கங்கா பாஸ்கரனின் ‘நீராம்பல்’
தயாஜி
கடந்துசெல்லும் பேருந்தின் சன்னலின்
ஓரப்பார்வைக்காக ஒற்றைக்காலில்
தவமிருக்கும் மரங்கள்
(தவம் – பக்கம் 26)
இது பழக்கமான ஒன்றுதான். பேருந்தில் நாம் அமர்ந்து சன்னல்வழி வெளியில் பார்ப்பதும்; வெளியில் இருப்பது உள்ளே நம்மைப் பார்ப்பதும். ஆனால் இதில் வெளியில் நிற்கும் மரமொன்று நாம் அதைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒற்றைக்காலில் தவமிருப்பதை ஒரு கவிஞன் அவதானிப்பதுதான் இங்கு புதிதாக இருக்கிறது. அதோடு இன்றைய தலைமுறைக்குக்கு பேருந்துகளில் சன்னலே தேவைப்படுவதில்லை அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு ‘இணைய வசதி’ இருந்தாலே போதுமென்றாகிவிடுகிறது. அவர்களின் கொஞ்சமாவது நிதானிக்க வைப்பதற்காவது இந்தக் கவிதைகளும் அது கொடுக்கும் காட்சி படிபங்களும் இங்கு தேவைப்படுகின்றதுதானே.
நடுகல்.காம் வாசகர்களுக்கு வணக்கம். நமது இன்றைய மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் நான்காவது புத்தகமாக கங்கா பாஸ்கரன் எழுதியிருக்கும் ‘நீராம்பல்’ கவிதைத் தொகுப்பு குறித்து பார்க்கவுள்ளோம். மேலே நான் குறிப்பிட்ட தவம் கவிதை இந்தத் தொகுப்பில் உள்ளதுதான்.
‘நீராம்பல்’ 2024-ம் ஆண்டில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். கவிஞர் சேரன் இந்தத் தொகுப்பிற்கு பின்னட்டை குறிப்பைக் கொடுத்திருக்கின்றார். இந்தத் தொகுப்பில் மொத்தம் 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அந்தக் கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகளையும் அது கொடுத்திருக்கும் வாசக அனுபவத்தையும் உங்களோடு இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.
அதற்கு முன்; கவிஞர் கங்கா பாஸ்கரன் குறித்து தெரிந்து கொள்வோம். எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் என பல பரிணாமங்கள் கொண்டிருக்கும் இவர் 2007-ம் ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை பொற்றார். முதுநிலைப் பட்டப்படிப்பிற்காக எழுத்தாளர் சிவசங்கரியின் ‘இனி’ நாவலை திறனாய்வு செய்துள்ளார். நிறைஞர் பட்டப்படிப்பிற்காக ‘புறநானூறும் நட்பும்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
2022-ம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் பாராட்டு பதக்கமும், 2023-ம் ஆண்டில் கவிதைப் பிரிவில் தேசியக் கலை மன்றத்தின் தங்கமுனை விருதும் பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.
தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், மக்கள் மனம் ஆகிய சிங்கப்பூர் இதழ்களிலும் செம்மலர், நுட்பம், ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது சிறுகதைகள் கவிதைகள் வெளிவந்துள்ளன.
‘நீராம்பல்’ கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற ‘ஒரு குவளைத் தேநீர்’, ‘வெறுமையாகும் தேநீர்’, ‘கைவிடப்பட்ட தேநீர்’, ‘தேநீரும் மையலும்’ ஆகிய கவிதைகள் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் (என்.ஏ.சி) நடத்திய 2023-ம், ஆண்டுக்கான ‘தங்க முனை விருது’க்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2025-ம் ஆண்டில் தேசிய கலைகள் மன்றம் நடத்திய தங்க முனைப் போட்டியில் இவரின் சிறுகதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது.
கவிஞர் கங்கா பாஸ்கரன், தற்போது சிங்கப்பூர் தேசியக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். அதோடு ‘லிஷா இலக்கிய மன்றத்தின்’ துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.
தனிமையைத் தன் கவிதை கொண்டு நிரப்பாத கவிஞர்கள் குறைவுதான். கவிஞர்களாக இருப்பதால் அவர்கள் தனிமையை கவனிக்கின்றார்களா? தனிமையை கவனித்து இரசிப்பதால் அவர்கள் கவிஞர்கள் ஆகின்றார்களா என்பது புரியாத புதிர்தான். இந்தத் தனிமை ஏதோ ஓரிடத்தில் தன்னை கவிஞர்களுக்கு அடையாளம் காட்டிவிடுகின்றது. இந்தக் கவிஞருக்கும் அந்தத் தனிமை ஓர் ஒற்றைச் சிறகில் இருந்து வெளிப்படுகின்றது.
ஒற்றைச் சிறகு பறக்கும்போதெல்லாம்
எங்கோ யாரோ ஒருவர்
தம் கவிதையால் அத்னோடு
பறந்துகொண்டு இருக்கிறார்
தனிமை துயரைத் தீர்க்கும்
அந்தச் சிறகு தன்னோடு
ஒரு கவிஞனை
ஒரு காதலியை
ஒரு காதலனை
ஒரு தாயை
ஒரு சிறுமியை
சுமந்துகொண்டு அலைவதை
நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?
என்றாவது ஒற்றைச் சிறகைப்
பார்க்க நேர்ந்தால் உங்கள் கண்களோடு
செவிகளையும் திறந்து கேளுங்கள்
(ஒற்றைச் சிறகு – பக்கம்13)
கவிதைகளில் கற்பனைகள் தீராநதியென ஓடிகொண்டே இருந்தாலும் அதனுள் நிதர்சனம் என்னும் மூச்சுக்காற்று இருக்கவே செய்கிறது. அதனுள் இயங்கும் அனைத்து உயிரினத்திற்கும் அந்த ஆக்சிஜன்தானே உயிர்க்காற்று. கவிஞர் ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார். எது நம்பிக்கை என்கிற கேள்விக்கும் நம் நம்பிக்கையை யார் காப்பாற்றக்கூடும் என்ற தெளிவிற்கும் ஏற்றதொரு கவிதை. மேடையேறி முழங்கும் தன்முனைப்பு பேச்சாளர்களில் பலரும் தவறவிட்ட இடத்தை கவிஞர் தன் கவிதையால் ஈடு செய்கிறார்.
நாளைய பொழுது நம் கையில் இல்லை
என்றபோதும் அலாரம் வைக்க
மறப்பதில்லை நாம்
(நம்பிக்கை. பக்கம் 25)

இந்தக் கவிதையில் ‘என்றபோதும்’ என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகின்றது. அதுவே ஒரு நம்பிக்கையின்மைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. அதனிடம் உறுதியாய்ச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அதிலிருந்து அதனை ஏற்றுக்கொள்வதாலேயே நம்முடைய வேலை என்னவென்று நமக்கும் தெரியவருகின்றது. இப்படி எளிமையாக இருப்பதாலேயே இந்தக் கவிதையை நாமும் ஒதுக்கிவிட முடியாததற்கு கவிஞர், பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள்தான் காரணம். அலாரம் வைப்பதற்கு நம்மையும் ஒரு கை கொடுங்கள் என இக்கவிதை அழைத்துக்கொள்கிறது.
அன்பைத் தேடி அலையும் மனம், நம்மை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதை ‘கொடியது கேட்கின்’ கவிதையில் சொல்கிறார். வறுமை கொடியது என்று பாடிய அவ்வையைப் பின் தொடர்ந்து கவிஞருமே கொடியது கேட்கும் குமரனுக்கு இப்படி அலைக்கழிக்கும் மனமும் அது தேடியலையும் அன்புதான் இன்று கொடியதிலும் கொடியது என்கிறார்.
நில்லெனச் சொல்கிறேன் ஓடுகிறாய்
“இரு” என்கிறேன் அலைகிறாய்
நட்ட மரமாய் வேரூன்றுகிறாய்
நினைவுகளின் கூடாரமாய்
நிழல் தந்து வதைக்கிறாய்
சும்மா இராமல் சுமைதாங்கியாய்
மீண்டும் நாடுகிறாய்
மனமே கொடிது
உன் அன்பு அதனினும் கொடிது.
(கொடியது கேட்கின். பக்கம் 29)
எனக்கொரு நண்பர் இருக்கின்றார். ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றார். தினமும் அவர்களுக்குள் ஏதோ ஒரு சண்டை வந்துவிடுகிறது. அந்தப் பெண்ணின் பல செயல்பாடுகள் இவருக்கு பிடிக்கவில்லை. இப்படியே போனால் இருவருக்குமே அது பெருந்துயராகத்தான் அமையும் என்று முடிவெடுத்தார். இனி சரி வராது என அந்தப் பெண்ணிடம் சொல்லப்போகும் முன்னமே அந்தப் பெண் பெண் ஏதோ ஒரு வகையில் இவர் சொல்ல வந்ததை சொல்லவிடாமல் செய்துவிடுகிறார். ஒரு நாள், நம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என விசாரிக்கின்றார். ஒரு சமயம், தன் காதலன்தான் தன்னுடைய உலகம் என்கிறார். மறுநாள், சீக்கிரமே திருமணம் செய்து வாழ ஆசையாக இருக்கிறது என்கிறார். இப்படி சொல்கிறவர் அடுத்தநாளே உலகில் தனக்கு இருக்கும் முதல் எதிரி தன் காதலந்தான் என்பது போல நடந்து கொள்வார்.
இது ஆணுக்கு மட்டுமல்ல; பெண்களுக்குமே தன் காதலர்களால் நடக்கத்தான் செய்கிறது. இவர்கள் காதலில் லயிக்கிறார்களோ இல்லையோ காதல் தரும் துயரத்தில் லயித்துவிடுகிறார்கள். அவர்களின் குரல்காக கவிஞர் ஒரு கவிதையைக் கொடுத்திருக்கின்றார்.
31. துயரில் தொலைகிறேன்
அழும் குழந்தைக்கு
மிட்டாய் தருவதுபோல
விலக நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
முத்தங்களைப் பரிசளிக்கிறாய்
மழை பெய்து ஓய்ந்த பின்
ஈரத்தால் ஈர்க்கப்பட்டுத்
தலையை மெதுவாக நீட்டிகொண்டு
நகரும் நத்தையைப் போல்
நானும் இனிப்பில் மயங்கி
உன் தவறுகளுக்கான
சமாதானங்களை அடுக்கிக்கொள்கிறேன்
எங்கிருந்தோ முளைத்த கைககள்
மிட்டாயைப் பிடுங்க
எங்கிருந்தோ முளைத்த கால்கள்
நத்தையின் ஓட்டை மிதிக்க
மீண்டும் துயரில் தொலையும்
நான்
(துயரில் தொலைகிறேன். பக்க்கம் 43)
உயிர்ப்புடன் வைத்திருப்பது உறவுகளுக்கு ரொம்பவும் முக்கியம். தேநீர் மீது கவிஞருக்கு என்ன காதலோ தெரியவில்லை. பல கவிதைகளில் தேநீர் கோப்பையுடனே வருகின்றார். காதல் கொண்ட பெண்ணின் தீர்ந்துவிடக்கூடாத மையலையும் ஆறிப்போகாத தேநீரையும் ஒன்றாக இணைக்கின்றார்.
காதல்கொண்ட பெண்ணின் மையல்
ஆவி பறக்கும் தேநீரை ஒத்தது
தொண்டைக்குழிக்குள் மிதமான சூட்டுடன்
இறங்கும் உணர்வு
ஒரு குவளை தேநீர் துணையுடன்
உரையாடவும் செய்யலாம்
உரையாடலின்றி விழி வழியும்
கடத்தலாம்
கறுப்புத் தேநீர்
மசாலா தேநீர்
எலுமிச்சைத் தேநீர்
மூலிகைத் தேநீர்
செம்பருத்தித் தேநீர்
பேரிச்சைத் தேநீர்
அத்தனை சுவைகளும் உண்டு
பெண்ணின் மோகத்தில்
தேநீரும் மையலும்
ஆறிப்போனால்
பெருகுவது
கசப்பு
முத்தத்தை பற்றியும் முத்தமிடுவதைப் பற்றியும் ஒவ்வொரு கவிஞரும் ஒரு கவிதையைச் சொல்லிவிடுகிறார்கள் போல. கவிதையே வராதவர்களிடம் கூட முத்தம் குறித்த கதையோ எதிர்ப்பார்ப்போ இருந்துவிடுகிறது. முத்தம் ஒன்றே கொடுக்கும் போது சரி வாங்கும் போதும் சரி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று சொல்லும் கவிஞர் முத்தமிடுதலை பேதமற்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
இருவர் சத்தமின்றிச் செய்யும் சமர்
யார் வெற்றிபெற்றாலும்
மீண்டும் தொடரும்
கொடுக்கும்போதும் மகிழ்ச்சி தரும்
திருப்பித் தரும்போதும்
மகிழ்ச்சி தரும் ஒரே கடன்
கன்னம், நெற்றி, உதடு என
உறவுகள் கொடுப்பதற்கென
வேறுபாடு காட்டும்
எனினும்
காட்டும் அன்பில் பேதமில்லை
(ஈர முத்தம். பக்கம் 32)
வெளியூர் வாழ்வையும் வெளிநாட்டு வெலையையும் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே தட்டில் வைத்து பறிமாறும் வாழ்க்கைதான் பலருக்கு அமைந்துவிடுகிறது. எதற்காக தங்கள் இளமையை பணையம் வைத்தார்களோ அதனாலே தங்களின் இளமை கொஞ்சம் கொஞ்சமாக காணடிக்கிறார்கள். யாருக்காக வெளியூர் போனார்களோ அவர்களாலேயே வெளியில் தலை காட்டாமல் அவமானப்படுகிறார்கள். மனம் வந்து ஏமாற்றுகிறார்கள். மனம் வந்து ஏமாறவும் செய்கிறார்கள்.
ரொம்பவும் விசித்திரம் நிறைந்த வாழ்க்கையை தினம் தினம் அனுபவிக்கும் இவர்களை தினமும் நாம் பார்க்கிறோம்தான். அவர்களின் வாழ்க்கையை ஒரு சில படைப்பாளிகளே தங்களின் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் அந்த மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு துண்டை எடுத்து, கவிதையாக்கியிருக்கிறார் கவிஞர். இவர்களுக்கு ஒப்பந்தத்தில் ஒரு வாழ்க்கை. ஒப்பந்தம் முடிந்ததும் இன்னொரு வாழ்க்கை. இரு வாழ்க்கையிலுமே இன்பங்களைவிட இழப்புகள்தான் அதிகம்.
விடுமுறை என்றாலே உற்சாகம்தான்
இந்தநாள் திருநாளென உலவும்
பறவைகள்
பேதங்கள் ஏதுமின்றிச் சுற்றி
நிற்பவர்கள் நினைவுமின்றி
யாருமில்லா ஊரில்
நீதானே என் துணையென
பங்களாதேஷிலிருந்து வந்தவன் சொல்ல
அந்த அன்பு அடுத்த பெண்ணைப்
பார்க்கும்வரை என
பிலிப்பினோ மாது சிணுங்க
இயல்பாய்க் கடந்துபோகும்
இவர்களின் உறவில்
விதியின் விதிகள் என்றெதுவும்
இல்லை
ஒப்பந்தம் முடிந்து
ஊர் திரும்பும் வரையில்
(விதி. பக்கம் 50)
கவிஞர் கங்கா பாஸ்கரனின் கவிதைகள் எளிதாக வாசிக்க முடிகிறது. ஒரு படைப்பை எளிதாக வாசிக்க முடிவதை வைத்தே அது சிறந்தது அல்லது பலவீனமானது என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனை வாசிக்கும் வாசகனின் மனதை அந்தப் படைப்பு எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறது என்பதுதான் முக்கியம் என நினக்கிறேன். நாம் வாழாத வாழ்க்கையை நமக்கு காட்டுவதைவிடவும், அந்த வாழ்க்கைக்கை அனுபவத்தை நாம் வாழாவிட்டாலும் நமக்கு கொடுப்பதுதான் ஒரு படைப்பாளியில் முக்கிய வேலை. அதுதான் அந்தப் படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
கவிஞரின் கவிதைகளில் அப்படியாக நிகர் அனுபவத்தைக் கொடுக்கவே செய்கிறது. ஆனாலும் சில கவிதைகள் வாசகர்களுக்கு அங்கிருந்து அதிகம் செல்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கவில்லை. இது பெரிய குறையில்லைதான். வாசிக்கின்ற வாசகர்களின் மனநிலையைப் பொருத்து இந்தக் கூற்று மாறுபடும்தானே.
ஒரு படைப்பாளி ஒரு தேசத்தில் இருந்து எழுதும் போது அவன் வாழும் மண்ணின் மணம் அவனது படைப்பில் இருப்பது அந்தப் படைப்பிற்கு முக்கிய அம்சமாகிறது. இந்தத் தொகுப்பில் தனிமனித சோகமும் ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் தெரிந்த அளவிற்கு அந்த மண்ணின் இயல்போ வாழ்வின் சூழலோ தெரியவில்லை. வெளிநாட்டு வேலையைச் சொல்லும் கவிதையே ஒன்றுதான் இருக்கிறது.
மற்றவர்களின் எழுத்தில் இருந்து நமது எழுத்து மாறுபடும் இடம் ஒன்று இருக்கிறது. அதுதான் அந்தப் படைப்பாளி வாழும் இடம். அவ்விடமும் அச்சூழலும் ஒருவன் எழுதுவதற்கும் எழுதாமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதனையும் உடைத்து எழுத வருகின்றவர்களின் படைப்புகளைத்தான் உலகம் கொண்டாடுகிறது. அந்தப் புதுப்புது வாசக அனுபவத்திற்குத்தானே வாசகர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கின்றார்கள்.
இந்தத் தொகுப்பில் நிலம் இல்லையே என்ற யோசனையும் எதிர்ப்பார்ப்பும் ஒரு பக்கம் இருந்தாலும் கவிதைகள் இருக்கின்றதே என்ற காரணம் இருக்கிறது; இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க.
இம்மாத மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தின் கவிஞர் கங்கா பாஸ்கரனின் ‘நீராம்பல்’ கவிதைத் தொகுப்பை தெரிந்து கொண்டோம்.
அடுத்த மாதம் மேலும் ஒரு சிங்கப்பூர் புத்தகத்துடன் சந்திக்கலாம்….
000

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

