரம்’:

பரிணாம வளர்ச்சி சொல்லும் முதல் விதி, சூழலுக்கு ஒத்துப்போகாத இனங்கள் அழிந்து போகும் என்பது. தேக்கம் அழிவின் அடையாளம் என்பதால், கலைக்கும் இவ்விதியின் சாரம் பொருந்தும். அப்படியெனில், கலை எந்த சூழலுக்குத் தன்னை பிணைத்துக்கொள்ள வேண்டும் என்பது கேள்வியாகிறது. இந்தச் சிக்கலான கேள்விக்கு பதில் தேடும் முன், கலை மானுடத்திற்கே உரிய தனித்துவ அடையாளம் என்பதை உணர்வது அவசியம். பிற ஜீவிகளுக்கு மனிதனைப்போல் உணர்ச்சிகள் இருந்தும், அதை அவைகள் கலைப்பொருட்களாக மாற்றுவதில்லை. இக்கேள்வியைப் பற்றி யோசிக்கையில், சலிப்பூட்டும் சில தருணங்களைக் கடந்து, கலை இரண்டு தனித்துவமான உறவு முறையின் பின்விளைவு என்பது புலப்படும். முதலாவது, மானுடத்திற்கும் சூழலுக்குமான உறவு; இரண்டாவது, ஓர் தனி மனிதனுக்கும் அவன் இருத்தலுக்குமான உறவு. இவ்விரண்டு உறவுமுறைகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே கலை. வேறு விதமாகச் சொன்னால், கலை மனித அனுபவங்களின் பிரதிபலிப்பு. காலப்போக்கில் மேற்கண்ட இரண்டு ஊடாட்டங்கள் மாறிக்கொண்டே இருப்பதினால், மனித அனுபவங்களில் ஆதாரம் கொண்ட கலை மாறுவதில் வியப்பேதும் இல்லை.

கலையின் வெளிப்பாடுகள் மனித அனுபவப் பேழையில் ஆதாரம் கொண்டவையாதலால், அதற்கு மனித சிந்தனையே வரம்பு. வேற்று கிரக வாசிக்கு வேண்டுமானால் மனித கலைப் படைப்புகள் வினோதமாகத் தோன்றலாம், ஆனால் சக மனிதனுக்கு அந்நியமாகத் தோன்றக் கூடாது. நிரந்தரமாக மாறும் சமூகத்தை, தனிமனித சிந்தனைகளை விமர்சிக்கும் மாயக் கண்ணாடி, கலை. இதனால் மானுடம் இருக்கும் வரை கலைக்கு அழிவே இல்லை. ஆதி மனிதன் குகை சுவர்களில் வரைந்த கலைப் படைப்புகளுக்கும் இப்போது படைக்கும் கலைக்கும் வித்தியாசம் என்ன என யோசித்தால், நுட்பத்தைத் தாண்டி சமூகத்தின், மனித சிந்தனையின் நகர்வுகளுக்கு ஒத்த கலை மாறியுள்ளது எனலாம். குறிப்பாக மனித சமூகம் கட்டுப்பாட்டிலிருந்து தனிமனித சுதந்திரத்திற்குப் பெயர்ந்ததை கலைப் படைப்புகள் பிரத்யேகமாக பிரதிபலிக்கின்றன எனலாம். கூட்டு சிந்தனையின் பிரதிபலிப்பாக வெளிவந்த கலை இப்போது தனிமனித வெளிப்பாடாக மாறியுள்ளது. இதுவே கலையின் எதிர்கால திசையுமாகும்.

‘தனி மனித சுதந்திரம் Vs சமூக கட்டுப்பாடு’:

கலை வெளிப்பாடுகள், சமூக அறத் தட்டுப்பாடுகளுக்கு இணங்கி இருக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலங்களில் கற்பனை வெளிப்பாடுகளின் வரம்புகளை சமூகமே தீர்மானித்தது. ஆரம்பகால கலை பாணிகள் (ஓவியம், சிற்பம், கவிதை, இலக்கியம், இசை, நடனம் இத்யாதி) தர்மம் அல்லது ஆதிக்கத்தின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு பூரண சுதந்திரமின்றி, பெரும்பாலும் அழகியல் மற்றும் தார்மீக கோட்பாடுகளுக்கு இணங்கி காணப்பட்டன. அத்தகைய போக்கு மறுமலர்ச்சி காலத்தில் உச்சத்தை அடைந்தது எனலாம். அக்கால படைப்புகள் அழகியலின் உன்னத உதாரணங்கள். ஓவியம் மற்றும் சிற்ப கலையில் பல புதிய நுட்பங்கள் கையாளப்பட்டன. ஓவியங்களில் மூன்று பரிமாண ஆழம் அதிகரித்து அதன் பின் விளைவாக உணர்ச்சிகளின் உன்னத வெளிப்பாடுகள் முதல் முறையாக காணக் கிடைத்தன. பெயர்களைக் குறிப்பிடாமல், பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்ட இவ்வியக்கம் வரைகலைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தனிப்பட்ட, மாறுபட்ட கருத்துக்களுக்குக் கொடுக்கவில்லை. அக்கால ஓவியங்கள் பெரும்பாலும் தேவாலயத்தை மெருகேற்றுவதற்கும், கொடை வள்ளல்களின் தற்பெருமைக்காவும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பகால இலக்கியம் (மொழி பேதமின்றி) ஓர் சமூகம் போற்றி காக்கும் நற்குணங்களின் தொகுப்பாகவே அமைந்தது. எழுத்துப் படைப்புகள் அக்கால சமூகத்தின் எண்ணத் தரவுகளை சுவடியில் ஏற்றியது ஆயிரம் வருடங்களுக்குப் பின் அப்பண்பாட்டை அறிய ஓர் தூர நோக்கியாக விளங்கியதே தவிர, இலக்கிய உன்னதங்களுக்கான எடை தராசில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

மேற்கண்ட நிலை மாறி தற்போதைய கலை பிரயோகம் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்துக்களின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இம்மாற்றம் வெகு விரைவில் வந்ததென்றே சொல்ல வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் துவங்கிய சிந்தனை புரட்சியின் பின் விளைவே தற்போதைய கலை வடிவங்கள். பார்வை கோணம், பொருட்களின் உள்ளர்த்தங்கள், முன்னிலைப்படுத்தல், நிறங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள உறவு, வடிவங்களின் சிந்தை தாக்கம் போன்ற புதுச் சிந்தனைகளின் வாயிலிலிருந்து பிறந்ததே நவீன கலை. ஆயிரம் ஆண்டு மரபை சில பத்தாண்டு முன்னடைவுகள் தகர்த்து புதிய மாற்றங்களை, கண்ணோட்டங்களை ஏற்படுத்திவிட்டன. கலை இப்போது ஒரு ஊடகம், தனி மொழி, தனித்துவ வெளிப்பாட்டியம். இந்த மாற்றம் மனிதனின் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மாறியுள்ளது.

நுட்பம் Vs மனித ஆற்றல்

கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள முன்னெடுப்புகள் ஏராளமானவை. உதாரணத்திற்கு, முதல் விமானம் காற்றில் பறக்கத் தொடங்கி நிலவை அடைய அறுபத்தி மூன்று ஆண்டுகளே ஆயின. இருபதாம் நூற்றாண்டு அறிவியலின் நூற்றாண்டு என்பதில் சந்தேகமே இல்லை. அதன் தொடர்ச்சியான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னெடுப்பான செயற்கை அறிவின் தாக்கம் கலைத் துறையிலும் காணப்படுகிறது. நுட்பத்தை கலை வெறுத்ததில்லை என்றாலும், இதுவரை நுட்பம் மனித ஆற்றலின் கட்டுக்குள்தான் இயங்கியுள்ளது. தூரிகையின் ரோமங்கள் மாறலாம், உளியின் உலோகம் மாறலாம், உடுக்கையின் தோல் மாறலாம், ஆனால் அதனை செலுத்தும் கைகள் மனிதனுடையதாகவே இருந்து வந்தன. அதைவிட முக்கியமாக படைப்புகளின் கருத்துக்கருக்கள் (அவை எத்தனை மோசமானாலும்) மனிதனுடையதாகவே இருந்தன. செயற்கை அறிவின் படைப்புகள் இந்த கோட்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு வகையில் கலையும் தர்க்கத்தின் ஆதாரத்தில்தான் அமைந்துள்ளது என்பதை AI-யின் வெளிப்பாடுகள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய நுட்பம் தூரிகை, உளி, இசைக்கருவி, பேனா போன்றவற்றின் தேவையை குறைத்துவிடுமா என்பது சொல்லாட்சிக் கேள்வி (தக்க பதிலைவிட இந்த கேள்வி எழுப்பும் உணர்ச்சிகளே முக்கியம்). உண்மையில் இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. எப்போது கலை வர்த்தக நுகர்விற்கு பாத்திரமானதோ, அப்போதே அது சமூக நகர்வுகளுடன் பிணைக்கப்பட்டுவிட்டது. ஆகையால், சமூகத்தில் இப்போது நடப்பில் இருக்கும் AI நுட்பத்தை கலை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஆயுதங்களை படைத்து அதன் ஊடாக பண்பாடுகள் பிறந்தது இதிகாச உண்மை. பொதுவாக, இதுவரை மனிதன் உருவாக்கிய ஆயுதங்கள் மனித திறனை அதிகப்படுத்தியுள்ளன அல்லது சிரமத்தை குறைத்து உற்பத்தியை பெருகச் செய்துள்ளன. ஆனால் அத்தகைய ஆயுதங்கள் / கருவிகள் உடலுழைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. அந்தக் கருவிகளை உபயோகிக்கும்போது சிந்திக்கும் வேலை மனிதனுடையதாகவே இருந்துள்ளது. இந்த நிலை மெதுவாக மாறத் தொடங்கியுள்ளதற்கு முக்கிய காரணம் மனித சிந்தனையின் பலவீனங்களே. சிந்தனை சலிப்புத் தட்டக்கூடியது, வயதுடன் குறைவது, தவறுகள் எளிதில் செய்யக்கூடியது. அதைவிடவும் முக்கியமாக அகநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது. நுட்பத்தின் தற்போதைய போக்கு ஒரு செய்முறையின் முக்கிய முடிவுகளை மேற்கண்ட மனித சிந்தனை ஊனங்களிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. தற்போதைய சமூகத்திற்கு நுட்பம் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், நுட்பத்தை உபயோகிக்கும்போது செயல்முறை முடிவுகளை மட்டும் மனித சிந்தனைக்கு ஏன் விடவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. சிறு தவறினால் பெருத்த அபாயங்கள் நேரிடும் சூழ்நிலைகள் இருக்கும் சமூகத்தில் (உதாரணத்திற்கு, உலகம் இயங்கத் தேவைப்படும் இணையம் சிறு மனித தவறினால் துண்டிக்கப்பட்டால் பல இன்னல்கள் நேரிட வேண்டியிருக்கிறது) செயல்முறை முடிவுகளை மட்டும் ஏன் மனிதன் எடுக்க வேண்டும், அதையும் தானியங்கி முறைக்கே விட்டுவிட முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நோக்கத்தில் தவறேதும் இல்லை எனினும், முற்றிலும் தானியங்கியாக சிந்திக்கும் திறனுடைய நுட்பத்தை கண்டடையும் லட்சியம் சரியானதா என்பதே கேள்வி. அத்தகைய நுட்பத்திற்கு வெகுகாலம் உள்ளது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். முடியவே முடியாது என்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நுட்பத்தின் தேடல் அபாயமானது ஆகையால் அதை கைவிடவேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். ஒருவேளை கருவிகள் சிந்திக்கும் திறன் பெற்றுவிட்டால் வாழ்வாதாரம் போய்விடும் என்ற பயத்தினால் மேற்கண்ட மறுப்புகள் எழலாம். உண்மையில் சற்று கவனமாக சுற்றும் பார்த்தால் அத்தகைய தானியங்கி நுட்பம் ஏற்கனவே எங்கும் வியாபித்திருப்பதை உணரலாம்.

மனிதன் நாசூக்கானவன். விண்வெளியின் வெறுமையை, ஆழ்கடலின் அழுத்தத்தை, வேற்று கிரகத்தின் சீதோஷண நிலையை தாங்க முடியாதவன். ஆனால் அத்தகைய வரம்புகள் உடலளவில் சம்பந்தப்பட்டவை. சிந்தைக்கு அவை தடங்கலாகாது. யோசியுங்கள், முற்றிலும் தானியங்கி விண்வெளி கப்பல், ஆழ்கடல் அற்புதங்களை ஆராயும் நீர்மூழ்கி போன்றவை இதுவரை மனிதகுலம் கண்டிராத பல அற்புதங்களை கண்டறிய உதவலாம்.

வரம்புகள் Vs திறமை

இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் எல்லா மரபுகளிலும் ஏழுதான். உன்னிப்பாக யோசித்தால் ஏழு ஸ்வரங்கள் என்பது மனிதனின் குரல் பேட்டியின் வரம்பு. மனிதனால் ஏழு ஸ்வரங்களுக்கு மேல் கேட்க இயலாது, பாடவும் முடியாது. அதேபோல் காணும் நிறங்கள் கூட மனித கட்புலனின் திறனால் வரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த தர்க்கத்தை மனித அனுபவங்களில் அடைப்படை கொண்ட அனைத்து கலை பிரதிபலிப்புகளுக்கும் நீட்டித்துவிடலாம். அதாவது இதுவரை மனிதன் படைத்த கலை படைப்புகள் இவ்வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டவை.

செயற்கை அறிவிற்கு அத்தகைய வரம்புகள் உண்டா என்பதே கேள்வி. ஓர் கணினி ஏன் மனிதனைப்போல் யோசிக்க வேண்டும். அதனால் சுயமாக யோசிக்க முடியாதா. அப்படி யோசித்தால் அந்த முயற்சிகளின் பலன் அகநிலை கட்டுப்பாடின்றி தர்க்கத்தின் உன்னத உதாரணங்களாக இருக்குமா. இக்கேள்விகள், கணினி அறிவியலை பொறுத்தவரையில் இந்நூற்றாண்டை அடையாளப்படுத்தும் கேள்விகளாக பாவிக்கப்படுகின்றன. இக்கேள்வியை எதிர்கொண்ட மனித சமூகம் இரு பிரிவினராக பிரிந்து, முடியும் என சொல்பவர்களை ஒருவித வேற்று கிரக வாசிகளாக வண்ணம் தீட்டிவிட்டனர் இன்னொரு தரப்பினர். செயற்கை அறிவு துறையை பற்றி அதிகம் தெரியாததை ஒப்புக்கொள்ளும் எனக்கு ஓர் விஷயம் மட்டும் தெளிவாக தெரியும். கணக்கு முறைகளில் மனிதனைவிட பல் மடங்கு வேகத்துடன் செயல்படும் திறனுடைய கணினிக்கு மனிதனைப்போல் கற்பனை திறன் இருப்பதாக தெரியவில்லை, குறைந்தது இன்று வரையில். கலை அடிப்படையில் தர்க்கம் அல்ல. அது உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு.

கணினியின் படைப்புகள் அழகியல் ரீதியாக துல்லிய, நம்பத்தக்க வெளிப்பாடுகளாக இருக்கும் அதேசமயம் அந்த துல்லியமும், அழகியலும் அதற்க்கு கேடாக விளையும் என்பது என் கருத்து. ஓர் ஓவியத்தின் கருத்தை அதை வரைந்த ஓவியனுக்கு மட்டுமே தெரியும், ஓர் இலக்கிய படைப்பின் சாராம்சத்தை எழுத்தாளன் மட்டுமே முழுமையாக அறிவான். ஆயிரக்கணக்கான நேயர்கள் ஓர் கலை படைப்பை பார்த்து, படித்து, கேட்டு விமர்சிக்கும்போது ஏதோ ஒருவர் சொல்லும் விமர்சனம் அந்த படைப்பாளியின் எண்ணங்களுடன் ஒத்துப்போனால் அவர்கள் இருவரும் ஆத்மார்த்த ஜோடியாகிவிடுகின்றனர். இந்த முறை அனைத்து கலை பிரிவுகளுக்கும் பொருந்தும். படைப்பாளியின் உளவியலோடு பங்கிட்டுக்கொள்வதே கலையின் அடிப்படை தேடல் அல்லது நோக்கம். இந்த விஷயத்தில்தான் நுட்பம் தோற்கிறது அல்லது வேறுபடுகிறது. செயற்கை அறிவால் படைக்கப்பெறும் படைப்புகளுக்கு மனித அனுபவங்களில் இதுவரை அடைப்படை இருந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் சுயமாக சிந்திக்கும் திறன் பெற்ற கணினிகள் படைக்கும் கலைப்பொருட்கள் அதுபோல இருக்குமா என்பது சந்தேகமே.

கணினியின் இயந்திர புலன்களின் திறமை மனித புலவுருபுகளின் வரம்பைவிட அதிகமானது. கணினி மனிதன் காணும் நிறங்களைவிட, கேட்கும் ஸ்வரங்களைவிட அதிக மடங்கு செயல்பாடுடையது. பல மடங்கு தரவுகளை சேகரிக்கும் திறனுடைய கணினி அந்த தரவுகளுக்குள் உள்ள கோலங்களை கண்டறிய இதுவரை மனிதன் இயற்றிய மென்பொருளைத்தான் உபயோகித்து வந்துள்ளது. தற்போதைய அறிவியல் தேடல் இந்த முட்டுக்கட்டையை நீக்கி கணினி சொந்தமாக தனக்கென யோசிக்க முடியுமா என்பதில் மையம் கொண்டுள்ளது. ஒருவேளை அப்படியொரு நிகழ்வு நடந்தால் (என் தனிப்பட்ட கருத்து இது நிகழ அதிக காலம் இல்லை என்பதே) அந்த ஆற்றலை கொண்ட கணினி மனித அனுபவங்களில் ஆதாரம் கொள்ளாத கலை பொருட்களை படைக்க முடியும். அந்த ஒற்றை நிகழ்வு இந்நாள்வரை மனிதனுக்கு மட்டுமே சொந்தமென கொண்டாடிய கலையை அந்நியமாக மாற்றிவிடும்.

அது ஒருபுறம் இருக்க. அண்மை காலங்களில் மனிதனுடைய படைப்பிற்கும் செயற்கை அறிவு படைத்த படைப்பிற்கும் வித்யாசம் காண்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதன் அடிப்படையில் இருமை ஜீவியல்ல. மனித அனுபவங்கள், சிந்தனை எல்லாமே பன்மையில் ஆதாரம் கொண்டவை. ஓர் கணினி தயாரித்த படைப்பை அடையாளம் காண இந்த பிணக்கே சிறந்த முறை. எப்போது இந்த வேற்றுமையை மனிதனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையோ அன்று கலை மனித குலத்தின் தனிப்பட்ட உன்னத வெளிபாடேனும் அந்தஸ்தை இழந்துவிடும்.

இரு பாதைகள்

செயற்கை அறிவின் முன்னடைவுகளை கலையால் தடுக்க இயலாது, அதனைத் தடுக்க முயல்வதும் தவறு. பல துறைகளில் நுட்பத்தின் உதவியோடு மனித சிந்தனையின் குறைகளை செயற்கை அறிவு ஏற்கனவே ஈடுகட்டியுள்ளது. எதிர்காலத்தில் கலை இந்த ஊன்றுகோல் கொண்டே வெளிவரும் என்பது மறுக்கமுடியாதது. ஒரு காலத்தில் புத்தகங்கள் கையால் எழுதி, வண்ணம் தீட்டி, பல பதிப்பாளர்களின் உதவியோடு நகலெடுக்கப்பட்டது. அச்சு இயந்திரம் அந்த போக்கை மாற்றி இலக்கியத்தை பொது நுகர்விற்கு கொண்டுவந்தது. அதன்பின் எழுத்தாளர் கைப்பட எழுதிய படைப்புக்களை அச்சுகோர்த்து பக்கம் பக்கமாக அச்சடித்து, பக்கங்களை நெய்து புத்தகமாக வெளியிடும் காலங்கள் மாறி இப்போது பல எழுத்தாளர்கள் பேனாவைப் பிடிக்காமலேயே தட்டச்சின் உதவியுடன் எழுதுகிறார்கள் (அதில் என்னைப் போன்ற நொண்டி எழுத்தாளனும் ஒருவன்). இந்த மாற்றம் தடுக்க முடியாதது. மீண்டும் முதல் பத்தியில் குறிப்பிட்டதுபோல, இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் இணைபவர்கள் பிழைப்பார்கள்.

நுட்பத்தின் மேன்மைகளைப் பார்த்த அதேசமயம் நுட்பம் ஒருவித போதை என்பதையும் உணர வேண்டும். உளவியல் ரீதியாக நுட்பத்தை ஒரு நாள்கூட கைவிட்டு இருக்க முடியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். நுட்பம் எனும் நாணயத்தின் மறுபக்கத்தில் இருப்பது சலிப்பு. அது மிக விரைவில் சிலருக்கு வந்துவிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் நகைச்சுவையான அனுபவங்களையும் கொடுக்கிறது. நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதிய ‘கும்பமுனி’ சிறுகதையில் “புன்னகை என எழுத நினைத்து ‘புன்’ என ஆரம்பித்தால் ‘டை’ என அதுவே முடிகிறது” என செயற்கை அறிவை நையாண்டித்தனம் செய்வது மிக பொருத்தம். இத்தகைய பிணக்குகளுக்கு பெரும்பாலும் தரவுகளின் தரமே காரணம். ‘குப்பை உள்ளே, குப்பை வெளியே’ (Garbage in Garbage out) என்ற கோட்பாட்டை செயற்கை அறிவின் முன்னடைவுகள் திருத்தி சிறந்த மனித சிந்தனையின் வெளிப்பாடாக அமைய அதிக காலம் இல்லை என்றாலும் மனிதனின் கையால் தயாரித்த பொருட்களின் மெருகு, அதன் மதிப்பு மற்றும் கருத்தாக்கத்திற்கு நிகராக அதனால் படைப்புக்களைக் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி. AI யின் படைப்புகள் தர்க்க ரீதியாக சரியாக இருப்பினும் அது தனித்துவமானதாக இருப்பதில்லை. ஓர் படைப்பு AI யின் மூலம் எழுதப்பட்டதா என்பதை சோதிக்க, விசாரிப்பவர் தக்க கேள்விகளை கேட்டால் படைப்பாளியின் அதே பதில் கிடைத்துவிடுகிறது.

புனைவு Vs அபுனைவு

இலக்கிய பிரிவுகளில் புனைவு உணர்ச்சியுடனும், அபுனைவு தர்க்கத்துடனும் சம்பந்தப்படுத்துவது இயல்பு. அகநிலை மற்றும் புறநிலை கோணங்களிலிருந்து ஆராயும் திறமை மனித சிந்தனைக்கு உள்ளதென்பதால், இலக்கியத்தில் இவ்விரண்டு பிரிவுகளும் காலம் காலமாய் இருந்துள்ளன. இருமையிலும், தர்க்கத்திலும் அடிப்படைகொண்ட செயற்கை அறிவினால் புறநிலை வாதங்களை அழகாக முன் வைக்க முடிந்தாலும் அத்தகைய நுணுக்கமான அணுகுமுறையை அகநிலை வாதங்களுக்கும் முன்வைக்க முடியுமா என்பது கேள்வி. மனிதனுக்கு மனிதன் வேறுபடும் அறநிலைகளுக்கு புனைவின் படைப்புகள் தொன்றுதொட்டு இடம் கொடுத்துள்ளன. செயற்கை அறிவின் படைப்புகள் புனைவிற்குரிய தனித்துவத்தின் மரபில் வெளிவருமா என்பது சந்தேகமே.

செயற்கை அறிவு, அதன் பொது அமைப்பின் அடிப்படையில், அபுனைவின் வடிவத்திற்கு மிக பொருத்தமாக அமைகிறது. கணினியின் இருமை தர்க்கத்திற்கு சரி-தவறு என்ற இருநிலைகள் தரவுகளின் கோப்பாக மொழியின் தக்க கட்டமைப்புடன் செயற்கை அறிவின் படைப்புகள் வெளிவருகின்றது. ஆனால் கேள்வி மனிதனால் இதுவரை படைக்கப்பட்ட புனைவுலகத்தின் விளிம்பு நிலைகளை செயற்கை அறிவின் நுணுக்கமான அணுகுமுறையின் அடிப்படையில் மீற முடியுமா என்பதே. செயற்கை அறிவினால் முற்றிலும் புதிய புனைவை எழுத முடியுமா அல்லது மனித புலன்களுக்கு இதுவரையில் அறியப்பெறாத ஓர் அந்நிய உணர்ச்சியை கண்டறிய முடியுமா என்பதே கேள்வி. மேலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அத்தகைய படைப்பை மனிதனால் பாராட்ட முடியுமா. ஒரு வேளை மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குள் செயல்பட்ட கணினியின் விஸ்வரூபத்தை கண்டு வியந்து அதன் விருப்பு வெறுப்புகளுக்கு மனிதன் தன்னை சமர்ப்பித்து கொள்வானோ என்னவோ. தெரியவில்லை. ஆனால் மாறுதலே நிரந்தரம்.

00

ஆர் சீனிவாசன்.

வயது நாற்பத்தியேழு. பிறந்து வளர்ந்தது மெட்ராஸ் என்கிற சென்னையில், இப்போது வசிப்பது பெங்களூரில். படித்தது மின் பொறியியல் விரும்புவது இலக்கியம். ஆங்கிலம் மற்றும் தமிழில் சுமார் ஒன்பது வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *