ஆர் சீனிவாசன்

சுட்டெரிக்கும் கோடை என்பது இப்போது பெங்களூரில் இயல்பாகிவிட்டது. முப்பத்தி மூன்றுக்கே ‘ஏன் ஷக்கே மாரைய்யா’ என சலித்துக்கொண்ட அசல் பெங்களூரு வாசிகள்கூட இப்போது வீடு கட்டும்போது குளிர் சாதன பெட்டிக்கு இடம் கொடுத்து கட்டவேண்டிய சூழ்நிலை. சில பகுதிகளில் வண்ண பிளாஸ்டிக் குடங்களுடன் குடிநீருக்காக வரிசையில் நிற்கும் பெண்களின் காட்சி வாலிப காலங்களை நினைவூட்டுகிறது. அயராது வேலைவாய்ப்பை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் இந்த எழில் இழப்பிற்கு காரணிகளே.

மென்பொருள் நிறுவனங்களின் ஆள் சேர்க்கை வேகத்திற்கு ஈடுகொடுத்து, குடியிருப்பு நிறுவனங்கள் பல்லடுக்கு வீடுகளை கட்டி, குறுகிய சாலைகளில் தினந்தோறும் பல ஆயிரம் வாகனங்களை ஓட விட்டு நெரிசலை கூட்டுவதில் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை. நெரிசல், கூச்சல், குழப்பத்தை தாண்டி வாகனத்தை ஓட்டி செல்வது தினசரி போராட்டம். அன்று அண்ணாச்சி ஜவுளி கடைக்கு சில சாமான்களை கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது. வெளிப்புற வட்ட சாலையிலிருந்து சில்க் போர்டு சந்திப்பிற்கு வந்து சேரும்போது சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு நெரிசல். காலை சிற்றுண்டி உண்ணாமல் புறப்பட்ட எரிச்சலை பத்து மணிக்கே வேர்க்கவைக்கும் கோடை வெயில் மேலும் கூட்டியது.

பல வருடங்களாக அண்ணாச்சி எனக்கு பழக்கம். பெங்களூர் வாழ் தமிழர் என்பதோடு மட்டுமின்றி ஒரே ஊர்க்காரர் என்பதினால் என் மீது அவருக்கு அலாதி பிரியம். சமீபத்தைய ஊர் கதைகளை கேட்டறிய ஆசைப்படுவார். தொலைபேசியில் பலமுறை தொடர்புகொண்டு பேசுவார். ஆனால் ஊர் பக்கம் திரும்பியதில்லை. சந்தேகம் அதிகரித்து ஒருநாள் அண்ணாச்சி திருநெல்வேலியிலிருந்து பெங்களூர் வர என்ன காரணம் என கேட்டபோது ,

‘அது ஒரு பெரிய கதை. அத விடு..’ என தட்டி கழித்துவிட்டார்.

ஜெயநகர் மூன்றாம் ப்ளாக்கில் எழுபதுகளிலிருந்தே இயங்கிவரும் அவரது ஜவுளி கடை அந்த பகுதியில் மிக பிரபலம். அசல் காஞ்சீவர பட்டு சேலையிலிருந்து தற்போது நடப்பில் இருக்கும் நவீன உடை அலங்கார பாணி வரை அனைத்து ரகங்களும் அங்கு கிடைக்கும். அந்த பிரபலம் சில சமயம் எதிர்ப்பிற்கும் காரணமானது. கன்னடிகர்களுக்கு அவர் மேல் ஒருவித ஊமை வெறுப்பு இருந்தது. ‘அ காலத்தல்லி…’ என ஒரு மணிநேரமாவது பேசுபவர், காவேரி பிரச்சனை வந்தால் கடைமுன் மஞ்சள் சிவப்பு கொடி கட்டி, ‘திக்காரா திக்காரா ‘ என கன்னட போராட்டத்தில் இறங்கிவிடுவார். ‘பொழைக்க வந்ததுக்கப்புறம் என்னலே சொந்த ஊரு ‘ என்பவருக்கு கர்நாடகாவில் நாற்பது ஆண்டுகள் ஆனபின்னும் தமிழ் கலந்த கன்னடம்தான் வந்தது.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள் ஒரு வித நடமாடும் சிறைகள். உள்ளிருப்பவர் குளிர் சாதன அறையில் இருந்தாலும் அதிலிருந்து தப்பி ஓட வழி கிடையாது. பெரிய சிக்னல் சந்திப்புகளில் சிகப்பு விளக்கு விழுந்த உடனேயே, அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தனிமையில் காலாதீதம் கழிக்கலாம் என எண்ணுபவர்களுக்கு சாலை விற்பனையாளர்களே சத்ரு.

பெங்களூரு போக்குவரத்து சிக்னலில் ஊர்ந்து செல்லும் வாகனங்களை குறிவைக்கும் கூட்டம் பொதுவாக மூன்று வகையினர். ‘லேலீஜியே ஜி’ என ஹிந்தியில் பேசும் விற்பனையாளர்களுக்கு சுட்டு போட்டாலும் கன்னடம் வராது. ‘சாலீஸ்’ என்பதை நான்கு விரல்கள் காட்டி புரியவைப்பானேயன்றி ‘நலுவத்து’ என என்றும் கன்னடத்தில் சொல்லி கேட்டதில்லை. ஆனால் எனக்கு அவர்களின் மேல் வெறுப்பு கிடையாது. மொத்த விற்பனையாளரிடமிருந்து நாள் வாடகைக்கு பொருட்களை எடுத்துவருபவன் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது நாளொன்றுக்கு சம்பாதித்துவிடுவான்.

இரண்டாம் வகை, கையில் பத்து பேனாக்களுடன் வாகன ஜன்னலைத்தட்டும் அந்த சிறுமி அல்லது கிழவன். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரம்பரை பிச்சைக்காரர்கள். நாடோடிகளான இவர்களுக்கு பரம்பரை தொழிலான யாசிப்பு நன்றாகவே தெரியும். எந்த சிக்னலில் அதிகம் தேறும் எதில் தேறாது என்பதை வாட்ஸாப் குழுக்கள் மூலம் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு பிழைத்துக்கொள்பவர்கள், வருடத்தின் ஓர் குறிப்பிட்ட பருவத்தில் வரும் விஷேஷ நாளொன்றுக்கு மட்டும் இந்தியாவில் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்கள்.

மூன்றாம் வகை சற்று சர்ச்சைக்குரியவர்கள். அவர்கள் திருநங்கைகள், அவர்கள் பிரத்யேகமாக தமிழர்கள். விடியற்காலை மூன்றுமணி ரயிலில் ஓசியில் பயணித்து, நெரிசல் ஆரம்பிக்கும் எட்டு மணியளவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட (அதிக மவுசு உள்ள சிக்னல்கள் தினந்தோறும் ஏலம் விடப் படுவதாக புரளி) டிராபிக் சிக்னல் மண்ணை, களத்தில் இறங்கும் ஆட்டக்காரனைப்போல ஒரு முறை தொட்டு கும்பிட்டு அன்றைய யாசிப்பை (பத்து ரூபாய் கொடுத்தால் ஆசீர்வாதத்துடன் ஒன்பது நாணயங்கள் திரும்ப கொடுப்பது வழக்கமான யாசிப்பை சற்றே கௌரவமாக செய்வது ) தொடங்கி, உச்சி வெயில் தாண்டி மாலை ஐந்தரை மணியளவில் குறிப்பிட்ட பேசேன்ஜ்ர் ரயிலில் ஏறி வீடு திரும்பி விடுவார்கள். டிராபிக் போலீஸ்க்காரர் உட்பட எந்த கன்னடிகரும் அவர்களுடன் அதிகம் பேசமாட்டார்கள்.

வெகு நாட்கள் பெங்களூரில் வாகனம் ஓட்டும் அனுபவம் பெற்றவர்களுக்கு எது வழக்கமான டிராபிக் சிக்னல் தாமதிப்பு எது நெரிசல் என்பது விரைவில் விளங்கிவிடும். அன்று நான் நின்றுகொண்டிருந்தது எதிர்பாராத, எப்போது விலகும் என தெரியாத நெரிசல். எரிச்சலோடு சற்று காற்று வாங்கலாம் என வண்டியின் ஜன்னலை கீழே இறக்கி வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டிருந்த நேரம் அவள் வருவதை கவனித்தேன். நல்ல உயரம், கட்டுமஸ்தான தேகம், நெற்றியில் சந்தன பட்டைக்கு நடுவே குங்கும பொட்டு, கை இடுக்கில் கைப்பை. மார்பகங்கள் இல்லையென்றாலும் ரவிக்கை போட்டு இடுப்பிற்கு கீழே, தொப்புள் தெரியும்படி சேலை கட்டியிருந்தாள். என் முன் நின்றிருந்த கார்காரர் அவள் வருகையை கண்டும் காணாததைப்போல ஜன்னலை மூடியே வைத்திருந்தார்.

‘கொடப்பா ராஜா’ என்றாள் மூக்கினால். அது கன்னடம் அல்ல. அவர் கொடுக்க மாட்டார் என தெரிந்ததும், நேரே என்னிடம் வந்தாள்.

‘கொடப்பா ராஜா’ என்றாள். நான் எதுவும் பேசாமல் நேராக பார்த்திருந்தேன்.

‘ஏனு இல்வா’ என்றவள் வலது கையை உள்ளே நீட்டி என் கன்னத்தை கிள்ளினாள். என் முக அருவருப்பை பார்த்தவள் திடீரென தாடையை கையால் பிடித்து உலுக்க தொடங்கினாள்.

‘ஏனப்பா பத்து ரூபாகூட இல்வா’ என்றாள்.

‘ஏய் இச் போ !’ என்றேன்

‘ஏய் என்ன மக்கர் பண்றியா!, லாடு, கொடுக்கிறியா இல்ல தூக்கி காட்டவா’ என சொல்லிக்கொண்டே சேலையின் மேல் கை வைத்தாள். வெக்கை, பசி, அவமானம் இவையெல்லாம் ஓர் நொடியில் சேர்ந்து வெடித்து,

‘ஒத்த தெவிடியா..’ என கதவை திறந்தவுடன்

‘ஐயோ , ஐயோ ‘ என கத்திகொண்டே ஓடியவளை விட என் மீது தான் அனைவரின் கண்களும் படர்ந்தன. அவமானத்துடன் வண்டிக்குள் அமர்ந்து ஜன்னலை மூடினேன்.

**

சற்று எரிச்சலுடன் அண்ணாச்சி கடைக்கு வந்தபோது மணி பன்னிரெண்டாகிவிட்டது, எடுத்துவந்ததை கொடுத்துவிட்டு அருகில் இருந்த கையேந்தி பவனில் பிசிபேலா பாத் தின்றவுடன்தான் கொஞ்சம் இயல்பிற்கு வந்தேன்.

அண்ணாச்சிக்கு அன்று நல்ல வியாபாரம் போலிருந்தது. கல்லாபெட்டியில் உட்கார்ந்திருந்தவர் மீசையை விரித்து நன்றாக சிரித்தார்.

‘பாரோ, ஓந்து நிமிஷா இரு பந்தே’ என (கடையில் வாடிக்கையாளர்கள் இருப்பதால்) கன்னடத்தில் துவங்கியவர் , கடையில் இருந்த இன்னொருவனிடம் வெளியில் நின்றிருந்த இரண்டு மானிக்கவின் பொம்மைகளை, எடுத்து வந்து அவற்றிற்கு உடை மாற்றும்படி சொல்லிவிட்டு கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே வெளியேறினார்.

ஓர் ஆண் மற்றும் ஓர் பெண் பொம்மை. ஆண் பொம்மை சுமார் ஆறடி உயரம் , பரந்த விரிந்த மார்பு, கட்டுமஸ்தான கை கால்கள். செதுக்கிய தாடையில் பிரெஞ்சு தாடி, கூர்மையான கண்கள், வெள்ளை நிறம். பெண் பொம்மை உயரத்தில் சற்றே குறைந்தாலும், மெலிந்த இடுப்பிற்கு ஏற்றாற்போல கெட்டியான வட்ட மார்பகங்கள், வட்ட தொப்புள். கடைப்பையன் பொம்மைகள் அணிந்திருந்த ஆடைகளை களையத் தொடங்கியபோதுதான் கவனித்தேன். இரண்டிற்கும் பால் குறி இருக்கும் இடம் தட்டையாக இருந்ததை.

‘…தூக்கி காட்டவா’ என்றது ஓர் குரல் சிந்தையில்.

ஏனோ அந்த பொம்மைகளை வெறிச்சோடி பார்த்துக்கொண்டே இருந்தேன். இரண்டும் ஆண் பெண் உடல் இலக்கணத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவை. இரண்டும் பால் வளர்ச்சியின் உச்ச கட்டத்தின் பிரதிபலிப்புகள். ஆனால் ஆண் பெண் என பாகுபடுத்தும் அடையாளங்கள் இல்லாதவை.

‘என்ன பாக்குற தம்பி. சாப்டையா ? ‘ என்றார் அண்ணாச்சி அறைக்குள் நுழைந்தவாறே.

‘ஆச்சு அண்ணாச்சி. இந்த பொம்மைங்களைத்தான் பாக்குறேன். இன்னிக்கு காலைல இங்க வரும்போது நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது….சரி அத விடுங்க. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். இந்த பொம்மைங்களுக்கு ஆண் பெண் குறியே இல்லாம இருக்கே அத கவனிச்சீங்களா? ‘

‘டேய் என்னடா தம்பி ஆச்சு உனக்கு. குஞ்ச பார்த்தாதான் ஒருத்தன ஆம்பளைன்னு சொல்ல முடியுமா? அவன் முகத்தை பார்த்து சொல்ல முடியாதா?’ என்றார் மெல்லிய புன்னகையுடன்.

‘ஆதில்ல அண்ணாச்சி..சரி இப்படி கேட்குறேன்… இந்த ரெண்டு பொம்மைகளுக்கு குறி இல்லாம இருக்கே அது உங்களுக்கு ஏதோமாதிரி இல்ல?’ என்றேன்

‘ஏன்? அதுக்கு மேல ட்ரெஸ்ஸ போட்டுட்டா உள்ள என்ன இருக்குன்னு எவன் ஜிப்ப திறந்து பார்ப்பான்? ‘

‘சரிதான் ஆனா ஒன்னு சொல்லுங்க அண்ணாச்சி, இந்த ரெண்டு பொம்மையும் இளமை போங்க இருக்கு. ஆனா இளமைக்கு தேவையான உறுப்பு மட்டும் இல்லன்னா என்ன பிரயோஜனம்?’

‘ஹா ஹா. என்னடா இன்னிக்கு வித்யாசமா பேசற?’

‘சொல்லுங்க அண்ணாச்சி. நான் கேட்கறதுல தப்பு இருக்கா?’

‘இளமை இருக்குறதால எப்பவுமே அத பத்தியே நினைச்சுகிட்டு இருக்கணுமா?. என்னடா பேசுறே. இளமையில மட்டும்தான் குஞ்சு தேவைன்னா வயசானப்புறம் தானே உதுந்து போயிடலாம்ல. இளமைக்கு குறிமட்டும் அடையாளம் இல்ல தம்பி, அறிவும் இருக்கணும்’

‘எதுவோ….எனக்கு ஏதோமாதிரி இருக்கு’

‘டேய், இள வயசுல வேகம் மட்டும் இருந்தா பத்தாதுடா. ஒரு வயசு வரைக்கும்தான் வேகம் உதவும். அதுக்காகத்தான் வயசோட சேர்ந்து அறிவும் வேணும். என்ன?’

‘உங்களுக்கு இப்ப வேகம் இல்லையா அண்ணாச்சி’ என்றேன் அவரைப்பார்த்து சிரித்துக்கொண்டே.

‘ டேய் சோதாப் பயலே. அப்படி இல்லடா. ரெண்டுமே ஒருவித சக்திதான். வயசாக ஆக ஒன்னு குறைஞ்சு இன்னொன்னா மாறிடுது. கொட்ட உள்ளாறவே பொதஞ்சு மெதுவா தலையில பூவா மலருது. அதுக்கு பேருதான் ஞானம். ஒன்னு மங்கினாத்தான் இன்னொன்னு மின்னும். புரியுதா’ என்றார்.

நான் அதைக்கேட்டதும் சிரித்துவிட்டேன். அண்ணாச்சிக்கு எதையும் எளிதாக சொல்லும் திறமை உண்டு. அதற்குப் பின் மானிக்வின் பொம்மைகளைப் பார்க்கும்போதெல்லாம் அருவருப்பாக இருக்காது. மனிதர்களும் ஒரு விதத்தில் மானிக்வின் பொம்மைகள்தான் எனத் தோன்றும்.

00

ஆர் சீனிவாசன்.

வயது நாற்பத்தியேழு. பிறந்து வளர்ந்தது மெட்ராஸ் என்கிற சென்னையில், இப்போது வசிப்பது பெங்களூரில். படித்தது மின் பொறியியல் விரும்புவது இலக்கியம். ஆங்கிலம் மற்றும் தமிழில் சுமார் ஒன்பது வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *