ஷைலஜா
‘சந்திரிகா!..என்உயிர்க்காதலியே…திடீரென நம்காதலுக்கு குட்பை சொல்கிறாய்.. நீ இல்லாமல் எனக்கு வாழ முடியாது .அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என் தற்கொலைக்கு சந்திரிகாதான் காரணம் என்று ஃபேஸ்புக்கில் உலத்துக்கே எழுதி விட்டுத்தான் சாகப் போகிறேன்’
சூர்யா தனக்குத்தானே வாய் உரக்க சொல்லியபடி இருட்டில் அந்த தண்டவாளத்தின் நடுவே நடக்க ஆரம்பித்தான்.
அவன் கண்கள் கலங்கியிருந்தன . நடந்தபடிவந்தவனின் காலில் ஏதோ இடறியது.
ஆடா மாடா ?
சற்று திகிலுடன் செல்போனை உயிர்ப்பித்து அதில் டார்ச் அடித்து கீழே பார்த்தவன் உடனே ‘ ஐயோ’ என அலறிவிட்டான்.
ஏனென்றால் அவன் பார்த்தது ஒரு மனித உருவம்!
‘இவனுக்கும் என் போல் காதல் தோல்வியோ அதான் தண்டவாளத்தில் செத்துக்கிடக்கிறானோ’ என நினைத்த கணம் அந்த மனிதனின் உடல் அசைவதை பார்த்தான்.
மறுபடியும் வெளிச்சம் அடித்து பார்க்கிறபோது அவனுடைய கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதையும் வாயும் துணியால் அடைக்கப்பட்டு இருப்பதையும் கவனித்தான். ‘கொள்ளைக்காரனாக இருப்பானோ இவனை விடுவித்தால் நம்மை அடித்து போட்டு கொலை செய்து விடுவானோ ?போடட்டுமே ரயிலில் விழுந்து சாவதைப் போல இதுவுமாஒரு வகையில் சாவு தானே! என் அப்பா பார்ப்பதற்கு உடம்பாவது சிதையாமல் கிடைக்கும் .’
ஒரு முடிவுடன் சூர்யா அந்த உருவத்தின் கை கால்களில் இருந்த கயிற்றுக்கட்டை அவிழ்த்தான். உடனே அந்த மனிதன் வாய் துணியை தனதுகைகளால் பிடித்து இழுத்தவன் சூர்யாவின் காலில் தடாலென விழுந்தான் . கை குவித்தான்.
“தெய்வமே!தெய்வம் தான் நீங்க! என்னை சாக விடாம காப்பாத்திட்டீங்க..” என்றான் நெகிழ்ந்த குரலில் .நிலா வெளிச்சத்தில் அவன் முகம் தெரிந்தது .
அவனுக்கும் தன்னைப்போல இருபத்தி ஆறு அல்லது இருபத்தி ஏழு வயது இருக்கலாம் போல தெரியவும் சூர்யா .” ஏன்ப்பா..உனக்கும்காதல் தோல்வியா ?”என்று கேட்டான் .
“காதலா! எனக்கு அதுக்கெல்லாம் எங்கெங்க நேரம் ?அதை சிந்திச்சு கூட பார்த்ததில்லை “
“ அப்ப எப்படி இங்க வந்தே ?உன்னை இப்படி கட்டிப்போட்டது யார்?என்று சூர்யா வியப்புடன் கேட்கவும் “அது ஒரு பெரிய கதை” என்றான் விரக்தியுடன்.
“சரி சரி சீக்கிரம் சொல்லு ரயில் வரபோகிறது”
“ மணி எவ்வளவுங்க?”
சூர்யா செல்போனைப்பார்த்தபடி,”பன்னிரண்டு பத்து” என்றான்
“இந்த நேரம் எந்த ரயிலும்வராது”
“அது எப்படி உனக்கு தெரியும்?”
“அதோ தொலைவில் தெரியுதே லெவல் கிராசிங் கேட் அந்த இடத்து கேட் கீப்பரே நான் தான் .அதனால இந்தப்பாதையின் ரயில் நேரம் எல்லாம் அத்துப்படி”
“என்..என்னது கேட்கீப்பரா? அங்கே வேலை செய்யாமல் இங்கே கிடக்கிறாயே.. என்ன ஆச்சு?”
“என்னை வாழவைத்த தெய்வம் நீங்க !உங்ககிட்ட கண்டிப்பா எல்லாத்தையும் சொல்லனும்னு தோணுது”
“ சரி சொல்லு எனக்கும் ரயில் வர வரைக்கும் பொழுதுபோகணுமே!”
“ ஐயா என் பெயர் கதிர்வேலு. சுருக்கமா கதிர். என்ஊரு இங்கதான் நெருப்பாடி கிராமம் . கேட்டுக்கு வடக்கேஅந்த பக்கம் மூணு கிலோ மீட்டரில் இருக்கு .என்னோட அப்பா சின்ன வயசுலயே வயல்ல பாம்பு கடிச்சு இறந்துட்டாரு. எனக்கு அண்ணன் ரத்தினவேல் தான் எல்லாம் .அவருக்கு எனக்கும் 11 வயசு வித்தியாசம். என் அண்ணன் என்னோட இன்னொரு அப்பான்னு சொல்லிக்கலாம் .நான் ஊர் பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ வரைக்கும் படிச்சேன் அப்புறம் வசதி இல்லைன்னு அண்ணன் கடையில வேலை பார்த்தேன் .அண்ணனும் சின்னதா ஒரு மளிகை கடை தான் கிராமத்தில் வச்சிருந்தாரு .ஆனா அந்த கடைக்கு வருமானம் குறைஞ்சு போச்சு .அப்பத்தான் பட்டாளத்துல என்னை சேரச்சொல்லி ஊர்ப்பெரியவர் ஒருத்தர் சொன்னாரு .எனக்கும் நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாளா ஆசை அதனால நான் பட்டாளத்தில் சேரத் தகுதியானேன்.. அண்ணி ,அம்மா ,அண்ணனோட குழந்தை அர்ச்சனா என குடும்பத்துல எல்லாரும் வயிறார சாப்பிடணும்னா நான் நாலுகாசு சம்பாதிக்கணும்.
அஞ்சாறுவருஷம் ராணுவவீரனா பட்டாளத்துல நல்லாத்தான் இருந்தேன் .ஜம்மு காஷ்மீரில் ஒரு பள்ளத்தாக்கில் நான் போன ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு அந்த வாகனத்தில் நாலு பேர் செத்துப் போயிட்டாங்க 18 பேருக்கு காயம் ஏற்பட்டது அதுல பெரிய காயம் எனக்கு ஏற்பட்டு ஒரு காலு விபத்துல சிதைஞ்சி போயிடிச்சி. நான் நொண்டியா ராணுவத்தில் பணி செய்ய முடியாமல் ரொம்ப விசனத்தோட ஊரு வந்தேன்”
கதிர்வேலு சூம்பிய காலை சற்று நீட்டிக்கொண்டான். பேச்சை நிறுத்திவிட்டு பெருமூச்சுவிட்டான்.
“அப்புறம்?” என்று சூர்யா கேட்டான். அவனும் கதிரின் எதிரில் தண்டவாளத்தின் மீது உட்கார்ந்துகொண்டான்.
“ஊர்ல மறுபடியும் அண்ணன் கடையே மூடுகிற நிலைமை. ஆர்மில எனக்கு கொடுத்த கணிசமான பணத்தை அண்ணன் கிட்ட கொடுத்தேன். அவரு டவுனுல யாரையோ நம்பி பெரிய மளிகைக்கடைக்கு பார்ட்னரா அந்தப்பணத்தைபோட ,அந்த ஆளு ஏமாத்திட்டு தலைமறைவாயிட்டான். அண்ணன் அதிர்ச்சில அப்படியே நெஞ்சைப்பிடிச்சி உக்காந்திட்டாரு. வீட்ல வறுமை தாண்டவமாட ஆரம்பிச்சிது.ஆறுமாசம் கழிச்சி ஆர்மிக்காரங்களுக்கு மட்டும்கேட்கீப்பர்வேலை முன்உரிமையா கொடுக்கிறதைக்கேள்விப்பட்டு சம்பந்தப்பட்டவங்க கிட்ட போனேன் -என் நொண்டிக்கால் காரணமா அல்லது சாமிக்கு என்மேல் கருணையா தெரியல–சொந்த ஊர் பக்கமே இருக்கிற லெவல்க்ராசிங் கேட் கீப்பர் வேலையைக்கொடுத்திட்டாங்க. “
“ஆர்மில ஒர்க் பண்ணவரா? வெரிகுட்… ஆனா கேட்கீப்பர் வேலையா ?ஏன் வேற கிடைக்கலயா?”
“ என் படிப்புக்கு வேற எது கிடைக்கும் சொல்லுங்க?ஆனா மத்த பணிகளில் சின்ன சின்ன கவனக்குறைவு இருந்தா கூட அது ஆபத்தில் முடியாது ஆனால் கேட் கீப்பர் பணி இருக்கு பாருங்க கொஞ்சம் கவனம் குறைவா இருந்தா கூட ஆபத்து உண்டு பண்ணிடும் ‘
“அப்படியா? நான் பல தடவை காரில் லெவல் கிராஸிங் கிராஸ் பண்ணி இருக்கேன் …சரி உன்னோட கதையை சொல்லு இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு “
“ஆனா எங்கள மாதிரி இருக்கிறவங்களோட உழைப்பும் எங்களோட திறமையும் எங்களுடைய சேவையும் பொதுமக்களுக்கு தெரிய போவதே இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியுங்க தினமும் ஆயிரக்கணக்கான மக்களோட அந்த கடுமையான சொற்களை திட்டுதல் சாபம் எல்லாத்துக்கும் நேரடியாகவே ஆளாகிறோம்.சிலரோ வன்மத்தை நேரடியாகவே கொட்டுவாங்க. ஆனா ஒருநாள் கூட எங்களின் உழைப்பில் நாங்கள் தடம் மாறுவது கிடையாது. ஏன்னாநாங்கள் ரயிலை பாதுகாப்பாக அனுப்பணும். ரயில் பிரயாணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தாகணும்
ஒரு ரயில் புறப்படும் இடத்திலிருந்து செல்லும் இடம்வரை பாதுகாப்பாக சேர்கிறதுன்னா அதில் எத்தனை ஸ்டேஷன் மாஸ்டர்களின் உழைப்பு ! , எத்தனை பாயிண்ட்ஸ் மேன்களின் எத்தனை கேட் கீப்பர்களின் உழைப்பு அடங்கியிருக்குது.இன்னும் எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத உழைப்பாளர்களின் உழைப்பெல்லாம் அதில் கொட்டிக் கிடக்கிறதுங்கிறதை பொதுமக்களில் பெரும்பான்மையானோர் யோசிக்கறதே இல்ல
. நான் வேலை பார்த்த அந்த ரயில்வே கேட்
அது எப்போதுமே குளோஸ் செய்யப்பட்டிருக்கும் கேட். ஆனால் ரயில் இல்லாத சமயங்களில் சாலை போக்குவரத்து இருக்கும் பட்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரககிய எண்ணுடன் ஒப்புதல் பெற்றே கேட்டை ஓபன் செய்து மறுபடியும் ரகசிய எண்ணுடனான ஒப்புதலுடனே கேட்டை குளோஸ் செய்யனும்.
இதை வெறுமனே ஓபன், குளோஸ் என செய்துவிட முடியாது சாலை போக்குவரத்தை ஓபன் செய்யும்போது திடீர் ரயில் போக்குவரத்து எதிர்பாராத விதமாக நிகழ்ந்துட்டா பெரிய விபத்தாகிடும் .அதனால, ரயில் வராத நேரங்களில் சிவப்புக் கொடி எப்போதுமே ரயில் ரோட்டில் ஊன்றியிருக்கணும். கேட் கீப்பர் சாலை போக்குவரத்தை நேர் செய்ய ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஒப்புதல் பெற ஒரு சில நொடிகள் எடுத்துக்கொள்வார். ஆனால், ரோடு வழிச் செல்லும் பொது மக்களுக்கு அது பொறுக்காது. கதவைத்திறக்கச்சொல்லி கத்துவாங்க.
‘கதவைத்திற..கதவைத்திற.’
இந்த சத்தம் எப்பவும் என்க காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்.
முதல்நாள் பணி முடியும் கடைசி ஒரு மணி நேரத்தில் பலத்த மழையோடு காற்றடித்ததில் பூம் லேசாக சாய்ந்து கேட்டை பூட்ட மூடியாத நிலையாகிப்போச்சு. பயமும் நடுக்கமும் இருந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் நான் சாலை போக்குவரத்தை முடக்கணும். முதல் அனுபவம் .. பதட்டம் அதிகமா இருந்தது. பாதுகாப்புச் சங்கிலிகளைப் போட்டுத்தான் அன்னிக்கு ரயிலை பாதுகாப்பாக அனுப்பினேன்.
“ வேலைல கண்ணும் கருத்துமா இருக்கற உன் தொழில் பக்தி ரொம்ப டச்சிங்கா இருக்குப்பா… அதுசரி.இத்தனை சின்சியரான உன்னைப்போய் இப்படி இங்க இந்த நிலைமையில் பார்க்கிறது எனக்குக்கஷ்டமா இருக்கு..யாரோ வேண்டாதவங்க செய்த வேலைதானே இது?”
“எல்லாம் என் தலைவிதிங்க. என் அண்ணனை நான்தான் சாகடிச்சிட்டேன்னு என்னைப்பழி வாங்க இப்படி ‘ஓடற ரயில்ல அடிபட்டு செத்துபோடா’ன்னு ஒருத்தன் கொண்டுபோட்டான். “
“என்னது உன் அண்ணனை நீ சாகடிச்சியா கொலைகாரனாடா நீ?” சூர்யா சட்டென எழுந்து நின்று கண்களை உருட்டி சீறினான். ஒருக்கணம் அங்கு இருக்கவே மனம் பதட்டப்பட்டது.
“தெய்வமே … அவசரப்படாதீங்க.. முழுக்கதை கேளுங்க..
கேட்டில் சில நாட்களுக்கு முன்னாடி ஒருநாள் பணியில் இருக்கும்போது கூட்ஸ் ரயில் ஒண்ணு பிளாக் செய்யப்பட்டிருந்தது. எதிரான சாலையில் சில சாலைப்போக்குவரத்துப் பயணிகளும் நிக்கறாங்க.. நான் கைகளில் கொடியை ஏந்தி ரயில் வரும் திசையில் காத்திருக்கிறேன். சில நொடிகளில் ” கேட்டைத் திற.!” என்ற அதிகாரத் தோரணையான குரல் ஒலிக்க, நான் எனது பார்வை கோணத்திலேதான் கவனமாக இருந்தேன். மறுபடி அதே குரல் ” டேய் கதிரு கேட்டைத் தெறடா..! உன் அண்ணனுக்கு நெஞ்சுவலி டவுனு ஆஸ்பித்திரில உடனே சேர்க்கணும்… ஊர்ல பெரிய ஆளுகிட்ட கெஞ்சி அவரு காரை ஓட்டிக்கிட்டுவரேன் கார்ல உன் அண்ணன் ,அண்ணி ,உன் அம்மா, குளந்தை அர்ச்சனா எல்லாரும் தவிப்பா இருக்காங்க. கதவைத்திறந்துவிடு காரை நிமிஷமா கடத்திடறேன்”
இப்படிக்கூவினான் அண்ணியோட தம்பி சுப்ரமணி.
. “சுப்ரமணி..ரயில் வந்திருச்சு… ,அதுபோனவுடனே எஸ்ஸம்ட்ட கேட்டுத் தெறந்திடறேன் கொஞ்ச நேரம் ப்ளீஸ்!” கெஞ்சினேன்.
காரை விட்டு இறங்கி கதவருகேவந்து
“டேய் உன் ரூல்சையெல்லாம் ஒன்னோட வச்சிக்க இப்பத் தெறக்கப் போறயா இல்லையாடா? ” ன்னுஅதட்டினான் சுப்ரமணி.
‘கதவைத்திற கதிர்வேலு..உங்கண்ணன் உயிருக்குப் போராடறான்’..அம்மா அலறினாங்க.
‘சித்தப்பா..கேட்ட
திறந்து விடுங்க..’
ஆறு வயசு அர்ச்சனா அழுதது.
அண்ணியோட கண்ணில் நீராக்கொட்டுது..
” தெறக்க முடியாது ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க! ”
நான் பேசப் பேச முதல்ல கூட்ஸ்ரயிலு தொடர்ந்து சிலநிமிஷங்களில் எக்ஸ்ப்ரஸ்ரயில் வந்துவிட்டது. நான் அந்த ரயிலை அனுப்பிய பிறகு, சிவப்புக் கொடியை போட்டுவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஓபன் ஒப்புதல் வாங்கிட்டு பிறகுகேட்டை நீக்கினேன். சுப்ரமணி சொன்னபடி
ஒரு நிமிஷம் கேட்டைத்திறந்திருக்கலாம் ஆனா ரயிலின் வேகத்தில் என்ன வேணாலும் நடக்கலாம். ரயிலும் தடம் புரளலாம்.ஒரே அடில காரில் இருக்கிற அத்தனை உயிரும் போயிடலாம். அதுக்கு பயந்து நான் கேட்டைத்திறக்கல.
ஆனா,,,ஆனா.. கேட்டைத்திறக்காமல் போன அந்த நேரத்தில் அது என் அண்ணன் உயிரைப்பறிக்கும்னு சத்தியமா நினைக்கல. நெஞ்சுவலி எல்லை மீறி காரிலேயே அண்ணன் உயிர் போயிட்டதாலே அதுக்கு நாந்தான் காரணம்னு சுப்ரமணிக்குக்கோவம்.அவன்தான் அண்ணன் செத்த இந்த நாலுநாளில் திட்டம்போட்டு வீட்ல யாருக்கும் தெரியாம என்னை ஆட்களை வச்சி இங்க கொண்டுவந்துபோடவைச்சான். நானும் ரயில்ல அடிபட்டு செத்துருவேன்னு நினச்சேன்.. ஆனா தெய்வமா நீங்கவந்து காப்பாத்திட்டீங்க..நான் வாழணும்.அண்ணன் இடத்துல இருந்துகுடும்பத்தைக்காப்பாத்தணும்… அர்ச்சனாவை நல்லா படிக்கவைக்கணும். அதுக்கு நான் வாழணுங்க…இப்ப சொல்லுங்க..நான் செய்ததா தப்பா சொல்லுங்க.
ஒரு கேட் கீப்பரை நம்பித்தான் அந்த ரயிலில் பல உயிர்கள் வருது. சிக்னல் கேட்டுகள் பாதுகாப்பு மிகுந்தவைதான் ஆனா அதேநேரம் கொடிகளை பயன்படுத்தும் கேட்களில் கேட் கீப்பர்களே அத்தனை பாதுகாப்புக்கும் காரணமானவங்க.
பணியில் எல்லாபாதுகாப்புகளும் மிகச் சரியாக இருக்கும்போது எங்களுக்கு ரிஸ்க் குறைவுதான். ஏதேனும் விபத்து என்றாகிவிட்டால் ரயிலைப் பாதுகாக்க நாங்கள் பல கிலோ மீட்டர்கள் ஓடணும். அதுவும், இந்தமாதிரி தண்டவாளத்தில் ஓடறது சொல்லமுடியாத சிரமமாக இருக்கும். இன்னும் குறிப்பாக சொல்லணும்னால் தனியாளாகத்தான் அத்தனையும் செய்யணும்.
இந்த பணிக்கு உடம்பு மட்டுமே ஆரோக்கியமானதாக இருந்தா போதாது, மனநிலையும் ஆரோக்கியமா இருக்கணும். எனக்குத் தெரிந்த ஒருத்தர், ஒரு பெண்ணை காதலித்தும் வந்திருப்பார் போல. அவர் காதலி ஏமாத்திட்டான்னு ஓடும் ரயிலில் தற்கொலை செய்துட்டார்.. அது கோழைத்தனம் இல்லையா.. எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டறதுதானே வெற்றி? ஆமா … நானே பேசிட்டு இருக்கறேன் நீங்க யாரு பார்த்தா வசதியான வீட்டுப்பிள்ளையா தெரியறீங்க.. என்ன விஷயமா நடு ராத்திரி இந்த பொட்டல் காட்டுல இருக்கற ரயில் தண்டவாளத்துக்கு வந்தீங்க?’
கதிர்வேலு குழப்பமாய் இப்படிக்கேட்கவும்,” உன்னைக்காப்பாத்தத்தான் வந்தேன். ‘தெய்வம்’னு என்னை கூப்பிடறே அப்புறம் என்ன கேள்வி? எழுந்திரு… என்னப்பொறுத்தவரை நீயும் எனக்கு ஒருவகையில் தெய்வம் தான்.. எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டறது தான் வெற்றின்னு சொல்லிஎன் புத்தியை தெளியவைத்த தெய்வம். வா..நாம ரெண்டுபேரும் வாழ்ந்துகாட்டலாம்!” என்று கை நீட்டிய சூர்யாவை வியப்புடன் பார்த்தபடி எழுந்து நின்றான் கதிர்வேல்.
தூரத்தில் ரயில் வெளிச்சம் காட்டியது.
00

ஷைலஜா.
இயற்பெயர் மைதிலிநாராயணன். ஸ்ரீரங்கத்து மண். கணவர், மற்றும் இரண்டு மகள்கள். தற்போது வசிப்பது கோவையில். இதுவரை 400 சிறுகதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். 12 நாவல்கள் வந்துள்ளன. பாடல்கள் பல நான் எழுதுவதை இசை அமைத்து எங்கள் குடியிருப்பில் பாடுகிறார்கள்.
அப்பா ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சித்தப்பா மகன் இந்திரா சௌந்தர்ராஜன்..
கல்கி அமுதசுரபி தினமலர் கலைமகள் இலக்கியபீடம் குவிகம் மாத இதழ் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இணையப்பத்திரிகைகள், அமெரிக்கதென்றல் இதழ் முதலியன நடத்திய நாவல், குறுநாவல்,சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன். விகடன் நடத்திய பவழவிழாப்போட்டியில் 30000 ரூ என் படக்கதை தொடருக்குப்பெற்றது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. விளம்பரப்படம் குறும்படங்களுக்கு குரல்கொடுத்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவின் கையினால் பெங்களூர் நாடகவிழாவில் சிறந்த நடிகை விருது வாங்கினேன். திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன்..

