மொழிபெயர்ப்பு சிறுகதை :  மலையாளம்

மூலம், ஆங்கிலம்        : என்.எஸ்.மாதவன்

தமிழில்                  :  தி.இரா.மீனா 

அலுவலக ஜன்னல் வழியாகப் பார்த்த போது அன்றைய இரவு சுல்லியாட்டிற்கு வித்தியாசமானதாகத் தெரிந்தது. போக்குவரத்து இரவு பத்து மணிக்கே மிகக் குறைந்த அளவிலானதாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாகச் சாலையிலுள்ள சோடியம் விளக்குகள் அசாதாரணமான பொலிவோடு ஒளிர்ந்தன ; அவை, சுல்லியாட்டிற்கு தன்னுடைய  இளம் பிராய மாலைப் பொழுதுகளை, குறிப்பாக மஞ்சள் வெயிலில் நிழல்கள் பத்தடி நீளமாக தெரிந்த காலங்களை நினைவூட்டின.

நீண்ட நேரமாகத் தன்னை மறந்து பைப்பை உறிஞ்சிக் கொண்டிருந்த அவர் ஜன்னலிலிருந்து நகர்ந்து அதை மேஜையின் மேல் வைத்தார். காய்ச்சலின் கடுமையை கசப்பான உமிழ்நீர் வெளிப்படுத்தியது. எப்போதெல்லாம் சரித்திரம் மாறுகிறதோ அப்போது தனக்குக் காய்ச்சல் வருவதாக அவர் உணர்ந்திருக்கிறார். 1947 ௧௪ ஆக்ஸ்ட், போது மலேரியா, காந்தி மறைவின் போது தெர்மா மீட்டர் ௧0௩ காட்டியது.

“முல்லிக், இன்றைய என் வேலை முடிந்த விட்டது. லேசாக … இல்லை அதிகமான காய்ச்சல்.” சுல்லியாட் இன்டர்காம் மூலம் பேசினார்.

“அப்படியானால் தலையங்கம்?”

“தலையங்கமா? அது விஸ்வநாதனின் வேலையென்று நினைத்தேன்.”

“ஆனால்,இன்று?”

“விஸ்வநாதன் நன்றாக  இருக்கிறார்.” காய்ச்சல் தந்த வேதனையில் குரலை உயர்த்தினார்.

“முதன்மைப் பக்கத்தை நீங்கள் கையெழுதிட்டு, அனுப்புவீர்கள்  என்று நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்”

“இல்லை. வழக்கமான இடத்தில், விஸ்வநாதன் கையெழுத்திடுவார்.”

முல்லிக் போனைக் கீழே வைத்து விட்டு,  அரைநிலா வடிவிலான தன் மேஜையில் உட்கார்ந்திருந்த உதவி ஆசிரியர்களை வெறுமையாகப் பார்த்தான். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் பின் தங்கிய அகதிகள் போல அவர்கள் எல்லோரும் மாலைப் பொழுது முழுவதும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். எல்லோருமில்லை. ஜூரா தன் கம்ப்யூட்டரோடு ஒன்றிப் போயிருந்தாள். யார் பெயரையும்  குறிப்பாகச் சொல்லாமல் “என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. கே.கே. சுல்லியாத் வீட்டிற்குப் போக வேண்டுமாம். காய்ச்சலாம்.” என்று முல்லிக் சொன்னான்.

“இன்றா?” சித்ரா ராமகிருஷ்ணன் கேட்டாள்.

“ஆமாம். இன்றுதான்.” முல்லிக் பதில் சொன்னான்.

“இன்றைக்கு என்ன அமளி ? அயோத்தியில் இரண்டு, மூன்று குவி மாடங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. சுல்லியாத்துக்கு அதுதான் இன்று” உதவி ஆசிரியர்களில் மூத்தவரான அபிஜித் சன்யால் சொன்னார்.” ஏதோ  சின்ன சப்தம் தொடர்ந்து அவருக்குக் கேட்க அது கம்ப்யூட்டர் விசைப் பலகையிலிருந்து திரும்பத் திரும்ப வந்த தட்டுதல்தான் என்று அவர் உறுதி செய்து கொண்டார்; ஜூரா தான் ஒரு பழைய டைப்ரைட்டர் போல அதைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆமை,” விஜயன் சோம்பலாகச் சொன்னான். “ஆமை?” இன்னும் செய்தி அறையின் குழுமொழி தெரியாத, புதிதாகச் சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணன் கேட்டாள்.

“சுல்லியாத்தின் உடலை  இங்கு யாரும் பார்த்ததில்லை. கேபின் கதவுக்குள் தனது வழுக்கைத் தலையை நுழைத்துக் கொண்டிருக்கிறார், ஓர் ஆமையைப் போல. அதுதான்.” நகுல் கேல்கர் விளக்கினார்.

செய்தி ஆசிரியர் முல்லிக் போனை எடுத்து, “விஸ்வநாதன், தலைமை ஆசிரியர் உங்களை எடிட் செய்யும்படி சொல்லி இருக்கிறார்.” என்று சொல்லிய பிறகு, சுல்லியத்தின் ஆக்ஸ்போர்டு உச்சரிப்பில் ,” ஆமாம், உணர்ச்சிவசப்பட வேண்டிய தேவையில்லை. பரிசீலிக்கப்பட்ட அபிப்பிராயம் என்று குறிப்பிடுங்கள். ஆமாம், ’இன்று இந்திய வரலாற்றின் கருப்பு நாள்’ என்று எழுத வேண்டாம்.” என்று சொல்லி விட்டு முல்லிக் போனை வைத்தான்.“ஆமையை அப்படிச் சொல்ல வைத்தது எது?” என்று உடனே விஜயன் கேட்டான்.

“நாளை எல்லாச் செய்தித் தாள்களிலும் நீங்கள் இந்த வாக்கியத்தைப்  பார்க்கலாம்.” முல்லிக் சொன்னான்.

“ஆக்ஸ்போர்டு நாட்களிலிருந்து அவரிடம் தொற்றிக் கொண்டதாக இருக்க வேண்டும் — அரைத்த மாவையே அரைக்கும் ஒரு  தன்மையை முன்கூட்டியே சொல்லும் ஆமையின் திறமை” நகுல் பாராட்டும் விதத்தில் சொன்னான்.

“ஸ்ஸ்…ஆமை,” சுல்லியாத் கதவினூடே தன் தலையை நீட்டியதைப் பார்த்து விஜயன் எச்சரித்தான். தரையில் சிதறிக் கிடந்த துண்டுத் தாள்களைப் படிக்கும் பாவனையில் அவனும், நகுலும் தலையைக் குனிந்து கொண்டனர். வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ளும் வகையில், சித்ரா தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டாள். அபிஜித் சுல்லியாத்தை நேராகவே பார்த்தார்.

“முல்லிக், தலையங்கச் செய்தியைக் கொண்டு வா. கிளம்புவதற்கு முன் பார்த்து விடுகிறேன்.” சொல்லி விட்டு சுல்லியாத் வேகமாகத் தலையை  உள்ளிழுத்துக் கொண்டார். நேரடியாகத் தன் ஜன்னலருகே போய் நின்றார்.. சிவனின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண்ணின் சுட்டெரிப்புடன் ஒரு போலீஸ் ஜீப் பின் தொடர, சில ராணுவ லாரிகள் கடந்து போயின. தீயணைக்கும் வண்டி ஒன்று ஒலி எழுப்பிக் கொண்டு வேகமாகப் போகச் சாலை காலியானது.

காய்ச்சலின் அளவைக் கண்டறியும் விதமாக சுல்லியாத் தன் உள்ளங்கையில் மூச்சு விட்டுப் பார்த்தார். குளியலறைக்குப் போய், அங்குள்ள அலமாரியிலிருந்து சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். சிறுநீர் கழிக்கப் போனவர், அங்குள்ள சுவரில் லேசாகச் சாய்வதைத் தடுக்க முடியாமல் நின்றார்; இந்த மாதிரியான பலவீனமான தருணங்களில்தான் எழுபது வயது அவரிடம் வருகை தருகிறது.

கணிணியின் முன் பகுதியைக் கடந்து ஜன்னலருகே போனார். எழுத்துக்கள் துளிகளாக ஓடிக் கொண்டிருந்தன. கீழே மின்மினிப் பூச்சிகள் இருப்பது போல, சுட்டி தன் பச்சை விளக்கால் மின்னிக் கொண்டிருந்தது. அறையில் இன்னொருவர் வந்திருப்பது போல உணர்ந்து அவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அலுவலகப் பையன், முதன்மைச் செய்தி அச்சுப்படித் தாளை மிக கவனமாக மேஜையில் வைத்து விட்டு திரும்பப் போய்க் கொண்டிருந்தான். சுல்லியாத் அதை மிக வேகமாகப் படித்தார்.

“நான் புறப்படுகிறேன். காரை வரவழையுங்கள்,” இன்டர்காம் மூலம் தன் உதவியாளரிடம் சொன்னார்.

“சுல்லியாத் பறந்து விட்டார்,” முல்லிக் தன் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்த உதவி ஆசிரியர்களுக்குத் தெரிவித்தான்.

“தேநீர் குடிக்க யாராவது வருகிறீர்களா?” அபிஜித் சன்யால் கேட்டார் நகுல், விஜயன், சித்ரா என்று எல்லோரும் வேகமாக எழுந்தார்கள். சித்ரா, ஜூராவின் அருகே போய் அவள் தோளைத் தட்டி, “தேநீர் குடிக்க வருகிறாயா?” என்று கேட்டாள். அவர்களை மௌனிகளாக்கும் வகையில் ஜூரா உடனே எழுந்து விட்டாள். திடீரெனத் தான் தனியாகி விட்டது போல முல்லிக் பீதியடைந்து, விளையாட்டுப் பகுதிக்கு வேகமாகப் போனான்.

அடித்தளத்திலிருக்கிற கான்டீனுக்குப் போகும் படிகளில் இறங்கும் போது, உறைய வைக்கும் குளிரை உணர்ந்தார்கள். தேநீர் கறைகளும், துண்டுப் பீடிகளும் சிமிண்ட் தரையில் படிந்திருந்தன; கண்ணாடிப் பெட்டியில் சில பழைய சமோசாக்கள் கிடந்தன. டேபிளைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் நான்கு பேரும் உட்கார்ந்து கொண்டனர்;  ஜூராவின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு சித்ரா உட்கார்ந்தாள். அபிஜித் மிளகு பாட்டிலால் மேஜையைத் தட்ட, பூல்சந்த் வந்தான்.

“பூல்சந்த், ஐந்து கப் தேநீர், வேகமாகக் கொடு,” அபிஜித் சொன்னான்.

“இன்று உதவிக்கு யாருமில்லை சார், சாமான்களைச் சேர்த்து வைக்க எல்லோரும் வீட்டிற்குப் போய் விட்டார்கள்.”

“ஏன்?” சித்ரா கேட்டாள்.

“ஊரடங்குச் சட்டம் வரும் போது அது எங்களைத்தான் மிகக் கடுமையாகப் பாதிக்கிறது.”

“பிறகு நீ ஏன் போகவில்லை?” சித்ரா திரும்பவும் கேட்டாள்.

“கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது. இருபது கிலோ கோதுமை மாவும், அரைச் சாக்கு உருளைக்கிழங்கும் ஸ்டோரிலுள்ள மேவராமிடம் கேட்டிருக்கிறேன். நான் கடையை மூடி விட்டால் நீங்கள் தேநீருக்கு எங்கே போவீர்கள்? சாலைக் கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன.”

பூல்சந்த் உள்ளே போனான். ஸ்டவ் அடுப்பின் சத்தம் கான்டீன் முழுவதும் எதிரொலித்தது. பதட்டத்திலிருந்த அபிஜித் தன் சுருட்டை முடியை விரல்களால் அளைந்து கொண்டே, ஜூராவைச் சிறிது உற்றுப் பார்த்து விட்டு,” நீ ஏன் இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறாய்?” என்று கேட்டான். ஜூரா தலையை உயர்த்தி சமரசமற்ற எதிர்ப்போடு அவனைப் பார்த்தாள். “ பூல்சந்தும், அவனது நண்பர்களும் வீட்டுச் சாமான்களை வாங்கத் தடுமாறி அலையும் போது, அபிஜித் எதைப் பற்றி யோசிக்கிறான்? பாருங்கள். மூன்று பாட்டில் ரம் வாங்கப் பறக்கிறான். ஒரு வேளை நாளை கடைகள் மூடி விட்டால்? விஜயன் சிரித்தபடி சொன்னான்.

சித்ரா தாராளமாகச் சிரித்தாள். மிளகு பாட்டிலை கையில் வைத்து விளையாடிக் கொண்டே, ”நான் நள்ளிரவுக் குழந்தை, ருஸ்டியைப் போல. கல்கத்தாவில் 1947 ல் பிறந்தேன். அது, மதச்சார்பு அதிகமில்லாத நேரு காலத்திய ஒரு குழந்தைப்  பிராயம், ஆனால் அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. என் ரவீந்திர இசை விருப்பம் அம்மாவால் வளர்ந்தது. ஆனால் அறுபதுகளில் தாகூர் பியட்டல் இசைக்கு வழி  விட்டு விட்டார்.” என்றான். அபிஜித்

“பியட்டலா? அபிஜித் நீ பழமைவாதி. பியட்டல் என் தலைமுறையைப் பொறுத்த வரை சாஸ்திரிய சங்கீதம்.” என்றாள் சித்ரா.

“சித்ரா, நீ பிறப்பதற்கு முன்னால், வியட்நாமில் ஹொ சி மின் என்ற பெயருக்குப் பதில் கொடுத்து விட்டார்கள். சாத்ரே சோர்பன்னில் கோட்டை கட்டி விட்டார். லண்டனில் தாரிக் அலி. வங்காளத்தில் நமக்கு சாரு மஜும்தார், கனு சன்யாலும்  ஜங்கல் சன்தாலும். நான் சாரு மஜும்தாரை முதன் முதலில் பார்த்த போது, படுத்த படுக்கையில்,ஆக்சிஜன் குழாயில் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தே அவர் எனக்கு ஞான ஸ்னானம் செய்தார். பீகார் காடுகளின் அருகேயுள்ள கரக்பூர் ஐ.ஐ.டி. யில் நான் படித்தேன். அதனால், வகுப்புத் தொல்லையைக் கடக்க நான் வெகு தூரம் போகத் தேவையில்லாமல் போனது. ஆமாம், அந்த தோளில் தொங்கும் பையுடன். ஒரு கட்டம், பதிலடி தொடர்ந்த ஒரு மோசமான கட்டம், பலர் மறைந்து போனார்கள். இருந்தவர்களும் நம்மைத் தெரியாதவர்கள் போல பாசாங்குத் தனமாக நடந்து கொள்பவர்கள். உன்மத்தம் சிலரை ஆட்கொண்டது. தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் என்னுடைய இயல்பும், அபூர்வமான குடிப் பழக்கமும் தற்கொலையைச் சிறிது தொலைவில் வைத்திருந்தது. கல்கத்தாவிலிருந்து டெல்லி வந்த நாளில் இவையெல்லாம் முடிந்து விட்டன.” என்றான்.

“என் இளமைப் பருவம் அவ்வளவு சிக்கலானதில்லை. பம்பாய் சிவாஜி பார்க்கில் கவாஸ்கரைப் போல நாங்கள் வளர விரும்பினோம்.” என்றான் நகுல்.

எல்லாருடைய கண்களும் விஜயன் மேல் விழுந்தன.”எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிளேக் நோய்க்கு எதிராகத் தங்களைச் சத்திரத்திற்குள் அடைத்துக் கொண்ட மனிதர்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? டெக்கமரான் கதைகள் — நாமும் அவர்களைப் போல கதைகள் சொல்ல வேண்டுமா? தலையைக் குனிந்து கொண்டே அவன் கேட்டான்.

சுல்லியாத் காரின் ஜன்னல்களை இறக்கினார். வேகமான காற்றின் வருகையால் முதலில் கொஞ்சம் புத்துணர்வு பெறுவது போல அவர் உணர்ந்தாலும் ஓரிரு கணங்களில் உஷ்ணத்தின் தாக்கத்தால் தலை சுற்றுவது போல் இருந்தது. டிரைவரின் தோளைத் தட்டி,”பகதூர், உனக்கு டாக்டர் இக்பாலின் வீடு தெரியுமா? அங்கே போகலாம். எனக்கு உடல் நலமில்லை.”என்றார்.

இங்கிலாந்தில் இருந்த நாட்களிலிருந்தே இக்பாலின் அப்பா மசூத்தும் , சுல்லியாத்தும் நண்பர்கள். தனது முதல் குழந்தையைக் காண்பிக்க மசூத் தன்னை அழைத்துச் சென்றதும், ஆண் சிசுவிற்கு சுன்னத் செய்யப்பட்டு வெள்ளைத் துணியில் தூங்க வைத்திருந்துமான ஞாபகங்கள் இக்பால் பற்றிய நினைவுகளை அவருக்குள் ஏற்படுத்தி விடும்.

வெளியிலிருந்து பார்க்கும் போது இக்பாலின் வீடு இருட்டாயிருந்தது. இரும்பு கேட் திறக்கும் சப்தம் கேட்டு ஃபரா வெளியே வந்து விளக்கைப் போட்டாள்.

“இக்பால் வீட்டில் இருக்கிறாரா?”

“ஃபரா எதுவும் பேசாமல் உள்ளே போனாள். உடனே நீல நிற ஆடையில் இக்பால் வெளியே வந்தார். அப்படியே அப்பாவின் அச்சு.

“இக்பால், காய்ச்சலாக இருக்கிறது.”

வழக்கம் போல, உலோக வாசனையில் தெர்மா மீட்டர் நாக்கில். சுல்லியாத் களைப்பையும், வலியையும் அதிகம் உணர்ந்தார். ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து விட்டு, இக்பால் உள்ளே போய் ஊசியை எடுத்து வந்து குத்தினார். ஊசி இறங்கும் போது கண்கள் மூடிக் கொள்வதை அவரால் தடுக்க முடியவில்லை.

“நாளைக்குள் சரியாகி விடும்.” இக்பால் சொன்னார். ஃபரா, இக்பால் இருவரும் மௌனம் மிக அமைதியாக இருக்க, அவர் புறப்படத் தயாரானார்.

“நன்றி, அங்கிள்.” ஃபரா சொன்னாள்.

“எதற்கு?”

“எங்களுடைய ஒரே இந்து நண்பரான நீங்கள்தான் இன்று நடந்ததைப் பற்றி எதுவும் பேசவில்லை. நிறையப் பேர் போனில் அழைத்தார்கள். சிலர் நேரிலும் வந்தார்கள். சாவிற்கு வருவது போல.

“நான் எப்போது உங்களுக்கு இந்துவாகத் தெரிய ஆரம்பித்தேன்?” என்று அவர்களின் கண்களைப் பார்த்துக் கேட்டார்.

இக்பால் காரருகே வந்து கதவைத் திறந்து விட, சுல்லியாத் வேகமாகக் காரில் ஏறிக் கொண்டு அவர்களிடமிருந்து விடை பெற்றார். ”பகதூர், வண்டியை அலுவலகத்திற்கு விடு” என்றார்.

தூக்கத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு அடுத்த நாள் காலை வெளியீட்டிற்காகச் செய்தி அறை தயாரானது. முல்லிக் பிரஸ்ஸுக்கு சில தடவை போய் வந்திருந்தான். ஜூராவைத் தவிர மற்ற துணை ஆசிரியர்கள் டெலி பிரிண்டர் ஃ பாக்ஸ் மெஷின் முன்னால் கடைசி நேரச் செய்திக்காக நின்று கொண்டிருந்தார்கள்.

“இந்தப் பதிப்பில் விஸ்வநாதன் பெரிதாக ஒன்றும் பஞ்ச் வைக்கவில்லை”  விஜயன் குறிப்பாகச் சொன்னான்.

“ஆமை இப்படித்தான் விரும்பியது. கவனத்தில் கொள்ளப்பட்ட  முடிவு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.” அபிஜித் சொன்னான்.

“இந்நேரம் ஆமை தூங்கியிருக்கும்” சித்ரா சொன்னாள்.

“முல்லிக்” திடீரென சுல்லியாத்தின் குரல், செய்தி அறையில் வியாபித்தது. பைப்பைப் புகைத்துக் கொண்டு மிக வேகமாகச் செய்தியறைக்குள் சுல்லியாத் வந்து விட்டார் என்பதைச் சித்ராவின் கண்கள்  நம்ப மறுத்தன செய்தி அறையில் தலைமை ஆசிரியரைப் பார்த்தவுடன் விளையாட்டுப் பிரிவு ஆசிரியரும்,வணிகப் பிரிவு ஆசிரயரும் எழுந்து நின்றனர். இணக்கமான கேலிச் சித்திரத்தை, வரைவதற்கு நாள் முழுவதும் முயன்று, பின்பு கைவிட்டு விட்டு, மை பதிந்திருந்த பேப்பர் பந்துகளைக் கடந்து, மங்கலான கண்களோடு கார்டூனிஸ்ட் தள்ளாடியபடியே முல்லிக் மேஜையருகே போனார். முல்லிக் தன் மேஜையில் உட்கார்ந்த சுல்லியாத்தை கண்கள் அகலப் பார்த்தான். ஜூரா தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.  தொலைவிலுள்ள மலைகளின் மேல் வடகிழக்குப் பருவ மழை மோதுவது போல், கீழ்த்தளத்தில் அலுவலகத்தின் இயந்திரங்கள் ஒலியெழுப்பின.

“முல்லிக், முன்னணிச் செய்திக்குத் தலைப்புத் தந்தது யார்?” முல்லிக்கின் மேஜையிலிருந்த தாளைக் கையில் வைத்துக் கொண்டு சுல்லியாத் கேட்டார். ஆசிரியர்கள் அனைவரும் முல்லிக் மேஜையை நோக்கிச் செல்ல, ஜூரா மட்டும் தன்னிடத்திலேயே நின்றாள்.

“முல்லிக் ,நான் உங்களிடம்தான் பேசுகிறேன். யார் தலைப்புச் செய்தி எழுதியது? நீங்கள் அமைதியாக இருக்க விரும்புவதைத் தொடர்ந்தால், எழுதியவர் இந்த வேலையை விட்டுப் போய் விடலாம் என்று நான் நினைக்கிறேன்.” சுல்லியாத்தின் உதடுகள் கோபத்தில் நடுங்கின. அதற்குள், செய்தி அறையிலிருக்கிற ஜூரா உள்பட எல்லா பணியாளர்களும் முல்லிக்கின் மேஜையைச் சுற்றிக் கூடினர்.

“சார், நான்தான் எழுதினேன்.” ஜூரா மென்மையாகச் சொன்னாள்.

சுல்லியாத் தன் பைப்பை ஆழமாக உறிஞ்சினார். மேஜையிலிருந்து அச்சுப் படியை எடுத்துத் தரும்படி விஜயனுக்கு ஜாடை காட்டினார். பின்பு  எழுந்து ஜூராவிடம் போய் அவள் தலையில் தட்டி” எனக்கு, ஒரு பென்சில் எடுத்துத் தா.” என்றார்.

மேஜையிலிருந்து ஒரு பால் பாயிண்ட் பேனாவை முல்லிக் எடுத்துத் தந்தான். அங்கிருப்பவர்களைப் பார்த்து “ மான்செஸ்டர் கார்டியனில் என் பணியை ஆரம்பித்த போது, நீலப் பென்சில்கள் எடிட்டர்களின் ஆயுதம் என்று என்னுடைய பழைய எடிட்டர் வெல்ஸ் அடிக்கடி சொல்வது வழக்கம். நீலப் பென்சில்கள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டன. என்றாலும், இந்தப் பேனாவை நான் உபயோகிப்பதை அது நிறுத்தி விட முடியாது.” என்று சொன்னார்.

ஜூராவின் தலைப்பு: ’சர்ச்சைக்குரிய கட்டமைப்பு அழிக்கப்பட்டது’. என்பது. அச்சுப் படியை மேஜையின் மேல் வைத்து, தன் நடுங்கும் கைகளில் சுல்லியாத் பேனாவை ஓர் உளி போல பிடித்துக் கொண்டு, முதலிரண்டு வார்த்தைகளை அடித்தார். பார்கின்சனின் நடுக்கத்தால் ஒவ்வொரு எழுத்தும் வலியோடு, அலையலையாய் வர அந்த வார்த்தைகளுக்கு மேலே கொட்டை எழுத்தில் ’பாபர் மசூதி’ என்று எழுதினார்.

புதியதாக வெட்டப்பட்ட மரத்திலிருந்து வடியும் சாறு போல ஜூராவின் பெரிய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன.”மிக்க நன்றி சார்.” ஜூரா அவரிடம் சொன்னாள்.

காய்ச்சல் வேகம் மீண்டும் எழ, சுல்லியாத் அங்கிருந்து வெளியேறினார். தன் அலுவலக அறைக்குள் போய் அவர் கதவை மூடிக் கொள்ளும் வரை செய்தி அறையில் எந்தச் சலசலப்புமில்லை.

00

நன்றி :

Under The Wild Skies , An Anthology of Malayalam Short Stories,

National Book Trust, India  Editor K.Sachidanandan

என்.எஸ்.மாதவன்

சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மலையாளப் புனைகதை இலக்கியத்தை புதுப்பித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர். மாத்ருபூமி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். சூளை மேட்டிலே சவங்கள், நீல விழி, பெரு மரங்கள் விழும் போது ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும். வி.பி. சிவக்குமார் விருது, ஓடக்குழல் விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது, பத்ம ராஜன் விருது உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *