சுரேசுகுமாரன்  கவிதைகள்

உள் நுழைய அனுமதியிருந்தும் 

சிப்பாய்கள் விடுவதாயில்லை..

அவ்வப்போது மின்னி மறையும்

வாளிருந்தும் சண்டை முடிவதில்லை..

முடிவற்று தொடரும் யுத்த களத்தில்

சிப்பாய்கள் எண்ணிக்கை 

கூடியவாறுதான் உள்ளது..

வாழ்வாதாரத்தி்ன் நுனி காம்புகளில்

பற்ற வைத்த நெருப்பு 

கொழுந்து விட்டு எரிகிறது..

மண்ணுக்குள்ளிருந்து  வெளியேறித் 

துடிக்கும் ஆசை நாவுகள்..

சாவதிற்கு  பதில் வாழ்வதென்பது

பழகி வெகு நாட்களாயிற்று..

000

சௌகரியங்களுக்குள்  வீழ்ந்து 

கிடப்பது வீழ்ச்சியல்ல  என்கிற 

மாயையில் நகர்கிறது  காலம்..

பறவைகளுடைய  வானம் 

பறிக்கப்பட்டுவிட்டது..

இந்த அரக்கர் வாழ் பூமியிலிருந்து விடுபட்டு

வேறு இடத்திற்கு  இடம் பெயரத்தான் முடியுமா?

சர்வம் நாசமாகிப் போனபின் 

செய்திகளை கடத்தவாவது.,

000

இன்னும் கொம்பு முழுதாக முளைக்கவில்லை எனக்கு..

மைதானத்தின் வட்ட விளிம்பை

வாஞ்சையுடன் சுற்றி சுற்றி வருகிறேன்..

புழுதி புயல் ஓய்ந்து

இறுதிச்சுற்றுக்கு தயாரான

இரண்டு ஜீவன்கள் மெதுவாக மைதானத்திற்குள் நுழையும்

என்னை பார்த்து ஆக்ரோஷத்துடன்

துள்ளி குதித்து ஓடி வந்தன..

இதை சற்றும் எதிர்பாராதவன்

எல்லைக்கு வெளியே

நகர்ந்து கொண்டேன்.

அவை இரண்டும்

பெருமூச்சுடன் சறுக்கியவாறு

எல்லைதாண்டாமல் நின்று விட்டன..

மூன்றாவது பரிசு கிடைத்தது.…

 00   

விசிறப்படும் சிறகுகள்

00

துண்டு வானம் மட்டுமே காட்டும்

ஜன்னல் விளிம்பிற்குள்

வெண்ணிலவின் ஒளி அசைந்தது ..

அதன் பால் வெளி பருகுதலின் காலம்

சொச்சம்தான் எனினும்

அனைத்தையும் ஏதாவது ஒரு மூலையில்

பத்திரப்படுத்தி வைக்கும் இதயம் ..

மாதுளைச் செடியின் மீது

வந்தமரும் சிட்டுக்குருவிக்கு

அனைத்து உரிமையும் உண்டு.

வெள்ளிப் பழங்கள்

உதிர்ந்து விழும் மாலையில்..

கை படாமல் ஒளிர்ந்து மறையும்

,

முன்பே நிரப்பப்பட்ட பக்கங்களை

காலமற்ற சுழியம்

ஏந்தி கடக்கிறது.

எளிதில் நிகழக்கூடிய மரணத்தின்

முந்தைய பரிசு தான் இது.

பாதுகாப்பாக நடப்பதைத்

தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

000

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *