எதன் மீதும் பழி போடவில்லை
விதியொன்றுமில்லை ..
இரண்டுமற்ற இடைவெளியில்
பிறக்கும் குழந்தைமை..
00
கனவுகள் பொசுக்கப்பட்ட
இரவில்
சுள்ளிகளாய்
மீந்தன நினைவுத்திரிகள்..
00
காதுகளும் கண்களும்
இல்லையென்றால்
மொழிக்குத் தான் இடமேது.
கலைக்கும்தான் இடமேது..
00
பெரு வட்டத்திற்குள் சிற்சிறு வட்டங்கள்..
இடைவிடாது பெருகி உடையும் குமிழி மொட்டுக்கள்..
அக்கரையிலும் இக்கரையிலும்
எவருமில்லை..
ஓடும் நதியில் கலந்து பயணிப்பதே இறுதி முடிவு..
00
தட்டையாகிப்போனது உலகம்
மேம்போக்கான அஸ்திவாரத்தின் மேல்
கட்டப்பட்ட அனைத்து கட்டுமானங்களும்
ஆட்டம் காணத் துவங்கின..
பெயர்களும்அடையாளமுமற்று
ஒற்றை விலங்காகிப் போனது மானுடம்..
புலனாகாத ஒன்றின் காலடித்தடம்
பரிணாமத்தின் நிரந்தர சுவடாகிப்போனது ..
இனி
இழுபடும் காலி டப்பாக்களி்ன் தரையுரசும்
இரைச்சலின் சங்கீதம் மட்டும்..
00


