தயாஜி
எழுத்தாளர் அழகுநிலா சிங்கப்பூர் எழுத்தாளர்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், குழந்தை இலக்கியம் போன்றவற்றை ஆர்வமாக எழுதி வருகிறார். அதோடு குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
சிங்கை பத்திரிகைகளான தமிழ் முரசு நாளிதழிலும் தி சிராங்கூன் டைம்ஸிலும் இவரது படைப்புகள் வெளிவந்ததோடு வல்லினம், அகழ், கனலி, அழிசி, திண்ணை, தங்கமீன் போன்ற இலக்கிய இணைய பக்கங்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர வாசகர் வட்டம் ஏற்பாடு செய்யும் நவீன இலக்கிய செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துவரும் இவர் சிங்கப்பூர் நூலகத்தில் குழந்தைகளுக்கு கதைசொல்லியாகவும் இருக்கின்றார்
எழுத்தாளர் பெற்ற விருதுகளும் அங்கிகாரங்களும்: சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் BEYOND WORDS, 2015 திட்டத்தின் வெற்றியாளர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘முத்தமிழ் விழா’ சிறுகதைப் போட்டியில் பரிசுகள், ‘அப்பன்’ நூலுக்காக 2024-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசு போன்றவையாகும்.
எழுத்தாளர் இதுவரை வெளியிட்ட நூல்களைத் தெரிந்து கொள்ளலாம்: ஆறஞ்சு (2015, சிறுகதைத் தொகுப்பு), சிறுகாட்டுச் சுனை (2018, கட்டுரைத் தொகுப்பு), சங் கன்ச்சில் (2019, சிறுகதைத் தொகுப்பு), மொழிவழிக் கனவு (2021, கட்டுரைத் தொகுப்பு), கொண்டாம்மா கெண்டாமா (2016, குழந்தைகள் பட நூல்), மெலிஸாவும் மெலயனும் (2016, குழந்தைகள் பட நூல்), மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும் (2018, குழந்தைகள் பட நூல்), பா அங் பாவ் (2019, குழந்தைகள் பாடல் நூல்), வாசிப்பெனும் வானம் (2022, கட்டுரைத் தொகுப்பு, மின்னூல்), தோற்ற கவிதைகள் (2022, கவிதைத் தொகுப்பு, மின்னூல்), அப்பன் (2023, பதிவுகள் தொகுப்பு, நூல்வனம் பதிப்பகம்; இது போக நான் இந்தக் கட்டுரையை எழுதி நீங்கள் வாசிக்கும் இந்த நேரத்தில் அடுத்த புத்தகத்திற்கான களப்பணியை எழுத்தாளர் செய்து கொண்டிருக்கக் கூடும்.
‘சங் கன்ச்சில்’ எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. 2019-ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த நான்காவது ஆண்டில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பாக; 2015-ஆம் ஆண்டில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பை வாசித்ததின் மூலம் அவர் எனக்கு அறிமுகம். அப்போதே அந்தப் புத்தகம் குறித்த எனது கேள்விகளையும் எனது பார்வையையும் எனது வலைப்பூவில் எழுதியிருப்பேன். அந்தப் புத்தகத்தை மீள்வாசிப்பு செய்து எழுதலாம் என்று நினைத்திருந்த சமயத்தில்தான் அவரது இரண்டாவது தொகுப்பில் ‘வெள்ளெலிகள்’ சிறுகதையை எங்களின் மாதாந்திர சிறகுகளின் கதை நேரம் இணைய சந்திப்பிற்காக வாசிக்க தொடங்கி அதில் ஈர்க்கப்பட்டு முழு தொகுப்பையும் வாசித்துவிட்டேன்.
இனி இந்த மாத மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தில் அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பார்க்கலாம். நீங்கள் தயார்தானே.
இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையாக ‘கீலா’ என்னும் கதை இருக்கிறது. கீலா என்றால் மலாய் மொழியில் பைத்தியம் என்று பொருள்.
இந்தக் கதையை வாசிக்க வாசிக்க எனக்கும் ஒர் ஆர்வத்தை இந்தக் கதை ஏற்படுத்தியது. ‘அல்சைமர்’ நோய் வந்ததால் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அம்மா மறந்துவிடுகின்றார். மரண தருவாயில் தன் மகளிடம் ஏதோ சொல்ல முயன்று ‘கீலா’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். அம்மா என்ன சொல்ல வந்திருப்பார். ஏன் பைத்தியம் என்றார்?. யாரை பைத்தியம் என்றார்? என்ற கேள்விகள் மகளை அலைக்கழிக்கிறது. ஏதோ ஒரு மர்மம் அதில் இருப்பதாக மகள் நினைக்கின்ற நேரத்தில் மகளுக்கு தன் அம்மாவின் நாட்குறிப்பு கிடைக்கின்றது.
அதை வாசிக்க வாசிக்க அம்மா சொன்ன அந்த ‘கீலா’ என்னும் சொல்லின் பின்னணி மகளுக்கு புலப்படுகின்றது. அந்த நாட்குறிப்புடன் அம்மா சொன்ன அந்தக் கடைசி வார்த்தையை நோக்கி மகள் பயணமாகின்றாள்.
அந்தப் பயணத்தில் அம்மாவின் குரலிலேயே அந்த நாட்குறிப்பு நமக்கு வாசிக்கப்படுகின்றது. மகள் அந்த பயணத்தின் இலக்கை அடைகின்றாள். அம்மாவின் வார்த்தை சுமந்திருக்கும் உருவத்தை அங்கு அவளும் சந்திக்கின்றாள். இதுதான் அந்தக் கதையின் சுருக்கம்.
நான் இங்குள்ள சினிமா துறையிலும் சில பணிகளைச் செய்கிறேன். இந்தக் கதைக்கருவை ஓர் இயக்குனரிடம் கொடுத்தால் ஒரு சுவாரஷ்யமான சினிமாவை அல்லது நாடகத்தையோ எடுத்துவிடுவார். அப்படியொரு கதைதான் இது.
இக்கதையில் இரு காலகட்டங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று மகள் வாழும் இன்றைய காலகட்டம். இன்னொன்று அம்மா வாழ்ந்த ஏறக்குறைய 1940-ம் ஆண்டு காலகட்டமாக இருக்கலாம்.
இக்கதையில் மகளின் எண்ண ஓட்டத்தைவிடவும் அம்மாவின் நாட்குறிப்பில் இருக்கும் அம்மாவின் குரல்தான் முக்கியத்துவம் வாய்ந்திருக்க வேண்டும். அந்த நாட்குறிப்பின் வார்த்தைகள் அனைத்தையும் நிகழ்காலத்தில்தான் அம்மா எழுதியிருப்பார். அன்றன்று நடந்ததை அன்றன்று நாம் எழுதும் போது நமது அன்றைய மன ஓட்டத்தைதானே எழுதுவோம். அது வெளிப்படையாகவும் பாசாங்கற்றும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த அம்மா எழுதியதாகச் சொல்லப்பட்ட நாட்குறிப்பை நாம் வாசிக்கு போது நம்மால் அதன் உண்மைத் தன்மையில் ஒன்ற முடியவில்லை. இது சரியாக இருந்திருந்தால் இந்தக் கதை எழுத்தாளரின் கதைகளில் முக்கியமான கதையாக நிலைபெற்றிருக்கும்.
அம்மாவிற்கு எல்லாமும் மறந்த பின்பும் தன் மனதிலோ மூளையிலே, ஓரிடத்தில் இன்னும் இருக்கும் குற்றவுணர்ச்சிதான் தான் சாகும் தறுவாயில் ‘கீலா’ என்ற சொல்லாக மகளைத் தொற்றிக்கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க அம்மாவின் நாட்குறிப்பில் அந்தச் சம்பவம் எப்படி பதிவாகியிருக்க வேண்டும் அதன் தாக்கம் எப்படியாக அமைந்திருக்க வேண்டும். அதிலும் நடந்த சம்பவத்தைவிடவும் அதற்கு பின்னால் அம்மாவிற்கு ஏற்பட்ட மனவேதனையும் குற்றவுணர்ச்சியும் எவ்வளவு ஆழமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனை இந்த நாட்குறிப்பில் நம்மால் காண முடியவில்லை. அதோடு அந்தக் காலக்கட்டத்தின் சித்திரமும் அவ்வளவாக உள்ளே இருக்கவில்லை.
நண்பனின் மரணம் ஏற்படுத்தும் மனஅழுத்தத்தைப் பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ நாவல் ஏறக்குறைய நண்பனின் இறப்புக்கு பிறகு நண்பர்கள் எதிர்க்கொள்ளும் மன அழுத்தமும் அகச்சிக்கலும் சொல்லப்பட்டிருக்கும்.
‘அக்ரோன்’ சிறுகதைக்கருவும் அதுதான். ஆனால் எழுத்தாளர் அழகுநிலா இக்கதையை நிகழ்த்தும் களம் இக்கதைக்கான முக்கியத்துவத்தைச் சொல்கிறது. நாம் நமது அன்றாட அலுவலக வேலை செய்வது போலவே பெரிய பெரிய கட்டிடங்களில் கையிறுகளில் தொங்கி கொண்டே வேலை செய்கிறவர்களும் அதனை ஒரு வேலையாக செய்கிறார்கள். ஆபத்து நிறைந்த இந்த வேலைக்கு பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களே வேலையாட்களாக இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒரு வேலையாள் வேலை செய்யும்போது மேலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றார்.
அது மற்ற வேலையாட்களுக்கு குறிப்பாக இறந்தவனின் நண்பனுக்கு ஏற்படுத்தியிருக்கும் பயத்தையும் பதட்டத்தையும் இக்கதையில் எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.
சிங்கப்பூரின் சூழலில் அங்கு வேலைக்குச் செல்கிறவர்களின் வாழ்க்கையையும் புறச்சூழலையும் இயல்பாக சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர். அதை வைத்து சிங்கை சூழலை வாசகர்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.
இத்தொகுப்பில் எனக்கு ரொம்பவும் பிடித்த சிறுகதைகளில் ‘வெள்ளெலிகள்’ சிறுகதையும் ஒன்று. என் தூக்கத்தை கெடுத்த சிறுகதையும் இதுதான். ஆகவே இங்கு இச்சிறுகதையைப் பற்றி முழுமையாய் எழுதப் போவதில்லை. நீங்கள் இந்தக் கதைகளை கட்டாயம் வாசிக்க வேண்டும்; என்பதற்காகவே.
அதே சமயம் இந்தக் கதையைக் குறித்து சொல்லாமல் சொல்லவேண்டிய செய்தி இருக்கிறது. அதனை சொல்லவேண்டும் எனவும் நினைக்கின்றேன். சிங்கப்பூர் வாழ்வியலை சொல்லகூடிய கதைகளில் இதுவும் ஒன்று. இதன் தனித்தன்மையும் அதுதான்.
நம்முடன் இருக்கும் ஒருவரை எந்த வகையில் நம்மை அறியாமலேயே இம்சிக்கின்றோம் என்பதாகத்தான் இந்தக் கதையைப் பார்க்கிறேன். அதிலும் நம்மை அறியாமலேயே அவர்களின் உள்ளத்தில் மறைந்திருக்கும் இன்னொரு மோசமான மனிதனை வெளியில் கொண்டு வந்து விடுகின்றோம் என்பதை வாசிக்க நமக்குமே பதட்டம் ஆகிறது.
அழகுநிலாவின் எழுத்திற்கு இந்தக் கதையை ஓர் உதாரணமாக நாம் மற்றவர்களுக்கு முன்மொழியலாம். இச்சிறுகதை தன்னகத்தே பல திறப்புகளைக் கொண்டிருப்பதை வாசகர்கள் உணரக்கூடும்.
இலக்கியத்தில் பகடி என்பது முக்கியமான எழுத்து வடிவமாக பார்க்கிறவன் நான். வெறுமனே சிரிக்க வைப்பது அதன் நோக்கம் அல்ல. அதற்கு பல சிரிப்பு கதைகள் இருக்கின்றன. பகடி என்பது எழுதுகிறவர் கையில் இருக்கும் ஆயுதம். அதனை எவ்வளவு ஆழமாக பயன்படுத்துகின்றாரோ அவ்வளவு ஆழமாக அந்த படைப்பு பேசப்படும். எழுத்தாளர் அழகுநிலாவிற்கு பகடி கைவருகின்றது. அதனை அங்கொன்றும் இங்கொன்றுமென சிறுகதைகளில் பார்க்கவும் முடிகிறது.
‘பொங்கல்’ என்னும் சிறுகதையில் அந்தப் பகடியை முழுமையாய்ப் பயன்படுத்த முயன்றிருக்கின்றார் எழுத்தாளர். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தையும் தங்களின் தாய்மொழியையும் காப்பாற்றுகிறேன் என செய்கிற காரியங்களின் நடக்கும் குழப்பங்களைத் தனியாக சொல்லவேண்டியதில்லை. பொங்கல் முடிந்து எட்டு மாதங்கள் கழித்தும் கூட பொங்கல் விழாக்களைப் பேனர் அடித்து கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள்.
அப்படி சிங்கப்பூரில் நடக்கும் ஒரு பொங்கல் விழாவை மையப்படுத்திதான் எழுத்தாளர் இந்தச் சிறுகதையை எழுதியிருப்பார். இருந்தும் இந்த சிறுகதையில் எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கும் பகடி என்னும் ஆயுதம் அதன் கூர்மையைக் கொண்டிருக்கவில்லை. ஆழமாக செல்ல வேண்டிய பல காட்சிகளும் உரையாடல்களும் மேலோட்டமாக அமைந்துவிட்டன.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து இங்கு தன் மகளைப் பார்க்க வந்திருக்கும் வயதான விவசாயிக்கு இந்த இடத்தில் நடக்கும் கூத்துகளும் கடைசியாக அவருக்கே சாப்பாட்டுக்கு கூப்பன் கிடைக்காத கொடுமையையும் ஆழமாக சொல்லியிருந்தால் இந்தக் கதை அதிக கவனத்தை ஈர்த்திருக்கும். இருந்தும் இதிலுள்ள விமர்சனம் பலருக்கும் உறுத்த செய்யும்.
‘சங் கன்ச்சில்’ இத்தொகுப்பில் இருக்கும் தலைப்புக்கதை. பொதுவாகவே சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது அதன் தலைப்புக் கதையை வாசிப்பதில் ஆர்வம் இருக்கவே செய்யும்.
அதோடு சங் கன்ச்சில் என்பது மலாய் மொழி இலக்கியத்தில் தந்திரமாக எல்லாவித ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சருகு மானைக் குறிக்கும். மலேசியாவில் மாணவர்களுக்கென சன் கன்ச்சில் கார்டூன்களைக் கூட வெளியிட்டுள்ளார்கள். நான் சிறுவயதில் விரும்பி பார்க்கும் கார்ட்டூட்களில் இதுவும் ஒன்று. அதன் சாமார்த்தியமும் புத்திகூர்மையும் எங்களது நன்னெறிக்கல்வி புத்தகத்திலும் கூட இருந்திருப்பதாக நினைவு.
சிவா என்னும் சிறுவன் தன் மீது சுமத்தப்படும் வீன்பழியை எப்படி எதிர்க்கொள்கிறான் என மேலோட்டமாகவும் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள முடியும். அதோடு, ஒழுக்கத்தை தன் விருப்பத்திற்கு ஏற்றபடி பயன்படுத்தும் மூத்த தலைமுறையும் ஒழுக்கம் என்றால் என்னவென்றே முழுமையாய்ப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கும் நடக்கும் சிக்கலைச் சொல்லும் கதையாகவும் இக்கதையை வகைப்படுத்த முடியும். நாம் நம் குழந்தைகளுக்கு எதை கற்பிக்கின்றோம். அது அவர்களை எப்படி பண்படுத்த உதவுகின்றது என சொல்லும் கதையாகவும் இக்கதையை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
சிவாவிற்கு இரு பாட்டிகள். ஒரு பாட்டி தந்திரமாக எல்லா ஆபத்துகளில் இருந்தும் தன்னைத் தற்காத்து கொள்ளும் சங் கன்ச்சில் பற்றிய கதையைச் சொல்கிறார். இன்னொரு பாட்டி பாம்பின் தலைமீது ஏறி நின்று நர்த்தனம் ஆடிய கண்ணனின் கதையைச் சொல்கிறார்.

இந்த இரண்டிலும் ஒன்று சாமர்த்தியமாய்த் தப்பித்து ஓடுவதாகவும் இன்னொன்று தைரியமாக எதிர்க்கொள்வதாகவும் இருக்கிறது. ஆனால் எழுத்தாளர் இந்த இரு முரண்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பது இதன் பலவீனமாக அமைந்துவிட்டது. இந்த இரண்டு முரண்களும் கதைகளில் வருவதற்கும் கதையில் இருப்பதற்குமான காரணத்தை எழுத்தாளர் தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை அதை தெளிவுப்படுத்தியிருந்தால் இந்தக் கதை இன்னொரு இடத்திற்கு சென்றிருக்கும் வாய்ப்பும் அமைந்திருக்கும்.
அதே போல இக்கதையில் அப்பா வழி பாட்டியின் தோழி குறித்து வருவது அவர்களில் யாரோ ஒருவர் சிவாவின் கணினியில் இரு பெண்கள் உறவு கொள்ளும் காட்சியை பார்த்ததற்கு சிவாவை பலிகடா ஆக்குவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. அதே போல அந்தக் குற்றச்சாட்டு சிவாமீது விழும்போதே நமக்கு தெரிந்துவிடுகின்றது யார் அந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று. ஒருவகையில் சிறுகதையும் அங்கேயே முடிந்துவிட்டதாகவும் தோன்றியது. சிறுகதையாசிரியர் அங்கிருந்து சிறுகதையை வளர்த்து எடுக்கும் போது திசை தெரியாது சிக்கி கொண்டாரோ என தோன்றவும் செய்தது.
‘வெண்ணிற இரைச்சல்’, சிறுகதையை வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் நாவலை வாசித்து கொண்டிருந்தேன். அழகுநிலாவின் இச்சிறுகதையை நான் வாசிக்க வாசிக்க உப பாண்டவம் நாவலில் இருந்து ஒரு பகுதியை வாசிப்பது போன்ற உணர்வை எனக்கு கொடுத்தது. ‘வெண்ணிற இரைச்சல்’ சிறுகதை தொடர்ந்து சொல்லபட்டு கொண்டிருக்கும் மகா பாரத கதைகளில் ஒரு கதை.
அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஆறஞ்சு’ சிறுகதைத் தொகுப்பிலும் ஒரு மகா பாரத கதை உண்டு. தருமனை மையமாக வைத்து அதனை எழுதியிருப்பார். பல ஆண்டுகளுக்கு முன் அந்தச் சிறுகதையை நான் வாசித்தேன். முதலில் அந்தக் கதை எனக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை மீண்டும் சொல்வதில் என்ன இருக்கிறது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
ஆனால் அதன் பின் தொடர்ந்து வாசிக்க வாசிக்க அந்தக் கதையை எழுத்தாளர் எந்தக் கோணத்தில் இருந்து சொல்லியிருக்கிறார் என்பதும் அந்தக் கதை எதனால் முக்கியத்துவம் ஆகிறது என்பது பிடிபட்டது. அந்த ’ஆறஞ்சு’ சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதும்போது ‘அலையும் முதல் சுடர்’ என்ற அந்தக் கதையைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன். ஏனெனில் அது கதையாக மட்டுமல்லாமல் எனது வாசிப்பையும் மாற்றிய கதைகளில் ஒன்று.
‘வெண்ணிற இரைச்சல்’; மகாபாரத போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை அவளது எண்ண ஓட்டத்தைச் சொல்கிறது.
இவ்வளவு பெரிய பாரத யுத்தத்திற்கும் பலியான உயிர்களுக்கும் காரணமாக தன்னை நினைக்கும் பாஞ்சாலி குற்றவுணர்ச்சி கொள்கிறாள். இக்கதையில் எழுத்தாளர் சேர்த்திருக்கும் மாயத்தன்மையை இக்கதைக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது. அதனை வாசிக்கும் போது நாமே அந்த மாயத்தை சிக்கிக்கொள்வது போன்ற பிரம்மையும் எழுகின்றது.
பாரத போரில், ஒரு பக்கம் கௌரவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இன்னொரு பக்கம் உப பாண்டவர்களான பாண்டவர்களின் வாரிசுகளும் கொல்லப்படுகின்றார்கள். அந்தப் போருக்கு பின் பாஞ்சாலி எதிர்கொள்ளும் மன உளைச்சலை எடுத்துச் சொல்ல முயன்றிருக்கும் எழுத்தாளரைப் பாராட்ட வேண்டும். இத்தனை மரணங்களுக்கும் தான்தான் காரணம் என்கிற குற்றவுணர்ச்சியும் இப்போது தான் ஒன்றுமே இல்லை என்கிற வெறுமையுணர்வும் பாஞ்சாலியை அலைக்கழித்து தூக்கத்தைப் பறிக்கின்றது. தன் அண்ணனான கிருஷ்ணனிடம் உறக்கத்தை யாசிக்கும் அளவிற்கு அவள் தள்ளப்படுகின்றாள்.
குருசேர்திர போரின் வெற்றி பஞ்ச பாண்டவர்களையும் என்னவாக மாற்றியிருக்கிறது என்பதை வாசிக்கும் போது இந்தப் போர் உண்மையில் பாஞ்சாலிக்காகத்தான் நடந்ததா அல்லது தங்களின் இராஜ்ஜியத்திற்காக நடத்தினார்களா என்கிற சந்தேகம்தான் எழுகின்றது.
முன்பு சொன்னது போல எஸ்.ராவின் உப பாண்டவன் நாவலில் இருந்து ஒரு பகுதியை வாசிக்கும் உணர்வை இந்தச் சிறுகதைக் கொடுத்தாலும் ‘வெண்ணிற இரைச்சலில்’ முடிவு நம் மனதில் நிற்கவில்லை என்பது ஒருவகையில் பலவீனம்தான். இக்கதை வாசகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்துவிட்டது.
ஒரு சிறுகதையை வாசிக்கும் போதும் வாசித்து முடித்த போதும் நமக்கு இன்னொரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. இது பலமா பலவீனமா? இப்போது இதை எழுதியவர் அந்தக் கதையைப் போலவே தானும் எழுத வேண்டும் என முயன்றிருக்கிறாரா? அல்லது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இப்படித்தான் ஒவ்வொரு கதைக்கருக்களும் பல்வேறு பரிணாமங்களின் உருமாறிக் கொண்டே இருக்குமா? இது போன்ற கேள்விகளைத் தூண்டிவிட்ட கதைதான் அழகுநிலாவின் ‘விலக்கு’.
‘விலக்கு’ சிறுகதையை வாசித்து முடித்ததும் எழுத்தாளர் அம்பபை எழுதிய ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதையை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சிங்கப்பூர், மற்ற நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று. எப்போதும் தன்னை முன்னோக்கி நகர்த்தும் நாடுகளில் ஒன்றும் கூட. அந்த நிலத்தில் கல்வி என்னவாக இருக்கிறது என்பதும் அங்குள்ள பள்ளிச்சூழல் எப்படி இருக்கிறது என்பதும் இச்சிறுகதையின் வழி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.
இந்தக் கதையில் மாணவர்களின் உரையாடலை நாம் கவனிக்கத்தான் வேண்டும். என்னதான் காலம் மாறிவிட்டது நாடு முன்னேறி கொண்டிருக்கிறது எல்லோருக்கும் கல்வி அவசியமாகிவிட்டது; அமைந்துவிட்டது என சொல்லி கொண்டிருந்தும் கூட தன் வீட்டில் தன் மகள் வயதிற்கு வருவது அம்மாவிற்கு ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலைக் கொடுக்கத்தான் செய்கிறது. தன் மகள் சீக்கிரத்தில் வயதிற்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அம்மா, அதன் பின்னணியையும் இந்தக் கதை யோசிக்க வைக்கிறது.
‘முள்முடி’ தி.ஜானகிராமனின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. அவரின் வாசகர்கள் மட்டுமல்ல இன்றும்கூட புதிய வாசகர்கள் இந்தக் கதையின் மூலமாகவும் தி.ஜாவின் உலகிற்குள் வருகின்றார்கள். இந்தக் கதையைக் குறித்து பலர் பேசியும் கலந்துரையாடியும் இருக்கிறார்கள். இனிமேலும் அது நடக்கத்தான் போகிறது.
சில கதைகள் எழுதப்பட்டு சில காலங்களில் அக்கதையில் புதிதாக கண்டடைய எதுவுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் தி.ஜாவின் முள்முடி அப்படி எதுவுமில்லாமல் போகக்கூடிய கதை அல்ல. நமது வாழ்வில் ஏதோ ஓரிடத்தில் நாமுமே அப்படியொரு முள்முடியை சுமந்திருப்போம் அல்லது இன்னொருவருக்கு சுமத்தியிருப்போம்.

இத்தலைப்பை வாசிக்கும் முன் முள்முடி என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் இயேசு கிருஸ்துதான் நினைவிற்கு வந்தார்.
இச்சிறுகதையை வாசித்த பின், தி.ஜா இந்தச் சிறுகதையின் வழி நமக்கு சுமத்திய முள்முடிதான் நினைவிற்கு வருகிறது. வாய்ப்பிருந்தால் நீங்கள் அந்த முள்முடியைக் கொஞ்சம் சுமந்துதான் பாருங்களேன்.
சரி, இப்போது அழகுநிலாவின் முள்முடிக்கு வருவோம். ஏற்கனவே உள்ள தலைப்பை மீண்டும் தன் கதையில் பயன்படுத்து பெரிய சிக்கல் இல்லைதான். ஆனால் அதற்கான அவசியம் என்ன என்பதுதான் இங்கு கேள்வியாக வைக்க வேண்டியுள்ளது.
இச்சிறுகதை தி.ஜாவின் முள்முடி போல உட்பொருளைக் கொண்டிருக்காமல் நேரடியாகவே முட்கள் போல குத்திகொண்டு நிற்கும் இன்றைய சில இளைஞர்களின் சிகை அலங்காரத்தைச் சொல்கிறது. இனி இருகதைகளைப் பற்றியும் ஒப்பிடாமல் அழகுநிலாவின் முள்முடி பக்கம் செல்வோம்.
பதினாறு வயது மகனின் தலைமுடி அலங்காரத்தைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் திட்டுகிறார்கள். டுரியான் பழத்தில் இருக்கும் முட்கள் போல தலையில் குச்சி குச்சியாய் நீண்டிருக்கும் சிகையலங்காரத்தைப் பார்க்க யாருக்கும் பிடிக்கவில்லை. மகனுக்கோ அதனை வெட்ட விருப்பம் இல்லை. இது அந்த மகனின் சுதந்திரம் மீதான கேள்வியை எழுப்புவதாக மகன் நினைக்கின்றான்.
தலைமுடியை வெட்ட சொல்லிவிட்டு வேலைக்கு செல்கிறார் அம்மா சுதா. அங்கு மகன் வயதான இளைஞன் குமார் வேலை செய்கிறான். வேலையிடத்தில் அவனைக் காணவில்லை. ஏனோ கடைக்கு பின்னால் மறைந்து கொண்டிருப்பதை சுதா கவனிக்கிறார். அங்கு சென்று அவனிடம் விசாரிக்கின்றார்.
தனது நண்பர்கள் இந்த உணவகத்திற்கு வந்திருப்பதாகவும் தான் இங்கு வேலை செய்வதாகச் சொல்லாமல், இந்தக் கடையில் தனது அண்ணனும் ஒரு முதலாளிதான் என சொல்லியிருக்கிறான். ஒருவேளை தான் இங்கு வேலை செய்துகொண்டே படிப்பது நண்பர்களுக்கு தெரிந்தால் அதை வைத்தே தன்னைக் கேலி செய்வார்கள் என சொல்லி சுதாவிடமும் உதவி கேட்கிறான்.
அந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த குமாரின் ஐந்து நண்பர்கள் சத்தம்போட்டு பேசி சிரித்தபடி இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தலைமுடியும் முள்ளம் பன்றி முட்கள் போன்று வெவ்வேறு திசையில் குத்திக்கோண்டிருப்பதைப் பார்த்ததும் சுதாவிற்கு தன் மகனின் தலைமுடி நினைவுக்கு வருகிறது. இவர்கள் மீது வெறுப்பும் ஏற்படுகின்றது.
அந்த இளைஞர்கள் மேஜை பக்கம் சுதா செல்கிறார். அவர்களில் ஒருவன் ‘குமார் எப்போ கடைக்கு வருவான்?” என கேக, “பாஸ் இன்னைக்கு வரமாட்டாரே” என சொல்லிவிட்டு செல்கிறார். சட்டென அந்த நண்பர்களிடம் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது.
அதில் ஒரு இளைஞன் சுதாவிடம் வந்து இன்று குமாருக்கு பிறந்தநாள், அதற்குத்தான் அவனுக்கு சர்ப்பரைஸாக பிறந்தநாள் பரிசைக் கொடுக்க வந்ததாகச் சொல்லிவிட்டு அவன் வந்ததும் கொடுத்துவிடும்படி பரிசையும் கொடுக்கின்றான். அதோடு குமார்தான் பொய் சொல்கிறான் என்றாலும் சுதாவும் ஏன் அவனுடன் சேர்ந்து பொய் சொல்ல வேண்டும் என கேட்டும்விடுகின்றான். மீண்டும் நண்பர்களிடம் சிரிப்பொலி எழுகின்றது. சுதாவிற்கு என்னச் சொல்வதென்று தெரியவில்லை. இளைஞர்கள் அங்கிருந்து புறப்படுகின்றார்கள்.
அதில் ஒருவன் மீண்டும் சுதாவிடம் வந்து, குமார் இந்தக் கடையின் முதலாளி இல்லை என்பது தங்களுக்கு தெரியும் என்பதை குமாருக்கு அதாவது அந்த பாஸுக்கு தெரியவேண்டாம் என சொல்லிவிட்டு சிரித்தபடி நண்பர்களை நோக்கி ஒடுகின்றான். அவர்கள் மறையும் வரை பார்த்திருந்த சுதா கடையின் உள்ளே நுழைந்து தன் வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு கொடுக்கின்றார்.
மகன்ழ் கார்த்திக் தொலைபேசியை எடுத்து பேசுகின்றான். சலூனுக்கு போனானா என அம்மா கேட்க் கார்த்திக்கிடம் இருந்து பதில் வரவில்லை. அம்மா மீண்டும் கேட்கிறார், இன்னும் இல்லை என்பதை எரிச்சலுடன் சொல்கிறான் கார்த்திக்.
அதுநாள் வரை மகனின் முடியை வெட்ட சொல்லிய சுதா இப்போது வ் வெட்ட வேண்டாம் என சொல்கிறார். அதோடு இந்த சிகை அலங்காரம் நன்றாக இருப்பதாகவும் சொல்லி தொலைபேசியைத் துண்டிக்கின்றார்.
ஆக தலைமுடியை வைத்து யாரையும் கணிக்க கூடாது என்பதை அம்மா புரிந்து கொண்டதாக நம்மை எழுத்தாளர் நினைக்க வைக்கிறார். ஒருவனின் கிழிந்த ஆடையை வைத்தோ ஒருவனது முகத்தோற்றத்தை வைத்தோ அவனை மதிப்பிட கூடாது என்பதற்கும் ஒருவரின் முள்ளம்பன்றி தலையை வைத்து அவனை மதிப்பிட கூடாது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை இப்படிச் சொல்கிறேன். ஒருவனுக்கு கன்னத்தில் தழும்பு இருக்கிறது அதை வைத்து அவனை ரௌடி என ஒதுக்கப்படுகின்றான். அவனால் அந்தத் தழும்பை சரிசெய்யவோ மறைக்கவோ முடியாத போது அதனை வைத்து அவனின் ஒழுக்கத்தையோ அவனது நடவடிக்கையையோ விமர்சிப்பது சரியில்லைதானே. ஆனால் தலைமுடி அப்படி இல்லையே. அவரவர் விரும்பி அப்படி வெட்டிக்கொள்கிறார்கள். அதன் மூலம் மற்றவர்களை கவர நினைக்கிறார்கள். இதுவும் அதுவும் ஒன்றா என்ன?
இவ்வளவு ஏன் இன்று, தலையில் முள்ளம்பன்றி முடியை வைத்திருந்தவர்களின் நல்ல குணத்தை கண்டுவிட்டதால் மகனும் அப்படியே முடியை வைத்து கொள்ளலாம். வெட்ட வேண்டாம் என சொல்லும் அம்மா, நாளையே அப்படி முள்ளம்பன்றி முடியுடன் இருக்கும் இளைஞன் ஒருவன் ஏதாவது தவறு செய்தால் தன் மகனும் அப்படி ஆகக்கூடும் என யோசித்து மகனை உடனே முடிவெட்ட சொல்ல மாட்டாரா.
முன்முடிவுகள் சரியல்ல என சொல்லும் இந்தக் கதை அவசர அவசரமாக எடுக்கும் முடிவுகளை நியாயப்படுத்துகின்றதா என்கிற கேள்வியை எழ வைக்கிறது.
மாணவர்களுக்கு இந்தக் கதை பொருத்தமாக இருப்பது போல இருந்தாலும் பல இடங்களில் செறிவாக்கம் செய்ய வேண்டியுள்ளதாகவே தெரிகிறது.
நிறைவாக; எழுத்தாளர் அழகுநிலாவிடம் கதைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்களும் இருக்கின்றன. பல கதைகளை அதன் இயல்பு கெடாமல் எழுதிச் செல்கிறார். சிங்கை எழுத்தாளர்களின் எழுத்துகளில் தன்னை தனித்து காட்டும் ஆவல் அவரது சிறுகதைகளில் தெரிகிறது. அதே சமயம் சில கதைகளை இவர் முடிக்கும் இடம் அந்தக் கதையை பலவீனப்படுத்திவிடுகின்றது. சில சமயங்களில் மோசமான சிறுகதைகள் கூட அதன் முடிவுகளால் காப்பாற்றப்பட்டுவிடுகின்றன. ஆனால் பெரும்பாலும் எந்த சிறந்த கதையும் அதன் மோசமான முடிவுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
சிங்கப்பூரில் இருந்து எழுதும் போது சிங்கப்பூர் வந்தேயாகவேண்டிய கட்டாயம் இருப்பதில்லை. ஆனால் அதன் பின்னணியில் அங்குள்ள மனிதர்கள் வாழ்க்கை அதன் இயல்பிலேயே சொல்லப்படும்போது எழுத்தாளரின் எழுத்துகள் மீது வாசகர்களுக்கு ஆர்வம் எழாமல் இருப்பதில்லை. கதாப்பாத்திரங்களின் குரலாக ஒலிக்கவேண்டியது எழுத்தாளரின் குரலாகவும் எழுத்தாளரின் குரலாக ஒலிக்கவேண்டியது கதாப்பாத்திரத்தின் குரலாக ஒலிப்பது ஒரு வகையில் பலவீனம் என்றாலும் எழுத்தாளர் தன் கதைகளில் உருவாக்கும் கதாப்பாத்திரங்களின் இருக்கும் உண்மைத்தன்மை நம்மையும் அந்தக் கதைகளில் ஒன்ற வைத்துவிடுகிறது.
அழகுநிலா தனகென்ற ஓர் எழுத்து நடையை உருவாக்க முயல்கின்றார். அது சில கதைகளில் அவருக்கு வசப்பட்டாலும் சில கதைகளில் விலகி நிற்கிறது. ஆனால் நான் வாசித்த அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பில் அவர் இந்த வாசகனை ஏமாற்றவில்லை. எனக்கும் என நினைவிற்கும் எப்போதும் வைத்திருக்குபடியான சில கதைகளை அவர் இந்தத் தொகுப்பில் வைத்திருக்கின்றார்.
ஒரு அசலான சிங்கை மண்ணின் கதையை வாசிக்க எழுத்தாளர் அழகுநிலாவின் எழுத்துகளை வாசித்துவிடுங்கள் என்று சொல்லும் நம்பிக்கையை அவர் எனக்கு கொடுத்திருக்கின்றார். மென்மேலும் எழுத்தில் பல படைப்புகள் வெளிவர அவருக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வோம்.
மீண்டும் அடுத்த மாதம், மேலும் ஒரு சிங்கப்பூர் புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வருகின்றேன்.

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

